வியாழன், அக்டோபர் 27, 2005

சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் சங்கம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. நடுத்தர வர்க்க குடும்பங்களில் பெரும் மாறுதல்கள் இந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளன. 20-30 வருட சேமிப்பின் வாயிலாகவே வீடு கார், நிலம் வாங்க முடியும், என்ற நிலை போய், 25, 30 வயதிலேயே இதெல்லாம் வாங்குவதற்கு அடிகோலியது இந்தத் துறை. (வெளிநாட்டு வங்கிகளின் சேவையும் முக்கிய காரணம்).

ஆனாலும் இந்தத் துறையில் ஆரம்பத்திலிருந்தே நிச்சயமற்ற தன்மை நிலவி வருவது கண்கூடு. வேலையின் தன்மை, சம்பளம், அளவுக்கு அதிகமான காலி இடங்கள், பணி நீக்கம் போல வேறு எந்த துறையிலும் இந்த 50 ஆண்டுகளில் நாடு கண்டதில்லை. அதிலும் முக்கியமாக 2001 ல் இந்தியாவில் ஏராளமான பென்பொருள் துறை ஊழியர்கள், அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியினால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 2002 ல் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பானது. நிலைமை 2003 இறுதியில் தான் திரும்ப சரியானது.

இந்த நிலையில் சமயத்தில் கம்யூனிஸ்டு கட்சி ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது "சாப்ட்வேர், பி.பி.ஓ நிறுவன ஊழியர்களுக்கும் மற்ற துறையில் உள்ள ஊழியர்கள் போல வேலை நிறுத்தம், சங்கம் வைத்துக் கொள்தல் போன்ற உரிமைகள் கொடுக்கவேண்டும்" என்பது. அவர்கள் சொல்வது "தகவல் தொழில் நுட்பத்தில் நாட்டில் 500000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். சங்கம் வைத்துக் கொள்வது அவர்களது நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைக்கும் (சம்பள விசயத்தில்), வேலை நிறுத்தத்திற்கும் உதவும்". இது அவசியமா என்பது தான் என்னுடைய கேள்வி. நாட்டில் ஆயிரக்கணக்கான பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகள் இன்னும் மக்களைப் பிரிப்பதிலேயே (சேர்பதற்கு எனக் கூறினாலும்) குறியாக உள்ளனர். அவர்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் எப்போதும், எதற்காகவும் தங்களது அரசுடனும், பணிபுரியும் நிறுவனங்களுடனும் மல்லுக்கட்டிக் கொண்டு மக்களுக்கு சிரமங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கவேண்டும் என்பது எண்ணமா? மென்பொருள் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் மக்களுக்கு சிரமம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை தான். அதனால் பாதிக்கப்படப்போவது, மென்பொருள் நிறுவனங்களும், அவர்களின் வாடிக்கையாளர்களும். இதனால், அயல்நாட்டு நிறுவனங்கள் பின்வாங்க ஆரம்பிக்கும். வேலை வாய்ப்பு குறைய ஆரம்பிக்கும். அவர்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை. அயல்நாட்டு முதலீடு யாருக்கு வேண்டும் என வாய்கிழிய கூறிவிட்டு, "வாருங்கள் மேற்கு வங்காளத்திற்கு! முதலீடு செய்ய அருமையான வாய்ப்பு!" என கூவ ஆரம்பித்து விடுவர். வெளிநாட்டு முதலீடு அதிகமாகக் கிடைக்கும் மாநிலங்களில் மேற்கு வங்காளமும் ஒன்று. சமீபத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் அவர்களின் அரசினை(மத்திய அரசினை) எதிர்த்தே போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை நிறுத்தம் செய்யும் போது மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் ,"வேலை நிறுத்தம் செய்யுங்கள் ஆனால் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் செய்யுங்கள்" எனவும் கூறினார். அவர்கள் கட்சி ஆட்சியில் இருக்கிறது (மத்தியில் மற்றும் மாநிலத்தில்), போராட்டம் நடத்த முடிவெடுத்தது அதே கட்சி. போராட்டம் நடத்தப்படுவது அவர்கள் ஆட்சியை எதிர்த்து; இதில் அதே கட்சித் தலைவரின் அறிவுரை வேறு தொண்டர்களுக்கு! என்னே ஒரு கட்சி! இவர்களுக்கு தங்கள் கொள்கைகள் என்னவென்றே மறந்துபோய், "வேலை நிறுத்தம் செய்வதும், சம்பள பேச்சு வார்த்தை நடத்துவதும், அயல்நாட்டு முதலீடுகளை காரணமின்றி எதிர்பதுமே" கொள்கையாகி விட்டது.

