சனி, டிசம்பர் 31, 2005

இந்த வருடம் எப்படி?

மற்றுமொரு ஆங்கில வருடம் கழிந்து விட்டது. எல்லா பத்திரிக்கைகளிலும் கடந்த 53 வாரங்கள் எப்படிக் கழிந்தன என்பது பற்றிய கட்டுரைகள் பார்க்க முடிகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் Attrition Rate (நிறுவனத்தை விட்டு வெளியேறுவோர், புதிதாக வேலைக்குச் சேர்பவர்களின் விகிதம்) வழக்கம் போல குறைந்து விட்டது. நண்பர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து மின்னஞ்சல்கள் செய்ய ஆரம்பித்து விட்டனர். கடந்த 365 நாட்களின் முக்கியமான நிகழ்ச்சிகளாக இதைத் தான் கூறுவேன்.


  • தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளம்

  • லாலு, சிவசேனா, பா.ஜ.க.வின் வீழ்ச்சி (பீஹார் மாநில தேர்தல் வெற்றியைத் தவிர்த்துப் பார்த்தால்)

  • ஒரிசா மாநிலம் பெற்ற அந்நிய முதலீடு (~50000 கோடிக்கு POSCO என்ற தென் கொரிய நிறுவனத்திடமிருந்து பெற்றது). இதை ஆதரித்தும், எதிர்த்தும் பல விவாதங்கள் நடந்து வருவது வேறு விசயம்.

  • அம்பானி சகோதரர்களின் பிரிவு

  • பங்கு சந்தையின் வரலாறு காணாத Sensex உயர்வு. ஜஸ்வந்த் சிங் நிதியமைச்சராக இருக்கும் போது அடுத்த ஆண்டு 7000 புள்ளிகளைத் தொட்டுவிடும் என்றார்கள். இப்போது அதையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

  • தனியார் விமான நிறுவனங்களுக்கு அயல்நாட்டு சேவை அனுமதி

  • இந்தியா - அமெரிக்கா உறவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • இந்தியா - சீனா உறவில் ஏற்பட்ட சிறிய மேம்பாடு

  • லஞ்ச விவாகரத்தில் எம்.பிக்கள் வெளியேற்றபட்டது (நல்ல முன்னுதாரணம். இன்னும் பலர் குற்றம் புரிய வேண்டும் என்பது என்னுடைய ஆசை அல்ல. தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற முயற்சி)


மேலும் இந்த ஆண்டோடு ரிலேட்டிவிட்டி தியரி வெளியிடப்பட்டு 100 வருடங்கள் ஆகின்றன.

மற்றபடி அரசியல் அளவில் சென்ற வருடத்திற்கும், இந்த வருடத்திற்கும் அதிக வேறுபாடு இல்லை. தமிழின் பெயரால் இன்னும் சிலர் அரசியல் செய்ய ஆரம்பித்திருப்பது வருத்தத்திற்குரியது. கிரிக்கெட்டிலும் அரசியலின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது. மன்மோகனின் அரசு பெரிய மாறுதல்களை செய்து விட வில்லை. பழைய பா.ஜ.க அரசின் கொள்கைகள் பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வருகின்றன. தகவல் அறியும் உரிமை சட்டம் வெறும் பெயரளவில் நிறைவேற்றப்பட்டது. சுனாமி, வெள்ளம் போன்ற பேரழிவுகள் கூட மக்களின் அணுகுமுறையில் பெரிய மாற்றங்களை விளைவித்து விடவில்லை. அண்டை மாநிலங்களில் அத்தகைய அழிவுகள் கூட மறக்கப்பட்டு சின்ன சின்ன விரோதங்கள் இன்னும் மனதில் வைத்திருக்கப்படுகின்றன. டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பத்திரிக்கைகள் கூட மொழி ஆதிக்கவாதிகளின் பிடியில் கட்டுண்டு, முரண்பாடான, விரும்பத்தகாத விசயங்களை அச்சிடுவது வருத்தமடையச் செய்தது. ஜனநாயகத்தின் அத்தியாவாசியமான, கடைசி நம்பிக்கை பேச்சுரிமையை பாதிக்கும் விதமாக நிகழ்ந்த சில நிகழ்வுகள் இனி நடக்காது என நம்புவோமாக. வெள்ளப் பாதிப்புகளைப் பேசுவதை விட, சவுரவ் கங்குலி நீக்கப்பட்டது போன்ற முக்கியமான நிகழ்ச்சிகள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது நல்ல முன்னேற்றம்.

ஐ.ஐ.எம் முன்னாள் மாணவர் மஞ்சுநாத் கொலை செய்யப்பட்டது ஒரு பெரிய கறை. பெங்களூரில் BPO பணியாளர் பிரதீபாவின் கொலை கண்டிக்கப்பட வேண்டிய விசயம் என்றாலும், உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்து கொண்டதற்கு மஞ்சுநாத்திற்குக் கிடைத்த தண்டனை வருத்தத்திற்குரியது. இது உண்மையாக இருப்பவர்களின் அடிப்படை நம்பிக்கையை சிறிது அசைத்துப் பார்க்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு நாட்டின் அழிவு இது போன்ற நிகழ்ச்சிகளில் தான் தொடங்குகிறது. இனி வரும் வருடங்களில் இது போல நிகழாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம். அதே நேரத்தில் வருட கடைசியில் ஐ.ஐ.சி-ல் நடந்த தாக்குதல் பெங்களூர் நகர மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. பற்றாகுறைக்கு நேற்று மனித வெடிகுண்டுகள் பற்றிய கடிதம் ஒன்றும் ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல்களும் நேற்று சில நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதும் பலரை கவலை கொள்ளச் செய்துள்ளது. எங்களது அலுவலகம் அமைந்துள்ள தொழில்நுட்ப வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு அனைவரும் அலுவல்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். பெங்களூரில் தாக்குதல் நடத்தினால் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்பது அவர்களின் கணிப்பு எனக் கூறப்படுகிறது. இந்தியாவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற அவர்களின் ஆர்வமும், முயற்சியும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. எப்போது இதை நிறுத்துவார்கள்? இந்தியாவை சீரழிக்க தீவிரவாதிகள் வேண்டாம்; சில அரசியல்வாதிகளே போதும் என்பதை எப்போது அவர்கள் புரிந்து கொண்ட பின்பு தான் என நினைக்கிறேன்.

மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். இயற்கை சீற்றங்களில் இருந்தும், தீவிரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பதிலேயே இந்த வருடத்தின் பெரும்பகுதி போய்விட்டது. ஆனாலும் புதிய வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகியுள்ளன என்று உறுதியாகக் கூறலாம். பல இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், Service Mode ல் இருந்து விடுபட்டு, தங்களின் தயாரிப்புகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது நல்ல மாறுதல். அதன் எண்ணிக்கை சொற்பமே என்றாலும், எதிர்காலத்தில் மிகுந்த நன்மைபயக்கும் விசயமாகும். இத்தனை நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தும், 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தத் துறையில் பணியாற்றியும், இந்தியாவில் இருந்து எந்த மென்பொருட்களும் (ஒன்றிரண்டைத் தவிர்த்து) சர்வதேச நிறுவனங்களைக் கவரவில்லை. அனைவரும் அதற்கான முதல் படி இது.

பீஹாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பது நல்ல மாற்றம். இன்னும் சில ஆண்டுகள் கழித்தே அவரின் ஆட்சி எம்மாதிரியான மாற்றத்தை பீஹார் மக்களுக்குக் கொடுத்துள்ளது என்பதைக் கூற முடியும். அதே போல மேற்கு வங்காளத்திலும் ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அது அந்த மாநிலத்திற்கு நல்லதே. அவர்களின் ஆட்சி மிகச் சிறப்பாகவே இருப்பதாக வைத்துக் கொண்டாலும் (25 வருடங்கள் ஆண்டு விட்டார்கள்), இன்னொரு கட்சியிடம் ஆட்சியை ஒப்படைத்துப் பார்க்கலாம் அந்த மக்கள்.

ஆனால் பொருளாதார ரீதியாக நல்ல ஆண்டு தான். அதிகமான அந்நிய முதலீடுகள். தமிழகத்திற்கு வோல்க்ஸ்வோகன் முதலான நிறுவனங்கள் வருவதற்காக ஒப்பந்தங்கள் செய்துள்ளன. பில் கேட்ஸ் தமிழகத்தில் முதலீடு செய்ய உறுதி கூறியுள்ளார். ஆனாலும் தகவல் தொழில்நுட்பத்தில் கர்நாடாகவுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவே. அடுத்த வருடத்தில் இந்த இடைவெளி குறைய வேண்டும் என்பது என் அவா. அல்லது ஒரே இடத்தில் குவியாமல் முதலீடு நாட்டின் பல நகரங்களுக்கும் செல்ல வேண்டும். மேலும் ஆறு, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட வேண்டும். திரைத் துறையில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். பயம் மற்றும் அதிருப்தியில் யாருமே திரைப்படம் எடுக்காமல் போய்விட்டால் மக்கள் என்ன செய்வார்கள்? அனைவருக்கும் பைத்தியம் தான் பிடிக்கும். விளையாட்டு அல்ல; இது இன்றைய நிலையில் உண்மையும் கூட.

தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் (ஏகாதிபத்தியம்) அதிகரித்திருப்பதாகத் தோன்றுகிறது. தொலைத் தொடர்பு, மருந்து, தொலைகாட்சி நிறுவனங்கள், சாலை போக்குவரத்து, எண்ணெய் முதலான துறைகளில். அவர்களின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து முரண்பாடுகள் இருந்தால் ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போட்டி மிகவும் முக்கியம். ஆங்கில செய்திச் சேவையில் கோலேச்சி கொண்டிருந்த (சேவை தரமாகவே இருந்தாலும்) என்.டி.டி.விக்கு போட்டி வந்திருப்பதும் ஆரோக்கியமான விசயம். ராஜ் தீபக்-ன் சி.என்.என். ஐ.பி.என் சேனலில் உடனடி விசேசங்கள் காணக்கிடைக்கவில்ல என்றாலும் செய்தியின் தரத்தில் குறை இருக்காது என நம்புகிறேன். அதே போல தமிழ் செய்தி சேவையில் கூட சன் டி.வி, ஜெயா டி.வி நிறுவனங்களுக்குப் போட்டியாக இன்னும் சில சேனல்கள் வந்தால் நன்றாக இருக்கும். அதற்குண்டான தடைகள் நீக்கப்படவேண்டும். கூகுளுக்குக் கூட போட்டி வந்திருப்பதும் கவனிக்கப்படவேண்டிய விசயம். போட்டி எல்லோரையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கச் செய்து, தரத்தினை மேம்படுத்த உதவுகிறது. போட்டி இல்லையென்றால் வளர்ச்சி இல்லை. எங்கு வளர்ச்சி இல்லையோ அங்கு ஆரோக்கியமும், சந்தோசமும் இல்லை.

எனக்கு இது வழக்கம் போல மற்றுமொரு சாதாரண வருடம் தான். வலைப்பதிய ஆரம்பித்தது, பெரிய மாறுதல் எனக் கூறுவேன். எண்னங்களை வெளியிட ஓர் சிறந்த வடிகாலாக இந்த வலைப்பதிவுகள் அமைந்துள்ளன. ரகுமானை நேரில் சந்தித்து, பேசும் வாய்ப்பு கிட்டியது. சச்சின் 35 சதங்கள் அடித்ததில் மகிழ்ச்சி. வழக்கம் போல திரை இசை என்னுடைய பொழுதுபோக்கு நேரத்தில் பெரும் பங்கு வகித்தது. திரைஇசையில் யுவன் (கண்ட நாள் முதல், அறிந்தும் அறியாமலும், புதுப்பேட்டை, கள்வனின் காதலி, ஒரு கல்லூரியின் கதை, அகரம்), ஹாரிஸ் (அந்நியன், கஜினி) நன்றாக செயல்பட்டு வருவது ஆரோக்கியமான விசயம். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, டிஸ்யூம் பட பாடல்கள் மூலமாக கவனிக்க வைத்திருக்கிறார். இவர் ஏற்கனவே சுக்ரனுக்கு இசையமைத்தவர். வருட கடைசியில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வந்த ரங்கு தே பசந்தி பாடல்கள் மிகவும் கவர்ந்தது. புதுபேட்டையில் வரும் 'ஒரு நாளில் வாழ்க்கை என்றும்' பாடலில் வரும் வயலின் இசை மிகவும் பிடித்திருந்தது. ஆறரை கோடி பாடல் (அ.ஆ), ரூபாரூ (ரங்கு தே பசந்தி) சுட்டும் விழிச்சுடரே பாடல், ரா ரா பாடல், ஏலே ஏலே மாட்டித் தான் பயலே (அறிந்தும் அறியாமலும்), மேற்கே மேற்கே (கண்ட நாள் முதல்), மிகவும் பிடித்த பாடல்கள்.

தி சென்னை சில்க்ஸ்-ன் விவாஹா விளம்பரம் மிக அழகாகவும், இனிமையாகவும் இருந்தது. நிறைய முறை ரசித்துப் பார்த்தேன் (இப்போதும் கூடத் தான்). இது பின்னணி பாடகி சின்மயி பாடி சுரேஸ் பீட்டர்ஸ் இசையமைத்தது.

பல நல்ல புத்தகங்கள் படிக்கும் வாய்ப்பு கிட்டியது.

பலருக்கு ஒவ்வொரு வருடமும் எப்போது இந்த வருடம் முடியும் என்று சில நேரங்களில் தோன்ற ஆரம்பித்து விடும். உயிருக்குயிரானவர்களின் பிரிவு, பண இழப்பு, விபத்து, தொழிலில் ஏற்படும் தோல்வி அந்த வருடத்தினை மறக்க முடியாமல் செய்து விடுகின்றன. புதுவருடாமாவது நன்மையை பயக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்து விடும். இது மனதளவில் தன்னம்பிக்கை வளர்வதற்கும் உந்து சக்தியாக விளங்கும்.

பலர் புதிய வருடம் பல மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த மாற்றங்களைச் செயல்படுத்துவதற்காக, தங்களின் பழக்க வழக்கங்களை மாற்ற முயல்வதும் உண்டு. அது பெரும்பாலும் சில நாட்களுக்கு மட்டுமே நீடிப்பதும் உண்டு. புதுவருடம் நன்றாக இருக்க வேண்டும் என வருடத்தின் கடைசி நாள் நினைத்து, முதல் நாளில் மிகவும் ஜாக்கிரதையாக மனைவியிடன் சண்டை போடாமல் அல்லது அதிகம் காட்டமாகப் பேசாமல், நிதானமாக செயல்படுவதும் உண்டு. இந்த வருடம் நன்றாக இருக்க வேண்டும்; நான் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வேன்; மற்றவர்களிடம் வீணாக சண்டை போட மாட்டேன்; நான் மாறி விடுவேன் என்ற நம்பிக்கையின் வீச்சு முதல் நாள் அதிகமாக இருக்கும். ஆனால் நாளாக நாளாக அது மறைந்து விடும். நாட்கள் அப்படியே மாறாமல் தான் இருக்கும். நமது மனநிலை தான் சில நாட்களில் மாறிவிடும். புதிய கோணத்தில் பார்த்து, அந்த வீச்சும், ஆர்வமும் குறையாமல் பார்த்துக் கொண்டால் வருடம் முழுவதும் மட்டுமல்ல வாழ்க்கை முழுவதும் ஆனந்தம் தான்.

எனக்கு புது வருடத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் நண்பர்களுடன் வெளியில் சுற்றத் தவறுவதில்லை. எங்கே சுற்றுவது? எல்லா இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. The Forum Mall, Garuda Mall, ஹோட்டல்கள், இந்த அலுவலகம்; இப்படி எல்லா இடங்களிலும்; M.G.Road செல்லவும் பயம் :)

வாசகர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

ஸ்ருசல்

வெள்ளி, டிசம்பர் 16, 2005

என்.டி.டி.வியின் பிதாமகன்

கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாட்டைத் தவிர மற்ற அனைத்து விசயங்களும் விவாதிக்கப்படுகின்றன. சில நாட்களாக விளையாட்டுச் செய்திகளில் அரசியல் செய்திகள் ஆக்கிரமித்துள்ளன. அரசியல் விசயங்களே அதிகம் தென்படும் தலைப்புச் செய்திகளில் விளையாட்டுத் துறையான கிரிக்கெட் செய்திகள் வாசிக்கப்படுகின்றன. கங்குலியை கிரிக்கெட் வாரியம் தூக்கியதும் தான் தாமதம், கொல்கத்தாவினர் (சிலர் தான். அனைவரும் அல்ல) கோஷங்களை ஆரம்பித்து கொடும்பாவியை எரிக்க ஆரம்பித்துள்ளனர்.

கங்குலியைத் தூக்கியது சரியா தவறா என்பதைப் பற்றி பின்னர் விவாதிக்கலாம். ஆனால் இந்த விசயத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் அவசியம்தானா எனத் தோன்றுகிறது? அதிலும் முக்கியமாக என்.டி.டி.வி, மூச்சுக்கு முன்னூறு முறை கங்குலியை நீக்கியது சரியா தவறா என விவாதம் நடத்துகிறது. தலைப்புச்செய்திகளில் மூன்று நாட்களாக அதைத் தான் வாசிக்கின்றனர். இன்னும் கூட என்.டி.டி.வி-ன் வலைத்தளத்தில் முக்கிய செய்தியாக அது தான் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறிது நாட்களுக்கு முன்பாக ஒரு நாள் போட்டிகளிலிருந்து கங்குலியை நீக்கியதும் என்.டி.டி.வி "சச்சின் 2, 2, 0 ரன்களே குவித்துள்ளார் அவரை ஏன் நீக்கவில்லை" என்ற தோனியில் என ஓர் செய்தி தொகுப்பினை ஒளிபரப்பியது. அதாவது கங்குலியை மட்டும் வைத்துவிட்டு சச்சினை விட்டு விட்டதாகக் குறிப்பிட்டது. பல விசயங்களில் ஓரளவு நடுநிலைமையோடு செயல்பட்டு வரும் என்.டி.டி.வி, இந்த விசயத்தில் கங்குலிக்கு சாதகமாகவே செய்தி வெளியிட்டு வருகிறது. கல்கத்தாவில் நடைபெறும் போராட்டங்களை LIVE ஆகவும், அவருடைய ஆதரளவாளர்களின் பேட்டியையும் அடிக்கடி ஒளிபரப்பி வருகிறது. இப்போது காம்பீர் அவசியமா, லக்ஷ்மண் அவசியமா என சொல்பவர்களின் பேட்டியைத் தேடித் தேடி ஒளிபரப்பவும் செய்கிறது. கங்குலி அணியில் மீண்டும் இடம்பெறச் செய்யாமல் ஓயாது போலத் தெரிகிறது. இனிமேல் என்.டி.டி.வி-யை 'Never give up Dada Television' என்று அழைக்கலாம். ஆரம்பத்திலிருந்து கங்குலிக்கு சாதகமாகவே என்.டி.டி.வி செய்திகளை வெளியிடுவதும், பிரணாய் ராய் கல்கத்தாவைச் சார்ந்தவர் என்பதும், என்.டி.டி.வி-ல் கல்காத்தாவினரின் ஆதிக்கம் மிகுந்திருப்பதும் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

கங்குலி ஒரு சிறந்த வீரர் என்றால் நாடு முழுவதுமே போராட்டம் நடந்திருக்குமே? ஏன் அது கல்கத்தாவில் மட்டும் நடக்கிறது. அதுவும் போராட்டத்தில் சேப்பலையும், கிரண் மோரையையும் தேச துரோகிகள் அளவிற்கு கொண்டு சென்று கோஷம் எழுப்பவது கங்குலியின் எதிர்காலத்தைத் தான் பாதிக்கும். கங்குலியை ஏன் அவர்கள் ஒரு பெங்காலி வீரராகப் பார்க்கின்றனர். அவர் மட்டும் தான் அணியில் ஆடுகிறாரா? இத்தனை நாள் கங்குலியும், டால்மியாவும் கோலோச்சும் போது இவர்கள் எங்கு சென்றிருந்தார்கள்? பாலாஜியும், கும்ளே, ராபின் சிங்கு போல பல நல்ல வீரர்கள் அணியை விட்டு அனுப்பப்படும் போது இவர்கள் எங்கு சென்றிருந்தார்கள்? அவர்களுக்கு கங்குலி மட்டும் அணியில் ஆடி மற்ற பத்து பேர் ஆடாவிட்டாலும் போதுமா? கங்குலி அனைத்துப் போட்டிகளிலும் இடம் பெற்று இந்தியா எந்த ஆட்டத்திலும் வெற்றி பெறாவிட்டாலும் போதுமா?

