செவ்வாய், ஜூலை 01, 2014

இந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்

இந்த வருடத்தில், இது வரை வெளிவந்த திரைப்பாடல்களில், 'உன் சமையலறையில்' உறுதியாக, சிறந்தப் படைப்பு. நான்கே பாடல்கள் தான் நான்கும் இனிமையானவை, நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. இளையராஜாவிற்கு பாராட்டுகள்; நன்றிகள்.

கடந்த சில ஆண்டுகளாக, இளையராஜாவின் திரைப்படங்களில் ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் மனதில் ஒட்டுவதில்லை - அபூர்வமாக ஒன்றிரண்டு திரைப்படங்கள் விதிவிலக்கு. அவ்வாறு விதிவிலக்காக அமைந்த படங்களுக்கான ஒற்றுமை - ஓரளவிற்கேனும் நேர்த்தியாக, சிரத்தையுடன் அமைக்கப்பெற்ற படைப்புகள்; முக்கியமாக இயக்குனர் தனித்து தெரிவதுண்டு. உதாரணம்: பாலா, கவுதம் மேனன். மற்ற படங்களில் (அதாவது மனதில் ஒட்டாத பாடல்கள் அமையும் சமீப கால இளையராஜா திரைப்படங்களில்) கதையும் இருக்காது; திரைக்கதையும் நன்றாக இருக்காது; இயக்குனரும் சிறப்பு வாய்ந்தவராக இருக்க மாட்டார். எத்தனையோ படங்களை உதாரணமாகக் கூறலாம். எப்படி இளையராஜா இந்தத் திரைப்படத்திற்கெல்லாம் இசைமைக்க ஒப்புக்கொண்டார் என்று ஆச்சர்மாக இருக்கும் (தாண்டவகோனன், மேகா, ஒரு ஊர்ல, அழகர் மலை, ராஜராஜனின் போர் வாள் - இன்னும் வெளியாகவில்லை -  முதலானவை சிறு உதாரணம்). எப்படி இவர்கள் எல்லாம் ராஜாவை அணுகிறார்கள்; என்ன சொல்லி அவரை சம்மதிக்க வைக்கிறார்கள்; அவர்களுக்கு ராஜாவின் அருமை தெரியுமா? அவரின் திறமையை அறிவார்களா; எப்படி ராஜா சம்மதிக்கிறார் என்று புரிவதில்லை. ஆனால், நல்ல திரைக்கதையும், திறமை வாய்ந்த இயக்குநரும் அமைந்தால், அந்தப் பாடல்களின் வீச்சே வேறு; பின்னணி இசையைப் பற்றியும் கேட்க வேண்டாம். உதாரணம், பிதாமகன், நான் கடவுள், நீ தானே என் பொன் வசந்தம் (இந்தப் படத்தின் பாடல்களை குறை கூறும் பலரை அறிவேன். அவர்கள் இன்னும் இப்படத்தின் பாடல்களை முழுமனதோடு கேட்கவில்லை என்று உறுதியாகக் கூறுவேன்).

இந்த இயக்குனர்களின் வரிசையில், பிரகாஷ்ராஜிற்கும் தாராளமாக இடமுண்டு. இதே 'தாண்டவகோனன்' வெளியாகிய வருடத்தில் தான் 'தோணி'யும் வெளியாகியது; 'மேகா', 'ஒரு ஊர்ல' திரைப்படங்கள் வெளியாகிய காலக்கட்டத்தில் தான், இந்த 'உன் சமையலறையும்' வெளியானது. எனது கருத்து, அனைத்துப் பாடல்களும் முன்பு போல் ரசிக்கும்படியாக அமையாதது, அதனை இயற்றுபவரின் தவறல்ல; அவரை தனது படைப்புகளுக்குள் நன்றாக கவர்ந்திழுக்காத இயக்குனர்களின் தவறே அல்லது அவர்களின் ஆளுமை சார்த்ததாக கூட இருக்கலாம்.

இப்படத்தின் முதல் பாடலை ஒலிக்க விட்ட, இரண்டு மூன்று விநாடிகளிலே இது ஓர் சிறந்த பாடல் என்பது உறுதியானது. அதற்கு இம்மியளவும் குறைந்து போனதுமட்டுமல்லாமல், எனது எதிர்பார்ப்பிற்கு மேலான திருப்தியைக் கொடுத்த பாடல் - இந்த பொறப்பு தான் நல்ல ருசிச்சு சாப்பிடக் கிடைச்சது. அற்புதமான பாடல்; சிறந்த மெட்டு; நல்ல குரல் தேர்வு - பாடியவர் கைலாஸ் கிர். மேலும், பாடல் மிகத் தெளிவாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது - ஒவ்வொரு கருவியும் கணீர் என்று கேட்கின்றன. பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்ட விதமும் நன்று - வரிகளுக்கு ஏற்ப அந்த்தந்த உணவு வகைகளை செய்யும் விதமும், அதனை உண்ணுவதாக காட்டிய விதமும், பார்ப்பவர்களுக்கே நாவில் எச்சில் ஊரும் விதமாக அமைந்திருந்தது.

அடுத்த பாடல், 'தெரிந்தோ தெரியாமலோ'. நல்லதொரு ஜோடிப் பாடல். ராஜா தனது பெரும்பாலான பாடல்களுக்கு கன்வென்ஷனல் இசைக் கருவிகளை தெரிவு செய்வதற்கு பெயர் போனவர். சில வருடங்களாக, அதனில் இருந்து மாற முயற்சித்து, வெற்றியும் பெற்றவர் - அதிலும் இரைச்சல் இல்லாமல். பாடலில் இருக்கும் மெலடியும், பாடல் வரிகளும் சிறிதும் கெடாமலே அவை அமைந்திருக்கும். இப்பாடலும் அதற்கு ஓர் உதாரணம் . கார்த்திக், என்.எஸ்.கே. ரம்யா பாடியது. கார்த்திக் வழக்கம் போலவே சிறப்பாக பாடியிருக்கிறார். என்.எஸ்.கே. ரம்யா சமீப காலமாக, ராஜா பாடல்களுக்குப் பாடியிருந்தாலும் ஏதோ அவரின் குரல் எனக்கு அந்நியமாகவே கேட்கின்றது - அதற்கு முக்கிய காரணம் அவரது உச்சரிப்பு. இங்கிலீஸ் ஈஸ்வரி போலவே பாடியிருந்தார். உதாரணம் - சாய்ந்து சாய்ந்து பாடல். ஆனால் இப்பாடலை இனிமையாக மட்டுமன்றி, எவ்விதமான உச்சரிப்பு பிழையும் இல்லாமல் பாடியிருக்கிறார். பாராட்டுக்கள்.

'ஈரமாய் ஈரமாய்' பாடலுக்கும் 'தெரிந்தோ தெரியாமாலோ' பாடலின் அனைத்து சிறப்பம்சங்களும் பொருந்தும். பாடியவர்கள் ரஞ்சித், வைபவரி. மிக இனிமையான பாடல்.

கடைசி பாடலை இளையராஜாவே பாடியிருக்கிறார். பாடல்: 'காற்று வெளியில்'. தலைவியைப் பிரிந்து வாடும் தலைவன் பாடும் பாடல். மிக எளிமையான வரிகளில், இனிமையாக அமைந்த பாடல். ராஜா மிக உணர்வுபூர்வமாகப் பாடியிருக்கிறார். 

காற்று வெளியில் உன்னை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உன்னை தேடித் தவிக்கின்றேன்
ஒரு கடலை போல் இந்த இரவு 
தூங்கவில்லை மனது...
மிக உயரத்தில் அந்த நிலவு 
மங்கலான கனவு...
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை மௌனத்தின் மயக்கம் இதுஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
உன் வழியில்உதிர்ந்து கிடப்பது பூக்கள் அல்ல என் கண்கள்
உன் வானில் விம்மி தவிப்பது மீன்கள் அல்ல என் நெஞ்சம்
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை மௌனத்தின் மயக்கம் இதுஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
சமீபத்திய திரைப்படங்களில் ராஜாவே சொந்தக் குரலில் பிரிவின் துயரைப் பற்றி பாடும் மூன்காவது பாடல் - எனக்குத் தெரிந்து - அவரது மனைவியின் மரணத்திற்குப் பின் ('என்ன குத்தம் செஞ்சேனடி' -  'மயிலு'; 'ஜுவனே ஜுவனே' - 'மேகா'; இன்ன பிற இரு பாடல்கள்)

பழனிபாரதி, இப்படத்தின் ஒரு பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் இவ்வாறாக: 'நாங்கள் ஒரு பாடலை எழுதி ராஜா அவர்களை அதற்கு இசையமைக்குமாறு அவரது அறைக்கு சென்று அமர்கிறோம். அவர் பாடலின் சூழலைக் கேட்டுவிட்டு, பாடல் வரிகளை வாசிக்குமாறு கூறுகிறார். நாங்கள் வரிகளைப் வாசிக்க, வாசிக்க அவர் அப்படியே அதற்கு ராகத்தோடு பாடுகிறார் - அதே வேகத்தில். நான், பிரகாஷ்ராஜ் இன்னும் சிலர் அப்படியே ஆனந்த்ததில் கை தட்டுகிறோம்'. என்ன ஒரு திறமை! அதனைப் பார்ப்பதற்கும் ஓர் கொடுப்பினை வேண்டும்.




வர்த்தக ரீதியாக, இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வருமான ஈட்டவில்லை என்கிறார்கள். எனக்குப் படம் பிடித்திருந்தது. வணிக ரீதியாகவும், இப்பாடல்களைப் போல், அபாரமான வெற்றியைப் பிடித்திருந்தால், நான் மிகவும் மகிழ்ந்திருப்பேன். இன்னும் நல்ல இயக்குநர்கள், ராஜா என்கின்ற மாபெரும் கலைஞனுடன் பணிபுரிந்து அவர்களது படைப்பிற்கு மட்டுமல்ல, தமிழ் இசையுலகத்திற்கே நன்மை புரிந்த்திருப்பார்கள். எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குநர் மகேந்திரன் அவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் ஓர் படம் இயக்குன்றார் - அதுவும் ராஜாவுடன் இணைந்து பணிபுரிகிறார். அது ஓர் மகத்தான சாதனையை புரியும் என்று நம்புகின்றேன்.

