வெள்ளி, மார்ச் 17, 2006

இது 'ஈ' படத்தின் விமர்சனம் அல்ல. 'ஈவது விலக்கேல்' என்று தர்மத்தைப் பற்றிக் கூறுவதற்காகவும் அல்ல. ஜாலியாக நான்கு பவுண்டரிகள். நாலு விசயம் பற்றிப் படித்துப் படித்து எனக்கே சோர்ந்து விட்டது. ஆனாலும் சுதர்சன் கோபால், சில நாட்களுக்கு முன்பாக "உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு. யாரும் உன்னைக் கூப்பிடமாட்டேன்றாங்க. பிழைச்சுப்போ", என மின்னஞ்சல் தட்டி விட்டிருந்தார். அவரின் வேண்டுகோளுக்கிணங்கவும், உங்களை சலிப்படையக்கூடாது எனவும் ஜாலியாக நான் அடித்த சில பவுண்டரிகள் இதோ.



அ) மாற்றிக் கொள்ள விரும்பும் நாலு விசயங்கள்

1. ஏதாவது தமிழ்படம் பார்க்கும் போது, படத்தின் மீது ஏற்படும் கோபத்தினால், இனிமேல் எந்தத் தமிழ் படத்திற்கும் வரக் கூடாது என முடிவு கட்டிவிட்டு மீண்டும் அடுத்த வார இறுதியில் ஏதாவது ஒரு குப்பை படத்திற்காக, தியேட்டர் வாசலில் நிற்பது. போன வாரம் கூட கள்ளத்தனமாகக் காதலியைப் பார்த்து உதை வாங்கினாலும், நாளை மீண்டும் 'பட்டியல்' போடச் சொல்கிறது மனசு.

2. இந்த மாதத்திற்கு இனிமேல் புத்தகமோ, இசைத் தட்டுகளோ எதுவும் வாங்கக் கூடாது என நினைத்து விட்டு மீண்டும் லேண்ட்மார்க்-ல் சென்று நிற்பது.

3. நண்பர்களிடம் அரசியல், மதம், ஜாதி பற்றி என்ன நேர்ந்தாலும் விவாதம் செய்யக்கூடாது என தீர்மானித்து விட்டு, பேச்சு ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் நானும் விவாதத்தில் கலந்து கொள்வது. சிறிது நிமிடங்களுக்குப் பிறகு எனக்கே "சே. இன்னைக்கும் ஆரம்பித்து விட்டோமா?", எனத் தோன்றும்.

4. என்னுடைய கேர்ள் பிரண்ட் ;) இல்லாத போது தானே இந்த மாதிரி எல்லாம் கதை விட முடியும். நாலாவது என்ன சொல்வது எனத் தெரியவில்லை; அதனால் தான்.



ஆ) பள்ளி / கல்லூரியில் வேடிக்கையான நாட்கள்

எல்லாருக்கும் பள்ளியிலும், கல்லூரியிலும் ஜாலியாக கிண்டலடிக்க ஏதாவது ஒரு ஆசிரியர் கிடைப்பார். நான் என்ன புண்ணியம் செய்தேனோ, நான் படித்த பள்ளி, கல்லூரிகள் அனைத்திலும் இன்றும் கூட நினைத்துக் கொள்ளும் படி சில ஆசிரியர்கள் கிடைத்துள்ளனர்.

1. எனது 11, 12-ம் வகுப்பு இயற்பியல் ஆசிரியரை சுத்தமாக யாருக்கும் பிடிக்காது. அவர் மாணவர்களை அடிப்பதற்காக ஓர் சிறிய கம்பை வைத்திருப்பார். வகுப்புத் தலைவன் எனது நண்பன் தான். ஒரு நாள் என்னை இம்போஷிஷன் எழுதச் சொன்னார் என்ற கடுப்பில், மாலையில் வீட்டிற்குத் திரும்பும் போது, "என்னடா கம்பு இது. காய்ஞ்ச தென்னங்குச்சியை வச்சிக்கிட்டு அடிச்சிட்டு இருக்கார்", என சொல்லி, எனது நண்பன் வேண்டாம் வேண்டாம் என சொல்லியும் கேளாமல் அந்தக் கம்பை ஒடித்து வெளியே எறிந்து விட்டேன். மறுநாள் வகுப்பில், "யார் யார் இம்போஷிஷன் எழுதல. எழுந்திருங்க", எனக் கேட்டார். எழுதாத மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். அவர்களைத் திட்டி விட்டு, வெளியே நிற்கச் சொல்லி அனுப்பி விட்டார்.

"ஹா. இவருக்கு எங்க என்னை எல்லாம் ஞாபகம் இருக்கப் போகுது", என நான் என்னுடைய சீட்டிலேயே அமர்ந்திருந்தேன்.

சிறிது நேரம் கழித்து, என்னை அவர் பெயர் சொல்லி அழைக்க, நான் தெரியாதது போல் பின்புறம் திரும்பிப் பார்த்தேன்.

உடனே அவர், "ஏலே. உன்னைத் தான்லே. தெரியாதது மாதிரி பின்னாடி திரும்பிப் பார்க்குற. இம்போஷிஷன் எழுதினியா?", என மறுபடியும் கேட்டார்.

நான் மெதுவாக எழுந்து, "இல்ல சார்", என்றேன்.

"பின்ன தைரியமா உள்ள உட்கார்ந்துருக்க.... வெளிய வாலே", என்றார்.

பின்னர் வகுப்புத் தலைவனான எனது நண்பனை நோக்கி, "லீடர் அந்தப் பிரம்பை (தென்னங்குச்சி தான்) எடு", என்றார்.

எனக்கோ 'திக்'கென்றது. அய்யோ நேத்து தானே ஒடிச்சு வெளியே போட்டோம். அதையும் இவன் வேறு சொல்லிட்டான்னா என்னை அடிப் பின்னிடுவாரே என்று நினைத்தேன். அவனோ என்னைத் திரும்பிப் பார்த்தான்.

பின்னர் சில விநாடிகள் தேடிப் பார்ப்பது போல் பார்த்து விட்டு அவரிடம், "சார், பிரம்பைக் காணும் சார்", என்றான்.

"பிரம்பைக் காணுமா? எவன்லே எடுத்தது", என மாணவர்களைத் திரும்பிக் கேட்க. யாரும் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தனர்.

மறுபடியும் எனது நண்பனிடம் திரும்பி, "உன்னைத் தான் அடிக்கணும்லே. ஒழுங்கா சொல்லிடு யாரு எடுத்தாங்கன்னு", என்றார்.

அவனோ என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க, நானோ, "டாய் சொல்லிடாதடா என்னப் பொளந்திடுவார்", என்று பரிதாபமாகப் பார்க்க. அவனது நிலைமையோ அதை விடப் பரிதாபம்.

பின்னர் அவனிடம், "ஸ்டாப் ரூமில் ஒரு கம்பு இருக்கு அதை எடுத்திட்டு வாலே", என்றார். அவன் ஒரு காய்ச்ச வேப்பங்குச்சியை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தான். "அதுக்கு அந்த தென்னங்குச்சியே பரவாயில்லையே", என நினைத்துக் கொண்டிருக்கும் போதே 'சட்டு சட்டு', என அடிகள் விழுந்தன. என்னைக் கதறக் கதற அடித்த, சில விநாடிகளில் அந்தக் கம்பும் உடைந்து விட்டது. எனக்கோ யப்பா பிழைச்சோம் என்ற சந்தோஷம்.

உடனே லீடரிடம் திரும்பிய அவர், "உன்னைத் தான் அடிக்கனும்லே. அந்தக் கம்பை எங்கே?", எனத் திரும்பக் கேட்டார். ஆஹா விடமாட்டார் போல என்பது போல பாவமாக முகத்தை வைத்துக் கொண்டே அவரைப் பார்த்தேன்.

பின்னர் என்ன நினைத்தாரோ, "போலே போய் 10 ரவுண்ட் கிரவுண்டை சுத்து", என்றார். ஆஹா. வச்சாருடா என நினைத்துக் கொண்டே மைதானத்தை சுற்ற ஆரம்பித்தேன். மைதானத்தில் பொண்டு பொடிசுகள் எல்லாம் விளையாடிக் கொண்டிருக்க, பெரிய பையன் ஒருவன் மட்டும் ஓடினால் அசிங்கமாக இருக்குமே என்று மெதுவாக நடந்தேன். எனது வகுப்பு வரும் போது மட்டும் ஓடுவது போல் பாவ்லா காட்டி விட்டு, மற்ற இடங்களில் எதையோ தொலைத்து விட்டு தேடுவது போல நடந்தேன்.

இதையும் எப்படியோ அவர் கவனித்து விட்டார் போலும். அடுத்த முறை வகுப்பிற்கு அருகில் வரும் போது, கையை வகுப்பின் கதவில் ஸ்டைலாக வைத்துக் கொண்டு "நீ செய்ற திருட்டுத்தனத்தைக் கண்டுபிடித்து விட்டேன்", என்ற பெருமைக்கு அடையாளமாகப் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார். எனக்கோ, "மாட்டுனடா இன்னைக்கு", என்ற பயம் வேறு. ஆனாலும் ஒரு தைரியம். "இதெல்லாம் எங்கப் பார்த்திருக்கப் போறாரு. ஒரு வேளை போதும்னு சொல்லி உள்ளக் கூப்பிடுவாறோ?", என்ற நினைப்பு.

வகுப்பின் அருகில் வந்ததும், என்னைப் பார்த்து, "ஏலே. என்ன பண்ணுற? ஓடுறான்ன, நடக்குற? எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா? ஒழுங்கா ஓடுனா 10 ரவுண்ட். இல்லாட்டி இந்த பீரியட் ஃபுல்லா ஓடுவ, ஞாபகம் வச்சுக்க..." என்றார். முகத்தைத் தொங்க போட்டுக்கொண்டு, இப்போது ஓட்டம் பிடித்தேன்.

என் நேரம், சிறிது நேரம் கழித்து அங்கே வந்த மற்றொரு ஆசிரியர் (8-ம் வகுப்பெடுப்பவர்), அவரிடம், "என்ன சார் பையன் ஓடுறான்", என கேட்க, அதற்கு நமது இயற்பியலார் விளக்க, நமது 'விளக்கம்கேட்டார்', "இவனா சேட்டை பண்ணிக்கிட்டே இருப்பானே சார். அன்னைக்கு நைட் ஸ்டடியில பேசிக்கிட்டே இருந்தான் சார்", என்றார். ஆஹா வத்தி வச்சுட்டாரா என்று நினைத்துக் கொண்டே அருகில் சென்றேன். "ஏய் பார்த்தியா. உன்னைப் பத்தி எல்லாரும் கம்ப்ளயிண்ட் பண்ணுறாங்க... உன்னை கண்ட்ரோல் பண்ண முடியாம", என்று பெருமையடித்தார். நல்ல வேளை, பெல் அடித்துத் தொலைத்தார்கள்.

அப்போது அங்கு வந்த எனது வகுப்பு ஆசிரியை, "சார். ஏன் சார் பையனை ஓட விடுறீங்க", என அவரிடம் கேட்க, அடித்தது ஆரம்பமா என எனது மனசுக்குள் கலக்கம். நம்ம வாத்தியார் விளக்க, எனது வகுப்பாசிரியையோ, "சார் நல்ல பையன் சார். அப்படியெல்லாம் பண்ண மாட்டான் சார். பாவம் விட்டிடுங்க சார்", என்று சர்டிபிகேட் கொடுத்து என்னைப் பார்த்து "சார் சொல்ற மாதிரி நடந்துக்கணும்", என்றார். "சரிங்க டீச்சர்", என்றேன். உடனே வாத்தியார், "டீச்சர்(?) சொல்றாங்கன்னு விடுறேன். இனிமேலுக்கு ஏதாவது பண்ணுண அப்புறம் என்ன நடக்குன்னே எனக்குத் தெரியாது", என்று ஒரு ஹீரோவைப் போல சொல்லிவிட்டுச் டீச்சரிடம், "டீச்சர். நீங்க சொல்றீங்கன்னு இவனை இப்படியே விடுறேன். இல்லாட்டி பனிஷ்மெண்ட் வேற மாதிரி இருக்கும்", என்று அவரிடம் பேசிக்கொண்டே சென்று விட்டார்.

சில மாதங்கள் கழித்து ஏதோ ஒரு தேர்வு முடிந்து, விடைத்தாள்களைத் திருத்திக் கொடுத்தார். இப்போது, அவருக்கு என்னைப் பிடிக்காது. எனக்கோ அவரை சுத்தமாகப் பிடிக்காது. ('மின்னலே' டயலாக்). விடைத்தாளை வாங்கிய எனக்கோ அதிர்ச்சி. அப்படியெல்லாம் கதை சொல்ல மாட்டேன். ஆனால், அவ்வளவு குறைவாக மதிப்பெண்கள் எடுத்ததில்லை. இதுவரை பெயில் ஆனதில்லை. இம்முறை முதல்முறையாக பெயில் மார்க். 68 மதிப்பெண்கள். ஆஹா வேலையைக் காட்டிடாருடா என நினைத்து விடைத்தாளைத் திருப்பிப் பார்த்தேன். நிறைய கேள்விகளுக்கு மதிப்பெண்கள் குறைத்துப் போட்டிருப்பது தெரிந்தது. மற்ற மாணவர்கள் அவரிடம் விளக்கி மதிப்பெண்கள் பெற்றுக் கொண்டிருந்தனர்.