10 வருடமாக இந்தியாவிற்காக விளையாடி 5000 ரன்களுக்கு மேல் குவித்த வீரரை நடத்திய விதம் சரியல்ல எனக் கூறுகின்றனர் பலர். அதே கேள்வி தான். 10 வருடமாக இந்தியாவிற்காக விளையாடி 5000 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் நடந்து கொள்ளும் விதம் தான் நன்றாக இருக்கிறதா?

சேப்பல் விவாகாரம் உச்சத்தில் இருந்த போது ஜிம்பாப்வேக்கு எதிராக சதத்தை எடுத்து விட்டு அவர் மீடியாவிற்கு கொடுத்த பேட்டியின் அழகை என்னவென்று சொல்வது?. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ரகளையும், பிரச்சினைகளும், சிக்கல்களும். இவ்வளவும் டால்மியாவும், கங்குலியும் வந்த பின்னர் தான் என்று நினைக்கிறேன். பயிற்ச்சிக்கு தாமதமாக வருவதும், இவருடைய விளையாட்டு உபகரணங்களை மற்றவர்களைச் சுமந்து வரச் சொல்வதும், பயிற்சியாளரின் கருத்துகளைக் காதில் வாங்காமல் இஷ்டத்திற்கு முடிவெடுப்பதும், அணி வீரர்களின் தேர்வில் தனது ஆதிக்கத்தை செலுத்தியதும், வீரர்களை நடத்திய விதமும், மைதானத்தில் நடந்து கொண்ட விதமும் (பல முறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளார்), அப்போதெல்லாம் டால்மியாவின் உதவியுடன் ICC யை எதிர்கொண்டு அவற்றை ரத்து செய்யச் செய்த விதமும் பலமுறை விவாதத்திற்கு வந்துள்ளதை அனைவரும் அறிவர். அணியில் பிரித்தாளும் கொள்கை முறையில் விரோதத்தை வளர்த்ததாக பலர் குற்றம் சாட்டினரே? ஸ்டீவ் வாக்கே இப்போது ஒரு குற்றச்சாட்டைச் சொல்லியிருந்தாரே?

இத்தனை ஆண்டுகள் விளையாட்டிற்குப் பிறகு, இவர் ஒழுக்கத்திலும், விளையாட்டிலும் சிறந்தவராக இருந்தால் யார் நினைத்தாலும் இவரை வெளியேற்ற முடிந்திருக்க முடியாது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் ராகுல் டிராவிட் மீதோ, சச்சின் மீதோ இந்த மாதிரி அவதூறோ அல்லது குற்றச்சாட்டோ வந்ததுண்டா?

எதற்கெடுத்தாலும் டால்மியாவுடன் சேர்ந்து கொண்டு அனைவரையும் புல்லைப் பார்ப்பது போல பார்த்து, நோகடித்து வீட்டிற்கு அனுப்பினாரே? மனதை நோகடிக்கும் எத்தனை பேட்டிகள்? யாரையும் மதிக்காமல் நடந்து கொண்ட விதம். இப்போது அழுவதிலும், குமுறுவதிலும் என்ன நியாயம்? ஒரு வேளை இப்போது நன்றாகப் பழகலாம். ஒரு வேளை மீண்டும் டால்மியாவிற்கு தலைமைப் பதவியோ, கங்குலிக்கு கேப்டன் பதவியோ கிட்டினால் அவர் அப்போதும் பழைய முறையில் தான் நடந்து கொள்வார் என்பது என்னுடைய யூகம்.

இங்கு கங்குலியின் விளையாட்டுத் திறன் மட்டும் பார்க்கப்படவில்லை. ஆரம்பத்திலிருந்தே சேப்பலும் கூட அவரின் ஒழுக்கத்தைப் பற்றியும், தலைமைப் பண்பையும் (மற்றவர்களை வழிநடத்தும் திறன்) முதலானவற்றுக்கே முக்கியத்துவம் கொடுத்து பேசி வந்தார். இவரால் எத்தனை இளம் வீரர்கள் வாய்ப்புக் கொடுக்கப்படாமல் வீட்டுக்கு அனுப்பபட்டார்களோ?

இத்தனை நாட்களாக கங்குலி அணியில் வேண்டும் என தீர்மானத்த தேர்வுக்குழுவினரின் முடிவுக்கு ஆதரளித்தவர்கள் இப்போது அவர் வீட்டிற்குப் போக வேண்டும் என்று முடிவெடுக்கும் போது மட்டும் எதிர்ப்பது ஏன்? இது போல பலருக்கும் இதற்கு முன்பு நிகழ்ந்துள்ளதே? ஒரு போட்டியில் சேர்க்கப்படுவதும், வாய்ப்பே தரப்படாமல் தூக்கப்படுவதும் புதிதன்றே. அவ்வாறாக முடிவெடுக்கப்பட்ட போதெல்லாம் கங்குலி எப்போதாவது தனது எதிர்ப்பைத் தெரிவித்ததுண்டா? அல்லது இப்போது போராட்டம் நடத்தும் நபர்கள் தான் ஏதாவது சொல்லியதுண்டா?

தேர்வுக்குழு செய்த ஒரே தவறு அவரை முதல் டெஸ்டிற்கு எடுத்தது தான் எனக் கூறுவேன். இந்த இரண்டு போட்டிகளில் என்ன ஆராய்ந்து விட்டார்கள்? ஆனால் இந்த முடிவு பழைய தேர்வுக்குழு எடுத்ததே. அப்போது தான் 3-2 என்ற கணக்கில் அவர் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் உள்ளே வருவதை எதிர்த்ததில் கிரண் மோரேயும் ஒருவர். சரத் பவார் வந்ததும் அந்த மூன்று நபர்களையும் தூக்கி எறிந்தார். ஆனால் அவர்களின் முடிவை தூக்கி எறியமுடியாதே. அதனால் தான் என்னவோ அவர் முதல் போட்டிக்கு வைத்துக் கொள்ளப்பட்டார்.

இதனால் சிறிய அனுதாப அலை ஏற்பட்டுள்ளது என்பதோ உண்மை தான். அணியில் இருந்து வெளியேற்றப்படும் இவர் முதல் நபர் அல்ல. இவரைப் போல, ஏன் இவரை விட மிக நன்றாக விளையாடிய பல நபர்கள் அணியில் இருந்து பல முறை ஏன் என்று காரணம் சொல்லப்படாமலேயே வெளியேற்றப்பட்டுள்ளனர். இத்தனைக்கும் கங்குலி கோடி கோடியாக சம்பாதித்து விட்டார். பல வீரர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரே ஒரு "ஒரு நாள் போட்டியிலோ" அல்லது "டெஸ்ட் போட்டியிலோ" தொலைத்து விட்டு ரஞ்சி ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

இவருக்கு இன்னும் அணியில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கிறதே தவிர நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று எண்ணம் தோன்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த 40, 39 ரன்களைப் பெற்றது போல இந்த 5 ஆண்டுகளில் இவ்வளவு கவனமாக விளையாடியது போலத் தெரியவில்லையே? இவர் ஒன்றை மட்டும் இப்போது புரிந்து கொண்டிருப்பார். இவரின் உண்மையான சகாக்கள் என்று இப்போது தெரிந்திருக்கும்.

ஆனால் ஒன்று; அணியில் இடம் பெற வேண்டி ரஞ்சி போட்டிகளில் இனி வெளுத்து வாங்குவார். அணியில் இடம்பெற குட்டிகரணம் போடுவார்.

இதற்கிடையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கங்குலி நீக்கப்பட்டதற்கு தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இந்திய பாராளுமன்றத்திலும் இதனைப் பற்றி விவாதிக்க சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அனுமதி அளித்துள்ளார். இதனைப் பற்றி விவாதிக்காவிட்டால் நாட்டின் ஒருமைப்பாடே குலைந்து போகும் என்ற அளவிற்கு அவருடைய வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடும் மழையாலும், வெள்ளத்தாலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நலனுக்காக என்ன செய்யலாம் என்று ஏதாவது ஆக்கபூர்வமாக விவாதிப்பதை விட்டு விட்டு இதெல்லாம் தேவையா? அதிலும் நேற்றைய முந்தைய தினம் மதியம் சபாநாயகர் இவ்வாறாக அறிவிக்கிறார்; "இலங்கைக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆதலால் உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் உணவருந்தலாம்". அவர்களுக்கு கிரிக்கெட் போட்டியில் வெற்றி தோல்வி தான் முக்கியம். மக்கள் அல்ல. என்னவென்று சொல்வது?

எதற்கு இதெல்லாம்? பேசாமால் இந்திய கிரிக்கெட் அணியைக் கலைத்து விட்டு அவரவர் வேலையைப் பார்க்கலாம்.

மாணவர்களின் படிப்பு கெடுகிறது; போட்டியின் ஒளிபரப்பில் ஏகப்பட்ட குளறுபடி; தோற்று போனால் ஏதோ இடிவிழுந்தது போல வருத்தம்; வென்றால் யுத்தத்தில் வென்றது போல புகழ்மாலைகள்; மகிழ்ச்சி; வீடு, தோட்டம் என பரிசுகள்; பெட்டிங் வேறு; தேர்வாளர்கள் தேர்வில் பிரச்சினை; பி.சி.சி.ஐ உறுப்பினர்கள் தேர்வில் குழப்பம்; பயிற்சியாளர் தேர்வில் குழப்பம்; போட்டி நடக்கும் தினத்தன்று கேபிள் டி.வி.யினரின் அடாவடித்தனம். சில தனியார் சேனல்கள் பே சேனல்களாக மாறி (அல்லது கட்டணத்தை உயர்த்தி) போட்டிக்கு முன்பாக அடம்பிடிப்பது; இதில் ஏதோ ஐசிசி நட்டத்தில் நடப்பது போல போட்டிகளுக்கு வரிவிலக்கு வேண்டும் என கோரிக்கை வேறு! வரும் லாபத்தை என்ன செய்கின்றனர். இதெல்லாம் தேவையா? ஒரு விளையாட்டிற்குள் இவ்வளவு அரசியலா?

ஏற்கனவே சரத் பவார் வந்தாகி விட்டது. சீக்கிரம் லாலு அரசியலில் இருந்து விலகி, தீவிர அரசியலான கிரிக்கெட்டில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விடுவார். ஏற்கனவே அவர் பிஹார் கிரிக்கெட் சங்கத் தலைவராகி விட்டார்(சரியா?). இன்னும் சில ஆண்டுகளில் அவரும் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுவார். அரசியலில் இருப்பதை விட இங்கு அதிகம் சம்பாதிக்கலாம். நாடு முழுவதும் ராஜ மரியாதை வேறு! தினமும் பேட்டி, கட்டுரைகள் என விளம்பரம் வேறு. இங்கு நடக்கும் போட்டியை வைத்துப் படமே எடுக்கலாம். படத்திற்குத் தலைப்பு: 11 குசும்பர்களும் 100 கோடி இளிச்சவாயர்களும்.

ஸ்ருசல்



இன்று சேர்க்கப்பட்டவை:


நேற்று பிராணாப் முகர்ஜி கூட தனது ஆதரவை கங்குலிக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் கங்குலி, டால்மியாவைச் சந்தித்ததன் விளைவாக, டால்மியா சரத் பவாருக்கு கடிதம் எழுதி, கங்குலியை அணியில் சேர்த்துக் கொள்ளச் செய்துள்ளார். அவரின் திறமை மீது நம்பிக்கை இருந்தால் கங்குலி இது போன்று ஆதரவு கேட்கவேண்டும் என்ற அவசியமே இல்லை. சரி இதில் சரத் பவார் முடிவெடுக்க என்ன இருக்கிறது? பின் தேர்வுக்குழு எதற்கு?

புதன், டிசம்பர் 14, 2005

மக்காச்சோள மொபைல்போன்கள்

உலகம் முழுவதும் கைத்தொலைபேசிகளின் விற்பனை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. 5 வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் மொபைல் போன்கள் அரிதாகவே மக்களால் உபயோகப்படுத்தப்பட்டது. அதே இந்தியா இப்போது உலகின் மிகப் பெரிய மொபைல் சந்தைகளில் ஒன்றாகி விட்டது. சென்ற வருடம் சிறந்த போனாகப் பாராட்டப்பட்டு உபயோகப்படுத்தப்பட்ட போன்கள் இந்த வருடம் பழையதாகி விடுகின்றன. லேட்டஸ்ட் மாடல் என்று நண்பர்களுடன் பேசி பெருமைபட்டு கொள்ள உங்களது போன் ஒரு மாதமே ஒத்துழைக்கும். அதற்குள் வேறொன்று சந்தைக்கு வந்திருக்கும். அதே நேரத்தில் இந்த போன்களால் ஏற்படும் குப்பையின் அளவும் அதிகரித்து வருகிறது. இதனை மறுசுழற்சி செய்வது தான் பல அரசுகளுக்கும், தொலைதொடர்பு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் பெரிய தலைவலியாக இருக்கிறது.

சீனாவில் சென்ற ஆண்டு மட்டும் பழையனவாக 100 மில்லியன் போன்கள் குப்பையில் சேர்ந்தன. வருடத்திற்கு அங்கு மட்டும் 150 மில்லியன் போன்கள் விற்பனையாகின்றன. ஒரு போனுக்கு இரண்டு பேட்டரிகள் என்று கணக்கிட்டால் ஒவ்வொரு போனையும் தூக்கிப்போடும் போது இரண்டு பேட்டரிகளும் எறியப்படுகின்றன். அதாவது 100 மில்லியன் சார்ஜர்களும்,200 மில்லியன் பேட்டரிகளும். இதனை அப்புறப்படுத்தும், மறுசுழற்சி செய்வதும் தான் கடினமான பணி.



இந்த நேரத்தில் ஜப்பானைச் சார்ந்த என்.டி.டி. டொக்காமோ (NTT DoCoMo) என்ற தொலைதொடர்பு நிறுவனம் தாவரங்களிலிருந்து உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் இழைகளிலிருந்து ஒரு மொபைல் போனின் மாதிரியைத் தயாரித்துள்ளது. ஆனால் LCD திரையும், கீ பேடுகள்
(Buttons) மட்டும் பழைய முறையிலேயே தயாரிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு அளவைக் குறைக்கும் நோக்கில் NTT DoCoMo நிறுவனத்தின் R&D துறையினர் இதனைத் தயாரித்துள்ளனர். பாலிலாக்டைட்ஸ் (Polylactides - PLA) என அழைக்கப்படும் இந்த பிளாஸ்டிக், மக்காச்சோளத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இதில் தயாரிக்கப்படும் பாட்டில்கள் சுலபமாக மக்கும் தன்மை உடையவை. மறுசுழற்சி செய்வதிலும் எவ்விதமான கடினமும் இருக்காது. இது 2003-ம் ஆண்டிலிருந்து சில நாடுகளில் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளன. 2002 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கோக கோலா நிறுவனம் 5,00,000 PLA கப்கள் தயாரித்து அதில் குளிர்பானங்களை விற்றது. மற்ற பாட்டில்கள் Container என அழைக்கப்படுவது போல இவை Corntainer என அழைக்கப்படுகின்றன.

இதிலிருந்து தயாரிக்கப்பட்ட முதல் மொபைல் தொலைபேசிக்கு FOMA எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது தற்போது சோதனை முறையில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரி மக்காச்சோளம் பற்றிய செய்தி ஒன்று.

தென், வட அமெரிக்க (கனடா, USA, மெக்ஸிகோ) நாடுகளில் வடிவமைக்கப்ப்டும் Corn Maze (மக்காச்சோள மழமழெனல்) மிகவும் பிரபலம். மக்காச்சோள பண்ணைகளின் நடுவில் சென்று வருவதற்கு விடும் பாதைகள் அமைப்பதில் உள்ள வித்தியாசமான வடிவமைப்பினை வைத்து நடைபெறும் போட்டிகள் நடைபெறுவது உண்டு. அதாவது உயரத்தில் இருந்து பார்க்கும் போது (விமானத்தில் இருந்து தான்) கிடைக்கும் காட்சியினை வைத்து சிறந்த வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்படும். அதற்காக பலர் தங்கள் பண்ணைகளில் அது போல Maze அமைக்க பயிற்சி எடுத்து, இம்மாதிரியான் போட்டிகளில் கலந்து கொள்வதுண்டு. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

முதல் பண்ணை

இரண்டாம் பண்ணை

மூன்றாம் பண்ணை


இந்த கார்ன் மேஸ்களின் மூலம் புவியியல் அமைப்பினை விளக்குவதற்கு சில பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடங்கள் கூட உள்ளன. சிறு குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இந்த Corn Maze களின் உதவியினால் புவியியல் அமைப்பைத் தெரிந்து கொள்கின்றனர். குழந்தைகளை இந்த Maze களில் நடக்க விட்டு அவர்கள் நடக்கும் பாதையினை GPS Receiver உதவியுடன் பெற்று அதனை GIS தகவலாக மாற்றி அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மென்பொருட்களில் ஏற்றினால் அவர்கள் பயணித்த பாதை Map ஆக வரையப்பட்டுவிடும். ஏற்கனவே அந்த Maze ஒரு நாடு / மாநிலத்தின் வரைபடத்தைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருந்தால், மென்பொருளால் உருவாக்கப்படும் வரைபடமும் அதனை ஒத்து காணப்படும். இதன் மூலம் பொழுதுபோக்காக புவியியல் அமைப்புகளை கற்பிக்க முடியும்.



GPS, GIS பற்றித் தெரிய வேண்டுமானால் தொடர்பு கொள்ளவும். எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன்.

Maze க்கு சரியான தமிழ் வார்த்தை தேடித் தேடி களைத்து விட்டேன். தெரிந்தவர்கள் சொல்லவும். எந்த அகராதியிலும் அதற்கான குறிப்பு இல்லை. மழமழெனல் என்பது சென்னை பல்கலைக்கழகம் கொடுத்த விடை. (ஏறக்குறைய ஒத்த விடை என நினைக்கிறேன்). இன்னும் சில அகராதிகளில் "சுற்றி சுற்றி செல்லும் வழி" எனக் குறிப்பிடப்பட்டுள்லது. அது தான் எல்லாருக்கும் தெரியுமே. ஒரு வார்த்தையில் இருக்கிறதா?

ஸ்ருசல்

செவ்வாய், டிசம்பர் 13, 2005

இசை மதிப்பீடு - ரங்கு தே பசந்தி

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த படங்கள் வரிசையாக ஓடவில்லையென்றாலும் அவருடைய இசையில் பாடல்கள் குறை சொல்லும் அளவிற்கு இருந்ததில்லை. 'அன்பே ஆருயிரே' மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அந்த படத்தில் ஒலிப்பதிவு சரியில்லையென்பதும் ஒரு குறை.

ஹிந்தியிலும் எந்த படமும் இந்த இரண்டு வருடங்களில் சொல்லும்படியாக அமையவில்லை. கடைசியாக மங்கள் பாண்டே வந்தது. அதுவும் சரியாக ஓடவில்லை. போஸ் படத்தில் பாடல்கள் மிக சிறப்பாக அமைந்திருந்தும் அந்த படமும் ஓடவில்லை. வரிசையாக இந்தியில் பீரியட் படங்களைக் கொடுத்து வந்த ரகுமான், இப்போது சமகால படமான ரங்கு தே பசந்தி படத்திற்கு இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் சென்ற வியாழக்கிழமை வெளிவந்தது. இதில் அமீர்கான் நாயகனாக நடித்திருக்கிறார்.

படத்தில் மொத்தம் 10 பாடல்கள். அனைத்தும் தேன் போல இருக்கிறது என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒன்று இரண்டைத் தவிர்த்து மற்ற பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.

1. இக்கூன்கர் (பாடியவர்: ஹர்ஸ்தீப் கார்) இசைத்தட்டின் முதல் பாடல். இது ஒரு பஞ்சாபி இறை வழிபாட்டுப்பாடல். சாதாரணமாக இசை எதுவும் இல்லாமல் பாடுவது போல இருந்தாலும், இந்தப் பாடலில் ஏதோ ஒரு காந்த சக்தி இருக்கிறது.

2. ரங்கு தே பசந்தி (பாடியவர்: தாலேர் மெஹந்தி, சித்ரா) பஞ்சாபி மெட்டில் அமைந்த இந்த பாடல் அதிகமாக கவராது. தாலேர் மெஹந்தியின் மற்ற பாடல்களை ஒப்பிடும் போது அந்த வகையில் இது அதில் பாதி கூட வராது.
ஆனால் நல்ல பீட்.

3. Lose Control (பாத்சாலா) (பாடியவர்கள்: நரேஸ் அய்யர், முகமது அஸ்லம்)

இது பீட் ரகத்தைச் சார்ந்தது. உங்களுக்கு பீட் ரகப் பாடல்கள் பிடிக்குமென்றால் இந்தப் பாடலை முதலில் கேளுங்கள். கண்டிப்பாக பிடிக்கும். ஹை-வேயில் பயணம் செய்யும் போது கேட்டால் வாகனத்தின் வேகம் அதிகரிப்பது உறுதி.

