வெள்ளி, ஜூன் 29, 2007

எலி ஃபோன்

கடந்த ஆறு மாதங்களாக அனைத்து இணையத் தளங்களிலும், பத்திரிக்கைகளிலும் அதிகமாக விவாதிக்கப்பட்ட, எழுதப்பட்ட செய்தி ஆப்பிள் ஐ-ஃபோன். ஆப்பிள் போன் இன்று மாலை ஆறு மணி முதல் விற்பனை ஆரம்பிக்கிறது.

இது வரை டெக்னாலஜி வரலாற்றில் எந்த போனுக்கும், ஏன் எந்த ஒரு கணினியிற்கோ, ஆப்பரடிங் சிஸ்டத்திற்கோ, சாஃப்ட்வேருக்கோ இப்படி ஓர் எதிர்பார்ப்பு எழுந்ததில்லை. அப்படி என்ன அதிசயம் இந்த ஐ-ஃபோனில். இதனைப் பற்றி எழுத போவதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அதனைப் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதனை வாங்கலாமா, வேண்டாமா என்று பல நாட்களாக யோசித்து வருகிறேன்.

முதலில் ஐ.போனைப் பற்றி:

ஜாப்ஸை பல முறை எனது வழிகாட்டி என்று குறிப்பிட்ட்டதுண்டு. ஆனால் அவரிடம் பிடிக்காத சில விசயங்களும் உண்டு. அவற்றுள் முக்கியமானது, கண்மூடித்தனமாக (அல்லது தெரிந்தே) தனது தயாரிப்புகளைப் பற்றி உயர்வாகவும், அதிமதிப்பீடு செய்தும் பேசுவது.

ஜனவரி மாதம் ஐபோனை பற்றிய அறிமுக கூட்டத்திலேயே, உலகிலேயே இது போன்றதொரு போன் வந்ததில்லை என்று கூறினார். ஐபோனில் பல வித்தியாசமான, நல்ல வசதிகள் உள்ளதென்பது மறுக்க முடியாதது. ஆனால் எல்லாவற்றையும் இவர்கள் தான் கண்டுபிடித்தது போல் கூறுவது ஒப்புக்கொள்ள இயலாதது. முதலில் டச் கீபேடுகள். இது LG Prada போனின் அப்பட்டமான காப்பி என்றும் கூறப்படுகிறது. இதனை நான் முழுமையாக நம்புகிறேன். LG போன்ற நிறுவனங்கள், மொபைல் போன்களில் புதுவசதிகளை புகுத்துவதற்கு புகழ் பெற்றவை (ஆப்பிள் அளவிற்கு ஒரே நாளில் அல்ல என்பது வேறு விசயம்). இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே LG சாக்லேட் என்ற மொபைல் போனை வெளியிட்டது. அதில் பட்டன்களுக்குப் பதிலாக, பட்டன்களை போன்ற அமைப்புகளின் மீது கை வைப்பதனால் ஏற்படும் வெப்பம், உள்ளீடுகளாக மாற்றப்பட்டும் சாப்ட்வேருக்கு கொடுக்கப்பட்டது. இதனால் பொத்தான்களை அழுத்த வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமாக இருந்தது. இது ஐரோப்பாவில் பெரும் வரவேற்பினை பெற்றது. ஐரோப்பாவில் கிடைத்த வரவேற்பினால், அதே மாடல் சிற்சில மாற்றங்களுடன் வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டது (ஆனால் CDMA). இதில் கிடைத்த படிப்பினையின் (Learning) விளைவாக, LG, பிராடா ஃபோனை வெளியிட்டிருக்க வேண்டும். உள்ளீட்டிற்கு தனியாக ஓர் இடம் இருப்பதற்கு பதிலாக, ஸ்கிரினீலேயே உள்ளீடு செய்யும் வசதி தான் பிராடாவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தான் ஐபோனும் கொடுக்கிறது. இதன் புகைப்படங்களை பார்த்து தான் ஐபோன் டிசைன் செய்யப்பட்டது என்று LG நிறுவனம் குற்றம் சாட்டுகிறது. இதனை இது வரை ஆப்பிள் நிறுவனம் மறுக்கவில்லை. மறுக்கவும் செய்யாது என்று நினைக்கிறேன்.

ஐ-பாட் டிவைஸ்கள் மார்கெட்டிற்கு வருவதற்கு முன்பாகவே பல நிறுவனங்கள் MP3 பிளேயர்களை சந்தையில் விற்றுக் கொண்டிருந்தன. அவற்றுள் முக்கியமானவை Creative, மற்றும் iRive. இவை இரண்டும் மிகவும் புகழ்பெற்ற பிளேயர்கள். ஆனால் ஐ-பாட் தான் உலகிலேயே முதல் MP3 பிளேயர் போல் அவர் பேசியது என்னவோ ஏற்றுக்கொள்ள இயலாதது. மற்றவர்களின் தயாரிப்பிற்கு இவர் புகழ் தேடிக்கொள்வது ஒப்புக்கொள்ள இயலாதது. இதில் மைக்ரோசாஃப்டினைப் பற்றி அடிக்கடி, 'எங்களை காப்பி செய்கிறார்கள்', என்று கூறுகிறார்.

சஃபாரியை (Safari) பற்றி இவர் விட்ட கதைகளை இப்போது நினைத்தாலும்......... 300 மில்லியன் iTunes உபயோகிப்பாளர்கள் இருக்கிறார்களாம்... ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.

அதே போல், சின்ன சின்ன விசயங்களை கூட, பெரிய கண்டுபிடிப்பாக பேசுவது. அடுத்து வெளிவர போகும், Max Os 10.5 பதிப்பில் கொடுக்கவுள்ள நூற்றுக்கணக்கான வசதிகளில் (?) Top 10 வசதிகளாக அவர் இந்த மாதம் Apple Developer Connection கூட்டத்தில் பட்டியலிட்டார். அவற்றுள் வால்பேப்பர் போன்ற சிற்சில வசதிகளை கூட பெரிய விசயமாக குறிப்பிட்டு கூறியிருந்தார்.அடுத்த ஆண்டு, "10.6 பதிப்பில் புதிய கால்குலேட்டர் புரோகிராம் வெளியிடுகிறோம்', என்பார். அதற்கும் கூட்டத்தினர் கரவொலியெழுப்புவார்கள்.