நானும் வரிசையில் நின்று, "சார். இந்தக் கேள்விக்கு சரியா தான் சார் எழுதியிருக்கிறேன். ஒரு மார்க் தான் போட்டிருக்கிறீங்க"

"தப்புலே. அதுக்கு ஒரு மார்க் கொடுத்ததே பெரிசு. வேற?"

"எத்தனை மார்க் எடுத்திருக்க?", என்று புன்சிரிப்புடன் கேட்டார்.

"68 சார்"

"ஹீம். பெயில் மார்க் வாங்கியிருக்கே. ஒழுங்காப் படிக்காட்டி இப்படித் தான் ஆகும். சேட்டை பண்ணுனா முட்டை மார்க் தான் வாங்குவே?", என்றார்.

அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.

"பேசுலே", என்றார்.

சிறிது விநாடிகள் கழித்து,

"சார் இது பத்து மார்க் கொஸ்டீன் சார். ஆனா நீங்க 5 மார்க் கொஸ்டீன்னு நெனச்சு 3 மார்க் தான் போட்டிருக்கீங்க", என்றேன்.

வெடுக்கென்று என்னிடமிருந்து பேப்பரை இழுத்து,

"உனக்கு 3 மார்க் போட்டதே சாஸ்திலே. நீ எழுதுனது தப்பு. உனக்கு சைஃபர் மார்க் தான் போடனும்", என்று சொல்லி அந்த 3 மார்க்குகளையும் அடித்து முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு, முட்டை போட்டார்.

"போலே போய் உட்காரு. ஒரு தடவை பெயில் ஆகு. அப்பத்தான் உனக்கு அறிவு வரும்..."

இப்போது மார்க் 65. இனிமேலும் இவரிடம் மார்க் கேட்டால், மொத்த மார்க்கே 10 வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை என்று நினைத்து அமைதியாக எனது இடத்தில் வந்து அமர்ந்தேன்.

2. எனது கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வர முதலில் பஸ் நிலையம் வரை சைக்கிளில் செல்ல வேண்டும். அங்கிருந்து பஸ் பிடித்து வீடு வந்து சேர வேண்டும். ஒரு நாள் கல்லூரி முடிந்த பிறகு, உடனிருந்த நண்பனின் பேச்சைக் கேட்டு பஸ்ஸிற்காக வைத்திருந்த காசை செலவழித்து விட்டேன். "பஸ் நிலையம் வந்ததும் உனக்கு சில்லறை மாற்றித் தருகிறேன்", என்றான். சரின்னு சொல்லி நானும் நம்பி காசைக் கொடுத்தேன் . சிறிது நேரம் கழித்து பஸ் நிலையத்திற்குப் புறப்பட்டோம். நான் சைக்கிளை மிதித்தேன். 'சீக்கிரம் போடா, சீக்கிரம் போடா எங்க ஊர் பஸ் போய்விடும்', என்று நண்பன் சொல்ல, முக்கால் மணி நேரம் வேக வேகமாக சைக்கிளை மிதித்தேன். பஸ் நிலையத்திற்கு 300 மீட்டர் அருகில் வரும் போது, சைக்கிள் தடால் என்று ஆடியது. பார்த்தால் பின்புறம் பார்டியைக் காணும். "மாப்ளே எங்க ஊர் பஸ் வந்திடுச்சு. இதை விட்டா வேற பஸ் எனக்குக் கிடையாது. எப்படியாவது ஊர் போய் சேருடா", என வேகமாகக் கூறிவிட்டு கண்ணுக்கு முன்னாடி ஓடிப் போய் சாலையின் மறுபுறம் இருந்த நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பஸ்ஸில் ஏறிக்கொண்டான் நண்பன். "அடப்பாவி! உன்னை நல்லவன் நெனச்சு காசு கொடுத்தேனேடா. இப்படி பண்ணிட்டேயே... இனிமேல நான் எப்படி ஊருக்குப் போறது", என என்னை நானே நொந்து கொண்டு, வேறு வழியில்லாமல் சைக்கிளிலேயே மிதித்து ஊர் வந்து சேர்ந்தேன்.

3. கல்லூரியில் எனது டேட்டாபேஸ் ஆசிரியர் என்ன சொன்னாலும், ஆர்வமாகக் கேட்பது போல மண்டையை ஆட்டிக் கொண்டிருப்பேன். அவருடன் எனக்கு நல்லப் பழக்கமும் உண்டு. அவர் வகுப்புகள் எப்போதும் மதிய உணவு இடைவேளை முடியும் போது தான் வரும். அவர் வேறு பாடங்களை என்னைப் பார்த்தே நடத்துவராதலால், நானும் கவனிக்கிறோனோ இல்லையோ, கண்ணை அசைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். திடீரென்று, ஒரு நாள், பாடம் நடத்திக் கொண்டிருந்தவர், என்னைப் பார்த்து திடீரென்று ஓர் கேள்வி கேட்டார். சரி, அவர் ஏதோ சொல்கிறார் என நினைத்து நானும் மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தேன். "யோவ். உன்கிட்ட கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கேன். மண்டையை ஆட்டிட்டு இருக்க. எந்திரியா", எனத் திட்ட ஆரம்பித்தார். "சே. அசிங்கமாப் போச்சே", என என்னை நானே திட்டிக்கொண்டு பதில் சொல்லிவிட்டு அமர்ந்தேன்.

அதே ஆசிரியர், "C லாங்குவேஜ் கற்றுக்கொள்ள வேண்டும்", என ஆசைப்பட்டு, என்னை அவரது விட்டிற்கு வாரா வாரம் வரச் சொல்வார். இது ஒரு மூன்று மாதங்கள் நடந்தது. அவரது ஊரோ 35 கி.மீட்டர் தள்ளி இருந்தது. அங்கு சென்று, பஸ் நிலையத்தில் இறங்கி, ஒன்றரை கி.மீட்டர் நடந்து தான் அவரது வீட்டை அடைய வேண்டும். வீட்டிற்கு சென்றதும், "எதாவது சாப்பிடுறியா", எனக் கேட்டு காபி கொடுப்பார். பின்னர் கம்ப்யூட்டரை ஆன் செய்து, "இந்தப் புரோகிராம் எப்படின்னு சொல்லிக்குடுய்யா", என்று ஏதாவது கேட்பார். நான் சொல்ல ஆரம்பித்தால், "ஒரு சாம்பிள் புரோகிராம் போட்டு சொல்லிக்கொடேன்", என்பார். நான் புரோகிராம் செய்ய ஆரம்பித்ததும் "இதப் செஞ்சிக்கிட்டு இரு. அதுவரைக்கும் நான் தூங்கிகிட்டு இருக்கேன். முடிஞ்சதும் எழுப்பு", எனக் கூறிவிட்டு, சட்டையை கழற்றி அருகில் வைத்து விட்டு, நடு ஹாலில் தரையில் அப்படியே காலை நீட்டி படுத்துறங்கிவிடுவார்.

எனக்கோ, "அடப்பாவமே, நமக்கு இதெல்லாம் தேவையா? சனிக்கிழமையும் அதுவுமா, அங்க இருந்து வந்து இப்படி இவர் தூங்குறதைப் பார்க்கத்தான் வந்தோமா?" என சுயபரிதாபம் ஏற்படும். புரோகிராம் போட்டுவிட்டு எழுப்பவும் முடியாது. நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பார். சிறிது நேரம் கழித்து, "சார்.. முடிஞ்சது பாருங்க", என்றால் தூக்கக்கலக்கத்தோடு "சொல்லுப்பா எப்படி ஒர்க் பண்ணுது", என்பார். நான் சொல்வதை கேட்பது போல சிறிது நேரம் கேட்டு விட்டு, "போதும்பா மிச்சத்த அடுத்த வாரம் பார்த்துக்கலாம்", எனக் கூறிவிட்டு அவரது பைக்கில் என்னை ஏற்றி பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய் சேர்த்து விடுவார்.

எனது வீட்டில் வேறு போன் இருந்துத் தொலைத்தது. நான் ஏதாவது ஓர் வாரம் செல்லாவிட்டாலும், வீட்டிற்குப் போன் செய்து, "அவனை வரச் சொல்லுங்க", என்று வீட்டில் சொல்லிவிடுவார். நான் போக மாட்டேன் என்று சொன்னாலும், வீட்டில் "வாத்தியாரே கூப்பிடுறார். போய்ட்டு வர்றதுக்கு என்ன?", என்று அவருக்கு சப்போர்ட் வேறு. என் தலைவிதி.

4. நான் படித்தக் கல்லூரி ரொம்ப ஸ்டிரிக்டான கல்லூரி. கணிப்பொறி துறையாதலால், ஒரு சில ஆசிரியர்களைத் தவிர மற்றவர்களுக்கு பணி நிரந்திரமும் கிடையாது. அந்த டேட்டாபேஸ் ஆசிரியருக்கோ ஹெ.ஓ.டி, பிரின்சியைப் பார்த்தாலே பயம் தான். அவர் இல்லாத நேரத்தில் ஆட்டம் போட்டுக்கொண்டிருப்பார். ஸ்டாப் ரூமில் பெரும்பாலும் சில ஆசிரியைகளுடன் (அனைவரும் அதற்கு முந்தைய வருடம் தான் டிகிரி முடித்தவர்கள்) இவரும் உட்கார்ந்திருக்கும் நேரம் பார்த்து, யாராவது மாணவர்கள் சென்றால் அவ்வளவு தான். அதவும் சரியாகப் படிக்காத மாணவர்கள் கேட்கவே வேண்டாம். "யோவ் அறிவிருக்காயா; சொன்னா புரியாதாயா, அது இருக்காயா", எனக் கேட்டுக் கொண்டிருப்பார். ஒரு நாள் மாலை வகுப்பு முடிந்ததும், அவரைப் பார்க்க வேண்டும் என அழைத்திருந்ததால் அவரை பார்க்க ஸ்டாஃப் ரூமிற்குச் சென்றேன். பல ஆசிரியைகள் அருகில் அமர்ந்திருந்தனர். அங்கு லேப் அஸிஸ்டெண்ட் ராஜாவும் இருந்தான். ராஜா மிகவும் சின்னப் பையன். வயது 20 தான் இருக்கும். யாருக்கும் பயப்படவே மாட்டான். அங்கு அவரை விட ஒன்றிரண்டு வருடங்கள் அதிகமாகவே பணிபுரிபவன். அவரும் அவனை மடக்க வேண்டும் என்று ஏதாவது கேட்பார். அவனோ அதைப் பற்றி சட்டை செய்யாமல் ஏதாவது பதில் சொல்வான். "யோவ் ராஜா. இங்க வாய்யா உன்னைய என்ன சொன்னேன்..", என்றால் "இம். என்ன சொன்னீங்க. உங்களுக்கு வேற வேலை இல்ல சார்", என்ற ரீதியில் தான் பதில் சொல்வான்.

உள்ளே நுழைந்த என்னைப் பார்த்து, "வாப்பா உன்னை எதுக்கு வரச்சொன்னேன்னா...", என ஆரம்பித்தவர், என்னைப் பின் தொடர்ந்து வந்த எம்.சி.ஏ மாணவனைப் பார்த்து விட்டார். ஏதோ அவர் சொல்லி அவன் செய்யவில்லை போலும். அது தான் தருணம் என அவனைப் பிடித்து,

"யோவ் அறிவிருக்காயா. இப்ப வர்ற. உன்னை எப்பய்ய வரச் சொன்னேன்", என ஆரம்பித்தார்.

"சார்......", என அந்த மாணவன் இழுக்க

"அதெல்லாம் தெரியாது. இன்னைக்கு இருந்து முடிச்சிட்டு தான் போகணும்", என்றார்

"சார். டிரையினுக்கு டைம் ஆகிடுச்சு. ஊருக்குப் போகணும்", என்றான்.

"என்னய்யா டைம் ஆகிடுச்சு. கொடுத்த அஸைன்மெண்டை செய்யத் தெரியாது. ஊருக்கு மட்டும் கரெக்ட் டயத்துக்குப் போகத் தெரியுது. எந்த ஊர்யா உனக்கு", என்று அதிகாரமாகக் கேட்டார்.

"விருதுநகர் சார்"

"எப்படியா போற"

"டிரையின்ல சார்"

"டிரைய்ன் எத்தனை மணிக்குய்யா?"

"இன்னும் அரை மணி நேரத்துல சார்"

"எங்கய்யா போய் ஏறுவ?", என்றார்.

உடனே அருகிலிருந்த ராஜா

"சார் விருதுநகருக்குப் போறதுக்கு சிவகாசி ஸ்டேசன்ல ஏறாம விருதுநகர்லயா போயா டிரெய்ன் ஏறுவாங்க, என்ன சார் கேள்வி கேட்குறீங்க", எனக் கூற, அருகில் அமர்ந்திருந்த ஆசிரியைகள் அனைவரும் கொல் என சிரித்து விட்டனர். சிரிப்பு அடங்க வெகு நேரமாகி விட்டது. "ஆஹா அசிங்கமாப் போச்சே", என நினைத்து, ராஜாவை அருகில் அழைத்து அவனிடம் மெதுவாக,

"யோவ் ராஜா"

"என்ன சார்?"

"யோவ் ராஜா நான் போட்டிருக்குற இந்த செருப்பால கூட என்னை அடி. இந்த மாதிரி லேடிஸ் ஸ்டாஃப் இருக்கும் போது என்னை அவமானப்படுத்தாத...", என பரிதாபமாகக் கேட்டார்.