4. தூ பின் பதாயே (பாடியவர்கள்: நரேஸ் அய்யர், மதுஸ்ரீ பட்டாச்சார்யா)

இந்தப் பாடலின் ஆரம்பம் 'கண்ணைக் கொஞ்சம் திறந்தேன்' (மிஸ்டர் ரோமியோ) போல ஆரம்பிக்கிறது. நல்ல மெல்லிசைப் பாடல். மதுஸ்ரீ வழக்கம் போலவே நன்றாகப் பாடியிருக்கிறார். இவர் கையை நீட்டி பாடும் அந்த முறை தான் இந்தப் பாடலைக் கேட்கும் போது கண்களில் தோன்றுகிறது. இவர் மேடையில் பாடுவதை யாரும் பார்த்திருக்கிறீர்களா?

5. கல்பலி ஹே (பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், முகமது அஸ்லம், நசீம்)

மற்றுமொரு பீட் பாடல். ஹம்மா ஹம்மா பாடல் போல இருக்கிறது. ரகுமான் நன்றாகப் பாடியிருக்கிறார்.

6. கோன் சலா (பாடியவர்: மொகித் சவுகான்)

மிக மிக அருமையான மெலோடி பாடல். முதலில் கேட்கும் போது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் கேட்க கேட்க தேன் போல இருக்கிறது.

7. Lose Control (பாத்சாலா) (பாடியவர்கள்: பிளாசே): இது மூன்றாவது பாடலின் ஆங்கிலப் பதிப்பு. பலருக்கு பிளாசேயின் வரிகளும், பாடும் விதமும் பிடித்திருந்தாலும் எனக்கு இன்னும் அவரை அவ்வளவாக பிடிக்கவில்லை. அந்த மாதிரியான பாடல்களும் தமிழுக்கோ, இந்திக்கோ அவசியம் இல்லை என்றே எனக்குப் படுகிறது. அவர் பாடிய டோல் டோல் பாடலின் இசை மிக அருமையாக இருக்கும் அவருடைய குரலைத் தவிர. இவரின் ராஜ்யம் பாய்ஸ் அல்லது பாபாவில் தான் ஆரம்பித்தது என நினைக்கிறேன். டேட்டிங் பாடல் மட்டுமே நன்றாக வந்திருந்தது. அது கூட இசைக்காகவும், ராகத்திற்காகவும் தான் என்று நினைக்கிறேன்.

மேலும் அன்பே ஆருயிரேயில் மரங்கொத்தியே பாடலுக்கு நடுவில் வரும், "உதடு உதடு மேலே make it a Square" கூட பாடலின் தரத்தை குறைப்பதாகவே எனக்குப் பட்டது. இவருடைய பாடல்கள் எல்லா ஏ.ஆர்.ரகுமான் படங்களிலும் திணிப்படுவதாகவே எனக்குப் படுகிறது.

8. லக்கா சுப்பி (பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், லதா மங்கேஷ்கர்)

ஏ.ஆர்.ரகுமானும், லதா மங்கேஷ்கரும் இணைந்து பாடியிருக்கும் முதல் பாடல். இந்த இசைத்தட்டு வருவதற்கு முன்பே மிகவும் பேசப்பட்ட பாடல். இதற்காக லதா சென்னை வந்து பாடிக்கொடுத்து சென்றார் என்பதும் கொசுறு செய்தி. லதாவிற்காக சில நேரங்களில் மும்பையில் ரிக்கார்டிங் வைத்திருக்கும் ரகுமான், தான் புதிதாக கட்டியிருக்கும் ஸ்டுடியோவிற்கு லதா கண்டிப்பாக வந்து பாடிக்கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததால், அவர் சென்னைக்கு வந்து பாடிக்கொடுத்திருக்கிறார். எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாகவே வந்திருக்கிறது. இருவருமே மிக அருமையாகப் பாடியிருக்கிறார்கள் முக்கியமாக ரகுமான். நல்ல மெலோடி.

பாடலின் ஆரம்பத்தில் வரும் கிதார் இசை வெள்ளைப் பூக்கள் பாடல் போலவே இருக்கிறது.

9. லல்கார் (பாடியது (?) அமீர்கான்) இது இருவர் படத்தில் வரும் 'உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்' என்ற கவிதை போல வரும் பாடல்(?). அமீர்கான் வாசித்தது.

10. ரூபரூ ரோஷிணி (பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், நரேஸ் அய்யர்)

இந்த ஆல்பத்தின் சிறந்த பாடல் இது தான் என்று அடித்துக் கூறுவேன். அருமையான பாடல். நல்ல இசை. ஆரம்பத்தில் வரும் கிடார் இசை மிக அருமை. நரேஸ் அய்யர் நன்றாகப் பாடியிருக்கிறார்.

இந்த இசைத்தட்டில் ஆச்சர்யப்பட வைத்த விசயங்கள் இரண்டு. கிதார் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ரகுமான் ஆசிட்டிற்கு கிதார் இசையை இரண்டு பாடல்களில் (லக்கா சுப்பி, ரூபரூ) முழுவதுமாக உபயோகித்திருக்கிறார்.

மற்றொன்று நரேஸ் அய்யரின் குரல். இவர் தான் அன்பே ஆருயிரேயில் மயிலிறகே பாடலைப் பாடியவர். அந்தப் பாடலில் அவருடைய குரல் பலரைக் கவரவில்லை. ஆனால் இதில் அவருடைய குரல் முற்றிலும் வித்தியாசமாக, மிக நன்றாக இருக்கிறது. இவருக்கு வயது ஒரு 20-23 ருக்கும். பெங்களூரில் வைத்து சந்தித்தேன். மும்பையில் பிறந்து வளர்ந்த தமிழர். ரகுமான் இவரை சந்தித்தது ஒரு இசை நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில். வெற்றிபெறும் நபருக்கு தனது படத்தில் ஒரு பாடல் பாட வாய்ப்புக் கொடுப்பதாகச் சொன்னாராம். இவர் வெற்றி பெற்றதும் இவரிடம் ரகுமான் கேட்ட கேள்வி, "உங்களுக்கு தமிழ் பேச வருமா?" ஆம் என்ற சொன்ன நரேஸ் அய்யரை தேவைப்படும்போது அழைக்கிறேன் என்று சொன்னாராம். சொன்னது போல சில நாட்களில் அழைப்பு வந்ததாம்.

ரகுமானிடம் வளரும் கலைஞர்கள் பட்டியல் ஒன்று எப்போதும் இருக்கும். அந்தப் பாடகர்கள் நன்கு வளர்ந்து மற்ற இசையமைப்பாளர்களிடம் இருந்து வாய்ப்பு வரும் வரை அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு உருவாக்கிக் கொடுப்பார். இதற்கு உதாரணமாக ஹரிணி, கார்த்திக், சுஜாதா, மின்மினி, சின்மயி, உன்னிகிருஷ்ணன், உன்னிமேனன் என்று வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.

பட்டியலில் எப்போதும் இரண்டு - மூன்று பாடகர்கள் இருப்பார்கள். அதில் இப்போதிருப்பது நரேஸ் அய்யர், மதுஸ்ரீ மற்றும் பிளாசே என்று நினைக்கிறேன். இந்திய திரையுலகில் அதிகமான பாடகர்களை அறிமுகப்படித்தியதும் அவர் தான் என்று நினைக்கிறேன்.

பாடல்களை எழுதியிருப்பர் பிரவீன் ஜோஷ். பாடல் வரிகள் எனக்குப் புரியாத காரணத்தால், அவை எவ்வாறு எழுதப்பட்டிருக்கின்றன என்னால் கருத்து சொல்ல இயலாது.

எனக்குப் பிடித்த பாடல்களின் வரிசை

1. ரூபாரூ
2. கோன் சலா
3. லக்கா சுப்பி
4. இக்கூன்கர்
5. Lose Control

160 ரூபாய் (Audio CD) கொடுத்து நிச்சயமாக வாங்கலாம்.

ஸ்ருசல் Rang De Basanti Music Review

திங்கள், டிசம்பர் 12, 2005

'தில்லாலங்கடி' திப்புசுல்தான்

சென்ற வாரம் இந்தியா வந்த கேட்ஸ், பலரைச் சந்தித்துப் பேசினார். அவர்களில் குறிப்படத்தகுந்தவர்கள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் கலைஞர். கேட்ஸ்-ம் கலைஞரும் என்னப் பேசுவார்கள் என கற்பனை செய்த போது உதித்த அறிக்கை. இதனைப் போன வாரமே தட்டச்சு செய்து வைத்திருந்தேன். ஆனால் சில காரணங்களால் அதை வலைப்பதிவில் ஏற்றமுடியவில்லை.

உலகத்தின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனத்தின் தலைவர் தம்பி பில்கேட்ஸ் அவர்கள் நேற்று என்னை சந்தித்து உரையாடினார் . எனது வீட்டிலேயே சந்திப்பு நிகழ வேண்டும் என தம்பி கேட்ஸ் பிடிவாதமாக இருந்ததால் அவரை கோபாலபுரத்தில் வைத்து சந்தித்தேன். பல விசயங்களைப் பற்றி விவாதித்தோம். முக்கியமாக கழகத்தின் செயல்பாட்டினைப் பற்றி தம்பி கேட்ஸ் மிகவும் புகழ்ந்து பேசினார். மேலும் என்னை தமிழகத்தின் தலைவராகப் பார்க்காமல் உலக மக்களின் தலைவராகப் பார்ப்பதாகவும் தெரிவித்தார். மைக்ரோசாப்டின் முதல் இந்திய அலுவலகம் தமிழகத்தில் தான் தொடங்கப்பட வேண்டும் என தான் பிடிவாதமாக இருந்ததாகவும் ஆனால் அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக வேறு வழியில்லாமல் ஹைதாராபாத்தில் தனது அலுவலகத்தை அமைத்ததாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். அடுத்த முறை கழக ஆட்சி மீண்டும் அமையும் போது கண்டிப்பாக தமிழகத்தில் சென்னையிலோ அல்லது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலோ மைக்ரோசாப்டின் தலைமையகத்தை மாற்றுவதாகத் தெரிவித்தார்.

தம்பி பில் கேட்ஸின் தமிழ் அறிவு என்னை வியக்க வைத்தது. என்னுடைய 'தொல்காப்பிய பூங்கா' புத்தகத்தை பல முறை படித்து புலங்காகிதம் அடைந்ததாக தெரிவித்தார். எப்படி தமிழின் மீது இவ்வளவு ஆர்வம் ஏற்பட்டது எனக் கேட்டதற்கு, என்னுடன் தமிழில் உரையாடி மகிழ வேண்டும் எனபதற்காக என்னையே அவரின் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு மூன்று ஆண்டுகளாக தமிழ் படித்து வருவதாகவும் கூறி என்னை ஆச்சர்யப்பட வைத்தார்.

மேலும் அவர் தமிழில் எழுதிய சில கவிதைகளை என்னிடம் படித்துக் காட்டி என்னுடைய கருத்தைக் கேட்டார். சில திருத்தங்களைச் சொன்னேன். திருமதி மெலிண்டா கேட்ஸ் திருத்தங்களை ஆர்வத்துடன் குறித்துக் கொண்டார்.

தம்பி கேட்ஸ்க்கு தற்போது தொழிலில் கூகுள், யாகு போன்ற நிறுவனங்களின் மூலமாக பலத்த போட்டி இருப்பதால் அவற்றை சமாளிப்பதற்காக சில அறிவுரைகளையும் கூறினேன். ஆனால் இத்தனை நிறுவனங்களின் போட்டியையும் சமாளித்து, இன்னும் சந்தையில் கோலோச்சி வருவதால் தம்பி கேட்ஸிற்கு 'தில்லாங்கடி' கேட்ஸ் என்னும் பட்டத்தைச் சூட்டினேன். இனிமேல் அவர் தில்லாங்கடி என்று அன்புடன் அழைக்கப்பட வேண்டும் என கழகத் தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தைப் போலவே அமெரிக்காவும் கழகத்தின் தலைமையில் வளர்ச்சி பெற வேண்டும் எனவும் அதற்காக கழகத்தின் கிளையை அமெரிக்காவிலும் நிறுவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஆனால் அதனைப் படிப்படியாக ஆரம்பிக்க வேண்டி இருப்பதாலும், மேலும் கழகத்தின் நலம் விரும்பி தோழர் புஷ்ஷின் மனம் புண்படக்கூடாதெனவும், அதனை மைக்ரோசாப்ட் அளவில் ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளோம். அதற்கு 'மை.மு.க' எனப் பெயரிட்டுள்ளேன். அதாவது, 'மைக்ரோசாப்ட் முன்னேற்றக் கழகம்' என அழைக்கப்படும்.

மேலும் அவருடைய வாழ்க்கை வரலாறை 2007 ல் வெளியிட இருப்பதாகவும், அதற்கு என்னுடைய உரை வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நான் எவ்வளவு கூறியும் கேட்காமல் நான் தான் எழுத வேண்டும் என பிடிவாதமாகக் கூறியதால் வேண்டாவெறுப்பாக ஒப்புக் கொண்டேன். மேலும் அந்தப் புத்தகத்தில் வரும் வருமானத்தின் பெரும்பகுதியினை (1%) 'பில்கலைஞர்' அறக்கட்டளைக்கு கொடுப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

விண்டோசின் அனைத்துப் பதிவுகளிலும் இனி மேல் என்னுடைய புத்தகத்திலிருந்து குறிப்புகளை எடுத்து "Tip of the Day" டயலாக்கில் டிஸ்பிளே செய்வதற்கு எனது அனுமதியைக் கேட்டார். தமிழன் புகழ் உலகெங்கும் பரவட்டும் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சியுடன் அனுமதி கொடுத்தேன்.

'பில்' தமிழில் உடனடியாகச் சேர்க்கப்பட வேண்டிய ஓர் 'சொல்'.
கேட்ஸ் அறிவாலயம் நுழைய இனி ஏதும் இல்லை கேட்ஸ்

அன்புள்ள,
மு.க

இது முற்றிலும் கற்பனையே. நகைச்சுவைக்காக மட்டுமே. கலைஞரைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பதிக்கப்படவில்லை. அவருடைய உரைநடை பாணி மட்டுமே எடுத்தாளப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் சிறிதும் இல்லை.


'Changing India' பகுதி 2-ல் கேட்ஸிடம் பிராணாய் ராய் கேட்ட கேள்வி.

"கூகுள் நிறுவனம் அனைத்து மென்பொருள் தொகுப்புகளையும் இலவசமாக அளிக்கிறது. உங்களுக்கு அது போல இலவசமாக அளிக்கும் எண்ணம் ஏதும் இருக்கிறதா?"

அதற்கு கேட்ஸின் பதில்

"கூகுள் எதையுமே இலவசமாக அளிப்பதில்லை. கூகுள் தேடியில் பயன்பாட்டாளர்கள் விளம்பர URL-ஐ சொடுக்கவதால் மட்டுமே கூகுள் நிறுவனம் பெரும் வருவாயை ஈட்டுகிறது. நீங்கள் சொடுக்குவதால் தானே அவர்களுக்கு லாபம். அப்படிப் பார்த்தால் அந்த லாபத்தை உங்களிடம் தானே பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் அனைத்து லாபத்தையும் அவர்களே வைத்துக் கொள்கிறார்களே? இது எந்த வகையில் சரி?



(படம் நன்றி: தினமலர்)

மேலும் கேட்ஸின் இந்தப் படமும் என்னைக் கவர்ந்தது. சாதாரணமாக அமர்ந்து கதை கேட்கும் பாணி. பலரும் அவரின் மோட்டிவ் வேறு என குறைகூறுவதும் உண்டு. ஆனால் அது முக்கியமில்லை எனத் தோன்றுகிறது. நமது அரசியல்வாதிகளோ அல்லது வேறு யாரும் செய்யத் தயங்கும் செயல் அது. அதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். வெள்ளிக்கிழமை எனது அலுவலத்திற்கு அடுத்த கட்டடத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கட்டிட திறப்பு விழாவிற்கு வந்திருந்தார். ஆனால் பார்க்க முடியவில்லை.

ஸ்ருசல்

ஸ்ருசல்

வெள்ளி, நவம்பர் 25, 2005

Desktop திரட்டிகள் (Feed Readers)

ஒவ்வொரு மின்னஞ்சல் வரும் போது, எப்படி உங்களுக்கு அவுட்லுக் மென்பொருள் அறிவிப்புக் கொடுத்து மின்னஞ்சலை செர்வரில் இருந்து இறக்கம் செய்து உங்கள் கணினியில் சேமிக்கிறதோ, அதே போல உங்களுக்குப் பிடித்தமான வலைப்பதிவுகளையும் அவை புதிதாக Post செய்யப்படும் போது உடனே இறக்கம் செய்ய பல மென்பொருள்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றைப் பற்றி இங்கே தெரிவிக்கின்றேன.

FeedDemon என்ற மென்பொருளை நீங்கள் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உபயோகப்படுத்தலாம். நீங்கள் இதனுடைய Trial Version-ஐ இந்தப் பக்கத்திலிருந்து பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். Licensing பற்றித் தெரிந்து கொள்ள அந்த நிறுவனத்தின் வலைப்பக்கத்திற்குச் செல்லவும். இதனை உங்கள் கணினியில் நிறுவியதும், இயல்பாகவே பல வலைத்தளத்திலிருந்து செய்திகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு காண்பிக்கப்படும். உங்களுக்குப் பிடித்தமான பதிவினை இதில் சேர்க்க, Channel Group-ல் Right Click செய்து வரும் மெனுவில் New -> New Channel Option தெரிவு செய்யவும்.




பின்பு வரும் கட்டத்தில் உங்களுக்கு வேண்டிய வலைப்பதிவின் Atom URL-ஐ கொடுக்கவும். முடித்ததும், நீங்கள் கொடுத்த வலைப்பதிவிலிருந்து அனைத்து புதிய பதிவுகளும் இறக்கம் செய்யப்பட்டு காண்பிக்கப்படும்.





இனி உங்கள் கணினியிலேயே உங்களுக்குப் பிடித்தமான வலைப்பதிவுகளையும் இறக்கம் செய்து கொள்வது மட்டுமல்லாமல், உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்கள் படித்துக் கொள்ளலாம் அதுவும் இணையத்தில் தொடர்பு இல்லாமல். (i.e offline). இதனால் உங்களுக்குப் பணமும் மிச்சமாகும்.




இதனைப் போல நிங்கள் இன்னொரு மென்பொருள் இலவசமாகக் கிடைக்கின்றது. அதனைப் பற்றித் தெரிந்து கொள்ள http://www.feedreader.comஎன்ற வலைப்பக்கத்திற்கு செல்லவும். ஆனால் இதில் தமிழ் எழுத்துருக்கள் படிப்பதற்கான வசதி இல்லை.

Desktop திரட்டிகளை சில நேரம் நீங்கள் விலை கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும். அப்படி முடியாத பட்சத்தில் Google-ன் ரீடர் பக்கத்தினைப் பயன்படுத்தி நீங்கள் பல வலைப்பதிவுகளை கூகுள் மின்னஞ்சல் போல வாசிக்கவும் முடியும். அதற்கு http://www.google.com/reader என்ற பக்கத்திற்கு சென்று "Your subscriptions" option -> "Add Feed" -> ஐ தெரிவு செய்து, உங்களுக்கு வேண்டிய பதிவின் URL-ஐக் கொடுக்கவும்.




ஒவ்வொரு முறை நீங்கள் ரீடர் பகுதிக்கு செல்லும் போது நீங்கள் பதிவு செய்துள்ள அனைத்து வலைப்பகுதிகளில் இருந்து புதிய பதிவுகள் திரட்டப்பட்டு உங்களுக்குக் காட்டப்படும். Gmail மின்னஞ்சல் போல நீங்கள் படித்துக் கொள்ளலாம்.





அதே போல உங்கள் கூகுள் தேடி-யின் முகப்பினையும் உங்கள் வசதிக்கேற்ப Customize செய்து உங்கள் வலைப்பதிவையோ, உங்களுக்குப் பிடித்த வலைப்பதிவுகளோ கிடைக்குமாறும் செய்ய முடியும். அதற்கு நீங்கள் 'Personalize Google' Option-ஐ தெரிவு செய்து உங்களுக்கு வேண்டிய செய்தி நிறுவனங்களின் தலைப்புகள் வரும் படி செய்ய முடியும்.





சிக்கல்கள்:

இது சிறந்த பயனளிக்கும் முறைதான் என்றாலும் உங்களால் சில மென்பொருட்களில் படங்கள் பார்க்க இயலாது. மேலும் முக்கியமாக நீங்கள், பின்னூட்டம் இட இயலாது. நீங்கள் அந்த வலைப்பதிவிற்கு சென்று தான் பின்னூட்டமிட வேண்டும். மற்றவர்களின் பின்னூட்டங்களையும் படிக்க இயலாது. முக்கியமாக, யார் யார் புதிதாக எழுதுகிறார்கள் எனத் தெரியாது. உதாரணத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் தமிழ்மணம் போன்ற மன்றத்தில் இணைந்தால், அவர் பற்றி உங்களுக்கு தெரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. உங்களுக்கு மிக மிக பிடித்தமான பதிவுகளை மட்டும் இது போன்ற மென்பொருட்கள் கொண்டு படித்துவிட்டு மற்ற பதிவுகளுக்கு இந்த மன்றங்களுக்கு செல்லத் தவற வேண்டாம்.

