அயல்நாடுகளில் வசிக்கும் மணமாகாத இந்தியர்களில் பெரும்பாலோனோர் அடிக்கடி McDonalds, KFC, Loteria போன்ற புகழ்பெற்ற சிக்கன் விற்பனை நிலையங்களில் தங்கள் மதியம் மற்றும் இரவு உணவினை சுலபமாகவும், சுவைபடவும் முடித்துக் கொள்தல் உண்டு. ஆனால் அங்கு வறுத்து வைக்கப்பட்டிருக்கும் கோழிகள் எவ்வாறு கொல்லப்படுகின்றன எனத் தெரிய வந்தால் நிறைய பேர் அதனை உண்பதையே நிறுத்தி விடுவர் என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
சமீபத்தில் எனக்கு ஒரு சலனப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த சலனப் படம் கே.எஃப்.சி எவ்வாறு கோழிகளைக் கொல்கின்றது என்பதனைப் பற்றியது. ஒவ்வொரு வருடமும் சுமார் 750 மில்லியன் கோழிகள் கே.எஃப்.சில் மட்டும் கொல்லப்படுகின்றன என்றவாறு அந்தப் படம் தொடங்குகிறது.
கோழிக் குஞ்சு பொறித்த (இங்குபேட்டர்களில் தான்) சில நாட்களில், அவற்றின் அலகுகள் ஒடிக்கப்படுகின்றன. "கோழிகளின் அலகுகளை ஒடிப்பது, நம் விரல்களில் உள்ள நகங்களை ஒடிப்பதற்கு ஒப்பானதல்ல. நம் விரல்களையே வெட்டுவதற்கு ஒப்பானது" எனக் குறிப்பிடுகின்றார், அந்த செய்தியாளர். அந்தக் காயம் ஆறுவதற்கு சில வாரங்கள் ஆகும். இந்த செயல்முறையில் சில கோழிகள் இறந்து விடுவதும் உண்டு என்கிறார். கோழிகளை விரைவாக வளர்ப்பதற்காக அவற்றுக்கு சரியான உணவும் அழிக்கப்படாமல் விட்டுவிடுகின்றனர். சமச்சீரற்ற உணவினை அழிப்பதால், கோழிகள் விரைவாக வளர்ந்து, அவற்றால் எடையைத் தாங்க முடியாமல் கால்கள் முறிந்து விடுவதும் உண்டு.
பண்ணைகளிலிருந்து, அவற்றை கொல்வதற்கு (slaughterhouse க்கு கொண்டு செல்வதற்கு) வாகனங்களில் ஏற்றுவதோ, கிரிக்கெட்டில் பீல்டிங் செய்பவர் எல்லைக் கோட்டிலிருந்து பந்தை வீசுவது போலத் தான். கோழிகளை அள்ளி, வாகனங்களில் எறிகின்றனர். திரும்ப அவற்றை இறக்கும் போதோ, மணல் வண்டியில் இருந்து மணலை இறக்குவது போல, மொத்தமாகக் கொட்டுகின்றனர்.
இறக்கிய பின், முதலில் கோழிகள் வரிசையாக உள்ள கொக்கிகளில் மாட்டப்படுகின்றன. மொத்தம் ஆயிரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் மாட்டலாம் போலத் தோன்றுகின்றது. அவைகள் வரிசையாக, இயந்திரங்களின் உதவியினால் தலை சீவப்படுகின்றன. அதற்கு முன்பாக கோழிகளுக்கு மின்சார அதிர்ச்சியூட்டப்படுகின்றது. பின்னர், அவை கொதிக்கும் நீரில் வரிசையாக முக்கி எடுக்கப்படுக்கின்றன. (இறகுகளை சுலபமாக நீக்குவதற்காக). அதன் பின்னரும் பல கோழிகளுக்கு உயிர் இருக்கும் என்கிறார்.
இதனைத் தவிர சில ஊழியர்கள், சில நேரங்களில் கோழிகளை எடுத்துக் கொண்டு, சுவற்றில் பலமாக அடிக்கின்றனர். அடித்த பின்பு அவற்றின் மேல் ஏறி மிதிக்கின்றனர். அதற்குப் பின்னரும் அவை உயிருடன் இருக்குமா என்ன?
சில விசயங்கள் நிறுவனத்தின் செயல்முறை என்றாலும் இன்னும் சிலவற்றை அந்த நிறுவன ஊழியர்களே விரும்பிச் செய்வது போல் தெரிகிறது. உதாரணத்திற்கு வாகனங்களில் கோழிகளை ஏற்றுவதும், அவற்றை சுவற்றில் அடிப்பதும். எதற்காக அவ்வாறு செய்கின்றனர்? யார் மேல் கோபம்?. பல கோழிகள் இறப்பதைப் பார்த்த பின்னாலும் அவர்கள் மனம் மாறவில்லையா? இல்லை அதனைப் பார்க்கப் பார்க்க அவர்களுக்கு மேலும் கொலை வெறி அதிகரிக்கின்றதா?
