வியாழன், செப்டம்பர் 22, 2005

உயிர் காக்கும் மருந்துகள் விற்பனையில் சீர்கேடு

உயிர் காக்கும் மருந்துகள் விற்பனையில் சீர்கேடு

மனிதன் ஒரு தீவிர கொள்முதல்வாதி. அவனிடம் பணமிருந்தால், ஆனந்தமாக ஒவ்வொரு பொருளையும் யோசித்து, ரசித்து, பேரம் பேசி பெருமையோடு வாங்குவான். எல்லோரும், ஒவ்வொரு வருடமும், இந்த வருடம் இந்தப் பொருளை வாங்க வேண்டும், இது நம் வீட்டிற்கு அவசியம் என்று மனதில் ஒரு திட்டத்தை உருவாக்கி அதை செயல்படுத்த முயல்வது இயல்பு. இதில் யாருமே விதிவிலக்கு இல்லை.ஆனால் நாம் யோசித்து, திட்டமிட்டு, ரசித்து, மற்றொன்றுடன் ஒப்பிட்டு, பேரம் பேசி வாங்க முடியாத ஒரே பொருள் - மருந்து.

அதனால் தான் என்னவொ அது கண்ட விலைக்கும் விற்கப்படுகிறது. நாட்டின் முக்கியமான பிரச்சினைகளில் இந்த மருந்து விலையும் ஒன்று. ஆனால் மற்ற அத்தியாவசியாமான பொருட்களின் விலையேற்றங்களைப் பற்றிக் கவலைப்படுகிற மக்கள், உயிர்காக்கும் மருந்து விஷயத்தில் அலட்சியமாக உள்ளது போல் தோன்றுகின்றது.

ரூபாய் 1.50 செலவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் (உ.ம்: செட்சைன், செட்ரிசெட்) ரூபாய் 3 க்கு டீலருக்கு / மருந்துக் கடைகளுக்கு விற்கப்படுகின்றன. அதை அவர்கள் 10% லாபம், இல்லை 50% லாபம் வைத்து விற்றால் பரவாயில்லை. மூச்சை விட்டு விடாதீர்கள்; கிட்டத்தட்ட 500-1000% லாபத்திற்கு அதாவது ரூபாய் 30 க்கு விற்கின்றனர். (தகவல் உதவி: The Economic Times)

இதே கதை தான் அநேகமாக எல்லா மருந்து வகைகளுக்கும். அவசரத்தில் மருந்து வாங்கச் செல்லும் நாம் இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க நேரமும் இருக்காது, வாதிட மனமும் இருக்காது, அதை வேண்டாம் என்று வாங்காமலும் வர இயலாது. மற்றப் பொருட்களைப் போல இந்த வகை வேண்டாம் அது விலைக் குறைவு என வேறொரு வகையினை வாங்கிச் செல்ல முடியாது.

அரசின் நிலை என்ன?

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதும், மருந்துகள் விலை உயரும் என எதிர்பார்த்த இந்திய அரசு, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, அரசு அனுமதியில்லாமல் மருந்துகள் விலையை உயர்த்த தடை விதித்தது. இந்திய அரசு 1979-ல் Drugs Policy-யை (மருந்துக் கொள்கையை ???) அறிவித்தது, அதன்படி மருந்துகள் பிரித்து வகைப்படுத்துப்பட்டு அதி அத்யாவாசியமான மருந்துகளின் (Bulk Drugs) பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் உள்ள மருந்துகள் எப்போதும் கிடைக்குமாறும், அதன் விலை மிகக் குறைவாக இருக்குமாறும் (அரசு சார்ந்த அமைப்பின் மூலம், NPAA, விலை நிர்ணயம் செய்யப்படும்) வழிவகை செய்யப்பட்டது. முதலில் இந்தப் பட்டியலில் சுமார் 370 மருந்துகள் இருந்தன. இந்தக் கொள்கை நடைமுறைக்கு வந்ததும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், பட்டியலில் உள்ள மருந்துகளின் உற்பத்தியை குறைத்தன. இதனால், கள்ள மார்க்கெட்டில் மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. இது ஒரு வழியாகக் கட்டுப்படுத்தப்பட்டது, பின்பு இந்தப் பட்டியலில் உள்ள எண்ணிக்கை, படிபடியாகக் குறைக்கப்பட்டு தற்போது வெறும் 74 மட்டுமே உள்ளன. இதில் பென்சிலின், இன்சுலின், ஆஸ்பிரின், விட்டமின் பி, சி, டி, இ யும் அடக்கம்.

சில மருந்து நிறுவனங்கள் எப்படி லாபம் சம்பாதிக்கின்றன?

