இந்த இரண்டு மாதங்களில் நான் மிகவும் ரசித்துக் கேட்டப் பாடல்களின் பட்டியல்.
1. From the heavens up above - படம்: Warriors of Heaven and Earth - பாடியவர்: சுனிதா சாரதி - இசை: ஏ.ஆர்.ரகுமான்
Warriors of Heaven and Earth எப்போதோ வந்தது தான். அப்போதும் சில பாடல்களைக் கேட்டிருக்கிறேன். ஆனாலும் போன வாரம் தான் இசைத் தட்டு கிடைத்தது (Movie Sound Tracks). சொல்லத் தேவையில்லை. ரகுமானின் இசை மிக அருமை. சுனிதா சாரதியின் குரலும் மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது இந்த ஆங்கிலப் பாடலுக்கு. இதன் ஹிந்தி பதிப்பும் உள்ளது. அதனை சாதனா சர்கம் பாடியுள்ளார்.
இதே தொகுப்பில் உள்ள மற்ற இசைத் திரட்டுகளும் அருமை. முக்கியமாக முதலாவது ஒன்று.
2. மேற்கே மேற்கே - படம்: கண்ட நாள் முதல் - பாடியவர்: சங்கர் மகா தேவன், சாதனா சர்கம் - இசை: யுவன் சங்கர் ராஜா
ஒரு வித்தியாசமான பாடல். சங்கர் மகா தேவன் பாராட்டப்பட வேண்டியவர். ஆரம்பத்தில் வரும் "லைல லைலா" என ஆரம்பித்து "மேற்கே மேற்கே" என செல்வது அருமை. இந்தப் பாடலின் சரணம், காதல் கொண்டேன் படப் பாடலின் சாயலைக் கொண்டுள்ளது,
3. சுட்டும் விழிச் சுடரே - படம்: கஜினி - பாடியவர்: கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ - இசை: ஹாரிஸ்
ஹாரிஸின் படங்களில் ஒரு பாடலாவது இந்த ரகத்தில் உண்டு. மிக அருமையான மெல்லிசை. வழக்கம் போல பாம்பே ஜெயஸ்ரீ தன்னுடைய குரலால் பிரமாதப்படுத்தியிருக்கிறார். பாம்பே ஜெயஸ்ரீ அறிமுகமானது ரகுமானின் இசையில் தான் என்றாலும் அவர் பெரும் புகழ் பெற்றது ஹாரிஸின் இசையில் தான். (வசீகரா, முதற் கனவே, கலாபக் காதலா, உயிரே என் உயிரே, இந்தப் பாடல்)
ஹாரிஸ், ஆஸிட் டூல்களைச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார். அவருடைய பாடல்களில் பெரும்பாலும் இது தான் ஆக்கிரமிக்கிறது.இதற்கெல்லாம் முன்னோடி ரகுமான். அவருடைய முதல் பாடலில் இருந்து இன்று வரை அதைத் திறம்பட பயன்படுத்தி வருகிறார். அந்தக் காலத்தில் இளையராஜாவின் தபேலா ஒரே சீரில் பாடல் முழுவதும் வருவது போல்.
4. ஒரு மாலை இளவெயில் நேரம் - படம்: கஜினி பாடியவர்: கார்த்திக் - இசை: ஹாரிஸ்
இந்தப் பாடல் முதலில் மிகவும் பிடிக்கவில்லை. படம் பார்த்து வந்த பிறகு மிகவும் பிடித்து விட்டது. நன்றாக படமாக்கியிருந்தார்கள். இந்தப் படத்தில் வரும் ரங்கோலா பாடலும் நன்றாக இருக்கிறது. முக்கியமாக சுஜாதாவின் குரல். பல்லவி முடிந்ததும் வரும் "தரிக்கான் ங் ஆ ங் ஆ" கேட்க இனிமையாக இருந்தது :)
5. Choreography (Vaneasa Mae) - ராகா டான்ஸ் - இசை: ஏ.ஆர்.ரகுமான்
இதனைப் பற்றி ஏற்கனவே என்னுடைய பதிப்பில் எழுதியிருக்கிறேன். வயலின் இசையை பிரதானமாகக் கொண்ட இது ஒரு அருமையான பாடல்.
