திங்கள், டிசம்பர் 12, 2005

'தில்லாலங்கடி' திப்புசுல்தான்

சென்ற வாரம் இந்தியா வந்த கேட்ஸ், பலரைச் சந்தித்துப் பேசினார். அவர்களில் குறிப்படத்தகுந்தவர்கள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் கலைஞர். கேட்ஸ்-ம் கலைஞரும் என்னப் பேசுவார்கள் என கற்பனை செய்த போது உதித்த அறிக்கை. இதனைப் போன வாரமே தட்டச்சு செய்து வைத்திருந்தேன். ஆனால் சில காரணங்களால் அதை வலைப்பதிவில் ஏற்றமுடியவில்லை.

உலகத்தின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனத்தின் தலைவர் தம்பி பில்கேட்ஸ் அவர்கள் நேற்று என்னை சந்தித்து உரையாடினார் . எனது வீட்டிலேயே சந்திப்பு நிகழ வேண்டும் என தம்பி கேட்ஸ் பிடிவாதமாக இருந்ததால் அவரை கோபாலபுரத்தில் வைத்து சந்தித்தேன். பல விசயங்களைப் பற்றி விவாதித்தோம். முக்கியமாக கழகத்தின் செயல்பாட்டினைப் பற்றி தம்பி கேட்ஸ் மிகவும் புகழ்ந்து பேசினார். மேலும் என்னை தமிழகத்தின் தலைவராகப் பார்க்காமல் உலக மக்களின் தலைவராகப் பார்ப்பதாகவும் தெரிவித்தார். மைக்ரோசாப்டின் முதல் இந்திய அலுவலகம் தமிழகத்தில் தான் தொடங்கப்பட வேண்டும் என தான் பிடிவாதமாக இருந்ததாகவும் ஆனால் அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக வேறு வழியில்லாமல் ஹைதாராபாத்தில் தனது அலுவலகத்தை அமைத்ததாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். அடுத்த முறை கழக ஆட்சி மீண்டும் அமையும் போது கண்டிப்பாக தமிழகத்தில் சென்னையிலோ அல்லது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலோ மைக்ரோசாப்டின் தலைமையகத்தை மாற்றுவதாகத் தெரிவித்தார்.

தம்பி பில் கேட்ஸின் தமிழ் அறிவு என்னை வியக்க வைத்தது. என்னுடைய 'தொல்காப்பிய பூங்கா' புத்தகத்தை பல முறை படித்து புலங்காகிதம் அடைந்ததாக தெரிவித்தார். எப்படி தமிழின் மீது இவ்வளவு ஆர்வம் ஏற்பட்டது எனக் கேட்டதற்கு, என்னுடன் தமிழில் உரையாடி மகிழ வேண்டும் எனபதற்காக என்னையே அவரின் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு மூன்று ஆண்டுகளாக தமிழ் படித்து வருவதாகவும் கூறி என்னை ஆச்சர்யப்பட வைத்தார்.

மேலும் அவர் தமிழில் எழுதிய சில கவிதைகளை என்னிடம் படித்துக் காட்டி என்னுடைய கருத்தைக் கேட்டார். சில திருத்தங்களைச் சொன்னேன். திருமதி மெலிண்டா கேட்ஸ் திருத்தங்களை ஆர்வத்துடன் குறித்துக் கொண்டார்.

தம்பி கேட்ஸ்க்கு தற்போது தொழிலில் கூகுள், யாகு போன்ற நிறுவனங்களின் மூலமாக பலத்த போட்டி இருப்பதால் அவற்றை சமாளிப்பதற்காக சில அறிவுரைகளையும் கூறினேன். ஆனால் இத்தனை நிறுவனங்களின் போட்டியையும் சமாளித்து, இன்னும் சந்தையில் கோலோச்சி வருவதால் தம்பி கேட்ஸிற்கு 'தில்லாங்கடி' கேட்ஸ் என்னும் பட்டத்தைச் சூட்டினேன். இனிமேல் அவர் தில்லாங்கடி என்று அன்புடன் அழைக்கப்பட வேண்டும் என கழகத் தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தைப் போலவே அமெரிக்காவும் கழகத்தின் தலைமையில் வளர்ச்சி பெற வேண்டும் எனவும் அதற்காக கழகத்தின் கிளையை அமெரிக்காவிலும் நிறுவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஆனால் அதனைப் படிப்படியாக ஆரம்பிக்க வேண்டி இருப்பதாலும், மேலும் கழகத்தின் நலம் விரும்பி தோழர் புஷ்ஷின் மனம் புண்படக்கூடாதெனவும், அதனை மைக்ரோசாப்ட் அளவில் ஆரம்பிக்க முடிவெடுத்துள்ளோம். அதற்கு 'மை.மு.க' எனப் பெயரிட்டுள்ளேன். அதாவது, 'மைக்ரோசாப்ட் முன்னேற்றக் கழகம்' என அழைக்கப்படும்.

மேலும் அவருடைய வாழ்க்கை வரலாறை 2007 ல் வெளியிட இருப்பதாகவும், அதற்கு என்னுடைய உரை வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நான் எவ்வளவு கூறியும் கேட்காமல் நான் தான் எழுத வேண்டும் என பிடிவாதமாகக் கூறியதால் வேண்டாவெறுப்பாக ஒப்புக் கொண்டேன். மேலும் அந்தப் புத்தகத்தில் வரும் வருமானத்தின் பெரும்பகுதியினை (1%) 'பில்கலைஞர்' அறக்கட்டளைக்கு கொடுப்பதாக ஒப்புதல் அளித்துள்ளார்.

