சனி, அக்டோபர் 01, 2005

கனவுலகில் திரைத்துறை

காட்சிகளைத் திரையில் காட்டுவதால், அதில் வரும் கதைக் களமும் நிழலாகவே இருக்க வேண்டும் என்று முடுவெடுத்து திரைப்படம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள் திரைத்துறையினர். திரைப்படத்துடன் ஒன்றி நாட்கள் பல ஆகிவிட்டன (கடைசியாக, அழகியத் தீயே). நிஜ வாழ்க்கைக்கும், திரைப்படங்களுக்கும், இரண்டு பால்வழித்திரளுக்குண்டான இடைவெளி.

இன்று, மிகவும் நம்பிக்கையுடன் சென்று பார்த்தப் படம்: கஜினி. படம் என் எதிர்பார்ப்பிற்கு இல்லாவிட்டாலும் கூடப் பரவாயில்லை. மிகவும் வருத்தப்பட வைக்கும் அளவிற்கு இருந்தது. மக்கள் எதையும் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையோ என்னவோ, வாழ்க்கைக்கும் சிறிதும் தேவையில்லாத (சம்பந்தம் இருந்தது) விசயங்களைக் காட்டியிருக்கிறார். சரி விசயத்திற்கு வருகின்றேன்.

படத்தில் விரும்பத்தகாத அளவிற்கு இருந்த ஒன்று - வன்முறை. வன்முறைக்கான அளவீடு, ஒவ்வொருவற்கும் மாறுபடும். என்னைப் பொருத்தவரை இந்தப் படத்தில் அது (அளவீடு அல்ல, வன்முறையே) மிகைப்படுத்தப்பட்டு விட்டது. நிறையக் குறைத்து இருக்கலாம்.

உதாரணத்திற்கு ஒரு காட்சி: வில்லன், கதையின் நாயகியைக் கொலை செய்வது.

நாயகன், நாயகியைக் காப்பாற்ற வில்லனுடன் சாலையில் சண்டையிடுகிறார். சண்டை முடிந்ததும், நாயகியைத் தேடி அருகிலிருக்கும் நாயகியின் அடுக்கு மாடிக் குடியிருப்பு வீட்டிற்கு செல்கிறார். அங்கே மறைவிலிருந்து நாயகி கத்திக் காயத்துடன் வருகிறார். அப்போது வில்லன், நாயகனின் தலையில் ஒரு பெரிய இரும்புக் கம்பியைக் கொண்டு அடிக்கிறார். (வில்லனிடம் எப்போதும் ஒரு கைத்துப்பாக்கியும், இன்ன பிற ஆயுங்களும் இருக்கின்றன. ஆனாலும் ...). நாயகன் தரையில் சாய்கிறார். நாயகியும் தரையில் சாய்கிறார். அப்போது வில்லன் இவர்களைப் பார்த்துக் கொண்டே நடக்கிறார். சிறிது விநாடிகள் கழித்து திரும்ப, நாயகனின் தலையில் தாக்குகிறார். பின்னர், இரண்டு முறை, கத்தியினால் காயமடைந்த நாயகியின் தலையில் அடிக்கிறார். ரத்தம் வழிந்து, நாயகி சாகிறார். (இது மட்டுமல்ல, இன்னும் நிறைய இருக்கின்றன. கல்லூரியில் நடக்கும் கடைசியில் காட்சி மற்றொரு உதாரணம்)

சிலருக்கு நான் சொன்ன இந்தக் காட்சி கூட, சாதாரணமாகத் தெரியலாம்.

என்னுடைய கேள்வி:

இயக்குனர் எதனால் அத்தகைய முறையைக் கையாண்டார்?

1. வில்லனின் கொடூரத்தன்மையை மக்களுக்கு உணர்த்தவா? இது தான் அவர் நோக்கமாக இருந்தால், வில்லன் சம்பந்தப்பட்ட மற்றக் காட்சிகள் எதற்கு?. வில்லனின் கெட்ட குணத்தைக் காட்ட பல எளிய வழிகள் இருக்கின்றன. இந்த காலத்து மக்களுக்கு, நீங்கள், "இந்தக் கதையில் ஒரு கெட்டவன் இருக்கின்றான். இவன் இப்படி பட்டவன்" என சொல்ல வேண்டும் என்ற அவசியமே வேண்டாம். மக்கள் ஆயிரக்கணக்கான படங்களையும், வில்லன்களையும் பார்த்து விட்டார்கள். அவர்களாகவே புரிந்து கொள்வார்கள். ஏன், காதலுக்கு மரியாதையில் வரும் ராதாரவியும் வில்லன் போன்றவர் தான், நாயகனின் பக்கத்தில் இருந்து பார்த்தால். ஆனால் அந்த பாத்திரத்திற்கென்று, ஒரு உயிர் இருந்தது. "பூவிழி வாசலிலே"-ல் வரும், ரகுவரன் பாத்திரம். ஏதோ எனக்கு நினைவில் உள்ளதைச் சொல்கின்றேன். உங்களுக்கு இதில் உடன்பாடு இல்லாமல் போகலாம். நன்றாக சித்தரிக்கப்பட்ட வில்லன்கள் இருந்தால் சொல்லவும்.

