செவ்வாய், அக்டோபர் 11, 2005

ஏ.ஆர்.ரகுமானின் பெங்களூர் இசை நிகழ்ச்சி - பாகம் 1

நான் ஏ.ஆர்.ரகுமானின் ரசிகன் என்பதால், ஏ.ஆர்.ரகுமானைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள அனைத்தும் தனிமனித துதி என ஒதுக்கி விட வேண்டாம்.

இசை நிகழ்ச்சி சென்ற சனிக்கிழமை நடைபெற்றது. எங்கள் குழுவினர், இசை நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துடன் பணிபுரியுமாறுக் கேட்டுக் கொள்ளப்பட்டதால் (30 பேர்), வெள்ளிக் கிழமை அலுவலகத்திற்கு விடுப்பெடுத்து விட்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு காலை 9 மணிக்குச் சென்றோம். வீட்டில் இருந்து 8 மணிக்கு கிளம்பி 8.40 க்கு பேலஸ் கிரவுண்ட்ஸை அடைந்தேன்.

அங்கு முதலில் 3D கண்ணாடியில் விளம்பரதாரரின் சின்னம் ஒட்டும் பணியில் ஈடுபடுமாறு ஒரு 10 பேர் பணிக்கப்பட்டனர். மொத்தம் 20000 கண்ணாடிகள்.

நான், SIM card-கள் வாங்கி ஒரு ஹோட்டலுக்கு வந்திருந்த dancer-களுக்கு கொடுக்குமாறு பணிக்கப்பட்டேன். யாருமே முன்வரவில்லை. வேண்டா வெறுப்பாகச் சென்றேன். அது சுமார் 8 கி.மீட்டர் தள்ளி இருந்தது. நல்ல போக்குவரத்து நெரிசல். ஹோட்டலுக்கு சென்று எலிசெபத்தைச் சந்தித்தேன். தனியார் நிறுவனத்தைச் சார்ந்த ஒருவர், 30 நிமிடங்கள் கழித்து SIM card-ஐ கொண்டு வந்தார். அவரிடமிருந்து SIM card-களை வாங்கி எலிசெபத்திடம் கொடுத்து விட்டு, நிகழ்ச்சி அமைப்பினரைத் தொடர்பு கொண்டேன். விமான நிலையத்தில் ஒருவர் காத்திருப்பதாகவும் அவரிடம் இரண்டு SIM card களைச் சேர்க்குமாறும் பணிக்கப்பட்டேன். விமான நிலையம் சுமார், 20 கி.மீட்டர்கள் தள்ளி இருந்தது. எனக்கு வெறுத்தே விட்டது.

45 நிமிடங்களில் விமான நிலையத்தை அடைந்தேன்.

அங்கே SIM card-டை அந்த நபரிடம் சேர்ப்பித்த போது, ஏ.ஆர்.ரகுமானின் குடும்பத்தினர், மற்றும் குழுவினர் சென்னையிலிருந்து, அப்பொழுது தான் வந்தடைந்திருந்தனர். ரகுமானின் அம்மா, சகோதரிகள், ஸ்ரீதர் (சவுண்ட எஞ்சினியர்), சிவகுமார் (சவுண்ட எஞ்சினியர்), நோயல் (ரகுமான் மேனஜர்), நவீன் (புல்லாங்குழல்), ராஜா (டிரிக்கரிங்), கல்யாண் (வயலின்), பின்னணிக் குழுவினர் (சயனோரா, ஜார்ஜ், ...) அனைவரையும் பார்த்து, அவர்களைச் சரியான வாகனங்களில் ஏற்றி சேர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மற்றும் ஏ.ஆர்.ரகுமானின் மூன்று கீ-போர்டுகள், பெரிய பெரிய ஆப்பிள் கம்பியூட்டர்கள் அனைத்தையும் இன்னொரு தனி வாகனத்தில் (பேலஸ் கிரவுண்ட்ஸிற்கு) ஏற்றி அனுப்பிவிட்டு ஏ.ஆர்.ரகுமான் எப்போது வருகின்றார் எனக் கேட்டேன். அவர் 2.30 மணி விமானத்தில் வருவதாகத் தெரிவித்தார் நண்பர்(Event Management group). நான் உடனே திரும்ப வேண்டியதாக இருந்ததால், அங்கிருந்து அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், எங்கள் குழுவினரில் முதன் முதலாக அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த சந்தோசத்தில் மைதானத்திற்கு திரும்பினேன்.