"பின்ன என்ன சார். இருக்குறது சிவகாசி. போக வேண்டியது விருதுநகர். சிவகாசிக்கு அடுத்த ஸ்டேசன் விருதுநகர். சிவகாசில ஏறாம எங்க போய் சார் ஏறுவாங்க? என்ன சார் கேள்வி கேட்குறீங்க", என்றான்.

"யோவ் கிறுக்கா. அதுக்கு இப்படியாய்யா சத்தம் போட்டு பேசுவ. போய்யா போய் வேலையைப் பார்", என அனுப்பினார். இந்த ஆசிரியரைப் பற்றி இன்னும் பல கதைகள் உள்ளன.

இ) பெங்களூரில் மாற்ற விரும்பும் விசயங்கள்

1. அனைத்து வாகனங்களிலிருந்தும், ஒலிப்பானை கழற்றி எறிந்து விட்டு, யாராவது ஒலி எழுப்பவேண்டுமானால் ஜன்னலைத் திறந்து, "எனக்கு வழி விடுங்கள்; ஓரமாகப் போங்கள்", எனக் கத்தச் செய்வது. பிரேக்கின் மீது கால் இருக்கிறதோ இல்லையோ, எப்போதும் ஒலிப்பான்கள் மீது கை இருக்கிறது.

2. ஃபோரம் போன்ற ஷாப்பிங் மால்களுக்கு நினைத்தும் பார்க்க முடியாத அளவிற்கு உடையை சுருக்கிப் போட்டு விட்டு, பின்னர் கூட்டமாக சேர்ந்து கொண்டு, "ஷாப்பிங் மால்களில் ஈவ் டீசிங் அதிகரித்து விட்டது", என கோஷம் போடும் சிலப் பெண்கள் (போன வாரம் கூட இங்கு போராட்டம் நடத்தினர், சில கல்லூரிப் பெண்கள்). ஆண்கள் மீது தவறில்லை எனக் கூறவரவில்லை. தவறு செய்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால், ஈவ் டீசிங் போன்ற விசயங்களைத் தடுப்பதில் பெண்களுக்கும் பொறுப்பு இருக்கிறது; அக்கறை இருக்கிறது எனக் கூறுகிறேன். இவர்கள் இப்படி ஆடை அணிவதனால் (இதனால் மட்டுமே அல்ல!), ஒழுங்காக வந்து போகும் மற்ற பெண்கள் துன்பப்பட வேண்டிய நிலைமை.

3. எந்த கடைக்குச் சென்றாலும் அது பொன்னுசாமியாக இருக்கட்டும், நாயுடு மெஸ்ஸாக இருக்கட்டும், உடுப்பியாக இருக்கட்டும், பெரிய ஹோட்டலாக இருக்கட்டும், எங்கு பார்த்தாலும், "மச்சான். எப்படிடா ஸ்டர்ட்ஸ் புரோகிராம் எழுதுறது", "டேய் அதுல ஒண்ணும் இல்லடா........" என்று அளந்து விடும் சாப்ட்வேர் என்ஜினியர்கள். பிரஷர் / ஒரு வருடம் எக்ஸ்பீரியன்ஸ் உள்ள நபர்கள் என்றால், கடையில் உட்கார்ந்து இண்டர்வியூ பற்றிப் பேசிக்கொண்டிருப்பது.

"என்கிட்ட வந்து கேட்டாடா. எவ்வளவு வேணும்ணு. நான் 3 லக்ஸ் கொடுங்க. இல்லாட்டி ஓக்கேன்னு சொன்னேன். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டு போனவ 3.5 லக்ஸ்க்கு ஆஃபர் லெட்டர் கொடுத்துட்டா."

"சரி அங்க ஜாயின் பண்ணுறியா?"

"அங்கெல்லாம் எவன்டா ஜாயின் பண்ணுவான்? IBM-லேயும் ஆஃபர் இருக்கு. யோசிக்கணும்"

4. எத்தனை செல்போன் எண்கள் மாற்றினாலும், அதனை எப்படியாவது மோப்பம் பிடித்து, கால் செய்யும் தனியார் வங்கி, கல்சன்டன்ஸி நிறுவனங்கள். எனது நண்பர் இது போன்று வரும் அழைப்புகளை வித்தியாசமாக கையாளுவார்.

"சார். நாங்க சிட்டி பேங்குல இருந்து கால் பண்ணுறோம்"

"சொல்லுங்க பாஸ்"

"சார் உங்களோட credit history base பண்ணி உங்களுக்கு பெர்சனல் லோன் சேங்க்ஷன் ஆகிருக்கு. வாங்க விருப்பமா?"

"எவ்ளோ பாஸ்?"

"சார் 2 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரைக்கும்"

"அப்படியா பாஸ்? எனக்கு ஒரு 50 லட்சம் வேணும். அரேஞ்ச் பண்ணிட்டு போன் பண்ணுறீங்களா?"

"................"

அதன் பிறகு அவர் எங்க லயன்ல இருக்கப் போகிறார்.

இன்னொருத்தர்.

"சார் எங்களோட புது கிரிடிட் கார்ட். லைஃப் டைம் பிரீ கார்ட் சார்....." பேசிக்கொண்டே போய், "வாங்கிக்கோங்க சார்..........."

"அல்ரெடி என்கிட்ட ஒரு கார்ட் இருக்கே"

"சார் இது லைஃப் டைம் பிரீ கார்ட் சார்............"

சிறிது விநாடிகள் மவுனத்திற்குப் பிறகு.

"கரெக்ட் தான். எனக்கும் ஒரு கார்ட் தேவைப்படுது, ஆனா என்னொட்ட இந்த கார்ட்ல ஒரு பிராபளம் இருக்கே"

"என்ன சார்"

"இல்ல இந்த கார்ட யூஸ் செஞ்சு ப்ர்சேஸ் பண்ணி இதுவரை பணம் கட்டல. பரவாயில்லையா?"

"எந்த பேங்க் சார்"

"உங்க பேங்க் தான்"

ஈ). நான் அழைக்க விரும்பும் நபர்கள்:

எனக்குத் தெரிந்தவர்கள் அனைவரையும் எழுதிவிட்டனர். யாரை அழைப்பது எனத் தெரியவில்லை. மேலும் யாரையும் துன்பப்படுத்த விரும்பாதலால், இத்தோடு விட்டு விடுகிறேன்.

குறிப்பு: சிவகாசி, விருதுநகர் - மாற்றப்பட்ட ஊர் பெயர்கள்.

திங்கள், மார்ச் 13, 2006

வாட்டர் - திரைப்பட மதிப்பீடு (Water Movie Review)

என்னடா படமே இன்னும் வரவில்லை. அதற்கு முன்பு மதிப்பீடா என்றெல்லாம் கேட்காதீர்கள்.

சோகமான படம் என்றால் அதனை எப்படியாவது பார்க்காமல் தவிர்த்து விடுவேன். எனக்கு அது போன்ற கதைகள் சுத்தமாகப் பிடிக்காது. இன்னும் சேது, காக்க காக்க உள்ளிட்ட பல படங்களைப் பார்க்கவில்லை. பிதாமகன் தான் விதிவிலக்கு. வாட்டர் திரைப்படத்தின் கதை அனைவரும் அறிந்தது தான். படம் எடுக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பலத்த சர்ச்சையைக் கிளப்பியது. ஆனாலும் ரகுமானின் படம் என்ற காரணத்திற்காக பார்க்கத் துணிந்தேன். சென்ற சனிக்கிழமை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

படத்தின் பாடல்களும் இன்னும் வெளிவரவில்லை. சில அயல்நாடுகளில் பாடல்கள் கிடைக்கின்றன. ஆனால் இந்தியாவில் இது வரை வெளியிடப்படவில்லை. காரணம் என்ன எனத் தெரியவில்லை. ஆனாலும் தரம் குறைந்த பாடல்களை ஒரு தளத்தின் உதவியினால் mp3 ஃபார்மேட்டில் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆடியோ சி.டியை வாங்கி அனுப்பும்படி நண்பரைக் கேட்டிருக்கிறேன். சரி பாடல்களைத் தான் கேட்கமுடியவில்லை. படத்தில் பாடல்கள் எப்படி எடுக்கப்படிருக்கிறது என்பதைப் பார்ப்போம் என பார்க்க ஆரம்பித்தேன்.

படம் முழுவதும் என்னைக் கவர்ந்த ஒரு விசயம். இசை என்று வழக்கம் போல சொல்ல மாட்டேன். ஒளிப்பதிவு. அட்டகாசம். அற்புதம். சொல்ல வார்த்தைகள் இல்லை. இத்தனைக்கும் படம் முழுவதும் வருபவை ஒரு நதி, ஆசிரமம், வீடு, சில தெருக்கள். அவ்வளவு தான். காசியில் படப்பிடிப்பை நடத்த பலத்த எதிர்ப்பு இருந்ததால், படத்தின் பெரும்பகுதி, இலங்கையில் எடுக்கப்பட்டுள்ளது.

சரி, கதைக்கு வருகிறேன்.

1938-ம் ஆண்டில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. என்னவென்றே தெரியாத 8 வயது குழந்தையான, சுய்யாவிற்கு (Chuyia, சரளா) திருமணம் முடிந்த சில நாட்களிலேயே விதவை கோலம் பூணும் அவலம் ஏற்படுகிறது. அவளின் தந்தை "உன் கணவன் இறந்து விட்டான். இனி மேல் நீ விதவையாகத் தான் வாழ வேண்டும்", என அறிவுரை கூறுகிறார். உடனே அந்தப் பெண், "எத்தனை நாட்களுக்குப்பா", என அறிமாயல் கேட்கிறாள். அவளது கணவனைத் தகனம் செய்ததும் மறுவேலையாக அவளின் பெற்றோர் செய்யும் காரியம் - அவளை வாரணாசியில் உள்ள விதவைகள் இல்லம் (அ) ஆசிரமத்தில் சேர்ப்பது.



அந்த ஆசிரமத்தில், வேறுபட்ட வயதுடைய 20 பெண்களுடன் இவளும் சேர்ந்து கொள்கிறாள். அவர்களின் அன்றாடத் தொழில் கோயில் வாசலில் அமர்ந்து பிச்சையெடுப்பது, இறைவனை வழிபடுவது, பஜனைகளில் கலந்து கொள்வது. இது தான். ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கு பணிக்கப்பட்ட ஒரே தொழில். பிச்சை எடுப்பதால் வரும் வருவாயில் ஆசிரமத்திற்கான வாடகையைக் கொடுத்து விட்டு, மீதம் இருக்கும் பணத்தில் அன்றாட செலவுகளைக் கவனித்துக் கொள்கிறார்கள். அன்றாட செலவுகள் என்றால் என்ன? உணவு மட்டும் தான். அதிலும் பொறித்த உணவுகள் உண்ணக் கூடாது. பலரும் இளமையிலேயே (7,9) விதவைக் கோலம் பூண்டு 20-70 வருடங்களாக அங்கேயே வாழ்ந்து வருபவர்கள். ஆசிரமம் என்றால் பெரிய ஆசிரமம் அல்ல. மூன்று அறைகள், ஒரு பெரிய மத்திய கூடம். அவ்வளவு தான். காலையில் நதியில் குளிப்பது, பஜனை பாடுவது, வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பது........ ஐயோ, நினைத்துப் பார்க்கவே கொடூரமாக இருக்கிறது. இரு கை, கால்களை இழந்து வாடும் ஜீவன்கள் கூட, சிலரின் உதவியினால், பல விசயங்களை அனுபவிக்கும் வாய்ப்பு கூட இவர்களுக்கு இல்லை.


அந்த ஆசிரமத்தின் தலைவி, விரக்தியினால் பாதிக்கப்பட்டு மற்றவர்களை தனது சந்தோஷத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் நடத்துகிறார். அவரிடம் வந்து மாட்டிக்கொள்ளும் இந்த குழந்தை, ஆசிரமத்தில் சகுந்தலாவையும் (சீமா பிஸ்வாசை), கல்யாணியையும் (லிசா ரே) சந்திக்கிறாள். அவர்களின் அரவணைப்பு இவளுக்கு ஆறுதலாக இருக்கிறது. கல்யாணி, 9 வது வயதில் கணவனை இழந்து, கிட்டத்தட்ட 15 வருடங்களாக அங்கு வாழ்பவர். யார் சொல்லியும் கேட்காமல், மற்றவர்கள் செய்வது போல் மொட்டை போட்டுக்கொள்ளாமல் கனவுகளுடன் வாழ்ந்து வருபவர். சமயத்தில், அந்த ஆசிரமத்தலைவியின் வற்புறுத்தலால், பல பெரிய மனிதர்களின் படுக்கையையும் பங்கிட வேண்டிய நிலை கல்யாணிக்கு (லிசா ரே) ஏற்படுகிறது.

ஒரு நாள், காந்தியின் அறப்போராட்டத்தினால் கவரப்பட்ட நாராயண் (ஜான் ஆபிரகாம்) அவரது சொந்த ஊரான வாரணாசிக்கு வரும்போது, கல்யாணியைச் சந்திக்கிறார். இருவரும் காதல் வயப்படுகின்றனர். கல்யாணியைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்கும் கொடுக்கிறார், நாராயண். தனது தந்தை, தாயின் அனுமதியினையும் பெறுகிறார். இதனை அறிந்த ஆசிரமத் தலைவி, கல்யாணிக்கு மொட்டை அடித்து அறையில் வைத்து பூட்டுகிறார். இன்னொரு பெரியவரின் வார்த்தைகளினால் தெளிவடையும் சகுந்தலா (இந்திய பிரிட்டிஸ் அரசாங்கம் விதவைகளின் மறுமணத்தை ஆதரித்து இயற்றிய சட்டம்), கல்யாணியை விடுவித்து, அவரது காதலனுடன் திருமணம் செய்து கொள்ளுமாறு அனுப்புகிறார். நாராயணின் தாய், தந்தையைக் காண அவருடன் செல்லும் கல்யாணி வழியில் சில உண்மையை அறிகிறார்.

