வெள்ளி, அக்டோபர் 28, 2005

இந்திரா வாழ்வில் சுவாரசியமான நிகழ்ச்சிகள் - பாகம் 2

இது போன பாகத்தின் தொடர்ச்சி

1. மே, 1920-ம் ஆண்டு அலகாபாத்தின் கடும் வெயிலினைத் தவிர்க்கும் பொருட்டு, முச்சோரிக்கு நேரு, அவர் தாய், மனைவி, இரு சகோதிரிகள் மற்றுன் இந்திராவுடன் சென்றார். அங்கு ஹோட்டல் சவோவில் தங்கியிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் இங்கிலாந்து அரசு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த ஆப்கன் மந்திரியும் அதே ஹோட்டலில் தங்க நேர்ந்தது. இதனால் சந்தேகமடைந்த ஆங்கிலேய அரசு நேருவினை முச்சோரியை விட்டு 24 மணி நேரத்தில் வெளியேறவேண்டும் என உத்தரவிட்டது. இதனால் அவர் மட்டும் அங்கிருந்து திரும்ப நேரிட்டது. இதனால் ஆத்திரமடைந்த மோதிலால் நேரு அவருடைய ஆங்கிலேய நண்பர் சர். பட்லரைத் தொடர்பு கொண்டு அந்த உத்திரவினை ரத்து செய்யச் செய்தார். நேரு திரும்ப அங்கு சென்ற போது, ஆப்கன் அமைச்சர், இந்திராவுடன் விளையாடுவதைக் கண்டார். நேரு வெளியேற்றப்பட்டதை பத்திரிக்கைகள் மூலம் அறிந்தவர்கள், நேரு குடும்பத்தினரை நன்கு உபசரித்து அவர்களைப் பார்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தினமும் காலையில் இந்திராவினை வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர்.

2. 1943 ல் இந்திராவும், நேருவும் வெவ்வேறு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்குள் கடிதத் தொடர்பு இருக்கக் கூடாது எனவும் உத்தரவு இருந்தது. அதாவது உத்தரவானது கீழ்கண்டவாறு விதிக்கப்பட்டது. "நீங்கள் உங்களுக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதலாம். ஆனால் நீங்களாக கடிதத் தொடர்பினை ஆரம்பிக்கக் கூடாது". பிறகு எப்படி இருவரும் தொடர்பு கொள்ளமுடியும்?

3. நேரு முதலில் இந்திரா - பெரோஸ் காந்தி திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். பின்னர் சமாதானமாகி ஒத்துக் கொண்டார். ஆனால் அந்த சமயத்தில், ஃபெரோஸிற்கு வருமானம் இல்லாதக் காரணத்தினால், திருமணம் முடிந்ததும் நேரு, ஃபெரோஸிற்கு அலகாபாத் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வேலை போட்டுக் கொடுத்தார். மாதச் சம்பளம் 100 ரூபாய். திருமணத்திற்கு நேரு 1000 ரூபாய் ரொக்கமாகவும் பரிசளித்தார். ஆனாலும் இருவருக்கும் அவர்களின் மாத வருமானம் போதாத காரணத்தினால் நேருவிடம் சில நேரம் பணம் வாங்க நேர்ந்தது. நேரு சிறை சென்ற பிறகு இந்திராவிற்கு எழுதிய கடிதத்தில் "உங்களுக்கு பணம் தேவைப்படும் பட்சத்தில் என்னுடைய கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ள தயங்க வேண்டாம். உரிமையுடன் என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளவும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

4. காந்தி கொல்லப்படுவதற்கு முன்பாக நேருவிற்கு காவலர்கள் என்று யாருமே இருக்கவில்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பின் தான், மவுண்ட்பேட்டன் பிரபு நேருவினை Commander-in-Chief கட்டிடத்தில் இருக்குமாறும், சில காவலர்களை வைத்துக் கொள்ளுமாறும் அறிவுரை கூறினார். இதனை நேரு ஆரம்பத்தில் ஏற்க மறுத்தார். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் அவரை சம்மதிக்க வைத்தார்.

