வெள்ளி, அக்டோபர் 14, 2005

புலம்பெயர்தலால் ஏற்படும் இழப்புகள்

புலம்பெயர்தல் ஆக்கிரமிப்பின் முதல் படி. படையெடுப்புகளின் வழிகாட்டி. புலம்பெயர்தல் (அல்லது வலசை), ஆக்கிரமிப்பு, படையெடுப்பு, இம்மூன்றும் இந்த உலக மக்களை ஒரு விதத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாதித்து வருகின்றன.

புலம்பெயர்தல், இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. இது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கோ, அல்லது ஒரு மாநிலத்திலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கோ அல்லது ஒரு ஊரிலிரிந்து இன்னொரு ஊரிற்கோ இருக்கலாம். இது ஆண்டாண்டு காலமாக (மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது) நிகழ்ந்து வரும் ஒன்றாகும். இதனால் மனிதன் பெற்றது ஏராளம்; அதே நேரத்தில் இழந்தது ஏராளம். பல பிரிவுகள் புதிதாகத் தோன்றியுள்ளன; ஏராளமான இனங்கள் அழிந்துள்ளன. அழிக்கப்பட்ட இனங்கள்
மனிதன் மட்டுமே அல்ல. உலகமே காடாக; மனிதனும் விலங்குகளுடன் விலங்காக இருந்த சமயத்தில் "இப்போதைய" விலங்குகளுடன் சண்டையிட்டு அவற்றை வெற்றிகரமாக அதனுடைய பகுதியிலிருந்து விரட்டி அடித்துள்ளான். இப்போதும் காடுகளில் வெட்டப்படும் ஒவ்வொரு மரமும், கட்டப்படும் ஒவ்வொரு வீடும் ஏதோ ஒரு இனத்தினை அழிக்க போடும் அடிக்கல்லே!

புலம்பெயர்தலுக்குப் பல காரணங்கள் உள்ளன.

1. பொருளாதார ஆதாரமின்மை
2. இயற்கை சீற்றங்கள் அல்லது இயற்கை வளமின்மை (விவசாயம், நீர் ஆதாரங்கள்)
3. அரசியல் காரணங்கள் (குறிப்பிட்ட மதம், சாதி, இன மக்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள்)
4. படையெடுப்பு
5. இன்னொரு நாட்டின் மேல் சொந்த விருப்பு. (இப்போது இருப்பது போல; எல்லோரும் வெளிநாடு செல்வதனால், தானும் செல்ல வேண்டும் என்ற வேட்கை. இதைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்)

ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளில் கடந்த சில ஆண்டுகளாகத் தான் தமிழன், அதிகமாக, பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து வருகிறான். புலம்பெயர்தல் இந்தக் காலத்தில் சாதாரணமாகி விட்டாலும், இதனால் பிற்காலத்தில் இழக்கப் போவதைப் பற்றி எனக்குத் தெரிந்த சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன். இப்போதே நமக்கு தெரியாத பலவற்றை இழந்து விட்டு தான் வெற்றிகரமாக, தமிழினமாக இங்கே வாழ்ந்து வருகிறோம். ஆனால், இந்த நிலையை அடைவதற்கு முன்பு நாம் எவற்றையெல்லாம் இழந்தோம் என்பதற்கு வரலாற்றுப்பதிவு கிடையாது. நாம் ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு மொழி பேசி வந்திருக்கலாம். (தற்சமயத்திற்கு கல்தோன்றா முன் தோன்றா.. என்பதனை மறந்து விடுங்கள்) அங்கிருந்து இங்கே வந்து பலவற்றை இழந்து இத்தகைய வாழ்வைப் பெற்றிருக்கலாம் (வாழ்வு என்பது நம்முடைய மொழியாக, கலாச்சாரமாக, செய்யும் தொழிலாக இருக்கலாம்). இவற்றில் முதல் இரண்டைத் தான் இவ்வுலகில் எல்லோரும் கட்டிக் காக்க விரும்புவது. இரண்டிலுமே மொழிக்குத் தான் முதல் உரிமை. வெகு அரிதாகவே பரம்பரைத் தொழிலைக் காக்க சிலர் முயல்வதும் உண்டு. அது தவறு எனக் கூற வரவில்லை. மற்ற பழக்க வழக்கங்ளான கோபம், ஆத்திரம், வெறி, சிரிப்பு, ... எல்லாம் பரிணாம வளர்ச்சியினால் (பரிணாம வளர்ச்சி என்பது சரியா தவறா எனத் தெரியவில்லை) பெற்றுக் கொள்ளும் மனிதன் முதலில் வாழ்வில் கற்றுக் கொள்வது ஒரு மொழியாக இருப்பதனால்அந்த ஆர்வத்திற்குக் காரணமாக இருக்கலாம். அதனால் தான் அதனை உயிர் உள்ளவரை மறக்காமல் காக்க விரும்புகின்றான்.