அவர் நாராயணுடன் சேர்ந்தாரா, சுய்யா என்ன ஆனாள் என்பதை மனதைப் பாதிக்கும் விதத்தில் கொடுத்திருக்கிறார், தீபா மேத்தா. எனக்கு தீபா மேத்தாப் பற்றியும், இவரின் படைப்புகள் பற்றியும் சில கேள்விகள் இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பற்றிக் கூற இது சரியான தருணம் அல்ல; இடமும் அல்ல.

என்னால் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. ஒரே இடத்தில் வாழ்நாள் முழுவதும்? எத்தனை ஜீவன்கள் இது போல வாழ்வின் சுகங்களை அறியாமல் உயிரை விட்டிருக்கும்?. அதுவும் அந்தப் படத்தில் வரும் மூதாட்டியின் (வகீதா ரஹ்மான் என்று நினைக்கிறேன்) பாத்திரம்!. வாழ்வில் எதையும் அறியாதவர். ஏழு வயதில் யாரென்றே தெரியாத ஒருவரின் மரணத்திற்காக, ஆசிரமம் அனுப்பப்பட்டவர். அவருக்குப் பணிக்கப்பட்ட தொழிலை எழுபது ஆண்டுகளாகச் செய்பவர். வாழ்வில் சிறு இன்பத்தைக் கூட காணதவர். அவருக்கு கடைசி வரையில் இருக்கும் ஒரே ஆசை ஏழு வயதில் சாப்பிட்ட இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது. ஆனால் அவர்கள் பொறிக்கப்பட்ட எந்த பண்டத்தையும் சாப்பிடக்கூடாது. கடைசியில் சுய்யா கொடுக்கும் லட்டுவினை ஆசையுடன் சாப்பிட்டு உயிரை விடுவது மனதில் பல கேள்விகளை எழுப்புகின்றன. வாழ்வின் சூத்திரம் தான் என்ன? எத்தனை பேர் இது போன்ற சின்னச் சின்ன ஆசைகளுடன் உயிரை விட்டிருப்பார்கள். இது அங்கு இன்னமும் தொடருகிறதா எனத் தெரியவில்லை. ஆனாலும் நமது நாட்டில் கணவனை இழப்பவர்களின் நிலை முன்பு போல மோசம் இல்லையெனிலும், இன்னும் பலர் அது போன்ற சமுதாயக் கட்டுபாட்டினை மீற முடியாமல் மனதில் சோகத்தினையும், விரக்தியையும், சமூகத்தின் தூற்றலையும் சந்தித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றனர்.

படத்தில் 'வைஷ்ணவ ஜன தோ' பாடல் வருமிடம் அற்புதம். அஜய் சக்ரவர்த்தி ('இசையில் தொடங்குதம்மா', புகழ்) பாடியிருக்கிறார். அற்புதம். சுய்யா, லிசா ரேயின் நடிப்பு அபாரம். பின்னணி இசைக் கோர்த்த மைக்கேல் டன்னா தனது பணியை திறம்படச் செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் கைல்ஸ் நட்ஜென்ஸிற்கு சிறப்புப் பாராட்டு. அற்புதம். வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

படம் முடிந்ததும் காட்டப்பட்டக் குறிப்பு: இன்னும் இந்தியாவில் 50+ மில்லியன் பெண்கள் விதவைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

நிச்சயமாகத் திரையிடப்பட வேண்டிய திரைப்படம். ஏன் சில மத அமைப்புகள் இதற்குத் தடையிடுகின்றன எனத் தெரியவில்லை. இதை மதத்தின் மீதான எதிர்ப்பாகக் கருதாமல், பெண்ணிணத்திற்கு இழைக்கப்படும் கொடுமையாகக் கருதினால் அனைவருக்கும் நல்லது. சில சமூக விரோதிகள், சுயநலத்திற்காக இட்ட கட்டுப்பாடுகள் இன்னும் பல கோடி மக்களின் வாழ்வை சீரழிப்பது வருத்தத்தைக் கொடுக்கிறது. இது சுயநலம் கூட என்று சொல்ல முடியாது. தான் இறந்த பிறகு, தனது மனைவி நன்றாக வாழக்கூடாது என நினைக்கும் கணவனை என்னவென்று சொல்வது? சுயநலத்தைத் தவிர கொடூரமான வார்த்தை ஏதாவது இருக்கிறதா? தனக்கு எய்ட்ஸ் வந்திருக்கிறது என்று அறிந்தும், மனைவியுடன் உறவு கொள்ளும் கணவனுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

ஞாயிறு, மார்ச் 12, 2006

நான் கற்றுக் கொண்ட பாடங்கள்

நான் கற்றுக் கொண்ட பாடங்கள்:

இருக்கும் பணிகளிலேயே கடினமான பணி, தமிழ்மணத்தில் நட்சத்திரமாக இருப்பது தான் என நினைக்கிறேன். மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு அப்படித் தான். ஒரு வாரத்திற்கும் முன்பாகவே இடுகைகளை தயாரிக்க ஆரம்பித்து, ஒன்றொன்றாக ஒரு வடிவிற்குக் கொண்டு வந்து வெளியிட்டால், ம்ஹீம்; ஆரம்பத்தில் யாரிடமும் இருந்து எவ்விதமான எதிர்விளைவும் இல்லை. ஏதும் தவறாகச் சொல்லி விட்டோமா என யோசிக்கும் நிலைக்கு என்னைத் தள்ளி விட்டது? இதில் தவறு நிச்சயம் வாசகர்கள் மீது இல்லை. நான் எழுதும் முறையில் சில மாறுதல்களைச் செய்ய வேண்டியதிருப்பதை இது சுட்டிக்காட்டியது. சில பதிவுகள் நீளமாகிப் போய் விட்டன. குமரனுக்கு என்னுடைய முதல் பதிவிற்காக கொடுத்த கீழ்கண்ட பதிலைக் கொடுத்திருந்தேன். "பதிவின் நீளம் அதிகம் தான். பள்ளியிலிருந்தே அதிகமாக எழுதுவது எனக்கு வழக்கமாகி விட்டது. அதை மட்டும் மாற்றினால் போதும் என நினைக்கிறேன்", எனத் தெரிவித்திருந்தேன்.

இந்த ஒரு வார காலத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் வரை என் பதிவிற்கு வருகை தந்திருந்தாலும், வந்த அனைவரும் இடுகைகளை முழுவதுமாகப் படித்தார்களா, படித்தவர்கள் அனைவரும் ரசித்தார்களா, ரசித்தவர்கள் அனைவரும் என்னுடைய கருத்துக்களுடன் ஒத்துக்கொண்டார்களா அல்லது முரண்பட்டார்களா எனத் தெரியவில்லை. வந்த சில பின்னூட்டங்களிலிருந்து சிலரது கருத்துக்களைத் தான் அறிய முடிந்தது.

கன்னத்தில் முத்தமிட்டால் படம், ஓர் சிறந்த திரைப்படம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த திரைப்படம் சரியாக ஓடவில்லை. அதன் பிறகு நடந்த ஓர் சந்திப்பில் (மூன்று பொது ஜனங்கள், மணிரத்னம், இன்னொரு திரைக்கலைஞர்), மணிரத்னம் சிறிது கோபமாக 'கன்னத்தில் முத்தமிட்டால் என்ற சிறந்த படம் எடுத்தேன். யார் பார்த்தீங்க', என்று கோபத்துடன் கூறினார். அவரின் கோபம் புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால், அவர் எடுக்கும் படங்களை எல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என நினைப்பது சரியல்ல. அதே மக்கள் தான், ரோஜாவையும், பம்பாயையும், அஞ்சலியையும் வெற்றி பெற வைத்தனர். திரைப்படமும், எழுத்தும் மக்களைச் சென்று சேரவில்லை என்றால், 'எழுத்தில் குறை இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர மக்களின் மீதல்ல. கொடுப்பவர், அவரின் கருத்தை மாற்ற வேண்டும் என்று சொல்ல வரவில்லை. கொடுத்த விதத்தில் ஏதும் தவறிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதில் சில மாற்றங்கள் செய்தால், வெற்றியடைந்திருக்க முடியும். அதே போல, நான் எழுதுவதை எல்லாரும் ரசிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என நினைத்தால், எழுதாமலே இருந்து விடலாம்.

எனக்கு இந்த இடுகைகள் வெளியிட்டதில் திருப்தி இருந்தும், சில இடுகைகள் சரியாக மற்றவர்களைச் சென்று சேரவில்லையோ என்ற ஐயம் இருக்கிறது. இதற்கு தவறு என் மீது தான் (நான் கொடுத்தவிதம்) தான் இருக்க வேண்டும். கொடுத்தவிதத்தில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும் என அறிகிறேன். இதை நட்சத்திர வாரத்திற்கு முன்பே உணர்ந்திருக்கிறேன். மற்றவர்கள் கண்ணில் சரியாகப் படாமல் போயிருக்கலாம்; அதனால் தான், சரியாக சென்றடையவில்லை என நினைத்தேன். ஆனால் நட்சத்திர வாரம் அந்த கருத்தை மாற்றியிருக்கிறது.
எனக்கு ஊக்கமளித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி!
சிறந்த ஆசிரியர்களைஅடையாளம் காண்பது எப்படி, கல்வி கற்பித்தலின் தரத்தை அதிகரிப்பது எப்படி என எனக்குத் தெரிந்த சில விசயங்களைப் பதிவு செய்திருந்தேன்.

கதை எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எழுதி
அதை பதியவும் செய்தேன். சிலர் அதனையும் பொறுத்துக்கொண்டு, நன்றாக இருக்கிறது என பெருந்தன்மையுடன் கூறினாலும், அதன் தரம் எனக்குத் தெரியும். ஆதலால், இனி கதை எழுதி நேரத்தை (என்னுடைய, படிக்கும் உங்களுடைய) வீணடிக்கக் கூடாது என முடிவெடுத்திருக்கிறேன். (யப்பா பொழச்சோம் என நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கிறது).

கெட்ட புத்தியும் பச்சரிசி சாப்பாடும் என்ற பதிவிற்கு மிக அதிக எதிர்ப்புகள் இருக்கும் என தயக்கத்தோடு தான் பதித்தேன். ஆனால், அதற்கு வந்த ஆக்கப்பூர்வமான பின்னூட்டங்களும், தருமி, பாரதி, முத்து (தமிழினி), மரத்தடி, மற்றும் சில அனானிகள் உள்ளிட்ட பலர் கோபப்படாமல் இட்ட பின்னூட்டங்களும், அந்த எண்ணத்தை மாற்றின. மற்ற சில ஒத்த கருத்துள்ள நண்பர்களின் ஊக்கமும் உற்சாகமூட்டியது. யாரிடமும் இருந்து பழித்து பின்னூட்டங்கள் வரவில்லை. அதற்காக நானடைந்த ஆச்சர்யத்திற்கும், சந்தோசத்திற்கும் அளவில்லை. என்னுடைய கருத்துக்களை ஓரளவிற்காவது மதித்து, அதற்கு ஆக்கப்பூர்வமாக பின்னூட்டமிட்ட தமிழன்பர்களுக்கு நன்றி. நான் ஏமாற்றமடைந்தது ஒன்றே ஒன்றில் தான்; '-' குறியை தேர்ந்தெடுத்த சிலர், எதற்காக '-' தேர்ந்தெடுத்தார்கள் என்ற காரணத்தைச் சொல்லாமல் சென்றது தான்.

எனக்குப் பிடித்த பாடல்களைப் பதியவேண்டும் என நினைத்து மிகவும் சிரமப்பட்டு பதித்தேன். காலங்கள் மாற மாற என்னுடைய ரசனை மாற்றத்தை பதிவு செய்யும் விதத்தில் அது அமைந்திருந்தது. ஏற்கனவே ஓவராக தத்துவமாகப் பொழியக்கூடாது என்ற எண்ணத்தில் தான், ஆசிரியர்கள், கெட்டபுத்தியும் பச்சரிசி சாப்பாடும், உயிர் இழப்பதற்காகவா போன்ற பதிவுகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பதிந்தேன். இது எப்படிபட்ட விளைவுகளை உண்டாக்கியது எனத் தெரியவில்லை. பயணத்தை தொய்வாக்கியதா அல்லது நல்ல மாறுதலை உண்டாக்கியதா எனத் தெரியவில்லை.

உயிர்; மற்றவர்களுக்காக இழப்பதற்காகவா? என்ற தலைப்பில் ராணுவ வீரர்களின் கஷ்டங்களைப் பற்றிக் கூறியிருந்தேன்.

சனிக்கிழமை டவர் ஆஃப் சைலண்ட்ஸ் என்ற தலைப்பில் ஓர் தகவல், நான் ரசித்த சினிமாக் காட்சிகளின் (பின்னணி இசைத் தொகுப்பு) பட்டியல்.