சுமாராக மூன்று மணிக்கு, சிவமணி மட்டும் மைதானத்திற்கு வந்தார். நண்பர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அவருடைய உபகரணங்களை சரி செய்து விட்டு, உடனே கிளம்பினார். சிறிது நேரத்தில், சவுண்ட் எஞ்சினியர் ஸ்ரீதர் மற்றும் குழுவினர் வந்தனர். அப்போது ஆரம்பித்து, இரவு 8 மணி வரை அனைத்துக் கருவிகளிலின் ஒலி வெளியீடும், பாடகர்களின் ஒலி வெளியீடும், தனது கருவிகளில் சரியாக வந்து சேர்கிறாதா எனச் சரி பார்த்தார். மனிதருக்கு நிறைய பொறுமை தான்.

ஊரில் நடக்கும் கச்சேரிகளை நினைத்துக் கொண்டேன். 9 மணிக்கு வந்து, 10 மணிக்கு ஆரம்பிக்கும் கச்சேரிகளை.

நடுவில் சின்ன சின்ன வேலைகள்.

சுமார் 8.30 மணிக்கு ஏ.ஆர்.ரகுமான் மைதானத்திற்கு வந்து அனைத்து ஏற்பாடுகளையும் கவனிக்க ஆரம்பித்தார். அவர் வந்தது தெரிந்ததும், நண்பர்கள் மேடையின் முன்புறம் ஓடினர். எல்லோருடைய கையிலும் கேமராக்கள். பத்திரிக்கை நிருபர்கள் என நினைத்து, தயக்கத்துடன் சிரித்துக் கொண்டே மேடையின் ஓரத்தில் சென்று ஒளிந்து கொண்டார். 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் மேடையின் முன்பாக வரும் போது, நாங்கள் கொண்டு சென்ற பெரிய பேனரை ("arrahmanfans welcome ARR and Team to Bangalore"). அதைப் பார்த்ததும் மிக சந்தோசத்தில் வணக்கம் தெரிவித்தார்.

பின்னணி பாடகர், ராஜேஸ் Blazee ராமனை சந்தித்து நாங்கள் ரகுமானைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தோம். முயற்சிப்பதாகச் சொன்னார். சுமார் 11 மணியளவில், மீண்டும் கேட்ட போது, "சரி. ஆனால் யாரும் ரகுமானைத் தள்ள முயற்சிக்கக் கூடாது" என தெரிவித்தார். சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யாரோ ஒரு ரசிகர் காரில் ஏற விழைந்த ரகுமானை பிடித்து இழுக்க முயற்சித்ததால் இந்த கவனம்.

எங்களுக்கு மிக சந்தோசம்.

வேகமாக கீழிறங்கி வந்தார். நாங்கள் அனைவரும் ஒரு அறையில் காத்திருந்தோம். வரிசையாக பத்து பேர் தங்கள் கேமராவைக் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர். நான் ரகுமானை ஒட்டி நின்று கொண்டேன். Flash! Flash!

நண்பர்கள் முட்ட ஆரம்பித்தனர். எங்களுக்கோ பயம். எங்கே கோபித்துக் கொள்வாரோ என.

"அவசரப் பட வேண்டாம். எல்லோரும் புகைப்படம் எடுத்த பின்பே இந்த இடத்தை விட்டுச் செல்வேன்", என்றார். ஆச்சர்யம். மிக எளிமையாக பேசிக் கொண்டிருந்தார். கொஞ்சமும் கோபப்படாமல் 15 நிமிடங்கள் அங்கிருந்து எங்களை சந்தித்தார்.

ஆட்டோகிராப் வேண்டுமென்று ஒரு 35 அட்டைகளை நீட்டியதும், இரவு ஹோட்டலுக்குச் சென்று கையொப்பமிட்டுத் தருவதாகத் தெரிவித்தார். அது வெறும் வார்த்தைகள் அல்ல. மறுநாளே அத்தனை அட்டைகளிலும் கையொப்பமிட்டு, எங்களிடம் மானேஜர் மூலமாக சேர்ப்பித்தார்.

பின்னர் நாங்கள் கொண்டு சென்றிருந்த நினைவுப் பரிசை அவரிடம் கொடுத்தோம். சந்தோசத்துடன் பெற்றுக் கொண்டு விடை பெற்றார்.

செல்லும் போது, "சார். என் பெயர் ...., " என அறிமுகம் செய்து கொண்டேன். கை கொடுத்தார்.

சந்தோசமாக இருந்தது. வீடு திரும்பும் போது மணி 1.00.

இரவு சாப்பிடவில்லை. ஆனாலும் நிம்மதியாகத் தூங்கினேன்.

ஸ்ருசல்.

1 கருத்து :

அன்பு சொன்னது…

இசைநிகழ்ச்சிகளும், நிகழ்ச்சிகளின் பின்புறக் கதைகளும் கேட்க ரொம்ப பிடிக்கும். இன்னும் பல பாகங்களாகத் தொடருங்கள்.