புதன், நவம்பர் 16, 2005

சர்வதேசப் பள்ளிகளில் இந்திய விஞ்ஞானிகள்

நேற்று மதிய உணவருந்தும் போது என்னுடைய சகப்பணியாளர் தன்னுடைய குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த நண்பரே நகரின் (பெங்களூர்) பிரபலமான சர்வதேசப் பள்ளிக்கூடத்தைக் குறிப்பிட்டு அங்கு வருடத்திற்கு எவ்வளவு கட்டணம் என மற்ற நண்பர்களிடம் கேட்டார். அதற்கு இன்னொரு நண்பர் வருடத்திற்கு 35000, நன்கொடையாக 25000, பேருந்து வசதி வேண்டுமானால் அதற்கு வருடம் 10000 சேர்த்துக் கொடுக்க வேண்டும் எனவும் சொன்னார். கேட்ட எனக்கு மயக்கம் வராதக் குறை தான்.

அது எங்களில் பலர் நான்கு வருடங்களுக்கு கல்லூரிப் படிப்பிற்காக செலவிட்ட மொத்த தொகை. அதே தொகையை ஒரு வருடத்திற்கு கட்டணமாக; அதுவும் எல்.கே.ஜிக்கு. இது அவசியமா என நான் கேட்ட போது விவாதம் ஆரம்பித்தது. அந்த மாதிரியான பள்ளிக்கூடங்களில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு இரண்டு முக்கியமான காரணங்களைக் கூறலாம்.

1. தன்னால் முடியாததை தன் குழந்தையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்
2. குழந்தைக்கு கிடைக்கும் விழிப்புணர்வு

தன்னால் முடியாததை தன் குழந்தையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்

என்னுடன் பணிபுரியும் அனைவருமே தங்களது ஊர்களில் அரசு, அல்லது தனியார் பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள். 12 வகுப்பு வரை, அதிகபட்சமாக வருடத்திற்கு 100 ரூபாய் மட்டுமே கட்டியவர்கள். அவர்கள் இப்போது மாதத்திற்கு ஆயிரக்கணக்கில் ஊதியம் பெருகின்றனர். அவர்களால் அவர்கள் குழந்தையை இந்த மாதிரியான பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க முடியும் தான். ஆனால் அது மிக அவசியமா என்பது தான் கேள்வி? சமுதாயத்தில் பெரும்பாலோனோர், தாங்கள் சிறு வயதில் செய்ய முடியாததை தன்னுடைய குழந்தைகளாவது செய்ய வேண்டும் என ஆசைப்படுவார்கள். படிக்க முடியாதவர்கள், தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் எனவும், பள்ளி மட்டுமே முடித்தவர்கள், தங்கள் குழந்தை பெரிய பொறியாளாராக வர வேண்டும் எனவும், கல்லூரியில் படித்தவர்கள் தங்கள் குழந்தை வெளிநாடுகளுக்கு சென்று படிக்கவேண்டும், I.A.S, I.P.S, I.E.S போன்ற பெரிய பதவிகளுக்கு வர வேண்டும் என கனவுகளும், ஆசைகளும் வைத்திருப்பார்கள். அதனை மனதில் வைத்து தங்கள் குழந்தைகளுக்கு கல்வியறிவினைப் போதிப்பார்கள். பலரின் குழந்தைகள் அவர்கள் பெற்றோர்கள் நினைத்தது போலவே சாதித்து விடுவார்கள். துரதிர்சடவசமாக சிலர் அதனை செய்ய இயலாமலும், இன்னும் சில குழந்தைகள் அவர்கள் பெற்றோரின் எதிர்பார்ப்பினை முழுவதுமாக பூர்த்தி செய்யமுடியாமலும் ஏற்பட்டு விடுகிறது. குழந்தைகள் தொடக்கப்பள்ளியில் படிக்கும் போதே, "நல்லா படிச்சு இன்ஜினியர் ஆகணும் சரியா?" என்பதனை பொதுவாக அனைவரின் வீட்டிலும் கேட்க முடியும். இப்போது அது சிறிது மாறி, "நல்லா படிச்சு கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆகணும் சரியா?" என ஆகி உள்ளது.

