ஏ.ஆர்.ரகுமானும், மது விளம்பரமும்.
வரும் அக்டோபர் 8-ம் தேதி பெங்களூரில் ஏ.ஆர்.ரகுமானின் இசைக் கச்சேரி நடைபெறவிருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகளை ஒரு தனியார் அமைப்பு செய்து வருகின்றது. வரும் லாபத்தில் பெரும் பகுதி ஒரு பொது நல அமைப்பிற்குச் செல்லுமாறும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த தனியார் அமைப்புடன், ஏ.ஆர்.ரகுமானின் ரசிகர்கள் (மன்றம் ஏதும் இல்லை). குழுவின் சார்பாக சில தன்னார்வத் தொண்டர்கள் பணிபுரிந்து வருகிறோம். எங்கள் பணிகளில், நகரில் உள்ள முக்கிய வர்த்தக மையங்களில் அந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துவதும் ஒன்று.
அதன் நிமித்தமாக எங்கள் குழுவினர் (யார் யார் என்றே தெரியாது. எல்லா மாநிலத்தவரும் உண்டு. எல்லாம் யாகூ குழுமத்தின் மூலமே எங்களுக்குப் பழக்கம்) இன்று காலைக் கூடி விவாதித்தோம்.
கூட்டத்தில், ஏ.ஆர்.ரகுமான் இங்கு வரும்போது அவருக்கு என்ன பரிசளிக்கலாம் என்றும் விவாதிக்கப்பட்டது.
கீ போர்டு? - ஒரு அன்பர்.
அவரிடம் இல்லாத கீபோர்டுகளா என்ன? அவருடைய யோசனை நிராகரிக்கப்பட்டது.
"பழங்காலத்து இசைக் கருவி?
இருக்கும் 25 பேரிடமிருந்து ரூபாய் 10000-20000-க்கு மேல் தேராது. அப்படியே பணம் இருந்தாலும் அதற்கு எங்கு போவது? ம்ஹும். சரிப்படாது.
அது, இது என்று பலப் பரிந்துரைகள். ஒன்றுமே சரிப்பட்டு வரவில்லை.
"குரான்?"
"No. Quran should not be gifted".
அனைவரின் விழிகளும் ஆச்சர்யத்தால் உயர்ந்தன.
சொன்னது நவாஸ்.
மவுனம் சில நிமிடங்களுக்கு...
கடைசியில் முடிவேதும் எடுக்காமல் அடுத்த விசயத்திற்குச் சென்றோம்.
வர்த்தக மையங்களுக்குச் செல்லும் போது, அணிவதற்கு ஒரு டி-சர்ட் (தமிழ் சொல் என்ன?) தரப்பட்டது. அளவுகள் முன்கூட்டியே தனித்தனியாகத் தெரிவிக்கப்பட்டும் எல்லாம் ஒரே அளவாக இருந்தது. முன்பக்கத்தில் விளம்பரதாரர்களின் பட்டியல். பெரிய மெக்டால் (McDowell) சின்னம். சிறிய அளவில் ஏர்டெல், ஸ்பைஸ் மற்றும் சில சின்னங்கள். டி-சர்ட்டின் பின்பக்கத்தில் ரகுமானின் படம்.
எல்லோரும் அவரவருக்கு சரியான சட்டையை எடுத்துக் கொண்டனர். நவாஸ் மட்டும் எடுக்காமல் நின்று கொண்டிருந்தார்.
"நீங்க எடுத்துக்கலையா? - இது ரூபா, அந்தத் தனியார் அமைப்பின் நிர்வாகி
"இல்லை வேண்டாம்."
"ஏன்?"
"நான் என்னோட டி-சர்ட்-ல வர்ரேன்"
"அதெப்படி? எல்லோரும் இது தான் போட்டுக்கணும். எப்படி அடையாளம் தெரியும். டி-சர்ட் அடிச்சதுக்கே அர்த்தம் இல்லாம போயிரும்"
"இல்ல வேண்டாம். இது... இதுல McDowell இருக்கு. அது ஒரு மதுக் கம்பெனி"
"ஸோ?"
"ரகுமானுக்கு அதெல்லாம் பிடிக்காது. நான் என்னோட டி-சர்ட்-ல வர்ரேன்"
"ரகுமானே ஒத்துக்கிட்டாரே? அதுவுமில்லாம் இது மதுவிற்கான விளம்பரம் கிடையாதே...."
"இல்லை வேண்டாம். நான் சும்மா ஃபிரியா வேலை பார்க்குறேன்."
"எல்லோரும் ஃபிரியா தான் வேலை செய்றாங்க. ஏன்? நான் கூட ஃபிரியா தான் வேலை செய்றேன். ஆறு கோடி இன்வெஸ்ட் பண்ணிட்டு ஃபிரியா தான் வேலை செய்றோம்"
ஒரே நிசப்தம்.
எனக்கு இரண்டு பேர் சொன்னதுமே விளங்கவில்லை.
நவாஸ் ஏன் அந்த வார்த்தையைச் சொன்னார்? ("ஃபிரியா வேலை பார்க்குறேன்")
நிதி ஒரு பொது நல அமைப்பிற்கு என்று சொன்னது? ஆறு கோடி பணமா? ஒரு வேளை அனுமதிச் சீட்டு அனைத்தும் விற்கவில்லை என்றால்....? ஆறு கோடி பணம்? அவ்வளவு பெரிய நிகழ்ச்சியா?
நன்றி
ஸ்ருசல்
3 கருத்துகள் :
plz make clear the last paragraph.. Lot of hidden meaning here..
i like reject t-shirt because, islam announce to karam in drinks, congrats to nawaz u select the gift quron
i like reject t-shirt because, islam announce to karam in drinks, congrats to nawaz u select the gift quron
கருத்துரையிடுக