சனி, பிப்ரவரி 23, 2008

ஏன் எனக்கு மயக்கம் - காதலிக்க நேரமில்லை

சென்ற வாரம் எழுதிய சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள் பட்டியலில் ஒரு பாடலை சேர்க்க மறந்து விட்டேன் என்பதனை மிக தாமதமாக தான் உணர்ந்தேன். அதனை விட்டுவிட்டு அடுத்த பட்டியலில் சேர்க்கும் அளவிற்கு பொறுமை இல்லை எனக்கு. அது நான் பல முறை ஆச்சர்யப்பட்ட புது இசையமைப்பாளர் (இன்னும் அவரை புது இசையமைப்பாளர் என்று கூறுவதில் உடன்பாடு இல்லை), விஜய் ஆண்டனியின் இசையில் வெளியான ஒரு பாடல்.

இம்முறை திரைப்பட பாடல் அல்ல; தமிழ் தொலைக்காட்சி தொடருக்காக அவர் இசையமைத்த பாடல். சில நாட்களுக்கு முன்பாக நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். சில நொடிகள் மட்டுமே இந்தப் பாடல் நமக்கு பிடிக்குமா என்ற தயக்கம் இருந்தது. அந்த பெண் பாடகர் ஆ... என்று பாட ஆரம்பித்ததுமே அந்தத் தயக்கம் காணாமல் போய்விட்டது. உங்களில் பலர் அப்பாடலை கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள்.

பாடலைப் பாடியவர்: சங்கீதா ராஜேஸ்வரன்
தொடர்: காதலிக்க நேரமில்லை.
பாடல்: என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு

காதலனை எண்ணி, எண்ணி காதலி பாடும் படியாக இப்பாடல் அமைந்துள்ளது. இத்தனைக்கும் ஒரு சரணம் மட்டும் தான் இப்பாடலில். ஆனாலும் அட்டகாசம்! அற்புதம்.


என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த
அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடுமுன்
செய்தி அனுப்பு

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர
தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
சொல்லி அனுப்பு

என்ற எட்டுவரிகளை அட்டகாசமான ராகத்தில் பாடி விட்டு அனுப்புபுபு ஹோ ஓஓஓஒ என்று தொடர்ந்து


பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசி செல்கிறேன்

மரங்கள் கூட நடப்பது போலே
நினைத்துக் கொல்கிறேன்

கடிதம் ஒன்றில் கப்பல் செயுது
மழையில்
விடுகிறேன்

கனவில் மட்டும் காதல் செய்து
இரவில் கொல்கிறேன்

மேற்கண்ட வரிகளை பாடும்போது, நம்மையே மறக்க செய்கிறார் பாடகர். அற்புதம்!

சரணத்திற்கு முன்பாக வரும் அந்த ஆலாபனையும் நன்றாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, சரணம் மிக இனிமையாக இருந்தாலும், பல்லவி அளவிற்கு இனிமை அல்ல.

ஆனாலும் பாடகி, தனது வித்தியாசமான குரலினால் அங்கேயும் கவர்கிறார். உதாரணத்திற்கு 1:40-ல்


யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள்
தீர்த்திட வாராயோ

ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகல் எனை சுடுவது
ஏனோ

அதிலும் அந்த ஏனோ (1:53) என்ற வார்த்தைக்கு ஓர் நீட்டத்தைக் கொடுத்து அதனை இனிமையாக்கிய விதமே தனி தான்.

விஜய் ஆண்டனிக்கும் நன்றி.

இதோ அந்த பாடல்.





இதே போல் சென்ற ஆண்டு இவரின் இன்னொரு பாடலையும் குறிப்பிட மறந்து விட்டேன். அது 'நான் அவன் இல்லை படத்தில் இடம் பெற்ற 'ஏன் எனக்கு மயக்கம்' என்ற பாடல். அப்பாடலும் ஓர் அட்டகாசமான, அற்புதமான, இனிமையான பாடல். அப்பாடலைப் பாடியவரும் அதே பாடகர் - சங்கீதா ராஜேஸ்வரன். இணைந்து பாடியிருப்பவர் ஜெயதேவ்.

