எழுபத்தைந்து ஆண்டு காவிரி பிரச்சினை இன்னும் முடிவிற்கு வரவில்லை. ஆனால் அதற்கு முன் மற்றுமொரு பிரச்சினை உருவெடுத்து உள்ளது; தமிழகத்திற்கும் - கர்நாடக மாநிலத்திற்கும். ஒக்கேனக்கலில் தடுப்பு சுவர் எழுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக தொழிலாளர்களை, கர்நாடக காவலர்கள் தடுத்தது மட்டுமல்லாமல், அவர்களின் உபகரண்களை ஆற்றில் வீசியதாகச் சொல்லப்படுகிறது. தமிழகம் சுவர் எழுப்ப நினைத்த இடம், கர்நாடக எல்லை பகுதியில் வருவதாக கர்நாடக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கிடைத்த செய்திகளின் வாயிலாக, யார் பக்கம் தவறென்று அறிதியிட்டுக் கூற முடியவில்லை.
அடுத்து என்ன நடக்கும்?
இரு மாநில அரசும், பேச்சு வார்த்தைக்கு செல்லும். முதல் கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வி அடையும். அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வி அடையும். வழக்கு நீதிமன்றம் செல்லும். அப்புறமென்ன? தீர்ப்பு வராது. அல்லது, தீர்ப்பு வர, 30-40 வருடங்கள் ஆகும். அப்படியே வந்தாலும், அதை ஏதாவது ஒரு அரசு எதிர்க்கும். மேலும், இந்த பிரச்சினையானது, அடுத்த தலைமுறைக்கு தள்ளப்படும். அவர்களும், எதற்காக, போராடுகின்றோம் என தெரியமாலே, போராடுவார்கள். ஒன்று மட்டும் விளங்கவில்லை; எதற்காக இரண்டு அண்டை மாநில அரசு அதிகார வட்டங்கள், எதிரி நாட்டைச் சேர்ந்தவர்களைப் போல சண்டையிட்டுக் கொண்டு, பிரச்சினைகளை வளர்த்துக் கொண்டது மட்டுமல்லாமல், இரு மாநில மக்களின் மனத்தில் காழ்ப்புணர்ச்சியை வளர்த்துள்ளனர்?. இரு மாநிலங்களிலும், ஏறக்குறைய அனைத்துக்கட்சிகளும் தத்தம் மாநிலங்களுக்கு நலம் புரிவதாகக் கூறி, காவேரி பிரச்சினைக் கொண்டு, யாராலும் ஆட்சியை பிடிக்க / தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்க இயலவில்லை. அந்தந்த நேரத்தில், ஏற்பட்ட பிரச்சினைகள், இடையூறுகள் தான் தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகளாக அமைந்து வருகின்றன.
பிரச்சினை என்னவோ சிறியது தான். ஆனால், அதன் விளைவுகள் தான், விபரீதகரமானவை. இந்த சிறிய இடத்திற்காக கோடிக்கணக்கான மக்கள் தங்கள் மனதில் மற்றவர்களை பற்றிய கெட்ட எண்ணங்களை வளர்த்து, முகம் பாராமல் பகைமை பாராட்டுவார்கள். பார்க்காமலேயே மனதில் விரோதம் வளர்க்கும் ஒரே இனம், அது மனித இனம் தான்.
சிறிது நாட்களுக்கு முன்னால், விகடன் வார இதழில் ஞாநி என்பவர் தன்னுடய தொடரில், "கர்நாடகம், இன்னும் பிடிவாதமாக இருக்குமாயின், அதனை இந்திய நாட்டில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் அல்லது தமிழகம் தனியே சென்று விட வேண்டும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
என்ன ஒரு கீழ்த்தரமான சிந்தனை? இப்படிபட்ட சிலரின் மனதில் ஏற்படும் விபரீதமான எண்ணங்கள், பிற்காலத்தில் பெரிய பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றன. ஒரே நாட்டில் இருந்து கொண்டு பெற முடியாத உரிமையை தனி நாடாக இருந்து எங்கிருந்து பெறுவது?
இதற்கு எந்த வழியும் இருப்பதாக தெரியவில்லை. குறைந்தபட்ச தீர்வுக்கு, இரண்டு மாநில மக்களும், இத்தகைய பேச்சுகளுக்கு ஆதரவு அளிக்காமல் இருந்தாலே போதுமானது. இந்த மனநிலையை அடைய பல ஆண்டுகள் பிடிக்கும். அதுவரை மாண்புகு நமது அரசியல்வாதிகள் அமைதியாக இருக்க வேண்டுமே?
ஒன்று மட்டும் உண்மை. பிரச்சினைகளுக்கு காரணமாணவர்கள் மறைந்தாலும், அவர்கள் விட்டுச் சென்ற பிரச்சினைகள் இன்னும் வாழ்ந்து, மக்களுக்கு இடர்பாடாகத் தான் இருந்து வருகின்றன. மனிதன் எப்படி இருந்தாலும் வாழ்ந்து விடுவான். இடர்பாடு இல்லாத வாழ்க்கையை மட்டும் வெறுத்து விடுவான். அவனுடைய அன்றாட வாழ்வில், ஏதாவது ஒன்று வெறுக்க, வெறுத்து பேச, இகழ கண்டிப்பாக இருந்தாக வேண்டும். இது தான், உலக நியதியோ?
ஸ்ருசல்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக