செவ்வாய், அக்டோபர் 11, 2005

ஏ.ஆர்.ரகுமானின் பெங்களூர் இசை நிகழ்ச்சி - பாகம் 2

முதல் நாள் வேலை செய்தக் களைப்பு இருந்தாலும், காலை 8.30 க்கு மைதானம் வர வேண்டி இருந்தது. விழா அமைப்பினர் கொடுத்த டி-சர்ட்டை அணிந்து கொண்டு பேலஸ் கிரவுண்ட்ஸ் சென்றேன். காலையிலேயே நல்ல வெயில்.

மைதானத்தைச் சுற்றி பெரிய பெரிய பேனர்கள் கட்டும் பணி. வேலை முடிவதற்கு நண்பகல் 12 மணி ஆனது. வெயில் உச்சத்தில் இருந்தது.

எனக்கும் மற்ற ஏழு நண்பர்களுக்கும், விழா முடிந்ததும் இசைக் கருவிகளை எடுத்து வைக்கும் பொறுப்பு. மகிழ்ச்சியுடன், மேடையின் அருகிலேயே காத்திருந்தோம். நிகழ்ச்சி நடக்கும் போது என்ன என்ன செய்ய வேண்டும் என விவரிக்கப்பட்டோம். அதாவது டான்சர்கள் மறைந்திருக்கும் பெரிய மேஜைகளைத் தூக்கும் வேலை, டான்சர்களை, மேடைக்கு அழைத்துச் செல்பதும் எங்களின் பணிகளில் ஒன்று.

3 மணிக்கு பாடகர் நரேஸ் ஐயருடன் பேசிக் கொண்டிருந்தோம். 3.30 க்கு பாடகர் பிளாசே எங்கள் குழுவினரை படம் எடுத்தார். ரகுமானின் Poverty Theme என்ற பாடலுக்காக.

நானும் நண்பர்களும் மேடையின் பின்புறம். மற்ற நண்பர்கள் நுழைவுச் சீட்டு விற்பனையில்; நுழைவு வாயிலில் சீட்டினை பரிசோதித்து ரசிகர்களை உள்ளே அனுப்பும் பணி.

மாலை, 4 மணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வந்தார். நேராக மேடைக்குச் சென்று ரிகர்சல் ஆரம்பித்தார். ஒரு மணி நேரம், சித்ரா, ஹரிஹரன், மதுஸ்ரீ முதலானோர் பாடி முடித்தவுடன், தன்னுடைய அறைக்கு சென்றார்.

5 மணி அளவில் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். மெதுவாக கூட்டம் வர ஆரம்பித்தது. 5.30 மணி. ஆனால் திடீரென்று மழையும் ஆரம்பித்தது. மழையை எதிர்பார்த்தோ என்னவோ மக்கள் குடையுடன் வந்திருந்தனர்; மழை விட்டுவிடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த எல்லோரையும் ஏமாற்றும் விதமாக மழைக் கொட்டொ கொட்டென்று கொட்டியது. விறு விறுவென சென்று அனைத்து இசைக் கருவிகளையும் பாலீத்தீன் கவர் (தமிழ் வார்த்தை?) கொண்டு மூடினோம். நேரம் செல்லச் செல்ல, மழையின் தாக்கம் அதிகரித்தது.

மேடைக்கு மேலே முன்பிருந்த, புரஜக்டர் கருவிகள் நனைய ஆரம்பித்ததால், ஏற்கனவே மேடைக்கு மேலே போடப்பட்டிருந்த ஒரு பெரிய பாலீத்தீன் துணியை எடுத்து பிடிக்க ஆரம்பித்தோம். காற்றும் உரக்க வீசி ஆரம்பித்ததால், மூன்று பேர் சேர்ந்து பிடித்தோம். அரை மணி நேரம். வலி தாங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் காற்றின் வீச்சு மிக அதிகமாகவே அந்தத் துணியை அறுத்து விட்டோம். எனக்கு நிகழ்ச்சி நடக்கும் என்ற நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.