வியாழன், ஜூன் 26, 2014

தமிழ் பண்டிட்கள்

சமீபகாலமாக தமிழ் டி.வி. சானல்களில், தமிழ் உணர்வாளர்கள் மிக அதிகமாக தென்பட ஆரம்பித்துவிட்டார்கள். நான் பார்ப்பது மிக சொற்பமான நிகழ்ச்சிகளே; அவற்றிலும் கூட இவர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதை கண்டு மனம் மிகவும் நெகிழ்ச்சியடைகிறது.

இவர்கள் பேசும் போது, தமிழைத் தவிர பிற மொழி சொற்களை உபயோகப்படுத்தமால் பேச வேண்டும் என்ற குறிக்கோளுடன் பேசுவதை கேட்பதற்கே தவம் செய்திருக்க வேண்டும். எதனால் இவர்கள் இப்படி தமிழிலேயே சதா சர்வகாலமும் பேசுகிறார்கள்? நிகழ்ச்சியை பார்க்கும் நேயர்களுக்கு ஆங்கிலம் புரியாது என்பதாலா அல்லது தமிழுக்கு இணையாக ஆங்கிலத்தில் வார்த்தைகள் இல்லை என்பதாலா அல்லது தான் மிகவும் கற்றவன் என்று மற்றவர்களுக்கு ஆங்கிலம் பேசித் தான் தெரியவைக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்ற எண்ணத்தினாலா அல்லது நிகழ்ச்சி நடத்துபவர்கள் அவர்களை ஆங்கிலத்தில் பேச அனுமதி மறுத்து விடுவார்கள் என்ற ஐயமா?

நிகழ்ச்சி முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் ஒரு மணி நேரமும் இலக்கணப் பிழையில்லாமலும், மற்றவர்களுக்கு அழகாக புரியும் வண்ணம் எளிமையான ஆங்கிலத்தில் சரளமாக உரையாடக்கூடிய சொல்வண்ணமிருந்தாலும், தமிழ் நாட்டில் தினமும் வேலையை முடித்து வீட்டுக்கு வந்ததும் டி.வி.யே கதியென்று கிடக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற சாதாரண விசயத்தினை புரிந்து கொண்டு தமிழிலேயே உரையாடும் இந்த தமிழ்ப்பற்றுள்ள, பகுத்தறிவாதிகளும், இங்கிலாந்து துரைகளுடன் தினமும் காபி, டீ அருந்துவது மட்டுமல்ல, அவர்களுடன் கபடி, பாண்டி, உள்ளே வெளியே போன்ற ஆட்டங்களை அனுதினமும் ஆடக் கூடிய வாழ்க்கை முறையை பெற்ற இந்த அறிவு ஜீவிகளை நினைத்தால் எனக்கு புல்லரிக்கிறது.

என்னே ஒரு பரந்த மனப்பான்மை, அறிவு, தமிழ்ப் பற்று.

பற்றிக் கொண்டு வருகிறது, இந்த மூடர்களை நினைத்தால். மூடர்கள் தான்.

தத்தம் துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களும், ஆங்கிலத்தில் மிகச் சரளமாக பேசக்கூடிய நபர்களும் - உதாரணம் ப.சிதம்பரம், கமலஹாசன் - தமிழை 99% வேற்று மொழிக் கலக்காமல் பேசும் போது, இந்த இரண்டிலுமே தேர்ச்சி பெறாத இந்த அரைவேக்காடுகள் ஏன் இப்படி பிதற்றுகிறார்கள்?

எத்தனை நிகழ்ச்சிகள் - அனுதினமும் இதே கதை தான். ரியாலிட்டி ஷோக்கள் (சூப்பர் சிங்கர்), நேர்காணல்கள் (காபி வித் டி.டி), முக்கியமாக விவாதக் களங்கள். தமிழில் ஆளுமைமிக்க கோபிநாத் நடத்த கூடிய நீயா நானாவிலும் கூட (நகரத்து வாழ் மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் - சாப்ட்வேர் வல்லுநர்கள்?) ஆங்கிலம் சரளமாக புழங்குகிறது. அவர் அதனைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல், அவரே கூட, "இந்த மானே தேனே இப்படின்னு நடுவுல போட்டுக்குனன்ற" மாதிரி, சமயங்களில் ஆங்கிலத்தை அள்ளித் தெளிப்பதுமுண்டு.

எதுக்கு இதெல்லாம்? எங்க போய் முடியப் போகுதோ!

இன்னைக்கு ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். காபி வித் டி.டி - கலந்து கொண்டவர்கள் யூகி சேது, பிரதாப் போத்தன். அடேங்கப்பா, என்ன ஒரு பீட்டர் - அதிலும் பிரதாப் போத்தனாவது - சரி, தாய் மொழி தமிழில்லை; விட்டு விடலாம் - யூகி சேது...... காது பிஞ்சிடுச்சு.

அதற்கு காரணம், அவரது ஆங்கிலம் மட்டுமல்ல. என்ன ஒரு சுய புராணம்.

"கமல் எனக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர்"

"கே.பி. என்னோட டேப்ப பார்த்துட்டு, எப்படி இப்படி 12 minutes பேசுன; இந்த நிகழ்ச்சியை (நையாண்டி தர்பார்) நீ தான் ஆங்கர் பண்ணனும் கேட்டுகிட்டார்"

"ஏ.ஆர்.முருகதாஸ், இந்த கேரக்டரை நீங்க தான் நடிக்கணும், இது ஹீரோவும் இல்லாத, வில்லனும் இல்லாத, காமெடியுமில்லாத ஒரு காரெக்டர் நீங்க பண்ணாதான் கரெக்டா இருக்கும்"

"கமல் என்னை மிகவும் மதிப்பவர்"

"ரமணா, பஞ்சதந்திரம் படத்துக்கும் அப்புறம் 100 படமாவது வந்திருக்கும். எல்லாம் reject பண்ணிட்டேன்"

முக்கியமானது...

"விஜய் சேதுபதி பண்ண அந்த சூது கவ்வும் கேரக்டர் எனக்காதான் பண்ணது. கடைசில அவர் பண்ணிட்டார்"

யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா சொல்லவே இல்லை. நீங்க பண்ணிட்டாலும்...

டி.டி. ஒரு கேள்வி கேட்டார்...

"உங்களை இண்டர்ஸ்டிரில வணங்காமுடின்னு சொல்றாங்களே"

அதற்கும் ஒரு பெரிய தம்பட்டமான பதிலை கொடுத்தார்.

எனக்கு என்னவோ, கேள்வி இப்படி தான் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

"உங்களை இண்டர்ஸ்டிரில ரொம்ப மண்டகனம் பிடிச்சவர்னு சொல்றாங்களே... அப்படியா?"

நான் சொல்றதையெல்லாம், இவர்கள் எல்லாரும் கேட்டுக்கொண்டிருப்பதனைப் போலவும், அப்படியே பார்க்க நேரிட்டாலும் உடனே திருந்தி கூடுமானவரைக்கும் தமிழில் மட்டுமே பேசப் போவது போலவும் இங்கே பதிவிடுகின்றேன். என் பணி கொட்டித் தீர்ப்பது - வழக்கம் போல்.

முக்கியமான ஒன்று: உங்களுடைய நிகழ்ச்சியை ஒமாவும், ஜார்ஜ் புஸ்ஸூம் பார்க்கவில்லை. சாதாரண மக்கள் தான். நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதைப் பார்த்து தான் எங்களது ஆங்கில அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையேற்ப்பட்டால், நாங்கள் ஆஜ் தக், Sahara Samay போன்ற சானல்களை பார்த்துக் கொள்வோம்.


புதன், ஏப்ரல் 16, 2014

மூடாத குழிகள்

கடந்த சில நாட்களில் மட்டும், மூன்று குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தி மிகவும் பாதித்தது. சிறிது நேரத்திலேயே அம்மா அல்லது அப்பாவினை தேடி அலைபாயும் குழந்தைகள், அச்சிறு துவாரத்தில் மாட்டிக் கொண்டு சிறிதும் அசையமுடியாமல் இருக்கும் நிலையினை நினைத்தாலே மனம் பொங்குகின்றது.

ஈனப்பிறவிகள் மனிதர்கள், அதிலும் குறிப்பாக நம்மக்கள் என்பதனை பல நிகழ்ச்சிகள் சமீபகாலமாக நிரூபித்து வருகின்றன.

இது போன்று நிகழ்ச்சிகள் நடப்பது முதல் முறையல்ல. கடந்த பத்தாண்டுகளில் பல உயிர்கள் போய் விட்டன. லட்சங்கள் செலவு செய்து ஆழ்துளை கிணறு பதிப்பவர்களுக்கு, சில நூறு ரூபாய்களில், தடுப்பு சுவர் அமைப்பதற்கு ஏன் முடியாமல் போய்விட்டது? அடிமுட்டாள்கள்! இது போன்ற முட்டாள்களினால், பெரும்பாலும் அவர்களுக்கு எந்த கேடும் நிகழ்வதில்லை. இது போன்ற குழந்தைகள் என்ன தவறு செய்தன?

தமிழ்நாட்டில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்க ஒருவரும் - அரசியல்வாதிகள் முக்கியமாக - முன்வராதது மிகுந்த வருத்தமே. அவர்களுக்கு மற்றவர்களைப் பற்றி குறைகூறவே நேரம் இல்லை.

மனிதனத்திற்கு மதிப்பில்லை. பணத்திற்கு தான் என்பது கண்கூடு. சுற்றுச் சூழலைப் பற்றி  நமக்கு கவலையில்லை. மலைகளை கூறுபோடுகிறோம். ஆற்றுப் படுகைகளை சுரண்டுகிறோம். மரங்களை நடுவதில்லை என்பதுமட்டுமில்லாமல், காடுகளை கண்மூடித்தனமாக அழிக்கிறோம். ஆறுகள், குளங்கள், கண்மாய்களை அழித்து வீடுகள், தொழிற்சாலைகள் அமைக்கிறோம். கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டுகிறோம், ஆறு, சமுத்திரங்களில் கழிவுகளை குற்ற உணர்ச்சி சிறுதும் இல்லாமல் சென்று சேர்க்கிறோம்.