2. கதையின் பிற்பாடு, நாயகன் வில்லனைக் கொலை செய்வது சரியே என்று சொல்வதற்கா?.

3. மக்களின் ஆவலைத் தூண்டி, திரைப்படத்துடன் ஒன்றச் செய்யவா? ஒருவர் கூட அந்தக் காட்சியை விரும்பி பார்த்திருப்பார்கள் எனத் தோன்றவில்லை. சில 'உச்' குரல்களைக் கேட்க முடிந்தது.

4. மக்களும் தங்களின் மனதில், அந்த நாயகனைப் போலவே, வில்லனைப் பழிவாங்க வேண்டும் என்று நினைக்கவா? சில நேரங்களில் மக்களும், "என்ன அடிக்கிறான்?. நல்லா அடி. அந்த கட்டையை எடுத்து அடி. அவன் பொண்டாட்டியை எப்படி எல்லாம் கொடுமை படுத்துனான். இன்னும் நல்லா அடி" என்றெல்லாம் நினைப்பதுண்டு. அதைத் தான் விரும்புகிறாரா? அத்தகைய துவேசம் வேண்டாம். சில கெட்ட விசயங்களைக் காட்டி விட்டு நாயகன் செய்யும் வன்முறைக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். மக்களில் சிலர், தங்களை நாயகனின் இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள். அப்படி எனக்கு ஒவ்வாத இன்னொரு திரைப்படம் "விருமாண்டி". படம் முடிவடைவதற்கு முன்பே திரையரங்கை விட்டு வந்து விட்டேன். நிஜ வாழ்வில் அப்படி நடக்கலாம். ஆனாலும் ஒரு வரைமுறை இருக்கிறது. அதனை விட இன்னும் அற்புதமான விசயங்கள் இவ்வுலகில் இருக்கின்றன். முடிந்தால் காட்டுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் படமே எடுக்க வேண்டாம்.

5. உங்கள் வியாபாரத்திற்காகவா? சண்டையைக் காட்டுங்கள். ஆனால் இந்த அளவிற்கல்ல. நீங்கள் திரு. மகேந்திரனைப், ராஜீவ் மேனன் போல மென்மையான, யதார்த்தமானப் பாத்திரங்களைக் காட்ட வேண்டாம். தயவுசெய்து, இடிஅமீனை எங்கள் கண்முன் நிறுத்த வேண்டாம்.

நல்ல விசயங்களைக் காட்டுங்கள். மனநிறைவோடு பார்த்து, அதனைப் பின்பற்ற முயற்சிக்கின்றோம். இசை மனிதனை சாந்தப் படுத்தவில்லையா / ஒழுங்கு படுத்தவில்லையா? ஒரு திரைப்படமும் அதனைச் செய்யக் கூடும். அதை பல படங்கள் செய்திருக்கின்றன். அதற்காக ஆர்ட் (தமிழ் சொல்?) படங்கள் எடுக்க வேண்டும் என்ற சொல்லவில்லை. சாதாரணமாக நல்ல பாடல்கள், சிரிப்பு, அழுகை, நல்லவர்கள், நாயகனுக்குக் கெட்டவன் இப்படியே கோடிக்கணக்கான படங்கள் எடுக்கலாம். இல்லையில்லை எங்களால் வித்தியாசமானக் கதையைக் காட்டமுடியாது என்று சொல்லாதீர்கள். நீங்கள் இப்படிப்பட்ட திரைப்படங்கள் எடுத்து, வித்தியாசத்தைக் காட்ட வேண்டாம். இது வரை வந்த அனைத்துப் படங்களையும் ஒரு 10 பட்டியலில் வகைப்படுத்தி விடமுடியும்.

யாருமே உங்கள் சட்டையைப் பிடித்து, "ஏன்யா? வன்முறையான படம் எடுக்கவில்லை என்று கேட்கப் போவதில்லை." விக்கிரமனின் அனைத்துப் படங்களும் சுவாரசியமானவை என்று சொல்லமுடியாது. ஆனால் அவரால் பல வெற்றிப் படங்களைக் கொடுக்க முடிந்தது. திரையரங்கை விட்டு வரும் போது, பல நேரங்களில் இதமான ஒரு உணர்வு மனதை வருடும். சில நேரங்களில் ஒரே மாதிரியான திரைக்கதையும், ராஜ்குமாரின் "லா லா" இசையும் சோர்வடைய வைக்கும். ஆனால் மனதை வருத்தாது. மனதில் வன்முறையை ஏற்றாது.