உங்களுக்கு இதனை நிறுவிப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏதும் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருசல்

வியாழன், நவம்பர் 24, 2005

சிதம்பர ரகசியம்

தமிழ் சேனல்களில் நான் பார்க்கும் ஒரே தொடர் 'சிதம்பர ரகசியம்' மட்டுமே. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது 'மர்ம தேசம்-2' தொடரை வாரம் தவறாமல் பார்த்து வந்தேன். உங்களில் பலருக்கு இந்தத் தொடர் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன். அப்போதே Split Personality ஐ பற்றி டைரக்டர் நாகா அருமையாக படமாக்கியிருந்தார். ஒரு கிராமத்தில், அநியாயம் செய்பவர்களை 'கருப்புசாமி' அழிப்பதாக செல்லும், அந்த கதை. கதையின் நாயகனின் (சேத்தன்) குடும்பமும் கடுமையாக அந்த பழிவாங்கும் படலத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் (நாயகன் பாட்டி, சித்தப்பா உட்பட). ஊர் மக்களை கொடுமைப்படுத்தி வந்த நாயகனின் பாட்டி கருப்புசாமியால் கொல்லப்படுவார். ஏதோ ஒரு தவறுக்காக (எனக்கு ஏன் என ஞாபகம் இல்லை) அவர் சித்தப்பாவின் கை வெட்டப்படும். அந்த கிராமத்திற்கு வரும் பெண் பத்திரிக்கையாளர் (அப்படித் தான் நினைக்கிறேன்) தேவதர்ஷினி அதனைப் பற்றி ஆர்வத்துடன் துப்பு துலக்குவார். கடைசியில் கொலையைச் செய்யும் கருப்புசாமி வேறு யாருமல்ல; கதையின் நாயகனே எனத் தெரியவரும். சிறுவனாக இருக்கும் போது, கருப்பு சாமி கதையைக் கேட்டு கேட்டு அவனே கருப்பாக மாறி அவன் பாட்டியைக் கொன்றிருப்பான்; சித்தப்பாவின் கையையும் வெட்டியிருப்பான். அவன் சித்தப்பாக்கும் இவை எல்லாம் முன்பே தெரிந்திருந்தும் இதனை வெளியே சொல்ல மாட்டார். தொடரின் கடைசி பாகத்தை என்னால் சரியாக பார்க்க முடியாமல் போனது. மேலும் இந்தத் தொடரின் போது தான் பாலசந்தரின் மின்பிம்பங்கள் நிறுவனத்திற்கும், சன் டி.விக்கும் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு பாலசந்தர் ராஜ் டி.வி. சென்றார்.

நடுவில் நாகா ராஜ் டி.வி.யில் மின்பிம்பங்களுக்காக ஏதோ ஒரு மர்ம தொடர் செய்தார். மீண்டும் சன் டி.வி.யில் ஒரு வருடத்திற்கு முன்பு 'சிதம்பர ரகசியம்' தொடரை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அமர்களமாகத் தான் போனது. நடுவில் எனக்குப் பிடிக்காமல் போனதாலும், நேரம் கிடைக்காத காரணத்தாலும் என்னால் தொடர்ச்சியாக பார்க்க முடியாமல் போனது. பத்திரிக்கை நிருபரான சோமு பணி நிமித்தமாக சிலரை சந்திக்கப் போகும் இடங்களில் எல்லாம் (விஷம் கொடுத்து) கொலை நடந்தேறுகிறது கொலை செய்யப்படுவதற்கு முன்பாக, கொலையுண்டவர்களின் கைரேகையும் எடுக்கப்படுகிறது. அதனால் சோமு மீது காவல்துறையினருக்கு சந்தேகம் வலுக்கிறது. காவல் துறையினர் அவரை கைது செய்ய முயலும் போது (அல்லது கைது செய்த பின்னோ) அவர் தலைமறைவாகிறார். இந்த நிகழ்வுகள் நாடி ஜோசியத்துடன் தொடர்புடையதாக கூறப்பட்டிருக்கும். அவர் வேலை பார்க்கும் பத்திரிக்கை நிறுவனத்தின் உரிமையாளரின் மகள், எய்ட்ஸ் பற்றிய ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவரின் ஆராய்ச்சிக்கும் இந்த கொலைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் தோன்றுகிறது.

நடுவில் சில மாதங்கள் பார்க்கவில்லை. நேற்று மீண்டும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சோமு, கொலையுடன் சம்பந்தப்பட்ட மருத்துவர் ஒருவரை மிரட்டி விசாரிக்கும் காட்சி ஒளிபரப்பானது. அப்போது அந்த மருத்துவர் தனக்கு கொலை பற்றியெல்லாம் எதுவும் தெரியாது; கொலையுண்ட சிலரின் கை ரேகைகளை எடுக்கும் வேலை மட்டுமே கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார். கைரேகை எடுக்கச் சொன்னது யார் என சோமு கேட்பதற்கு, "முன்பு விஷ தன்மையுள்ள ஒரு தனிமத்தைப் பற்றிய கட்டுரை ஒன்றை ஒரு பத்திரிக்கையில் எழுதியிருந்தேன். அதனைப் பார்த்து ஒருவர் என்னை பார்க்க வந்தார். எனக்கு அதிகம் பணம் கொடுப்பதாகவும், அதற்கு பதிலாக அந்த விஷம் தயாரிக்கும் முறையினைப் பற்றி தெரிவிக்க வேண்டும் என்றார்.. நானும் அதற்கு சம்மதித்தேன்" என்கிறார்.

அப்போது தொலைபேசி அழைக்கிறது; காணமல் போன சோமுவின் சொந்தக்கார பெண் கிடைத்து விட்டதாக செய்தி வருகிறது. அவளைப் பார்க்க சோமு செல்கிறார். இந்த வார நிகழ்ச்சி இதோடு முடிந்தது. இந்தத் தொடர் எங்கு சென்று முடியப் போகிறது எனத் தெரியவில்லை.

ஒரு வேளை அனைத்து வாரமும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் கணித்திருக்க முடியும். விஷம் கொடுத்துக் கொல்லுதல், விஷம் தாயாரிக்க உதவிய மருத்துவர் முதலானவற்றைப் பார்த்ததும், பள்ளியில் படிக்கும் போது படித்த பழைய கட்டுரை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. (மாலை மலர் என நினைக்கிறேன். கட்டுரை பெயர்'உலகை உலுக்கிய கொலைகள்' என்றும் ஞாபகம்)

அது ஒரு பிரபலமான ஃபோட்டோத் தொழிற்சாலை (நமது ஊட்டி இந்துஸ்தான் போட்டோ நிறுவனம் போல), அங்கு புதிதாக ஓர் இளைஞன் மேலாளர் பொறுப்பில் பணியில் சேருகிறான். வந்த சில நாட்களிலே அனைவருக்கும் அவனைப் பிடித்து விடுகிறது. அவனுடைய மேலதிகாரி உட்பட. அடிக்கடி தொழிற்சாலைக்கும் சென்று அங்கு வேலை பார்க்கும் மற்ற தொழிலாளர்களிடம் அன்பாக பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெறுகிறான்.

ஆனால் சில நாட்களில் அவனுடைய சக பணியாளர் பணியில் இருக்கும் போது இறந்து போகிறார். பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களால் அவன் எதனால் இறந்தான் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் குழம்பி விடுகின்றனர். சில வாரங்கள் கழித்து இறந்தவரின் இடத்தை நிரப்ப வந்தவரும் அதே முறையில் இறக்கிறார்.

ஒரு நாள் அவனும், அவனுடைய உயரதிகாரியும் இந்த மரணங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, அவனுடைய உயரதிகாரி காபி கேட்கிறார். காபி கொண்டு வந்து கொடுத்து அவனுடைய சீட்டிற்குப் போன சிறிது நேரத்தில் அவரும் இறந்து போகிறார். அவனுடைய அலுவலகத்தில் பணிபுரியும் பலருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

சில நாட்கள் கழித்து போலீசார் அந்த தொழிற்சாலையில் ஒரு கூட்டம் நடத்துகின்றனர். அந்தக் கூட்டத்தில் அவனும் கலந்து கொள்கிறான். காரணம் என்னவாக இருக்கும் என்று விவாதம் ஆரம்பிக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு கருத்தினைச் சொல்கின்றனர். ஆனால் எதுவுமே ஏற்றுக்கொள்ளப்படும் காரணமாகத் தெரியவில்லை. திடீரென்று அவன் எழுந்து, "இந்த சாவுகளுக்கு ஏன் தாலியம் விஷம் காரணமாக இருக்கக் கூடாது". எனக் கேட்கிறான். டாக்டர்கள் மத்தியில் ஒரே நிசப்தம். "ஆம். வாய்ப்புகள் இருக்கின்றன" எனக் கூறுகின்றனர். ஏனென்றால், அந்தத் தொழிற்சாலையில் லென்சுகளில் பூச்சுகளுக்குப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் அது. அதனை உட்கொண்டால் இதனைப் போன்ற மரணம் நிகழ அதிக வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் போலீசார் மத்தியில் சந்தேகம். இவனுக்கு எப்படி இது தெரியும் என்பது. அவனை வைத்து விசாரிக்கும் போது, உண்மையை ஒப்புக்கொள்கிறான். சிறு வயது முதலே இது போன்ற வேதிப்பொருட்களின் மீதான ஆர்வம் அதிகம் எனவும், அது போலவே தாலியம் பற்றித் தெரிந்து கொண்டதாகவும் தெரிவிக்கிறான். அது மட்டுமல்லாமல் தாலியம் (தாலியம் சல்பேட்), இது போன்ற தொழிற்சாலைகளில் பரவலாகக் கிடைக்கும் என்பதும் இங்கு பணியில் சேருவதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கிறான். வேலை விட்டுச் செல்லும் போது பல தடவை தாலியத்தை டப்பாவிலும் அடைத்து வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கிறான்.

சிறு வயதில் இருந்தே, கிடைக்கும் பணத்தில் இது போல விஷப் பொருட்களை வாங்கி நண்பர்கள், உறவினர்களுக்குக் கொடுத்ததும் தெரிய வருகிறது. சந்தேகம் வராமல் இருக்க தானும் சமயங்களில் உட்கொண்டுள்ளான். சமயங்களில் யார் யாருக்கு விஷம் வைத்துள்ளோம் என்பது தெரியாமல் அந்த உணவையும் இவனே உண்ண நேர்ந்து இவனும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளான். அப்போதே பலர் இறந்ததால், போலீசார் இவனை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஜெயிலில் கழிக்கிறான். ஆனால் வெளியே வந்ததும் தன்னைப் பற்றி வெளியில் சொல்லாமல் வேலை தேட, கடைசியில் அந்தத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்துள்ளான்.

எதற்காக அங்கு பணிபுரியும் சகத் தொழிலாளர்களைக் கொன்றாய் எனக் கேட்டதற்கு, "எனக்கு அது எத்தகைய வீரியம் கொண்டுள்ளது; அதனை உட்கொள்பவர்கள் எம்மாதிரியான மரணத்தைத் தழுவுகிறார்கள் என்பதனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் தான் காரணம்" என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியுறுகிறார்கள். பின்னர் அவன் கைது செய்யப்படுகிறான்.

தாலியமானது (Chemical Symbol TI), ஆர்சனிக்-க்குப் பிறகு அதிகமான விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருளாகக் கருதப்படுகிறது. இது 1861 ல் இங்கிலாந்தில் சர் வில்லியம் குரூக்ஸ் என்பவரால் கண்டறியப்பட்டது. தாலோஸ் என்றால் கிரேக்க மொழியில் பச்சைத் தண்டு என்று பொருள். இது ஆரம்பத்தில் எலி பாஷணமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இதனுடைய அதீதமான விஷத்தன்மையால் பல நாடுகளில் தடை செய்யப்பட்டது (அமெரிக்கா உட்பட). ஆனாலும் இது போன்ற லென்சுகளில் பூச்சிற்காக பலத் தொழிற்சாலைகளில் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உலகின் சில கொலைகளுக்கும், கொலைத் திட்டங்களுக்கும் காரணியாக இருந்துள்ளது.

கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவினைக் கொல்ல அமெரிக்க அரசு 1967 ல் செய்த முயற்சிக்கு தாலியம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிடல் காஸ்ட்ரோவின் தலைமுடியும், தாடியுமே அவருக்கு கம்பீரமானத் தோற்றத்திற்குக் காரணம் எனவும், அதுவே அவர் மேல் மக்கள் கொண்ட அபிமானத்திற்குக் காரணம் என சி.ஐ.ஏ நம்பியது (அல்லது நம்பியதாக நம்பப்படுகிறது). தாலியத்தை குறைவாக உட்கொண்டாலோ, அல்லது அது தோலின் மேல் பட்டாலோ அதிகமான முடியுதிர்வுக்கு காரணமாக அமையும் என்று CIA காஸ்ட்ரோவிற்கு எப்படியாவது தாலியத்தினை அவருடைய உடலில் செலுத்திவிட வேண்டும் என முடிவெடுத்து, ஏதாவது ஒரு வெளிநாட்டுப் பயணத்தினைப் பயன்படுத்தி அவருடைய ஷூவில் தாலியத்தைத் தடவி அவருடைய முடியினைக் கொட்ட வைத்து விட வேண்டும் என்று சி.ஐ.ஏ முடிவெடுத்ததாக நம்பப்படுகிறது.

1994 ஆம் ஆண்டில் ரஷ்ய வீரர்கள், அவர்களுடைய களத்திற்கு அருகே கிடந்தப் பெட்டியினை எடுத்துப் பார்த்த போது அதில் தாலியம் பவுடர் இருந்துள்ளது. ஆனால் அது என்னவென்று அறியாமல் அவர்கள் அதனை புகையிலையுடன் சேர்த்து புகைத்தனர். பின்னர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர். ஒரு வேளை அதனை அபின் போன்ற போதைப் பொருள் என நினைத்திருப்பார்களோ?

ஸ்ருசல்

திங்கள், நவம்பர் 21, 2005

இன்போசிஸ் நாராயணமூர்த்தி ரூபாய் 80-க்கு

சென்ற சனிக்கிழமை பெங்களூர் பேலஸ் கிரவுண்ட்ஸில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். பெங்களூரிலே வாசம் செய்தாலும், இங்கு புத்தகக் கண்காட்சி நடைபெறுவது சில தமிழ்மணம் வாசகர்களின் பதிவினைப் படிக்கும் வரைத் தெரியாது. நன்றி (அலெக்ஸ் பாண்டியன், பத்ரி). சனிக்கிழமை கூட்டம் அதிகமாக இருக்கும் என்று சிறிது நேரத்திற்கு முன்னதாக செல்ல வேண்டும் என நினைத்து 11 மணிக்கே கண்காட்சி நடக்கும் இடத்தை அடைந்தேன். ஆனால் எனது எதிர்பார்ப்பிற்கு எதிர் மாறாக 30-40 பேர் கூட அங்கு இல்லை.

முதலில் சென்ற இரு கடைகளிலும் கடன் அட்டை வாங்க மறுத்து விட்டதால் எனக்கு ஏமாற்றம். கையில் 1000 ரூபாய் தான் இருந்தது. வெளியே சென்று ATM-ல் பணம் எடுக்கலாம் என்றால் 2 கி.மீ தூரம் செல்ல வேண்டும். மேலும் நுழைவு சீட்டு திரும்ப எடுக்க வேண்டும். பார்க்கிங் பணம் திரும்பக் கட்ட வேண்டும். சரி அடுத்த ஸ்டால்களில் முயற்சித்துப் பார்க்கலாம் என்று சென்றேன். காலச்சுவடு பதிப்பகத்தாரின் ஸ்டாலுக்குச் சென்று பார்வையிட ஆரம்பித்தேன். பாதி ஸ்டால்களை சுந்தர ராமசாமியின் புத்தகங்கள் ஆக்கிரமித்திருந்தன. நாவல்கள் எனக்கு அதிகமான பரிட்சயம் கிடையாது. எனக்கு சுந்தரா ராமசாமியின் புளிமரத்துக் கதை, ஜே.ஜே சில குறிப்புகள் புத்தகங்கள் மட்டும் தான் தெரியும். கதை புத்தகங்களில் எனக்கு உடன்பாடு இல்லாததால், கட்டுரைகள் மாதிரியான புத்தகங்கள் வாங்க விரும்பினேன். ஆனால் கடைக்காரர் அந்த நாவல் புதிதாக வந்துள்ளது; இந்த நாவல் புதிதாக வந்துள்ளது என்று கூறி நான் அவற்றைப் படித்திருக்கிறேனா எனக் கேட்டார். இல்லை எனக் கூறிவிட்டு நகர்ந்தேன். கடைசியாக சே குவாராவின் புத்தகமும், குமரி நீட்சி புத்தகமும் வாங்கினேன். நல்ல வேளை கடன் அட்டை வாங்குவதாகத் தெரிவித்ததால் பிழைத்தேன்.

மணி 12 ஆகியிருந்தது.

அடுத்த சில கடைகளிலும் வைரமுத்து, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் புத்தகங்களே அலங்கரித்திருந்தால் நகர்ந்து கொண்டே சென்றேன். ஒரு ஸ்டாலில் என் மாமாவிற்கு யவன ராணி வாங்கிவிட்டு அங்குள்ளவரிடம் பேச்சுக் கொடுத்தேன். வரவேற்பு எப்படி உள்ளதென எனக் கேட்டது தான் தாமதம். மடமடவென தனது ஏமாற்றத்தைக் கொட்ட ஆரம்பித்தார்.

ஸ்டாலுக்கு நாங்கள் 10000 ரூபாய் கொடுத்து அனுமதி பெற்றிருக்கிறோம். தங்கும் வசதி, உணவு, வாகன உள்ளிட்டவற்றை நாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் சேர்த்து 16000 க்கும் மேலாகி விட்டது. ஆனால் இந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 20000 க்கும் மேல் விற்பனையாகவில்லை. போன வருடம் குறைந்த அளவிலான தலைப்பில் புத்தங்கங்கள் இருந்தாலும் ஓரளவிற்கு நல்ல விற்பனை நடந்தது. ஆனால் இந்த முறை பல புதிய தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தும், விற்பனை மிக மிகக் குறைவே என்றார்.

சென்னையில் கண்காட்சி என்றால் நிற்க இடமிருக்காது. ஷிப்ட் முறையில் நாங்கள் பணிபுரிவோம். ஆனால் இங்கு அந்த கூட்டத்தில் 10 ல் ஒரு பங்கு கூட இங்கு இல்லை என்று வருத்தப்பட்டார்.

"நீங்கள் விளம்பரம் செய்திருக்கலாமே? எனக்கே கண்காட்சி நடப்பது நேற்று தான் தெரியும்", என்றேன்.

"எல்லாம் கொடுத்திருக்கிறோம் சார். இத நடத்திறவங்க AD கொடுத்திருந்தாங்க. இங்க தமிழ் புத்தகக் கடைக்காரர்கள் எல்லாம் சேர்ந்து தினத்தந்தியில வேற AD கொடுத்திருக்கிறோம்." என்றார்.

எனக்கு ஒன்று புரிந்தது. வாங்கும் ஆசையுள்ள, பொருளாதாரத் திறனுள்ள வாசகர்கள் பெரும்பாலும் ஆங்கில நாளிதழ்கள் படிப்பவர்களே. ஒரு வேளை டைம்ஸ் ஆப் இண்டியாவில் கொடுத்திருந்தால் நல்ல வரவேற்பு இருந்திருக்கும் என எனக்குப் பட்டது. ஆனால் அவரிடம் சொல்ல அது உகந்த நேரம் அல்ல என நினைத்து அடுத்த ஸ்டாலுக்கு நடையைக் கட்டினேன்.

அடுத்த ஸ்டாலில் வரலாறு, அறிவியல் என்று கதைகள் அல்லாத தலைப்பில் பல புத்தகங்கள் தென்பட்டன. எனக்குப் பிடித்திருந்தது. "அசோகமித்திரனின் கட்டுரைகள் (பாகம் ஒன்று, இரண்டு)", "மூன்றாவது கண்" புத்தகங்கள் வாங்கினேன். என் நண்பன் இரு புத்தகங்கள் எடுத்துக் கொண்டான். புத்தகங்கள் நல்ல முறையில் (Font, காகிதம்) அச்சிடப்பட்டிருந்ததும் எனக்குப் பிடித்திருந்தது.

