ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிகள் வட அமெரிக்காவில் ஆரம்பிக்கவிருக்கின்றன என தெரிந்தது முதல், நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய ஆயத்தமாயிருந்தேன். சென்ற சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு இசை நிகழ்ச்சி. ஒரு மாதத்திற்கு முன்பாகவே விமானத்தில் முன் பதிவு செய்திருந்தேன். வெள்ளிக்கிழமை மாலை 6.25 மணிக்கு விமானம். 5.00 மணிக்கு தான் அலுவலகத்திலிருந்து கிளம்ப முடிந்தது. சரி 15, 20 நிமிடங்களில் விமான நிலையம் சென்று சேர்ந்து விடலாம் என்று நினைத்தேன். போதாத நேரம். செல்லும் வழியெங்கும் சாலை நெரிசல். 6.05 மணிக்கு தான் சென்று சேர முடிந்தது. சில நேரங்களில் வெப் செக்-இன் செய்யும் வழக்கமுண்டு.ஆனால் அன்று ஏனோ செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை.
விமானத்தை தவற விட்டால் என்னாகும்? அடுத்த விமானம் இருக்குமா? இருந்தாலும் அதில் இடம் காலியாக இருக்குமா? வெள்ளிக்கிழமை வேறு! ஒரு மாத காலமாக காத்திருந்து, காத்திருந்து செல்லும் நிகழ்ச்சி. கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. 6.05 மணிக்கு விமான நிலையத்தை அடைந்ததும். வேகமாக செக்-இன் செய்யுமிடத்திற்கு ஓடினேன்; ஏதோ குருட்டு நம்பிக்கையில் (விமானம் தாமதமாகியிருக்கலாம்). அனைத்தும் முடிந்து விட்டதென்றும், தன்னால் எதுவும் செய்ய இயலாதென்றும் விமான நிறுவன ஊழியர், எதிர்பார்த்தது போலவே, கூறினார். அடுத்த விமானத்திற்கு மாற்றி தருவதாக கூறினார். அடுத்த விமானம் இரவு 9 மணி. சரி, நமக்கு நிகழ்ச்சிக்கு முன்பாக சென்று சேர்ந்தால் போதுமென்று, சரியென்று வேகமாக தலையை ஆட்டினேன். நண்பருக்கு நிகழ்வுகளை தெரிவித்துவிட்டு சில புத்தகங்களை வாங்கி நேரத்தை ஓட்டினேன். கடைசி நேரத்தில் மாற்றி கொடுக்கப்பட்ட டிக்கெட் என்பதால் இருக்கை எண் கொடுக்கப்படவில்லை. போர்டிங்கிற்கு செல்ல சீட்டை நீட்டிய போது, அருகில் இன்னுமொரு முறை சரிபார்த்து போர்டிங் பாஸ் வாங்கி வருமாறு பணிக்கப்பட்டேன். இருக்கை விருப்பம் என்னவென்று ஊழியர் கேட்டார். ஐல் என்று கூறினேன். ஜன்னல் ஓரம் மட்டுமே இருப்பதாக கூறினார். 'பின்ன எதுக்குய்யா விருப்பம் என்னன்னு கேக்குறீங்க', என்று நினைத்து, 'பரவாயில்லை' என்று கூறினேன். 'ஆனால் அது முதல் வகுப்பு பரவாயில்லையா', என்று கூறி சீட்டை நீட்டினார். 'கைப்புள்ள நமக்கு ஏதோ நேரம் ஒர்க் அவுட ஆகுதுடா', என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன்.
இரவு 1 மணிக்கு தான் கடைசியாக வீட்டிற்கு செல்ல முடிந்தது.
மறுநாள் இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி. 12 மணியளவில் எழுந்து, திருப்பதி பீமாஸ் சென்று மதிய சாப்பாட்டை போதும் போதுமென்ற அளவிற்கு கட்டிவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்தோம்மாலல 6.30 மணிக்கு வீட்டிலிருந்து ஆரம்பித்து, 7 மணியளவில் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு சென்று சேர்ந்தோம். (ஆரக்கிள் அரீனா, ஓக்லாண்ட்). இணையத்தில் எடுத்த முன்பதிவு சீட்டினை கொடுத்து, டிக்கெட் பெறும்போது இரவு 8 மணியாகியிருந்தது. வி.வி.ஐ.பி டிக்கெட் எடுத்திருந்தேன். ஆவலுடன் இருக்கை எண்ணை பார்த்தேன். நான்காவது வரிசை என்றிருந்தது. 'ஆஹா.. எப்படியோ முன்னாடி இடம் பிடிச்சாச்சு', என்று மகிழ்ந்து உள்ளே நுழைந்தேன். நேராக முன்வரிசைக்கு செல்ல முயன்ற போது, அரங்க ஊழியர் வலது பக்கமிருந்த வரிசைக்கு செல்லுமாறு காட்டினார். என்னுடையது வி.வி.ஐ.பி என்று சொன்ன போது, அது தான் வி.வி.ஐ.பி வரிசை என்றார். ஏதோ அரங்கிற்கு சம்பந்தமே இல்லாத ஓர் இடத்தை காட்டி அது தான் வி.வி.ஐ.பி என்று சொன்ன போது எரிச்சலாக வந்தது. மேடைக்கு முன்பாக இருந்த வரிசைகள், விளம்பரதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டதாம். இது என்ன கிரிக்கெட் மாட்சா? பெவிலியன் முழுவதும் விளம்பதரதாரர்களுக்கும், கிரிக்கெட் போர்டின் குடும்பத்தாருக்கும் ஒதுக்குவதற்கு? என்ன கொடுமை சரவணன்!