புதிய wallpaper என்று அவர் கூறிய போது, அந்த வீடியோவினை பார்த்தால், கூட்டத்தில் சிரிப்பொலியினை கேட்கலாம். காரணம், அந்த வால்பேப்பர், Windows Vista Wallpaper-ஐ சிறிது ஒத்திருப்பது. வழக்கம் போல், ஜாப்ஸ் விண்டோஸை கேலி செய்கிறார் என்று நினைத்து கூட்டத்தினர் சிரித்தனர். ஆனால், கடைசியில், அது இல்லை என்று தெரிய வந்து வழக்கம் போல், 'ஆஆஆஆஆஆ, என்று உணர்ச்சிகரமாக கரவொலி எழுப்பினர். என்ன கூட்டம் சார் இது?



இதெல்லாம் இருந்தாலும், இந்த ஐ-போனை கண்டிப்பாக, எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற தணியாத ஆவல் இன்று வரை இருந்தது. இன்று கூட அவர்களின் அங்காடிக்கு சென்று விசாரித்து விட்டு வந்தேன். இன்று வந்த தகவல்களின் படி, வாடிக்கையாளர்கள் ஐஃபோனைப் பெற, ஏடி&டி நிறுவனத்துடன் இரண்டு வருடம் ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக, பிரீபெய்டு இணைப்பு கூட பெற்று கொள்ளலாம் என்று கூறினர். இதனை நாளை வரும் செய்தி தாளை பார்த்து தான் உறுதி செய்ய வேண்டும். நல்லது; வாங்கலாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனாலும் வேண்டாம் என தடுத்த விசயங்களில் மிக மிக முக்கியமானது (எனக்கு):

MP3 ஃபைலை ரிங்டோனாக அமைத்து கொள்ளும் வசதி இல்லாதது. ஆப்பிள் ஐடியூன்ஸ் தளத்திலிருந்து ரிங்டோன்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் அவை அனைத்தும் பாடல்களாக இருக்கும். சும்மா இருக்கும் போது, எனக்குப் பிடித்த பாடல்களில் இருந்து இண்ட்ஸ்ட்ருமண்ட் இசையை மட்டும் எடுத்து MP3-யாக அமைத்து கொள்வேன். எப்போதும் அவற்றையே உபயோகப்படுத்துவேன். ஆனால் இவ்வசதி ஐபோனில் இல்லாததால், அதனை வாங்கும் எண்ணம் சிறிதும் இல்லை.இப்போது, பல பத்திரிக்கைகள் மதிப்பீடுகள் எழுத ஆரம்பித்து விட்டன. அவை MP3 Ringtone வசதி இல்லையென்று உறுதி செய்துள்ளன.

கொசுறு:

* முப்பது மில்லியனுக்கும் மேற்பட்டோர்கள் இந்த ஆறுமாதங்களில் ஐ-ஃபோனைப் பற்றி கூகுள் தளத்தில் தேடியுள்ளனர்.
* ஆப்பிளின் மார்க்கெட் மதிப்பு 30 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளன. அதாவது 50%
* எனது வீட்டிற்கு அருகிலுள்ள ஆப்பிள் ஸ்டோரில் மக்கள் இப்போதே நிற்க ஆரம்பித்து விட்டனர்.

ஸ்டீவ் மீதான வருத்தம் எல்லாம் அவரது வியாபாரத்தின் மீதும், மற்றவர்களின் உழைப்பிற்கு இவர் பெயர் வாங்கி கொள்வதனாலும், மற்றவர்களை மதிக்காமல் பேசுவதும், அதீத தற்புகழ்ச்சியினாலும் தான். ஆனாலும் அவரது உழைப்பும், திறமையும், வாழ்க்கையில் இவர் கண்ட ஏற்ற, தாழ்வுகளை மீறி சாதித்ததும், இவரது தன்னம்பிக்கையும் என்னை எப்போதும் கவர்பவை.

அதே நேரத்தில் இந்த போன், சந்தையில் புரட்சி செய்ய போகிறது என்பதை மறுப்பதிற்கில்லை. ஒவ்வொரு நிறுவனமும் (Motorola, LG, Nokia, Sony, ...), வருடம் முழுவதும் ஏனோதானோவென்று 100 மாடல்கள் வரை வெளியிட்டுக் கொண்டிருந்தன. ஒன்றுக்கொன்று பெரிய வித்தியாசம் இருக்காது. ஒரு நிறுவனம், இரண்டு வருடங்கள் உழைத்து ஒரே ஒரு மாடல் கொண்டு சந்தையில் இறங்குவது புதிது. இனியாவது மற்ற நிறுவனங்கள், இவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு, தரமான மொபைல் போன்கள் வெளியிடுவார்கள் என்று சிறிது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

------------------------------------------------------------------------------------

சென்ற பத்து நாட்களில் மட்டும் ஆறு படங்கள் தியேட்டரில் பார்த்து விட்டேன் என்று நினைத்தாலே அதிர்ச்சியாக இருக்கிறது.

1. Shrek 3
2. Mr. Brooks
3. Surf's Up
4. சிவாஜி
5. Ocean 13
6. Evan Almighty

நாளையும், நாளை மறுநாளும் இரண்டு படங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அவற்றுள் ஒன்று 'Evening'. மற்றொன்று.

எலி:

Pixar ஸ்டுடியோவின், அனிமேட்டட் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அனிமேட்டட் படங்கள் பெரும்பாலும் தவறாமல் பார்த்து விடுவேன். Pixar நிறுவனத்திடமிருந்து (வால் டிஸ்னி), வந்துள்ள சமீபத்திய படம் 'ராட்டடூயி' (Ratatouile). ஒரு எலியினை பற்றிய கதை. இன்று (June 29), வட அமெரிக்காவெங்கும் வெளியாகிறது. யாம் இங்குள்ள தியேட்டரில் ஆஜர்.



இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், ஐ-ஃபோனும், இப்படமும் ஒரே நாளில் வெளியாவது தான். இரண்டுமே ஸ்டீவ் ஜாப்ஸின் தயாரிப்புகள். தெரிந்தே தான் இப்படி செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

------------------------------------------------------------------------------------

சென்ற வாரம் அருகிலுள்ள தியேட்டரில் 'Surf's up' படம் பார்க்க சென்றிருந்தேன். 10 நிமிடங்கள் தாமதமாக தான் சென்றேன். உள்ளே சென்றால் அதிர்ச்சி. திரையரங்கில் யாருமே இல்லை. நான் மட்டும் தான் தனியாக பார்த்தேன். எனக்கே ஒரு மாதிரி உறுத்தலாகிவிட்டது. அதற்கு முந்தைய நாள், 'Mr. Brooks' (நல்ல திரைப்படம்) படத்திற்காவது பரவாயில்லை. நான்கைந்து நபர்கள் இருந்தார்கள்.

எப்பொழுதாவது தியேட்டரில் தனியாக படம் பார்த்த அனுபவம் உண்டா?

செவ்வாய், ஜூன் 19, 2007

லாம்... கலாம்... திரும்பலாம்... திரும்ப வரலாம்....

மூன்றாவது அணி, தற்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே அடுத்த ஜனாதிபதியாகவும் நீட்டிக்க வேண்டும் என்று கூறி அவரை தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டிருக்கிறார்கள்.

1. கலாம் போட்டியிடுவாரா?
2. அவருக்கு பி.ஜே.பி அல்லது தேசிய முற்போக்கு கூட்டணியினரின் (சில கட்சிகளிடமிருந்து) ஆதரவு கிட்டுமா?
3. தி.மு.கவின் நிலை என்ன?
4. அப்படியே அவர் ஜெயித்தாலும் இந்த ஐந்து வருடங்களில் செய்ய இயலாததை அடுத்த முறை என்ன செய்ய முடியும்?

என்று பல கேள்விகள்.

நேற்றைய செய்திகள் எல்லாம், இரா. செழியன் அல்லது தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி ஆகிய இருவரில் ஒருவர் மூன்றாம் அணியின் சார்பில் நிறுத்தப்படலாம் என்று கூறியிருந்தன. இதற்கு எதற்கு கூட்டம் எல்லாம்? எப்படியும் தோற்க போகிறார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நானும் நிற்கிறேன் என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம் என்று நினைத்தேன். இன்றைய செய்தி சற்றும் எதிர்பாராத விதமாகவும், ஆச்சர்யமளிக்க செய்யும் வகையிலும் இருக்கிறது. ஜெ.யிடமிருந்து இப்படி ஓர் அறிக்கையா என்று வியப்பு. தலைப்பை பார்த்ததுமே பல விசயங்கள் புரிந்தது.

1. நல்ல முடிவு (எப்படி இவர்களிடமிருந்து? :))
2. ஜெ. மற்றும் கூட்டணியினர் கருணாநிதிக்கு வைத்த செக்

மூன்றாம் அணியென்று ஒன்று இருக்கிறதா என்று கேட்ட பலருக்கு, இந்த அறிக்கை மூலம் ஓர் நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது. சிறந்த முடிவு.

கலாமினால் சிறப்பாக செயல்பட முடியுமா, முடியாதா என்ற கேள்விகள் ஒரு புறம் இருந்தாலும் கூட நான் கேள்விப்பட்ட விசயம் உண்மையாக இருக்குமெனில் அவர் ஜனாதிபதியாக வருவதற்கு தான் எனது ஓட்டு. (கள்ள ஓட்டு ஜனாதிபதி தேர்தல்ல போட முடியாதோ?. இரு கழகத்தினரும் சிந்திக்க வேண்டிய விசயம்.).

சென்ற பாராளுமன்ற தேர்தலில், சோனியா காந்தி பிரதமராக வரும் வாய்ப்பிருந்த போது அதனை ஏற்க மறுத்து விட்டார் என்பதே. காலையில் அலுவலகம் செல்லும் போது, 'சோனியா தான் பிரதமரா', என்று விரக்தியுடன் சென்ற எனக்கு மாலை வீடு திரும்பும் போது கேட்ட செய்தி இனிப்பாக இருந்தது.

'மன்மோகன் சிங் பிரதமர்; சிதம்பரம் நிதித்துறை (அப்போது கேட்க நன்றாக இருந்தது). மனச்சாட்சியின் படி பதவியை உதறிவிட்டார் சோனியா', என்று இருந்தது.

கலாம் போட்டியிடுவாரா?

கலாம் போட்டியிட வாய்ப்புகள் குறைவு. பி.ஜே.பி செய்தி தொடர்பாளர் சுஷ்மா சுவராஜ், 'இரண்டு மாதங்களுக்கு முன்பே கலாம் தேர்தலில் நிற்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்த போது, 'போட்டியில்லாமல் தேர்வானால் சம்மதம்', என்று கலாம் கூறியதாக தெரிவித்திருந்தார். மேலும் பி.ஜே.பி பைரன் சிங் செகாவத்திற்கு தனது ஆதரவை உறுதி செய்தது போல் தெரிகிறது. ஆனால் இன்றைய பேட்டியில் செகாவத், 'கலாம் தேர்வானால் மகிழ்ச்சி', என்று தெரிவித்திருக்கிறார். அவர் உண்மையிலேயே அப்படி விரும்பி இருந்தால் சென்ற மாதமே கூறியிருக்க வேண்டும். பெண் வேட்பாளரிடம் தோல்வியுற பயந்து இப்போது கலாமிற்கு ஆதரவு தெரிவிப்பது போல் தெரிகிறது. சரி, அவர் அப்படியே விரும்பி போட்டியிலிருந்து விலகி, பி.ஜே.பி கலாமிற்கு ஆதரவு தெரிவித்தால் போட்டியிட வாய்ப்பு உண்டு. இரண்டும் நடக்க 50% வாய்ப்பிருக்கிறது. (பி.ஜே.பியும் கலாமின் மீது வருத்தத்தில் இருந்ததாக நினைத்திருந்தேன்.)