பின் மேடைக்கு பக்கவாட்டில் கீழே நின்று கொண்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். மக்கள் அனைவரும் கலையாமல் மைதான ஓரங்களில் நின்று கொண்டும், பிளாஸ்டிக் இருக்கைகளைக் கொண்டும் சமாளித்துக் கொண்டிருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, மேடையின் பின்புறம் வைத்திருந்த ஒரு பெரிய திரையினை மாட்டியிருந்த இரும்புக் கம்பிகளைக் கொண்ட பெரிய அடுக்கு மேடையை நோக்கிச் சாய ஆரம்பித்தது. அதைப் பார்த்து, கதி கலங்கி உரக்க கத்த ஆரம்பித்தேன். நல்ல வேளையாக அது சாயாமல் அது பாதியிலேயே நின்று விட்டது. இல்லையென்றால் அது கீழே விழுந்தது மட்டுமல்லாமல் மேடையிலிருந்த நூற்றுக்கணக்கான பெரிய பெரிய விளக்குகளும், மின்சாரக் கம்பிகளும் மேடையின் மீதிருந்த இசைக் கலைஞர்கள் மீது விழுந்திருக்கும். அடுத்த விநாடியே எல்லோரையும் மேடையை விட்டு வெளியேறச் செய்தோம்.

பெரிய கயிறுகளைக் கொண்டு, அந்த இரும்புத் திரையின் மீதேறி கட்டி, அதன் பின்னால் இருந்து 10 பேர் பிடிக்க ஆரம்பித்தார்கள். அந்த நேரத்தைப் பயன்படுத்தி, அனைத்து இசைக் கருவிகளையும் கீழே இறக்கினார்கள், கலைஞர்கள் (சிவமணியின் கருவிகள் தவிர). அவர் மட்டுமே சுமார் ஐம்பது கருவிகள் வைத்திருந்தார். மக்கள் இன்னும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஏன் மக்களை இன்னும் காத்திருக்க வைத்திருக்கிறார்கள் என எண்ண ஆரம்பித்தேன். அப்படி ஒரு மழை, காற்றை சமீபத்தில் பார்த்ததில்லை. ஒரு வேளை திறந்த வெளி மைதானத்தில் இருந்ததால் நான் அவ்வாறு எண்ணியிருக்கலாம்.

கீழே, நாங்கள் இருந்த இடத்திலேயே ஸ்ரீதர் அவர்களும் வந்தார். அவருடன் பேச ஆரம்பித்தேன். அவரும் அதே கருத்தையே சொன்னார்.

"இந்த நிலையில் நிகழ்ச்சி நடக்க வாய்ப்பே இல்லை. ஏன் இன்னும் மக்களை காத்திருக்கச் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. ரகுமானை விட்டு மக்களிடம் பேசச் சொல்லி, ரத்து செய்வது தான் ஒரே வழி", என்றார். எனக்கும் அது தான் சரியெனப் பட்டது. எப்போது விழும் என சொல்ல முடியாத பெரிய இரும்பு அடுக்கு; அதனை நம்பிக்கையின்றி பின்புறம் பிடித்திருக்கும் 10 பேர், ஏற்கனவே விழுந்த பெரிய பெரிய அலங்கார வளையங்கள் (கோன் போல மேடையில் மாட்டப்பட்டிருந்தன), விழா அமைப்பினரை நிகழ்ச்சியை ரத்து செய்யச் சொல்லும் காவல்துறையினர், உடைந்த 3D விளக்குகள், மேடையின் பக்கவாட்டில் அடிக்கும் சாரல், விடாத காற்று மற்றும் மழை இவற்றைப் பார்த்த போது அவர் சொல்வது சரி தான் எனப் பட்டது.

ஆனால் எனக்குள் எழுந்தக் கேள்வி, விழா நாளையாவது நடக்குமா? அப்படியே நடந்தால் நாளையாவது மழை பெய்யாமல் இருக்குமா? அய்யோ அவர் நடத்தி, நான் பார்க்கும் முதல் நிகழ்ச்சி இப்படி ஆகி விட்டதே, ஒரு வார உழைப்பும் (Promotional Act), இரண்டு நாட்கள் மைதானத்தில் உழைப்பு, மற்றும் இரண்டு மாதங்கள் எதிர்பார்ப்பு எல்லாம் வீணாகின்றதே என்ற வருத்தம்.

