புதன், அக்டோபர் 19, 2005

மின்சாரக் கம்பியில் இணையத் தொடர்பு

தற்போது, இணையத்தில் உங்கள் கணினியை இணைக்க நீங்கள் ஒன்று டயல் அப் அல்லது ப்ராட்பேண்ட் உபயோகப்படுத்துவீர்கள். துரித இணைப்பிற்காக, பல தொலை தொடர்பு நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள சாலைகளில் ஃபைபர் கேபிள்களை பதித்து வருகின்றனர். இது மிகுந்த செலவிழுப்பதாகவும், மக்களுக்கு பெருத்த சிக்கலாகவும் உள்ளது. நகரங்களுக்கே இந்த நிலை என்றால், இன்னும் கிராமங்களுக்குச் செல்லும் போது எவ்வளவு சிரமமாக இருக்குமோ?

உங்கள் வீட்டிற்கு உள்ள மின்சார இணைப்பிலேயே இணையத் தொடர்பும் கிடைத்தால் எப்படி இருக்கும்? அது தான் இன்னும் சிறிது ஆண்டுகளில் நடக்கப் போகின்றது. இந்தியாவிலா என்று கேட்காதீர்கள், எனக்குத் தெரியாது. செட்டாப் பாக்ஸ் இந்தியாவில படும்பாடு உங்களுக்குத் தான் தெரியுமே?. இனி மேல் இணையத்தில் தொடர்பினைப் பெற டெலிபோன் வயரினையோ, ப்ராட்பேண்ட் வயரினையோ நீங்கள் இணைக்க வேண்டாம். உங்கள் கணினியையோ, அல்லது மடிக்கணினியையோ மின்சுற்றில் இணைத்தால் போதுமானது. மேலும் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து மின்சுற்றிலும் உங்கள் கணினியை இணைத்து இணையத்தில் நுழையலாம்.

இந்த தொழில்நுட்பத்திற்கு PLC (Powe Line Communication) எனப் பெயர். இதனை BPL (Broadband over Power Line) எனவும் அழைக்கலாம். இதில் கடந்த 10 ஆண்டுகளாக சில அயல்நாட்டு நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன. இப்போது சோதனை முறையிலும் சில நாடுகளில் உபயோகப்படுத்தப் படுகின்றது. இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே ஆரம்ப நிலையில், தானியங்கி மின்சார வினியோகத்திற்கும், தானியங்கி மீட்டர் கணக்கீட்டிற்கும் (Meter Reading) உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. அதாவது மின்சார நிறுவன ஊழியர்கள், அவர்களின் அலுவலகத்திலிருந்தே நீங்கள் எவ்வளவு மின்சாரம் உபயோகப்படுத்தியிருக்கிறீர்கள் என அறிந்து கொள்ள முடியும்.

அது இப்போது மேம்படுத்தப்பட்டு, உங்கள் வீட்டினை இணைக்கும் மின்சார கம்பிகளே இணையத் தகவல்களைச் சுமந்து செல்லும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ப்ராட்பேண்ட் அளவிற்கு வேகமாக இல்லாவிட்டாலும், ADSL அளவிற்கு வேகமாக இருக்கும். உதாரணத்திற்கு சொல்வதென்றால் 200 Mbps.

எப்படி உங்கள் கணினியை இணைப்பது?

இது ஒரு பெரிய விசயம் அல்ல. PLC மோடத்தினை மின்சுற்றின் ஒரு பகுதியிலும் மறுமுனையினை உங்கள் கணினியின் USB Slot அல்லது Ethernet Slot - ல் இணைத்தால் போதுமானது.

அல்லது இப்போதுள்ள Bluetooth அல்லது Wireless LAN மூலமாக மோடத்திற்கும் (Modem), உங்கள் கணினிக்கும் கம்பியில்லா இணைப்பினையும் பெறலாம்

மேலும் சிலருக்கு வரம்பில்லாத இணைப்பு இருக்காது. மாதத்திற்கு இவ்வளவு என கணக்கிடுவார்கள். அந்த வகையில் பார்த்தால், அதனையும் இனி சுலபமாகக் கணக்கிடமுடியும்.

தடையில்லா இணைப்பும் இதன் மூலம் சாத்தியம். ஆனால், மின்சாரத்தினையே இன்னும் தடையில்லாமல் நம்மால் பெற முடியவில்லை. கோடை காலங்களில் கேட்கவே வேண்டாம்.

பலருக்கும் Home Networking பற்றித் தெரியும் என நினைக்கிறேன். அதாவது, உங்கள் வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்களை இணைத்து ஒரு தொடர்பினை கணினி மூலம் ஏற்படுத்தி அந்தப் பொருட்களை உலகின் எந்த மூலையில் இருந்தும் கட்டுப்படுத்தமுடியும். உதாரணத்திற்கு, அலுவலகத்தில் இருந்து கிளம்புவதற்கு முன்பாகவே சமையலைத் தொடங்க நினைத்தால், நீங்கள் அதை செய்யலாம்.அதற்கு இணையத் தொடர்புடன் வீட்டில் ஒரு கணினியும், அந்தக் கணினியில் ஒரு அனைத்து சாதனங்களும் இணைக்கப்பட வேண்டும். மின்சாரம் மூலமாகவே இணைப்புக் கிடைப்பதால் மிகச் சுலபமாகவே இதனை செய்யமுடியும். தீயணைப்பு நிலையங்கள், சுலபமாக அனைத்து வீடுகளையும் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதுகின்றேன். அது எவ்வளவு தூரம் சாத்தியம் எனத் தெரியாது.

இதில் உள்ள குறைபாடு என்னவென்றால், சக்தி இழப்பும், குறுக்கீடுகளும் தான். தகவல்கள் இழப்பிற்கு சாத்தியம் சிறிது அதிகமே.

ஆனால் இந்தத் தொழில்நுட்பம் நிரூபிக்கப்பட்டால் இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பு: நான் தமிழ்மணத்தில் கடந்த ஒரு மாதகாலமாகவே உறுப்பினராக உள்ளேன். ஏற்கனவே யாராவது இதைப் பற்றி கட்டுரை எழுதியிருந்தால், மன்னிக்கவும்.

கருத்துகள் இல்லை :