இப்பாடலின் ஆரம்பத்தில் வரும் வயலின் இசையே மிக அருமை. அதனை விடவும் இரண்டு இடங்களில் ராகம் என்னை மிகவும் கவர்ந்தது.

'ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கென்னாச்சு.... '

என்று ஆணும் பெண்ணும் பாடிவிட்டு,

பெண் (00:52)


'ஹே இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இந்த சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால்
விரலில் வெட்கம் வளர்ந்தேன் - பறந்தேன்'
என்று பாடுமிடத்திலும்

முதலாம் சரணத்தில் பெண் பாடும் (02:24)-ல்

'கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்
சாகும் போது உன்னை மட்டும் தேட சம்மதம்'
என்று பாடுமிடத்திலும் தான். (அதனை ஒத்த இரண்டாம் சரணம் 'லட்சம் மின்னல் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன் - 4:07 வரிகளும் தான்) .

அதுவும் மேலே குறிப்பிட்ட வரிகளில் தான் எத்தனை இனிமை (ராகம், பாடிய விதம், வரிகள்). மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் வரிகள்.

இதோ அந்த பாடல்



விஜய் ஆண்டனி இது போல் இன்னும் பல நல்ல பாடல்கள் கொடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி இப்பதிவினை முடிக்கிறேன். இதனை ஒத்த வரிகளை எனது பழைய பதிவிலும் குறிப்பிட்டிருந்தேன்.

திங்கள், பிப்ரவரி 18, 2008

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்களின் பட்டியல். தமிழில் கடந்த மூன்று மாதங்களில் நல்ல திரையிசை பாடல்கள் வெளிவராவிடிலும், கடந்த மூன்று மாதங்களாக எனக்கு இசை விருந்து பழைய பாடல்களின் மூலமாக கிடைத்தது. அது உங்களுக்கு மிகவும் பழக்கமான பாடல்களே. அவற்றை மீண்டும் கேட்க வாய்ப்பு கிடைத்த போது, அப்பாடல்களின் அருமையை உணர முடிந்தது. முதலில் புதிய பாடல்கள்.

1. மன் மோஹனா

படம்: ஜோதா அக்பர்
பாடியவர்: பெலே ஷிண்டே
இசை: ஏ.ஆர்.ரகுமான்

லகான், ஸ்வதேஷ் படங்களை இயக்கிய அஷ்வத் கோரிகர் இயக்கத்தில் உருவான திரைப்படம், இந்த வாரம் உலகெங்கும் வந்துள்ளது. நேற்று தியேட்டருக்கு சென்று, பாதை தெரியாமல் வீட்டிற்கு திரும்ப வந்துவிட்டேன். இன்னும் இரண்டு தினங்கள் அத்திரையரங்கில் படம் ஓட்டப்படும் எனத் தெரிகிறது. வேலை சிறிது குறைவாக இருக்கும் பட்சத்தில் சென்று பார்க்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். சரி பாடலுக்கு வருகிறேன்.

இப்படத்தின் பாடல்களை முதல் நாள் கேட்ட பொழுது இப்பாடலைத் தவிர வேறெந்த பாடலும் பிடிக்கவில்லை. ஆனால் கேட்க கேட்க இப்படத்தில் நான்கு பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால் ஆரம்பம் முதல், இந்த நிமிடம் வரை இப்பாடல் தான் எனக்குப் பிடித்தமான பாடல், மன் மோஹானா என்று ஆரம்பிக்கும் இப்பாடல் தான்.