மென்பொருள் துறையில் பிரச்சினை இல்லாத பட்சத்திலேயே, அவர்கள் தீர்வு காண்பதற்கு விழைகிறார்கள். வேலை நிறுத்தம் என்பது கூட ஒரு தீர்வு அல்ல. தீர்வு காண்பதற்கான ஒரு வழி என அவர்கள் கூறிக்கொள்கிறார்கள்.

மா சே துங்கும், தன்னுடைய சீர்திருத்தக் கொள்கைகளை அறிமுகப்படுத்தும் போது ('Great Leap Forward') ஆரம்பத்தில் அனைவரையும் அறிவு சார்ந்த துறையைச் சார்ந்தவர்கள் உட்பட, தொழிற்சாலைகளிலும், சுரங்கங்களிலும் வேலை செய்ய உத்தரவிட்டார். கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. சில ஆண்டுகளுக்குப் பின்பே தன்னுடைய தவறை உணர்ந்து, மீண்டும் அவர்களை தத்தம் துறைகளில் பணியில் அமர்த்தினார்.

ஏகாதிபத்தியம், அடக்குமுறை, அடிமைத்தனம் மிகுந்த துறைகளுக்கு வேண்டுமானால் இந்த உரிமை அவசியமாக இருக்கலாம். இண்டெலக்சுவல்ஸ் எனப்படும் அறிவு சார்ந்த துறைகளுக்கு அவசியமே இல்லை என்பது என்னுடைய கருத்து. அவர்களுக்கும் அரசியல் சாயம் பூசி கோமாளிகள் போல பார்க்க வேண்டும் எனத் துடிக்கின்றனரா?

சம்பளம் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இவர்கள் ஒன்றும் உடல் சார்ந்த வேலை செய்யவில்லையே? ஒரு நாளைக்கு இத்தனைப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது போல. இது அறிவு சார்ந்தது. உடல்பலத்தில் அதிகமான ஏற்ற இறக்கங்கள் இல்லாததால், சில துறைகளில், பணியாளர்கள் ஒரே மாதிரியான வேலை செய்யலாம்; அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதியம் என்பது சாத்தியபடலாம். அந்த நிறுவனத்தாருக்கும், ஒருவர் பணியில் இருந்து விலகினாலோ, அவருக்கு மாற்று கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய விசயமாக இருக்காது.

ஆனால் இங்கு அனுபவமே இல்லாத ஒரு புதிய நபர் கூட சாதனை செய்ய முடியும். வயதோ அல்லது உடல் பலமோ அல்லது அனுபவமோ ஒரு தடையே அல்ல. சம்பளத்திற்கு பேச்சு வார்த்தை என்பது அனைவருக்கும் அவர்களது அனுபவத்தின் அடிப்படையில்சம்பளம் நிர்ணயம் செய்யும் முறையில் கொண்டு செல்லும். அனுபவ அடிப்படை என்றால் என்ன தான் வேலை செய்தாலும், எங்கு சென்றாலும், அதே சம்பளம் தான். இது முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய தடைக்கல்லே. யாருக்கும் புதிய மற்றும் வித்தியாசமான முயற்சி செய்து தங்களின் திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற அவா அற்று போகும்.