எதற்காக? நமது வாழ்க்கைமுறை வளர்ந்திருக்கின்றதா? நிச்சயமாக இல்லை.

மருத்துவ வசதிகள் அதிகருத்துப்பது போன்ற மாயை ஏற்பட்டுள்ளது. ஆனால் நோய்களும், மருத்துவ செலவுகளும் அதனை விட அதிகரித்துள்ளன. பயணம் செய்வதற்கான வசதிகள் பெருகியுள்ளன. ஆனால், சுற்றுச் சூழல் அதிகமாக மாசடந்துள்ளது. பொழுதுபோக்கு சாதனங்கள் அதிகரித்துள்ளன. மக்களுக்கிடையேயான இடைவெளி அதனை விட அதிகரித்துள்ளது. தாய், தந்தையுடன் சேர்ந்து வாழமுடியவில்லை. உறவினர்கள், நண்பர்களை தினமும் சந்திப்பது என்ற நாட்கள் போய், மாதங்கள், வருடங்கள் கழித்து சந்திக்கும் இழிவுநிலை ஏற்பட்டுள்ளது.

எதற்காக இதெல்லாம்? யாருக்காக இப்படிப் பட்ட வாழ்வு?

இயற்கை தானே நமது வாழ்க்கையின் ஆதாரம். மனிதர்களின் ஆதாரம் மட்டுமல்ல. கோடிக்கணக்கான ஜீவராசிகளின் ஆதாரமும் கூட. மற்ற ஜீவராசிகளுடன் பகிர்ந்து வாழும் பொறுப்பு மட்டுமில்லாது, எதிர்கால சந்ததிகளுக்கு, இயற்கை வளங்களை சேதாரமில்லாமல் கொண்டு செல்லும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி நினைப்பதற்கு நமக்கு ஏது நேரம்? நயன் தாராவும், சிம்புவும் மறுபடியும் சேர்ந்துவிட்டார்கள், அதிமுக, திமுகவிற்கு எத்தனை சீட்டுகள் கிடைக்கும். இந்த ஐ.பி.எல் பட்டத்தினை யார் வெல்வார்கள்? இவ்வற்றில் தானே நமது நேரத்தினையும், எண்ணங்களையும் செல்வளிக்கிறோம்.

இச்சமூகத்தின் தற்போதைய நிலைமையையும், எதிர்காலத்தினையும் நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது.

ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

நீ தானே என் பொன் வசந்தம் - இசை மதிப்பீடு

நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இத்திரைப்படம் - இவ்வருடத்தில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் திரைப்படம் - நீதானே என் பொன்வசந்தம் பாடல்கள் கடைசியாக, இம்மாதத் தொடக்கத்தில் வெளியாகியது. அதற்கு முன்பாகவே அவ்வப்போது பத்து வினாடிகள் ஓடும் டிரைலர்களில் சேர்க்கப்பட்டிருந்த பாடல்கள் / இசை மாதிரிகள் அந்த எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியிருந்தன.

எனது நண்பர் மூலமாக, குறுந்தகட்டினை இந்தியாவிலிருந்து அனுப்ப சொல்லியிருந்தேன். அது வருவதற்கு சில நாட்களாகும் என்பதால் அது வரை யுடியூப்பில் கேட்டு காலத்தை தள்ளிக் கொண்டிருந்தேன். பாடல்கள் ஆரம்பத்தில் கேட்ட போது சிறிது ஏமாற்றத்தை அளித்தாலும், மூன்று, நான்கு பாடல்கள் எனக்கும் மிகவும் பிடித்துவிட்டதால், நேரம் கிடைக்கும் போதெல்லாம், பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன். சோனி நிறுவனத்தினார், அப்படத்தின் பாடல்களை ஒரே யுடியூப் வீடியோவில் வெளியிட்டிருந்தது மிகவும் வசதியாக போனது.

இளையராஜா அவர்கள் மட்டுமல்லாமல், மற்ற எந்த இசையமைப்பாளரின் இசையும் மதிப்பிடுவதற்கு நான் இசை ஞானம் உடையவன் அல்ல. ஆனாலும், இசையை ரசிப்பவன் என்ற முறையில் என்னை கவர்ந்தது, நான் கேட்ட மற்ற திரைப்படப் பாடல்களின் அடிப்படையில் இதனை மதிப்பிடுகின்றேன்.

என்னோடு வா வா என்று (8.5/10)
பாடியவர்கள்: கார்த்திக்

இப்பாடலில் ஆரம்பத்தில் வரும் இசையினை பல நிகழ்ச்சிகளுக்கும், இப்படத்தின் விளம்பரத்திற்கு உபயோகப்படுத்தியிருந்திருந்தார்கள் என்பதனால் இப்பாடல் மீது ஒரு மோகம். அதனை இப்பாடல் முற்றிலுமாக முழுமையடைய செய்திருக்கிறது. கார்த்திக் வழக்கம் போல மிகவும் நன்றாக பாடியிருக்கிறார்.

குறிப்பிட்டது போல, ஆரம்பத்தில் வரும் இசையும், முதலாவது சரணத்திற்கு முன்பாக வரும் இசையும் நன்றாக இருக்கிறது.

வானம் மெல்ல (7/10)
பாடியவர்கள்: இளையராஜா, பெலே ஷிண்டே

எனது நண்பர்கள் பலருக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. இது இந்த ஆல்பத்தின் சிறந்த பாடலாக கூட இதனை அவர்கள் கருதுகிறார்கள். எனக்கு ஏனோ இப்பாடல் மீது இன்னும் பெரிய ஈர்ப்பு ஏற்படவில்லை.

இளையராஜாவின் குரலில் ஏகப்பட்ட பாடல்கள் மிகவும் வித்தியாசமாக, இனிமையாக ஒலித்திருக்கின்றன. அவரது குரலுக்காகவே கேட்ட பாடல்கள் பல. சில படங்களில் பெண் குரலை விட அதே பாடலை இளையராஜாவின் குரலில் கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கும். ஆனால் இப்பாடல் ஓர் விதிவிலக்கு. ஏனோ இப்பாடலுக்கு அவரது குரல் ஒட்டவில்லை - பெண் குரலும் தான். மற்றபடி கேட்பதற்கு நல்ல ஓர் இன்னிசை. இரண்டாவது சரணத்திற்கு முன்பாக வரும் இசை மிக அருமை - அது என்ன இசைக் கருவியோ தெரியவில்லை எனக்கு.

பெண்கள் என்றால் பொனம் மெல்ல (8/10)

பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா

இப்படத்தின் பாடல்கள் வந்த புதிதில் ஒவ்வொரு பாடலையும் சாம்பிளுக்காக கேட்ட போது, இப்பாடல் ஆரம்பத்தில் ஒலித்த விதம் வித்தியாசமாக இருந்தது. மேலும் மிகவும் பிடித்த பாடல்களை கேட்டு கொண்டிருந்த போது, இப்பாடலை கவனிக்கவும் நேரமில்லை. ஆதலால் இப்பாடல் வந்த போதெல்லாம், அடுத்த பாடலுக்கு தாவிக்கொண்டிருந்தேன். ஆனால் பாடலின் ஆரம்பத்தை தவிர இப்போது இப்பாடல் மிகவும் பிடித்து விட்டது.

யுவன் வழக்கம் போல நன்றாக பாடியிருக்கிறார்.

மதி கெட்ட என்னிடம்
மனம் வந்து சொன்னது
மரணத்தைப் போல் இந்த
பெண் இவள் என்றது
மிக அருமையான ராகம்.

அதனை,
தீயை போன்ற பெண்ணிவள்
என்று தெரிந்து கொண்டதே
என் மனம்
அன்பு செய்த ஆயுதங்கள்
பெண்ணிடத்தில் உண்டு
ஏராளம்
என்று தொடர்ந்து,

பெண்கள் என்றால் பொய்யா 
பொய்யா பொய் தானா?

 என்று முடித்திருப்பது அற்புதம்.

புடிக்கலை மாமு (6/10)

பாடியவர்கள்: கார்த்திக், சுராஜ் ஜெகன்

படத்தில் ஹீரோவிற்கு ஓப்பனிங் பாடல் என்று நினைக்கிறேன். இப்பாடலில் இரு பகுதி - வெஸ்டர்ன் பகுதி மற்றொன்று கிராமத்து குத்து வகை. முதல் பகுதி நன்றாகவே இருக்கிறது. இரண்டாவது folk வகை தான் மனதில் ஒட்டவில்லை.


சற்று முன்பு (7/10)


பாடியவர்: ரம்யா என்.எஸ்.கே


பலருக்கு இப்பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கு இன்னும் அவ்வளவாக பிடிக்கவில்லை. அதற்கு காரணம், இப்பாடலை பாடிய விதம். "இங்கிலீஸ் ஈஸ்வரி" மாதிரி ரம்யா வார்த்தைகளை கடித்து, குதறியிருக்கிறார். ஸ்டைலாம்மா.... தாங்கமுடியவைல்லை. பாடல் நல்ல இனிமையாக இருந்தாலும், பாடிய விதம் இப்பாடலுக்கு கரும்புள்ளியாக இருக்கும் - குறைந்தது எனது பார்வையில்.




சாய்ந்து சாய்ந்து(9/10)


பாடியவர்: யுவன் சங்கர் ராஜா, ரம்யா என்.எஸ்.கே


அருமையான மெலோடி. யுவன் சங்கர் ராஜா தனக்கே உரித்தான ஸ்டைலில் பாடியிருக்கிறார். பலருக்கு அவர் பாடிய விதம் பிடிக்கவில்லை. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவரது குரலில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருக்கிறது.

என் தாயை போல
ஒரு பெண்ணை தேடி
உனை கண்டு கொண்டேன்

இப்பாடலின் பகுதியை ரம்யா பாடியிருக்கிறார். போன பாடல் போல, மிகவும் கேவலமாக பாடவில்லை என்றாலும், இதிலும் அங்கே, அங்கே அவரது "இங்கிலீஸ் ஈஸ்வரி" வாடை மிகவும் அடிக்கிறது.