அவருக்கு பி.ஜே.பி அல்லது காங்கிரஸ் கூட்டணியினரின் ஆதரவு கிட்டுமா?:

ஷெகாவத் விலகினால். பி.ஜே.பியிடமிருந்து வாய்ப்புகள் கிட்ட பிரகாசம். யு.பி.ஏ அணியில் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்காது. நான் மேற்கூறிய காரணம் உண்மையாக இருக்கும் பட்சத்தில். (சோனியா பிரதமராவதை கலாம் தடுத்தார் என்பது). என்னதான் மனசாட்சி என்று மழுப்பினாலும், மனக்குறை இருக்க தானே செய்யும். ஆகையினால் கலாம் மீண்டும் ஜனாதிபதியாக வருவதை விரும்ப மாட்டார் சோனியா. கம்யூனிஸ்டுகள் ஆதரவு தரவும் வாய்ப்புகள் குறைவு. (சோம்நாத் சட்டர்ஜி துணை ஜனாதிபதியாக போட்டியிட விரும்புவதாக கேள்வி).

ஷெகாவது தற்போது அடிக்கடி முணுமுணுக்கும் பாட்டு:

'பொறந்தாலும்
ஆம்பளையா பொறக்க கூடாது.
அப்படி பொறந்து விட்டா
பொம்பளைட்ட தோற்க கூடாது.'


3. தி.மு.கவின் நிலை என்ன?

ஜெ. மற்றும் அவரது கூட்டணியினடமிருந்து வந்த அறிவிப்பு நிச்சயம் தி.மு.க விற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பது உண்மை. ஆனால் கருணாநிதி வழக்கம் போல் ஏதாவது கூறி மழுப்பி விடுவார்.

'பெண்கள் இச்சமூகத்தின் கண்கள்;
அவர்கள் இதுவரை ஜனாதிபதி பதவியில் அமரவில்லை என்பது அக்கண்களில் ஏற்பட்ட
புண்கள்'.


மேலும், 'சென்ற முறை கலாம் ஜனாதிபதியாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்ததே நான் தான்', என்றும் கூறி விடுவார்.

கருணாநிதியும் கண்டிப்பாக கலாமிற்கு ஆதரவு அளிக்க
மாட்டார். சட்டசபை (தன்) பொன்விழாவிற்கு, தான் அழைத்தும் அதில் பங்கேற்க மறுத்து
விட்டார் என்ற காரணத்தினால். மேலும் கருணாநிதி சொல்வதை ஜெ.வும், ஜெ. சொல்வதை
கருணாநிதி ஏற்பதையும் வரலாறு இது வரை கண்டதில்லையே!

'என்ன தலைவரே பேசுறீங்க... இப்படி தான் போன
மாசம் நம்ம இருளப்பன் காட்டிக் கொடுத்தான்.. அப்புறம் அவனை ஓட ஓட சந்தனம் விரட்டி
கொன்னதெல்லாம் நம்ம சோனமுத்து கண்ல வந்து போகும்ல...... இம்ம்... இம்ம்.. சொல்றா
நான் இருக்கேன் பாத்துக்குறேன்... யார் திருடுனான்னு சொல்லு' - வடிவேலு)



4. அப்படியே அவர் ஜெயித்தாலும் இந்த ஐந்து வருடங்களில் செய்ய
இயலாததை அடுத்த முறை என்ன செய்ய முடியும்?

இது முக்கியமானது. இதுவரை ஜனாதிபதியாக ஏதாவது செய்திருக்கிறாரா என்று யோசித்து பார்த்தால், அதிகமில்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் அப்பதவியில் அமர்ந்து கொண்டு அவ்வளவு தான் செய்ய முடியும் என்பதே உண்மை. பாகிஸ்தான் அதிபர் போல், பாராளுமன்றத்தை கலைத்து விட்டு அதிபராட்சி எல்லாம் இந்தியாவில் தற்சமயம் சாத்தியமில்லை. அது அவசியமில்லாததும் கூட.

கலாமின் ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

1. சியாச்சின் செல்கிறார்.
2. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சென்று மக்களையும், போர் வீரர்களையும் சந்திக்கிறார்.
3. போர் விமானத்தில் பறக்கிறார்
4. ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு சென்று லட்சக்கணக்கான குழந்தைகளை சந்தித்திருக்கிறார்.
5. அறிவியல் மாநாடுகளில் கலந்து கொண்டு அடுத்த பத்து, இருபது வருடங்களில் என்ன செய்ய வேண்டும் என்று விவாதிக்கிறார். அவருடைய Presentation காணும் வாய்ப்பு கிட்டியது.

ஜனாதிபதி என்றாலே தினமும் எழுந்து, உண்டு, பலரை சந்தித்து தூங்கிய பலருக்கு மத்தியில் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற அவரது ஆர்வம் பாராட்டத்தக்கது. அவரால் முடிந்ததை செய்கிறார். மேலும் மெயில்களுக்கு பதில் எழுதுகிறார். பாதிக்கப்பட்டவர்கள் மெயில்களின் மூலம் அவரை தொடர்பு கொண்டதன் விளைவாக, பல நடவடிக்கைகள் எடுக்க காரணமாயிருந்திருக்கிறார்.

ஆனால் பிரதீபா வருவதற்கு தான் 80% வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்படி ஒருவர் இருப்பதே பலருக்கு ஏன் மீடியா, அரசியல்வாதிகளுக்கே ஒரு வாரத்திற்கு முன்பாக தெரியவில்லை. அதற்கு முன்பாக, மஹாராஷ்ரா, ராஜஸ்தான் என்று பல இணையத்தளங்களில் வரிந்து கட்டிக்கொண்டு சண்டையிடுகிறார்கள். தமிழனும் தன் பங்கிற்கு முட்டி பார்க்கிறான்.

சிரித்த கமெண்ட்:

Patil as rashtrapatniby khatta
sambhar on Jun 19, 2007 04:02 AM


Jai Maharashtra


RE:Patil as rashtrapatni by Laker on Jun 19, 2007 04:05 AM

Jai Andaman Nicobar Island


RE:Patil as rashtrapatni by kumar on Jun 19, 2007 04:16 AM

Jai Andaman Nicobar Theevu


RE:Patil as rashtrapatni by Adobe on Jun 19, 2007 05:05 AM

jai Goa


RE:Patil as rashtrapatni by Indian Citizen on Jun 19, 2007 05:07 AM

jai jhumri talaiya

இந்த குசும்பு மட்டும் இல்லையென்றால் இந்தியாவும்,
தமிழ்நாடும் (மூன்றாவது எழுதியவர் நம்மவர். Jai Andaman Nicobar Theevu :))..
முதலில் கமெண்ட் எழுதியவரை அதன் பிறகு காணவில்லை.

