செவ்வாய், ஏப்ரல் 10, 2007

சிவாஜி பாடல்கள் மதிப்பீடு

1. வாஜி வாஜி
பாடியவர்கள்: ஹரிஹரன், மதுஸ்ரீ

சிவாஜி பாடல்கள் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்பாக இணையத்தில் கிடைத்த மூன்று பாடல்களில் ஒன்று; இப்படத்தில் நான் முதன் முதலாக கேட்ட பாடலும் இதே. பாடலை முதன் முதலாக கேட்ட போது உண்மையிலேயே இது 'சிவாஜி' படப் பாடல் தானா என்று எனக்கு ஒரு சந்தேகம். ஆனால் வைரமுத்து எழுதிய 'வாஜி வாஜி சிவாஜி வரிகள்', கண்டிப்பாக இது சிவாஜி பாடல் தான் என்று உறுதி செய்ததால் ஒரு நிமிடத்திலேயே அடுத்த பாடலுக்கு தாவினேன். ஆனால் பொறுமையாக ஒவ்வொரு பாடலாக கேட்ட போது இப்பாடலில் இரண்டு இடங்கள் எனக்கு பிடித்தது. ஒன்று 00:30 - 00:49 வரை வரும் 'இம்க்கும் இம்க்கும் இம்க்கும் இம்க்கும் ஆம்பல் ஆம்பல்' என்ற குழுவினரின் குரல். அதுவும் ஒவ்வொரு வார்த்தையும் இடம், வலம் என மாறி மாறி வருவது இனிமை. பொதுவாக பிளாசேயின் குரல் எனக்கு எரிச்சலை ஏற்படுத்துவதுண்டு. அபூர்வமாக இப்பாடலில் ஹரிஹரன், மதுஸ்ரீ குரலை விட பிளாசேயின் குரல் கவர்ந்தது. 2:14, 4:30-ல் 'திரிகிடாதா' என்று இடையில் அவர் ஓசையிடம் இடம் அழகு. பாடலில் நிறை என்று சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை. சாதாரண, பழைய கால இசையும், மதுஸ்ரீயின் பொருத்தமற்ற குரலும், (1:36-ல் 'வ்வாஜி வ்வாஜி' என்று உச்சரிக்கும் இடம், ரஜினியை சாணியிடச் சொல்லும் இடம்) குறைகள். ஆனால் மூன்று வாரங்கள் கேட்ட பிறகும் இன்னும் சலிக்கவில்லை.

2. சஹானா
பாடியவர்கள்: உதித் நாராயணன், சின்மயி

படத்தின் சிறந்த பாடல் இது தான் என்று நினைத்திருந்தேன்; இன்னொரு சஹானா பாடலைக் கேட்கும் வரையில். ஆனால் இப்பாடலிலிருந்து தான் அப்பாடல் பிறந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து. ஆகையினால் இப்பாடலுக்குத் தான் எனது ஓட்டு. முதன் முறையாக ஒரு தமிழ் பாடலை உதித் நாராயணன் மிகவும் சிரமப்பட்டு பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன். வழக்கமாக 'ஸாரல் த்தூவ்வுதோ' என்று பாடியிருக்கக்கூடியவர் இதில் சிறிது தெளிவாக பாடியிருக்கிறார். ஆனாலும் சில இடங்களில் அவரால் அவரையே கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தெரிகிறது. இப்பாடலுக்கு சின்மயியின் குரல் மிகவும் அழகு. இப்பாடலை முதன் முதலாக கேட்ட பொழுது, பெண் குரல் யாருடையது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சிறிது நேரம் யோசித்த பிறகு, 'உனக்கு 18 எனக்கு 20' படப் பாடலான 'அந்த சாலையில் போகின்றான்' என்ற பாடலை ஒத்திருந்தது தெரிந்த பின் தான் சின்மயி என்று அடையாளம் தெரிந்தது. அது சின்மயியின் குரலா என்று சின்மயினிடமே கேட்டேன்; பதில் இல்லை. பல்லவி முடிந்ததும் வரும் கிடார் இசையும், அதனைத் தொடர்ந்து ரகுமான், 'தீம் தர தன தீம் தர தன' எனப் பாடுவதும் அற்புதம். 3:19-ல் 'வானுக்கும் நடக்கட்டுமா... ஹோ... ஓராயிரம் ஆண்டுள் சேமித்த காதலிது...' என்று உதித் பாடுவதும், அதே வரியை சின்மயி திரும்ப வேறொரு ராகத்தில்(?. இதன் பெயர் ராகமா?) பாடுவதும் அழகு.