ஆள் யாரும் பார்க்காமல்
தடயங்கள் இல்லாமல்
அன்பால் உன்னை நானும்
கொல்வேன்....

நீங்க இப்படி பாடி எங்களை எல்லாம் கொல்லாமல் இருந்தால் மிகவும் புண்ணியாமாக போகும்.




முதல்முறை பார்த்த ஞாபகம் (9.5/10)

பாடியவர்: சுனிதா சவுகான்

பெண்கள் என்றால் பொய்யா பொய்யா பொய் தானா என்று ஆண் பாடுவது போல் பெண் பாடும் பாடல் ஆனால் காதலில் ஏற்படும் வருத்தத்தை கூறாமல் பிரிவினை உரைக்கும் பாடல்.

என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. மற்ற பாடல்களைப் போல இப்பாடலையும் ஆரம்பத்தில் அவ்வளவாக கேட்காமலிருந்தேன். ஆனால் நடுவில் ஒரு முறை எதேச்சயாக கேட்ட போது, என்னையுமறியாமல் மனதில் ஒட்டிக்கொண்டது. அற்புதமான பாடல். இளையராஜா இந்த வகை பாடலை இதற்கு முன்பு இயற்றியது போல் தெரியவில்லை (பீட்ஸ், ஸ்டிலிஸான பெண் குரல், காதல் பிரிவு).

ஆரம்பத்தில் இப்பாடல் ஆரம்பிக்கும் விதம் இருக்கிறதே. ஆஹா அற்புதம்!. பாடகர் சுனிதா சவுகான் மிகவும் அற்புதமாக பாடியிருக்கிறார். ஆனாலும் இப்பாடலினை நேகா பசன் பாடியிருந்தால் இன்னும் அற்புதமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

சரணத்திற்கு முன்பாக வரும் இசையும் மிகவும் இனிமை. மொத்தத்தில் இப்பாடல், இசை, ராகம், குரல், பாடியவிதம் என் அத்தனையும் மிகவும் அழகாக ஒன்று சேர்ந்திருக்கின்றன.



காற்றைக் கொஞ்சம் (10/10)

பாடியவர்: கார்த்திக்

இப்பாடலினை இது வரை நூறு தடவைகள் கேட்டிருப்பேன், அவ்வளவு இனிமை; அருமை.

"நான நான நன நனா" என்று கோரஸ் முடிந்ததும்,

காற்றைக் கொஞ்சம்
நிற்க சொன்னேன்
பூப்பறித்து
கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து
உன்னை சந்திக்க
மெத்தை ஒன்றை
தைக்க சொன்னேன்
மேகம் அள்ளி
வைக்க சொன்னேன்
கண்ணை மூடி
உன்னை சிந்திக்க
என கார்த்திக் ஆரம்பித்து,

சுற்றும் பூமி
நிற்க சொன்னேன்
உன்னை தேடி
பார்க்க சொன்னேன் 
என்னை பற்றி
கேட்க சொன்னேன்
என் காதல்
நலமா என்று

என்று சிறிது டோன் மாற்றி, மீண்டும், "காற்றைக் கொஞ்சம்" என்று பின்னணியில் ஒரு வயலினுடன் தொடர்ந்து சரணத்திற்கு முந்தைய இசைக்கு போகும் இடம் அற்புதம்.

சரணத்திற்கு முந்தைய இசையிலும், ராஜா அமுத பானத்தையே கொடுத்திருக்கிறார். 01:36 - 02:11 அவ்வளவு இனிமை.

அத்தோடு முடிந்துவிடவில்லை. இரண்டு சரணங்களும் காதில் தேன் போல் பாய்கின்றன.

தள்ளி தள்ளி
போனாலும்
உன்னை எண்ணி
வாழும் ஓர்
ஏழை எந்தன்
நெஞ்சத்தை
பாரடி........
தங்க மெத்தை
போட்டாலும்
உன் நினைவில்
எந்நாளும்
தூக்கமில்லை
ஏன் என்று
சொல்லடி........

ஆஹா, கேட்பதற்கு எவ்வளவு இதமாக இருக்கின்றன! அதிலும் "போனாலும்", "ஓர்", "நெஞ்சத்தை", "எந்நாளும்", "ஏன் என்று" என்ற இடங்களில் அதற்கு ஏற்றார் போல் வரும் இசை அற்புதம்.

மொத்ததில் மிக, மிக அற்புதமான பாடல்.



ஆரம்பத்தில் இருந்தே எனக்கு பல பாடல்கள் பிடித்து விட்டன; இன்னும் சிலருக்கு, ராஜாவின் பாடல்களில் இருந்து சிறிது வித்தியாசமாக இருக்கிறது. அந்த கருத்து அனைத்து பாடல்களையும் இன்னும் சில முறை கேட்ட பிறகு மாறிவிடும் என்று கருதுகிறேன். பொதுவாக இது போன்ற அனுபவம் ராஜாவின் பாடல்களுக்கு புதிது. சில முறை கேட்ட பிறகு பிடிக்கும் என்பது. பொதுவாக ரகுமானின் பாடல்களை தான் பல முறை கேட்க வேண்டும் - பல பாடல்கள் முதல்முறையே பிடித்திருக்கின்றன. எனக்கு அந்த அனுபவம் திருவாசகம் பாடலகளில் ஏற்பட்டது.

ஆனாலும், இளையராஜாவின் நூற்றுக்கணக்கான பாடல்களில் அநாயசமாக இருக்கும் அந்த உயிர்நாதம் ஒரு சில இடங்களைத் தவிர இப்படத்தின் பாடல்களில் குறைவது போல் தோன்றுவதனை மறுப்பதிற்கில்லை.

பாடல்கள் எவ்விதத்தில் இருந்தாலும், இசைக்கோர்வை மிகவும் வித்தியாமாக, இனிமையாக இருக்கின்றது. எத்தனை வகையான இசைக்கருவிகள் ஒரே நேரத்தில் வெவ்வேறு நோட்களை ஒலிக்கின்றன - ஆனால் இனிமையாக. பல இசைமைப்பாளர்கள் ஒரிரு இசைக்கருவியினை வைத்து பாடல் முழுவதுமே இசையமைத்திருப்பார்கள் - பெரும்பாலும் அவை ஒரே மாதிரியே பாடல் முழுவதும் ஒலிக்கும். அந்த வகையில் இந்த ஆல்பம்  மிகவும் வித்தியாசப்பட்டிருக்கிறது.

இன்னும் நாட்கள் செல்ல, செல்ல அவ்வளவாக கவராத பாடல்களும் மனதை மயக்க வாய்ப்பிருக்கின்றன. என்ன ஆச்சர்யம் என்றால், ராஜா அவர்கள் ஒரிரு நாட்களில் எழுதிய இசையின் ஆழத்தை ஓரளவு உணர்ந்து கொள்வதற்கே பல நாட்களாகின்றன.

இப்படத்தினை பற்றி இன்னும் பல வருடங்கள் பேசிக்கொண்டிருப்போம் என்பது எனது கருத்து.

9/10 (ஒன்றிரண்டு பாடல்களை கணக்கில் கொள்ளவில்லை)




ஞாயிறு, ஜூலை 15, 2012

இளையராஜா - ஓர் சகாப்தம் - பகுதி 1

எனது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் பலர். ஆசிரியர்கள், குடும்பத்தார்கள், அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், சமூக அக்கறை உள்ள தனி மனிதர்கள் மற்றும் எதிரிகள் என பற்பலர் உண்டு. அவர்களில் தினமும் யாரைப் பற்றி நினைக்கிறேனோ இல்லையோ, இளையராஜாவினைப் பற்றி நினைக்காமல் இருப்பது இல்லை.

எண்ணற்ற பல தமிழர்களின் வாழ்வினைப் போல, எனது வாழ்விலும் சினிமா பாடல்களுக்கென்று மிகவும் குறிப்பிடத்தகுந்த இடமுண்டு. சிறு வயது முதல், தெருவிலும், வீட்டிலும், பக்கத்து வீட்டு தொலைக்காட்சிகளிலும், திரையரங்குகளிலும், திருமண மண்டபங்களிலும், பேருந்துகளிலும், டீ கடைகளிலும் எண்ணற்ற பாடல்களை கேட்டு லயித்திருக்கிறேன்.


நான்காவது அல்லது ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, ஒரு திருவிழா நாளில், அதிகாலை 4 மணிக்கு "அழகான பொண்ணு தான்; அதற்கேத்த கண்ணு தான்" பாடலை கேட்டு நீண்ட நேரம் தூங்காமல் இருந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்த பாடலை அவ்வளவு ரசித்ததற்கு காரணம், அது ரீமிக்ஸ் செய்யப்பட்டது (பாடிய விதம்; இசை) என்பது நீண்ட நாட்களுக்கு பின்பு தான் தெரிந்தது. தீபன் சக்ரவர்த்தி அதற்கு இசைமையத்திருந்தார் என்று நினைக்கிறேன்.

"காதலிக்க நேரமில்லை" படத்தினை முதல் முதலாக திரையரங்கில் பார்த்து விட்டு, இரண்டு மூன்று நாட்களுக்கு 'நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா' என்று பாடிக்கொண்டிருந்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. இப்போதும் அந்தப் பாடலை கேட்கும் போது அது தான் ஞாபகம் வரும்.

ஆறாம் வகுப்பு படிக்கும் போது பக்கத்து வீட்டில் 'புன்னகை மன்னன்' பாடல்களை பல முறை கேட்டிருக்கிறேன். அந்தப் படத்தில் இப்போது எனக்கு பிடித்தமான பாடல் வேறு என்றாலும், அந்த காலகட்டத்தில் 'கவிதை கேளுங்கள்' பாடல் மீது எனக்கு தனி பிரியம்.

ஒன்பதாம், பத்தாம் வகுப்பிற்கு பின்பு, ரகுமான் பாடல்களினால் தான் மிகவும் கவர்ந்திழுக்கப்பட்டேன். தெருவில் முதன் முதலாக பெரிய ஸ்பீக்கர்களில் "காதல் ரோஜாவை" பாடலில் உண்டான அதிர்வினை கேட்டு நின்றது இன்னும் கண்களில் நிற்கிறது.