-------------------------------------------------------


சரி.... எது நடக்கும்னு யார் உங்கிட்ட ஆருடம் கேட்டா? வேலை இல்லை.. ஏதோ
முக்கியமான நிகழ்வை பதிந்து வைப்போம் என்று பதிகிறேன்.

திங்கள், ஜூன் 18, 2007

சிவாஜி என்றொரு குப்பை

நீண்ட நாட்களாக மற்றவர்கள் காத்திருந்தது போலவே, பலத்த எதிர்பார்ப்பிற்கு பிறகு சிவாஜி படத்திற்கு சென்றேன். 'சிவாஜி என்றொரு குப்பை' என்று கூற தான் ஆசை. ஆனால் ரஜினி ரசிகர்கள் என்னை சும்மா விட மாட்டார்கள். அந்த அளவிற்கு படமும் மோசமில்லை. உண்மை தான். படம் நன்றாக தானிருக்கிறது; நன்றாக ஓடுகிறது; ஓட வேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட - ஏ.வி.எம். நிறுவனத்திற்காகவாவது. எனது வருத்தமெல்லாம், சங்கர் என்றொரு குப்பையான இயக்குநர் மீது தான். பிரம்மாண்டம் எல்லாம் சரி தான். நல்ல பாடல்களை வருவிக்கும் விதத்திலும், நல்ல திரைக்கதை கொண்டு வரும் விதத்திலும், சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்தும் விதத்திலும் சிறப்பாக செயல்பட்டாலும் எவ்விதமான படங்கள் எடுக்கிறார் இவர்? இவருக்கு இந்தியாவில் சிறந்த இயக்குநர் என்றொரு பெயர் வேறு! இவருடைய இரு படங்கள் எப்படிப்பட்ட படங்கள்! (என்று நினைத்திருந்தேன்). ஜென்டில்மேன், இந்தியன். அப்புறம் தான் தெரிந்தது. இவரிடம் இருப்பது எல்லாமே ஒரே மாதிரியான கதைகள் தான் என்று. இது முதல்வன், அந்நியனில் உறுதி செய்யப்பட்டு விட்டது. சிவாஜி மற்றொரு உதாரணம். இவருடைய ஜென்டில்மேன், இன்று வரை, எனக்கு மிகவும் பிடித்தமான படங்களில் ஒன்று. அதில் எவ்விதமான மாற்றமும் இல்லை. எதற்காக, வாஜி வாஜி என்ற பாடலை நான்கு-ஆறு கோடி செல்வு செய்து எடுக்கவேண்டும்? ஒன்றும் புரியவில்லை. 'மன்றம் வந்த தென்றலுக்கு' போன்ற பாடல்களுக்கு, அது ஏன்?

அவருடைய 'என் வீட்டு தோட்டத்தில்', போன்ற பாடல்களுக்கு என்ன செலவு? கதை நன்றாக இருந்தால், எதற்காக இவ்வளவு செலவு? இவருடைய கதைகளில் என்ன இருக்கிறது என்று படங்களையும், படத்தினைப் பற்றி செய்திகளையும் மறைத்து மறைத்து வைக்கிறார் என்று தெரியவில்லை. ஒரு வேளை, படத்தில் கதையென்று ஒன்றுமே இல்லாதது தெரிந்து விட்டால் மக்கள் யாரும் படம் பார்க்க வர மாட்டார்கள் என்பதாலா? :)

சிவாஜி படத்தினை பற்றி:

1. விவேக் மிக நன்றாக செய்திருக்கிறார்; அந்நியன் போலவே. வசனங்கள் அவர் எழுதியதா அல்லது சுஜாதா எழுதியா என்று தெரியவில்லை.

நன்று. அந்நியனில், திருவையாறுக்கு விக்ரம், சதா, விவேக் ரயில் ஏறச் செல்லும் காட்சி:

பின்னணியில் மற்றொரு ரயில் கிளம்பிக் கொண்டிருக்கும். வழியனுப்ப வந்த நபரிடம், ரயிலிருக்கும் நபர் சொல்வார்.

"போனதும் லெட்டர் போடுறேன்'... (வழக்கமாக எல்லோரும் கூறுவது தான்)

அதற்கு விவேக் மெதுவாக, 'போனா லெட்டர் எல்லாம் போட மாட்டாங்கடா... தந்தி தாண்டா கொடுப்பாங்க....'. அருமை!

இது போல சிவாஜி முழுவதும் பரந்து கிடக்கிறது விவேக்கின் ராஜ்யம்.

'தமிழ்நாட்டில், கற்பை பத்தியும் கருப்பை பத்தி மட்டும் பேச கூடாது'
'பால் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி தெரியலையே.... டிக்காஷன் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி இல்ல இருக்கு...'

2. ரஜினியின் நகைச்சுவை காட்சிகளும் நன்றாக வந்திருக்கிறது.

'என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே!'

'Mr. தொண்டை சொன்னா தான் வருவேன்'

சிவாஜி மாதிரி, வசந்த மாளிகை பாடலில் முயற்சித்திருப்பது.

'இப்ப எப்படி கமலஹாசன் மாதிரி வர்றேன் பாரு'...

இது போன்ற மெல்லிய நகைச்சுவைகள்...

இப்படத்தில் ரஜினி பேசும், 'பன்னிங்க தாண்டா கூட்டமா வரும்... சிங்கம் எப்பவும் தனியாக தான் வரும்', என்ற வசனம் ஏற்கனவே 'கிரி' படத்தில் அர்ஜூன் பேசியது.

'நான் காசு தர்றேன் படிக்கிறியா', என்ற வசனமும், காட்சியும் அப்படியே 'ஜென்டில்மேன்' படத்தில் அர்ஜூன் பேசியது. பதினைந்து ஆண்டுகள் சென்றும் இன்னும் நிலைமை மாறவில்லையா?