அடுத்த ஸ்டாலில் ஜெயகாந்தனின் "சிந்தையில் ஆயிரம்" பாகம் 1 மற்றும் 2 புத்தகங்கள் என்னைக் கவர்ந்தன. ஆனால் முதல் பாகத்தில் பெரும்பாலும் சிறுகதைகள் இருந்ததால் இரண்டாம் பாகம் மட்டும் கிடைக்குமா எனக் கடைக்காரரிடம் கேட்டேன். அவர் போனை எடுத்தார்.

"ஹலோ"

....

"ஹலோ, நாங்க மலேசியாவில (????) இருந்து பேசுறோம்."

....

"ஜெயகாந்தனின் "சிந்தையில் ஆயிரம்" புத்தகம் இன்னும் 10 காப்பி அனுப்பி வைங்க."

....

"ஆமா. சரி, சிந்தையில் ஆயிரம் புத்தகம் இரண்டாம் பாகம் மட்டும் கேக்கறாங்க கொடுக்கலாமா?"

....

"அப்படியா? இல்ல... இங்க ஒருத்தர் கேக்கறார்."

...

" Very Poor" (அவர் Response எப்படி இருக்கிறது எனக் கேட்டிருக்க வேண்டும்)

...

"சரி. பரவாயில்லை. அத மட்டும் அனுப்பிச்சிடுங்க. ஆமா"



போனை வைத்தார்.

"சார். தனியா கொடுக்க முடியாதுன்னு சொல்லிடாங்க சார்", என்றார். பலத்த யோசனைக்குப் பிறகு, இரண்டையும் எடுத்துக் கொண்டேன். கார்டை நீட்டினேன். சிறிது நேரம் காத்திருக்கும் படி கூறினார். அருகில் உள்ள கடையில் காபி கிடைக்குமா எனக் கேட்டேன்.

"No Power" எனப் பதிலளித்தார் காபி போடுபவர்.

புத்தகங்களை அங்கு வைத்து விட்டு வெளியே சென்று காபி குடிக்கலாம் என கிளம்பினோம்.

"சார். இத இங்க வச்சிட்டு போறோம். பாத்துக்கங்க", என்று கடைக்காரரிடம் சொன்னேன்.

"யாரும் வரமாட்டங்க. பயப்படாம போங்க" என்று விரக்தியுடன் சொன்னார்.

வெளியே சென்று பார்த்தால் ஆச்சர்யம். நூறு பேருக்கு மேல் அங்குள்ள புட் கோர்ட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு கறும்புச் சாறை மட்டும் குடித்து விட்டுத் திரும்பினோம். புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். மணி 1.30 ஆகியிருந்தது. கிரிக்கெட் மேட்ச் ;) ஆரம்பித்து விடும் என வீட்டிற்குக் கிளம்பினேன். வீட்டிற்கு வரும் வழியில் தான் சின்னசாமி ஸ்டேடியம். ஸ்டேடியத்தின் வாசலில், உள்ளே நுழைவதற்கு பலத்த கூட்டம். எனக்கு இந்த முறை டிக்கெட் கிடைக்கவில்லை. ஆபிஸில் கேட்டதற்கு கார்ப்பரேட் டிக்கெட் மட்டும் இருக்கிறது. விலை 4000 என பதிலளித்தனர். "ஆ! 4000 ரூபாய்க்கு நான் ஒரு புது டி.வி வாங்கி அதுல வருசம் முழுவதும் மேட்ச் பார்ப்பேன்", எனக் கூறிவிட்டு வந்தது ஞாபகம் வந்தது. ஒரு வாரத்திற்கு முன்பே மேட்ச் நடப்பது தெரிந்திருந்தால் எப்படியாவது டிக்கெட் கிடைத்திருக்கும்.

சரி தலைப்பிற்கு வருகிறேன். என் நண்பன் "இன்போசிஸ் நாராயண மூர்த்தி" என்ற புத்தகத்தை வாங்கியிருந்தான். அதனை வீட்டிற்கு வந்து அதன் முதல் பக்கத்தைப் புரட்டி பார்த்த போது இவ்வாறாக அச்சிடப்பட்டிருந்தது.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி
விலை: ரூபாய் 80


அடுத்த புத்தகத்தில்

மூன்றாவது கண்
விலை: ரூபாய் 50


என்றிருந்தது, ஆச்சர்யமாக இருந்தது. (இதனை வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே குறிப்பிடுகின்றேன்)

ஸ்ருசல்

வியாழன், நவம்பர் 17, 2005

வேற்றுக்கிரகத்தில் உயிரினமா? - பாகம் 2

இதன் முதல் பாகத்தில் வேற்றுக்கிரகத்தில் உயிரனங்கள் இருக்கிறதா என்பதை அறிய பயன்படுத்திய இரண்டு முறைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதன் மூன்றாவது முறையினைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வானில் இருந்து வரும் சமிகஞைகளை அலசுதல்

மற்ற இரு முறைகளைப் போலவே சில யூகங்களின் அடிப்படையில் இந்த முறை செயல்முறைப்படுத்தப்படுகின்றது. முதல் முறையில், வேற்றுக் கிரகங்களில் உயிரினம் இருக்கிறது ஆனால் அவை எங்கு இருக்கின்றது எனத் தெரியாதலால் விண்கலங்களில் படங்களை அனுப்பினோம். இரண்டாவது முறையில் வேற்றுக்கிரக வாசிகளுக்கு நாம் அனுப்புக் ரேடியோ அலைகளை பெறும் கருவிகள் இருக்கிறது என்ற யூகத்தின் அடிப்படையில் சில தகவல்களை ரேடியோ அலைகளாக அனுப்பினோம்.

மூன்றாவது முறையானது இரண்டாவது முறையின் தலைகீழ். அதாவது, நாம் அனுப்பியது போல வேற்றுகிரக வாசிகள் சில தகவல்களை அனுப்புகிறார்கள் என்ற யூகத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்றது. அதனால் விண்ணில் இருந்து வரும் அனைத்து ரேடியோ அலைகளையும் பகுத்து அவை வேற்றுகிரகங்களிலிருந்து வருகிறதா என ஆய்வது. இதனை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான அறிவியல் சோதனைக்கூடத்தில் கடந்த சில வருடங்களாக செயல்முறைப்படுத்தி வருகின்றனர். இந்த திட்டதிற்கு SETI (Search for Extraterrestrial Intelligence) எனப் பெயர்.

இந்த செயல்முறையின் முன்னோடியாக கார்ல் சாகனைக் குறிப்பிடலாம். இவரைப் பற்றி முதல் பாகத்திலேயேக் குறிப்பிட்டிருந்தேன். இந்த திட்டம் துவக்குவதற்கு ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கும் பெரும் பங்கு வகித்துள்ளார்.

விண்ணிலிருந்து வரும் அலைகளைப் பகுப்பதற்காக, 1971-ல் நாசா ஒரு பெரிய தொலைநோக்கி அமைக்க முயற்சித்தது. இதற்கு புராஜக்ட் சைக்லாப்ஸ் எனப் பெயர். இதற்காக நாசா 10 பில்லியன் டாலர்களை அமெரிக்க அரசிடம் கேட்டது. "அமெரிக்க மக்களின் வரிப் பணத்தை ஒன்றுக்கும் உதவாத ஒரு திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது" என சில அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பினை நாசா சந்திக்க வேண்டியிருந்தது. மேலும் நாசாவின் பட்ஜெட்டினைக் குறைக்க நிதி மசோதாவில் திருத்தம் செய்தது மட்டுமல்லாமால் அந்தத் திட்டத்தினை கைவிடவும் வைத்தார். இது இந்த திட்டத்திற்கு பெரும் தடைக்கல்லாக அமைந்தது. திட்டம் தயாராக இருக்கிறது ஆனால் நிறைவேற்ற பணம் இல்லை.

இதன் விளைவினைப் பற்றி விவாதிப்பதற்காக வானவியல் கழகத்தினருடன் நாசா நடத்திய சந்திப்பில் ஓர் நாசா விஞ்ஞானி, பெரிய தொலைநோக்கியை அமைப்பதற்கு பதிலாக அதன் மாற்றியமைக்கப்பட்ட, சிறிய தொலைநோக்கியைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தார். அவர் சொன்ன முறையின் (Suitcase SETI) மூலமாக ஏற்கனவே இருந்த தொலைநோக்கிகளின் உதவியுடன் ஒரு வருடத்திற்கு அலைகள் பகுக்கப்பட்டன.

1982-ல் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் E.T. படம் வெளியிட்டார். அது உலகம் முழுவதும் பலத்த வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தின் மூலமாக கார்ல் சாகன் ஸ்பீல்பர்க்கை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றார். ஒரு நாள் Carl தன் மனைவி மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தையுடன் ஸ்பீல்பர்க்கை, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஹோட்டலில் சந்தித்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த நாசாவின் SETI படத்தினைப் பார்த்ததும் அவர்களின் கவனம் அதனைப் பற்றித் திரும்பியது. அப்போது கார்லின் மனைவி, SETI திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நீங்கள் ஏன் உதவக்கூடாது என ஸ்பீல்பர்க்கைப் பார்த்துக் கேட்டார். அதற்கு எவ்வளவு செலவாகும் என ஸ்பீல்பர்க் கேட்டதற்கு, $100,000 எனப் பதிலளித்தார் கார்ல் மனைவி. உடனே ஸ்பீல்பர்க் ஒப்புக்கொண்டார். இவ்வாறாக 1985 ல், 8 மில்லியன் சேனல்களிலிருந்து சமிக்ஞைகளை பெறுமாறு தொலைநோக்கி ஒன்று வானவியல் கழகத்தினரின் உதவியுடன் கலிபோர்னியா பல்கலைக்கழகம் வடிவமைக்கப்பட்டது. அதனை ஸ்பீல்பர்க்கே துவக்கியும் வைத்தார். இதற்கு SERENDIP (Search for Extraterrestrial Radio Emissions from Nearby Developed Intelligent Populations) எனப் பெரிடப்பட்டது.

அது பல வடிவங்களைப் பெற்று SETI என அழைக்கப்படுகின்றது. இன்று இந்த திட்டத்திற்காக, விண்ணில் இருந்து வரும் அனைத்து அலைகளையும் பெறுவதற்காக அரிசிபோ எனப்படும் பெரிய தொலைநோக்கிப் பயன்படுத்தப்படுகின்றது. இது புர்டோ ரிக்கா எனும் தீவில் 1961-ம் ஆண்டு ஐனோஸ்பியர்களைப் பற்றி ஆராய கார்னல் பல்கலைக்கழகத்தால் நிறுவப்பட்டது. இது தான் உலகிலேயே பெரிய, மின்காந்த அலைகளை கிரகிக்கும் வசதியுடைய டிஷ். இதன் விட்டம் 330 மீட்டர்கள். இது ஒரு மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும் கொண்ட 38778 அலுமின்ய தட்டுகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது பல நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பதற்கும், அமெரிக்க ராணுவத்திற்காக எதிரிகளின் ராடார் சமிக்ஞைகளைக் கண்காணிப்பதற்காகவும் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. இதனை நீங்கள் ஜேம்ஸ்பாண்ட் நடித்த கோல்டன் ஐ படத்திலும் பார்த்திருக்கலாம்.



முதன்முதலில், இதன் முதலாம் பாகத்தில் குறிப்பிட்டபடி, 1974 ஆம் ஆண்டு அண்டவெளிக்கு நம் இருப்பிடத்தை அறிவிக்க கார்ல் மூன்று நிமிடங்கள் சில படங்களை ரேடியோ அலைகளாக அனுப்புவதற்காக உபயோகப்படுத்தப்பட்டது. பின்னர் அதன் உபயோகம், SETI க்கும் விரிவாக்கப்பட்டது. அது முதல் அந்த தொலைநோக்கியின் மூலமாக அண்ட வெளிகளிலிருந்து புவிக்கு வரும் அனைத்து அலைகளையும் பதிவு செய்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகின்றனர். அவ்வாறாக ஒரு நாளைக்கு அனுப்பப்படும் தகவல்களின் அளவு என்ன தெரியுமா? 35 GB. இதன் 35 GB அளவிற்கான தகவல்கள் 140,000 கூறுகளாகப் பிரிக்கப்படுகின்றது. சராசரியாக ஒரு கூறினை பகுக்க சாதாரணக் கணினியினால் 30 மணி நேரமாகும் எனக் கணக்கிடப்பட்டது. அப்படியானால் 140000 கணினிகளின் சக்தியினை ஈடுகட்டும் விதமாக பெரிய சூப்பர் கணினியினை வடிவமைக்க வேண்டும். அதற்கு அதிக செலவாகும் என்பதால Grid Computing முறையானது 1999 ம் ஆண்டு முதல் கையாளப்படுகின்றது. ஒரு பெரிய வேலையை ஒரு கணினி மட்டும் செய்யாமல் அந்த வேலையை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து பல கணினிகளுக்குக் கொடுத்து கிடைக்கும் முடிவுகளை மீண்டும் ஒன்றாக்கி தேவையான விடையினைப் பெறும் முறை தான் கிரிட் கம்யூட்டிங் எனப்படுகிறது (அல்லது அது தான் என் அனுமானம்). இதனால் பெரிய பெரிய சூப்பர் கம்ப்யூட்டர் அமைக்க ஆகும் செலவு மிச்சமாகிறது). சில ஆராய்ச்சி திட்டங்களுக்கு அரசு அதிகமாக பணம் ஒதுக்காத காரணத்தினால் இந்த முறை கையாளப்படுகின்றது. இதே முறை SETI@Home ற்கும் பயன்படுத்தப்படுகின்றது.


இந்த முறையின் மூலமாக, உங்கள் கணினியின் ஓய்வு நேரத்தை SETI குழுவினர் எழுதிய சாப்ட்வேர் (SETI@Home) பயன்படுத்திக் கொள்ளும். அதாவது பகுக்கப்பட வேண்டிய கூறு உங்கள் கணினிக்கு இண்டர்நெட் மூலமாக அனுப்பப்படும். அதனை SETI@Home சாப்ட்வேர் பெற்று உங்கள் பிராசசரினைப் பயன்படுத்தி பகுத்துக் கொள்ளும். இதற்காக நீங்கள் SETI@Home என்ற சாப்ட்வேரை இறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவ வேண்டும். இதனை Screensaver-ஆகவும் நீங்கள் பயன்படுத்தலாம்.



சராசரியாக இப்போது ஒரு கூறைப் பகுக்க உங்கள் கணினிக்கு 3-5 மணிநேரம் ஆகும். ஒவ்வொரு கூறும் பகுக்கப்பட்ட பிறகு சோதனை முடிவுகள் மீண்டும் பல்கலைக்கழக செர்வருக்கு அனுப்பபடும். அது மீண்டும் அதனை மற்றொருவருக்கு மறு பரிசோதனைக்கு அனுப்பும். பகுக்கப்பட்ட கூற்றின் முடிவினை உங்கள் கணினி அனுப்பியது, மீண்டும் ஒரு கூறு உங்கள் கணினிக்கு அனுப்பப்படும். ஆனால் இது வரை வேற்றுக்கிரகத்தில் இருந்து எந்த செய்தியும் வரவில்லை. 25 வருடங்கள் என்பது வானவியலில் மிக மிக குறுகிய கால அளவு. ஒரு வேளை நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காத்திருக்க வேண்டிதிருக்கும்.




இந்த SETI யினை மையமாக வைத்து CONTACT என்ற நாவலை கார்ல் எழுதினார். அது திரைப்படமாகவும் 1997 ஆம் ஆண்டு, (திரைக்) கதையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. கதையின் நாயகி எல்லி, SETI போன்ற ஒரு செயல்திட்டத்தில் பணியாற்றுவார். ஒரு நாள் அவருடைய தொலைநோக்கியில் Vega என்ற கிரகத்தித்தில் இருந்து அனுப்பப்பட்ட ரேடியோ செய்தி பதிவாகிறது. அந்த கிரகமானது கிட்டத்தட்ட 26 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கிடைத்த செய்தியினை உலகின் பல பகுதியில் உள்ள விஞ்ஞானிகளின் உதவியினால் டீகோட் செய்கிறார். அனுப்பப்பட்ட செய்தி என்ன என்பதனைக் கண்டறிவதற்கு செய்த முயற்சி கடைசியில் பலனளிக்கிறது. பூமியில் இருந்து Vega கிரகத்திற்கு செல்வதற்கு உதவும் விண்கலத்தின் மாதிரி படமே அது. அந்த விண்கலத்தை வடிவமைக்க அதிக செலவு பிடித்தாலும், சில ஆண்டுகள் முயற்சிக்கு பின் அதனை வடிவமைத்து அந்த நட்சத்திரம் நோக்கி எல்லி பயணிக்கிறார். இவ்வாறாக அந்த கதை போகும். அந்த நட்சத்திரத்தில் உள்ளவர்களுக்கு எப்படி பூமியில் மனிதர்கள் இருப்பது தெரிந்தது? அதன் காரணத்தை கார்ல் தனது கதையில் இவ்வாறாக விவரிக்கிறார்.

அதாவது முதல் முதலாக டி.வி. நிகழ்ச்சிகளை ஒளிபரப்பப் பயன்படுத்திய சாதனங்களில் வெளியிடப்பட்ட அலைகள் புவியினைத் தாண்டி பல கோடிக்கணக்கான மைல்கள் செல்லும் வலிமை படைத்தவை. அதாவது தேவையில்லாமல் அவ்வளவு சக்தி கொடுத்து ஒளிபரப்பப்பட்டன. அது எப்படியோ Vega கிரகத்தையும் அடைகிறது. அவர்கள், நாம் இப்போது வைத்திருக்கும் SETI தொலைநோக்கிகளை வைத்து யாராவது அண்டவெளியில் அவர்களைப் போல இருக்கிறார்களா எனப் பார்க்கும் போது ஹிட்லர் கலந்து கொண்ட 1939-ம் ஆண்டு ஒலிம்பிக் நிகழ்ச்சிகள் அவர்களது தொலைநோக்கியை வந்தடைகிறது. அதனை அப்படியே மீண்டும் பூமிக்கு அனுப்புகிறார்கள்.


ஹிட்லர் படத்தைப் பார்க்கும் போது அவர்களுக்கு அதிர்ச்சி. பின்பு விவரம் தெரிய வரும் போது சரியாகி அடுத்து வரும் செய்திகளைக் கண்காணிக்க ஆரம்பிக்கிறார்கள். ஹிட்லர் படத்துடன் விண்கலத்தை வடிவமைக்கும் வரைபடத்தையும் அனுப்புகிறார்கள், வேற்றுக்கிரக வாசிகள். அந்த செய்தி மீண்டும் 25 ஆண்டுகள் கழித்து பூமிக்கு வந்தடைகிறது. கிட்டத்தட்ட இந்த அப்போது தான் எல்லிக்கு அந்த செய்தி கிடைக்கிறது. இவ்வாறாக அந்த கதை செல்லும். நான் படம் முழுவதுமாகப் பார்க்கவில்லை; கதை மட்டும் தான் படித்தேன்.

அதே போல, பெரும் வெற்றி பெற்ற இண்டிபெண்டன்ஸ் டே படத்திலும் SETI பற்றி சொல்லப்பட்டிருக்கும். திடீரென்று பூமியைச் சுற்றி வேற்றுக்கிரக வாசிகளின் ராட்சச விண்தட்டுகள் ஆக்கிரமித்து பூமியைத் தாக்க ஆரம்பிக்கின்றன. பூமியில் உள்ள உயிரனங்களை அழித்து பூமியை ஆக்கிரமிப்பதற்காக, நம்மை பல ஆண்டுகளாக நன்கு கண்காணித்து, பல ஒளி ஆண்டுகள் பயணித்து பூமிக்கு வருகிறார்கள். கடைசியில் அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானி இன்னொரு கலத்தில் சென்று வேற்றுக்கிரக வாசிகளின் கம்ப்யூட்டரில் வைரஸினை ஏற்றி (இதெல்லாம் சாத்தியமா எனக் கேட்க கூடாது) அவர்களைத் தோற்கடிப்பது போல காட்டியிருப்பார்கள். படத்தின் ஆரம்பத்தில் SETI குழுவினருக்கு செய்தி வருவது போல காட்டியிருப்பார்கள்.



SETI க்கும் பலரும் நன்கொடை வழங்கி வருகின்றனர். அதில் முக்கியமானவர் மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பால் ஆலன். இவர் போன வருடம் 13.4 மில்லியன் டாலர்களை வழங்கினார். அவரின் சேவையைப் பாராட்டி SETI குழு ஒரு பெரிய தொலைநோக்கியை (Allen Telescope Array) அமைத்து அதற்கு ஆலனின் பெயரிட்டு சிறப்பித்துள்ளது.