கிருஷ்ண பகவான் மீதான தனது அன்பை தலைவி வெளிப்படுத்தும் விதமாக இப்பாடல் அமைந்துள்ளது. இந்தி மொழி எனக்குத் தெரியாது. ஆனால் பாடலில் இருக்கும் இசை, உருக்கத்தின் மூலமாக தலைவியின் அன்பை உணர முடிகிறது. இது ஓர் தெய்வாம்சமான பாடல். இதற்கு முன்பு, சிவாஜி படத்தில் கோமதியின் சாந்தமான குரலில் பாடப்பெற்ற சஹாரா பாடல் தான் எனக்கு இதற்கு முன்பு பிடித்த திரையிசை பக்தி பாடல். அப்பாடலுக்கு இப்பாடல் நிகரானது.

பெலே ஷிண்டே மிக அற்புதமாக பாடியிருக்கிறார். இந்த இடத்தில் இவரது குரல் அழகாக இருக்கிறது என்று சொல்ல முடியாத வகையில் பாடல் முழுவதும் அற்புதமாக இருக்கிறது. ரகுமானின் இசையை தனியாக வேறு நான் குறிப்பிட வேண்டுமா என்ன?


'ஜோடிக்கே அப்புனே காஸி மதுரா
ஜோடிக்கே அப்புனே காஸி மதுரா
ஆக்கே பசா மோரே நன்
தும் பின் பாவூன் கேசே செய்ன்'
என்று 00:44 இடத்தில் வரும் ராகமும், அதனைத் தொடர்ந்து வரும் வயலின் இசையும் மிகவும் கவர்கிறது. ஆனால் அந்த வயலினிசையை எங்கோ கேட்டது போல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நண்பர், அது 'சங்கமம்' படத்தில் இடம் பெற்ற மார்கழித் திங்கள் அல்லவா பாடலின் இடையில் வரும் வயலினிசையை ஒத்திருக்கிறது என்று கூறி எனது சந்தேகத்தை நிவர்த்தி செய்தார்.



இப்பாடலினை முதலில் ஐஸ்வர்யா ராய் தான் பாடுவதாக இருந்ததாகவும், அவருக்கிருந்த வேலைப்பளுவினால் அவரால் பாட இயலாமல் போய் விட்டதாகவும், படத்தின் இயக்குநர் ஓர் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். ஐஸ்வர்யா ராய் அப்பாடலை பாடியிருந்தால், பெலே ஷிண்டே போன்ற சிறந்த பாடகரை பலருக்கு தெரியாமல் போய் விட வாய்ப்பிருக்கிறது.

நல்ல வேளை. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'இன் லம் ஹோ' பாடலும் எனக்குப் பிடித்தமான பாடல்களில் ஒன்று. இதன் தமிழ் பதிவு (ஆடியோ) இரண்டு நாட்களுக்கு முன்பாக வெளியாகி இருக்கிறது. அதனைக் கேட்க வேண்டும்.

2. இது என்ன மாயம்

படம்: ஓரம் போ
பாடியவர்கள்: சங்கர் மஹாதேவன், அல்கா யக்னிக்
இசை: ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு ஓர் பாடல் என அவ்வப்போது திரும்ப வைப்பவர். அதிலும் அந்த ஒரு பாடலை மிக அற்புதமாக இயற்றி அனைவரது புருவத்தையும் உயர்த்த வைப்பவர். உதாரணமாக 'வெயில்' படத்தில் இடம் பெற்ற 'உருகுதே' பாடலையும், 'பொல்லாதவன்' படத்தில் இடம்பெற்ற 'மின்னல்கள்' பாடலையும், 'கிரீடம்' படத்தில் இடம்பெற்ற சில பாடல்களையும் குறிப்பிடலாம். அவ்வகையில் இப்பாடலையும் சேர்க்கலாம். ஆனால் அவர் இயற்றிய பாடல்களில் 'உருகுதே' பாடலுக்கு நிகரான, ஏன், அதனை விட ஒரு படி சிறந்த பாடல் என இப்பாடலினைக் குறிப்பிடலாம்.