மணி 8.00 ஆகி விட்டது. காற்று குறைந்திருந்தது. ஆனால் லேசாக மழை அடித்தது.

திடீரென மேடைக்கு வந்தார் ஏ.ஆர்.ரகுமான். நான் மேடையின் பின்புறம் நின்றிருந்தால் என்னால் பார்க்க முடியவில்லை. ரசிகர்கள் பலத்த கரவொலி எழுப்பினர். விழா ரத்து அறிவிப்பு என நினைத்திருந்தேன்.

மைக்கைப் பிடித்த அவர், "இன்னும் உங்களுக்கு நிகழ்ச்சி பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறாதா" எனக் கேட்டார்.

Yes.. என எல்லோரும் ஓசை எழுப்பினர்.

"இன்னும் ஒரு மணி நேரம் கொடுங்கள். அனைத்தையும் சரி செய்து விட்டு மீண்டும் உங்களை சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டு அவர் அறைக்குச் சென்று விட்டார்.

எங்கள் அனைவருக்கும் ஆச்சயம். ஸ்ரீதருக்கும் தான்.

சிவமணி வந்தார். சில நிமிடங்கள் வாசித்து, மக்களை சாந்தப்படுத்தினார்.

8.30 க்கு கைலாஸ் கீர் வந்து ஒரு பாடல் பாடினார்.

மீண்டும் அனைத்து வாத்தியங்களையும் மேடைக்கு கொண்டு வர ஆரம்பித்தனர். எல்லாரும் ஆவலுடன் காத்திருக்க, சரியாக ஒன்பது மணிக்கு, ஃபனா என மேடையில் ரகுமான் தோன்ற, ஒரே ஆரவாரம். மனிதர் மிக உற்சாகமாக; சரிந்த மேடையில்; சிறிதும் பயமில்லாமல், மக்களை சந்தோசப்படுத்தும் ஒரே நோக்கில்.

எல்லோருக்கும் மகிழ்ச்சி பிடிபடவில்லை.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மூன்றே மூன்று தமிழ் பாடல்கள் என நிகழ்ச்சி நிரலை தயாரித்திருந்தனர். எனக்கோ சிறிது வருத்தம், ஆனால் நிகழ்ச்சியில் பத்து தமிழ் பாடல்கள் பாடப்பட்டன. மொத்தம் 28 பாடல்கள். ஒரு கன்னடப் பாடல் (கண்ணாளனே-யின் கன்னட டப்பிங்).

மேடையின் பின்புறம் ஆவலுடன் காத்திருந்தோம். மேடை சரிந்ததில், நடனம் ரத்து செய்யப் பட்டதால் மேடையின் முன்புறம் சென்று ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டோம்.

பாடல்கள் வரிசை:

1. பனா- யுவா - ஏ.ஆர்.ஆர்
2. டெலிபோன் மணிபோல் - ஹரிஹரன், சாதனா
3. O Hum Dum - சங்கர் மகாதேவன், Blaaze, George Peters
4. மங்கள மங்கள - கைலாஸ் கீர்
5. மெஹந்தி ஹய் - அல்கா யக்னிக்
6. Sakhi Aayo re - சுக்விந்தர், சாதனா
7. Hum Hain Is Pal - மதுஸ்ரீ
8. Roja Jaaneman - ஹரிஹரன், சாதனா
9. சந்தனத் தென்றலை - சங்கர் மகாதேவன்
10. சினேகிதனே - சாதனா, நரேஸ் ஐயர்,
11. கண்ணாளனே - சித்ரா (கன்னடா)
12. சலே சலோ - - லகான் - ஏ.ஆர்.ஆர்
13. வெண்ணிலவே - ஹரிஹரன், சாதனா
14. சின்னம்மா, சிலுக்கம்மா - மீனாக்ஷி - சுக்விந்தர்
15. சண்டைக் கோழி - மதுஸ்ரீ, ஏ.ஆர்.ஆர்
16. Pagdi Sambhal - சுக்விந்தர்
17. Taal Se Taal - Alka / Aslam
18. ஹம்மா ஹம்மா - ஏ.ஆர்.ஆர், சங்கர் மகாதேவன்
19. பாபா ராப் - Blaaze
20. சிவமணி சோலோ
21. Pray For Me (Poverty Anthem) - ஏ.ஆர்.ஆர், ஆங்கிலப் பாடல்
22. Loves Never Easy - Bombay Theme - Alma / மதுஸ்ரீ
23. முக்காப்புலா - பத்ரி, சயனோரா
24. Ghanan Ghanan - Shankar
25. முஸ்தபா - ஏ.ஆர்.ஆர்
26. சரி கம - பாய்ஸ் - ஏ.ஆர்.ஆர்
27. சையா சையா - ரெஹ்னா, சுக்விந்தர்
28. ஆஸாதி - ஏ.ஆர்.ஆர்
29. வந்தே மாதரம் - ஏ.ஆர்.ஆர்