இதுவும் ஒரு வகையில் சிறுபான்மை இனத்தின் மீதான தாக்குதல் தான். மனிதன் மற்ற இனங்களை விட பெரியவன், அறிவினால் உயர்ந்தவன், பகுத்தறிவுவாதி என்பதனால் தன்னுடைய சர்வாதிகாரத்தினை மற்ற விலங்கினங்களின் மேல் காட்டுவது மிகவும் வருத்தத்திற்குரியது. மனிதர்களாகிய நமக்கு இந்த உலகில் வாழ்வதற்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ அதே உரிமை மற்ற ஜீவராசிகளுக்கும் உண்டு. சமூகத்தில் மிகவும் கொடூரமான குற்றம் புரிந்த மனிதர்களுக்கே மரண தண்டனையை எவ்வாறு வலியில்லாமல் நிறைவேற்றலாம் என யோசிக்கும் நாம், ஒரு குற்றமும் அறியாத அந்த ஜீவராசிகளைக் கொல்வதற்கு எவ்வளவு யோசிக்க வேண்டும்? கொல்லாமல் இருக்க வேண்டாம்; கொல்லும் முறையிலாவது சிறிது பரிவினைக் காட்டலாமே!
சென்ற மாதம் கோன்பனேகா குரோர்பதியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. PETA என்ற அமைப்பு எதனைச் சார்ந்தது?. அதற்கான முழுமையான விடை இந்த விசயத்தில் தெரிகிறது. 2003 ல் இருந்து PETA அமைப்பு கே.எஃப்.சியின் இந்த கொடூரமான முறையினை சாடி வருகிறது. பீட்டா அமைப்பு, கோழிகளைக் கொல்லும் முறையில் (வாயு செலுத்தியோ, அல்லது மயக்க நிலையிலோ கொல்லலாம்) மாற்றம் கொண்டு வர வேண்டும் எனக் கூறுகின்றனர்.
அந்தப் படத்தினை பார்க்க
மேலும் விவரங்கள் அறிய: பீட்டாவின் வலைத்தளத்திற்கு செல்லுங்கள் (கூகுள் செய்யவும்: PETATV)
குறிப்பு: கே.எஃப்.சி நிறுவனத்தினைப் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள்
என்னுடைய கருத்துகள் அல்ல. பீட்டா வலைத் தளத்தில் எடுக்கப்பட்டவை. அதன் நம்பகத்தன்மையின்மையைப் பற்றி எனக்குத் தெரியாது.
மேலும் நீங்கள் அசைவம் சாப்பிடக்கூடாது எனக் கூறுவதற்கு நான் விழையவில்லை. சாப்பிடுவதும், சாப்பிடாமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.
ஸ்ருசல்
3 கருத்துகள் :
வாயு செலுத்தி கொல்லுதல் சாப்பிடறவங்களை பாதிக்கலாம்..ஆனால் கொடுரமாக கொல்லுதல் தவறுதான். சில ஊழியர்கள் மட்டும் தவறாக செய்கிறார்களா? அல்லது கம்பெனியின் கொள்கை அல்லது செயல்முறையே அப்படியா என்று நீங்கள் சொல்லவில்லை
Islaamiyarkal unavu unnum viasyatthil kurippaaka "iraichi" unumnumpothu Athu "HALAAL" seyyap pattathaa? Enpathai thondit thuruvi Visaaritthu "HALAAL" Enbathai Uruthi seytha pirakuthaan Antha Iraichi unavai unbathai kaanalam...... "kaaranam....Unavukkaakak kollap padu (AAdu,Maadu,Ottagam,Kozi,>>>>)pontra uyikalai arukkumpothu(vettappadumpothu)"IRAIVA! NEEP PADAITTHA INTHA UYIRINAI ENGAL UNAVUT THAEVAIKKAAKA UNATHUP PEYARAAL ARUKKIREAN.. NEEYE MIKAVUM PERIYAVAN" Entr Vaartthaikalaik kooriyap Padi Arukkavaendum arukkappPadum UYINATTHIRKKu kadumaiyaanamurayi (KODURAMAAKA)Entha siramamum (vaethanai) Tharaatha Vakaiyil ORE Aruvail Athan UYIR piriyum Vakaiyil KOlla vaendum(AVVAARUKKOLLAPPATTAVAIKALAIMATTUME UVAENDUM) Ena ISlaathil kattalai Ullathu!
அட இதைப் பற்றி முன்பு தொலைக்காட்சியில் பார்த்த நினைவு. ஏதோ ஒரு ஊரில் எப்படி கே.எஃப்.சீயில் கோழியைக் கொல்கிறார்கள் என்று காட்ட....அந்த ஊரில் கே.எஃப்.சீ படுத்ததாம். இந்தியாவில் அப்படி இருக்காதென்று நம்புவோம். நானும் அடிக்கடி அங்க போய்ச் சாப்பிட்டிருக்கேனே. இதுக்குத்தான் நான் பொதுவா மேரி பிரவுன் போறது. அவங்க மலேசிய முஸ்லீம்கள். ஹலால் முறைப்படி செஞ்சிருப்பாங்க. அதுனால கொடூரமான கொலையாக இருக்காது. நம்மூருகள்ளையும் இவ்வளவு கொடூரமாக் கொல்ல மாட்டாங்களே.....ஏன் இப்படி செய்றாங்க! அலகை ஒடிச்சா என்ன பலன்? ஒழுங்கா சாப்பிடாதுங்குறதுக்காகவா! கொடுமை. கொடுமை.
கருத்துரையிடுக