'ஓரம்போ' பாடலை முன்பு பலமுறை கேட்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அதில் விஜய. டி. ராஜேந்தர் பாடிய 'கண் கணபதி' பாடலைத் தான் விரும்பி கேட்டிருக்கிறேன். ஆனால் இப்பாடலினை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இப்பாடலினை மிக தாமதமாக தான் தெரிந்து கொண்டேன். சமீபத்தில் இப்படத்தினை பார்க்கும் போது, இப்பாடல் மீண்டும் ஞாபகத்திற்கு வந்தது. என்ன ஒரு அற்புதமான பாடல்! படம் முடிந்ததும் இப்பாடலைத் தேடிப் பிடித்து கேட்டேன். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அந்த ஞாயிறு ஒரு மறக்க முடியாத ஞாயிற்றுக் கிழமையாக அமைந்தது. பொழுது சாயும் நேரம். 6.30, 7 மணிக்கு பாடலை ஒளிக்க விட்டு விட்டு (ரிப்பீட்டில்), குளிக்க சென்றேன். 9 மணி வரை இப்பாடலை கேட்டுக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தேன். என்ன ஒரு அற்புதமான பாடல்!

ஆரம்பத்தில் வரும் அற்புதமான பியானோ இசையை தாண்டி, சங்கர் தனது அற்புதமான குரலினால்


'இது என்ன மாயம்
இது எது வரை போகும்'

என்று பாடி கட்டிப் போடுகிறார்.

பாடலுக்கு அழகே பல்லவி தான். ஓவ்வொரு வரியும் ஒரு விதமான சிறப்பினைக் கொண்டிருக்கிறது. அவ்விரண்டு வரியினைத் தாண்டி வரும் வரிகளும் அவற்றில் ஒலிக்கும் ராகமும் அற்புதமாக இருக்கிறது.


கனவுகள் வருவதால்
கலவரம் விழியிலே
தினசரி புதுப்புது
அனுபவம் எதிரிலே

உலகமே...........


என்று சங்கர் மகாதேவன் அவ்வரியை முடிக்கும் போது, அல்கா யக்னிக்

'உன்னால் இன்று
புதியதாய்'

அவருடன் சேரும் போது, கேட்கும் நமக்கு ஓர் ஆனந்த மயக்கமே ஏற்படுகிறது.

'உணர்கிறேன்'

என்று சங்கர் மீண்டும் பாட

உற்சாகத்தை
முழுவதாய்

என்று அல்கா யக்னிக் மீண்டும் சேர, அற்புதம் தான்...

என் வானத்தில்
சில மாற்றங்கள்

வெண்மேகத்தில்
உன் உருவங்கள்

என் காற்றிலே
உன் சுவாசங்கள்
நான் பறந்து போகிறேனே


நான் கேட்கும் போது பறந்து தான் போனேன்.

நாட்கள் பலவாகி விட்டன. இது போன்ற உற்சாகமான, காதல் பாடலைக் கேட்டு. ஜி.வி.பிரகாஷிற்கு மிக்க நன்றி. சங்கருக்கு அவ்வப்போது இது போன்ற நல்ல பாடல்கள் கிடைப்பதில் எனக்கு மகிழ்ச்சி.



3. உன் பார்வையில் ஓராயிரம்

படம்: காதல்
பாடியவர் : சித்ரா, பெயரிலி
இசை: இளையராஜா

சமீபத்தில் கல்லூரி படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. சிற்சில இடங்களில் உள்ள குறைகளை நீக்கி விட்டுப் பார்த்தால் இது ஓர் அற்புதமான படம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைத்து ஆண்களும் கூறுவது போல், தமன்னாவின் பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தினை அனைவரும் பார்த்திருப்பீர்கள். ஆதலால் இப்பாடல் வரும் இடத்தினை விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை. பஸ் நிறுத்தத்தில் இப்பாடல் ஒலிக்குமிடமும் (சித்ரா), மீண்டும் மேடையில் பாட வாய்ப்பு கிடைக்கும் போது நாயகி இப்பாடலை உருகி பாடுமிடமும் (வேறொரு பாடகி) அற்புதம்.