6. மண்ணிலே மண்ணிலே - படம்: மழை - பாடியவர்கள்: SPB. சரண், சுமங்கலி - இசை: தேவி ஸ்ரீபிரசாத்
SPB சரண் (அவரின் தயாரிப்பு) நல்ல பாடலைத் தான் தெரிவு செய்திருக்கிறார்). யாரென்று தெரியவில்லை இந்த சுமங்கலி. பாடலின் வரிகளும் நன்று.
உதாரணமாக
"இத்தனை மழையிலும் இந்த நாணம் நனையவில்லை?"
"கன்னி நான் நனையலாம். கற்பு நனைவதில்லை"
பாடல் சில இடங்களில் கேட்பதற்கு, சிட்டிசன் படத்தில் வந்த "சிக்கி முக்கி கல்லு" பாடலைப் போல இருக்கின்றது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ரகுமான் வந்து சிறப்பித்திருந்தார்.
7. நல்ல வாழ்வு - படம்: சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி - இசை: இளையராஜா
நல்ல மெல்லிசைப் பாடல்.
8. கஜூராகோ - படம்: ஒரு நாள் ஒரு கனவு - பாடியவர்கள்: ஹரிஹரன் - இசை: இளையராஜா
நல்ல பாடலே; ஆனாலும் இது கண்ணுக்குள் நிலவில் வரும் ரோஜா பூந்தோட்டம் பாடலை நினைவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை. முதல் சரணத்திற்கு முன் வரும் வயலின் இசை அருமை.
9. யாரிடமும் தோன்றவில்லை - படம்: தொட்டி ஜெயா - பாடியவர்கள்: ரமேஷ் விநாயகம், ஹரிணி இசை: ஹாரிஸ்
இந்தப் படத்தின் சிறந்த பாடல். ரமேஷ் விநாயகம் ஒரு இசை அமைப்பாளர் என்பது பலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன் (அழகியத் தீயே, நளதமயந்தி). அழகியத் தீயே-ல் அவர் பாடியிருந்த "விழிகனருகினில் வானம்", நளதயந்தியில் பாடியிருந்த "என்ன இது" பாடலும் நல்ல பாடல்கள். மற்றுமொரு சிறப்பு ஹரிணி பாடியிருப்பது. ஆரம்பத்தில் இருந்து எனக்கு விருப்பமான பாடகர். (சுஜாதவும் தான்)
10. உயிரே என் உயிரே - படம்: தொட்டி ஜெயா - பாடியவர்கள்: கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ, அனுராதா ஸ்ரீராம் - இசை: ஹாரிஸ்
மற்றுமொரு பாடல் தொட்டி ஜெயா படத்திலிருந்து; பாம்பே ஜெயஸ்ரீ பாடலின் பாதியில் தான் பாட ஆரம்பிப்பார். அவர் ஆரம்பிக்கும் அந்த முறை மிக அருமையாக இருக்கும். அனுராதா ஸ்ரீராம் ஏன் எனக்குப் புரியவில்லை. படத்தைப் பார்த்தால் ஒரு வேளை புரிய வரும் என நினைக்கிறேன்.
ஹாரிஸின் பாடல்கள் சிறப்பாக வந்தாலும் அவருடைய தீம் பாடல்கள் ஒரே மாதிரியாக இருப்பதாக ஒரு உணர்வு எனக்கு. அன்னியன், தொட்டி ஜெயா, கஜினி. கஜினி படம் முழுவதும் அந்த இசை இடம்பெற்று மிகவும் சோதித்தது. அவர் வேறுமாதிரியாக முயற்சித்தால் நன்றாக இருக்கும். ஒரு வேளை இயக்குநர்களின் விருப்பமாக இருக்கலாம்.