இந்திய மருந்து நிறுவனங்களின் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் 25-30% சதம் அதிகரிக்கின்றது. சில மருந்து நிறுவனங்களின் வருவாய், கீழ்கண்ட வகைகளிலும் ஈட்டப்படுகிறது.

1. பட்டியலில் இல்லாத மருந்து உற்பத்தியை அதிகப்படுத்தி, விற்பனையை அதிகரித்தல். மருந்து நிறுவனங்களின் வருமானத்தில் 75% பங்கானது, பட்டியலில் இல்லாத மருந்து விற்பனை மூலம் கிடைக்கின்றது.

2. பல தனியார் மருத்துவர்களின் உதவியுடன், தங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்தல். இந்திய மருந்து நிறுவனங்கள், ஆண்டுக்கு சராசரியாக ரூபாய் 1,10,000 ஒவ்வொரு மருத்துவருக்கும் செலவு செய்கின்றன. பல மருத்துவ விற்பனைப் பிரதிநிதிகளின் முழு நேர வேலையே இது தான்.

3. மருந்துகளின் விலையை உயர்த்தி விற்பனை செய்தல்

4. தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்தல்

5. போலி மருந்து விற்பனை. விற்பனை செய்யப்படும் மருந்துகளில் சுமார் 25% போலி மருந்துகள்.

இந்தியாவின் 40 பணக்காரர்களில் 9 பேர் மருந்து நிறுவனங்கள் வைத்திருப்போர் (தகவல் உதவி - Forbes India's Richest - 2004) என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
Link: http://www.forbes.com/2004/12/08/04indialand.html).


  1. திலீப் சங்வி (Sun Pharmaceuticals)
  2. யூசுப் ஹமீது (Cipla)]
  3. ஹபில்
  4. விவேக் பர்மன்
  5. பங்கஜ் பாடீல் (Zydus Cadila)
  6. கிரண் மஸும்தார் (BioCon)
  7. அஞ்சி ரெட்டி (Dr. Reddy's Lab)
  8. ஷியாம் தேஸ்பாண்டே குப்தா

ஏன் 40 பேரில் ஷிவ் நாடார் தவிர வேறு யாருமே தமிழ்நாட்டில் இருந்து இல்லை? ஒரு வகையில் நலலது தான்.

மேலும், ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியா உலகிலேயே 4 வது மிகப் பெரிய சந்தை.
(தகவல் உதவி: "Being Indian" book by Pavan K. Varma)

இதற்கு என்ன தீர்வு

1. அரசு, போலிகளைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மிக மிக அவசியம். போலிகள் அரசின் வருவாயை மட்டும் பாதிப்பதில்லை; அதை உட்கொள்வோரின் உடல்நிலையையும் தான்.

2. மருந்து நிறுவனங்களுக்கு உடந்தையாக இருக்கும் மருத்துவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது. இது மிகக் கடினமான பணி தான். அதைச் செய்யும் மருத்துவர்களாக மாறினால் ஒழிய இதனைத் தடுக்க முடியாது. படித்தவர்களாலேயே, சில நேரங்களில் மாத்திரையின் வகை, பெயர், எதனால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அறிந்து கொள்வது கடினம். மற்றவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

3. எப்போதும் மருந்து வாங்கும் போது, அதற்கான ரசீதையும் பெறுதல் ஓரளவிற்கு உதவும். கூடுமான வரை M.R.P க்கு அதிகமாக பணம் கொடுக்காமல் இருக்கலாம். வாங்கும் போது அது முடியாத பட்சத்தில், அத்தியாவாசிய பொருட்கள் சட்டம் 1955-ன் படி குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியும். இதுவும் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. வேண்டுமானால் கடைக்காரரை ஒரு மிரட்டு மிரட்டலாம். அது உங்கள் சாமர்த்தியம்.

4. Bulk Drugs எண்ணிக்கையை 74 ல் இருந்து உயர்த்துதல். ஆனால் அதே நேரத்தில், அதை 74-ல் இருந்து குறைக்குமாறு (IPA) கூறுகிறது. ஏன் என்று எல்லோரும் அறிவர்.

5. பட்டியலில் வாராத மருந்துகளின் விலையினை, அரசு கண்காணித்து தேவைப்பட்டால் தலையிட்டு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

Drugs policy-யைப் பற்றி விவரமாக அறிய http://nppaindia.nic.in/ என்ற தளத்திற்குச் செல்லவும். இந்தக் கட்டுரையில் தரப்பட்ட சில விவரங்கள் அந்தத் தளத்திலிருந்து பெறப்பட்டது.

நன்றி
ஸ்ருசல்.

கருத்துகள் இல்லை :