இது தவறு எனவும் கூறமுடியாது. குழந்தைகள் என்ன சாதிக்க வேண்டும் என்ன நாம் தீர்மானிப்பது போல் ஆகி விட்டது. அவர்களை பல நேரங்களில் குறைத்தே மதிப்பிட்டு, நம்முடைய எண்ணங்களை குழந்தைகளின் மீது திணிப்பது எந்த அளவிற்கு நியாயம்? நீங்கள் உங்கள் குழந்தை என்ஜினியர் ஆக வேண்டும் என்ற உங்களின் எதிர்பார்ப்பைத் திணிக்காமலிருந்தால், ஒரு வேளை அவன் பெரிய விஞ்ஞானியாகி இருக்கக் கூடும். படிக்காத குடும்பத்திலிருந்து வந்த பலரும் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல், தங்களின் சுய பரிசோதனையினால் நல்ல நிலைக்கு வந்துள்ளதை அனைவருமே அறிவோம். ஆனால் பலருக்கும் எந்த மாதிரியான எதிர்பார்ப்பினையும் குழந்தைகளின் மனதில் விதைக்காமல் வளர்த்தால் பிற்காலத்தில் அவர்கள் எப்படி முன்னேறுவார்கள் என்ற அச்சம் இருக்கத் தான்
செய்யும்.

வாழ்க்கை என்பது எந்த ஊரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கமில்லாமல் பயணிக்கிற பாதை தான். அந்தப் பாதையில் பயணிப்பது தான் வாழ்க்கையின் இன்பம் இருக்கிறது. இதில் வெற்றி என்பதும் கிடையாது. தோல்வி என்பதும் கிடையாது. ஒருவரின் வெற்றி மற்றொருவருக்குத் தோல்வியாக இருக்கலாம். பாதையில் உள்ள வழிகாட்டியாக அவர்கள் செல்வதற்கு நீங்கள் உதவியாக இருக்கலாமே தவிர நீங்கள் போட்டு வைத்தப் பாதையில் அவர்கள் செல்ல வேண்டும் என்பதனைத் தீர்மானிக்கக் கூடாது. அவர்கள் தங்கள் திறமையினால் ஆகாயத்தில் பறந்திருக்கலாம். உங்களின் தவறான மதிப்பீட்டினால் அவர்களை கூண்டுக்குள் வைத்திருப்பது நல்லதல்ல. உங்கள் பாதைப்படி அவர்கள் பயணித்தது உங்களுக்கு கடைசியில் சந்தோசத்தை விளைவிக்கலாம் "நல்லது. நான் நினைத்தது போலவே வந்திருக்கிறான்" என்று. ஆனால் அவன் பறக்க வேண்டியவன் என்பதை கடைசி வரை நீங்களும் அவனும் உணராமல் போயிருக்கக்கூடும்.

உதாரணத்திற்கு நீங்கள் படிக்கும் போது ஒரு குறிப்பிட்ட படிப்பில் சேர்வதற்கு எந்த மாதிரியான பயிற்சிகள் எடுக்க வேண்டும், எப்போது பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும், எந்த மாதிரியான புத்தகங்களை படிக்க வேண்டும் என்பது தெரியாமல் இருந்திருக்கலாம். மேலும் சில புத்தகங்கள் வாங்குவதற்கும் வசதியில்லாமல் இருந்திருக்கலாம். இப்போது உங்களுக்கு அவை என்ன என்பது தெரியும், பணம் அதற்கு செலவழிக்க சக்தி இருக்கிறது என்ற காரணத்தினால் உங்கள் குழந்தைக்கு அதற்கான வழிகள் அனைத்தையும் கூறி, நீங்கள் வாங்க நினைத்த புத்தகங்கள் அனைத்தையும் வாங்கி கொடுத்தாலும் உங்களுக்கு இருந்த அந்த ஆர்வம் உங்கள் குழந்தைக்கும் இருக்கும் என சொல்ல முடியாது. அவனுக்கு எதில் ஆர்வமோ அதில் தான் மனம் சொல்லும். ஆதலால் அவர்களுக்கு அதில் ஆர்வம் வந்தால் நலம். நீங்கள் உங்கள் அனுபவ அறிவினைப் பயன்படுத்தி அவர்களுக்கு உதவலாம். இல்லையெனில் அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்க முயலாம். ஆர்வம் இல்லாமலேயே அதில் அவர்களை ஈடுபாடு காட்டச் சொன்னால் அது பெரும் தோல்வியில் தான் முடியும்.