ஏற்கனவே தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அதிகப்படியான சம்பளம், Attrition Rate முதலானவற்றால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், அவர்களும் இதை ஏற்றுக் கொள்வதற்கு மகிழ்வுடனே இருப்பார்கள் என எண்ணுகிறேன். ஏனென்றால் அனாவசியமான சம்பள உயர்வினைத் தவிர்த்து, வருடத்திற்கு 10% ஊதிய உயர்வு; ஆரம்ப நிலைப் பணியாளர்களுக்கு 10000; 10 வருடங்கள் கழித்து 20000 என சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நிர்ணயம் செய்யலாம். செலவும் குறைவே. ஏற்கனவே இத்தனை ஆண்டுகளாக அனுபவ அடிப்படையில் ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்பட்டக் காரணத்தினால் தான் 1960 லிருந்து பலர் வெளிநாடுகளுக்கு செல்லத் தொடங்கினர். இப்போது வெளிநாட்டுத் தனியார் நிறுவனங்கள் குறிப்பாக மென்பொருள் துறை நிறுவனங்கள் வந்தபின் தான் இந்த நிலை மாறத் தொடங்கி
வெளிநாடுகளுக்கு நிகரான ஊதியமும், ஓரளவிற்கு நிம்மதியான வாழ்க்கை முறையும் சாத்தியமாகி வருகின்றது. இதனால் மற்ற துறைகளும் இதனைப் பின்பற்றி, Performance Based Appraisal வழியில் ஊதியமும், பதவி உயர்வும் நிர்ணயம் செய்யவும் ஆரம்பத்துள்ளனர். இந்த மாறுதலினால், இப்போது வெளிநாடுகளுக்கு சென்றவர்களில் திரும்பி வருகின்றனர் அல்லது திரும்புவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர். இது போன்ற உரிமைகளின் பேரில் வழங்கப்படும் ஆயுதமானது, அவர்கள் திரும்ப கூட்டம் கூட்டமாக வெளிநாடுகள் செல்வதற்கே இது வழிவகுக்கும்.

Performance Based Appraisal தான் அனைத்து துறைகளுக்கு சிறந்த முறை. முக்கியமாக, அறிவுசார்ந்த துறைகளில் பணிபுரியும் அரசு நிறுவனங்களுக்கும். உதாரணமாக ISRO, NAL, போன்ற ஆராய்ச்சி துறைகளில் பணிபுரிவோருக்கு. அங்கு ஒத்த வயதுடைய அனைவருமே
ஏதாவது ஒரு பட்டியலில் சேர்க்கப்பட்டு அவர்களின் திறமையானது மட்டுப்படுத்தப்படுகின்றது. 10 வருட அனுபவத்திற்குப் பின் அனைவருமே Scientist C வகுப்பிலும், 12000 - 16000 வரை ஊதியமும் பெற்று வருவர். பல அறிவாளிகள் அந்தக் கூட்டத்தில் அடிப்பட்டு புழுவாகத் துடித்துக் கொண்டிருக்கலாம். இதனை மாற்றி அதிகபட்ச வளர்ச்சியினைக் காண்பதற்கு Performance Based Appraisal-ம், மென்பொருள் துறையில் உள்ளது போல கருத்தாக்க சுதந்திரமும் (Liberty of expressing Ideas & Concepts) வேண்டும் என்பது என்னுடையக் கருத்து. ஆனால் இது போன்ற துறைகளில் பணிபுரிவோருக்கு சங்கங்கள் வைத்துக் கொள்தல், வேலை நிறுத்தம் போன்ற உரிமைகள் அனாவசியமான சிக்கலுக்கும், பொருளாதார தேக்கத்திற்குமே வழி வகுக்கும்.

மென்பொருள் துறையிலும் சிறிது அடக்குமுறை உள்ளது. துறை நன்றாக செயல்படும் போது தேவையில்லாமல் ஊழியர்களைப் பணியில் சேர்பதும், நிறைய சுதந்திரம் வழங்குவதும், பொருளாதாரம் சிறிது வீழ்ச்சியடைந்தாலும் திடீரென ஊழியர்களை பணியில் இருந்து நிறுத்துவதும், நிறைய கட்டுப்பாடுகள் விதிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதே நேரத்தில் ஊழியர்களின் பக்கமும் நிறைய தவறுகள் நடக்கின்றது. (குறைந்த காலத்தில் நிறைய சம்பாதிக்க வேண்டி, அடிக்கடி நிறுவனங்கள் மாறுவது போன்றன. ஆனால் இது வேறு கதை.