7 நாட்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை எனக் கூறவிரும்பவில்லை. இடுகைகளைப் பதிவது, சரி பார்ப்பது, பதிவது, பதிந்ததில் திருந்தங்கள் இருந்தால் அதனை சரி செய்வது, அதன் பின்னர் வரும் பின்னூட்டங்களுக்கு பதிலளிப்பது, மீண்டும் அடுத்த நாளுக்கான பதிவினை எடுத்து காலை 9 மணிக்கு இடுவது என பளு சிறிது அதிகம் தான். சனிக்கிழமை கிட்டத்தட்ட சோர்ந்து விட்டேன். முறைமாமன் படத்தில் வரும் கவுண்டமணி போல. :)

இன்னும் வாசகர்களைக் கவரும் விதத்தில் எழுதுவது எப்படி என நான் கற்றுக்கொள்ள வேண்டும், என இந்த ஒரு வாரத்தில் அறிந்து கொண்டேன். கொடுக்கும் விசயங்கள், கடினமான விசயங்களாக இருந்தாலும், அது கடைசி நிலை மனிதருக்கு எளிதில் புரியும் படி தெளிவாகவும், எளிமையாகவும் இருக்கும் வகையில் எழுதுவதில் தான் விசயமே இருக்கிறது. அதற்கும் நான் இன்னும் முயற்சி எடுக்க வேண்டும். இடுகைகள் எழுதும் வேகம் அதிகரித்துள்ளது.

இந்த ஒரு வார காலத்தில், என்னுடைய பதிவுகளினால் யாருடைய மனமாவது புண்பட்டிருக்குமாயின் எனது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சாதாரண தமிழன்பர்கள் - நாம் அனைவரும். தமிழில் எழுதுவதும், வாசிப்பதையும் இன்பமெனக் கருதுபவர்கள். உலகின் பல பகுதிகளில் வசிக்கும் நம்மிடையே வெறும் அரசியல் மற்றும் இன்ன பிற விசயங்களில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளினால் தனி மனிதக் காழ்புணர்ச்சி இருக்கக் கூடாது என்பதே என்னுடைய அவா. நிச்சயமாக இந்த விசயத்தில் தமிழ் வலைப்பூக்கள் முன்னேறி வருகிறது என்பது என்னுடைய கணிப்பு. ஆனாலும் இன்னும் பலருக்கு தங்களுடைய கருத்துக்களைச் சொல்வதற்கு தயக்கமிருக்கிறது. நம்முடைய விருப்பு, வெறுப்புகளை மற்றவர்களின் மனம் கோணாம்ல் எடுத்துரைத்தால், அது போன்ற விசயங்கள், மெல்ல மறைந்து விடும் என நம்புகிறேன்.

தமிழ் வலைப்பூக்கள், திரட்டிகள் பல விசயங்களைத் தமிழிலேயே தெரிந்து கொள்ள உதவுகின்றன. (உ.ம். நியூக்கிளியர் ரியாக்டர், கூகுள் தேடியில் உள்ள குறைபாடுகள் உட்பட). இதனை போன்ற விசயங்களை சாத்தியமாக்கியதற்காக தமிழ்மணத்திற்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் அனைத்து வாசகர்களுக்கும், எனக்கு வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும் என்னுடைய நன்றியைக் கூறி என்னுடைய நட்சத்திர வாரத்தை இந்த இடுகையுடன் முடித்துக் கொள்கிறேன்.


விடை பெறுகிறேன்!

இன்று பதிவிடுவதற்கு, இன்னொரு பதிவு எழுதி வைத்திருந்தேன். ஆனால் ஓவர்டோஸ் ஆகிவிடும் என்பதால், பதிவிடவில்லை. ஆதலால் உங்களுக்கு நேரமிருந்தால் என்னுடைய அதிகம் அறியப்படாத (?) சில பதிவுகளை நோட்டமிடவும்.

1. ஐஐடி என்ன செய்ய வேண்டும்
2. சர்வதேசப் பள்ளிகளில் இந்திய விஞ்ஞானிகள்
3. புலம் பெயர்வதால் ஏற்படும் இழப்புகள்

இவற்றைப் படிப்பதற்கு அபார பொறுமை வேண்டும். இதில் விருப்பம் இல்லையென்றால், சில ஜாலி பதிவுகள் இதோ:

1. இந்தியாவின் நேர்மையற்ற முறையீடு - இன்சமாம் கதறல்
2. தில்லாலங்கடி திப்புசுல்தான்
3. ஏ.ஆர்.ரகுமானின் பெங்களூர் இசை நிகழ்ச்சி - பாகம் 1
4. ஏ.ஆர்.ரகுமானின் பெங்களூர் இசை நிகழ்ச்சி - பாகம் 2

இதுவும் உங்களை சந்தோசப்படுத்தவில்லை என்றால் என்னுடைய 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்', கதையைப் படியுங்கள்.

ஆண்டவன் உங்களைக் காப்பாற்றுவானாக! :)

அடுத்து வரும் நட்சத்திரங்களுக்கு, வாழ்த்துக்களைக் கூறி விடை பெறுகிறேன்.

(அட, இந்தப் பதிவும் நீளமாகி விட்டதே, பழக்க தோஷங்க மாத்த முடியாது)


------------------ எனது பின்னூட்டத்தை இங்கே சேர்க்கிறேன் -------------------------

நான் சொன்ன விசயங்கள் சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

"எனது இடுகைகள் சில, வாசகர்களைச் சரியாக சென்றடையவில்லையோ என்ற ஐயம் இருக்கிறது". இதைத் தான் இந்தப் பதிவில் நான் கூறிய ஒரே குறை. ஆனால் இது பல அர்த்தங்களைக் கொடுக்கிறது.

1. பின்னூட்டங்கள் அதிகம் கிடைக்கவில்லை
2. இடுகைகள் படிக்கப்படவில்லை / விரும்பப்படவில்லை.

1. பின்னூட்டங்கள் அதிகம் கிடைக்கவில்லை:

முதலில், நான் பின்னூட்டங்களின் கணக்கை வைத்து, இடுகை நல்ல பதிவா, இல்லையா என்பதை முடிவு செய்வதில்லை. எனது பல பதிவுகள் (நல்ல பதிவுகளாக நான் நினைப்பது) ஒன்றிரண்டிற்கு மேல் பின்னூட்டங்களைப் பெற்றதில்லை. அதிகபட்சமாக ஒரு சில இடுகைகள் பத்து வரைப் பெற்றிருக்கின்றன. அதற்காக, நான் என்றென்றும் அது போன்ற இடுகைகளை எழுதுவதை நிறுத்துவதில்லை. இடுகைகளை விரும்பும் பலரும், பின்னூட்டங்கள் இட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. நானும் பல முறை (பல முறை என்ன, எப்போதும் இதைத் தான் செய்வேன்). பல நல்ல பதிவுகளைப் படித்துவிட்டு, பின்னூட்டம் இடாமலேயே சென்றுள்ளேன். ஆதலால், பின்னூட்டங்கள் பெறாததை ஓர் குறையாகக் கூறவில்லை.

எனது நட்சத்திர வார இடுகைகள், சில இடுகைகள் 30-50 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. அப்படியானால், நான் மகிழ்ச்சியாகத் தானே கடைசி இடுகையை முடித்திருக்க வேண்டும். 50க்கும் மேற்பட்ட இடுகையைக் கூட சிறந்த இடுகையாக நான் கூறமாட்டேன். பின்னூட்டங்களே நான் வேண்டாம், எனக்கு அவசியம் இல்லை என்ற அர்த்தம் இல்லை. பின்னூட்டங்கள் மூலம் தான் வாசிப்பவரின் மனநிலையை அறியமுடிகிறது. ஆனாலும் அது பின்னூட்டங்கள் மட்டுமே இடுகையின் தரத்தை நிர்ணயிப்பதில்லை.

இடுகைகள் படிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம், எடுத்திருக்கும் கரு, சோர்வடையச் செய்பவையாக இருக்க வேண்டும். அது தான் காரணம் என என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

"ம்ஹீம்; ஆரம்பத்தில் யாரிடமும் இருந்து எவ்விதமான எதிர்விளைவும் இல்லை. ஏதும் தவறாகச் சொல்லி விட்டோமா என யோசிக்கும் நிலைக்கு என்னைத் தள்ளி விட்டது"

எனது முதல் நாள் மனநிலையை அப்படியே இந்த வரியில் பதிந்திருந்தேன். ஒரு வாரமாக யோசித்து, அடித்த பதிவு அதிகமாகப் படிக்கப்படவில்லை என்பது எனக்கு வருத்தத்தை அளித்தது உண்மை. அதனால் தான் அதை அப்படியே பதிவுசெய்திருக்கிறேன். நான் பிராமண எதிர்ப்பைப் பற்றி கொடுத்த இடுகையை விட இந்த ஆசிரியர் இடுகையை மிகவும் மதிக்கிறேன். அந்த காரணத்திற்காகத் தான், அது சினிமா, கதை, ஜாதி, அரசியல் போன்ற மற்ற இடுகைகளால் பாதிக்கப்படக் கூடாது என எனது முதல் இடுகையாகப் பதிவு செய்தேன். ஆனால் அதைப் படித்தவர்கள் 100 பேர் கூட இருக்கமாட்டார்கள்.(Statistics வைத்து சொல்கிறேன்). இதற்கு காரணம், நான் முன்பே குறிப்பிட்டது போல, வேறு பட்ட ரசனைகள் கொண்ட வாசகர்கள் இருப்பது தான். அது போன்ற பதிவு படிக்கப்படாமல் போனதில் எனக்கு வருத்தம் இருந்தது உண்மை. ஆனால் சினிமா மற்றும் சில பதிவுகள் அதிக வரவேற்பைப் பெறுகின்றன.

எனது மனநிலை எப்படி இருந்ததோ, அதை அப்படியே எனது "நான் கற்ற பாடங்கள்", என்ற இடுகையில் ஒளிவு மறைவின்றி பதிந்திருந்தேன். இது இவ்வாறு ஆனதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதற்கான விளக்கத்தையும் எனது இடுகையில் தெரிவித்திருந்தேன். இதற்கு அர்த்தம், "நான் வருத்தப்படுகின்றேன்; கோபத்துடன் இருக்கிறேன்; மனத்தளர்ச்சி அடைந்து விட்டேன்", என்று அர்த்தம் அல்ல. வருத்தப்பட்டேன். ஆனால் யோசித்துப் பார்த்ததில் எனக்கு கிடைத்த விடைகள் இவை: (அதையும் இடுகையில் தெரிவித்திருந்தேன்)

1. சோர்வையடையச் செய்யும் தலைப்புகள் (ஒவ்வொருத்தரின் ரசனை வேறு விதமாக இருக்கிறது. நான் ஒவ்வொருவரையும் வற்புறுத்தமுடியாது. எனது ஆசிரியர்கள் இடுகையை படித்த பலருக்கு, "எனது பாடல்கள்" பதிவும், "பாடல்கள்" பதிவு பிடித்த பலருக்கு எனது ராணுவம் பதிவும் பிடிக்காமல் போவது இயல்பு. ஆனாலும், இந்தத் தலைப்புகளை நான் நிறுத்தப்போவதில்லை. நான் ஏற்கனவே சொல்லியிருந்தது போல, "பிளாக்குகள் எனது எண்ணங்களின் வடிகால்; நான் நினைப்பதை பதிவு செய்கிறேன்", அவ்வளவு தான். எனது பதிவுகளுக்கு பின்னூட்டங்களே கிடைக்கவில்லையென்றாலும் கூட நான் எனக்குத் தோன்றியதை எழுதிக்கொண்டுதானிருப்பேன்.

2. திரைப்படமும், எழுத்தும் மக்களைச் சென்று சேரவில்லை என்றால், 'எழுத்தில் குறை இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர மக்களின் மீதல்ல. கொடுப்பவர், அவரின் கருத்தை மாற்ற வேண்டும் என்று சொல்ல வரவில்லை. கொடுத்த விதத்தில் ஏதும் தவறிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

3. கொடுக்கும் விசயங்கள், கடினமான விசயங்களாக இருந்தாலும், அது கடைசி நிலை மனிதருக்கு எளிதில் புரியும் படி தெளிவாகவும், எளிமையாகவும் இருக்கும் வகையில் எழுதுவதில் தான் விசயமே இருக்கிறது.

இவை நான் கற்றுக்கொண்ட பாடங்கள். எனக்கு நன்மையளிக்கும் விதமாக நான் தெரிந்து கொண்டவை என்ற ஆக்கப்பூர்வமான, அர்த்தத்தில் கொடுத்திருந்தேன். யாரையும் குறை சொல்லும் நோக்கிலும், படித்து விட்டும் ஏன் பின்னூட்டம் இடாமல் செல்கிறீர்கள் என்ற அர்த்தத்திலும் அல்ல என்பதைத் தெளிவுபடித்த விரும்புகிறேன்.

தாராளமாக நீங்கள் வாருங்கள்; படியுங்கள்; செல்லுங்கள்.

----------------------------------------------------------------------------------

சனி, மார்ச் 11, 2006

Tower of silence - டவர் ஆஃப் சைலன்ட்ஸ்

டவர் ஆஃப் சைலன்ட்ஸ் - எனக்குப் பிடித்த திரைப்படக் காட்சிகள் (பின்னணி இசைத் தொகுப்பு):

சில நாட்களுக்கு முன்பாக, அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது ஓர் பறவையைப் பார்த்ததும் நண்பர், "அந்தக் கழுகு கட்டடத்தில் அமர்ந்தால், கட்டிடம் சிறப்பாக அமையும்", எனக் குறிப்பிட்டார். நான், "அது கழுகு அல்ல. பருந்து", என்றேன். அப்போது ஆரம்பித்தது விவாதம்.