விண்டோசின் அனைத்துப் பதிவுகளிலும் இனி மேல் என்னுடைய புத்தகத்திலிருந்து குறிப்புகளை எடுத்து "Tip of the Day" டயலாக்கில் டிஸ்பிளே செய்வதற்கு எனது அனுமதியைக் கேட்டார். தமிழன் புகழ் உலகெங்கும் பரவட்டும் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சியுடன் அனுமதி கொடுத்தேன்.

'பில்' தமிழில் உடனடியாகச் சேர்க்கப்பட வேண்டிய ஓர் 'சொல்'.
கேட்ஸ் அறிவாலயம் நுழைய இனி ஏதும் இல்லை கேட்ஸ்

அன்புள்ள,
மு.க

இது முற்றிலும் கற்பனையே. நகைச்சுவைக்காக மட்டுமே. கலைஞரைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பதிக்கப்படவில்லை. அவருடைய உரைநடை பாணி மட்டுமே எடுத்தாளப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் சிறிதும் இல்லை.


'Changing India' பகுதி 2-ல் கேட்ஸிடம் பிராணாய் ராய் கேட்ட கேள்வி.

"கூகுள் நிறுவனம் அனைத்து மென்பொருள் தொகுப்புகளையும் இலவசமாக அளிக்கிறது. உங்களுக்கு அது போல இலவசமாக அளிக்கும் எண்ணம் ஏதும் இருக்கிறதா?"

அதற்கு கேட்ஸின் பதில்

"கூகுள் எதையுமே இலவசமாக அளிப்பதில்லை. கூகுள் தேடியில் பயன்பாட்டாளர்கள் விளம்பர URL-ஐ சொடுக்கவதால் மட்டுமே கூகுள் நிறுவனம் பெரும் வருவாயை ஈட்டுகிறது. நீங்கள் சொடுக்குவதால் தானே அவர்களுக்கு லாபம். அப்படிப் பார்த்தால் அந்த லாபத்தை உங்களிடம் தானே பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் அனைத்து லாபத்தையும் அவர்களே வைத்துக் கொள்கிறார்களே? இது எந்த வகையில் சரி?



(படம் நன்றி: தினமலர்)

மேலும் கேட்ஸின் இந்தப் படமும் என்னைக் கவர்ந்தது. சாதாரணமாக அமர்ந்து கதை கேட்கும் பாணி. பலரும் அவரின் மோட்டிவ் வேறு என குறைகூறுவதும் உண்டு. ஆனால் அது முக்கியமில்லை எனத் தோன்றுகிறது. நமது அரசியல்வாதிகளோ அல்லது வேறு யாரும் செய்யத் தயங்கும் செயல் அது. அதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். வெள்ளிக்கிழமை எனது அலுவலத்திற்கு அடுத்த கட்டடத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கட்டிட திறப்பு விழாவிற்கு வந்திருந்தார். ஆனால் பார்க்க முடியவில்லை.

ஸ்ருசல்

ஸ்ருசல்

5 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

super sirrrrrrrrrrrrrrrrrrr

ithu thann yathaarithammm umayumm kuudaaa

பெயரில்லா சொன்னது…

மிக நன்றாக இருக்கிறது ஸ்ரூசல்.

பெயரில்லா சொன்னது…

நண்பரே கட்டுரை நன்றாக உள்ளது... நீங்கள் அ.தி.மு.க வை சார்ந்தவரா? கலைஞரை சாடியுள்ளீர்...

பெயரில்லா சொன்னது…

உங்கள் பதிப்புகளை ஆரம்ப நாட்கள் முதல் படித்து வருகிறேன்.. கடந்த சில நாட்களாக உங்கள் பதிப்புகளில் அரசியல் வாடை அடிக்கிறது... நீங்களும் "அம்மா அம்மா" என்று கூறி அரசியல் சாக்கடையில் விழபோகிறீரா?

ஸ்ருசல் சொன்னது…

Anonymous-க்கு,

நான் எந்த கட்சியையும் சாராதவன். யாருடைய அபிமானியும் அல்ல. நகைச்சுவைக்காக மட்டுமே இந்தப் பதிவினை எழுதுகிறேன். அவரைப் பற்றி எழுதுவதால் நான் அ.தி.மு.க அபிமானி என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். சில விசயங்கள் சரியல்ல என்று மனதில் படும்போது அதைப் பற்றி எழுதுகிறேன். அது தி.மு.க வாக இருந்தாலும் சரி; அ.தி.மு.க வாக இருந்தாலும் சர்.

எல்லாருக்குமே நடப்பு அரசியல் பற்றி ஒரு கருத்து இருக்கும். இந்த விசயத்தில் கருணாநிதியைப் பற்றி எழுதியிருப்பதால் நடக்கும் ஆட்சியின் அனைத்து செயல்களுடனும் நான் ஒத்துப் போகிறேன் என்பது அர்த்தமல்ல. ஏன் எனக்கு பல விசயங்களில் உடன்பாடு இல்லை தான்.

இதற்காகத் தான் இந்த மாதிரி விசயங்களைத் தொடுவதற்கு சிறிது தயக்கமும் இருந்தது. கட்சி முத்திரை விழுந்து விடுமோ என்று!. நான் ஜெயலலிதாவின் அறிக்கைகளைக் கூர்ந்து கவனித்ததில்லை. கருணாநிதியின் அறிக்கைகள் தான் எனக்கு அதிகம் படிக்கக் கிடைக்கின்றது. அதனாலேயே இந்த மாதிரி எழுத நேர்ந்தது. மற்றபடி வேறொன்றும் இல்லை.

உங்களின் கருத்துக்கு நன்றி.

ஸ்ருசல்