சரி ஒருவன் (ஒருவன் தான், ஆயிரக்கணக்கானோர் அல்ல) வேறு ஒரு நாட்டிற்குப் புலம்பெயர்கிறான் (உதாரணத்திற்கு இந்தியாவிலிருந்து ஸ்பெயின் என வைத்துக் கொள்வோம். அவனுக்கு ஆரம்பத்தில் இந்த மூன்றுமே (மொழி, கலாச்சாரம், தொழில்) முக்கியமாகப் படலாம். ஆனால் தொழிலை சில ஆண்டுகளில் இழக்க வேண்டியதிருக்கும். கலாச்சாரம் அவன் உயிருடன் இருக்கும் வரை வாழ்ந்திருக்கும். மொழியினை அவன் அரும்பாடுபட்டு தன்னுடைய மகனுக்கோ / மகளுக்கோ கற்றுக் கொடுக்கலாம. ஆனாலும் அந்த மொழியையும் அவன் அடுத்த தலைமுறையிலோ அல்லது அதற்கு அடுத்தத் தலைமுறையிலோ இழக்க வேண்டியதிருக்கும். இது நிச்சயம்.

கலாச்சாரமும், மொழியும் காக்கப்படவேண்டுமானால், புலம்பெயர்தல் கூட்டமாக நடக்க வேண்டும். அப்போதும் கூட கலாச்சாரமும், மொழியும் ஓரளவிற்குத் தான் காக்கப்படும். கலாச்சாரம் சில பத்தாண்டுகள் நிலைத்திருக்கலாம். மொழி வாழ்ந்திருக்கும் ஆனால் பேச்சளவில் மட்டுமே. அரிதாகவே எழுத்தளவிலும் இருந்து மொழி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். அதற்கு புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருக்க வேண்டும் அல்லது புலம்பெயர்ந்த நாடும் தொழில்நுட்பத்தில் சிறப்பாக வளர்ச்சியடைந்த நாடாக இருந்து, அந்த நாட்டு மக்களும் புலம்பெயர்ந்தவர்களுடைய மொழி, கலாச்சாரத்தை ஓரளவிற்காவது போற்றுபவர்களாக இருக்க வேண்டும் (இதற்கு வட அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளைக் குறிப்பிடலாம்). அல்லது புலம்பெயர்ந்த மக்கள் ஒடுக்கப்பட்டு, எழுச்சியடைந்திருக்க வேண்டும்.

இழந்தவர்களுக்கு உதாரணமாக தமிழகத்தில் தெலுங்கு பேசுபவர்களைக் குறிப்பிடலாம் (இது எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்படவில்லை). அவர்கள் எப்போது இங்கு புலம்பெயர்ந்தார்கள் என எனக்குத் தெரியாது. ஏதாவது வரலாற்று குறிப்புகள் இருக்கலாம். கலாச்சார அளவில் தமிழர்களுக்கும் அவர்களுக்கும் அதிக வேறுபாடு கிடையாததால், அதில் எந்த சிக்கலும் இல்லை. தொழில் வேறு வேறு தொழில்கள் தான் புரிகின்றனர் (ஏன் இந்த உலகத்தில் அனைவருமே; இப்போது தொழில் இன / மொழி அடிப்படையில் அல்ல). ஆனால் மொழியில் பேச்சளவில் மட்டுமே இருக்கின்றனர். பெரும்பாலோனோருக்கு தெலுங்கில் எழுதுதவோ, படிக்கவோ இயலாது. ஆந்திராவில் உள்ளவர்களிடமே அவர்களால் சரளமாகப் பேச முடியாது. இது தான் புலம்பெயர்தலுக்கு அவர்கள் கொடுத்த விலை. பேச்சளவிலாவது இருக்கக் காரணமே, அவர்களின் கணிசமான எண்ணிக்கை. அவர்கள் அதை மறந்தாலும் மற்றவர்கள் அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவது தான். ஏன்? தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுபவர்கள், தெலுங்கு திரைபடங்களையே பார்ப்பதில்லை என நினைக்கிறேன். இப்போது இருப்பவர்களும் இதை ஒரு இழப்பாகக் கருதுவது கிடையாது. காரணம், தலைமுறை இடைவெளி. ஆரம்பத்தில் புலம்பெயர்கின்றவர்களுக்கு இருக்கின்ற வேட்கை அடுத்து வருபவர்களுக்கு அவ்வளவாக இருப்பதில்லை.

