வெள்ளி, நவம்பர் 04, 2005

மங்கலான தீபாவளி

அது என்னவோ தெரியவில்லை சிறுவனாக இருக்கும் போது வரும் ஆசைகளும், கனவுகளும் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் போய்விடுகின்றன. சிறுவயதில் தீபாவளி என்றால் ஆனந்தம். பாட்டி நிறைய பலகாரங்கள் செய்து வைத்திருப்பாள். ஏதாவது ஒரு தீபாவளிக்கு புதுத் துணி கூட கிடைக்கும். பாட்டியுடன் சினிமா செல்வதற்கும் வாய்ப்புக் கிடைக்கும். தீபாவளியன்று காலை வரைத் தெரியாது இந்தத் தீபாவளிக்கு வெடி உண்டா அல்லது ஒரு துப்பாக்கியுடனும் ஒரு பாக்கெட் சீனி வெடியுடனும் முடிந்து விடுமா என்று. ஆனால் எப்போதும் தீபாவளி சோகமாக இருந்ததில்லை. சந்தோசம் கரைபுரண்டு ஓடும். அப்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். நல்லா சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு நிறைய துணி வாங்கி அணிய வேண்டும். நிறைய வெடி போட வேண்டும் என! ஆனால் இப்போது? அந்த ஆசையே இல்லை. தீபாவளி, மற்றும் ஒரு நாள் என்ற அளவிற்கு ஆகிவிட்டது. துணி எடுக்க பணம் இருக்கிறது ஆனால் ஆசை இல்லை. எனக்கென்று துணி இந்த முறை எடுத்துக் கொள்ளவும் இல்லை. வெடி வாங்க காசு இருக்கிறது. வாங்கவில்லை. ஏன் ஒரு வெடி கூட போடவில்லை. ஏன் இந்த மாறுதல் என நினைத்துப் பார்த்தால் என்னால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு வேளை, இப்போது நான் சாதிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் சில விசயங்களும் (கனவுகளும்), சாதித்த பின் அர்த்தமில்லாமலேயே போய்விடுமோ? அப்போது துணி, வெடி வாங்க வேண்டும் அதற்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவானது இப்போது அர்த்தமிழந்துவிட்டன. அதே போல இப்போது நினைத்திருக்கும் (பொருளைப் பற்றியது) கனவுகளின் நிலை?

தீபாவளியன்று என்னை மூன்று விசயங்கள் பாதித்தன. முதலாவது.

இரவு 12.30 மணி வரை ஊரைச் (ஸ்ரீவில்லிபுத்தூர்), சுற்றி விட்டு நண்பர்களுடன் வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தேன். வரும் வழியில் ஒரு மின்சாரக் கம்பத்தில் இரண்டு ஆட்டுக்குட்டிகள் கட்டப்பட்டிருந்தன. அருகில் மூன்று பேர் ஒரு ஆட்டினைக் கிடத்தி கால்களை அறுத்துக் கொண்டிருந்தனர். அருகில் நின்று ஒரு பெண்மணி பார்த்துக் கொண்டிருந்தார். நான் வருவதற்கு ஒரு 10 நிமிடங்களுக்கு முன்பாக அந்த ஆட்டிற்கு உயிர் போயிருக்க வேண்டும். அந்த ஆட்டின் தலை இருக்கிறதா எனப் பார்த்த போது, அந்தத் தலையானது அருகில் கட்டப்பட்டிருந்த இரு ஆடுகளுக்கு முன்பிருந்த ஒரு சிமெண்ட் மேடையின் மீது வைக்கப்பட்டிருந்தது. தலைக்கும், ஆட்டுக்குட்டிகளுக்குமான இடைவெளி ஒரு மீட்டர் கூட இராது.

எங்கள் ஊர் பண்டிகை நாட்களில் தெரு அல்லது ரோடுகளிலேயே சிலர் ஆடுகளை அறுப்பர். யாராவது ஒருவர் தனது பணத்தினை செலவிட்டு இரண்டு அல்லது மூன்று ஆடுகளை இரண்டு தினங்களுக்கு முன்பாக வாங்கி பண்டிகை தினத்தன்று அதன் கறியை விற்பனை செய்வார். அந்த வகையில் தான் இதுவும். அந்தப் பெண்மணி அந்த ஆடுகளுக்கு தற்காலிக சொந்தக்காரராக இருந்திருக்க வேண்டும்.