ஏதோ ஒரு திருமண மண்டபத்தில், "தைய தையா" உருவாக்கிய பரவசமும், வீட்டில் சும்மா ஏதோ படித்துக் கொண்டிருந்த போது, "நெஞ்சினிலே" என்று ஜானகி பாடிய போது ஏற்பட்ட உணர்வும் அந்தப் பாடலில் முதலாவது சரணத்திற்கு முன்பாக வயலின் இசையை கேட்ட போது ஏற்பட்ட மயக்கம் சொல்லி மாளாது. இது போன்று ரகுமான் பாடல்கள் பல புது விதமான உணர்வுகளை கொடுத்திருக்கிறது. 'வெண்ணிலவே வெண்ணிலவே' (மின்சார கனவு) பாடலின் நடுவில் வரும் வயலின் இசையிலும், ஜூன்ஸ் படத்தில் வரும் "நிசரிஸா" என்ற பின்னணி இசையிலும் பித்து பிடித்து அலைந்திருக்கிறேன். அதற்காகவே ஜூன்ஸ் படத்தினை பல முறை பார்த்தேன்.

ஓரளவிற்கு வளர்ந்து, கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்த பிறகு, ஒரு ரூபாயை வைத்துக் கொண்டு, டீ கடையில் ஒரு டீயினை வாங்கி வைத்து மணிகணக்கில் அமர்ந்திருப்பேன். காரணம் - ஒன்று பத்திரிக்கை வாசிப்பது இரண்டு திரைப்பாடல்கள். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் மதியம் 3:30 மணி வரை எப்படா பொழுது போகும் என்றிருக்கும். 10-10.30 க்கு எல்லாம் கொழும்பு வானொலி நிலையம் ஒலிபரப்பை முடித்து மீண்டும் 3:30 - 4 மணிக்கு தான் தொடங்குவார்கள். அது வரை என்ன செய்வதென்பதே தெரியாது. மாலை பத்திரிக்கையும் 4 மணியளவில் தான் வரும். 4 மணிக்கு ரோட்டிற்கு (கடைகள் இருக்குமிடம்) சென்று ஒரு டீயினை வாங்கி கொண்டு, ஒரு பக்கம் மாலை மலரையோ, மாலை முரசுவையோ படிப்பதும் மறுபுறம் கொழும்பு வானொலி இசை நிகழ்ச்சிகளை கேட்டு ரசிப்பதும் ஆனந்தம். ஜீன்ஸ் படம் வந்த புதிதில், ஒரு டீயை வைத்துக் கொண்டு மூன்று-நான்கு முறை அப்படத்தின் அனைத்து பாடல்களையும் கேட்டது நன்றாக ஞாபகம் இருக்கிறது. அதுவும் 'கண்ணோடு காண்பதெல்லாம்' பாடலினை கேட்ட போது ஏற்பட்ட பரவசம் சொல்லி மாளாது. டீ கடைக்காரருக்கும் அந்த பாடலே விருப்பமான பாடலானது மிகவும் வசதியாக போனது. அவர் கடையில் இருந்தால் அந்தப் படத்தின் பாடல்களை தான் கேட்பார் அதுவும் அந்தப் பாடலுக்கு சத்தம் அதிகமாக வைத்து கேட்பார். 

இளையராஜாவின் பாடல்கள் பிடிக்கும் என்றாலும், என்னுடைய நண்பர்கள் (என்னை விட 10 வயது வரை பெரியவர்கள்), ராஜா பாட்டு மாதிரி எல்லாம் உங்க ரகுமான் பாட்டு போட முடியுமா என்று வெறுப்பேற்றுவார்கள். ஏன், நல்லா தானே இருக்கு; எதுக்கு இவங்களுக்கு பிடிக்கலை என்பது பல ஆண்டுகளாக எனக்கு புதிராக இருந்தது. அடிக்கடி விவாதம் நடக்கும். அப்போது உதாரணமாக, 'பூவே செம்பூவே', 'நான் தேடும் செவ்வந்தி பூவிது' போன்ற பாடல்களை குறிப்பிடுவார்கள். "நல்ல பாட்டு தான்; ஆனா அதை விட சூப்பர் பாட்டெல்லாம் ரகுமான் போடுறார்ல", என்று கூறுவேன்.

இந்தியன் படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அக்கடான்னு நாங்க உடை போட்டா, மாயா மச்சிந்திரா, பச்சை கிளிகள் தோளோடு, கப்பலேறி போயாச்சு, டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் (கேசட்டில் இருந்த அதே வரிசை என்று நினைக்கிறேன்). எனது நண்பர்களில் ஒருவரின் கடையில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டே இருப்பேன். இந்தியன் பாடல்கள் எனக்கு இப்போதும் மிகவும் விருப்பமான படம்.

இப்படி இது வேலைக்கு சென்று சில ஆண்டுகளும் தொடர்ந்தது. புது புது இசையமைப்பாளர்கள் அவ்வப்போது மனதினை கவர்ந்ததுண்டு. ஹாரீஸ் ஜெயராஜ், யுவன் சங்கர், வித்யாசாகர், கார்த்திக் உட்பட.

ஆனால் எப்போது இப்படி இளையராஜா பாடல்களின் மீது இப்படி ஒரு பிடிப்பு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. சிறு வயது முதலே அவரது பாடல்களை கேட்டு வருகிறேன். அவரது பல பாடல்கள் என்னை கவர்ந்திழுத்ததுண்டு. எனது சொந்த செலவில் நான் பதிவு செய்த ஒரே கேசட்டில் பாதிக்கும் மேல் ராஜாவின் பாடல்கள் தான். ஆனாலும் ராஜா மற்றவர்களைப் போல ஓர் இசைக்கலைஞர் என்ற எண்ணம் தான் இருந்தது. அதனையும் தாண்டி அவர் கடவுளுக்கு இணையானவர் என்ற எண்ணம், கடந்த பத்து ஆண்டுகளில் தான் ஏற்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம், புதிய பாடல்களின் தரமின்மையினால் அதிகமாக இளையராஜாவின் பாடல்களை அதிகம் கேட்க கிடைத்த வாய்ப்பு. கடந்த மூன்று ஆண்டுகளில் இளையராஜா மீதான மரியாதை இன்னும் அதிகரிக்க வைத்துள்ளது. அவரின் ஒவ்வொரு பாடலைக் கேட்கும் போது ஏற்படும் வியப்பு, பெருமை, இனம்புரியாத உணர்வு எழுத்தில் வடிக்க முடியாதது. தமிழகத்திற்கும், தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும், தமிழிசைக்கும் கிடைத்த மாபெரும் சொத்து அவர்.

ஒரு மனிதனுக்குள் எப்படி இவ்வளவு உணர்வுகள், இசை மீது காதல், ஆதிக்கம்  இருக்க முடியும்? இவற்றை விட கோடிக்கணக்கான ரசிகர்களை வயது,  வளர்ந்த சூழல், கல்வி, பதவி, ஜாதி/மதம், இருப்பிடம் இப்படி எல்லாவிதமான வேறுபாடுகளையும் மறக்கடித்து தனது இசையின் கட்டிப்போட்டிருக்கிறார். எத்தனையாயிரம் பாடல்கள்? இன்னும் அவற்றில் பாதியை கூட கேட்டிருக்க மாட்டேன். ஒவ்வொரு பாடலிலும் எவ்வளவு விசயங்கள்; நேர்த்தி. சாதாரண பாடலில் (காட்சியமைப்பினால்) கூட வியக்கவைக்கும் அளவிற்கு சங்கதிகள், இசை. இவரை போன்ற ஓர் கலைஞனை இதுவரை இவ்வுலகம் கண்டதில்லை; காணப் போவதுமில்லை. 

பல பாடல்களை நிச்சயமாக ஒரு நாளிலோ, இரண்டு நாட்களிலோ இசையமைத்து முடித்திருப்பார். அப்படி சில நாட்களில் முடிக்கப்பட்ட பாடல்கள் தான் நான் கேட்டு வியந்து கொண்டிருக்கும் இந்தப் பாடல்கள் என்று நினைத்தாலே, ஏற்படும் வியப்பு இன்னும் தொடர்கிறது. கேட்டு ரசித்த பாடல்களில் கூட அடிக்கடி ஏதாவது ரகசியத்தை வைத்திருக்கிறார். அது அவ்வப்போது வந்து செவிகளில் வந்து விழுந்து ஆச்சர்யப்படுத்துகின்றன. எப்படி இந்தப் பாடலை இத்தனை நாட்களாக சரியாக பார்க்காமல் தவறினோம் என்று நினைத்திருக்கிறேன். இது வாரா வாரம் நடக்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது.


எந்த இசைக்கருவினைத் தேர்வு செய்து பாடலினை இயற்றினாலும், அந்தக் கருவியில் இருந்து வரும் நாதமானது நமது உயிரினை சாதாரணமாக உலுக்கி சென்றுவிடும். அதற்கு காரணம் இசைக்கருவி மட்டுமல்ல. அதை விட அதற்கு அவர் ஊட்டிய உயிர். அதனை நூற்றுக்கணக்கான பாடல்களில் உணர்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் முன்பு கேட்ட பாடலை இப்போது கேட்கும் போதும், கேட்காத ஒரு பாடலை கேட்கும் போதும் அதனை உணர்கிறேன்.

அவருடன் பணியாற்றிய கலைஞர்கள் என்ன புண்ணியம் செய்தவர்கள். அவருடைய இசையை வாசிக்கும் வரம் பெற்றவர்கள்; பாடும் பேறு பெற்றவர்கள். அப்பப்பா! எனது வாழ்நாள் லட்சியமே, ஒரு முறையாவது அவரை நேரில் சந்தித்து ஆசி வாங்குவது தான். என்னைப் போல எத்தனையோ கோடிக்கணக்கான மனிதர்களுக்கு வாழ்க்கையின் மேல் ஓர் பற்றினை உண்டாக்கியதில் ராஜா அவர்களுக்கு மிக, மிக முக்கியமான பங்கு உண்டு. அவரையும், அவரது பாடல்களையும் வாழ்வு முடியும் வரை மறக்க இயலாது.




என்னுடைய இனியவை நாற்பது பதிவினில் ஏற்கனவே பல இளையராஜாவின் பாடல்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். அப்போது அவர் மீது இருந்த மரியாதை இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. அப்பாடல்களில் சில.