இன்று சிங்கப்பூரிலும், இலங்கையிலும், இன்ன பிற நாடுகளிலும் தமிழர்கள் எழுதவும், படிக்கவும் தெரிந்துள்ளார்களாயானால் அதற்குக் காரணம் அவர்களின் எண்ணிக்கையும், அவர்களுக்கு அந்தந்த சமயங்களில் கிடைத்த சுதந்திரமும் தான். அந்த சுதந்திரத்திற்குத் தடை வரும்போது, அது வேட்கையாக மாறி இன்னும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றது.

இன்னொரு உதாரணம் பெங்களூர். இங்கேயே பிறந்து வளர்ந்த தமிழர்கள் எத்தனை பேர் தமிழைக் கற்றுக்கொள்கிறார்கள் எனக் கேட்டால் மிக மிகக் குறைவே. இங்குள்ள தமிழர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டும். அவர்கள் தமிழ் பேசலாம் (வீட்டில் அல்லது உறவினர்களிடம் மட்டும்); திரைப்படங்கள் பார்க்கலாம். பாடல்கள் கேட்கலாம். ஆனால் எழுதவோ, படிக்கவோ தெரியாது. அவர்களுக்கு அதில் ஆர்வம் இல்லை போலும். ஒருவேளை, அதிகமானக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அது அவசியம் எனக் கருதி தெளிவடைவார்கள் என நினைக்கிறேன். இதே நிலை நீடித்தால், அடுத்த தலைமுறையினர், சுத்த கர்நாடக மக்களாக மாறி, தமிழகத்திற்கு எதிரான நிலையைக் கூட எடுப்பார்கள். (எனக்கே பலரைத் தெரியும்) இது தவறு எனக் கூறவில்லை. இதுவும் ஒரு வாழ்வியல் கோட்பாடு தான்.

இதே நிலைமை தான் மும்பை, டெல்லி முதலான நகரங்களில் வாழும் தமிழர்களுக்கு.

நானே கூட வெளிநாட்டிலேயே பல ஆண்டுகள் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், தமிழ் மொழியின் சுவையயும், தமிழ் கலாச்சாரத்தின் அருமையை என் புதல்வர்களுகம் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பி அவர்களை தமிழ் புத்தகங்ளை எப்பாடு பட்டாவது படிக்கச் சொல்லலாம். தமிழைப் பயிற்றுவிக்க, தனியாக சிறப்பு வகுப்புகளுக்கும் அனுப்பலாம்.

ஆனால், அவர்களின் அடுத்த தலைமுறை அதே உணர்வுடன் இருக்குமா என்பது ஒரு கேள்விக்குறியே.

சரி மொழி, கலாச்சாரத்தோடு இந்த சிக்கல் முடிந்ததா என்றால் இல்லை. இதனைத் தவிர முக்கியமான ஒன்று அந்த மண்ணின் மைந்தர்களின் (அல்லது நீண்டகாலமாக அங்கே வாழ்பவர்கள்) காழ்ப்புணர்ச்சி. எப்போதுமே, புலம்பெயர்ந்த மக்களுக்கு, அந்த நாட்டு (மாநிலம், எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்) மக்களை விட முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். அதனால், அவர்களின் வாழ்க்கைத் தரம் வேகமாக உயரும். இது 10 ஆண்டுகளில் நிகழலாம். அல்லது 50 ஆண்டுகளிலும் நிகழலாம். ஆரம்பத்தில் இது ஒரு பெரிய விசயமாக அந்த மண்ணின் மைந்தர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர்களுக்கு இது போன்று குறைந்த ஆண்டுகளில் வளமையடைந்த சமுதாயத்தைப் பார்க்கும் போது அவர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி அதிகரிக்கும். அந்த காழ்ப்புணர்ச்சி பல்வேறு வடிவங்களில் வெளிவரலாம். அது அவர்கள் வாழும் இடத்தையும், அங்குள்ள மக்களின் மனநிலையையும் பொறுத்தது. இப்போதுள்ள நிலையே எப்போதும் தொடர்ந்தால் நல்லதே. ஆனால் வாழ்க்கை நிலையற்றது. கடந்த 40 வருடங்களில் புலம்பெயர்ந்தவர்கள் மீதான தாக்குதல் பெரிய அளவில் ஏதும் நிகழாமலிருந்திருக்கலாம். ஆனால் 40 வருடங்கள் என்பது குறைந்த கால அளவு. மனிதனின் வாழ்வே நமக்கு குறிப்புகளினால் 2500 ஆண்டுளாகத்தான் அறிய முடிகிறது. பூமி தோன்றி 2 கோடி வருடங்களுக்கும் மேலாகி விட்டது. 2500 ஆண்டுகள் என்பது அதில் சிறிய பங்கு. இனிமேலும் ஒரு கலவரம் நிகழ வாய்ப்பில்லை; அனைவரும் ஓரளவிற்கு கல்வியறிவு பெற்றுவிட்டனர் என நினைத்திருந்தேன். ஆனால் குஜராத்திற்கு பின் அந்த எண்ணத்தை மாற்ற வேண்டாதாகி விட்டது. கலவரங்கள் உடனே தொலைதொடர்பு வசதியினால் வெளிஉலகத்திற்கு தெரிந்து விடும். ஆனால் அதனைக் கண்டிப்பதற்கு வெளிஉலகம் தயாராக இருக்க வேண்டும். அல்லது அதனைக் அக்கறையுடன் கேட்கும் நிலையிலாவது இருக்க வேண்டும். ஆனால் ஆரம்பத்தில் புலம்பெயரும் மக்களுக்கு ஒரு வித பய உணர்வு கட்டாயாகமாக இருக்கும். ஆண்டுகள் செல்ல செல்ல அவர்களும் புதிய சமுதாயத்துடன் அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிம்மதியான வாழ்வைப் பெறலாம். அல்லது சுத்தமா ஒதுக்கப்படலாம்.