3. பட்டிமன்ற நகைச்சுவையாளர் ராஜாவிற்கு படத்தில் ஒரு வேலையும் இல்லை. ரஜினி, இவரது வீட்டிற்கு வரும் காட்சியில் அவர் அணிந்திருக்கும் பனியன் முதலில் நன்றாக இருக்கும். அடுத்த சில நொடிகளில் கைகளில் வேர்த்துக் கொட்டியும், காட்சி முடியும் வேளையில் தொப்பல் தொப்பலாகி இருக்கும். ஏன்? அவருக்கு கொடுக்க வேறொரு பனியன் இல்லையா? என்னய்யா 80 கோடி போட்டு படம் எடுக்குறீங்க... ரெண்டு பனியன் வாங்க காசு இல்லையா? அல்லது அது அவரது முதல் நாள் ஷூட்டிங்கா?

4. தொண்டைமானாக வரும் பாப்பையா, ராஜாவிற்கு எவ்வளவோ பரவாயில்லை... 'அது தான்யா பண்பாடு...', அழகு!

5. ஸ்ரியா.... இவர் படத்தில் பேசுவதே சில வசனங்கள் தான். அதையும் ஒழுங்காக சொல்லித்தரவில்லையா? வாயசைப்பது ஒரு மாதிரியும் வசனம வேறொரு மாதிரியும் இருக்கிறது. பாடல்களில் இன்னும் மோசம். நடனம் நன்றாக ஆடுகிறார்.

6. கடைசி காட்சியில் கத்தை கத்தையாக பறந்து வரும் பணத்தை பிடிக்க வரும் மாணவன், 'இன்னும் ஆயிரம், இரண்டாயிரம் தான்', என்று ஏன் ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான்? கீழே கோடி கோடியாக இறைந்து கிடக்கிறது; எதற்காக பறக்கும் பணத்தை பிடிக்க முயற்சி செய்கிறான்? வில்லனின் கழுத்தை மிதிக்க வைப்பதற்காகவா? என்ன சங்கர்?

7. ஏ.ஆர்.ரகுமான் அடக்கி வாசித்திருக்கிறார். அல்லது வாசிக்க மறந்து விட்டாரா?

8. சண்டை காட்சிகள் மிகவும் சுமாராக இருக்கிறது. கிளைமேக்ஸை தவிர்த்துப் பார்த்தால். பின்னி மில்லில் ரஜினி ரவுடிகளை அடிப்பதும், பின்பு அவர்கள் ரஜினியுடன் இணைவது ஒட்டவே இல்லை.

9. கொச்சின் ஹனீபா வழக்கம் போல் கலக்கியிருக்கிறார்.

'வயித்துல கேபிள் கனெக்ஷன் எல்லாம் கலக்கி விட்டுடானே! அங்குட்டு போக வேண்டியது இங்குட்டு போகுது.. இங்குட்டு போக வேண்டியது அங்குட்டு போகுது....'

'உங்ககிட்ட் ஆட்சி இருக்கு... அவன் கிட்ட ஆபிஸ் ரூம் இருக்கே....'

'பிரபஷனல் எதிக்ஸ்'

9. நடன காட்சிகள். மன்னிக்கவும்...

10. இன்னொன்று மிகவும் சிரித்தது: (இரண்டாம் தர வசனம் தான்).

'என்ன ஆச்சுயா?',
'ஆப்பு வச்சாங்க... ஆனா வச்ச ஆப்பை எடுக்க மறந்துட்டாங்கன்னு நினைக்குறேன்'.

சங்கரின் அடுத்த படத்திற்கு சில உத்திகள்: (திரு. தேசிகன்: திருவாளர் சுஜாதா மூலம் சங்கருக்கு தெரிவிக்க உதவவும்)

* கடைகளில் வாங்கும் பொருளுக்கு சரியான ரசீது கொடுக்காமல் வாங்குவோரையும் ஏமாற்றி, அரசாங்கத்திற்கு முறையாக விற்பனை வரி கட்டாமல் ஏய்க்கும் வியாபாரிகளை வழிக்கு கொண்டு வரும் கதை. கருத்து: விற்பனை வரி கட்டச் செய்வதன் மூலம் மக்களுக்கு ஓர் விழிப்புணர்வு
ஏற்படுத்துதல். விளைவு: 2011 ல் இந்தியா வல்லரசு. 2011 என்பது கொஞ்சம் கஷ்டம். இவர் படம் எடுத்து முடிக்கவே இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகலாம்.

* பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமலும், பெரியவர்களுக்கு இடம் கொடுக்காமலும் செல்லும் நபர்களை தண்டிக்கும் ஓர் கண்டக்கரின் கதை. இதனால் நஷ்டத்தில் இயங்கும் பல பஸ்களை லாபகரமாக இயக்கலாம்.

ஹீரோ: அர்ஜூன். குறிப்பு: இதே கதையில் மல்டி-பெர்சனாலிட்டியை புகுத்தி விக்ரமை ஹீரோவாக போட்டு இன்னொரு படம் எடுத்து விடலாம்.

* விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு அடுக்குமாடி வீடுகளாகவும், தியேட்டர்களாகவும் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதற்கு காரணமான சமூக விரோதிகளை அழிக்கும் ஓர் விவசாயி.

விளைவு: 2019-ல் உலகிலேயே அதிகமாக உணவு பொருள் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றுதல்.

* வித்தியாசமாகவும், பிரம்மாண்டமாகவும் படம் எடுக்கிறேன் என்று மக்களின் நேரத்தையும், தயாரிப்பாளரின் பணத்தையும் வீணாக்கும் இயக்குநர்களை களையெடுக்கும் ஓர் ரசிகனின் கதை.

விளைவு: இது போன்ற பதிவுகள் வருவதையும், அதனை வேறு வழியில்லாமல் உங்களை போன்றவர்கள் படிக்க வேண்டியதையும் தவிர்க்கலாம்.

இக்கதைகளை வைத்தே இன்னும் 15 வருடங்கள் சங்கர் ஓட்டி விடலாம்.