5. நேரு பிரதமரானதும், இந்திரா பெரும்பாலும் டெல்லியிலேயே தங்கி விட்டார். இது இந்திராவிற்கும், ஃபெரோஸிற்கு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது. பின்னர் ஃபெரோஸ் ரே பெரேலி தொகுதியில் நின்று பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

6. ஃபெரோஸ் டெல்லி வந்த பிறகு பல பெண்களுடன் வெளிப்படையாக தொடர்பு வைத்திருந்ததும் நேருவையும், இந்திராவையும் வருத்தமடையச் செய்தது.

7. ஆரம்பத்தில் ஃபெரோஸ் பாராளுமன்றத்தில் அமைதியாக இருந்தாலும், பின்னர் காங்கிரஸினை எதிர்ப்பதில் மிகவும் தீவிரம் காட்டினார். நேருவின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. அப்போது முந்தரா என்ற காங்கிரஸ்காரருக்கு எல்.ஐ.சி. பங்குகளை மாற்றிக் கொடுத்த விவகாரத்தில் ஃபெரோஸ் பாராளுமன்றத்தில் காங்கிரஸை கடுமையாக சாடியதின் விளைவாக நேரு விசாரணைக் கமிஷன் அமைத்தார் (Mundhra Scandal). விசாரணையின் முடிவில் டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு தொடர்பு இல்லை என்றாலும், நிதியமைச்சரின் கட்டுப்பாடில் இது வருவதால் அவரே இதற்கு பொறுப்பு என தீர்ப்பளித்தது. இதனால் டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்ய நேர்ந்தது. மொரார்ஜி தேசாய் அவரிடத்தை நிரப்பினார்.

8. சிறிது ஆண்டுகளுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸ் கமிட்டித் தலைவராகப் (அல்லது செயலாளர்) பொறுப்பேற்றப் பிறகு, பெரோஸ் இந்திராவை கடுமையாக சாடி வந்தார்.

9. முதல்முறையாக கேரளாவில் காங்கிரஸ் அல்லாத அரசு முதன்முதலில் (கம்யூனிஸ்ட்) E.M.S. நம்பூதிரிபாடி தலைமையில் 1957 ல் ஆட்சி அமைத்தது. இது காங்கிரசுக்கு பலத்த எரிச்சலையூட்டியது. மேலும் இந்திரா காங்கிரஸ் கமிட்டித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு (1959-ல்), கேரளாவிற்கு விஜயம் செய்தார். அப்போது கம்யூனிஸ்ட் அரசும் பல கம்யூனிசக் கொள்கைகளை மக்களின் மீது திணித்திருந்தது. விவசாய நிலங்கள் எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கும் திட்டம் (சீனா, ரஷ்யா போல) அதில் முக்கியமானது. இதனால் பலதரப்பினரும் அந்த அரசு மீது அதிருப்தி கொண்டிருந்த சமயத்தில் இந்திராவின் விஜயம் முக்கியத்துவம் பெற்றது. பின்னர் மே 1959 ல் நேருவும் கேரளாவிற்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய அதிருப்தியினை வெளியிட்டார். டெல்லி திரும்பிய சில நாட்களில் கேரள அரசு நீக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமுல் செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஃபெரோஸ் இதற்கு நேருவும், இந்திராவும் தான் காரணம் என கடுமையாக சாடினார். பின்னர் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தன்னுடைய கொள்கை விரோதக் கட்சியான முஸ்லீம் லீக்குடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது.

10. 24 ஆகஸ்டு 1963 ல் காமராஜர், "காமராஜ் திட்டம்" என்ற அறிமுகப்படுத்தினார். அதன்படி வயதான மத்திய அமைச்சர்களும், மாநில முதல்மந்திரிகளும் பதவியினை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே அது. இது பிரதம மந்திரிக்குப் பொருந்தாது எனவும் அறிவித்தார். அதன்படி காமராஜர், கர்நாடக முதன் மந்திரி நிஜலிங்கப்பார், மேற்கு வங்க முதலமைச்சர் அதுல்யா கோஷ், ஆந்திர முதலமைச்சர் சஞ்சீவ ரெட்டி, பம்பாய் முதலமைச்சர் எஸ். கே. பாட்டில் உட்பட ஆறு முதலமைச்சர்களும், மொரார்ஜி தேசாய், மற்றும் லால் பகதூர் சாஸ்திரியும் ராஜினாமா செய்தனர். இதில் லால் பகதூர் சாஸ்திரி நேருவிற்கு அடுத்து பிரதமராக வரக்கூடிய வாய்ப்புகள் இருந்ததால் இது முக்கியத்துவம் பெற்றது. ஆனாலும் அவர்கள் காங்கிரஸ் சிண்டிகேட்டில் உறுப்பினர்களாகத் தொடர்ந்தனர்.