சில நேரங்களில் சென்ற மண்ணிற்கே உரிமை கொண்டாடுவதும் நிகழும். அது புலம்பெயர்தலின் அடுத்த நிலையான ஆக்கிரமிப்பு. எப்போதும் புலம்பெயர்வதால் மூன்று விதமான விளைவுகள் ஏற்படும். புலம்பெயரும் மக்கள் அந்த மண்ணினை ஆக்கிரமிக்கலாம். அல்லது அங்குள்ள பெரும்பான்மையானவர்களால் அடக்கப்படலாம். அல்லது சேர்ந்து வாழலாம்.

ஒன்று மட்டும் நிச்சயம். இந்த மண் யாருக்குமே சொந்தமில்லை. உங்கள் நாடு, மாநிலம், ஊர், மொழி என நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது உண்மையிலேயே உங்களுடையதாக இருந்திருக்காது. வேறு யாருக்காவது சொந்தமாக இருந்திருக்கும். அனைவருமே தக்கன தப்பிப்பிழைத்தல் (Survival of the fittest) என்ற தத்துவத்தின் அடிப்படையில் வாழ்ந்து வருகின்றோம்.

நானே (என் முன்னோர்கள்) கூட எங்கிருந்தோ வந்து என்னுடைய அடையாளத்தை இழந்து தமிழ் மொழியைக் கற்று, தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்திருக்கலாம். ஆதலால், மக்களே உங்கள் சொந்த நாட்டிற்கு அல்லது ஊருக்குத் திரும்புங்கள்; உங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும் பேணிக் காப்பாற்றுங்கள்; ஒரு பள்ளியைத் துவக்கி உங்கள் வருங்கால சந்ததியினருக்கு தமிழைக் கற்பியுங்கள்; உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள்; என என்னால் எந்த அறிவுரையும் கூற முடியாது. அது அவரவரின் விருப்பத்தைப் பொருத்தது. நான் தமிழ் மொழியையும்,
கலாச்சாரத்தையும் நேசிப்பவன். நான் என்னுடைய வருங்கால சந்ததியினரும் அதனையே பேணிக் காக்க வேண்டும் என விருப்பப்படுகின்றேன். தமிழ் மொழி மற்றும் மக்களின் அருமையையும், அவசியத்தினையும் ஓரளவிற்கு அறிந்தவன். ஆனால் அதற்காக எந்த பிரிவினையிலும் ஈடுபடமாட்டேன். நீங்களும் நேசித்தால், நல்லது. உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

ஆனால் இந்த புலம்பெயர்வால், உலகத்தின் பெரும்பாலான உயிரனங்களை அழித்து விட்டோம் என்பதனை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியதிருக்கிறது. அதிலும் முக்கியமாக இந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியினால். மனிதனின் இந்த அபாரத் தொழில்நுட்ப வளர்ச்சி, மனிதனுக்கே சாவு மணி அடிக்கப் போகின்றது. ஒரு வேளை மனித இனமே அழிந்து, மீண்டும் ஆரம்பத்தில் இருந்து துவக்கினால் நன்றாக இருக்குமோ? இந்த பூமியைக் காக்க!

இந்தக் பதிவைப் பற்றிய உங்களது கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

ஸ்ருசல்

2 கருத்துகள் :

சிவக்குமார் (Sivakumar) சொன்னது…

மிக நல்ல பதிவு. இரசித்தேன்.

பெயரில்லா சொன்னது…

உஙகள் பதிவு மிக அருமை.

னானும் புலம்பெயர்ந்த தெலுன்கர் தான்.

பாலா.ஆர்