1. தேவனின் கோவில் மூடிய நேரம் தெய்வமே
2. குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே
3. செண்பகமே செண்பகமே
4. ஆணென்ன பெண்ணென்ன
5. மனதில் ஒரே ஒரு பூ பூத்தது, மலரும் நினைவுகள் நான் சொல்வது
6. இசையில் தொடங்குதம்மா
7. ஒரு கணம் ஒரு யுகமாக தோன்ற வேண்டுமோ
8. பூவே பூச்சூடவா
9. அஞ்சலி அஞ்சலி
10. கடவுள் உள்ளமே கருணை இல்லமே
11. கேட்கலியோ கேட்கலியோ
12. மன்றம் வந்த தென்றலுக்கு
13. அம்மா என்றழைக்காத
14. வா வா கண்ணா வா
15. பழமுதிர்சோலை
16. மேகம் கருக்கையிலே
17. காளிதாசன் கண்ணதாசன்

இவற்றுடன் இன்னும் பல நூற்றுக்கணக்கான பாடல்களை சேர்க்க விரும்புகின்றேன். அவற்றைப் பட்டியலாக தொட்டுவிடாமல் பல பதிவுகளாக பதிய விரும்புறேன். அதற்கு முக்கிய காரணம், ஒவ்வொரு பாடலுக்கும் நேரம் எடுத்து குறிப்பிட விரும்புகிறேன். பல பாடல்களை என்னால் வார்த்தைகளால் முழுவதுமாக குறிப்பிட்டுவிட முடியாது என்பதனை நன்கு அறிவேன். ஆனாலும் முயற்சி செய்யப் போகிறேன்.

இன்று நான் எழுத நினைத்திருக்கும் பாடல் வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் பாடல். வைதேகி காத்திருந்தாள் தமிழில் எடுக்கப்பட்ட சிறந்த படங்களுள் ஒன்று. சுந்தர்ராஜன் - இளையராஜாவின் கூட்டணியில் உருவான மற்றுமொரு மாபெரும் வெற்றிப்படம். 


விஜயகாந்தின் வித்தியாசமான பாத்திரம், கணவனை இழந்த பெண்ணாக ரேவதி மிக யதார்த்தமாக நடித்திருந்த விதம், கவுண்டமணி / செந்திலின் பெட்ரோமாஸ் / ஆத்தங்கரை போன்ற  மிகச் சிறந்த நகைச்சுவை காட்சிகள், கதைக்களம் நடக்கும் அற்புதமான கிராமம், எல்லாவற்றுக்கும் மேலாக ராஜாவின் மிக, மிக அற்புதமான பாடல்கள், பின்னணி இசைக்கோர்வை என அனைத்துமே குறிப்பிடத்தகுந்தவை.


இனியவை நாற்பது எழுதும் போது கூட ”மேகம் கருக்கையிலே” பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அப்படத்தின் ஒவ்வொரு பாடலும் அற்புதமானது. * ஒவ்வொரு * பாடலும். "ராசாத்தி உன்னை" பாடல், அப்படம் வந்து பல ஆண்டுகள் ஆனபிறகும் தமிழகத்தினை கட்டிப் போட்டிருக்கிறது. இரவு தூங்கும் போது, கேட்கக் கூடிய பாடல்களில் இப்பாடலுக்கு கண்டிப்பாக முக்கியமான இடமுண்டு.  அதனைத் தவிர, "காத்திருந்து காத்திருந்து", "அழகுமலர் ஆட" ஆகிய இரண்டு பாடல்களும் மிகவும் அற்புதமான பாடல்கள்.

ஆனால், "இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ" பாடலினைக் கேட்கும் போதெல்லாம் ஓர் இனம் புரியாத பூரிப்பு.

ஜெயச்சந்திரன் அவர்கள் ஆ... என்று ஆலாப் முடித்ததும் அவருடன் சேரும் வீணையின் இசை, வீணை முடிந்ததும் ஜெயச்சந்திரன் அவர்கள் "இன்றைக்கும் ஏன் இந்த ஆனந்தமே" என்ற ஆரம்பிக்கும் போதே நமக்கும் ஆனந்தம் தொற்றிக்கொள்கிறது.

முதலாவது சரணத்திற்கு முன்பாக, புல்லாங்குழலைத் தொடர்ந்து வரும் வீணையின் இசையும், வயலினைத் தொடர்ந்து வரும் வீணையின் இசையும், அவற்றைத் தொடர்ந்து, "பூங்குயில் சொன்னது" என்று சரணத்தை ஜெயச்சந்திரன் அவர்கள் ஆரம்பிப்பதும் அற்புதம்.


இன்றைக்கு ஏன் இந்த
ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என்
மனமே
கனவுகளின் சுயம் வரமோகண் திறந்தால் சுகம் வருமோ
இன்றைக்கு ஏன் இந்த
ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என்
மனமே....
பூங்குயில் சொன்னது
காதலின் மந்திரம்
பூமகள் காதினிலே
பூவினை தூவிய
பாயினில் பெண் மனம்பூத்திடும் வேளையிலே
நாயகன் கை தொடவும் வந்த
நாணத்தைப் பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச
சுகங்கள் சுவைக்கும்
இரண்டு விழிகளில்
இன்றைக்கு ஏன் இந்தஆனந்தமே...

மாவிலைத் தோரணம் ஆடிய காரணம்
தேவியின் திருமணமோ
ஆலிலையோ தொட ஆளில்லையோ
அதில் ஆடிடும் என் மனமோ
காதலின் பல்லவியோ
அதில் நான் அனுபல்லவியோ
அங்கத்தில் ஏழு ஸ்வரம்
இன்பத்தில் நூறு வரம்
மிதந்து மறந்து
மகிழ்ந்த நெஞ்சத்தில்
இன்றைக்கு ஏன் இந்தஆனந்தமே...
இரண்டாவது சரணத்தை வாணி ஜெயராம் அவர்கள் "மாவிலைத் தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ" என்று ஆரம்பிக்கும் போது, ஆஹா... அதிலும் "ஆடிய" என்ற வார்த்தைக்கு அவர் கொடுக்கும் உச்சரிப்பு.. சுகம். நாயகியின் உற்சாகத்தை, மகிழ்ச்சியை அதனை விட இனிமையாக தெரிவிக்கமுடியாது.

இந்த சமயத்தில் ரேவதியைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். ரேவதி எவ்வளவோ நல்ல தமிழ் படங்களில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதில் இப்படத்திற்கும் குறிப்பிடத்தகுந்த இடம் உண்டு. அவ்வளவு நளினமாக அந்தப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். இப்பாடலில் கூட, இரண்டாவது சரணத்திற்கு முன்பாக அந்த குங்குமச் சிமிழின் அருகில் அவர் உதிர்க்கும் அப்புன்னகை அவ்வளவு அழகு.

என்னைப் பொறுத்தவரை, வாணி ஜெயராம் மற்றும் ஜெயச்சந்திரன் அவர்களின் மிகச் சிறந்த பாடல் இது. இருவரும் அவ்வளவு அற்புதமாக பாடியிருக்கிறார்கள். பலமுறை எனக்கு ராஜா அவர்களின் மீது கோபமும், வருத்தமும் ஏற்படுவதுண்டு. அது எஸ்.பி.பி போன்ற மிகச் சிறந்த பாடகர் இருக்கும் போது எதற்காக மனோ போன்றவர்களை ஊக்குவிக்கிறார் என்பது அது. ஆனால் இப்பாடலில் ஜெயச்சந்திரனுடனைய குரலைத் தவிர வேறு யாருக்கும் அது பொருந்தியிருக்காது என்பது எனது எண்ணம் அது எஸ்.பி.பி அவர்களையும் சேர்த்து தான்.

இப்படத்தின் பாடல்களைத் தவிரவும் ராஜா அவர்கள் பின்னணி இசையில் தனி முத்திரையைப் பல இடங்களில் பதித்திருக்கிறார். முக்கியமாக ரேவதி, தனது வீட்டில் வாடகைக்கு இருப்பவரிடம் காதல் கொள்ளும் காட்சிகளில் வரும் இசை மிக இனிமையானது. கோவிலில் சந்திக்கும் போது (1:13:00) ஒலிக்கும் மணியோசையும், வீணையின் நாதமும் அருமையாக இருக்கும். அதே வீணையின் ஒலியை, அடுத்து அவர்கள் இருவரும் ரேஷன் கடையில் பேசிக்கொள்ளும் போதும் (1:16:40) தொடர்வதும், அதனை ஆலாப்பாக மாற்றியிருப்பதும் அற்புதம்.

1:20:00 காட்சியில் உசிலைமணியின் கடையில் உசிலைமணி "அவன் கையாலேயே உனக்கு குங்குமச்சிமிழ் கிடைச்சிருக்கு" என்றதும் அதே இசை அதற்கு அத்தனை இசைவாக இருக்கும். ஆனால் இந்த வீடியோவில் அது இல்லை.

நான் இன்னும் பல பக்கங்கள இப்படத்தின் இசையினைப் பற்றி எழுதிக்கொண்டே போக இயலும். ஆனால் நேரத்தினை கருத்தில் கொண்டு இத்துடன் இப்பகுதியை நிறைவு செய்கிறேன். இது போல ராஜா அவர்கள் இன்னும் நூற்றுக்கணக்கான பாடல்களையும், காட்சிகளுக்கு இசையினையும் நமக்கு தந்தருளியிருக்கிறார். அவற்றை வரும் பகுதிகளில் காண்போம்.

நன்றி.


செவ்வாய், டிசம்பர் 20, 2011

2011 சிறந்த பாடல்கள்

இந்த ஆண்டும், சென்ற ஆண்டும் பதிவெழுத தோன்றவில்லை என்று கூறினால் அது உண்மையில்லை - எழுதவேயில்லையே என்று நினைத்தது பலமுறை. ஆனாலும் சோம்பல் என்னை தடுத்தது தான் உண்மை. சில மணி நேரம் கிடைத்தாலும், கூக்குள், அமேஸான், யு டியூப், விகடன் போன்ற தளங்களை பார்க்க ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. அதில் அப்படி ஒரு சுகம்.