ஸ்ருசல்

12 கருத்துகள் :

Muthu சொன்னது…

ரொம்ப forceful ஆ இருந்தது. என்னோட பதிவுல பின்னூட்டம் இட்டிருந்தா சந்தோஷ பட்டிருப்பேன்.

ஸ்ருசல் சொன்னது…

நான் இரண்டு நாட்களாக வலைப்பதிவு படிக்கவில்லை. காலையில் என்னுடையப் பதிவினை அடித்து, மதியம் என் பதிவில் ஏற்றி விட்டேன். உங்கள் கருத்தினைப் பார்த்தப் பின் தான் நீங்களும் இதே தலைப்பில் எழுதியிருக்கிறீர்கள் என அறிந்தேன்.

நீங்கள் இந்தத் தலைப்பினைத் தொட்டிருக்கிறீர்கள் எனத் தெரிந்திருந்தால் நான் எழுதியிருக்கவே மாட்டேன். மன்னிக்கவும்.

ஸ்ருசல்

Muthu சொன்னது…

its ok..no probs..anyway i got to know a I.T person's view through you

பெயரில்லா சொன்னது…

Dear Srusal

I agree with you 100%. I recently exposed the double standards of the same leftists forces in my article on their duplicity in Gangaikondan Coke Issue.

Thanks
S.T

வானம்பாடி சொன்னது…

நியாயமான கருத்து. அறிவுசார் தொழில்களுக்கு சங்கம் எல்லாம் கொண்டு வருவது இடியாப்பச் சிக்கலில்தான் முடியும்.

Voice on Wings சொன்னது…

பொதுவாகவே மென்பொருள் வல்லுனர்களுக்கு இடதுசாரிகளின் மீதுள்ள நம்பிக்கையின்மையினால், இந்த யோசனை ஒரேயடியாக நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியங்களே அதிகம் தென்படுகின்றன. ஆனால் அவ்வாறு செய்வதற்கு முன், மேற்கத்திய நாடுகளில் இதே துறையில் நிலவும் சூழ்நிலைகளையும் பழக்கங்களையும் கவனத்துடன் ஆராய்ந்து பார்த்து, இதனால் ஏதேனும் பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்று யோசிக்க வேண்டும். காண்க: http://www.techsunite.org/union/

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

கொஞ்ச நாள் bpo துறையில் வேலை பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன். அதை முற்றிலும் அறிவு சார் துறையாக சொல்லத்தோன்றவில்லை. அங்கு நிறைய குமாஸ்தா பணிகள் நடக்கின்றன. அடி மாட்டு விலைக்கு புது ஊழியர்களை நியமித்து அவர்களை அதிக நேரம் வேலை பார்க்க சொல்லி வற்புறுத்துகின்றனர். பணியாளர்களும் பணி நிரந்தரம் ஆகும் முனைப்பில் இதை சகித்துக்கொண்டு செய்கின்றனர். இதுவும் ஒரு வகையில் உழைப்பை உறிஞ்சம் வேலை என்பதால் இந்த மாதிரி விடயங்களுக்கு சங்கங்கள் தேவை தான்

ஸ்ருசல் சொன்னது…

சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. நான் குறிப்பிட்டது போல சந்தர்ப்பவாத வேலை வாய்ப்பும், பணி நீக்கமும், சம்பள உயர்வும், சம்பள வெட்டும்.

சரி இவ்வாறு எடுத்துக் கொள்ளுங்கள். மென்பொருள் துறையினருக்கு சங்கம் இருக்கின்றது. 2001 ல் வந்தது போல ஒரு பொருளாதார வீழ்ச்சி. உடனே 30% பேரை பணி நீக்கம் செய்கிறார்கள், 10 % சம்பள வெட்டு என வைத்துக் கொள்வோம். ஏற்கனவே Project ரத்தானதால் ஏற்படும் செலவீனத்தினை சரிசெய்யவே சிலரை பணிநீக்கம் செய்ய நேர்ந்தது. அனைவரும் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். என்ன நடக்கக வேண்டும் என நினைக்கின்றீர்கள்? திரும்ப அவர்கள் அனைவரும் பணியில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றா? மைக்ரோசாப்ட் போல பண பலமான நிறுவனம் இல்லாத நிறுவனங்கள் என்ன செய்வார்கள்? நிறுவனம் நடத்துவதற்கு பணம் இல்லை. எங்கே செல்வார்கள்? கடன் வாங்கியா அவர்கள் தங்களது நிறுவனங்களை நடத்த முடியும்?