அருகில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் எந்த விதமான சத்தமும் எழுப்பாமால் மிக அமைதியாக இருந்தது, அதற்கு ஏற்படப்போகும் மரணத்திற்கு தயார்படுத்திக் கொள்வதைப் போல இருந்தது. முதல் ஆடு வெட்டப்படும் போது, மற்ற இரு ஆடுகளும் எந்த விதமான உணர்வினைப் பரிமாறிக்கொண்டிருக்கும்? அதுவும் அந்த இரு ஆடுகளுக்கு முன்பாக, வெட்டப்பட்ட ஆட்டின் தலை! 15 நிமிடங்களுக்கு முன்பு வரை உயிரோடிருந்த ஒரு ஜீவன் இப்போது இல்லை. அந்த ஆடுகளுக்கு கண்டிப்பாக இரண்டு நாள் அல்லது ஒரு நாள் பழக்கம் கண்டிப்பாக இருந்திருக்கும். அவ்வாறு பழகிய ஜீவன்களில் ஒன்று வெட்டி வைத்திருக்கும் போது அவற்றின் மனதில் எம்மாதிரியான பய உணர்வு வளர்ந்திருக்கும்? அவை ஏன் ஓடுவதற்கு முயற்சிக்கவில்லை (கயிறு கட்டியிருந்தாலுமே...)? ஏன் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை? அந்த இரண்டு ஆடுகளில் இன்னொன்றும் கொல்லப்பட்டு விட்டால் அந்த மூன்றாம் ஆட்டின் மனநிலை எவ்வாறு இருக்கும்?. என்றெல்லாம் நினைத்துப் பார்த்த போது பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. அந்த ஆடுகளுக்கு முன்பே அதன் இறப்பு தெரிந்திருக்குமா என உணர முடியவில்லை. சில பண்டிகைகளில் கொட்டு, மேளம் அடிக்கும் போது ஆடுகள் மிரண்டு அங்குமிங்கும் அலை பாயும். அந்த மேளச் சத்தத்தில் அதன் பயத்தினை தெளிவாக அறிய முடியும். தீபாவளிக்கு அப்படி எந்த விதமான சத்தங்களும் கிடையாது.

இதே நிலையில் மூன்று மனிதர்கள் கட்டப்பட்டிருந்தால் அவர்கள் எம்மாதிரியாக நடந்து கொண்டிருப்பார்கள்? சங்கிலியிலேயே கட்டிப் போட்டிருந்தாலும், திமிறி இருப்பார்கள். அழுதிருப்பார்கள். அவர்களிடம் கடைசி வரைக் கெஞ்சி இருப்பார்கள். நீ போ நீ போ என விலகியிருப்பார்கள். இல்லையா?

ஏற்கனவே மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி இருந்த எனக்கு இதனைப் பார்த்த பின்பு முட்டை சாப்பிடுவதற்கும் மனசு வரவில்லை.

மீதம் அடுத்த பாகத்தில் ...

ஸ்ருசல்

2 கருத்துகள் :

வானம்பாடி சொன்னது…

ஆடுகளுக்கு உங்களைப் போல பாசம், வருத்தம், சிந்திக்கும் திறன் எல்லாம் உண்டா என்று தெரியவில்லை. பெரும்பாலான விலங்குகள் தமக்கு நேரடியான ஆபத்து வரும்போது மட்டுமே அஞ்சுகின்றன.

Nagarathinam சொன்னது…

அன்புள்ள சுருசால்,
மிக அருமையான மனிதராக இருக்கிறீர்கள். எண்ணத்திலும் எழுத்திலும். உங்களைப் போன்றவர்கள் நிறைய எழுதுவதால் கண்டிப்பாக யாருக்காவது ஒருவருக்காவது பயன் அளிக்கும். நன்றி. சுருசால்.
நாகரத்தினம்

சுதர்சனுக்கு பதில்: ஆட்டுக்கு தன் குட்டியை அடையாளம் காணத் தெரிகிறது. இறந்த காகத்துக்காக அதன் இனமே கூடுகிறது. ஆட்டுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது சுதர்சன்.