SETI@Home தான் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட முதல் கிரிட் கம்யூட்டிங் புராஜக்ட் என நினைக்கிறேன். இப்போது இதனைப் போலவே பல செயல்திட்டங்கள் செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. உதாரணமாக Einstein@Home (மற்றொரு வானவியல் ஆராய்ச்சி), ClimatePrediction.Net (வான்நிலை), Predictor@Home (நோய்கூறுகளை ஆராய). இப்போது இவை அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு BONIC(Berkeley Open Infrastructure for Network Computing) என்ற மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் கணினியின் திறன் இந்த புராஜக்ட்கள் அனைத்திற்கும் பகிர்ந்தளிக்கப்படும். நீங்களும் உங்களுக்கு விருப்பமான திட்டத்தினை மட்டும் தேர்வு செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இது வரை என்னுடைய கணினி SETI@Home-ற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளாக 1272 க்கும் மேற்பட்ட கூறுகளைப் பகுத்து இந்தத் திட்டத்திற்கு உதவி புரிந்துள்ளது. நீங்களும் உங்கள் கணினியினை SETI போன்ற ஆராய்ச்சி செயல்திட்டங்களுக்குக் கொடுத்து உதவலாமே?

ஸ்ருசல்

புதன், நவம்பர் 16, 2005

சர்வதேசப் பள்ளிகளில் இந்திய விஞ்ஞானிகள்

நேற்று மதிய உணவருந்தும் போது என்னுடைய சகப்பணியாளர் தன்னுடைய குழந்தையைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த நண்பரே நகரின் (பெங்களூர்) பிரபலமான சர்வதேசப் பள்ளிக்கூடத்தைக் குறிப்பிட்டு அங்கு வருடத்திற்கு எவ்வளவு கட்டணம் என மற்ற நண்பர்களிடம் கேட்டார். அதற்கு இன்னொரு நண்பர் வருடத்திற்கு 35000, நன்கொடையாக 25000, பேருந்து வசதி வேண்டுமானால் அதற்கு வருடம் 10000 சேர்த்துக் கொடுக்க வேண்டும் எனவும் சொன்னார். கேட்ட எனக்கு மயக்கம் வராதக் குறை தான்.

அது எங்களில் பலர் நான்கு வருடங்களுக்கு கல்லூரிப் படிப்பிற்காக செலவிட்ட மொத்த தொகை. அதே தொகையை ஒரு வருடத்திற்கு கட்டணமாக; அதுவும் எல்.கே.ஜிக்கு. இது அவசியமா என நான் கேட்ட போது விவாதம் ஆரம்பித்தது. அந்த மாதிரியான பள்ளிக்கூடங்களில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு இரண்டு முக்கியமான காரணங்களைக் கூறலாம்.

1. தன்னால் முடியாததை தன் குழந்தையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்
2. குழந்தைக்கு கிடைக்கும் விழிப்புணர்வு

தன்னால் முடியாததை தன் குழந்தையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்

என்னுடன் பணிபுரியும் அனைவருமே தங்களது ஊர்களில் அரசு, அல்லது தனியார் பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள். 12 வகுப்பு வரை, அதிகபட்சமாக வருடத்திற்கு 100 ரூபாய் மட்டுமே கட்டியவர்கள். அவர்கள் இப்போது மாதத்திற்கு ஆயிரக்கணக்கில் ஊதியம் பெருகின்றனர். அவர்களால் அவர்கள் குழந்தையை இந்த மாதிரியான பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க முடியும் தான். ஆனால் அது மிக அவசியமா என்பது தான் கேள்வி? சமுதாயத்தில் பெரும்பாலோனோர், தாங்கள் சிறு வயதில் செய்ய முடியாததை தன்னுடைய குழந்தைகளாவது செய்ய வேண்டும் என ஆசைப்படுவார்கள். படிக்க முடியாதவர்கள், தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் எனவும், பள்ளி மட்டுமே முடித்தவர்கள், தங்கள் குழந்தை பெரிய பொறியாளாராக வர வேண்டும் எனவும், கல்லூரியில் படித்தவர்கள் தங்கள் குழந்தை வெளிநாடுகளுக்கு சென்று படிக்கவேண்டும், I.A.S, I.P.S, I.E.S போன்ற பெரிய பதவிகளுக்கு வர வேண்டும் என கனவுகளும், ஆசைகளும் வைத்திருப்பார்கள். அதனை மனதில் வைத்து தங்கள் குழந்தைகளுக்கு கல்வியறிவினைப் போதிப்பார்கள். பலரின் குழந்தைகள் அவர்கள் பெற்றோர்கள் நினைத்தது போலவே சாதித்து விடுவார்கள். துரதிர்சடவசமாக சிலர் அதனை செய்ய இயலாமலும், இன்னும் சில குழந்தைகள் அவர்கள் பெற்றோரின் எதிர்பார்ப்பினை முழுவதுமாக பூர்த்தி செய்யமுடியாமலும் ஏற்பட்டு விடுகிறது. குழந்தைகள் தொடக்கப்பள்ளியில் படிக்கும் போதே, "நல்லா படிச்சு இன்ஜினியர் ஆகணும் சரியா?" என்பதனை பொதுவாக அனைவரின் வீட்டிலும் கேட்க முடியும். இப்போது அது சிறிது மாறி, "நல்லா படிச்சு கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆகணும் சரியா?" என ஆகி உள்ளது.

இது தவறு எனவும் கூறமுடியாது. குழந்தைகள் என்ன சாதிக்க வேண்டும் என்ன நாம் தீர்மானிப்பது போல் ஆகி விட்டது. அவர்களை பல நேரங்களில் குறைத்தே மதிப்பிட்டு, நம்முடைய எண்ணங்களை குழந்தைகளின் மீது திணிப்பது எந்த அளவிற்கு நியாயம்? நீங்கள் உங்கள் குழந்தை என்ஜினியர் ஆக வேண்டும் என்ற உங்களின் எதிர்பார்ப்பைத் திணிக்காமலிருந்தால், ஒரு வேளை அவன் பெரிய விஞ்ஞானியாகி இருக்கக் கூடும். படிக்காத குடும்பத்திலிருந்து வந்த பலரும் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல், தங்களின் சுய பரிசோதனையினால் நல்ல நிலைக்கு வந்துள்ளதை அனைவருமே அறிவோம். ஆனால் பலருக்கும் எந்த மாதிரியான எதிர்பார்ப்பினையும் குழந்தைகளின் மனதில் விதைக்காமல் வளர்த்தால் பிற்காலத்தில் அவர்கள் எப்படி முன்னேறுவார்கள் என்ற அச்சம் இருக்கத் தான்
செய்யும்.

வாழ்க்கை என்பது எந்த ஊரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கமில்லாமல் பயணிக்கிற பாதை தான். அந்தப் பாதையில் பயணிப்பது தான் வாழ்க்கையின் இன்பம் இருக்கிறது. இதில் வெற்றி என்பதும் கிடையாது. தோல்வி என்பதும் கிடையாது. ஒருவரின் வெற்றி மற்றொருவருக்குத் தோல்வியாக இருக்கலாம். பாதையில் உள்ள வழிகாட்டியாக அவர்கள் செல்வதற்கு நீங்கள் உதவியாக இருக்கலாமே தவிர நீங்கள் போட்டு வைத்தப் பாதையில் அவர்கள் செல்ல வேண்டும் என்பதனைத் தீர்மானிக்கக் கூடாது. அவர்கள் தங்கள் திறமையினால் ஆகாயத்தில் பறந்திருக்கலாம். உங்களின் தவறான மதிப்பீட்டினால் அவர்களை கூண்டுக்குள் வைத்திருப்பது நல்லதல்ல. உங்கள் பாதைப்படி அவர்கள் பயணித்தது உங்களுக்கு கடைசியில் சந்தோசத்தை விளைவிக்கலாம் "நல்லது. நான் நினைத்தது போலவே வந்திருக்கிறான்" என்று. ஆனால் அவன் பறக்க வேண்டியவன் என்பதை கடைசி வரை நீங்களும் அவனும் உணராமல் போயிருக்கக்கூடும்.

உதாரணத்திற்கு நீங்கள் படிக்கும் போது ஒரு குறிப்பிட்ட படிப்பில் சேர்வதற்கு எந்த மாதிரியான பயிற்சிகள் எடுக்க வேண்டும், எப்போது பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும், எந்த மாதிரியான புத்தகங்களை படிக்க வேண்டும் என்பது தெரியாமல் இருந்திருக்கலாம். மேலும் சில புத்தகங்கள் வாங்குவதற்கும் வசதியில்லாமல் இருந்திருக்கலாம். இப்போது உங்களுக்கு அவை என்ன என்பது தெரியும், பணம் அதற்கு செலவழிக்க சக்தி இருக்கிறது என்ற காரணத்தினால் உங்கள் குழந்தைக்கு அதற்கான வழிகள் அனைத்தையும் கூறி, நீங்கள் வாங்க நினைத்த புத்தகங்கள் அனைத்தையும் வாங்கி கொடுத்தாலும் உங்களுக்கு இருந்த அந்த ஆர்வம் உங்கள் குழந்தைக்கும் இருக்கும் என சொல்ல முடியாது. அவனுக்கு எதில் ஆர்வமோ அதில் தான் மனம் சொல்லும். ஆதலால் அவர்களுக்கு அதில் ஆர்வம் வந்தால் நலம். நீங்கள் உங்கள் அனுபவ அறிவினைப் பயன்படுத்தி அவர்களுக்கு உதவலாம். இல்லையெனில் அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்க முயலாம். ஆர்வம் இல்லாமலேயே அதில் அவர்களை ஈடுபாடு காட்டச் சொன்னால் அது பெரும் தோல்வியில் தான் முடியும்.

இதனை Five Point Someone என்ற புத்தகத்தில் வரும் கதையுடன் ஒப்பிடுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். ஏற்கனவே என்னுடைய முந்தைய பதிப்பிலும் இதனைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். கதைப்படி அவர் ஒரு ஐஐடி விரிவுரையாளர். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். இந்தியாவில் பொறியியல் படிக்கும் (ஐஐடி பற்றி விவரம் தெரிந்த) பலருக்கும் ஐஐடி-ல் இடம் வாங்குவதற்குத் தான் முயலுவார்கள். சாதாரணமானவர்களுக்கே அப்படி என்றால், ஐஐடி விரிவுரையாளர்களுக்கு? அந்த விரிவுரையாளரும் தன்னுடைய மகனும் தன்னைப் போல ஐஐடியில் பயில வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் அந்த மாணவன் இரண்டு முறை முயன்றும் தேர்வில் தோல்வியடைகிறான். ஐஐடி-ல் சேர வேண்டியதால் அவனும் வேறு எந்தக் கல்லூரியிலும் சேராமல் திரும்பத் திரும்ப முயற்சிக்கிறான். இரண்டு முறை தோல்வியடைந்ததால் அவனின் தந்தை அவனுடன் பேசுவதை நிறுத்துகிறார். எப்போதும் அவனைத் திட்டிக்கொண்டே இருக்கிறார். அவன் முழுவதுமாக மூன்றாம் முறையும் முயற்சி செய்கிறான். ஒரு நேரத்தில் விரக்தி அதிகமாகவே தன்னுடைய தங்கைக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறான. அது ஒரு விபத்து எனக் கருதி அந்த பேராசிரியர் தன் வாழ்க்கையைத் தொடருகிறார். சில ஆண்டுகள் கழித்து அது விபத்து அல்ல; தற்கொலை எனத் தெரிய வரும் போது இடிந்து போகிறார். இவ்வாறாகப் போகும் கதை.

இதில் இழப்பு யாருக்கு? தந்தைக்கா? மகனுக்கா? அவனை அவனின் விருப்பத்திற்கு விட்டிருந்தால், அவன் உயிருடனாவது இருந்திருப்பான். ஏன் அவனுக்குப் பிடித்த துறையில் நன்றாகவே வந்திருக்கலாம். அந்த விரிவுரையாளர் தன்னுடைய பழைய அனுபவங்களைக் கொண்டு தன் மகனுக்கு அவன் வாழ்க்கையில் எப்படி உதவ முடியும் என்று யோசித்திருக்க வேண்டுமே தவிர எப்படி தன் மகனைப் பற்றிய தன் கனவை அவன் நனவாக்க வேண்டும் என முயற்சித்திருக்கக் கூடாது. வரலாறைப் புரட்டிப் பார்த்தால் பெரிய விஞ்ஞானிகள், படிக்காத குடும்பத்திலிருந்தும், பெரிய விஞ்ஞானியின் புதல்வர்கள் பேர் சொல்லும் அளவிற்கு கூட வராமலும் போயிருக்கிறார்கள். எந்த ஒரு சாதனையாளரின் மகனும் அவன் தந்தையைப் போல பெரும் சாதனை புரிந்து புகழ்பெற்றான் எனக்குத் தெரிந்து இல்லை. அது வியாபாரத்தில் (டாடா, பிர்லா, ...) வேண்டுமானால் சாத்தியம். கவாஸ்கர் பெரிய பேட்ஸ்மேன் தான் அவர் மகன் இன்னும் ரஞ்சிகளில் தான் ஆடிக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் என்ன? தன்னை போலவே தன் மகனும் பெரிய கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்திருக்கலாம் என்பது என் கணிப்பு. ஒரு உதாரணத்திற்கு இதைக் கூறினேன். இதனைப் போல ஆயிரக்கணக்கில் கூறமுடியும்.

அது அவர்களின் வாழ்க்கை. நீங்கள் ஒன்றும் சிற்பியல்ல; உங்களின் கருத்துக்களையும், எண்ணங்களையும் கொண்டு அவர்களை செதுக்குவதற்கு. ஒவ்வொரு மனிதனும், தன்னைத் தானே செதுக்கிக் கொள்கிறான். நீங்கள் உளி மட்டுமே. நல்ல உளியாக இருந்து சிற்பம் சிறப்பாக வருவதற்கு உதவுங்கள் அது போதும்.

குழந்தைக்கு கிடைக்கும் விழிப்புணர்வு

இதனை ஓர் அளவிற்கு ஒப்புக் கொள்ளலாம். ஆனால் முழுவதுமாக அல்ல. பொதுவாக சர்வதேசப் பள்ளிக்கூடங்களில் கிடைக்கும் வசதிகளாக வெளிநாட்டு சுற்றுலாக்கள், உள்கட்டமைப்பு வசதி, கலை மற்றும் விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம், வெளிநாட்டு ஆசிரியர்களல் போதிக்கப்படும் கல்வி முதலானவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் இது மிக மிக அவசியம் எனத் தோன்றவில்லை. நீங்கள் இவ்வளவு கொடுத்து கல்வி போதிப்பதனால் அவர்கள் மற்ற சாதாரண (அரசு அல்லது தனியார்) பள்ளி மாணவர்களை விட மிகவும் வேறுபட்டு சிறப்பாக வந்துவிடப் போவதில்லை. அப்படி நாட்டில் உள்ள பல விஞ்ஞானிகள் அந்த மாதிரியான பள்ளியிலிருந்து தான் உருவாகியிருக்க வேண்டுமே?

ஒரு வேளை அந்த மாதிரியான பள்ளிகளில் படிப்பதனால் நல்ல நட்பு கிடைக்கலாம். புதுமையான சூழலால் வித்தியாசமான சிந்தனைகள் உருவாகலாம். அது எல்லா இடங்களிலுமே கிடைக்குமே? வித்தியாசமான சிந்தனைகள் உருவாவதற்கும், நல்ல நட்பு கிடைப்பதற்கும் வருடத்திற்கு 40000 செலவழிக்க வேண்டுமா என்ன? அவர்கள் 10, 12 வகுப்பு போகும் போது எவ்வளவு பணம் கட்ட வேண்டியதிருக்குமோ? ஏன் அந்த புதுமையான சூழலே அவர்களுக்கு சிக்கலானால்? சமுதாயத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களின் (பணம், பதவி வேண்டுமானாலும் இருக்கலாம்) புதல்வர்களுடன் படிப்பதால் ஏதேனும் ஏற்ற தாழ்வு உண்டானால்? சாதாரணமாக அரசு பள்ளிக்கூடங்களிலேயே மாணவர்களிடையே உள்ள ஏற்ற தாழ்வினை நீங்கள் கண்டிருக்கலாம். வருடாந்திர கட்டணம் மட்டும் கட்டி படிக்கும் மாணவர்கள், தங்களை விட வசதிபடித்த வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்களுடன் சில ஏற்ற தாழ்வினை உணர்வது உண்டு. பெற்றோரால் வருடக் கட்டணத்தைக் கட்ட முடிந்திருக்கும். ஆனால் அந்த ஆடம்பர செலவுகள் அனுமதிக்கப்பட்டிருக்காது. அதே போல வருடாந்திர செலவான 40000 த்தை இப்போது சாப்ட்வேர் போன்ற துறைகளில் உள்ளோர் கட்ட முடியும். ஆனால் அவர்களின் குழந்தைகளுக்கும் மற்ற வசதி படைத்த மாணவர்களுக்கும் உள்ள இடைவெளியை என்ன தான்
முயன்றாலும் ஓர் அளவிற்கு மேல் களைய முடியாது. அதனை ஒரு சாதகமாக எடுத்துக் கொண்டால் நலம். சாதாரண நகர்புறங்களிலும் (உ.ம் ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற), கிராமப்புறங்களிலும் படிப்பவர்களுக்கு மேற்படிப்புகளைப் பற்றிய அதிக விழிப்புணர்வு இருப்பது இல்லை; அப்படியே இருந்தாலும் அங்கு அதற்கு வேண்டிய வசதிகள் கிடைப்பதில்லை. ஆனால் சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் எந்த பள்ளியில் படித்தாலும் போதுமானது. கல்விக்கு அங்குள்ள வசதிகளும், அங்குள்ள பல தரப்பட்ட மக்களுடன் (நண்பர்கள் உட்பட) பழகக் கிடைக்கும் சந்தர்ப்பமும் அவர்களுக்கு விழிப்புணர்வு கிடைக்க உதவிகரமாக இருக்கும். மேலும் சர்வதேசப் பள்ளிகளில் படிப்பவர்கள் பெரும்பாலும் SAT போன்ற தேர்வுகள் எழுதி இளநிலைப் படிப்பையே அயல்நாடுகளில் தான் தொடர்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோனோர் இந்தியாவில் இளநிலைப் படிப்பை படிப்பதில்லை என்பது என் கருத்து.

ஒருவனுக்கு கஷ்டத்தில் இருக்கும் போது தான் முன்னேற வேண்டும் என்ற வேட்கை அதிகமாகிறது. அப்போது தான் முன்னேறுவதற்கான பல்வேறான வழிகளை பலமாக சிந்திக்க ஆரம்பிக்கின்றான். அந்த சிந்தனை தான் அவனுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. அறிவியல்,
சமுதாயத்தில் சாதனை படைத்தவர்களின் வாழ்வைப் புரட்டிப் பார்த்தால் பெரும்பாலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு விசயம் தடைக்கல்லாக இருந்திருக்கும்.

குழந்தைகளை வசதியான பள்ளிக்கூடங்களில் சேர்க்கக் கூடாது என்பதனை சொல்வதற்கல்ல இந்தப் பதிவு. வசதியானப் பள்ளிக்கூடங்களில் படித்தாலும் குழந்தைகளின் வளர்ப்பு முறையும், அவர்களுக்கு கிடைக்கும் நண்பர்களும், சிறு வயதில் அவர்களைப் பாதிக்கும் விசயங்களுமே அவர்களை, அவர்களின் எதிர்காலத்தினை நோக்கி நடை போட வைக்கின்றன. என்ன தான் பணம் கொடுத்து சேர்த்தாலும், அனைத்து திறமைகளுமே மந்திரம் போட்டது போல கிடைத்து விடாது. பெற்றோரின் தலையாயக் கடமை தன் குழந்தைக்கு சிறந்த கல்வியினைப் போதிப்பது தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த கல்வி லட்சகணக்கில் கொடுத்து வரும் சர்வதேசப் பள்ளிகளில் மட்டும் கிடைத்து விடுவதில்லை. சில நேரங்களில் சக்திக்கு குறைவாக சில விசயங்களை செய்வது இன்னும் நிறைவைத் தரும், நல்லது பயக்கும் என்பது என் கருத்து. "தேவையே கண்டுபிடிப்பின் முன்னோடி" என்ற கூற்றின் படி அவர்கள் தேவையை உணர்ந்து அதனை அடைய முயற்சி செய்தால் அவர்கள் வாழ்வும் சிறப்பாக இருக்கும்.

தேடிப் பெறுவதே நிலைக்கும்; ஆனந்தம் தரும்; வாழ்க்கைக்கு உதவும் என்பது என் கருத்து.