8.20 மணிக்கு அரங்கம் பாதிக்கும் மேல் நிரம்பியிருந்தது. அவ்வளவு தான் கூட்டமா என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையிலேயே, சித்ரா, 'ஜா ஹே' என்று குரு படத்தின் பாடலுடன் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். சில நிமிடங்களில், ரகுமான் அப்பாடலின் தனது பகுதியை பாடியவாறு மேடையில் தோன்றினார். ஒரே ஆரவாரம்! முன்பெல்லாம், 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாடலுன் ரகுமான் இசை நிகழ்ச்சிகள் துவங்குவது வழக்கம். அதற்கு எஸ்.பி. பாலசுப்ரணியம் இருக்க வேண்டும். பின்னர், சில நிகழ்ச்சிகள், ஆய்த எழுத்து படத்தின் 'ஃபனா' பாடலுடன் துவக்கப்பட்டன. இம்முறையும் அப்பாடலுடன் தான் துவங்குமென்று நினைத்திருந்தேன். மாறாக, 'ஜா ஹே' பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். தமிழில் பாடியிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். இப்பாடலைப் பற்றி விரிவாக சென்ற பதிவில் எழுதியிருந்தேன்.
அடுத்ததாக, சுக்விந்தர் சிங், நீத்தி, தாளம் (இந்தி) படத்திலிருந்து பாடலை பாட ஆரம்பித்தார்கள். கீழ்கண்ட படத்திலிருந்து பாடல்கள் பாடப்பட்டன.
1. ஜா ஹே (குரு) - சித்ரா, ஏ.ஆர்.ரகுமான்
2. மய்யா மய்யா - குரு - நித்தி
3. தேரே பினா - குரு - ஏ.ஆர்.ரகுமான்
4. ரூபாரூ - ரங் தே பசந்தி
5. பாத்சாலா - ரங் தே பசந்தி
6. ரங் தே பசந்தி - ரங் தே பசந்தி
7. அதிரடி - சிவாஜி
8. சஹானா - சிவாஜி
9. வா ஜி - சிவாஜி
10. சண்டை கோழி (இந்தி) - யுவா
11. ரம்தா யோகி - தாளம்
12. ஜன் ஜன் - வாட்டர்
13. சா ரீ கா மே - பாய்ஸ்
14. வெண்ணிலவே (இந்தி) - சப்னே
15. காதல் ரோஜாவே (இந்தி) - ரோஜா
16. பர்ஸோரே - குரு
17. த பாஸ் - சிவாஜி
18. பிரே ஃபார் மீ பிரதர்
19. கண்ணாளனே (இந்தி) - பம்பாய்
20. சையா சையா
21. தில் சே ரே - தில் சே
22. ஏய் ஹேரத்தே - குரு
23. வந்தே மாதரம்
24. கல்பலி ஹே - ரங் தே பசந்தி
25. ஹம்மா ஹம்மா
பாடகர்கள்:
சித்ரா
ஹரிஹரண்
சாதனா சர்கம்
மதுஸ்ரீ
நரேஷ்
விஜய் ஜேசுதாஸ்
சயோனரா
மற்றும் குழுவினரெல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாலாலாலாம் வந்திருந்தாங்க....
ஐந்து பாடல்களுக்கு பிறகு பார்த்தால், அரங்கம் 95% நிரம்பியிருந்தது. எப்படியும் 10,000 நபர்களுக்கு மேல் வந்திருப்பார்கள்.
இதன் தொடர்ச்சி அடுத்த பாகத்தில்....
1 கருத்து :
அதிரடிக்காரனை ஏ.ஆர் பாட அதை நேரில் பார்க்க ..
வயித்தெரிச்சலின் முழு அர்த்தத்தை முழுசா உணர முடிந்தது.
கருத்துரையிடுக