என்ன, இவரின் பட்ஜெட் அப்போது 300 கோடியை தொட்டிருக்கும். இப்படிபட்ட கதைக்கு பட்ஜெட் 80 கோடி! வெட்ககேடு!

தனது பணத்தை முதலீடு செய்து படம் எடுக்கும் போது மட்டும் பட்ஜெட்: 2 கோடி! இவரின் எண்ணம் நல்ல எண்ணமாகவே இருந்தாலும், தனது இயக்குநர்கள் மீது நம்பிக்கை இருந்தால் இன்னும் சில கோடிகள் கொடுக்க வேண்டியது தானே? ஒரு வேளை நல்ல படம் எடுக்க இரண்டு கோடி போதுமோ? கதை இல்லாமல் படம் எடுக்கும் போது தான் 50 கோடி, 80 கோடி வேண்டுமோ?

ஆண்டவா! எதற்காக இவ்வளவு குறைகள் கூறுகிறாய் என்று கேட்காதீர்கள்.

1. நன்றாக எடுக்க வேண்டும் முயற்சிப்பவனிடம் தான் அல்லது தான் நன்றாக படம் எடுக்கிறேன் என்று நினைப்பவனிடம் தான் குறைகளைக் கூற

முடியும்.

2. 2, 3 கோடி போட்டு ஒரிரு மாதங்களில் படம் எடுப்பவருக்கும், 10 அசிஸ்டெண்ட் இயக்குநர்கள் வைத்து, சுஜாதா, ரஜினி, ரகுமான், கே.வி. ஆனந்த், பீட்டர் ஹெய்ன்ஸ், வைரமுத்து போன்ற குழுவினை உடன் வைத்துக் கொண்டும், இரண்டு வருடங்களை முழுங்கிக் கொண்டும் இப்படி கதையில் கோட்டை விடுவதும், சிறு சிறு காட்சிகளில் கோட்டை விடுவதும் சரியல்ல.

என்ன கொடுமை சரவணன்!

80 கோடி பணத்தை முதலீடு செய்துவிட்டு, இரண்டு வருடங்கள் காத்திருந்து, எடுத்த படத்தை போட்டு பார்த்தால்; அது குப்பை. சங்கர்; ரகுமான்; எல்லாவற்றிற்கும் மேலாக ரஜினி. இப்படி எல்லாமும் இருந்தும், படம் இப்படி. தயாரிப்பாளர் 'ஜெர்க்' ஆவது உறுதி தான். அதனால் தான் சரவணன் ஐயா திருப்பதி சென்று முன்னெச்செரிக்கையாக மொட்டை போட்டு விட்டு, 100 நாட்கள் ஓடினால் லாபத்தில் 25% சிவாஜி பவுண்டேஷனுக்கு கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

அவரது வேண்டுதல் நிறைவேறட்டும்!

அது சரி... சிவாஜி பவுண்டேஷனுக்கு தான் 46000 கோடி சொத்திருக்கிறதே... பின்பு ஏன் இன்னும் சில கோடிகள்? :)

குறிப்பு: நான் கமல் ரசிகன் அல்ல.

செவ்வாய், ஜூன் 05, 2007

ஏ.ஆர்.ரகுமானின் சான் பிரான்சிஸ்கோ இசை நிகழ்ச்சி

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிகள் வட அமெரிக்காவில் ஆரம்பிக்கவிருக்கின்றன என தெரிந்தது முதல், நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய ஆயத்தமாயிருந்தேன். சென்ற சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு இசை நிகழ்ச்சி. ஒரு மாதத்திற்கு முன்பாகவே விமானத்தில் முன் பதிவு செய்திருந்தேன். வெள்ளிக்கிழமை மாலை 6.25 மணிக்கு விமானம். 5.00 மணிக்கு தான் அலுவலகத்திலிருந்து கிளம்ப முடிந்தது. சரி 15, 20 நிமிடங்களில் விமான நிலையம் சென்று சேர்ந்து விடலாம் என்று நினைத்தேன். போதாத நேரம். செல்லும் வழியெங்கும் சாலை நெரிசல். 6.05 மணிக்கு தான் சென்று சேர முடிந்தது. சில நேரங்களில் வெப் செக்-இன் செய்யும் வழக்கமுண்டு.ஆனால் அன்று ஏனோ செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை.

விமானத்தை தவற விட்டால் என்னாகும்? அடுத்த விமானம் இருக்குமா? இருந்தாலும் அதில் இடம் காலியாக இருக்குமா? வெள்ளிக்கிழமை வேறு! ஒரு மாத காலமாக காத்திருந்து, காத்திருந்து செல்லும் நிகழ்ச்சி. கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. 6.05 மணிக்கு விமான நிலையத்தை அடைந்ததும். வேகமாக செக்-இன் செய்யுமிடத்திற்கு ஓடினேன்; ஏதோ குருட்டு நம்பிக்கையில் (விமானம் தாமதமாகியிருக்கலாம்). அனைத்தும் முடிந்து விட்டதென்றும், தன்னால் எதுவும் செய்ய இயலாதென்றும் விமான நிறுவன ஊழியர், எதிர்பார்த்தது போலவே, கூறினார். அடுத்த விமானத்திற்கு மாற்றி தருவதாக கூறினார். அடுத்த விமானம் இரவு 9 மணி. சரி, நமக்கு நிகழ்ச்சிக்கு முன்பாக சென்று சேர்ந்தால் போதுமென்று, சரியென்று வேகமாக தலையை ஆட்டினேன். நண்பருக்கு நிகழ்வுகளை தெரிவித்துவிட்டு சில புத்தகங்களை வாங்கி நேரத்தை ஓட்டினேன். கடைசி நேரத்தில் மாற்றி கொடுக்கப்பட்ட டிக்கெட் என்பதால் இருக்கை எண் கொடுக்கப்படவில்லை. போர்டிங்கிற்கு செல்ல சீட்டை நீட்டிய போது, அருகில் இன்னுமொரு முறை சரிபார்த்து போர்டிங் பாஸ் வாங்கி வருமாறு பணிக்கப்பட்டேன். இருக்கை விருப்பம் என்னவென்று ஊழியர் கேட்டார். ஐல் என்று கூறினேன். ஜன்னல் ஓரம் மட்டுமே இருப்பதாக கூறினார். 'பின்ன எதுக்குய்யா விருப்பம் என்னன்னு கேக்குறீங்க', என்று நினைத்து, 'பரவாயில்லை' என்று கூறினேன். 'ஆனால் அது முதல் வகுப்பு பரவாயில்லையா', என்று கூறி சீட்டை நீட்டினார். 'கைப்புள்ள நமக்கு ஏதோ நேரம் ஒர்க் அவுட ஆகுதுடா', என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன்.