ஸ்ருசல்

புதன், நவம்பர் 09, 2005

ஊடகங்களில் விளம்பரம்

குமுதம் என்று கேட்டால், தி சென்னை சில்க்ஸ் அட்டை படம் போட்ட புத்தகம் தான் கிடைக்கிறது. அந்த அட்டையைத் தூக்கிப் பார்த்தால் மட்டுமே, அஸின் சிரித்துக் கொண்டிருக்கும் படம் தெரிகிறது. அட்டைப் படத்தில் நடிகைகள் ஆக்கிரமித்தது போய் இப்போது விளம்பரங்கள் ஆக்கிரமிக்கத் துவங்கி விட்டன. புத்தகங்களைப் புரட்டும் போது, முதல் பக்கமே விளம்பரமாக இருப்பதும், தொலைக்காட்சித் தொடர்களில் அரை மணி நேர நிகழ்ச்சியில் வரும் 10 நிமிட விளம்பரங்களும், ஒவ்வொரு பாடலுக்குமிடையில் வரும் 3 நிமிட விளம்பர இடைவேளையும், டி.டி யில் ஓவருக்கு 5 பந்துகள் வீசப்படும் கிரிக்கெட் பந்தயங்களும் அலுப்பைத் தருகின்றன.

நாட்டு நடப்பிற்கும், பொழுது போக்கிற்கும் இப்போது நாம் அதிகம் நம்பி வருவது ஊடகங்களையே. ஊடகங்கள் கடந்த 50 ஆண்டுகளாக பெரும் வளர்ச்சி பெற்று, இன்று மனித வாழ்வின் ஓர் அத்தியாவசியமான அங்கமாகி விட்டது. ஒரு நாள் செய்தித் தாள் வராமலிருந்தாலோ, தொலைக்காட்சி தெரியாவிடிலோ, இணையத் தொடர்பு இல்லாவிடிலோ, அன்றைய தினம் முழுவதும் வெறுமையாகிப் போவதை உங்களில் பலரும் உணர்ந்திருப்பீர்கள். பண்டிகைக்கு மறுதினம் செய்தித் தாள்கள் வராமல், பேயறைந்தது போல இருந்த நிலையை தொலைக்காட்சிகளும், இணையங்களும் மாற்றி உள்ளன என்பதனை மறுக்க முடியாது. ஆனால் இந்த ஊடகங்ளினால் மனிதனின் அறிவு வளர்கிறதோ இல்லையோ, விளம்பரத்துறையும் அதன் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் நன்கு வளர்ச்சியடைந்து வருகின்றது. விளம்பரங்கள் இல்லாத நாளிதழோ, வார / மாத இதழோ, தொலைக்காட்சி சானலோ, வலைப் பக்கமோ காண்பது மிகவும் அரிது. ஆனால் கடந்த சில வருடங்களாக ஊடகங்களில் விளம்பரங்களின் ஆதிக்கம் மிகவும் அதிகரித்து விட்டதாகவே தோன்றுகிறது.

விளம்பரங்களின் மூலம் வரும் வருமானம் இல்லாமல் எந்த ஒரு ஊடகம் சார்ந்த நிறுவனமும், ஊடகங்களில் விளம்பரம் செய்யாமல் எந்த ஒரு நிறுவனமும் இருக்க முடியாது என்ற நிலை வந்து விட்டது. ஏன் ஊடக நிறுவனங்களே தங்கள் நிறுவனங்களின் விளம்பரங்களை, பிற ஊடகங்களில் இட்டு விளம்பரம் தேடிக் கொள்கின்றன. உதாரணத்திற்கு குங்குமம் விளம்பரங்கள் சன் டி.வியிலும், F.M விளம்பரங்கள் விகடன் இதழ்களிலும், ஸ்டார் மூவிஸ், HBO பட விளம்பரங்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் சாதாரணமாகத் தென்படும் விசயங்களே.

இப்போதெல்லாம் வார இதழ்களில், செய்திப் பக்கங்கள் எங்கு இருக்கின்றன என தேட வேண்டியதிருக்கிறது. விளம்பரங்களைத் தவிர்த்து விட்டு பக்கங்களை வேகமாகத் திருப்பும் போது, 'கற்றதும் பெற்றதும்'-ம் சேர்ந்து திருப்பப்பட்டு விடுகின்றன. பின் திரும்ப முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதிருக்கிறது.

இந்த வாரம் எத்தனைப் பக்கங்கள் விளம்பரங்களாக அச்சிடப்பட்டுள்ளன என வார இதழ்களில் எண்ணிப் பார்த்ததில்...

ஆனந்த விகடன் - 25 முழு, 2 அரை பக்கங்கள் (மொ. பக்கங்கள்: 192)

குமுதம் - 19 முழு, 8 அரை பக்கங்கள் (144)
கல்கி - 11 முழு பக்கங்கள் (56)
அவுட்லுக் - 34 முழு, 2 அரை பக்கங்கள் (82)
துக்ளக் - 8 முழு பக்கங்கள் (38)
இந்தியா டுடே(த)- 9 முழு பக்கங்கள் (58)

இது தீபாவளிக்கு அடுத்த வாரத்தில் வந்த வார இதழ்களில் கணக்கிடப்பட்டவை. பண்டிகையின் போது இது இன்னும் அதிகமாக இருக்கும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இத்தனைக்கும் யாரும் அந்த விளம்பரங்களை உற்று நோக்குவது போல் தெரியவில்லை. முன், பின் அட்டை விளம்பரங்கள் மட்டுமே கண்ணில் படுகின்றன. மற்றவை பார்க்கப்படாமலேயே தவிர்க்கப்படுகின்றன.

நாளிதழ்களில் உள்ள விளம்பரங்கள் மட்டுமே ஓரளவிற்கு கவனிக்கப்படுகின்றன. அந்தக் காலங்களில் அரசு டெண்டர்களும், சினிமா விளம்பரங்கள் மட்டுமே நாளிதழ்களில் இடம் பெற்று வந்தன. அதுவும் இப்போது மாறி, நாளிதழ்களிலும் மற்ற விளம்பரங்கள் வரத் துவங்கி விட்டன. டைம்ஸ் ஆப் இந்தியா பெங்களூர் பதிப்பில், மொத்தம் வரும் 16 பக்கங்களில் தினமும் சராசரியாக 10 கால் பக்க விளம்பரங்கள் வருகின்றன. இன்று கூட 5 முழு பக்க விளம்பரங்கள், 5 அரை பக்க விளம்பரங்கள், மற்றும் 12 கால் பக்க விளம்பரங்கள் வந்திருந்தது. (Bangalore Times & Times Ascent தவிர்த்து)

தொலைக்காட்சிகளில் இதன் நிலைமை இன்னும் மோசமே. சில நேரங்களில் அனைத்துச் சானல்களிலும், ஒரே நேரத்தில் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருப்பது எரிச்சலையேத் தருகின்றது. ஒளிபரப்பப்படும் சில விளம்பரங்களும் மனதைக் கவர்கின்றன. சீரியல்களுக்கு இந்த விளம்பரங்களே பரவாயில்லை என்றும் சில நேரம் தோன்றுகின்றது. ஆனாலும் விளம்பரங்களின் ரசிப்புத் தன்மை இந்தக் கட்டுரையின் மையக் கருத்தில் இருந்து மாறுபடுவதால், அவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

பே சானல்கள் என்று சொல்லி, வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களும் விளம்பரங்களை சகட்டு மேனிக்கு ஒளிபரப்புவதிலும் எனக்கு ஒப்புதல் இல்லை. இலவச சேவையாக இருந்தால் விளம்பரங்களை ஏற்றுக் கொள்ளலாம். பணத்தையும் கட்டி விட்டு ஏன் நேயர்கள் மேல் விளம்பரங்களைத் திணிக்க வேணடும்? சில இந்திய செய்தி சானல்களில் கூட விளம்பரங்களின் நேர அளவு கூடிக்கொண்டே செல்கிறது. CNN-லும், BBC-லும் மிகக் குறைந்த அளவிற்கே விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

விளம்பரங்களினால் சில நன்மைகளும் இருக்கின்றன. வார இதழ்களுக்கு நாளிதழ்களைப் போல வாசகர்கள் இல்லாதக் காரணத்தினாலும், அதிகமான பக்கங்கள் (கலர் பக்கங்கள் உட்பட) கொண்ட புத்தகங்கள் 5-10 ரூபாய் விலைக்கு கொடுக்கப்படுவதாலும் ஏற்படும் பணச்சுமையை சமாளிக்க இந்த விளம்பரங்கள் உதவும். ஆனாலும் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்வது நல்லதே. சில தொலைக்காட்சி சானல்களுக்கும், முக்கியமாக எல்லா பே சேனல்களுக்கும் இது பொருந்தாது என்பது என் கருத்து.

இணையத்தில், Spam மின்னஞ்சல்கள், பெரும்பாலான (செய்தி, தேடிகள், சினிமா, இசை சார்ந்த) வலைப்பக்கங்களில் வரும் விளம்பரங்கள், Spyware, Adware என்று இதன் எல்லை பரந்து கிடக்கின்றது. இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கும் கணினிகளில் குறைந்தது 60 சதவீத கணினிகள் ஏதாவது Adware சம்பந்தப்பட்ட சாப்ட்வேர்கள் ஒளிந்து ஓடிக்கொண்டிருக்கின்றன என ஒரு சர்வே தெரிவிக்கின்றது. மேலும் இந்த Spyware, Adware துறை 2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வருமானத்தையும், Anti-Spyware, Anti-Adware, Anti-Spam துறைகளும் பல பில்லியன் டாலர்கள் வருமானத்தைக் கொடுக்கும் துறைகளாகிவிட்டன.

இந்தக் கட்டுரை வெறும் பார்வை மட்டுமே. தீர்வு என்று ஒன்று இதற்குக் கொடுப்பது சிறிது கடினமே.

ஸ்ருசல்

திங்கள், நவம்பர் 07, 2005

கால் சென்டரில் ஓர் இரவு

ஊரே உறங்கிக் கொண்டிருக்க, குர்கானில் உள்ள ஓர் கால்சென்டரில் 1000 கால்செண்டர் ஏஜெண்ட்கள் அமெரிக்காவின் புகழ்பெற்ற கம்ப்யூட்டர் நிறுவனத்திற்காக சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அங்குள்ள ஒரு குழுவினருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. மறுமுனையில் கடவுள்.

கதைகள் படிப்பது எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத ஒன்று. மனித உறவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு நாள் / ஒரு வாரம் செலவு செய்வது வீண் விரயம் என நினைப்பவன். அப்படியே படித்தாலும் அது பெரும்பாலும் சயின்ஸ் பிக்சனாகவோ அல்லது புகழ்பெற்றக் கதையாக மட்டுமே இருக்கும். (பொன்னியின் செல்வன், கடல் புறா போன்ற வகைகள் வேறு.)

இந்த வருட ஆரம்பத்தில் அப்படி நான் படித்தப் புத்தகம் "Five Point Someone". அந்தப் புத்தகத்தை கடையில் தற்செயலாக எடுத்து திரும்ப வைக்கும் போது அதன் தலைப்பு என்னைக் கவர்ந்தது "What not to do at IIT". அதனை எழுதியவர் சேத்தன் பகத் என்ற முன்னாள் ஐஐடி மாணவர். நல்ல புத்தகம். மூன்று ஐஐடி மாணவர்கள் (அலோக், ஹரி, இன்னொருவர் பெயர் மறந்து விட்டது), அவர்களின் பேராசிரியர் செரியன் மற்றும் அந்த பேராசிரியர் குடும்பத்தினைப் பற்றிய கதை. அந்த பேராசிரியரின் மகன் தன் தந்தையைப் போல ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால் 3 மூன்று வருடங்களாக முயன்றும் இடம் கிடைக்காமல் போகவே தற்கொலை செய்து கொள்கிறார். பேராசிரியரின் மகளை அந்த மூன்று மாணவர்களில் (ஹரி என நினைக்கிறேன்) ஒருவன் காதலிக்கும்படியாக கதை செல்லும். அதனைப் பற்றி கண்டிப்பாக யாராவது புத்தக விமர்சனம் எழுதியிருக்கலாம் (கூகுள் செய்யம்). புத்தகத்தில் பிடித்தது கடைசிப் பக்கங்கள். அதிலும் அந்த பேராசிரியர் (செரியன்) விழாவில் தன் மகனைப் பற்றியும், ஐஐடியில் சேர விரும்புவோர்களைப் பற்றியும் பேசுவது.

ஐஐடி பற்றிய என்னுடைய பதிவினைக் காண இங்கே சொடுக்கவும்

அவரின் இரண்டாவது புத்தகத்தினை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்னால் அந்த ஆசிரியரிடமிருந்து ஓர் மின்னஞ்சல். One Night @ the call center புத்தகம் முடிவு பெற்றாகி விட்டதாகவும் $18 அனுப்பினால் ஆசிரியர் கையொப்பமிட்ட புத்தகம் அனுப்பப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. வாங்கலாமா அல்லது சில மாதங்கள் காத்திருக்கலாமா என யோசித்து, காத்திருக்கலாம் என முடிவெடுத்தேன். தீபாவளி விடுமுறை விட்டு வந்ததும் சனிக்கிழமை புத்தகக் கடைக்கு சென்றேன். அந்தப் புத்தகம் வந்திருந்தது. விலை அவரின் முந்தைய புத்தகத்தைப் போலவே 95 தான்.

புத்தகத்தின் ஆரம்பத்திலேயே கதையையும் சொல்லி விடுகிறார் ஆசிரியர். கதையை இரண்டு மாதங்களுக்கு முன்பே அவர் வலைத்தளத்திலும் குறிப்பிட்டிருந்தார்.

டெல்லி அருகில் உள்ள குர்கான் நகரில் உள்ள ஒரு கால் சென்டரில் ஒரு இரவில் நடப்பதைப் பற்றியது தான் கதை. கதையில் வரும் பாத்திரங்கள் அந்த கால் சென்டரின் ஒரு குழுவில் பணிபுரியும் ஆறு பேர் மற்றும் அவர்களின் மேனேஜர் பக்ஷி. கதை நாயகன் ஷியாம், அவன் முன்னாள் நண்பி பிரியங்கா, வுரூம் மல்கோத்ரா, ராதிகா, இஷா, மற்றும் ஒரு முன்னாள் ராணுவ வீரர்.

சியாமும், பிரியங்காவும் 4 வருடக் காதலர்கள். இடையில் ஏற்பட்ட சண்டையால் பிரிவு. பிரிவு வாட்டுகிறது. பிரியங்காவிற்கு வீட்டில் திருமண ஏற்பாடு.

வரூம் மல்கோத்ரா ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் பணிபுரிந்து விட்டு பின்னர் பணத்திற்காக கால் சென்டர் பணிக்கு வருகிறார்.

ராதிகா காதலித்து மணம் புரிந்தவள். அவள் கணவன் கல்கத்தாவில் பணிபுரிகிறான். மாமியார் தொல்லை. கணவனுக்கு கள்ளத் தொடர்பு. (இது அந்த இரவு தான் தெரிய வருகிறது)

இஷா மாடலிங் வாய்ப்பிற்காக அலைந்து கொண்டிருக்கிறாள். அவள் மேல் வுரூமிற்கு காதல். ஆனால் அவளுக்கு மாடலிங் தான் உலகம்.

முன்னாள் ராணுவ வீரர் தன் மகன், பேரனைப் பிரிந்து வாழ்கிறார்.

இப்படி இவர்கள் அனைவருக்கும் குடும்ப பிரச்சினை. அவர்கள் அனைவருக்கும் பொதுவான பிரச்சினை அவர்கள் மேனேஜர் பக்ஷி மற்றும் வேலை நிரந்திரமின்மை.

அந்த சிக்கல்களிலிருந்து அவர்கள் எப்படி ஒரே நாள் இரவில் மீண்டு வருகிறார்கள் என்பதே கதை. தினமும் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் அவர்களுக்கு அன்று இரவு கடவுளிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. பின்பு அவர்கள் எனன செய்கின்றனர் என்பதனைப் பற்றி 300 பக்கங்களில் விவரித்துள்ளார் ஆசிரியர்.

கதை சாதாரணமானது தான் என்றாலும் சுவாரசியமாகவே செல்கிறது. ஆனால் உரையாடல்களில் எகத்தாளமும், குறும்பும் சாதாரணமாகத் தெறிக்கிறது. உதாரணத்திற்கு பெண்களைப் பற்றியும், அவர் மானேஜரைப் பற்றியும் சியாம் மனதில் கொடுக்கும் பதில்கள். மேலும் கால் சென்டர் ஊழியர்களின் டேட்டிங், துணையை சுலபமாக மாற்றும் குணம், அவர்களின் வேலைப் பளு, ஆகியவற்றையும் குறிப்பிடத்தக்க அளவில் தொட்டிருக்கிறார். கால் சென்டரைப் பற்றிய முன் அனுபவம் இல்லாமல் வெறும் கேள்வி ஞானத்தினை மட்டுமே கொண்டு இது போன்ற படைப்பினைக் கொடுப்பது சாதாரணமான விசயமல்ல. அந்தப் பணியை திறம்பட செய்திருக்கிறார். இந்தக் கால இளைஞர்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து வைத்திருக்கிறார். (அவருக்கும் 35 வயது தான் என நினைக்கிறேன்)

இன்னும் பல சுவாரசியமான விசயங்கள் என்னைக் கவர்ந்தன. வரூம் மல்கோத்ரா, பத்திரிக்கையில் பணிபுரியும் போது அவர் ஒரு கட்டுரை எழுதுகிறார். தலைப்பு "ஏன் அரசியல்வாதிகள் தற்கொலை செய்து கொள்வதில்லை?". சமூகத்தில் தொழில் அதிபர்கள், பொறியியல் வல்லுனர்கள், திரை துறையினர், அரசுத் துறை ஊழியர்கள் என பலரும் தற்கொலை செய்வது கொல்வது போல் ஏன் அரசியல்வாதிகள் மட்டும் தற்கொலை செய்து கொள்வதில்லை? என அமையுமாறு அவர் ஒரு கட்டுரை எழுதுகிறார்.

ஆனால் கிளைமேக்ஸில் அவர் பயன்படுத்தும் உத்திகளில் உடன்பாடு இல்லை. கால் சென்டரில் அழைப்புகள் குறைவதால் பணி நீக்கம் செய்ய நிர்வாகம் முடிவெடுக்கும் போது, தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வரூம் ஒரு யோசனை சொல்கிறான். அவன் யோசனைபடி அனைத்து வாடிககையாளர்களுக்கும் தொலைபேசி செய்து அவர்களின் கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்கியிருக்கிறது என இவர்கள் சொல்வது ஒப்புக்கொள்ளமுடியாத ஒன்று. அதுவும் அதற்கு மைக்ரோசாப்ட் வோர்ட் rand() உத்தியைப் பயன்படுத்தியிருப்பதையும் தவிர்த்திருக்கலாம். கம்ப்யூட்டர் வாங்கிய அனைவருமே முட்டாள்களாக இருக்க மாட்டார்களே! முடிவானது, Contact (By Carl Sagan), Digital Fortress (By Dan Brown) புத்தகங்களின் முடிவினைப் போலவே சப்பென்று இருந்தது.

சில பாத்திரங்களுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. மேலும் அந்த கடவுள் பாத்திரம் சொல்லும் விசயங்களும் வித்தியாசமானது ஒன்றும் அல்ல.

"ஒரு இரவில் நடப்பதனைப் பற்றி ஒரு புத்தகம் முழுவதும் கூறமுடியுமா?" என்று ஆசிரியர் ரயிலில் பிரயாணம் செய்யும் போது கேட்கும் கேள்விக்கு இன்னும் சிறிது அழுத்தம் கொடுத்து அவர் மனசாட்சியிடம் கேட்டிருக்கலாம். ஆனால் இதுவும் ஒரு வித்தியாசமான முயற்சி தான். அவரின் முந்தைய புத்தகத்துடன் ஒப்பிடும் போது 65 மதிப்பெண்களே கொடுப்பேன் இந்தப் புத்தகத்திற்கு.

ஆசிரியர் குழுவிற்கு அனுப்பிய மின்னஞ்சலில் கொடுத்திருந்த லிங்கில் இருந்த படம் நன்றாக இருந்தது. ஆனால் புத்தகத்தில் அட்டைப் படத்தில் அணுகுண்டிற்கு பயன்படுத்தப்படும் குறியீடு போல ஒரு நட்சத்திரம் வரையப்பட்டிருந்தது ஏனோ? அதே குவாலிஸ் படத்தினைப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

போன புத்தகத்தினைப் போல் பெரும்புகழை பெற்றுத் தராவிட்டாலும் இந்த புத்தகம் ஓரளவிற்கு புகழை (அவருடைய வித்தியாசமான முயற்சிக்காகவாவது) தேடித் தரும் என்பதில் ஐயமில்லை.