எச்சரிக்கை: இறப்பு சம்பந்தமான தகவல்கள் பின்வருவதால், விருப்பமில்லாதவர்கள் தொடர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்காக எனக்குப் பிடித்த சினிமா காட்சிகள் (பின்னணி இசைத் தொகுப்பு) என்ற இடுகையை இட்டுள்ளேன். அதனைப் பார்க்கவும்.

விதவிதமான கழுகுகளைப் பற்றிக் குறிப்பிட்டு பேசிக் கொண்டிருக்கும் போது, நண்பர் இடையில் "பிணம் தின்னிக் கழுகு" எனக் குறிப்பிட்டார். அப்போது தான் 'டவர் ஆஃப் சைலன்ஸ்' பற்றியும் கேள்விப் பட்டேன். என்ன இது வித்தியாசமாக இருக்கிறது என செய்த "தேடலின்" முடிவு, இந்தக் கட்டுரை. நான் அதற்கு முன்பு அதைப் பற்றி நான் கேள்வி பட்டதேயில்லை. சென்னையில் இருப்போர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. இந்த வகைக் கழுகுகளைப் பள்ளியில் படிக்கும் போது, கலிங்கத்துப் பரணியில் படித்ததாக ஞாபகம். மேலும் சில ஆங்கிலப் படங்களில், போர் நடக்கும் தருவாயில் வானில் அந்த வகைக் கழுகுகள் வட்டமடிப்பதைக் காட்டுவார்கள். அந்த வகைக் கழுகுகளுக்கும், பார்சிகளுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை அறிய முடிகிறது. பார்சி மதத்தை ஸோராஸ்டிரானியசம் (Zoroastrianism) என்றும் அழைப்பது வழக்கம்.

ஈரான்

இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் உட்பட எல்லா மதத்தினரும் இறந்த பின்பு உடலை புதைப்பதோ, எரிப்பதோ தான் வழக்கம். சில நகரங்களில், குறிப்பிட்ட மதத்தினர், உடலை ஆற்றில் மிதக்க விடுவதும் உண்டு. ஆனால், பார்சிகள் மட்டும் இரண்டு முறையையும் பின்பற்றுவதில்லை. மாறாக நகரத்தின் ஓரத்தில் உள்ள உயரமானக் கட்டிடங்களில் இறந்த உடலை அப்படியே வைத்து விடுகின்றனர். இப்படி வைக்கப்பட்ட உடலை, ஒரு வகையான கழுகுகள் தின்கின்றன. சிறிது நாட்களுக்குப் பிறகு, இப்படி கழுகினால் தின்னப்பட்டது போக மீதமிருக்கும் எலும்புகள், அந்தக் கட்டிடத்தின் மையப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்படுகின்றன. இந்தக் கட்டிடத்திற்குப் 'டாக்மா' அல்லது ஆங்கிலத்தில் 'டவர் ஆஃப் சைலன்ஸ்' (Tower Of Silence') என்று பெயர். இதற்கு பார்சி மதம் சம்பந்தமாக சில விளக்கங்கள் இருந்தாலும், பரவலாக கூறப்படும் விளக்கம்; "புதைப்பதால் மண் மாசுபடுகிறது; எரிப்பதால் காற்று மாசுபடுகிறது; கங்கை போன்ற நதிகளில் உடலை வைத்துவிடுவதால், நீர் மாசுபடுகிறது; இறந்த பின்பு இந்த பூமியை மாசுபடுத்தக் கூடாது என்ற காரணத்திற்காகத் தான், இந்த முறையைப் பின்பற்றுகிறோம்", என்கின்றனர். மேலும் இவர்களின் கடவுள், 'ஆகாயம் (காற்று), நீர், பூமி (நிலம்), தாவரங்கள், கால்நடைகள், மனிதன், தீ ஆகிய ஏழு பூதங்களின் பாதுகாவலன் என்று இவர்கள் கருதுவதால், அவற்றை மாசுப்படுத்தக்கூடாது என்ற நோக்கிலும் இம்முறையைப் பின்பற்றுகின்றனர். சிலர் இதனை வாழ்வின் கடைசி தானம் என்றும் குறிப்பிடுவதுண்டு.

டோக்மாவனது, இரண்டு அடுக்குக் கட்டிடங்களைக் கொண்டது. இரண்டாம் கட்டிடத்திலுள்ள படிகள் வழியாக, குறைந்தது 25-50 மீட்டர் உயரமுள்ள, ஒரு பெரிய கோபுரத்தின் உச்சிக்குச் செல்லமுடியும். இங்கு தான் இறந்தவரின் உடல் வைக்கப்படுகிறது. இந்த கோபுரத்திற்கு உச்சிக்கும், கட்டிடத்திற்கும் செல்ல அனுமதி பெற்ற நபர்(கள்), "Carriers of the Dead" என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் சமுதாயத்திலிருந்து விலகி வாழ்பவர்கள் (இப்போது அது சாத்தியமா எனத் தெரியவில்லை). அவர்கள் தான், உடலை கோபுரத்திற்கு எடுத்துச் சென்று, அதன் உச்சியிலேயே வைக்கப்படுகின்றனர்.

சூரியன், மற்றும் கழுகுகளின் உதவியினால், இந்த உடலானது அழிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு வருடம் வரை இதற்கு அனுமதி. வழக்கமாக 50 வருடங்கள் வரை எடுக்கும் இதர முறைகளைப் போலல்லாமல், இதன் மூலம் அதிகபட்சமாக ஒரு வருடத்திலேயே கழிவுகள் அகற்றப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட டாக்மா-வை இத்தனை ஆண்டுகளாகப் பயன்படுத்தியும், 6 அடி மட்டுமே மீதங்கள் சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது.

மும்பை

இது போன்ற கட்டிடங்கள் இந்தியாவில் 4-5 இருக்கும் எனத் தெரிகிறது. இதில் முக்கியமானது மும்பையில் உள்ளது. பார்சிக்களில் பெரும்பாலோனோர் மும்பையில் வசிக்கின்றனர். சென்னையில் கூட முதலில் கட்டப்பட்டது என நினைக்கிறேன். ஆனால், இது வரை உபயோகப்படுத்தப்படவில்லை. காரணம், இங்கு வைக்கப்படும் முதல் உடல், ஓர் குழந்தையின் உடலாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால். அப்போதைய காலகட்டத்தில் அது நடக்காததால், உடலை புதைக்கும் முறையை கையாண்டனர், என அறிகிறேன். இது தான் இந்தியாவின் பல நகரங்களில் உள்ள நடைமுறை. இப்போதும் வெளிநாடுகளில் வாழும் பலர், இறந்த உடலை புதைக்கவோ, அல்லது எரிக்கவோ செய்கின்றனர். சிலர் உடலை எரித்து விட்டு, சாம்பலை மட்டும் டாக்மாவிற்கு அனுப்புகின்றனர். நான் செய்த தேடலின் விளைவாக இதற்குக் கிடைத்த உதாரணம் Persis Khambatta என்ற இந்தியர். இவர் Star Trek, Nighthawks என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார். சிலர் மட்டும், உடலை டாக்மா இருக்கும் தங்களது நாடுகளுக்கு (இந்தியா மற்றும் பாகிஸ்தான்) அனுப்பி இறுதிச் சடங்கை செய்கின்றனர். பார்சிக்களின் பிறப்பிடம் ஈரானாக இருந்தாலும் அங்கு இந்த முறை இப்போது முற்றிலும் அழிந்து விட்டது. இருக்கும் சில டோக்மாக்கள் அருங்காட்சியகங்களாக மாறிவிட்டது.

ஈரானில் முஸ்லீம்களின் படையெடுப்பிற்குப் பிறகு, அங்கிருந்த பெர்ஷியர்களிடம் இந்த வழக்கம் அமுலில் இருந்தாலும், 200 ஆண்டுகளுக்கு முன்பாக, அந்த வழக்கம் கைவிடப்பட்டது. காரணம் ஈரான் முஸ்லீம் அமைப்பினர், பெர்ஷியர்களை உடல்களைப் புதைக்கும் படி கேட்டுக்கொண்டதே காரணம் என அறியப்படுகிறது.

ஆனால் முஸ்லீம் நாடான, பாகிஸ்தானில் இன்னும் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு அங்குள்ள அமைப்பினர் எவ்வித எதிர்ப்பும் காட்டுவதில்லை. மாறாக, இந்த கட்டிடத்திற்கும், பெர்ஷியர்களின் பழக்க வழக்கங்களுக்கும் உரிய மரியாதை அளித்து வருகின்றனர்.

இந்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கே இதைப் பற்றி பல விதமான கருத்துக்கள் இருந்தாலும், இதனை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும், என நினைப்பவர்களால், இதனை பிற்கால கட்டத்தில் முற்றிலுமாக செயல்படுத்தமுடியாமல் போய்விடும் எனத் தெரிகிறது. காரணம், உடலை அழிக்கவல்ல ஒரு குறிப்பிட்ட கழுகு இனத்தின் வீழ்ச்சி. இவற்றின் எண்ணிக்கை கடந்த 10-20 வருடங்களில் 95% குறைந்துள்ளது. வேகமாக அழியும் இனங்களின் பட்டியலிலும் இந்த கழுகுகள் இடம் பெற்றுள்ளன. கேன்சர் நோய்க்கு மருந்தாக "Diclofenac" என்ற மருந்து பரவலாக உபயோகப்படுத்தப்பட்டது. இந்த மருந்தை உட்கொண்ட நபர்களினால், இந்த கழுகுகளுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இந்திய அரசும் சென்ற ஆண்டு முதல் இந்த மருந்தை விற்பனை செய்வதற்குத் தடை செய்துள்ளது. இதற்கு மாற்றாக இன்னொரு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த முடிவு எந்த அளவிற்கு கழுகு இனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் எனத் தெரியவில்லை. மிகவும் தாமதமாக எடுக்கப்பட்டுள்ள முடிவாகத் தோன்றுகிறது.

வரலாறு பாடங்களில் 'பார்சிகள்' என புத்தகத்தில் படித்துள்ளேன். ஆனால் ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை, அவர்களைப் பற்றித் துளி கூடத் தெரியாது. இவர்களின் வரலாறு கி.மு.விற்குச் செல்கிறது. ஈரானில் பெர்ஷியர்கள் என அழைக்கப்பட்டு வந்த இவர்கள், பின்னர் ஏற்பட்ட முஸ்லீம்களின் படையெடுப்பினைத் தாக்குபிடிக்கமுடியாமலும், தங்களது மதத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், கி.பி. 600 ஆம் ஆண்டு இந்தியாவின் மேற்குக் கடற்கரையான குஜராத்தை வந்தடைந்தனர். அப்போது குஜராத்தின் ஒரு பகுதியை ஆண்டு கொண்டிருந்தவர் மன்னர் சஞ்சன். அவர்களை ஏற்றுக்கொண்டு குஜராத்தில் வாழ்வதற்கும் அனுமதித்தார். இப்படியாக படிப்படியாக வளர்ச்சியடைந்து, இப்போது மீண்டும் மெல்ல வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த மதத்தை உலகம் முழுவதும் 1,50,000 பேர் பின்பற்றி வருகின்றனர். இவற்றில் பாதிக்கும் மேலே இந்தியாவில் அதிலும் குறிப்பாக மேற்குப் பகுதியில் (பம்பாய், குஜ்ராத்) பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை 1961-ல் ஒர் லட்சத்திற்கும் மேலாக இருந்தாலும், இப்போது மிகவும் குறைந்து வருகிறது. குஜராத்தில் வாழ்ந்து வந்தவர்கள், ஆங்கிலேயர்கள், பம்பாய் நகரத்தை நிர்மாணித்த போது அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பெரும்பாலோனோர் பம்பாய் நகரத்திற்குப் புலம்பெயர்ந்தனர். சென்னையிலும் சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. பார்சிக்களில் இப்போது அதிகமானோர், கலப்பு திருமணம் செய்து கொள்வதினால், இவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருவதாகவும் தெரிகிறது. இவர்கள் கலப்பு திருமணத்தை ஆதரிப்பதில்லை. மற்ற மதங்களிலிருந்து பார்சி மதத்தை தழுவுபவர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஓர் பார்சி ஆண் மட்டும் வேறு மதப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால், அதனை ஏற்றுக்கொள்கிறது. இது பெண்களுக்குப் பொருந்தாது. இப்போது ஏற்படும் திருமணங்கள் பெரும்பாலும் கலப்புத் திருமணங்களாக இருப்பதால் இவர்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாகக் குறைந்து வருகிறது. இந்தியாவில் வசிக்கும் பாதி பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனத் தெரிகிறது. எண்ணிக்கையை கனிசமாக அதிகரிக்க, பார்சிக்கள் விரைவிலேயே திருமணம் செய்ய வேண்டும் என்று பார்சி அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வந்தது முதல் இது வரை 26 குழந்தைகள் பிறந்திருப்பதாக அந்த அமைப்புத் தெரிவிக்கிறது.

இவர்களின் புனித நூல் அவஸ்தா என்றழைக்கப்படுகிறது.

இப்போது இந்த வகைக் கழுகுகளின் எண்ணிக்கை மிகக் கணிசமாகக் குறையத் துவங்கி விட்டதால், டவரில் வைக்கப்படும் உடல்கள் அழிவதற்கு பல நாட்கள் ஆகின்றன. இந்தக் குறையை நீக்க, நவீன அறிவியல் முறைப்படி மிகப் பெரிய சூரிய கண்ணாடிகளை வைத்து உடலை அழிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியம் எனத் தெரியவில்லை.

