திங்கள், நவம்பர் 21, 2005

இன்போசிஸ் நாராயணமூர்த்தி ரூபாய் 80-க்கு

சென்ற சனிக்கிழமை பெங்களூர் பேலஸ் கிரவுண்ட்ஸில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். பெங்களூரிலே வாசம் செய்தாலும், இங்கு புத்தகக் கண்காட்சி நடைபெறுவது சில தமிழ்மணம் வாசகர்களின் பதிவினைப் படிக்கும் வரைத் தெரியாது. நன்றி (அலெக்ஸ் பாண்டியன், பத்ரி). சனிக்கிழமை கூட்டம் அதிகமாக இருக்கும் என்று சிறிது நேரத்திற்கு முன்னதாக செல்ல வேண்டும் என நினைத்து 11 மணிக்கே கண்காட்சி நடக்கும் இடத்தை அடைந்தேன். ஆனால் எனது எதிர்பார்ப்பிற்கு எதிர் மாறாக 30-40 பேர் கூட அங்கு இல்லை.

முதலில் சென்ற இரு கடைகளிலும் கடன் அட்டை வாங்க மறுத்து விட்டதால் எனக்கு ஏமாற்றம். கையில் 1000 ரூபாய் தான் இருந்தது. வெளியே சென்று ATM-ல் பணம் எடுக்கலாம் என்றால் 2 கி.மீ தூரம் செல்ல வேண்டும். மேலும் நுழைவு சீட்டு திரும்ப எடுக்க வேண்டும். பார்க்கிங் பணம் திரும்பக் கட்ட வேண்டும். சரி அடுத்த ஸ்டால்களில் முயற்சித்துப் பார்க்கலாம் என்று சென்றேன். காலச்சுவடு பதிப்பகத்தாரின் ஸ்டாலுக்குச் சென்று பார்வையிட ஆரம்பித்தேன். பாதி ஸ்டால்களை சுந்தர ராமசாமியின் புத்தகங்கள் ஆக்கிரமித்திருந்தன. நாவல்கள் எனக்கு அதிகமான பரிட்சயம் கிடையாது. எனக்கு சுந்தரா ராமசாமியின் புளிமரத்துக் கதை, ஜே.ஜே சில குறிப்புகள் புத்தகங்கள் மட்டும் தான் தெரியும். கதை புத்தகங்களில் எனக்கு உடன்பாடு இல்லாததால், கட்டுரைகள் மாதிரியான புத்தகங்கள் வாங்க விரும்பினேன். ஆனால் கடைக்காரர் அந்த நாவல் புதிதாக வந்துள்ளது; இந்த நாவல் புதிதாக வந்துள்ளது என்று கூறி நான் அவற்றைப் படித்திருக்கிறேனா எனக் கேட்டார். இல்லை எனக் கூறிவிட்டு நகர்ந்தேன். கடைசியாக சே குவாராவின் புத்தகமும், குமரி நீட்சி புத்தகமும் வாங்கினேன். நல்ல வேளை கடன் அட்டை வாங்குவதாகத் தெரிவித்ததால் பிழைத்தேன்.

மணி 12 ஆகியிருந்தது.

அடுத்த சில கடைகளிலும் வைரமுத்து, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் புத்தகங்களே அலங்கரித்திருந்தால் நகர்ந்து கொண்டே சென்றேன். ஒரு ஸ்டாலில் என் மாமாவிற்கு யவன ராணி வாங்கிவிட்டு அங்குள்ளவரிடம் பேச்சுக் கொடுத்தேன். வரவேற்பு எப்படி உள்ளதென எனக் கேட்டது தான் தாமதம். மடமடவென தனது ஏமாற்றத்தைக் கொட்ட ஆரம்பித்தார்.

ஸ்டாலுக்கு நாங்கள் 10000 ரூபாய் கொடுத்து அனுமதி பெற்றிருக்கிறோம். தங்கும் வசதி, உணவு, வாகன உள்ளிட்டவற்றை நாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் சேர்த்து 16000 க்கும் மேலாகி விட்டது. ஆனால் இந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 20000 க்கும் மேல் விற்பனையாகவில்லை. போன வருடம் குறைந்த அளவிலான தலைப்பில் புத்தங்கங்கள் இருந்தாலும் ஓரளவிற்கு நல்ல விற்பனை நடந்தது. ஆனால் இந்த முறை பல புதிய தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தும், விற்பனை மிக மிகக் குறைவே என்றார்.

சென்னையில் கண்காட்சி என்றால் நிற்க இடமிருக்காது. ஷிப்ட் முறையில் நாங்கள் பணிபுரிவோம். ஆனால் இங்கு அந்த கூட்டத்தில் 10 ல் ஒரு பங்கு கூட இங்கு இல்லை என்று வருத்தப்பட்டார்.

"நீங்கள் விளம்பரம் செய்திருக்கலாமே? எனக்கே கண்காட்சி நடப்பது நேற்று தான் தெரியும்", என்றேன்.