பணிநீக்கம் செய்வது சரியென்று நான் கூற வரவில்லை. அது கண்டிப்பாகத் தவறு தான். அவர்கள் தங்களது முடிவினை உடனே எடுக்கக் கூடாது. திட்டமிட்டு வல்லுனர்களை சேர்க்காவிட்டால், திட்டமிடாமலேயே வேலை நீக்கமும் செய்வார்கள். இது பெரும்பாலான நிறுவனங்களுக்குப் பொருந்தும். இது நிறுவனங்களின் மீதான தவறு. திட்டமிடத் தவறுதல். மேலும் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் 95% service based companies. இது ஏறக்குறைய உங்கள் குடும்பத்தினை உங்கள் சம்பளத்தை மட்டுமே நம்பி நடத்துவது போல் தான். திடீரென்று வேலை இல்லை அல்லது 10 மாதங்கள் சம்பளம் கிடைக்கவில்லை என்றால் உங்கள் அன்றாட செலவிற்கு என்ன செய்ய முடியும்? உங்களுக்கு வேறு ஏதாவது தொழில் இருந்து அதில் குறிப்பிடத்தக்க அளவில் வருமானம் இருந்தால் நலம். அல்லது உங்களுக்கு வேறு சேமிப்பு இருந்தால் சில மாதங்கள் தாக்குபிடிக்க முடியும். இல்லாவிடில்? அனாவசியாமான செலவுகளை குறைப்பீர்கள். கேபிள் போகும். ஹோட்டலுக்கு செல்வது குறையும். சினிமா செல்வது நிறுத்தப்படும். கார், செல்போன் அனாவசியமாக உபயோகப்படுத்த தயங்குவீர்கள். இதே தான் இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஆரம்பிக்கும் போது ஒரு Client இருப்பார். பின்னர் நிறுவனமும் நன்றாக செயல்பட்டு, பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தால் நிறைய வாடிக்கையாளர்கள்; நிறைய வருமானம்; அதிகமான வாடிக்கையாளர்களை சமாளிக்க அதிகமானோர் வேலைக்கு அமர்த்தப்படுவர். திடீரென்று பொருளாதாரத் தேக்கமடைந்தால் அதன் வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்தின் Projects நிறுத்துவர் அல்லது பட்ஜெட்டைக் குறைப்பர். அவர்கள் நிறுவனத்தை நடத்த முடியாமல் வேலை நீக்கம் செய்வர். உங்களுக்கு வேலை இல்லாத போது என்ன நடந்ததோ அது தான் இங்கு நடக்கும்.

இந்தப் பிரச்சினைகளைக் களைய இந்த நிறுவனங்களின் Attitude மாற வேண்டும். எப்போது, இந்திய நிறுவனங்கள் தங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்து Service based முறையில் இருந்து, Product Based நிறுவனங்களாகிறதோ அது வரைக்கும் இந்த பிரச்சினை இருக்கும். அதுவரைக்கும் இவர்களும் அன்றாடங்காட்சிகளை தான். அதன் ஊழியர்களும் அன்றாடங்காட்சிகள் தான்.