11. நேரு இறந்ததும் இந்திரா அவருடைய அஸ்தியினை எடுத்து நேருவின் வேண்டுகோளின் படி இந்திய மாநிலங்கள் முழுவதும் தூவினார். இதில் காஷ்மீர் மாநிலத்தின் மீது ஹெலிகாப்டரில் சென்று தூவினார். அஸ்தியின் ஒரு பகுதியினை அலகாபாத் சங்கம் நதியிலும் கரைத்தார். நேருவின் அஸ்தியுடன் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு மறைந்த அவருடைய தாயார் கமலா அஸ்தியையும் கரைத்தார். கமலா சுவிட்சர்லாந்தில் இறந்த பிறகு அங்கிருந்து கமலாவின் அஸ்தியினை இந்தியா கொண்டு வந்து, அவருடனேயே 30 வருடங்கள் வைத்திருந்தார். இது அலகாபாத் ஆனந்த் பவனிலும், பல சிறைச் சாலைகளிலும், பிரதமரானதும் தன்னுடைய யார்க் ரோடு பங்களாவிலும் வைத்திருந்தார்.

12. லால் பகதூர் சாஸ்திரி இறந்ததும், இந்திரா பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது காமராஜரிடம் நீங்கள் பிரதமராக விருப்பம் இல்லையா எனக் கேட்டதற்கு "No Hindi, No English, how?" எனக் கேட்டார். இந்திரா பொறுப்பேற்றதும் டைம் பத்திரிக்கை "Troubled India in a women's Hand" என தலையங்கம் வெளியிட்டது.

13. 1965 ல் இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின் இந்தியாவில் கடும் உணவுத் தட்டுபாடு நிலவியது. இந்தப் போரினால் அமெரிக்க அரசும் இந்தியா, பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த உதவியினை நிறுத்தியது. இந்திரா அமெரிக்க சென்று, ஜான்சனை சந்தித்து அமெரிக்க அரசின் உதவியையும், பின்னர் உலக வங்கியின் உதவியினையும் நாடினார். உலக வங்கியும், IMF-ம் இந்திய ரூபாயின் மதிப்பினை குறைத்தால் மட்டுமே கடன் வழங்க முடியும் எனத் தெரிவித்தனர். இதனால் 6 ஜூன் 1966 ல் இந்திய ரூபாயின் மதிப்பை 57.5% குறைத்தார். இது சிண்டிகேட்டிடமோ, மற்ற தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்யாமல் இரவு 11 மணிக்கு அறிவித்தார். இதனால் காமராஜரும் தன்னுடைய அதிருப்தியைத் தெரிவித்தார். ஆனால் அமெரிக்க அரசு தருவதாக சொல்லியிருந்த 3 மில்லியன் டன் உணவும், 9 மில்லியன் டாலர்களையும் தராமல் மிகவும் தாமதப்படுத்தியது.

14. 1966 மாடு வதைத் தடுப்புச் சட்டத்தினை கொண்டு வர வேண்டும் என பல இந்து அமைப்புகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் உயிரழக்க நேரிட்டது. இதற்கு பின் இந்திரா முடிவாக சட்டம் கொண்டுவர முடியாது என தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

15. 1968 ம் ஆண்டு ராஜிவ் முதன்முதலாக சோனியா காந்தியை இந்தியாவிற்கு அழைத்த வந்து இந்திராவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்திராவிற்கு பிரெஞ்ச் மொழி நன்றாகத் தெரியுமாதலால் அவருடன் பிரெஞ்ச் மொழியிலேயே உரையாடினார். பின்னர் இந்திய கலாச்சாரத்தை நன்கு கற்றுக் கொள்வதற்காக சோனியாவை நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்தினருடன் இரண்டு மாதங்கள் தங்க வைத்திருந்தார். பின் பிப்ரவரி 25, 1968 ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் முடிந்தது.