"எல்லாம் கொடுத்திருக்கிறோம் சார். இத நடத்திறவங்க AD கொடுத்திருந்தாங்க. இங்க தமிழ் புத்தகக் கடைக்காரர்கள் எல்லாம் சேர்ந்து தினத்தந்தியில வேற AD கொடுத்திருக்கிறோம்." என்றார்.

எனக்கு ஒன்று புரிந்தது. வாங்கும் ஆசையுள்ள, பொருளாதாரத் திறனுள்ள வாசகர்கள் பெரும்பாலும் ஆங்கில நாளிதழ்கள் படிப்பவர்களே. ஒரு வேளை டைம்ஸ் ஆப் இண்டியாவில் கொடுத்திருந்தால் நல்ல வரவேற்பு இருந்திருக்கும் என எனக்குப் பட்டது. ஆனால் அவரிடம் சொல்ல அது உகந்த நேரம் அல்ல என நினைத்து அடுத்த ஸ்டாலுக்கு நடையைக் கட்டினேன்.

அடுத்த ஸ்டாலில் வரலாறு, அறிவியல் என்று கதைகள் அல்லாத தலைப்பில் பல புத்தகங்கள் தென்பட்டன. எனக்குப் பிடித்திருந்தது. "அசோகமித்திரனின் கட்டுரைகள் (பாகம் ஒன்று, இரண்டு)", "மூன்றாவது கண்" புத்தகங்கள் வாங்கினேன். என் நண்பன் இரு புத்தகங்கள் எடுத்துக் கொண்டான். புத்தகங்கள் நல்ல முறையில் (Font, காகிதம்) அச்சிடப்பட்டிருந்ததும் எனக்குப் பிடித்திருந்தது.

அடுத்த ஸ்டாலில் ஜெயகாந்தனின் "சிந்தையில் ஆயிரம்" பாகம் 1 மற்றும் 2 புத்தகங்கள் என்னைக் கவர்ந்தன. ஆனால் முதல் பாகத்தில் பெரும்பாலும் சிறுகதைகள் இருந்ததால் இரண்டாம் பாகம் மட்டும் கிடைக்குமா எனக் கடைக்காரரிடம் கேட்டேன். அவர் போனை எடுத்தார்.

"ஹலோ"

....

"ஹலோ, நாங்க மலேசியாவில (????) இருந்து பேசுறோம்."

....

"ஜெயகாந்தனின் "சிந்தையில் ஆயிரம்" புத்தகம் இன்னும் 10 காப்பி அனுப்பி வைங்க."

....

"ஆமா. சரி, சிந்தையில் ஆயிரம் புத்தகம் இரண்டாம் பாகம் மட்டும் கேக்கறாங்க கொடுக்கலாமா?"

....

"அப்படியா? இல்ல... இங்க ஒருத்தர் கேக்கறார்."

...

" Very Poor" (அவர் Response எப்படி இருக்கிறது எனக் கேட்டிருக்க வேண்டும்)

...

"சரி. பரவாயில்லை. அத மட்டும் அனுப்பிச்சிடுங்க. ஆமா"



போனை வைத்தார்.

"சார். தனியா கொடுக்க முடியாதுன்னு சொல்லிடாங்க சார்", என்றார். பலத்த யோசனைக்குப் பிறகு, இரண்டையும் எடுத்துக் கொண்டேன். கார்டை நீட்டினேன். சிறிது நேரம் காத்திருக்கும் படி கூறினார். அருகில் உள்ள கடையில் காபி கிடைக்குமா எனக் கேட்டேன்.

"No Power" எனப் பதிலளித்தார் காபி போடுபவர்.

புத்தகங்களை அங்கு வைத்து விட்டு வெளியே சென்று காபி குடிக்கலாம் என கிளம்பினோம்.

"சார். இத இங்க வச்சிட்டு போறோம். பாத்துக்கங்க", என்று கடைக்காரரிடம் சொன்னேன்.

"யாரும் வரமாட்டங்க. பயப்படாம போங்க" என்று விரக்தியுடன் சொன்னார்.

வெளியே சென்று பார்த்தால் ஆச்சர்யம். நூறு பேருக்கு மேல் அங்குள்ள புட் கோர்ட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு கறும்புச் சாறை மட்டும் குடித்து விட்டுத் திரும்பினோம். புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். மணி 1.30 ஆகியிருந்தது. கிரிக்கெட் மேட்ச் ;) ஆரம்பித்து விடும் என வீட்டிற்குக் கிளம்பினேன். வீட்டிற்கு வரும் வழியில் தான் சின்னசாமி ஸ்டேடியம். ஸ்டேடியத்தின் வாசலில், உள்ளே நுழைவதற்கு பலத்த கூட்டம். எனக்கு இந்த முறை டிக்கெட் கிடைக்கவில்லை. ஆபிஸில் கேட்டதற்கு கார்ப்பரேட் டிக்கெட் மட்டும் இருக்கிறது. விலை 4000 என பதிலளித்தனர். "ஆ! 4000 ரூபாய்க்கு நான் ஒரு புது டி.வி வாங்கி அதுல வருசம் முழுவதும் மேட்ச் பார்ப்பேன்", எனக் கூறிவிட்டு வந்தது ஞாபகம் வந்தது. ஒரு வாரத்திற்கு முன்பே மேட்ச் நடப்பது தெரிந்திருந்தால் எப்படியாவது டிக்கெட் கிடைத்திருக்கும்.