மேல்நாடுகளில் மென்பொருள் துறையில் பணிபுரிவோருக்கும், மற்ற துறைகளில் பணிபுரிவோருக்கும் சம்பளத்தில் நிறைய வேறுபாடு கிடையாது. ஆதலால் அங்கே மென்பொருள் துறையினருக்கு சம்பள வெட்டு என்பது பெரிய விசயம். இங்கே 30000 - 1,00,000 சம்பளத்தை மென்பொருள் வந்தபின் தான் பலர் பார்க்கின்றனர். அவர்களுக்கு மோசமாக 50% சம்பளம் வெட்டப்பட்டாலும் அது பெரிய பிரச்சினையாக இருக்கப் போவதில்லை. இன்னும் எல்லா அரசு ஊழியர்களை (IAS அதிகாரிகளை விட) விட நல்ல சம்பளமே வாங்குவார்கள். இருக்கும் போது நன்றாக வாங்கினோம். இல்லாதபோது சரி தான் என்று அவர்களும் அவர்களின் நிலையை ஒத்துக்கொள்வார்கள்.

ஒன்று எல்லாத் துறையினரும் போல அவர்களும் பொதுவான சம்பளத்தினை வாங்கினால், நிறுவனங்கள் சரியாகத் திட்டமிட முடியும். வேலை வாய்ப்பு வழங்கும் போதும் நிறுவனங்கள் யோசிக்க வேண்டும். நிறுவனங்களுக்கு தொலைநோக்குப்பார்வை வேண்டும். மற்ற நிறுவனங்களை நம்பியே அன்றாடங்காட்சிகளாக இல்லாமல் அவர்களுக்கும் Product இருக்க வேண்டும். இந்தியா உலகத்திற்கே மென்பொருள் எழுதிக் கொடுக்கிறது. ஆனால் இன்னும் இந்தியாவில் இருந்து சொல்லும்படி ஒரு Product கூட வரவில்லையே.

எப்படி Consultants or Contractors சில நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்களோ அதே போலத் தான் இந்த நிறுவனங்களும் இப்போது இருக்கின்றன.

ஆனால் இந்த நிலையில் மென்பொருள் துறையினருக்கு அதுவும் சங்கமோ எதுவுமே தேவையில்லை என்பது என் கருத்து. அதுவும் இல்லாமல், சங்கங்கள் இருந்தால் அரசியல் கலப்பில்லாமல் இருக்க வாய்ப்பில்லை; அதுவும் இந்தியா போன்ற நாட்டில். எல்லாரும் எப்போதும் நல்லவர்களாக இருப்பார்கள் எனக் கூற முடியாது. ஒரு நிறுவனத்தின் ஊழியரை இன்னொரு போட்டி நிறுவனம் அதிகப் பணம் கொடுத்து வேலைக்கு சேர்க்க முடிகிறதென்றால், சிறிது முயன்றால் அந்த நிறுவன ஊழியரைத் (அல்லது சில ஊழியர்களை) தூண்டிவிட்டு சில வேண்டத்தகாத விசயங்களும் நடக்கலாம். அந்தக் காலத்தில் (அல்லது படங்களில்) இது தான் நடக்கும். இப்போது போட்டியை சமாளிக்க அங்கு பணிபுரிபவர்களுக்கு அதிக ஊதிய உயர்வு கொடுத்து தங்கள் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். மைக்ரோசாப்ட் - கூகிள் இதுவே சிறந்த உதாரணம். இதனைப் பற்றி நிறைய படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.


ஸ்ருசல்

Voice on Wings சொன்னது…

Srusal, I gave the example of a Tech Union in USA just to show that it is not a leftist concept. Trade Union doesnt essentially mean strikes and stoppage of work. By projected a united force, you gain a collective bargaining power. In an employee vs. employer situation, you are better off fighting it out with the support of other employees, than doing it all by yourself.

You are happy about high pays (30 - 100K). But how stressful is the life of such a highly paid employee? How many engineers toil for 14-15hrs a day? Is there a concept of over-time in IT? How many contract employees get a fair deal like PF and medical coverage? How about leaves and how easy or difficult it is to get them sanctioned? Though rare, what if workplace issues like sexual harassment and discrimination are encountered by employees? I think these issues can be highlighted and favorably addressed if the collective power of a union is in place. Also, you mentioned about salary cuts / lay-offs. With collective bargaining, the employees' welfare can be aimed at by negotiating favorable terms, severence pays etc. If a company imposes a 20% salary cut, with collective bargaining, the employees can atleast try to reduce it to 10% or 15%. In the absence of a union, they would have to just swallow the 20% cut, without putting up even a token resistance.