கடந்த 10 ஆண்டுகள் தமிழிசைக்கு சோதனை காலம் என்று கூறினால் அது மிகையாது. ராஜாவின் திறமைக்கு அவருக்கு அமையும் படங்கள் எல்லாம் தூசு; அதனில் முன்பு போல் அதிகமாக ஜீவனை காண முடிவதில்லை. ராஜா அளவிற்கு இல்லாவிட்டாலும், அவருக்கு மாற்றாக அறுதியிட்டு கூறமளவிற்கு திறமைபடைத்த ரஹ்மான், தமிழிலிலேயே காணமுடிவதில்லை - பாவம், ஹிந்தியில் இன்னும் நல்ல கதையம்சத்துடன் படம் எடுக்கிறார்கள் போலிருக்கிறது - Blue, Jhodha Akbar, Delhi 6, Ghajini, Yuvraj, Jhootha Hi Sahi, Rockstar, ADA - உள்குத்து. தமிழிலும் முன்பு போல் அவரது அற்பணிப்பினை காணமுடிவதில்லை. ’சில்லென்று ஒரு காதல்’ போன்ற ஒரு சில படங்கள் விதிவிலக்கு. விண்ணைத் தாண்டி வருவாயா மற்றொன்று.

ஹாரீஸ் பரவாயில்லை. ஆனாலும், ஒரே பாடலை பத்து படங்களுக்கு இசையமைத்தது போன்ற உணர்வினை தவிர்க்க முடியவில்லை. ஆனால், இவர் பாடகளில் ஒலியமைப்பு அற்புதமாக அமைகிறது. வார்த்தைகள், வாத்திய கருவிகளின் ஒலிப்பு தெளிவாக கேட்கிறது.

ஜி.வி.பிரகாஷ் போன்றோர்கள் எப்போதாவது தனது சொந்த உழைப்பினால் நல்ல பாடல்கள் தருகிறார்கள்.

தமனின் ’வந்தான் வென்றான்’ படத்தில் இரு பாடல்கள் நன்றாக இருந்தாலும், அவர் Auto-Tuner வைத்துக் கொண்டு, மியுசிக் டைரக்டர் என்று காமெடி செய்து கொண்டிருக்கிறார். இன்னும் வளர வேண்டும்.

யுவன் ஒருவர் தான் நம்பிக்கை ஊட்டுகிறார். ஆனாலும் அவருடைய உழைப்பினையும் அவ்வப்போது சிம்பு போன்றவர்கள் கெடுத்து விடுகிறார்கள் - Where is the party நல்ல உதாரணம். அவருடைய படங்களில் சமீபத்தில் மிகவும் லயித்தது ”குங்குமப் பூவும் கொஞ்சு புறாவும்”. அற்புதமான பாடல்கள்.

இக்காரணங்களால், முன்பு போல் ஒரு ஆல்பம் வெளியீட்டை ஆவலோடு எதிர்பார்க்கும் நிலை குறைந்து விட்டது. ஒரு ஆல்பத்தை பல மாதங்கள் கேட்கும் நிலையும் இல்லை. இப்போதும் இருக்கிறது - வேறொரு காரணத்திற்காக - அது, வேறு நல்ல பாடல்களே இல்லாத காரணம். உதாரணம் - எந்திரன், ராவணன் வந்த பிறகும் வேறு வழியில்லாமல் விண்ணை தாண்டி வருவாயா கேட்க வேண்டிய நிலை. ரஹ்மான் வந்த புதிதில், ஒரே நேரத்தில் அவருடைய கிழக்கு சீமையிலே, திருடா திருடா, ஜென்டில்மேன் படங்கள், தினமணியின் டாப் 10 படங்கள் (இசை) வரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருந்தன. அதே போல் மூன்று படங்களின் பாடல்களும் முத்துக்கள். ஒரே நபரால் எப்படி “மானூத்து மந்தையிலே” ஐயும், “கொஞ்சும் நிலவினையும்”, “என் வீட்டுத் தோட்டத்தையும்”, “சிக்குபுக்கு ரயிலையும்” இசையமைக்க முடிந்தது என்று வியப்பாக இருக்கும். அது போன்ற வியப்பினை ரஹ்மான் பாடல்களில் அபூர்வமாக தான் கேட்க முடிகிறது. சமீபத்திய உதாரணம் - ஆரோமலே.

இருந்தாலும் இந்த ஆண்டில் சில நல்ல பாடல்கள் வந்தன. அவற்றை கேட்டு மகிழ்ந்தேன். அப்பாடலை இயற்றிய இசையமைப்பாளர்களுக்கு நன்றி. நான் ரசித்த சில பாடல்கள் இதோ.

1) ஒரு மலையோரம்

படம்: அவன் இவன்
பாடியவர்கள்: ஸ்ரீநிஷா, நித்யஸ்ரீ, மற்றும் பிரியங்கா
இசை: யுவன் ஷங்கர் ராஜா

பிதாமகன் அல்லது நான் கடவுள் அளவிற்கு இல்லாவிடிலும், ஓரளவிற்கு பாடல்கள் நன்றாக இருக்கும் என்று நினைத்ததற்கு நல்ல பலன். படமும் அவ்வளவே. பாலாவின் படம் என்று எழுத்தில் தெரிந்து கொண்டால் தான் உண்டு. அம்பிகாவின் பாத்திரம் (படத்தில் அவர் விளக்குவது அல்ல) மாத்திரம் தான்  தனித்து தெரிந்தது - ”போடா, அப்புறம் என்ன புறங்கையை நக்க சொல்லுறியா?”.

அப்படத்தின் பாடல்களில், இப்பாடல் வித்தியாசமாக, மிக இனிமையாக இருந்தது. இப்பாடல், கேட்ட பாடல் போல் ஒலித்தாலும், இது வித்தியாசமாக இருந்ததற்கு முக்கிய காரணம் மூன்று சிறுமிகளின் குரல்கள். ஸ்ரீநிஷா, நித்யஸ்ரீ, மற்றும் பிரியங்கா.

இவர்கள் அனைவரும் விஜய் டி.வியில் ஒளிபரப்பான, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பங்கேற்று இறுதி சுற்று வரை சென்றவர்கள். நித்யஸ்ரீ மற்றும் பிரியங்கா இந்த இளம்வயதிலேயே அற்புதமாக பாடும் திறமைபடைத்தவர்கள்.






சித்ரா மற்றும் மனோ போன்ற ஓரவஞ்சனை படைத்த, உதாவாக்கரை நடுவர்களைக் கொண்டு, “அல்கா” என்ற பெண்ணை வென்றவராக அறிவித்தார்கள். எதிர்பார்த்த, ஆனால், தாங்கமுடியாத கொடூரம் -  மற்றவர்களின் திறமைக்காக பார்க்க வேண்டிய கட்டாயம்.

அதிலும், விஷ்ணு சரண் என்ற பையன், முறையான சங்கீத பயிற்சி இல்லாமல் தனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரிலேயே நன்றாக பாடக்கூடியவர். ஆனால் நடுவர்களாலும், நிகழ்ச்சியின் பயிற்சியாளர் அனந்த் வைத்தியநாதனால் அடிக்கடி இம்சிக்கப்பட்டவர். அந்த அனந்த் வைத்தியாநாதனை, படத்தில் ஆர்யாவின் அம்மாவும், விஷாலின் அம்மாவும், ”ஸ்ரீகாந்த்” என்று அவரை திட்டியும், அடிக்கும் போது, எனக்கு ஏற்பட்ட அற்ப சந்தோஷத்திற்கு அளவில்லை.

அந்த நிகழ்ச்சியில் உண்மையான வெற்றியாளர்களாக வந்திருக்க வேண்டியவர்கள் பாடிய மற்றுமொரு நல்ல பாடல் (இம்முறை அவர்களாலேயே முதலாவதாகப் பாடப்பட்டது). படத்தில் இடம்பெறவில்லை. ஆனால் மிகவும் இனிமையான பாடல். இப்பாடலில் கூட பிரியங்காவின் இனிமையான குரலையும், ஸ்ரீநிஷாவின் குரல் வேரியேசியனையும் (மாற்றுச் சொல் வேண்டும் இங்கே) அறிய முடியும்.



பாடலில் ஒரே குறை, வழக்கம் போல, ராஜா வீட்டு பாடல்களில் ஒலிக்கும் மலையாள வாடை.

2) மழை வரும் பொழுதிலே

படம்: வெப்பம்
பாடியவர்: சூசன்
இசை: ஜோஸ்வா ஸ்ரீதர்

சமீபத்தியா பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல். அதிசயமாக ஜோஸ்வா ஸ்ரீதரிடமிருந்து. இவரின் ”காதல்” மிகவும் கவாராவிடிலும், இரு பாடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

சில பாடல்கள் மட்டும் கேட்ட இரு விநாடிகளில் பிடிக்கும். இப்பாடல் அந்த ராகத்தை சார்ந்தது. என்னவொரு அருமையான ராகம், இசை, மயக்கும் குரல். இப்பாடகர், ”விண்ணைத்தாண்டி வருவாயா” படத்தில் வரும் ஹோஸானா பாடலின் கோரஷில் பிரமாதப்படுத்தியிருந்தார். நல்ல தெரிவு. பாடலும் மிகவும் பிரமாதமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2:30-2:50 வரை பின்னணியில் வரும் வயலின் அருமை.







3) ஏலே ஏலமா

படம்: ஏழாம் அறிவு
பாடியவர்கள்: கார்த்திக், ஷாலினி, ஸ்ருதி ஹாசன், விஜய் பிரகாஷ்
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்

மிகவும் எதிர்பார்த்த திரைப்படம். ஓடவும் வேண்டும், ஓடவும் கூடாது என்று நினைத்த திரைப்படம். மற்ற பாடகள் மிகவும் சாதாரண ரகம். ஆனால் ஏலே ஏலமா மிகவும் நன்றாக வந்திருக்கிறது. ஹாரீஸ் நன்றாக உழைத்தால், அது பாடலில் நன்கு தெரிகிறது. இல்லையென்றால், இன்னொரு பாடலைப் போல் அப்பட்டாமாக தெரிகிறது. ஹாரீஸின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு விஷயம் ஒலிப்பதிவில் உள்ள தெளிவு. முன்பு ரகுமான் அதற்கு பிரபலம். ஆனால் சமீப காலங்களில் அவரது பாடல்களில் அது ஒரு குறையே.  ராக்ஸ்டார் விதிவிலக்கு. ஆனாலும், ராக்ஸ்டாரை விட, ஹாரீஸின் பாடல்களில் தெளிவு இருக்கிறது. பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

நல்ல பீட்; இனிமையான ராகம். நல்ல கோரஸ். விஜய் பிரகாஸ் நன்றாக பாடியிருக்கிறார்.