சஹானா, சிவாஜியின் ராணி. (சன் டிவியில் கேட்டது போல் இருக்கிறதா?)

3. ஒரு கூடை சன்லைட்
பாடியவர்கள்: ராக்ஸ், பிளாசே, தன்வி

படத்திலேயே மிக வித்தியாசமான, இந்தியத் திரைப்படத்திற்கு மிகவும் புது வகையான பாடல். பல முறை கேட்டும் பாடல் வரிகள் புரியவில்லை; மற்றவர்கள் பாடல் வரிகளை அனுப்பிய பிறகு தான் தெரிந்தது. 'அப்பத்த பிச்சை கருப்பே. இப்ப நான் செக்க சிவப்பே' என்று. சில ஆண்டுகளுக்கு முன்பு முக்காபுலாவும், சிக்குபுக்கும் இது போல தானிருந்தன. இன்னும் சிறிது நாட்கள் இப்பாடல் பேசப்படும் என்பது நிச்சயம். ஆனால் பாடல் நன்றாக இருக்கிறதா? என்னால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. பாடலை வேறு யாராவது பாடியிருக்கலாம். வரிகள் இன்னும் தெளிவாக உச்சரிக்கப்பட்டிருக்கலாம். வரிகள் புரியக்கூடாது என்பது தான் எண்ணம் என்றால் தமிழ் எதற்கு?

4. பல்லேலக்கா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ரஜினிக்கு படத்தின் அறிமுக பாடல் என்று நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா? முதலில் கேட்ட போது, என்ன இது சந்திரமுகியின் 'அரே அரே' பாடலின் இரண்டாம் பதிப்போ என்று தோன்றியது. ஆனால் பல முறை கேட்ட பிறகு பிடித்துப் போனது. 'பாபா' படத்தில் சங்கர் மகாதேவன் பாடிய பாடலில் செய்த தவறை ரகுமான் மீண்டும் செய்ய மாட்டார் என்று அசாத்திய நம்பிக்கை வீண் போகவில்லை. எதிர்பார்த்தது போலவே எஸ்.பி.பியை பாடச் செய்திருந்தார். எஸ்.பி.பி வழக்கம் போல் மிகச் சிறப்பாக பாடியிருக்கார். 'பல்லேலக்கா... சேலத்துக்கா மதுரைக்கா...' இடங்களும், '...கூரையின் ஓட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணிப்பாருலே' என்ற இடத்தில் 'லே' என்று எஸ்.பி.பி அழுத்தம் கொடுப்பது அழகு. இப்பாடல் வெற்றி பெறத்தவறி விடும் என்ற கணிப்பு சில நாட்களிலேயே பொய்த்துப் போனது. பாடலில் ரெஹானா பாடும் 'ஆலமரத்திற்கு ஜடையை பின்னி தான்...' என்ற வரிகளை வேறு யாராவது பாடியிருக்கலாம்.

5. சஹாரா
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், கோமதி ஸ்ரீ

விஜய் ஜேசுதாஸின் குரல் பரவாயில்லை. 'மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவாய்' என்று கோமதி ஸ்ரீ பாடும் திருப்பாவை அற்புதம்! என்னவொரு அற்புதமான படைப்பு. ராகம் அமைத்த விதமும், கோமதி ஸ்ரீயின் குரலும் மிகச் சிறப்பு. இப்பாடலைத் தொடர்ந்து ஒரே நாளில் பல பத்து முறைகள் கேட்டிருக்கிறேன்; கோமதி ஸ்ரீ பாடிய திருப்பாவைக்காக. சிறப்பு திருப்பாவையிலா; அல்லது அதனை கல்நெஞ்சம் படைத்தவரும் கரையும் விதமாக பாடிய கோமதி ஸ்ரீயின் குரலிலா அல்லது அத்திருப்பாவைக்கு ரகுமான் கொடுத்த அற்புதமான ராகத்திலா என்று தெரியவில்லை. இப்பாடலை கேட்ட பிறகு, ராகா.காம்-ல் சுதா ரகுநாதன், டி.கே.பட்டம்மாள் இன்னும் பிறர் பாடிய இதே 'மாலே மணிவண்ணா' கேட்டேன். உண்மையை சொல்வதென்றால் இப்பாடலில் உள்ள அழுத்தம் அப்பாடல்களில் இல்லை. இப்பாடலின் (திருப்பாவை) வரிகள் சோகம் நிறைந்தவை அல்ல. ஆனால் அதற்கு இது போல சோக வடிவம் கொடுத்தது தான் இப்பாடலுக்கு அழகு சேர்த்தது என்று கூறுவேன். சுதா ரகுநாதனும் இன்ன பிற பாடகர்களும் (இப்பாடலின் பிற வடிவங்களைப் பாடியவர்கள்), இப்பாடலை கேட்ட பிறகு, இது போல் ஏன் நமக்கு தோன்றாமல் போய்விட்டது என்று நினைத்திருப்பார்கள் என்பது என் கருத்து. இன்னுமொரு 'குனித்த புருவமும்' (தளபதி). இல்லை; அதனை விட சிறப்பு வாய்ந்தது இது என்று கூறுவேன். எங்கள் ஊருக்கு, இன்னுமொரு திருப்பாவை பாடலின் வழி சிறப்பு. ஏற்கனவே 'ஹே ராம்' திரைப்படத்தில் ஓர் திருப்பாவை பாடல் இடம்பெற்றிருந்தது.