SnackDragon சொன்னது…

இந்த சங்கம் பற்றி விவாரமாக எழுத இருந்தாலும், இந்த பதிவு ஒற்றைப் பார்வையுடன் அதை முழுதுமாய் மறுக்கிறது. அதோடு எனக்கு உடன்பாடில்லை. வாய்ஸ் கருத்துக்களோடு உடன்பாடு.

ஸ்ருசல் சொன்னது…

நண்பர் வாய்ஸ் ஆப் விங்க்ஸ்,

நான் முழுவதுமாக மறுக்கவில்லை. நீங்கள் சொல்வது போல் பல பயன்கள் இருக்கின்றன. மறுக்கவில்லை. இந்த நிலையில், இந்தியாவில் இது சாத்தியமில்லை அல்லது அரசு அரசியல் சாரா அமைப்பாக இருக்க வாய்ப்பில்லை என்பது தான் என் கேள்வி. அரசியல் சாரா அமைப்புகள் இந்தியாவில் மிக மிகக் குறைவே. உதாரணமாக பத்திரிக்கையாளர் சங்கங்களைக் குறிப்பிடலாம்.
அமெரிக்காவில் நடப்பது இங்கும் நடக்குமா என்பது என் கேள்வி?

நானும் பல முறை நினைத்திருக்கிறேன். யாருமே கேள்வி கேட்காமல் இருக்கவே இந்த நிறுவனங்கள் விபரீதமான முடிவுகளை எடுக்கின்றனர் என.

30K - 100 K ல் சம்பளம் வாங்குவதால் அவர்கள் போராடத் தேவையில்லை என்பதல்ல என் கருத்து. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். பணத்திற்காக உரிமையை விட்டுக் கொடுத்தால் தவறில்லை எனக் கூறவில்லை.

அவர்களுக்கு சம்பள வெட்டு இருந்தாலும் அவர்களை அது அதிகமாகப் பாதிக்கப்போவதில்லை என்பதே. (இது இந்தியாவிற்கு மட்டுமே பொருந்தும்). மற்ற துறைகளில் பணிபுரிவோரைப் பார்த்தால் சம்பள வெட்டு அதிகமாகப் பாதிக்கும். சராசரி மாத வருமானம் அவர்களுக்கு 5000 - 8000 வரை மட்டுமே இருக்கும். ஆதலால் சம்பள வெட்டு அதிகமாகப் பாதிக்கும். மென்பொருள் துறையிலும் மற்ற துறைகளைப் போல ஆன பிறகு அமைப்பு வைப்பதனைப் பற்றி அவர்கள் யோசிக்கலாம்.

நீங்கள் அமெரிக்க நிறுவனங்களையும் இந்திய நிறுவனங்களையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்.

பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் இப்போது hype ல் தான் நடக்கின்றன. அதனாலேயே பல சலுகைகள், அந்த சலுகைகளுக்கு சிறிது பங்கம் வந்தாலும் உடனே ஒரு பயம்.

பல நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட, பல சங்கங்கள் இப்போது சீரழிந்து விடவில்லையா? ஏன் கம்யூனிசக் கொள்கைகள் கூட சில மாறுதல்களுடன், சிறிது மனிதாபமானத்துடன் செயல்முறைப்படுத்தினால் நிறைய பயன்பெற வாய்ப்பு இருக்கின்றது.


எப்போதுமே சேர்ந்து நின்று போராடுவது நல்லது தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எதிர்காலத்தில் தீண்டத்தகாத விளைவுகளை இரு தரப்பினருமே சந்திக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.

இன்னும் சிறிது ஆண்டுகளில் மென்பொருள் துறையும் மற்ற துறைகளைப் போல் சீராகிவிடும். அப்போது பார்க்கலாம்.

ஸ்ருசல்

ஸ்ருசல் சொன்னது…

கார்த்திக் ராமன்,

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும். சங்கம் அமைத்தால் அது எப்படி செயல்பட வேண்டும் என நினைக்கின்றீர்கள். விளக்கமாக எழுதவும்.

நன்றி.

ஸ்ருசல்