16. இந்திராவுடன் சிறு வயதில் படித்த பரமேஸ்வர் நரேன் ஹஷ்கர் அவருக்கு செயலாளராகப் பொறுப்பேற்றார். 1967 முதல் 1973 வரை இந்திராவிற்கு அடுத்து சக்தி வாய்ந்த புள்ளியாகத் திகழ்ந்தார். அவர் பின் கேபினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இது தான் நமது நாட்டின் IAS பதவியில் உச்ச வரம்புடைய பதவி.

17. 1969 ல் காங்கிரஸ் பிளவுற்று இரண்டாகப் பிரிந்தது. அது இந்திரா பிரிவு முதலில் காங்கிரஸ்(R) Requisitionist எனவும், நிஜலிங்கப்பா (காமராஜர்) பிரிவு காங்கிரஸ் (O) Organization எனவும் அழைக்கப்பட்டது. இதனை மற்றவர்கள் காங்கிரஸ் Ruling எனவும் காங்கிரஸ் Old எனவும் கேலியாக அழைத்து வந்தனர். இந்திரா பிரிவில் 220 உறுப்பினர்கள் இருந்தனர்.

18. பின்னர் 1969 ல் இந்திரா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். 220 உறுப்பினர்களே இருந்த காரணத்தினால், இந்திரா CPI உதவியுடன் பெரும்பான்மையை நிரூபித்தார்.

தொடர்ச்சி அடுத்த பாகத்தில்...

போன பகுதியைப் பார்க்க

குறிப்பு: இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எதுவும் என்னுடைய கருத்துகள் அல்ல. "Life of Indira" புத்தகத்தில் நான் படித்தது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் அந்த நூலாசிரியரின் கருத்து. அவற்றின் நம்பகத்தன்மையைப் பற்றி எனக்குத் தெரியாது.



ஸ்ருசல்

9 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

Suvaarasiyamaana sambavangal nirainthullana indira vazvinile!Maraikkap patta Rakasiyangalum Earaalam Irukkirathu! "INDIRAGANTHIYUM VISAARANAI COMISSIONANUM"(Tamiz) Entra putthagam "AVASARAK KAALATHIL"(EMERGENCY) INDIRAvin pala Cheyalkalai Ambalp padutthukirathu!

Muthu சொன்னது…

கருசால் இந்த கட்டுரையில் உள்ள எதுவும் உங்களுக்கு தெரியாது. எதற்கும் நீங்க பொறுப்பல்ல. நம்பகத்தன்மை பற்றியும் தெரியாது. அப்படின்னா புத்தகத்தின் பெயரை மற்றும் பரிந்துரைத்துவிட்டு போகலாமே...
அல்லது இன்னும் ஏதாச்சும் சோர்ஸ்ல பார்த்துட்டு உங்க கருத்தையும் சேர்த்து எழுதலாமே.. அது இன்னும் சுவாரசியமா இருக்கும் கறது என்னோட கருத்து.என்ன சொல்றீங்க?

பெயரில்லா சொன்னது…

one correction.

#12. It should be after the death of Shastri, not after the death of Nehru....

ஸ்ருசல் சொன்னது…

முத்து,

உங்கள் கருத்து ஒரு விதத்தில் சரிதான்.

ஆனால் இப்படி செய்வதால் மூன்று நன்மைகள் இருக்கின்றன.

1. எல்லாராலும் எல்லா புத்தகங்களையும் வாங்க முடியாது. நான் 550 ரூபாய் கொடுத்து வாங்கினேன் என்பதற்காக எல்லாரும் அதைக் கொடுத்து வாங்கவும் முடியாது; அது அவசியமும் இல்லை.

2. மேலும் எல்லா புத்தகத்திலும், எல்லா பக்கங்களும் சுவையாக இருக்காது. அந்தப் புத்தக்த்தைப் படித்து முடிக்க இரண்டு வாரங்கள் ஆனது. அதில் உள்ள முக்கியமான, சுவாரசியமான விசயங்களை மட்டுமே எடுத்துக் கொடுத்துள்ளேன். இது கதைப் புத்தகங்களுக்குப் பொருந்தாது.