இன்னும் சிலர், இது திரைப்படத்திற்கு தானே? ஏன் இவ்வளவு கூக்குரல், எனக் கேட்பார்கள். அப்படியென்றால், மக்களை திரைப்படத்துடன் ஒன்றச் செய்ய வேண்டும் என்று கண்ட கண்ட காட்சிகளைச் சேர்க்காதீர்கள். அப்படித் தான் இதுவும் என்றால் இயக்குனரின் வன்சிந்தனைகள் தான் வெளிவந்துள்ளன.

நீங்கள், எங்களை சொர்க்கத்திற்கு அழைத்து சென்று சுற்றிக் காட்ட வேண்டாம். சாக்கடைக்கும், நரகத்திற்கும் அழைத்து செல்லாதீர்கள்.

அந்த இடத்திற்கு, கொலை தான் வேண்டும் என்று அவசியபட்டால், அதனை இலைமறைக் காயாக காட்டி விடுங்கள். முடியாத பட்சத்தில் ஒரு குண்டு போதும். குண்டிற்குப் பதில் கொடூரத்தைச் செலுத்த வேண்டாம். கதையில் லாஜிக் (தமிழ் சொல்?) இல்லாவிட்டால் பரவாயில்லை. பொறுத்துக் கொள்கிறோம். ஏன்? நன்றாக இருந்தால் ரசிக்கிறோம். உண்மையைக் காட்டுகின்றேன் என்று உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். மக்களையும் கொல்லாதீர்கள்.

ஒன்றே ஒன்று தான் என்னை இன்னும் திரைப்படங்களை பார்க்கும் ஆவலைத் தூண்டுகின்றன. அது இசை. இசையைத் தவிர இன்னும் சிலத் துறைகள் முன்னேறி இருப்பது சந்தோசமே. உதாரணத்திற்கு ஒளிப்பதிவு. (எல்லோரும் சொல்வது தான்). மணி கண்டன், ரவி கே. சந்திரன், ராஜசேகர், ஜீவா. மணி கண்டன் சமீபத்தில் பணிபுரிந்த மலையாளப் படத்தின் ஒரு பாடலைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது (படத்தின் பெயர்: போலீஸ்). அவ்வளவு அருமையாக இருந்தது.

என்னதான் மற்ற துறைகள் முன்னேறியிருந்தாவ்லும், உயிரான கதையிலும், திரைக்கதையிலும் வறட்சி இருப்பதை மறுக்க முடியாது.

மனிதன் தொழில்நுட்பத்தில் பல சாதனைகள் நிகழ்த்தி இருந்தாலும், அவனின் சகிப்புத் தன்மையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், சுயநலமற்றத் தன்மையும் குறைந்து கொண்டே வருகின்றது. அதே கதி தான் திரைத்துறைக்கும். சீரழிந்து வருகின்றது!

ஸ்ருசல்.

3 கருத்துகள் :

எல்லாளன் சொன்னது…

Nice !!!

குழலி / Kuzhali சொன்னது…

இதே கருத்து எனக்கும் உண்டு, படத்தில் அதிக பட்ச வன்முறை காட்டப்பட்டுள்ளது, இந்த விடயத்தில் பல ஆங்கிலப்படங்கள் கொலை காட்சிகளை அப்படியே காண்பிக்கின்றேன் என்று இப்படியெல்லாம் எடுப்பதில்லை, இரத்தம் தெரிக்கும் காட்சிகள் பொதுவாக மிகக்குறைவு... மேட்ரிக்ஸ் சண்டை காட்சிகளை பின்பற்றும் நம் திரைப்படங்கள் இதையும் பின்பற்றலாமே, மேலும் ஊடகங்களும் விபத்துகளையும் கொலை நடந்த உடல்களையும் காண்பிக்கும் போது சற்று கவனம் எடுத்து சில காட்சிகளை நீக்கலாம்

நன்றி

பெயரில்லா சொன்னது…

அவர்கள் கதைக்கு வில்லன்களை தயாரிப்பதில்லை., சமூகத்திற்கு வில்லன்களை தரப் பாடுபடுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு வில்லன் எப்போது வரப்போகிறானோ?(வந்தாச்சுன்னு குழலி., நீங்க மெதுவா சொன்னிங்க?., யாரோ சொல்ற மாதிரி இருக்கு)