அது வரை சாதாரண படமாக இருந்தப் படம், இப்பாடலில் இடம்பெற்ற காட்சி வந்த போது எங்கோ போய் விட்டது. இப்பாடலை பல முறை கேட்டு ரசித்திருக்கிறேன். இப்பாடலுக்கு பாலாஜி சக்திவேலு ஓர் பெரிய இடம் கொடுத்து தூக்கி வைத்திருக்கிறார் என்பது என் கருத்து. இப்படத்தினைப் பார்த்து விட்டு, இப்பாடலை பல முறை கேட்டிருக்கிறேன். என்னவொரு அற்புதமான பாடல்! இதனை மீண்டும் உணரவைத்த பாலாஜி சக்திவேலுக்கு மிக்க நன்றி.

ராஜா சாரின் மேல் எனக்கு நாளுக்கு நாள் மரியாதை உயர்ந்து கொண்டே போகிறது. இன்னும் சுருங்க கூற வேண்டுமானால், ராஜா சாரின் இசை வெறியனாக மாறிக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறலாம்.




அசல்:




4. காலம் மழைக்கால மேகம்

படம்: விடிஞ்சா கல்யாணம்
பாடியவர்: இளையராஜா
இசை: இளையராஜா

நானும் நண்பர் ஒருவரும் இசை சம்பந்தமாக பல நிரலிகளையும், மின்னஞ்சல்களையும் பரிமாறிக் கொள்வது வழக்கம். அப்படி அவர் அனுப்பிய ஓர் பாடல் தான் விடிஞ்சா கல்யாணம் படத்தில் இடம் பெற்ற 'காலம் மழைக்கால மேகம்' என்ற பாடல். இப்பாடலை பல வருடங்களுக்கு முன்பாக ஒரிரு முறை கேட்ட ஞாபகம். ஆரம்பத்தில் மிக சாதாரண பாடல் போல் தான் எனக்குத் தோன்றியது. ஆனால் பாதி பாடல் சென்ற பிறகு தான் இது ஒரு அற்புதமான பாடல் என்று தெரிந்து கொண்டேன்.

என்ன ஒரு அருமையான இசை! அதனை விட என்ன அழகாக, அருமையாக, உணர்வு பூர்வமாக பாடியிருக்கிறார். ராஜா சாரைத் தவிர இப்படி ஓர் இசையினை இதற்கு யாரும் தந்திருக்க முடியாது. அவரை விடவும் அற்புமாக யாரும் இப்பாடலை பாடியிருக்க முடியாது.

ஆரம்பத்தில் வரும் ஓர் சோகமான வயலினிசையும், அதனைத் தொடர்ந்து வரும் புல்லாங்குழல் இசையும் மிக, மிக அற்புதம். இசையினைத் தாண்டி வழக்கம் போல் தனது தபேலா இசையுடன், ராஜா சார் குரலில் உருக்கத்துடன்

காலம் மழைக் காலம் தானோ
காற்று புயலானதோ

நேசம் குறையாமல் வாழும்
நெஞ்சம் போராடுதோ

கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை
கலைந்து போக கண்ணீரில் மிதிக்கும்


அற்புதமாக பாடியிருக்கிறார். என்னவொரு அற்புதமான ராகம்.