ஸ்ருசல்

வெள்ளி, நவம்பர் 04, 2005

மங்கலான தீபாவளி

அது என்னவோ தெரியவில்லை சிறுவனாக இருக்கும் போது வரும் ஆசைகளும், கனவுகளும் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் போய்விடுகின்றன. சிறுவயதில் தீபாவளி என்றால் ஆனந்தம். பாட்டி நிறைய பலகாரங்கள் செய்து வைத்திருப்பாள். ஏதாவது ஒரு தீபாவளிக்கு புதுத் துணி கூட கிடைக்கும். பாட்டியுடன் சினிமா செல்வதற்கும் வாய்ப்புக் கிடைக்கும். தீபாவளியன்று காலை வரைத் தெரியாது இந்தத் தீபாவளிக்கு வெடி உண்டா அல்லது ஒரு துப்பாக்கியுடனும் ஒரு பாக்கெட் சீனி வெடியுடனும் முடிந்து விடுமா என்று. ஆனால் எப்போதும் தீபாவளி சோகமாக இருந்ததில்லை. சந்தோசம் கரைபுரண்டு ஓடும். அப்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். நல்லா சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு நிறைய துணி வாங்கி அணிய வேண்டும். நிறைய வெடி போட வேண்டும் என! ஆனால் இப்போது? அந்த ஆசையே இல்லை. தீபாவளி, மற்றும் ஒரு நாள் என்ற அளவிற்கு ஆகிவிட்டது. துணி எடுக்க பணம் இருக்கிறது ஆனால் ஆசை இல்லை. எனக்கென்று துணி இந்த முறை எடுத்துக் கொள்ளவும் இல்லை. வெடி வாங்க காசு இருக்கிறது. வாங்கவில்லை. ஏன் ஒரு வெடி கூட போடவில்லை. ஏன் இந்த மாறுதல் என நினைத்துப் பார்த்தால் என்னால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு வேளை, இப்போது நான் சாதிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் சில விசயங்களும் (கனவுகளும்), சாதித்த பின் அர்த்தமில்லாமலேயே போய்விடுமோ? அப்போது துணி, வெடி வாங்க வேண்டும் அதற்கு நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவானது இப்போது அர்த்தமிழந்துவிட்டன. அதே போல இப்போது நினைத்திருக்கும் (பொருளைப் பற்றியது) கனவுகளின் நிலை?

தீபாவளியன்று என்னை மூன்று விசயங்கள் பாதித்தன. முதலாவது.

இரவு 12.30 மணி வரை ஊரைச் (ஸ்ரீவில்லிபுத்தூர்), சுற்றி விட்டு நண்பர்களுடன் வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தேன். வரும் வழியில் ஒரு மின்சாரக் கம்பத்தில் இரண்டு ஆட்டுக்குட்டிகள் கட்டப்பட்டிருந்தன. அருகில் மூன்று பேர் ஒரு ஆட்டினைக் கிடத்தி கால்களை அறுத்துக் கொண்டிருந்தனர். அருகில் நின்று ஒரு பெண்மணி பார்த்துக் கொண்டிருந்தார். நான் வருவதற்கு ஒரு 10 நிமிடங்களுக்கு முன்பாக அந்த ஆட்டிற்கு உயிர் போயிருக்க வேண்டும். அந்த ஆட்டின் தலை இருக்கிறதா எனப் பார்த்த போது, அந்தத் தலையானது அருகில் கட்டப்பட்டிருந்த இரு ஆடுகளுக்கு முன்பிருந்த ஒரு சிமெண்ட் மேடையின் மீது வைக்கப்பட்டிருந்தது. தலைக்கும், ஆட்டுக்குட்டிகளுக்குமான இடைவெளி ஒரு மீட்டர் கூட இராது.

எங்கள் ஊர் பண்டிகை நாட்களில் தெரு அல்லது ரோடுகளிலேயே சிலர் ஆடுகளை அறுப்பர். யாராவது ஒருவர் தனது பணத்தினை செலவிட்டு இரண்டு அல்லது மூன்று ஆடுகளை இரண்டு தினங்களுக்கு முன்பாக வாங்கி பண்டிகை தினத்தன்று அதன் கறியை விற்பனை செய்வார். அந்த வகையில் தான் இதுவும். அந்தப் பெண்மணி அந்த ஆடுகளுக்கு தற்காலிக சொந்தக்காரராக இருந்திருக்க வேண்டும்.

அருகில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் எந்த விதமான சத்தமும் எழுப்பாமால் மிக அமைதியாக இருந்தது, அதற்கு ஏற்படப்போகும் மரணத்திற்கு தயார்படுத்திக் கொள்வதைப் போல இருந்தது. முதல் ஆடு வெட்டப்படும் போது, மற்ற இரு ஆடுகளும் எந்த விதமான உணர்வினைப் பரிமாறிக்கொண்டிருக்கும்? அதுவும் அந்த இரு ஆடுகளுக்கு முன்பாக, வெட்டப்பட்ட ஆட்டின் தலை! 15 நிமிடங்களுக்கு முன்பு வரை உயிரோடிருந்த ஒரு ஜீவன் இப்போது இல்லை. அந்த ஆடுகளுக்கு கண்டிப்பாக இரண்டு நாள் அல்லது ஒரு நாள் பழக்கம் கண்டிப்பாக இருந்திருக்கும். அவ்வாறு பழகிய ஜீவன்களில் ஒன்று வெட்டி வைத்திருக்கும் போது அவற்றின் மனதில் எம்மாதிரியான பய உணர்வு வளர்ந்திருக்கும்? அவை ஏன் ஓடுவதற்கு முயற்சிக்கவில்லை (கயிறு கட்டியிருந்தாலுமே...)? ஏன் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை? அந்த இரண்டு ஆடுகளில் இன்னொன்றும் கொல்லப்பட்டு விட்டால் அந்த மூன்றாம் ஆட்டின் மனநிலை எவ்வாறு இருக்கும்?. என்றெல்லாம் நினைத்துப் பார்த்த போது பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. அந்த ஆடுகளுக்கு முன்பே அதன் இறப்பு தெரிந்திருக்குமா என உணர முடியவில்லை. சில பண்டிகைகளில் கொட்டு, மேளம் அடிக்கும் போது ஆடுகள் மிரண்டு அங்குமிங்கும் அலை பாயும். அந்த மேளச் சத்தத்தில் அதன் பயத்தினை தெளிவாக அறிய முடியும். தீபாவளிக்கு அப்படி எந்த விதமான சத்தங்களும் கிடையாது.

இதே நிலையில் மூன்று மனிதர்கள் கட்டப்பட்டிருந்தால் அவர்கள் எம்மாதிரியாக நடந்து கொண்டிருப்பார்கள்? சங்கிலியிலேயே கட்டிப் போட்டிருந்தாலும், திமிறி இருப்பார்கள். அழுதிருப்பார்கள். அவர்களிடம் கடைசி வரைக் கெஞ்சி இருப்பார்கள். நீ போ நீ போ என விலகியிருப்பார்கள். இல்லையா?

ஏற்கனவே மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி இருந்த எனக்கு இதனைப் பார்த்த பின்பு முட்டை சாப்பிடுவதற்கும் மனசு வரவில்லை.

மீதம் அடுத்த பாகத்தில் ...

ஸ்ருசல்

வெள்ளி, அக்டோபர் 28, 2005

இந்திரா வாழ்வில் சுவாரசியமான நிகழ்ச்சிகள் - பாகம் 2

இது போன பாகத்தின் தொடர்ச்சி

1. மே, 1920-ம் ஆண்டு அலகாபாத்தின் கடும் வெயிலினைத் தவிர்க்கும் பொருட்டு, முச்சோரிக்கு நேரு, அவர் தாய், மனைவி, இரு சகோதிரிகள் மற்றுன் இந்திராவுடன் சென்றார். அங்கு ஹோட்டல் சவோவில் தங்கியிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் இங்கிலாந்து அரசு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த ஆப்கன் மந்திரியும் அதே ஹோட்டலில் தங்க நேர்ந்தது. இதனால் சந்தேகமடைந்த ஆங்கிலேய அரசு நேருவினை முச்சோரியை விட்டு 24 மணி நேரத்தில் வெளியேறவேண்டும் என உத்தரவிட்டது. இதனால் அவர் மட்டும் அங்கிருந்து திரும்ப நேரிட்டது. இதனால் ஆத்திரமடைந்த மோதிலால் நேரு அவருடைய ஆங்கிலேய நண்பர் சர். பட்லரைத் தொடர்பு கொண்டு அந்த உத்திரவினை ரத்து செய்யச் செய்தார். நேரு திரும்ப அங்கு சென்ற போது, ஆப்கன் அமைச்சர், இந்திராவுடன் விளையாடுவதைக் கண்டார். நேரு வெளியேற்றப்பட்டதை பத்திரிக்கைகள் மூலம் அறிந்தவர்கள், நேரு குடும்பத்தினரை நன்கு உபசரித்து அவர்களைப் பார்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தினமும் காலையில் இந்திராவினை வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர்.

2. 1943 ல் இந்திராவும், நேருவும் வெவ்வேறு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்குள் கடிதத் தொடர்பு இருக்கக் கூடாது எனவும் உத்தரவு இருந்தது. அதாவது உத்தரவானது கீழ்கண்டவாறு விதிக்கப்பட்டது. "நீங்கள் உங்களுக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதலாம். ஆனால் நீங்களாக கடிதத் தொடர்பினை ஆரம்பிக்கக் கூடாது". பிறகு எப்படி இருவரும் தொடர்பு கொள்ளமுடியும்?

3. நேரு முதலில் இந்திரா - பெரோஸ் காந்தி திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். பின்னர் சமாதானமாகி ஒத்துக் கொண்டார். ஆனால் அந்த சமயத்தில், ஃபெரோஸிற்கு வருமானம் இல்லாதக் காரணத்தினால், திருமணம் முடிந்ததும் நேரு, ஃபெரோஸிற்கு அலகாபாத் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வேலை போட்டுக் கொடுத்தார். மாதச் சம்பளம் 100 ரூபாய். திருமணத்திற்கு நேரு 1000 ரூபாய் ரொக்கமாகவும் பரிசளித்தார். ஆனாலும் இருவருக்கும் அவர்களின் மாத வருமானம் போதாத காரணத்தினால் நேருவிடம் சில நேரம் பணம் வாங்க நேர்ந்தது. நேரு சிறை சென்ற பிறகு இந்திராவிற்கு எழுதிய கடிதத்தில் "உங்களுக்கு பணம் தேவைப்படும் பட்சத்தில் என்னுடைய கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ள தயங்க வேண்டாம். உரிமையுடன் என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளவும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

4. காந்தி கொல்லப்படுவதற்கு முன்பாக நேருவிற்கு காவலர்கள் என்று யாருமே இருக்கவில்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பின் தான், மவுண்ட்பேட்டன் பிரபு நேருவினை Commander-in-Chief கட்டிடத்தில் இருக்குமாறும், சில காவலர்களை வைத்துக் கொள்ளுமாறும் அறிவுரை கூறினார். இதனை நேரு ஆரம்பத்தில் ஏற்க மறுத்தார். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் அவரை சம்மதிக்க வைத்தார்.

5. நேரு பிரதமரானதும், இந்திரா பெரும்பாலும் டெல்லியிலேயே தங்கி விட்டார். இது இந்திராவிற்கும், ஃபெரோஸிற்கு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது. பின்னர் ஃபெரோஸ் ரே பெரேலி தொகுதியில் நின்று பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

6. ஃபெரோஸ் டெல்லி வந்த பிறகு பல பெண்களுடன் வெளிப்படையாக தொடர்பு வைத்திருந்ததும் நேருவையும், இந்திராவையும் வருத்தமடையச் செய்தது.

7. ஆரம்பத்தில் ஃபெரோஸ் பாராளுமன்றத்தில் அமைதியாக இருந்தாலும், பின்னர் காங்கிரஸினை எதிர்ப்பதில் மிகவும் தீவிரம் காட்டினார். நேருவின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. அப்போது முந்தரா என்ற காங்கிரஸ்காரருக்கு எல்.ஐ.சி. பங்குகளை மாற்றிக் கொடுத்த விவகாரத்தில் ஃபெரோஸ் பாராளுமன்றத்தில் காங்கிரஸை கடுமையாக சாடியதின் விளைவாக நேரு விசாரணைக் கமிஷன் அமைத்தார் (Mundhra Scandal). விசாரணையின் முடிவில் டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு தொடர்பு இல்லை என்றாலும், நிதியமைச்சரின் கட்டுப்பாடில் இது வருவதால் அவரே இதற்கு பொறுப்பு என தீர்ப்பளித்தது. இதனால் டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்ய நேர்ந்தது. மொரார்ஜி தேசாய் அவரிடத்தை நிரப்பினார்.

8. சிறிது ஆண்டுகளுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸ் கமிட்டித் தலைவராகப் (அல்லது செயலாளர்) பொறுப்பேற்றப் பிறகு, பெரோஸ் இந்திராவை கடுமையாக சாடி வந்தார்.

9. முதல்முறையாக கேரளாவில் காங்கிரஸ் அல்லாத அரசு முதன்முதலில் (கம்யூனிஸ்ட்) E.M.S. நம்பூதிரிபாடி தலைமையில் 1957 ல் ஆட்சி அமைத்தது. இது காங்கிரசுக்கு பலத்த எரிச்சலையூட்டியது. மேலும் இந்திரா காங்கிரஸ் கமிட்டித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு (1959-ல்), கேரளாவிற்கு விஜயம் செய்தார். அப்போது கம்யூனிஸ்ட் அரசும் பல கம்யூனிசக் கொள்கைகளை மக்களின் மீது திணித்திருந்தது. விவசாய நிலங்கள் எல்லாருக்கும் பகிர்ந்தளிக்கும் திட்டம் (சீனா, ரஷ்யா போல) அதில் முக்கியமானது. இதனால் பலதரப்பினரும் அந்த அரசு மீது அதிருப்தி கொண்டிருந்த சமயத்தில் இந்திராவின் விஜயம் முக்கியத்துவம் பெற்றது. பின்னர் மே 1959 ல் நேருவும் கேரளாவிற்கு பயணம் மேற்கொண்டு தன்னுடைய அதிருப்தியினை வெளியிட்டார். டெல்லி திரும்பிய சில நாட்களில் கேரள அரசு நீக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமுல் செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஃபெரோஸ் இதற்கு நேருவும், இந்திராவும் தான் காரணம் என கடுமையாக சாடினார். பின்னர் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தன்னுடைய கொள்கை விரோதக் கட்சியான முஸ்லீம் லீக்குடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது.

10. 24 ஆகஸ்டு 1963 ல் காமராஜர், "காமராஜ் திட்டம்" என்ற அறிமுகப்படுத்தினார். அதன்படி வயதான மத்திய அமைச்சர்களும், மாநில முதல்மந்திரிகளும் பதவியினை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே அது. இது பிரதம மந்திரிக்குப் பொருந்தாது எனவும் அறிவித்தார். அதன்படி காமராஜர், கர்நாடக முதன் மந்திரி நிஜலிங்கப்பார், மேற்கு வங்க முதலமைச்சர் அதுல்யா கோஷ், ஆந்திர முதலமைச்சர் சஞ்சீவ ரெட்டி, பம்பாய் முதலமைச்சர் எஸ். கே. பாட்டில் உட்பட ஆறு முதலமைச்சர்களும், மொரார்ஜி தேசாய், மற்றும் லால் பகதூர் சாஸ்திரியும் ராஜினாமா செய்தனர். இதில் லால் பகதூர் சாஸ்திரி நேருவிற்கு அடுத்து பிரதமராக வரக்கூடிய வாய்ப்புகள் இருந்ததால் இது முக்கியத்துவம் பெற்றது. ஆனாலும் அவர்கள் காங்கிரஸ் சிண்டிகேட்டில் உறுப்பினர்களாகத் தொடர்ந்தனர்.

11. நேரு இறந்ததும் இந்திரா அவருடைய அஸ்தியினை எடுத்து நேருவின் வேண்டுகோளின் படி இந்திய மாநிலங்கள் முழுவதும் தூவினார். இதில் காஷ்மீர் மாநிலத்தின் மீது ஹெலிகாப்டரில் சென்று தூவினார். அஸ்தியின் ஒரு பகுதியினை அலகாபாத் சங்கம் நதியிலும் கரைத்தார். நேருவின் அஸ்தியுடன் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு மறைந்த அவருடைய தாயார் கமலா அஸ்தியையும் கரைத்தார். கமலா சுவிட்சர்லாந்தில் இறந்த பிறகு அங்கிருந்து கமலாவின் அஸ்தியினை இந்தியா கொண்டு வந்து, அவருடனேயே 30 வருடங்கள் வைத்திருந்தார். இது அலகாபாத் ஆனந்த் பவனிலும், பல சிறைச் சாலைகளிலும், பிரதமரானதும் தன்னுடைய யார்க் ரோடு பங்களாவிலும் வைத்திருந்தார்.

12. லால் பகதூர் சாஸ்திரி இறந்ததும், இந்திரா பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது காமராஜரிடம் நீங்கள் பிரதமராக விருப்பம் இல்லையா எனக் கேட்டதற்கு "No Hindi, No English, how?" எனக் கேட்டார். இந்திரா பொறுப்பேற்றதும் டைம் பத்திரிக்கை "Troubled India in a women's Hand" என தலையங்கம் வெளியிட்டது.

13. 1965 ல் இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின் இந்தியாவில் கடும் உணவுத் தட்டுபாடு நிலவியது. இந்தப் போரினால் அமெரிக்க அரசும் இந்தியா, பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த உதவியினை நிறுத்தியது. இந்திரா அமெரிக்க சென்று, ஜான்சனை சந்தித்து அமெரிக்க அரசின் உதவியையும், பின்னர் உலக வங்கியின் உதவியினையும் நாடினார். உலக வங்கியும், IMF-ம் இந்திய ரூபாயின் மதிப்பினை குறைத்தால் மட்டுமே கடன் வழங்க முடியும் எனத் தெரிவித்தனர். இதனால் 6 ஜூன் 1966 ல் இந்திய ரூபாயின் மதிப்பை 57.5% குறைத்தார். இது சிண்டிகேட்டிடமோ, மற்ற தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்யாமல் இரவு 11 மணிக்கு அறிவித்தார். இதனால் காமராஜரும் தன்னுடைய அதிருப்தியைத் தெரிவித்தார். ஆனால் அமெரிக்க அரசு தருவதாக சொல்லியிருந்த 3 மில்லியன் டன் உணவும், 9 மில்லியன் டாலர்களையும் தராமல் மிகவும் தாமதப்படுத்தியது.

14. 1966 மாடு வதைத் தடுப்புச் சட்டத்தினை கொண்டு வர வேண்டும் என பல இந்து அமைப்புகள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் உயிரழக்க நேரிட்டது. இதற்கு பின் இந்திரா முடிவாக சட்டம் கொண்டுவர முடியாது என தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

15. 1968 ம் ஆண்டு ராஜிவ் முதன்முதலாக சோனியா காந்தியை இந்தியாவிற்கு அழைத்த வந்து இந்திராவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்திராவிற்கு பிரெஞ்ச் மொழி நன்றாகத் தெரியுமாதலால் அவருடன் பிரெஞ்ச் மொழியிலேயே உரையாடினார். பின்னர் இந்திய கலாச்சாரத்தை நன்கு கற்றுக் கொள்வதற்காக சோனியாவை நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்தினருடன் இரண்டு மாதங்கள் தங்க வைத்திருந்தார். பின் பிப்ரவரி 25, 1968 ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் முடிந்தது.

16. இந்திராவுடன் சிறு வயதில் படித்த பரமேஸ்வர் நரேன் ஹஷ்கர் அவருக்கு செயலாளராகப் பொறுப்பேற்றார். 1967 முதல் 1973 வரை இந்திராவிற்கு அடுத்து சக்தி வாய்ந்த புள்ளியாகத் திகழ்ந்தார். அவர் பின் கேபினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இது தான் நமது நாட்டின் IAS பதவியில் உச்ச வரம்புடைய பதவி.

17. 1969 ல் காங்கிரஸ் பிளவுற்று இரண்டாகப் பிரிந்தது. அது இந்திரா பிரிவு முதலில் காங்கிரஸ்(R) Requisitionist எனவும், நிஜலிங்கப்பா (காமராஜர்) பிரிவு காங்கிரஸ் (O) Organization எனவும் அழைக்கப்பட்டது. இதனை மற்றவர்கள் காங்கிரஸ் Ruling எனவும் காங்கிரஸ் Old எனவும் கேலியாக அழைத்து வந்தனர். இந்திரா பிரிவில் 220 உறுப்பினர்கள் இருந்தனர்.

18. பின்னர் 1969 ல் இந்திரா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். 220 உறுப்பினர்களே இருந்த காரணத்தினால், இந்திரா CPI உதவியுடன் பெரும்பான்மையை நிரூபித்தார்.

தொடர்ச்சி அடுத்த பாகத்தில்...

போன பகுதியைப் பார்க்க

குறிப்பு: இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எதுவும் என்னுடைய கருத்துகள் அல்ல. "Life of Indira" புத்தகத்தில் நான் படித்தது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் அந்த நூலாசிரியரின் கருத்து. அவற்றின் நம்பகத்தன்மையைப் பற்றி எனக்குத் தெரியாது.



ஸ்ருசல்