இரவு 1 மணிக்கு தான் கடைசியாக வீட்டிற்கு செல்ல முடிந்தது.

மறுநாள் இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி. 12 மணியளவில் எழுந்து, திருப்பதி பீமாஸ் சென்று மதிய சாப்பாட்டை போதும் போதுமென்ற அளவிற்கு கட்டிவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்தோம்மாலல 6.30 மணிக்கு வீட்டிலிருந்து ஆரம்பித்து, 7 மணியளவில் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு சென்று சேர்ந்தோம். (ஆரக்கிள் அரீனா, ஓக்லாண்ட்). இணையத்தில் எடுத்த முன்பதிவு சீட்டினை கொடுத்து, டிக்கெட் பெறும்போது இரவு 8 மணியாகியிருந்தது. வி.வி.ஐ.பி டிக்கெட் எடுத்திருந்தேன். ஆவலுடன் இருக்கை எண்ணை பார்த்தேன். நான்காவது வரிசை என்றிருந்தது. 'ஆஹா.. எப்படியோ முன்னாடி இடம் பிடிச்சாச்சு', என்று மகிழ்ந்து உள்ளே நுழைந்தேன். நேராக முன்வரிசைக்கு செல்ல முயன்ற போது, அரங்க ஊழியர் வலது பக்கமிருந்த வரிசைக்கு செல்லுமாறு காட்டினார். என்னுடையது வி.வி.ஐ.பி என்று சொன்ன போது, அது தான் வி.வி.ஐ.பி வரிசை என்றார். ஏதோ அரங்கிற்கு சம்பந்தமே இல்லாத ஓர் இடத்தை காட்டி அது தான் வி.வி.ஐ.பி என்று சொன்ன போது எரிச்சலாக வந்தது. மேடைக்கு முன்பாக இருந்த வரிசைகள், விளம்பரதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டதாம். இது என்ன கிரிக்கெட் மாட்சா? பெவிலியன் முழுவதும் விளம்பதரதாரர்களுக்கும், கிரிக்கெட் போர்டின் குடும்பத்தாருக்கும் ஒதுக்குவதற்கு? என்ன கொடுமை சரவணன்!








8.20 மணிக்கு அரங்கம் பாதிக்கும் மேல் நிரம்பியிருந்தது. அவ்வளவு தான் கூட்டமா என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையிலேயே, சித்ரா, 'ஜா ஹே' என்று குரு படத்தின் பாடலுடன் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். சில நிமிடங்களில், ரகுமான் அப்பாடலின் தனது பகுதியை பாடியவாறு மேடையில் தோன்றினார். ஒரே ஆரவாரம்! முன்பெல்லாம், 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலுன் ரகுமான் இசை நிகழ்ச்சிகள் துவங்குவது வழக்கம். அதற்கு எஸ்.பி. பாலசுப்ரணியம் இருக்க வேண்டும். பின்னர், சில நிகழ்ச்சிகள், ஆய்த எழுத்து படத்தின் 'ஃபனா' பாடலுடன் துவக்கப்பட்டன. இம்முறையும் அப்பாடலுடன் தான் துவங்குமென்று நினைத்திருந்தேன். மாறாக, 'ஜா ஹே' பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். தமிழில் பாடியிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். இப்பாடலைப் பற்றி விரிவாக சென்ற பதிவில் எழுதியிருந்தேன்.

அடுத்ததாக, சுக்விந்தர் சிங், நீத்தி, தாளம் (இந்தி) படத்திலிருந்து பாடலை பாட ஆரம்பித்தார்கள். கீழ்கண்ட படத்திலிருந்து பாடல்கள் பாடப்பட்டன.

1. ஜா ஹே (குரு) - சித்ரா, ஏ.ஆர்.ரகுமான்
2. மய்யா மய்யா - குரு - நித்தி
3. தேரே பினா - குரு - ஏ.ஆர்.ரகுமான்
4. ரூபாரூ - ரங் தே பசந்தி
5. பாத்சாலா - ரங் தே பசந்தி
6. ரங் தே பசந்தி - ரங் தே பசந்தி
7. அதிரடி - சிவாஜி
8. சஹானா - சிவாஜி
9. வா ஜி - சிவாஜி
10. சண்டை கோழி (இந்தி) - யுவா
11. ரம்தா யோகி - தாளம்
12. ஜன் ஜன் - வாட்டர்
13. சா ரீ கா மே - பாய்ஸ்
14. வெண்ணிலவே (இந்தி) - சப்னே
15. காதல் ரோஜாவே (இந்தி) - ரோஜா
16. பர்ஸோரே - குரு
17. த பாஸ் - சிவாஜி
18. பிரே ஃபார் மீ பிரதர்
19. கண்ணாளனே (இந்தி) - பம்பாய்
20. சையா சையா
21. தில் சே ரே - தில் சே
22. ஏய் ஹேரத்தே - குரு
23. வந்தே மாதரம்
24. கல்பலி ஹே - ரங் தே பசந்தி
25. ஹம்மா ஹம்மா

பாடகர்கள்:

சித்ரா
ஹரிஹரண்
சாதனா சர்கம்
மதுஸ்ரீ
நரேஷ்
விஜய் ஜேசுதாஸ்
சயோனரா

மற்றும் குழுவினரெல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாலாலாலாம் வந்திருந்தாங்க....

ஐந்து பாடல்களுக்கு பிறகு பார்த்தால், அரங்கம் 95% நிரம்பியிருந்தது. எப்படியும் 10,000 நபர்களுக்கு மேல் வந்திருப்பார்கள்.

இதன் தொடர்ச்சி அடுத்த பாகத்தில்....