NDTV-ன் எக்ஸ் ஃபேக்டரில், அண்ணாப் பல்கலைக்கழகத்தின் புதிய ஆடைக் கட்டுப்பாட்டைப் பற்றி விவாதித்தார்கள். அதில் அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விசுவநாதன், கார்த்திக் சிதம்பரம் (சென்னை ஸ்டுடியோவிலிருந்து) மேலும் இரண்டு பெண் கல்லூரி முதல்வர்கள் (ஒருவர் மும்பை, மற்றொருவர் டெல்லியிலிருந்து), செய்தியாளர் பார்க்ஷ்சா தத்தாவும் விவாதித்தார்கள். மிகவும் சுவாரசியமாக இருந்தது. முதல் சில நிமிடங்களைக் காணும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
இரு கல்லூரி முதல்வர்களும் அமைதியாக, கேட்டதற்கு மட்டும் பதிலளித்தனர். கார்த்திக், துணைவேந்தரைக் கிழி கிழி என்று கிழித்தார்.
"ஏன் இந்த புதியக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது"
"நிறையப் பெண்கள் மிகவும் மோசமாக உடை அணிந்து வருகின்றனர். அவர்களின் டி-சர்ட்ல் கண்ட கண்ட வாசகங்களும் இடம் பெறுகின்றன. அதைத் தடுப்பதற்காகவே"
"எந்த எந்த உடைகள் தடைசெய்யப் பட்டுள்ளன?"
"டி-சர்ட், ஜீன்ஸ், ஸீலீவ் லெஸ் சர்ட் / சுரிதார்..." என வரிசையாகக் கூறினார்.
"ஜீன்ஸ் ஏன் தடை செய்யப்பட்டுள்ளது?"
சில வினாடிகள் மவுனம்.
"அது ஒரு அநாகரீகமான உடை"
மற்ற மூவருக்கும் இதைக் கேட்டு சிரித்து விட்டனர்.
"ஏன் அதனை ஒரு அநாகரீகமான உடை எனக் கூறுகிறீர்கள்"
அவரால் பதில் கூற முடியவில்லை. மவுனத்தை மட்டுமே பதிலாகக் கொடுத்தார். அவை நாகரீகம் கருதி, பார்க்ஷ்சா தத்தா மற்ற இருவரிடம் வேறு கேள்வியைக் கேட்டார். அவர்கள் ஜீன்ஸ் அணிவதால் எந்த விதமான கெடுதலும் ஏற்படுவதில்லை எனத் தெரிவித்தனர்.
எதற்காக அதைத் தடை செய்ய நினைத்தார் என்பதற்கு அவருக்கே தெரியவில்லை. "தவறு கூடச் செய்யுங்கள். ஆனால் அதை ஏன் செய்கிறீர்கள் என்றாவது தெரிந்து கொள்ளுங்கள்". அவர் ஜீன்ஸ் என்ற துணியில் விரசம் இருப்பதாக நினைக்கின்றாரா அல்லது அணிபவர்கள் அதனை விரசமாக அணிகின்றனர் என நினைக்கின்றாரா எனத் தெரியவில்லை. "மிகவும் இறுக்கமாக அணிந்தால் தவறு என அவர் குறிப்பிட்டிருக்கலாம்." பேண்ட், சர்ட்-ஐ ஏற்றுக் கொண்டவர்கள் ஏன் ஜீன்ஸை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
எந்த விதமான உடையிலும் கவர்ச்சியைக் காட்டலாம். தவறு உடையில் இல்லை என அவர் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த விதமானத் துணி என்ற அளவீட்டிற்குப் பதில் அது எவ்விதம் அணியப்படுகின்றது என்ற அளவீட்டினைத் தெரிவு செய்திருக்கலாம்.
அது மட்டுமல்லாமல் ஒரு தனியார் கல்லூரி, கருப்பு நிற பேண்டும், சிவப்பு நிற சட்டையும் அணிந்ததற்காக ஒரு மாணவரை வெளியேற்றி உள்ளது. இரண்டுமே அடர் நிறமுடையது எனக் குறிப்பிட்டுள்ளனர். கருப்பு சிவப்பு என்பது தி.மு.க வின் நிறம் என்பதாலா? :)
ஏற்கனவே சில தனியார் கல்லூரிகள், மாணவர்கள் மாணவிகளிடம் (மாணவிகளும் மாணவர்களிடம்) பேசக் கூடாது. பார்க்கக் கூடாது போன்ற கீழ்த்தரமானக் விதிகளைப் பின்பற்றி வருகின்றன. இதில் இந்தச் சுதந்திரத்தையும் கொடுத்தால் (இது கல்லூரி நிர்வாகத்திற்குச் சுதந்திரமே), மாணவ, மாணவியரின் கதி அதோ கதி தான்.
ஸ்ருசல்
1 கருத்து :
நான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை ஆனால் ஏற்கனவே இதைப் பற்றிய விவாதங்கள் அதிகம் நடந்தேறிவிட்டன.
விசுவானதன் இன்னும் எம்.எஸ்.விசுவநாதன் காலத்தில இருக்கிறார் போல
கருத்துரையிடுக