சரி தலைப்பிற்கு வருகிறேன். என் நண்பன் "இன்போசிஸ் நாராயண மூர்த்தி" என்ற புத்தகத்தை வாங்கியிருந்தான். அதனை வீட்டிற்கு வந்து அதன் முதல் பக்கத்தைப் புரட்டி பார்த்த போது இவ்வாறாக அச்சிடப்பட்டிருந்தது.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி
விலை: ரூபாய் 80


அடுத்த புத்தகத்தில்

மூன்றாவது கண்
விலை: ரூபாய் 50


என்றிருந்தது, ஆச்சர்யமாக இருந்தது. (இதனை வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே குறிப்பிடுகின்றேன்)

ஸ்ருசல்

4 கருத்துகள் :

அன்பு சொன்னது…

அன்று பத்ரி, அரங்கு மிக அருமையாக அமைக்கப்படுள்ளது என்று சிலாகித்து எழுதியிருந்தார்... இப்படி கூட்டமேயில்லைன்னுட்டீங்களே....:(

உங்க நண்பரும் அட்டைல எத்தனை பூஜ்யம் இருக்குதுன்னு எண்ணினாரா:)

ஸ்ருசல் சொன்னது…

ஆம் அன்பு,

நண்பர் எண்ணிப் பார்த்து, ஆரம்பத்தில் பத்து கோடி என்று சொன்னார். நான் இருக்காது 1000 அல்லது 10000 கோடியாக இருக்குமென்றேன்.

கடைசியில் அது 1000 கோடி தான் எனத் தெரிந்தது. 1000 கோடி தானே?

BTW, புத்தகம் எப்படி இருந்தது? நான் படிக்கவில்லை.

இந்த மாதிரி புத்தகங்கள் உண்மையிலேயே உதவியாக இருக்கின்றனவா?


ஒரு வேளை ஞாயிற்றுக்கிழமை கூட்டம் இருந்திருக்கலாம். இது நான் சனிக்கிழமை கண்கூடப் பார்த்தது. அங்கு ஸ்டால் போட்ட அனைவருமே சொன்னது. மேலும் கிரிக்கெட் மாட்ச் இருந்தனால் இருக்கலாம்.

ஸ்ருசல்

Badri Seshadri சொன்னது…

இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி ரூ. 60தான்.

அட்டையில் 10,000 -> 10,000 கோடி.

புத்தகம் உபயோகமாக உள்ளதா இல்லையா என்று நீங்கள் படித்துப்பார்த்து சொன்னால் சந்தோஷப்படுவேன்.

அதேபோல நீங்கள் வாங்கியுள்ள பிற கிழக்கு பதிப்பகப் புத்தகங்களையும் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லவும்.

நன்றி.

ஸ்ருசல் சொன்னது…

பத்ரி,

உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.

நிச்சயமாக புத்தகங்களைப் படித்துவிட்டு என்னுடைய கருத்துகளைச் சொல்கிறேன்.

'மூன்றாவது கண்' படித்து முடித்து விட்டேன். பத்திரிக்கைகள் மட்டுமல்லாமல் செய்தி நிறுவனங்கள் (தொலைகாட்சி) செயல்படும் விதம் பற்றியும் குறிப்பிட்டிருந்தது உபயோகமாக இருந்தது. அச்சித் தொழில் பற்றிய அறிமுகமும் உதவியாக இருந்தது (உ.ம் Gutenberg)

ஆனாலும் பல விசயங்கள் மேலோட்டமாகச் சொல்லப்பட்டிருந்தாகத் தோன்றியது.
ஒரு வேளை பத்திரிக்கை நிறுவனங்கள் பற்றிய அறிமுகம் கொடுப்பது மட்டுமே ஆசிரியரின் நோக்கமாக இருந்திருக்கலாம்.

பிழை திருத்துபவர்கள் உபயோகிக்கும் குறியீடுகள் அந்த இடத்தில் தேவையா என்பது எனக்குத் தோன்றியது.

என்னுடைய கண்ணோட்டத்தில் அது அவசியமில்லாமல் இருக்கலாம். ஒரு வேளை, மற்றவர்களுக்குக் கண்டிப்பாக உபயோகமாக இருந்திருக்கும்.

பத்திரிக்கைச் சட்டங்கள் பற்றிய விளக்கம் மிக நன்றாக இருந்தது.

50 ரூபாய்க்கு, it's really worth.

நன்றி.

ஸ்ருசல்