இதனை Five Point Someone என்ற புத்தகத்தில் வரும் கதையுடன் ஒப்பிடுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே என்னுடைய முந்தைய பதிப்பிலும் இதனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். கதைப்படி அவர் ஒரு ஐஐடி விரிவுரையாளர். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். இந்தியாவில் பொறியியல் படிக்கும் (ஐஐடி பற்றி விவரம் தெரிந்த) பலருக்கும் ஐஐடி-ல் இடம் வாங்குவதற்குத் தான் முயலுவார்கள். சாதாரணமானவர்களுக்கே அப்படி என்றால், ஐஐடி விரிவுரையாளர்களுக்கு? அந்த விரிவுரையாளரும் தன்னுடைய மகனும் தன்னைப் போல ஐஐடியில் பயில வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் அந்த மாணவன் இரண்டு முறை முயன்றும் தேர்வில் தோல்வியடைகிறான். ஐஐடி-ல் சேர வேண்டியதால் அவனும் வேறு எந்தக் கல்லூரியிலும் சேராமல் திரும்பத் திரும்ப முயற்சிக்கிறான். இரண்டு முறை தோல்வியடைந்ததால் அவனின் தந்தை அவனுடன் பேசுவதை நிறுத்துகிறார். எப்போதும் அவனைத் திட்டிக்கொண்டே இருக்கிறார். அவன் முழுவதுமாக மூன்றாம் முறையும் முயற்சி செய்கிறான். ஒரு நேரத்தில் விரக்தி அதிகமாகவே தன்னுடைய தங்கைக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான. அது ஒரு விபத்து எனக் கருதி அந்த பேராசிரியர் தன் வாழ்க்கையைத் தொடருகிறார். சில ஆண்டுகள் கழித்து அது விபத்து அல்ல; தற்கொலை எனத் தெரிய வரும் போது இடிந்து போகிறார். இவ்வாறாகப் போகும் கதை.

இதில் இழப்பு யாருக்கு? தந்தைக்கா? மகனுக்கா? அவனை அவனின் விருப்பத்திற்கு விட்டிருந்தால், அவன் உயிருடனாவது இருந்திருப்பான். ஏன் அவனுக்குப் பிடித்த துறையில் நன்றாகவே வந்திருக்கலாம். அந்த விரிவுரையாளர் தன்னுடைய பழைய அனுபவங்களைக் கொண்டு தன் மகனுக்கு அவன் வாழ்க்கையில் எப்படி உதவ முடியும் என்று யோசித்திருக்க வேண்டுமே தவிர எப்படி தன் மகனைப் பற்றிய தன் கனவை அவன் நனவாக்க வேண்டும் என முயற்சித்திருக்கக் கூடாது. வரலாறைப் புரட்டிப் பார்த்தால் பெரிய விஞ்ஞானிகள், படிக்காத குடும்பத்திலிருந்தும், பெரிய விஞ்ஞானியின் புதல்வர்கள் பேர் சொல்லும் அளவிற்கு கூட வராமலும் போயிருக்கிறார்கள். எந்த ஒரு சாதனையாளரின் மகனும் அவன் தந்தையைப் போல பெரும் சாதனை புரிந்து புகழ்பெற்றான் எனக்குத் தெரிந்து இல்லை. அது வியாபாரத்தில் (டாடா, பிர்லா, ...) வேண்டுமானால் சாத்தியம். கவாஸ்கர் பெரிய பேட்ஸ்மேன் தான் அவர் மகன் இன்னும் ரஞ்சிகளில் தான் ஆடிக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் என்ன? தன்னை போலவே தன் மகனும் பெரிய கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்திருக்கலாம் என்பது என் கணிப்பு. ஒரு உதாரணத்திற்கு இதைக் கூறினேன். இதனைப் போல ஆயிரக்கணக்கில் கூறமுடியும்.

அது அவர்களின் வாழ்க்கை. நீங்கள் ஒன்றும் சிற்பியல்ல; உங்களின் கருத்துக்களையும், எண்ணங்களையும் கொண்டு அவர்களை செதுக்குவதற்கு. ஒவ்வொரு மனிதனும், தன்னைத் தானே செதுக்கிக் கொள்கிறான். நீங்கள் உளி மட்டுமே. நல்ல உளியாக இருந்து சிற்பம் சிறப்பாக வருவதற்கு உதவுங்கள் அது போதும்.