11. அன்பே ஆருயிரே - படம்: அன்பே ஆருயிரே - பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான் - இசை: ஏ.ஆர்.ரகுமான்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரகுமானின் படம் தமிழில். அவர் பாடிய பாடலும் இதுவே. நல்ல பாடல். படத்தில் வரும் அனைத்துப் பாடல்களுமே ஓரளவு நல்ல பாடல்களே. ஆனால் எடுத்த விதம் சரியில்லை என்பது கருத்து.
12. முதல் முதல் உன்னை - படம்: பிரியசகி - பாடியவர்: சித்ரா - இசை: பரத்வாஜ்
கேட்பவரே உருகும் விதத்தில் சித்ரா பாடி இருக்கிறார். இனிமையான பாடல்.
13. சமர்பணம் உனக்காகத் தான் - தொகுப்பு: அம்மா - பாடியவர்: கங்கை அமரன் - இசை கங்கை அமரன்
நான் சிறு வயதாக இருக்கும் போது, தினமும் காலையில் விஜய் தொலைக்காட்சியில் (அப்போது பெயர் வேறு என்று நினைக்கிறேன்) வரும் அம்மா நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் வரும் "மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே" என்ற பாடலை விரும்பிப் பார்ப்பேன். நான் இளையராஜா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். என்னால் அந்த வயதில் வித்தியாசப்படுத்த முடியவில்லை. ஆனால் பாடியது கங்கை அமரன். நீண்ட நாட்களாக முயற்சித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இந்த இசைத் தட்டு கிடைத்தது. அந்தப் பாடலும் அருமை. அந்தத் தொகுப்பிலிருந்த இந்த "சமர்பணம் உனக்காகத் தான்" என்ற பாடல் மிகவும் பிடித்து விட்டது. தினமும் அலுவலகத்திற்குச் செல்லும் முன்பு இந்தப் பாடலைக் கூடுமான வரைக்கும் கேட்டு விட்டு தான் வருகிறேன். மனதிற்கு இதமாக இருக்கின்றது.
எது இங்கு நடந்தாலும்,
எவர் எமை புகழ்ந்தாலும்
வருவது நின்றாலும்,
நின்றது வந்தாலும்
எது வந்த போதும்
இன்பம் துன்பம் யாவுமே
சமர்பணம் உனக்காகத் தான்
என் தாயே இங்கே
சகலமும் உனக்காகத் தான்
நல்ல வரிகள். உள்ளம் உருக வைக்கும் ராகம்.
ஸ்ருசல்.
4 கருத்துகள் :
3,5,8,9,10 அருமையான தேர்வு..
Nalla rasanai. Thanks for sharing.
நல்ல தேர்வு என்று நானும் சொல்லமுடியவில்லை - பெரும்பாலான/எந்தப்பாடலையும் இதுவரை முழுதாக கேட்காததால்:)
//ஆஸிட் டூல்களைச் சிறப்பாகப் பயன்படுத்துகிறார்.
அப்படின்னா என்ன? எந்தப்பாடலாவது உதாரணம் சொல்லுங்களேன்!
அன்புள்ள அன்பு,
ரகுமான் பாடல்களில் பிண்ணனியில் ஒரு பீட் வந்தால் (உதாரணத்திற்கு காதல் ரோஜாவே பாடல்) அது பாடல் முடியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். அதை இந்திய சினிமாவிற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியது ரகுமான் தான் (எனக்குத் தெரிந்த வரை). இது Acid Tools என அழைக்கப்படும். இது Sony, Apple முதலான நிறுவனங்கள் மென்பொருளாக வழங்குகின்றன. இதில் ஒரு சில வினாடிகளுக்கு ஒரு Music-ஐ பதிவு செய்து அந்த Track (தடம்) முழுவதும் வரும்படிச் செய்யலாம்.
அதனை இப்போது பல இசை அமைப்பாளர்கள் உபயோகப்படுத்தினாலும், ஹாரிசும் நன்றாகவேப் பயன்படுத்துகிறார். அவரின் பல பாடல்களில் அதனை நீங்கள் கேட்கலாம்.
இளையராஜாவின் பாடல்களில்
கருத்துரையிடுக