பாடலில் என்னை கவர்ந்த இன்னுமொரு விசயம் - ஸ்ருதியின் குரல். அற்புதம். ஸ்ருதி பாடிய, “வாரணம் ஆயிரம்” பாடலும் அவருடைய வித்தியாசமான குரலுக்காகவே பிடிக்கும். இப்பாடலிலும் அவர் பாடியது சில வரிகள் தான். ஆனால் அவை தனித்து, இனிமையாக ஒலிக்கின்றன. “என்ன் ஜன்னல் கதவில் இவ்வன் பார்வை பட்டு தெரிக்க.. ஒரு மின்னல் பொழுதிலே....” அற்புதமாகப் பாடியிருக்கிறார்.





4) என்னமோ ஏதோ

படம்: கோ
பாடியவர்கள்: ஆலாப் ராஜ், பிரஷாந்தினி
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்

மற்றுமொரு நல்ல பாடல் ஹாரீஸிடம் இருந்து. சென்ற பாடலுக்கு கூறிய அனைத்து சிறப்பம்சங்களும் இப்பாடலுக்கும் பொருந்தும் - ஸ்ருதியின் குரலைத் தவிர. 2:00 வரும் ஹம்மிங் பிரமாதம்.




5) Nadaan Parindey

படம்: ராக்ஸ்டார்
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், மொஹித் சவுகான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

இந்த வருடத்தில் வெளியான ஒரே ஏ.ஆர்.ரகுமான் ஆல்பம் இது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆல்பம். ஏமாற்றவில்லை. சமீபத்திய வழக்கத்திற்கு மாறாக, ஒலிப்பதிவு துல்லியமாக இருக்கிறது (இன்னும் ஹாரீஷ், இளையராஜா மற்றும் யுவன் ஆல்பங்களின் அளவிற்கு இல்லை). எனக்கு நான்கு, ஐந்து பாடல்கள் பிடித்திருக்கிறது. அதில் இப்பாடலுக்கு முதலிடம்.



இப்படத்தில் இடம் பெற்ற ’சதா ஹக்’ பாடலும் அமோக வரவேற்பினைப் பெற்றது.



6) மலர் வில்லிலே அம்பொன்றொன்று விட்டானே


படம்: பொன்னர் சங்கர்

பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், தர்ஷனா
இசை: இளையராஜா

ராஜாவிற்கு ஒரு சில படங்கள் வந்தாலும், என்னை கவர்ந்தது இப்பாடல் மட்டுமே. ஸ்ரேயா வழக்கம் போல் தனது திறமையால் பாடலை தூக்கி நிறுத்துகிறார். ராஜாவின் சமீப கால பாடல்கள் அவ்வளவாக நன்றாக  அமைவதில்லை - பாலா மற்றும் சில இயக்குனர்களின் படங்கள் விதிவிலக்கு. அப்படியும் நன்றாக சில பாடல்களை ”சில” மலையாள பாடகர்களும், பாடகிகளும் பாடி அதன் சிறப்பை குறைத்து விடுகிறார்கள் என்பது எனது கருத்து. அது போல் இல்லாமல், ஸ்ரேயா - அவரது முக்கியமான பாடகர்களில் ஒருவர் - வின் குரலில் இப்பாடல் கேட்பதற்கு அற்புதம்.

ஆரம்பத்தில் சுமாராக ஆரம்பித்தாலும், இரண்டு சரணங்களிலும் கம்பீரமாக நிற்கிறார் ராஜா. முக்கியமாக 03:22 -ல் (மற்றும் அதே போல இரண்டாவது சரணத்திலும்)

நிலவில் மஞ்சமது
தேய்ந்து விடக் கூடும்
மலரில் மஞ்சம் கூட
வாடி விடும்
மலரில் மஞ்சம் கூட
ஏக்கம் கொள்ளக் கூடும்
மடியில் மஞ்சம் ஒன்று
இட வேண்டும்

மிக இனிமை. ராகமும், பாடிய விதமும்.




7) விழிகளிலே விழிகளிலே


பாடியவர்கள்: கார்த்திக், சின்மயி

படம்: குள்ள நரிக் கூட்டம்
இசை: செல்வகணேஷ்


நம்பிக்கை இல்லாமல் பார்த்த திரைப்படம் இது - ஆனால் எனது எதிர்பார்ப்பைக் காட்டிலும் நன்றாகவே இருந்தது. அதிலும் இப்படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் மிகவும் நன்றாகவே இருந்தது.








இது வரை எனக்கு இது போல் இல்லைஇருதய அறையில்நடுக்கம்.
கனவுகள் அனைத்தும்உன் போல் இல்லைபுதிதாய் இருக்குது எனக்கு
அற்புதம்!


நன்றி!

சனி, பிப்ரவரி 20, 2010

சென்ற ஆண்டின் சிறந்த பாடல்கள்

சென்ற ஆண்டு முழுவதும் பதிவுகள் எழுத முடியாத சூழ்நிலை. ஆனாலும் பாடல்கள் கேட்பதை நிறுத்தவில்லை. சென்ற ஆண்டு நிறைய திரைப்படங்கள் வெளியானது ஆனால் பல படங்களும் சரியில்லை - பாடல்கள் இன்னும் மோசம்.

அவற்றில் சில பாடல்கள் தவறி மிகவும் நன்றாக அமைந்தன. அவற்றில், சிறந்தவை (என்னைப் பொருத்தவரை)

1. ஒரு காற்றில் அலையும் சிறகு:

'நான் கடவுள்' படம் சிறப்பான வரவேற்பை பெறாமல் போனது எனக்கு சிறிது வருத்தத்தைக் கொடுத்தது. படத்தின் இரண்டு கருக்களில், எனக்கு ஆர்யாவினை மையமாக கொண்டு இழைக்கப்பட்டிருந்த கரு பிடித்திருந்தது. என்னவொரு வேகம், கம்பீரம் அந்தப் பாத்திரத்தில். மிக அருமை. சில காட்சிகளை மிகவும் ரசித்துப் பார்த்தேன். இப்படத்தில் இடம் பெற்ற மூன்று பாடல்கள் மிகவும் அருமை.

அ) காற்றில் அலையும்
ஆ) கண்ணில்லாத
இ) ஓம் சிவா

இவற்றில் இசைஞானி பாடியுள்ள 'காற்றில் அலையும்' மிக, மிக இனிமையான பாடல்.



2. Rehna Tu

டெல்லி-6 என்ற ஹிந்தி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ரெஹ்னா தூ' என்ற பாடல் மிகவும் இனிமையான ஒன்று. இதனை ஏ.ஆர்.ரஹ்மான் மிகவும் அழகாக பாடியுள்ளார்.



ரெஹ்னா தூ
ஹே ஜெசா தூ

என்று முடிந்ததும் தோடா... என்று பாடுமிடம் மிகவும் அழகு.

இறுதியில் ஒரு நிமிடம் (4:48 முதல்) வரும் அந்த இசை நம்மை மயக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. இது முழுவதும் Continuum என்ற வாத்தியத்தை உபயோகப்படுத்தி வாசிக்கப்பட்டது. ஏற்கனவே இதனை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடந்த சென்னை இசைக்கச்சேரி விளம்பரத்திற்காக ரகுமான் உபயோகப்படுத்தியிருந்தார். அந்த வீடியோ இதோ.




3. ஒரு வெட்கம் வருதே

ஜேம்ஸ் வசந்தின் இரண்டாவது திரைப்படம் என்று நினைக்கிறேன். சுப்ரமணியபுரத்தில் கண்கள் இரண்டால் என்ற மிகச்சிறப்பான பாடலை கொடுத்ததற்காக இவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இன்று கேட்டாலும் அந்தப் பாடல் உள்ளத்தில் அவ்வளவு உற்சாகத்தைக் கொடுக்கிறது. அவரின் இன்னுமொரு அழகான பாடல்.

ஸ்ரேயா கோஷல் நன்றாக பாடியிருக்கிறார்.



இரண்டு சரணத்திலும் ஆரம்பத்தில் ராகம் மிகவும் இனிமை

2:21

மேலும் சில முறை
உன் குறும்பினில்
நானே
தோற்கிறேன்.

4. உன் மேல ஆச தான்

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிகவும் ஏமாற்றத்தைக் கொடுத்தது - ஆனால் பாடல்கள் பரவாயில்லை. அதிலும், இப்படத்தில் 'உன் மேல ஆச தான்' பாடல் மிகவும் இனிமை - எல்லாரையும் போல எனக்கும் இப்பாடல் மிகவும் பிடித்து விட்டது.



என் எதிர ரெண்டு பாப்பா...
தினுசான கேள்வி தான்பா
கடலேறும் கப்பலப்பா
கரை தட்டி நிக்குதப்பா

நன்று.


5. Human

இது ஒரு ஆங்கில பாப் பாடல் - எந்த திரைப்படத்திலும் இடம்பெறவில்லை. மிக, மிக அருமையான, இனிமையான பாடல்.



அதுவும் ஒவ்வொரு முறையும், "Are we human or are we dancers" என்று பாடுமிடத்தில் அதனைத் தொடர்ந்து வரும் பீட் அற்புதம். மொத்தத்தில் இது ஒரு மிக இனிமையான பாடல்.

சென்ற ஆண்டு தமிழ் திரையிசைக்கு மோசமான ஆண்டு. நிறைய ரீ-மிக்ஸ் பாடல்கள், பல படங்களின் பாடல்கள் மிகவும் சுமார் என்பது எனது கருத்து. அடுத்த ஆண்டாவது நல்ல பாடல்கள் வெளியாகும் என்று நம்புவோம்.

ஸ்ருசல்.