குழந்தைக்கு கிடைக்கும் விழிப்புணர்வு

இதனை ஓர் அளவிற்கு ஒப்புக் கொள்ளலாம். ஆனால் முழுவதுமாக அல்ல. பொதுவாக சர்வதேசப் பள்ளிக்கூடங்களில் கிடைக்கும் வசதிகளாக வெளிநாட்டு சுற்றுலாக்கள், உள்கட்டமைப்பு வசதி, கலை மற்றும் விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம், வெளிநாட்டு ஆசிரியர்களல் போதிக்கப்படும் கல்வி முதலானவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் இது மிக மிக அவசியம் எனத் தோன்றவில்லை. நீங்கள் இவ்வளவு கொடுத்து கல்வி போதிப்பதனால் அவர்கள் மற்ற சாதாரண (அரசு அல்லது தனியார்) பள்ளி மாணவர்களை விட மிகவும் வேறுபட்டு சிறப்பாக வந்துவிடப் போவதில்லை. அப்படி நாட்டில் உள்ள பல விஞ்ஞானிகள் அந்த மாதிரியான பள்ளியிலிருந்து தான் உருவாகியிருக்க வேண்டுமே?

ஒரு வேளை அந்த மாதிரியான பள்ளிகளில் படிப்பதனால் நல்ல நட்பு கிடைக்கலாம். புதுமையான சூழலால் வித்தியாசமான சிந்தனைகள் உருவாகலாம். அது எல்லா இடங்களிலுமே கிடைக்குமே? வித்தியாசமான சிந்தனைகள் உருவாவதற்கும், நல்ல நட்பு கிடைப்பதற்கும் வருடத்திற்கு 40000 செலவழிக்க வேண்டுமா என்ன? அவர்கள் 10, 12 வகுப்பு போகும் போது எவ்வளவு பணம் கட்ட வேண்டியதிருக்குமோ? ஏன் அந்த புதுமையான சூழலே அவர்களுக்கு சிக்கலானால்? சமுதாயத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களின் (பணம், பதவி வேண்டுமானாலும் இருக்கலாம்) புதல்வர்களுடன் படிப்பதால் ஏதேனும் ஏற்ற தாழ்வு உண்டானால்? சாதாரணமாக அரசு பள்ளிக்கூடங்களிலேயே மாணவர்களிடையே உள்ள ஏற்ற தாழ்வினை நீங்கள் கண்டிருக்கலாம். வருடாந்திர கட்டணம் மட்டும் கட்டி படிக்கும் மாணவர்கள், தங்களை விட வசதிபடித்த வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்களுடன் சில ஏற்ற தாழ்வினை உணர்வது உண்டு. பெற்றோரால் வருடக் கட்டணத்தைக் கட்ட முடிந்திருக்கும். ஆனால் அந்த ஆடம்பர செலவுகள் அனுமதிக்கப்பட்டிருக்காது. அதே போல வருடாந்திர செலவான 40000 த்தை இப்போது சாப்ட்வேர் போன்ற துறைகளில் உள்ளோர் கட்ட முடியும். ஆனால் அவர்களின் குழந்தைகளுக்கும் மற்ற வசதி படைத்த மாணவர்களுக்கும் உள்ள இடைவெளியை என்ன தான்
முயன்றாலும் ஓர் அளவிற்கு மேல் களைய முடியாது. அதனை ஒரு சாதகமாக எடுத்துக் கொண்டால் நலம். சாதாரண நகர்புறங்களிலும் (உ.ம் ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற), கிராமப்புறங்களிலும் படிப்பவர்களுக்கு மேற்படிப்புகளைப் பற்றிய அதிக விழிப்புணர்வு இருப்பது இல்லை; அப்படியே இருந்தாலும் அங்கு அதற்கு வேண்டிய வசதிகள் கிடைப்பதில்லை. ஆனால் சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் எந்த பள்ளியில் படித்தாலும் போதுமானது. கல்விக்கு அங்குள்ள வசதிகளும், அங்குள்ள பல தரப்பட்ட மக்களுடன் (நண்பர்கள் உட்பட) பழகக் கிடைக்கும் சந்தர்ப்பமும் அவர்களுக்கு விழிப்புணர்வு கிடைக்க உதவிகரமாக இருக்கும். மேலும் சர்வதேசப் பள்ளிகளில் படிப்பவர்கள் பெரும்பாலும் SAT போன்ற தேர்வுகள் எழுதி இளநிலைப் படிப்பையே அயல்நாடுகளில் தான் தொடர்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோனோர் இந்தியாவில் இளநிலைப் படிப்பை படிப்பதில்லை என்பது என் கருத்து.