ரகுமான் (மே, 28-ம் தேதி, ரெடிஃப் தளத்தில்) தனது பேட்டியில் கோமதிஸ்ரீயைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மோமதிஸ்ரீ, ரகுமானின் குரு தக்ஷ்ணாமூர்த்தி சுவாமிகளின் மகள் ஆவார்.


"Gomathishree, daughter of Rahman's guru Dakhshinamurthi Swamigal"

"Gomathi is not just a film singer but she has an interesting voice," says Rahman. "I have plans to compose a few songs for her for a non-film album I want to produce"

6. அதிரடி தான்
பாடியவர்கள்: ரகுமான், சயோனரா

'லப்போ லப்போ' என்று பாடலின் ஆரம்பத்திலிருந்து ஒரே அதிரடி தான். சிறந்த பாடல் அல்ல; ஆனால் நல்ல பாடல். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரகுமான் அதிரடி காதல் பாடலை பாடியிருக்கிறார். 'ஹம்மா.. ஹம்மா', 'ஹலோ டாக்டர்' பாடல்களுக்குப் பிறகு. முதல் சரணத்திற்கு முன்பு வரும் கிடார் இசை அழகு. 2:30 'கண்கள் என் ??? ராஜர் மூர் போல்... ' என்று பாடுமிடத்தில் ரகுமானின் குரல் அற்புதம்.


7. இதனைத் தவிர ஒரு தீம் மியூசிக்கும் இந்த இசை ஆல்பத்தில் உண்டு. ஆனால் அதனைப் பற்றி எழுதும் அளவிற்கு அதில் ஒன்றுமில்லை.

மொத்தத்தில், சிவாஜி ரகுமானின் வழக்கமான ஆல்பம் அல்ல. ரஜினிக்காக நிறைய விட்டுக்கொடுத்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் 'பாபா' போல கவனக்குறைவாகவும் இசையமைக்கப்பட்டது போல் தோன்றவில்லை. சங்கரும், ரஜினிக்காக மிகவும் விட்டுக்கொடுத்திருக்கிறது போல் தோன்றுகிறது. சங்கர், 'பல்லேலக்கா', 'வாஜி வாஜி' வகை பாடல்களை ஒப்புக்கொள்பவர் அல்ல என்பது என் கருத்து. ஆனால் பாடல்களில் பழைய, புதிய, கேட்டிராத வகை என அனைத்து வகை இசையும், குரலும் உண்டு. இது ஒரு 'இந்தியன்' போன்ற சிறப்பான படைப்பு என்று கூற முடியாவிட்டலும் இந்தியன் போல் வெற்றி பெற வாய்ப்புகள் மிக அதிகம்.

ஸ்ருசல்

திங்கள், ஏப்ரல் 02, 2007

அத்திப் பூத்தாற் போல்

இந்தத் தலைப்பில், தற்போதுள்ள நிலையில் பல விசயங்கள் எழுதலாம். நான் இப்போது வலைப்பதிவதே அத்திப் பூத்தது போலாகி விட்டது. பல வருடங்களாக பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து விலகி, புது இடத்திற்கு மாறி வந்தது இதற்கு தலையாயக் காரணம். பழைய நிறுவனத்தில் பல வருடங்களாக இருந்ததால் அலுவலகத்திலேயே வலைப்பதிவது வழக்கம். பெரும்பாலும் வார இறுதி நாட்களில், அலுவலகத்தில் அதிகமாக ஊழியர்கள் நடமாட்டமில்லாத நேரத்தில், யாருடைய தொந்தரவுமில்லாமல் இருக்கும் நேரத்தில் பதிவது உண்டு. ஆனால் இப்போது நிலைமையே மாறி விட்டது. இந்தியாவில், இந்திய கிரிக்கெட் அணிக்கு உண்டான கதி தான் எனது நிலைமையும்.