அதனை விடமும், முதலாம் மற்றும் இரண்டாம் சரணத்தில் வரும் அனைத்து வரிகளின் ராகமும் மிக, மிக அற்புதம். வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

1:58-ல்


'ஒரு நூலில் மாலை போலே
உருவான பூக்களே

இதழ் இதழ் வாடி இன்று
சருகாகிப் போனதே

நாயகன் நாயகி
அன்றில்கள் போல்
வாழ்ந்ததோர் வாழ்க்கை தான்
கானல் நீர் போல்
தேவன் தேவி
காதல் மேவி
வாழ்ந்த நாட்கள்
கனவாகிப் போனதே'


அது முதல் எத்தனை முறை இப்பாடலை கேட்டிருக்கிறேன். இது வரை சலிக்கவில்லை. இது போன்ற காட்சி அமைப்பிற்கு, தமிழில், ஏன் உலகிலேயே இது போல இசையமைக்க இளையராஜா சாரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பது எனது கருத்து. எனது உயிர்விடுவதற்கு முன்பாக ஒரு முறையாவது அவரை சந்தித்து விட வேண்டும் என்று ஆவலுடன் உள்ளேன்.

கமலஹாசன் ஒவ்வொரு முறையும், ராஜா சாரை புகழ்ந்து பேசும் போதெல்லாம் அவரின் வார்த்தைகளின் ஆழம் எனக்குப் புரிந்ததில்லை. ஒரு முறை, கமலஹாசன், இளையராஜாவினைப் பற்றி

'இதெல்லாம் இவருக்கு பத்தாது அப்படின்றது என்னோட கருத்து', என்று குறிப்பிட்டார்.

இப்போது உணரமுடிகிறது, அதன் அர்த்தத்தை. இது போல் எத்தனை அற்புதமான பாடல்களைத் தவற விட்டிருக்கிறேன் என்று தெரியவில்லை. ராஜா ராஜா தான்!

http://www.youtube.com/watch?v=D3qXszcwTLg

5. Let it out - Kleenex

பேண்ட்: Starrfadu

ஆங்கிலத்தில் எனக்குப் பிடித்த பாடல்கள் பல இருக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் இங்கு பட்டியலிட விரும்பாததற்கு காரணம் - பலருக்கு இங்கே அது பிடிக்காதோ என்ற ஐயமே காரணம்.

சென்ற மாதம், தொலைக்காட்சியில் ஏதோ ஓர் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையில் ஓர் விளம்பரத்தை ஒலிபரப்பினார்கள். அற்புதமான விளம்பரம். அந்த இசை என்னை மிகவும் கவர்ந்திழுந்த காரணத்தினால் விளம்பரதாரரின் பெயரினைக் குறித்து வைத்துக் கொண்டேன். சாலையில் செல்வோரை அழைத்து அவர்களுடன் உரையாடி அவர்களின் உணர்வுகளை அழுகையாக வரவழைக்கும் விதமாக அவ்விளம்பரம் அமைந்திருந்தது. அதன் விளம்பரதாரர்: கிளீனக்ஸ் (Kleenex). நாப்கின்கள் தயாரிக்கும் நிறுவனம்.

இப்பாடலை இயற்றியது, 'Starrfadu' என்ற Inde குழுவினர் தான். அவர்களின் பாடலை மிகச் சிறப்பாக இவ்விளம்பரத்திற்காக உயபோகப்படுத்தியிருக்கிறார்கள்.



பாடல் மிக அற்புதம். வரிகளும், இசையும் கூட. அது முதல் மனது பாரமாக உணரும் நேரங்களிலும், சோர்வடைந்திருக்கும் நேரங்களிலும் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று(விளம்பரத்துடன்). இதனைப் பார்க்கும் போது, எனது கவலையும் தீர்வது போல் உணர்கிறேன்.

பாடல்:



அமேஸானின் (எம்.பி3)யும், YouTube-ம் இருப்பது மிகவும் வசதி. சிறந்த பாடல்களின் பட்டியலை அமேஸானில் பார்த்து விட்டு, YouTube-ல் அது எவ்வாறு இருக்கிறது என்று பார்த்து விட்டு, Amazon-ல் MP3 வடிவத்தில் வாங்குவது மிக வசதி. இரு நிறுவனத்தாருக்கும் நன்றி.

ஸ்ருசல்