இவர்களின் எண்ணிக்கை, இந்தியாவின் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் மிகக் கீழே இருந்தாலும், இந்தியப் பங்குச் சந்தை மார்க்கெட்டில் 15% இவர்களின் கையில் தான். ரத்தன் டாட்டா, ஆதித்ய கோத்ரஜ் போன்றோர்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தொழிலதிபர்கள். மறைந்தவர்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர்கள். ஹோமி ஜகாங்கீர் பாபா (பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்தின் முதல் தலைவர்), பெரோஸ் காந்தி

குறிப்பு: கட்டுரையில் வரலாற்றுப் பிழைகள் இருந்தால் தெரிவிக்கவும். பல தகவல்களை வேண்டுமென்றே கட்டுரையிலிருந்து நீக்கியுள்ளேன்.


படித்து முடித்துவிட்டீர்களா? இதோ உங்களுக்காக எனக்குப் பிடித்த சினிமா காட்சிகள் (பின்னணி இசைத் தொகுப்பு) என்ற இடுகையையும் இட்டுள்ளேன். அதனையும் பார்க்கவும்.

நான் ரசித்த திரைப்படக் காட்சிகள் - முதல் பாகம்

நான் ரசித்த திரைப்படக் காட்சிகள் - முதல் பாகம்

இது நான் ஏற்கனவே நட்சத்திர வாரத்திற்காக முடிவு செய்திருந்த பதிவு அல்ல. இன்று பதிவதிற்காக வைத்திருந்த இடுகையை வெளியிடுவதற்கு தயக்கமாக இருப்பதால், திடீரென்று முடிவு செய்து காலையில் தயாரித்தது.

இசையும், சினிமாவும் அனைவருடைய வாழ்வின் அங்கம். இரண்டும் விரும்பாமல் வாழ்வது மிகக் கடினம். இப்போது ஒரு வயது நிரம்பாத குழந்தைகள் கூட சினிமா பாட்டிற்கு தலையாட்டி, தொலைக்காட்சிப் பெட்டியின் பக்கம் தலையைத் திருப்புவதைப் பார்க்கலாம் முடியும்.

நான் அதிகாமாக சினிமா பார்க்காவிட்டாலும் கூட, ஏறக்குறைய அனைத்து சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் விரல் நுனியில் இருக்கும். இதற்குக் காரணம், சிறுவனாக இருக்கும் போது, என்னை அதிகமாகத் தொட்ட ஊடகங்களான ரேடியோவும், செய்தித்தாள்களும். ஒரு செய்தித்தாள் விடாமல் படித்து விடுவேன். தினமலர், தினகரன், தினத்தந்தி, மாலை முரசு, மாலைமலர் என. கல்லூரி வரை இதுவே நிலை. அப்படிப்பட்ட நிலையில் சினிமா என்னைப் பாதிக்காமல் இருந்திருந்தால் தான் ஆச்சர்யப்பட்டிருப்பேன் என நினைக்கிறேன். சரி விசயத்திற்கு வருகிறேன். இதோ எனக்குப் பிடித்த சினிமாக் காட்கள் - பின்னணி இசையின் அடிப்படையில்.

1. ஜென்டில்மேன்

ஏ.ஆர்.ரகுமான் அப்போது தான் பிரபலமடைந்து வந்து கொண்டிருந்தார். ஷங்கருக்கு முதல் படம். கே.டி.குஞ்சுமோன் ஏற்கனவே வசந்த காலப் பறவைகள், சூரியன் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்திருந்தார். பாடல்கள் படம் வருவதற்கு முன்பாக பெரிய ஹிட். இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. தினமணியில் வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன். சினிமாவிற்காக வரும் 4 பக்கத்தில், மூன்றாவது பக்கத்தில் சிறந்த ஆடியோ பாடல்கள் பட்டியல் இடம்பெறும் (பத்து படங்கள்). அதில் ஒரே சமயத்தில் மூன்று படங்கள் ரகுமானுடையது முதல் மூன்று இடங்களைப் பிடித்திருந்தது. 1. கிழக்குச் சீமையிலே 2. ஜென்டில்மேன் 3. திருடா திருடா. மூன்றும் மெஹா ஹிட்.

என்னை பாதித்த படம் என்று சொல்லமுடியாவிட்டாலும் கூட, என்னை சிந்திக்க வைத்த வசனங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றன. ஒரே தினத்தில் அர்ஜூன் இரண்டு மரணங்களைச் சந்தித்து திதி கொடுத்துக் கொண்டிருப்பார். மருத்துப் படிப்பில் சேர முடியாமல், போய் விட்டதே என்ற ஆத்திரம் ஒரு புறம். அதே காரணத்திற்காக உயிரை விட்ட, நண்பனின் மரணம். தனது படிப்புச் செலவிற்கு பணம் திரட்டுவதற்காக தற்கொலை செய்து கொண்ட தாயின் இறப்பு, அமைச்சரின் ஆணவப் பேச்சு இவையெல்லாம் சேர்த்து இவரை அழுத்த உடனே அரிவாளைத் தூக்கிக் கொண்டு எழுவார்.

அப்போது நம்பியார் பேசும் வசனமும், பின்னணியில் வரும் பெண் குரலின் ஹம்மிங்கும் அருமையாக இருக்கும். அந்த வசனத்தை, அந்த பின்னணியில் கேட்பதற்கே சுகமாக இருக்கும். இப்போது கேட்டாலும் அந்தக் காட்சி ஏதோ மாதிரியான உணர்வை உண்டாக்கிவிடும்.

"இப்படி ஒன்ன மாதிரி ஒவ்வொருத்தனும் அருவாளைத் தூக்கிட்டா இந்த நாடு என்ன ஆகும்னு தெரியுமா? இவன் ஒருத்தனை வெட்டுனா போதுமா? இவனை வெட்டுனா இன்னொருத்தன் வருவான். இவங்க எல்லாம் வெட்ட வெட்ட புறப்பட்டுக்கிட்டே இருப்பாங்க. ... இன்னொரு முனியம்மா சாகக்கூடாது. இன்னொரு ரமேஷ் சாகக்கூடாது அதுக்கு என்ன வழின்னு யோசி. எப்படி போறதுன்றது முக்கியம் இல்ல. எங்க ய் சேர்றோம்ன்றது தான் முக்கியம். ... நீ போய் சேர்ற இடம் கோயிலா இருக்கட்டும்", என்று சொல்லி அறிவுரை செய்வார். டச்சிங்காக இருக்கும். சொன்னது போல இதற்கு அழகு சேர்ப்பது பின்னணி ஹம்மிங். சுனாமி நிவாரண நிதிக்காக, சன் டி.வி ஒரு நிமிடக் காட்சியை அடிக்கடி ஒரு மாதமாக ஒளிபரப்பு செய்தது. இதே ஹம்மிங்கை அதற்கு உபயோகப்படுத்தியிருந்தது, ஒரு வாரமாக அது எந்தப் படம் எனத் தெரியாமல் விரக்தியில் அலைந்து கொண்டிருந்தேன். பின்னர் தான் அது ரகுமான் படம். ரகுமான் படத்தில் என்ன படம் என ஒவ்வொன்றாக யோசித்து கண்டுபிடிக்க முடிந்தது.

2. அண்ணாமலை

இந்தப் படம் ஒரு கமர்ஷியல் சினிமாவாக இருந்தாலும், அதில் இடம்பெற்ற சிலக் காட்சிகள் இப்போது பார்த்தாலும் நன்றாகத் தானிருக்கின்றன. ஏலத்தில் கேட்ட தொகையை கட்டுவதற்காக தனது வீட்டை வங்கியில் அடமானம் வைத்திருப்பார், சரத்பாபு. அப்பொழுது, அதனை வங்கியிலிருந்து வாங்கி வரும் ஜனகராஜ், ரஜினியிடம் கொடுப்பார். ரஜினி அதை வாங்கிவிட்டு, மனோரமாவைப் பார்பார். குஷ்பூவைப் பார்ப்பார். ஜனகராஜைப் பார்ப்பார். பின் மனோரமாவை அழைத்து அந்தப் பத்திரத்தை சரத்பாபுவிடம் கொடுக்கச் சொல்வார். அப்போது, மனோரமா ரஜினியிடம் "நீ கோடி கோடியாகக் கொட்டும் போது கூட இவ்வளவு சந்தோசப்படலை...", என்று கூறிவிட்டுச் செல்வார். அந்தக் காட்சியும், அதில் இடம் பெறும் வயலின் இசையும் அற்புதமாக இருக்கும். அதே வயலின் இசை, படத்தின் பிற்பகுதில் மூன்று-நான்கு இடங்களில் இடம்பெறும். (ஒன்று மகளை அடித்து விட்டு மனோரமாவிடம் பேசும் போது, ரஜினி மகள், குஷ்பூவிடம் ஒரு பையனின் கார் கண்ணாடியை உடைத்து விட்டேன் எனக் கூறுமிடம்).

தேவா, அதே வயலின் இசையை, அப்படியே மாற்றாமல் பாட்ஷா படத்திலும் உபயோகப்படுத்தியிருந்தார் (ரஜினி - சரண்ராஜ் காட்சிகள்).

3. காதல் மன்னன்

இதைப் பற்றி ஏற்கனவே எனது இனியவை நாற்பது இடுகையிலும் தெரிவித்திருந்தேன். இரண்டாம் பாதியில் அஜீத்தும் - மானுவும் (சரி தான் என்று நினைக்கிறேன்).\ சந்திக்கும் சில காட்சிகளில் இந்த வயலின் இசை இடம் பெறும். அற்புதமாக இருக்கும். மானு பத்திரிக்கை கொடுக்க வரும்போது, அதற்கு முன்பாக மெஸ்ஸில் சந்திக்கும் போது என ஞாபகம் இருக்கிறது.

4. கன்னத்தில் முத்தமிட்டால்

'சட்டென நனைந்தது நெஞ்சம்' என்ற அருமையான குறும்பாடல், இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தது; மாதவன், சிம்ரனிடம் மணம் புரிந்து கொள்ள சம்மதம் கேட்குமிடத்தில். அருமையான பாடல், மின்மினி பாடியது. இது தான் மின்மினி ரகுமானுக்குக் கடைசியாகப் பாடியது என நினைக்கிறேன். அதன் பிறகு அவர் குரல் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார் என்று நினைக்கிறேன்.

இதனைக் கேட்க விரும்புவோர், எனக்கு மின்னஞ்சல் தட்டி விடுங்கள். அந்த காட்சியும், பாடலும் மிக அருமையாக இருக்கும்.

5. முதல்மரியாதை

இதில் இரு காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இரண்டுமே பெரும்பாலும் அனைவரும் தெரிவிக்கும் காட்சி தான். 1. சிவாஜி கல்லைத் தூக்கும் காட்சி. 2. சிவாஜி ராதா வீட்டில் சாப்பிடும் காட்சி.

முதல் காட்சியில், ஒரு அருமையான கிடார் இசையும், கிளாப் இசையும் இடம்பெற்றிருக்கும். இரண்டாம் காட்சியில் சிவாஜி ராதாவிடம் சாப்பாட்டின் அருமையை விவரிக்கும் போது, "பூங்காற்று திரும்புமா" எனற பாடல் முதலில் சோகமாக பின்னணியில் இசைக்கப்படும் (வயலின் என்று நினைக்கிறேன்), சிறிது விநாடிகள் கழித்து மீண்டும் வேகமாக அதே ராகம், தபேலாவில் இசைக்கப்படும். அந்தக் காட்சி முடியும் தருவாயில் மீண்டும் அதே ராகம் புல்லாங்குழலில் இசைக்கப்படும். ஒரே ராகம் மூன்று வித்தியாசமான மனநிலைக்கு ஏற்றபடி, மூன்று இசைக்கருவில். அழகாக இருக்கும்.

6. இருவர்

இந்த திரைப்படம் சரியாக ஓடாவிட்டாலும் அற்புதமான இயக்கத்திற்காகவும், ஒளிப்பதிவிற்காகவும் (ஈஸ்ட்மென் கலர் போலிருக்கும்), இசைக்காகவும் அடிக்கடி பார்ப்பேன். இதில் ஓரிடத்தில் தனது மனைவி போலிருக்கும் சினிமா நடிகை ஐஸ்வர்யா ராயை, மோகன்லால் காரில் வைத்து ஏற்றிச் செல்வார். அப்போது ஐஸ்வர்யா, மோகன்லாலிடம் 'என்னை புஷ்பா எனக் கூப்பிடுங்கள்', என்பார். அதற்கு மோகன்லால் மறுக்கவே, காரில் இருந்து குதித்து விடுவார். குதித்தவரைக் காப்பாற்றி கட்டி அணைப்பார், மோகன்லால். அப்போது ஹரிணியின் குரலில் அற்புதமான ஓர் பின்னணி இசை ஒலிக்கும்.

"பூவோடு வண்டு கண் தூங்கிப் போன நேரத்தில்
ஆறோடு அலைகள் கண் தூங்கிப் போன நேரத்தில்
விண்ணோடு மீன்கள் கண் தூங்கிப் போன நேரத்தில்
என்னோடு காதல் உன் காதல் மலர்ந்து கொண்டதே

ல ல லா..... லலலா ..........."

என்று ஒரு நிமிடம் வரும். அற்புதமாக இருக்கும்.