அனைத்தும் அருமை! என்ன சொல்ல?

அவர் வந்தே மாதரம் பாடலை ஆரம்பிக்கும் போது மணி 11.50. மழைக் கொட்ட ஆரம்பித்தது. ஆனால் யாருமே நகரவில்லை.

ரகுமானின் இசையின் மந்திரம்!

இரவு மணி சரியாக 12. மழை பலமாகக் கொட்டுகிறது. "இன்னும் பாட வேண்டுமா?", ரஹ்மான்.

ஆம் எனப் பலத்த குரலில் கூட்டம்.

ஆனால் 12 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடத்த அனுமதியில்லாததால் வணக்கம் தெரிவித்து விட்டு அவர் காரை நோக்கிச் சென்றார்.

என்ன ஒரு நிகழ்ச்சி! வாழ்நாளிலும் காணக் கிடைக்காத ஒன்று!!!!

மழை நிற்க இரவு 1 மணி ஆனது. வீடு திரும்பும் வழியில் மீண்டும் மழை. மழையுடன் வீடு திரும்பினேன். இன்றிரவும் சாப்பிடவில்லை.வீடு வரும்போது மணி 2.00.

Pray For Me, இது Poverty Theme. அவரின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார். அந்தப் பாடலின் இசையும், அவர் பாடிய விதமும் மிக மிக அருமை. எப்போது அது மார்க்கெட்டுக்கு வரும் என ஆவலுடன் இருக்கிறேன்.

ஸ்ருசல்.

6 கருத்துகள் :

துளசி கோபால் சொன்னது…

ஸ்ருசல்,

நிகழ்ச்சியை நல்லா 'கவர்' செஞ்சுருக்கீங்க.
மேடையில் நடக்கறதைவிட அதையொட்டி முன்னும் பின்னும் நடக்கறதுதான் எப்பவுமே அருமை.

மனம் நிறைஞ்சிருந்தா பசி எடுக்காது.

அன்பு சொன்னது…

அருமையான பதிவு. மனசுள்ள ஒரு திக்...திக்..கோடவே படிச்சு முடிச்சேன். நல்லவேளை, எல்லாம் நல்லபடியா நடந்தேறியிருக்கிறது.
நல்ல, மற்றக்கமுடியாத அனுபவாயிருக்கும். அதை அப்படியே எங்களுக்கும் கொடுத்தமைக்கு, நன்றி.

பெயரில்லா சொன்னது…

Nice narration. :)

Sundar Padmanaban சொன்னது…

ஸ்ருசல்,

மேடையையும் அதில் தோன்றும் கலைஞர்களையும் பார்த்து ஆரவாரம் செய்யும் ரசிகர்கள் திரைக்குப் பின்னால் இயங்கும் கலைஞர்களின் உழைப்பைப் பற்றி அறிந்து கொள்வதில்லை. நீங்கள் அந்த உழைப்பைப் பற்றி நன்றாகவே சொல்லியிருக்கிறீர்கள்.

பாராட்டுகள்.

அன்புடன்
சுந்தர்.

பிச்சைப்பாத்திரம் சொன்னது…

Nice post. I enjoyed as a arr fan.

- Suresh Kannan

ஸ்ருசல் சொன்னது…

நன்றி சுரேஷ் கண்ணன்.