ஒருவனுக்கு கஷ்டத்தில் இருக்கும் போது தான் முன்னேற வேண்டும் என்ற வேட்கை அதிகமாகிறது. அப்போது தான் முன்னேறுவதற்கான பல்வேறான வழிகளை பலமாக சிந்திக்க ஆரம்பிக்கின்றான். அந்த சிந்தனை தான் அவனுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. அறிவியல்,
சமுதாயத்தில் சாதனை படைத்தவர்களின் வாழ்வைப் புரட்டிப் பார்த்தால் பெரும்பாலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு விசயம் தடைக்கல்லாக இருந்திருக்கும்.

குழந்தைகளை வசதியான பள்ளிக்கூடங்களில் சேர்க்கக் கூடாது என்பதனை சொல்வதற்கல்ல இந்தப் பதிவு. வசதியானப் பள்ளிக்கூடங்களில் படித்தாலும் குழந்தைகளின் வளர்ப்பு முறையும், அவர்களுக்கு கிடைக்கும் நண்பர்களும், சிறு வயதில் அவர்களைப் பாதிக்கும் விசயங்களுமே அவர்களை, அவர்களின் எதிர்காலத்தினை நோக்கி நடை போட வைக்கின்றன. என்ன தான் பணம் கொடுத்து சேர்த்தாலும், அனைத்து திறமைகளுமே மந்திரம் போட்டது போல கிடைத்து விடாது. பெற்றோரின் தலையாயக் கடமை தன் குழந்தைக்கு சிறந்த கல்வியினைப் போதிப்பது தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த கல்வி லட்சகணக்கில் கொடுத்து வரும் சர்வதேசப் பள்ளிகளில் மட்டும் கிடைத்து விடுவதில்லை. சில நேரங்களில் சக்திக்கு குறைவாக சில விசயங்களை செய்வது இன்னும் நிறைவைத் தரும், நல்லது பயக்கும் என்பது என் கருத்து. "தேவையே கண்டுபிடிப்பின் முன்னோடி" என்ற கூற்றின் படி அவர்கள் தேவையை உணர்ந்து அதனை அடைய முயற்சி செய்தால் அவர்கள் வாழ்வும் சிறப்பாக இருக்கும்.

தேடிப் பெறுவதே நிலைக்கும்; ஆனந்தம் தரும்; வாழ்க்கைக்கு உதவும் என்பது என் கருத்து.

ஸ்ருசல்

3 கருத்துகள் :

அன்பு சொன்னது…

அருமையான, தேவையான பதிவு. தன்னுடைய நிலையை மீறி, அடுத்தவருக்காக வாழ்வது என்னைப்பொருத்தவரை தேவையற்ற ஒன்று.

ஒருவனுக்கு கஷ்டத்தில் இருக்கும் போது தான் முன்னேற வேண்டும் என்ற வேட்கை அதிகமாகிறது. அப்போது தான் முன்னேறுவதற்கான பல்வேறான வழிகளை பலமாக சிந்திக்க ஆரம்பிக்கின்றான். அந்த சிந்தனை தான் அவனுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கிறது.
நடைமுறை உண்மை, அதை இங்கு கண்கூடாக பார்க்கிறேன்.

உங்களுடைய பதிவுகள் பலவற்றையும்போல் இதுக்கும் ஒரு சபாஷ்.

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு நீங்கள் சற்று குறைவாக எழுதி இருந்தால் நன்றாய் இருந்திருக்க கூடும், என்ற எண்ணம் ஏற்பட்டலும் உங்களுக்கு ஒரு ஓ................ போட தோன்றுகிறது

ரவி ஸ்ரீநிவாஸ் சொன்னது…

good post.perhaps now getting your childreb educated is such expensive schools has become a status symbol.It has nothing to do
with education.Just as there costly hotels and resturants where you pay 50 bucks for a coffee that is hardly worth 5 bucks there are schools which are too expensive.
Children who study in such schools
will get a boost in life thanks to their parents wealth and connections even if they are mediocre.