இன்னும் சில மாதங்களுக்கு அல்லது இனி எப்போதுமே அதற்கு வாய்ப்பில்லை. வீட்டில் மடிக்கணினியை வைத்துக் கொண்டு எழுதுவதும் கடினமாக உள்ளது. டெஸ்க்டாப்பில், அதுவும் அலுவலகக் கணியில், டைப் செய்வது போல் ஒரு சுகம் எதுவுமில்லை. நான் எழுதாவிடில் நாட்டில் என்ன குடியா மூழ்கிவிடப்போகிறது என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது. ஆனாலும் கலைஞன் விரும்பினாலும் விரும்பாவிடிலும் திருட்டு வி.சி.டியில் படம் பார்த்தாவது விமர்சனம் எழுதும் விமர்சகர் போல், நாட்டு நடப்பைப் பற்றி எனது எண்ணக் குப்பைகளைக் கொட்ட வேண்டாமா?

கடந்த இரண்டு மாதங்களில் முக்கியமான நிகழ்வுகள் என்று பெரிதாக (என்னைப் பொறுத்தவரையில்) நடந்து விடவில்லை.

ஆனாலும் புலிகள் தொடுத்த வான் வழித் தாக்குதல் முக்கியமானது. அதனைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதனை அறிய ஆவலோடு இருந்தேன். வழக்கம் போல் பட்ஷே, முஷாரப் 'இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து தீவிரவாதத்தை ஒழிக்கப் பாடுபடவேண்டும்' என்று கூறுவது போல் ஒரு வில்லங்கமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அபூர்வமாக, இந்திய வெளியுறவுத்துறை செயலர், '..இந்த தாக்குதல் இலங்கையில் நடந்து வரும் பயங்கரவாதத்தின் ஒரு பகுதி மட்டுமே. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக சொந்த நாட்டிலேயே இருப்பது வருத்தமடையச் செய்கிறது. ...', என்பது போல் கூறியுள்ளார். இது ஆச்சர்யமடைய வைக்கிறது.

இதில் ஒரு சில தமிழ் நாளிதழ்கள் எப்போதுமே இலங்கைக்கு ஆதரவாக எழுதி வருவது ஏனென்று தெரியவில்லை. இலங்கை ராணுவம், தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் செய்தியை இருட்டடிப்பு செய்தும், புலிகள், ராணுவத்தினரைத் தாக்கினால் ஏதோ அணுகுண்டு வீசியதைப் போலவும் அச்சேற்றுவது ஏனோ? சென்ற வாரம் தினமலரில், 'இலங்கையில் இரண்டாவது நாளாக புலிகள் அதிரடி. ராணுவ வீரர்கள் உட்பட ஏழு பேர் பரிதாப பலி' என்று செய்தி வெளியாகியிருந்தது. இவர்கள் கூறுவது, ஏதோ இலங்கை ராணுவம் தாக்கினால் தமிழ் மக்கள் எல்லாம் சந்தோஷமாக சாவது போல் இருக்கிறது. புலிகளை எதிர்க்கிறேன் பேர்வழி என்று, ஒட்டுமொத்த தமிழ்மக்களையும் சவக்கிடங்கிற்கு அனுப்பிவிடுவார்கள் போல! அதிலும் சில பத்திரிக்கையாளர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். புலி என்றாலே அவர்களுக்கு வயிற்றில் பற்றிக் கொண்டு வருகிறது. 'பத்மநாபா கொலையில் இருந்தே .......' என்று ஆரம்பித்து விடுவார்கள். கேட்டால் நாங்கள் தமிழர்களுக்கு எதிரியில்லை; புலிகளுக்கு தான் என்று கூறுவர். புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்று மட்டும் கூறுபவர்கள், தமிழ் மக்களுக்கு என்ன வழி என்று மட்டும் கூற மாட்டர். புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், 'எங்களது ஆதரவு புலிகளுக்கல்ல; ஈழத்தமிழர்களுக்குத் தான்' என்று கூறிக்கொள்கிறார்கள். என்ன தான் முடிவோ?

