வியாழன், செப்டம்பர் 29, 2005

அயல்நாட்டு மோகம்

சென்ற வாரம், புத்தகக் கடைக்கு சென்றிருந்தேன். இரண்டு புத்தகங்கள் வாங்க வேண்டும் என முடிவெடுத்திருந்தேன். ஒன்று, இந்திராகாந்தி வாழ்க்கை வரலாறு. மற்றொன்று, மா சே துங் வாழ்க்கை வரலாறு. திரு. நாராயணசாமி எழுதிய "Inside an elusive mind" என்ற புத்தகத்தில் மா சே துங் பற்றிய சில குறிப்புகள் இருந்தன. ஆதலால் அவரைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவா.

மா சே துங் தலைப்பில் இரண்டு புத்தகங்கள் இருந்தன. ஒன்று ஒரு சீன ஆசிரியர் எழுதியது. மற்றொன்று ஒரு அமெரிக்கர் எழுதியது. இரண்டும் ஒரே மாதிரியாக இருந்ததால் எதை வாங்குவது என்பதில் குழப்பம். அமெரிக்கருக்கு என்ன தெரியும், அவர் சீனாவில் 5 வருடங்கள் வேலை பார்த்திருக்கிறார்; அப்போது இந்தத் தகவல்களைத் திரட்டியிருப்பார் என்று நினைத்து, சீன ஆசிரியர் எழுதியப் புத்தகத்தை எடுத்துக் கொண்டேன்.

அடுத்தது இந்திரா காந்தி; 3-4 புத்தகங்கள் கண்ணில் பட்டது. அனைத்தும் இந்தியர்கள் எழுதியது. சில பக்கங்கள் படித்து பார்த்தேன். திருப்தி இல்லை. இன்னொரு புத்தகமும் என் பார்வையில் பட்டது. அதை ஃபிராங்க் என்ற இங்கிலாந்து நாட்டவர் எழுதியிருந்தார். இந்தியர்கள் உண்மையான தகவல்களை மறைத்திருப்பார்கள் என்று நினைத்து, ஃபிராங்க் எழுதியப் புத்தகத்தை எடுத்துக்கொண்டேன்.

வீடும் வந்து சேர்ந்தாயிற்று.. அப்புறம் தான் யோசித்துப் பார்த்தேன். ஏன் ஃபிராங்க் புத்தகத்தை எடுத்தேன்?. மா சே துங் விசயத்தில் பொருந்திய ஒன்று ஏன் இந்திரா காந்தி விசயத்தில் பொருந்தாமல் போயிற்று?. விடை கிடைக்கவில்லை.

ஆனால் ஃபிராங்க், மற்ற ஆசிரியர்கள் தொடாத சில பகுதிகளை தொட்டிருக்கிறார் என நிச்சயமாகச் சொல்லலாம். முக்கியமாக கமலா நேருவிற்கும் - நேரு குடும்பத்தினருக்கும் இருந்த ஊடல், நேரு குடும்பத்தினரின் வாழ்க்கைப் பின்னணி (காஷ்மீர் பின்னணி), நேரு குடும்பத்தினரின் ஐரோப்பா பயணம் (பல காரணங்களுக்காக), நேருவின் தந்தைப் பற்றின சில தகவல்கள் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் ஃபிராங்க், இந்தப் புத்தகத்தில் சில (sarcastic) கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

1. மோதிலால் நேருவின் சம்பாத்தியம்: காங்கிரஸ், அயல்நாட்டுப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்ட போது, அதனை ஆதரிக்க வேண்டிய நிலையில், மோதிலால் நேரு நீதிமன்றத்தில் வழக்காடுவதைப் புறக்கணித்தார். ஆனால் அவருக்கு பணம்
தேவைப்படும் போதெல்லாம் அவர் நீதிமன்றம் செல்லத் தவறவில்லை.

2. அதே காரணத்தினால் இந்திராவை சாந்தி நிகேதனில் சேர்த்துப் பின்னர் திரும்பவும் ஆங்கிலேயர்கள் நடத்திய பள்ளியில் (மிக அதிகமானக் கட்டணத்துடன்) சேர்த்தனர்.

3. ஐரோப்பா பயணம்: ஐரோப்பாவின் காலநிலை இந்தியாவின் காலநிலையை விட நன்றாக இருப்பதனால் அடிக்கடி தங்களுடைய அலுவல்களையும் பொருட்படுத்தாமல் ஐரோப்பாவிற்கு பயணம்: மேற்கொண்டனர்.

4. மோதிலால் நேரு தன்னுடைய ஆனந்த பவனை அழகுபடுத்த, ஐரோப்பாவில் இருந்து விலையுயர்ந்த பொருட்களை வாங்கி வந்தார்.

5. ஆங்கிலத்தைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறிவிட்டு, சென்னையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசினார்.

இன்னும் சில.

புத்தகத்தை முழுவதுமாக முடிக்கவில்லை. முடித்துவிட்டு இன்னும் விபரமாக எழுதுகின்றேன்.

கருத்துகள் இல்லை :