எல்லாருக்கும் இந்தப் பதிவினைப் படிக்க 5-10 நிமிடங்களே ஆகும். இதனால் மற்றவர்கள் பணத்தையும் மிச்சப்படுத்தலாம்; நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

3. மேலும் படித்த விசயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் நீங்கள் மறுபடியும் சில விசயங்களை நினைவிற்கு கொண்டுவருகிறீர்கள். அது மிகவும் முக்கியம். படிக்கும் புத்தகங்கள் அனைத்தும் உங்கள் நினைவில் இருக்க வாய்ப்பில்லை. இந்த மாதிரி பகிர்ந்து கொள்வதால், படித்தவர்களுக்கும் நல்லது. (நாம் கொடுத்த பணத்திற்கும், செலவிட்ட நேரத்திற்கும்)

உங்கள் கருத்து என்ன?

நன்றி.

ஸ்ருசல்

ஸ்ருசல் சொன்னது…

Anonymous,

>>>>
12. நேரு இறந்ததும், இந்திரா பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். <<<<<

சரியாகச் சொன்னீர்கள். தவறுக்கு மன்னிக்கவும். அது கீழ்கண்டவாறு இருந்திருக்க வேண்டும்.

>>>>

12. சாஸ்திரி இறந்ததும், இந்திரா பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

<<<<


மிக்க நன்றி.

Muthu சொன்னது…

யாருக்கு எது சுவாரசியமுன்னு யார் முடிவு பண்றது என்பது ஒன்று. எனிவே நீங்களும் கொஞசம் ரீசர்ச் பண்ணிட்டு எழுதுங்க. cut ,copy,paste ஆக இருக்க வேண்டாமே என்ற ஆதங்கம் தான் .

ஸ்ருசல் சொன்னது…

நான் எழுதும் அனைத்துமே தழுவல் என நினைத்தால் அது தவறு. 10 பதிவுகளில் ஒன்று இந்த மாதிரி இருப்பது தவறல்ல என்பது என்னுடைய கருத்து. தாங்கள் என்னுடைய மற்றப் பதிவுகளைப் பார்த்தால் புரியும் என நினைக்கின்றேன்.

கருத்து எப்படிபட்டதாக இருந்தால் என்ன? எங்கு படித்திருந்தால் என்ன? அது உதவிகரமாக இருக்கின்றதா என்பதைத் தான் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு கணினியினைப் பற்றி பதிவு எழுதினால் அனைவரும் படிக்கமுடியாமல் போகலாம். விருப்பம் உள்ளவர்கள் படிப்பார்கள். அதே போல் தான் இதுவும். விருப்பம் உள்ளவர்கள் படித்து, பலன் அடையலாம்.

ஆராய்ச்சி என்பது ஆயிரம் புத்தகங்கள் படித்து விட்டு எழுதுவதா? ஒரு புத்தகம் என்றாலும் அது ஏன் ஆராய்ச்சியாக இருக்கக் கூடாது?
மேலும் வரலாற்று நிகழ்வுகளை நானாக கற்பனை செய்து எழுதமுடியாதே, படித்து தான் எழுத வேண்டும்.

ஸ்ருசல்

Muthu சொன்னது…

நீங்கள் எழுதுவது ஆராய்ச்சி கட்டுரையா
என்று எனக்கு தெரியாது. ஒரு புத்தகத்தை வைத்து கூட நீங்கள் ஆராய்ச்சி கட்டுரை எழுதலாம் தவறு இல்லை.உங்கள் மற்ற பதிவுகளை படித்தேன்.நன்றாக உள்ளது. நான் கொடுத்த ஆலோசனையை விமர்சனமாக எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என தெரிகிறது. donot feel offended.

ஸ்ருசல் சொன்னது…

இதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கின்றது. என்னுடைய பதிவு வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது, என்னுடைய கடமை. விமர்சனங்களுக்கு எனக்கு ஏற்பு இல்லை என்றால் நான் எழுதாமலேயே இருந்திருப்பேன்.

நான் என்னுடைய நிலையை எடுத்துரைத்தேன். அவ்வளவே!
என்னுடைய புதிய பதிவுகளைப் படித்து உங்களின் விமர்சனங்களை எழுதவும்.

ஸ்ருசல்.