****

இந்திய அணி வெளியேறியது. நல்லவேளை இன்னும் நான்கு போட்டிகள் ஆடிய பிறகு வெளியேறி மக்களின் நேரத்தை வீணாக்கவில்லை. அது சரி... அனைத்து மக்களும் ஏதோ ராக்கெட் (நக்ஸலைட் ரவி ராக்கெட் அல்ல) தயாரித்துக் கொண்டிருந்தது போலவும் இவர்கள் அவர்களது நேரத்தை வீணாக்கியது போலவும் கூறுவது சிறிது அதிகம் தான். ஆனாலும் சிலர் இருக்கத் தான் செய்கின்றனர். இங்கிருந்து இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் பார்க்கப்போகிறேன் என்று சில மாதங்களுக்கு முன்பே வெஸ்ட் இண்டீஸ் விசாவிற்கு அலைந்து விமான டிக்கெட், போட்டிக்கான டிக்கெட் (?) எல்லாம் எடுத்து வைத்து கோழி போல காத்திருந்த சிலருக்கு அடி. முக்கியமாக எனது மேலாளருக்கு :) இத்தனை ஆண்டுகளாய் எப்படியும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எப்படியாவது சின்ன சின்ன அணிகளை லீக் போட்டிளில் வென்று சூப்பர் 6, சூப்பர் 8 என்று முன்னேறி விடும். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 6/8 போட்டி, அதன் பிறகு காலிறிதி அல்லது அரையிறுதியில் ஆட வைப்பதன் மூலம் பலத்த வருவாயை ஈட்டி வந்தனர், கிரிக்கெட் வாரியத்தினர். அந்த கனவிற்கு வந்த பேரிடி. இதனால் அடுத்து வரும் தொடர்களில் 'லீக்' போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடம்பெறுவது அவர்களின் வருமானத்திற்கு மிக அவசியம். செப்டம்பரில் தெனாப்பிரிக்காவில் நடக்க போகும் 20-20 தொடரில் இந்தியா-பாகிஸ்தான்-ஸ்காட்லாந்து அணிகள் ஒரே பிரிவில் சேர்க்கப்படிருப்பது இதனால் தானோ? ரிச்சர்ட்ஸ் இப்போது இந்திய பயிற்ச்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணி முன்னேற வேண்டும் என்ற பலரின் ஆவல் எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. 'ரிச்சர்ட்ஸை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு. இலங்கை முன்னாள் பயிற்சியாளர் 'வாட் மோர்' இந்தியப் பயிற்சியாளராக வர விருப்பம் தெரிவித்திருந்தார். கங்குலி தனக்கு சேப்பல் தான் வேண்டும் என்று கேட்டு வாங்கினார். கங்குலிக்கு நடந்ததும், சேப்பலுக்கு நடந்ததும் அனைவருக்கும் தெரியும். பதவி விட்டுப் போன கடுப்பில் இந்திய அணியை வதைப்பதே வாட் மோருக்கு வேலையாகி விட்டது. 1996-ம் ஆண்டிலும் இதே போல் தான் இந்திய அணியை இலங்கை அணியை விட்டு பழி வாங்கினார். அப்போதும் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வர விண்ணப்பித்திருந்தார் என்று கேள்வி பட்டிருக்கிறேன்.

சிவாஜி படத்தின் பாடல்கள் கேட்டேன். (ஆமா இவர் மட்டும் தான் பெரிசா கேட்டுட்டாராம்!) இரண்டைத் தவிர மற்றவை சுமார் ரகம் தான். ரகுமான் நல்ல பாடல்கள் (ஒட்டு மொத்தமாக ஒரு படத்தில்) கொடுப்பது அத்திப்பூத்தாற் போல் ஆகிவிட்டது. சிவாஜி பாடல்கள் பற்றி அடுத்தப் பதிவில்...'நல்லா இல்லைன்னு சொல்லுற பின்ன ஏன் விமர்சனம்' எழுதற என்று கேட்க கூடாது. இந்திய அணி தோற்றுவிட்டது என்று தெரிந்த பிறகு எல்லோரும் கிரிக்கெட் பற்றி பேசுவதை விற்று விட்டார்களா என்ன?

குறிப்பு: அன்பர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். புதிய பிளாக்கருக்கு மாறிய பிறகு, தமிழ்மணத்தின் டூல்பார் தெரிவதில்லை. இதனை சரிசெய்ய யாராவது சுட்டி அளித்தால் நன்றாக இருக்கும்.

ஸ்ருசல்