இரண்டாம் காட்சியில், மோகன்லாலின் பண்ணையார் வேஷம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு இன்னொரு நபரிடம் கொடுக்கப்படும். அவர் போலீஸ் வேடம் தரிப்பார். அப்போது ஒரு கிடார் இசை, சீரியஸாக வரும். அற்புதம் அற்புதம்.

7. 7G ரெயின்போ காலனி.

ரவி, நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுவார். சோனியாவின் தம்பியை அவர் ஆட்டத்திற்கு சேர்க்க மறுக்கவே, சோனியா சில சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு தனியாக விளையாடுவார். அப்போது பின்னணியில் P.B.ஸ்ரீனிவாஸின் குரலில் வரும் பாடல் அற்புதமாக இருக்கும்.

"இது என்ன மாற்றம் இறைவனின் தோற்றம்.
இருவிழிப் பார்வை விளக்குகள் ஏற்றும் ...."

என்று ஆரம்பித்து அடுத்த காட்சியில் ரவியின் வீட்டில் மீண்டும் தொடரும்.

"அணைக்கின்ற போது, எரிகின்ற தீயோ
பாதையின் ஓரம் பனித்தின்னும் பூவோ
இதயத்தின் ஓரம் தினம் தினம் ஏக்கம்"

எனச் செல்லும். அற்புதம். என்னவொரு இசை, குரல்!

இதற்காகவே இந்த படம் வந்த சமயத்தில் ஞாயிறன்று டி.வி முன் அமர்ந்து அடிக்கடி சேனல்களை மாற்றிக் கொண்டிருப்பேன். எப்படியாவது இரண்டு, மூன்று முறைவாது வந்துவிடும்.

குறிப்பு: அவசரத்தில் வெளியிட்ட பதிவு. இதே போல குறிப்பிடப்பட வேண்டிய பல காட்சிகள் உள்ளன (பின்னணி இசையில் மட்டுமே). உங்களுக்கு விருப்பமிருந்தால், இன்னும் பல பாகங்களாகத் தொடர்கிறேன்.

வெள்ளி, மார்ச் 10, 2006

உயிர்; மற்றவர்களுக்காக இழப்பதற்காகவா?

உயிர்; மற்றவர்களுக்காக இழப்பதற்காகவா?:

என்னாலும் பல சமயங்களில் ஒத்துக்கொள்ள முடியாததது. தேசப் பற்று என்ற பெயரில் காரணமில்லாமல் இரு தரப்பினரும் உயிரை விடுவது என்பது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று. ஆனாலும் நாம் என்னதான் இந்த உலகமே ஓர் விழல்; ராணுவம், போர் எல்லாம் அரசியல், வீண் வேலை; ஒற்றுமையாக வாழ்வதற்குப் பதில் சில தனிப்பட்ட மனிதர்களின் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஏற்படும் அவசியமில்லாத நிகழ்வு என்றெல்லாம் கூறினாலும் ராணுவ வீரர்களின் பணியினை பாராட்டாமல் இருக்க முடியாது. இப்போதிருக்கும் சூழலில், நமக்கு போரில் ஆர்வம் இல்லாவிடிலும், உடன்பாடில்லாவிட்டாலும், வெறுத்தாலும் கூட, ராணுவத்தின் / ராணுவ வீரர்களின் (தரைப்படை, விமானப் படை, கப்பற்படை) பணியின் அவசியத்தை நீங்கள் மறுக்க முடியாது. காரணம்; நாம் விரும்பாமலேயே நமக்குக் கிடைத்து விட்ட எதிரிகள். அவர்களிடமிருந்து இப்போதைக்கு நம்மைக் காத்துக் கொள்ள அவர்களின் பணி நமக்கு இன்றியமையாதது.

நமது உடலுக்கு ஏதாவது சிறு தீங்கு ஏற்பட்டாலும் கூட நாம் இதுவரை பேசிய தத்துவங்களும், குடும்பமும், நண்பர்களும் அனைத்தும் மறந்து, நமது உடலைப் பேணுவதிலேயே நமது கவனம் அனைத்தும் செல்லும். எப்போதடா இந்த சிக்கலில் இருந்து வெளியேறி முன்பு போல ஆரோக்கியமாக இருப்போம் என நினைக்க ஆரம்பித்து விடுவோம். அப்படிப்பட்ட உடலை, மற்றவர்களின் நலனுக்காக விட்டுக் கொடுக்க முன் வருதல் தியாகம் தானே? இது போன்ற மனப்பான்மை அனைவருக்கும் வருமா என்றால் நிச்சயமாக இல்லை. ராணுவத்தில் இணைவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பெருமை, வசதியின்மை, குறைந்த படிப்பு, உண்மையான தேசப் பற்று இப்படி பல காரணங்கள் இருந்தாலும், வலி அனைவருக்குமே ஒன்று தான்.

சமயங்களில் நமக்கு கிடைத்த நல்ல வாழ்வு அவர்களுக்குக் கிடைக்கவில்லையே எனவும் நினைக்கத் தோன்றும். நல்ல வாழ்வு என்பது வீடு, பணம், கார், நல்ல மனைவி என்பது மட்டுமல்ல. இவற்றை விட முக்கியமானது, சுதந்திரம்.

நீங்கள் விரும்பும் நேரம் வரை உறங்க முடியும்; நினைத்த மாத்திரத்தில் திரைப்படத்திற்குச் செல்ல முடிகிறது; நண்பர்களைச் சந்திக்க செல்ல முடிகிறது; ஷாப்பிங் செல்ல முடிகிறது; இல்லையென்றால் 10 நாட்கள் விடுமுறை எடுத்து விட்டு ஊட்டியோ, கொடைக்கானலோ செல்ல முடிகிறது. அந்த சுதந்திரம் அவர்களுக்குத் துளி கூட இல்லை. அந்த சுதந்திரத்தை இழக்க யாருக்குத் தான் மனது வரும்? திரைப்படங்களுக்கு நான் பெரும்பாலும் இரவு நேரக் காட்சிகள் தான் செல்வது வழக்கம். திரைப்படம் முடிய 1 மணி ஆகிவிடும். வீட்டிற்கு வரும் வழியில், சுமார் 4 கி.மீட்டர் தூரத்திற்கு ராணுவப் பயிற்சி மையம் இருக்கிறது. 1 மணிக்குக் கூட கோட்டான்கள் போல அந்த வாயில் கதவினருகில் சில வீரர்கள் காத்திருப்பார்கள். இதே தான், 4 கி.மீ தூரத்திற்கும் உள்ள ஒவ்வொரு நுழைவாயிலும்!. இத்தனைக்கும் அவர்களுக்கு பெங்களூரில் பணியிடம் கிடைத்தால் சொர்க்கம் போலிருப்பார்கள் (இங்கு பணிபுரியும் சில குடும்பத்தினரிடம் பேசியதில் அறிந்து கொண்டது). அந்த சொர்க்கமே இப்படியென்றால், மற்ற இடங்கள்? காஷ்மீர் போன்ற இடங்கள்?

நமக்கு தொண்டு செய்யும் கடமை அவர்களுக்கு இருக்கிறது; நமக்காக உயிர்விடும் கடமையும் அவர்களுக்கு இருக்கிறது என சமயத்தில் சிலர் அவர்களை அடிமைகள் போல நினைப்பவர்களும் இருக்கிறார்கள். 'இன்னைக்கு எத்தனை பேர் இறந்தார்கள்' என நம்பர்களின் அடிப்படையில் கேட்பவரும் இருக்கிறார்கள். 'தீவிரவாதிகள் அட்டாக்கா? 5 தீவிரவாதிகள் செத்துட்டாங்களா? ஆனா நம்ம சைடில ஒரு 10 பேராவது செத்திருபாங்களே?', எனக் கேட்பவர்களும், நினைப்பவர்களும் இருக்கிறார்கள். வலி, பாதிக்கப்படுபவருக்கு எவ்வளவு அருகிலிருக்கிறோம் என்பதைப் பொறுத்து தான் பார்ப்பவர்களுக்கும் தெரியும்.

நமது மாநிலத்தின், பெரும்பாலான பகுதிகளில், ஒருவர் ராணுவத்தில் இருக்கிறார் என்றால், "ஓ கொஞ்சம் கஷ்டப்படுகிற குடும்பம் போல இருக்கு, அப்ப அவர் குடிப்பாரா? ஓ.சிக்கு ரம் கிடைக்குமே, செம வாழ்வு" என்று தான் பலரும் அவரைப் பற்றி நினைப்பர். நமது ஊர்களில் பெரும்பாலும் பணக்காரர்கள் ராணுவத்திற்கு செல்வதில்லை; ஓரளவு படித்தவர்களும் செல்வதில்லை; இது தவறு என்று சொல்லவில்லை. இதற்கு விதிவிலக்காக பல கிராமங்கள் இன்றும் தமிழகத்தில் உண்டு.

வட இந்தியாவில் இன்னும் அந்த நிலை வரவில்லை; ஆர்வமாக பலர் ராணுவத்தில் சேர்கின்றனர். அவர்களுக்கு ஓரளவிற்கு (தமிழகம் அளவிற்கு மோசமில்லை) நல்ல மரியாதை இருக்கிறது. பணமிருப்பவர்கள்; படித்தவர்கள் என பல தரப்பினரும் ராணுவத்தில் சேர்வதைப் பார்க்கலாம்.

என்னுடன் உடன்பணிபுரியும் நண்பி ஒருவர், ராணுவத்தில் பணிபுரியும் நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அவர்கள் படும் அவஸ்தை என்னென்ன? இவர் (நண்பி) சில ஆண்டுகளுக்கு முன்பாக, பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல நேரிட்டது. அவரது கணவருக்கோ போஸ்டிங் காஷ்மீரில். இவரால் அவரது கணவருக்கு ஃபோன் செய்ய முடியாது. அவரது கணவர் தான், இவரைத் தொடர்பு கொள்ள முடியும்; ஆனால் அதற்கு அவர் 60 கி.மீ வரை பயணம் செய்து வர வேண்டும். அந்தத் தருணத்தில் வேறு, எல்லைக்கோட்டில், இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் ஏதோ ஓர் அசாதரண சூழ்நிலை காரணமாக குவிக்கப்பட்டனர். இரண்டு மாதங்களுக்குப் பின்பாக விலக்கப்பட்டது வேறு விசயம். பேட்டரலிங் என்று ஏதாவது வந்தால், அடர்ந்த காடுகளில் 5-7 நாட்கள் வரை சுற்றும் நிலை வரும். அவரிடமிருந்து சில நாட்கள் கழித்து தொலைபேசி அழைப்பு வராமல் போனால், இவரிடமிருந்து வார்த்தைகளே வராது. நரக வேதனை.

இவர் இந்தியாவிலிருந்து, அவரது கணவருக்கு ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் போஸ்டிங் கிடைக்கும் போது, கணவர் இருக்கும் இடத்திற்கே சென்று தங்கும் வாய்ப்பு கிடைக்கும். அவரிடம், அவர் கணவருடன் பணிபுரிவர்கள் அடிக்கடி கூறும் வாசகம் "Madam, Live the life fullest". அடுத்த நாள் என்பதே கேள்விக் குறி, என்றால் வாழ்வில் சுவாரசியம் ஏது? நாமெல்லாம், வாழும் சூழலில் சிறிதளவு, மாறுதல் ஏற்பட்டால் கூட உடனே மாற்று வழி என்ன என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் அவர்கள் விரும்புகிறார்களோ, இல்லையையோ அதைத் தொடர்ந்து தானாக வேண்டும்.

சமீபத்தில் NatGeo சேனலில், இந்திய விமானப்படைக்கு பணியில் சேர்வதற்கான தகுதிப் போட்டிகளை காணும் வாய்ப்பு கிடைத்தது (இரண்டு எபிசோடுகள் தான் பார்க்க முடிந்தது). அதில் சேர்வதற்கு, இளைஞர்கள் (பெண்கள் உட்பட) காட்டிய ஆர்வம் மலைக்க வைத்தது. எவ்வளவு கடினமான போட்டிகள்? பல போட்டிகள் நினைவில் இல்லை ஒன்றைத் தவிர.

பெரிய நீச்சல் குளம். சுமார் நூறடி (இல்லையென்றால் குறைந்தது எழுபந்தைந்து அடி இருக்கும்) உயரத்தில் ஓர் ஆண் போட்டியாளர் நபர் நிற்கிறார். அப்படியென்றால் ஆழத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

ஒன். டூ. திரி என்று அமைப்பாளர் சொல்ல உடனே அவர் மேலிருந்து குளத்திற்குள் குதித்து, சில விநாடிகளில் நீந்தி மேலேறி வருகிறார்.

அடுத்ததாக ஓர் பெண்.

ஒன். டூ. திரி என்று சொல்ல உடனே அவரும் மேலிருந்து குதிக்கிறார்.

குதித்த பெண் மேலே வரமுடியாமல் போகவே அங்கேயே தயாராகக் காத்திருக்கும், போட்டி அமைப்பாளர்கள் அவரைக் காப்பாற்றி மேலே அழைத்து வருகின்றனர்.

அடுத்ததொரு பஞ்சாபி பெண். தண்ணீரை வெறித்துப் பார்க்கிறார். ஒன். டூ. என எண்ணுகிறார்கள். அவரின் கால்கள் குதிப்பதற்குத் தயாராக இல்லை என அவரது முகம் சொல்கிறது. திரீ என்று சொல்கிறார் போட்டி அமைப்பாளர். அந்தப் பெண் குதிக்கவில்லை.

சில விநாடிகளுக்குப் பிறகு மற்றொரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இம்முறை மீண்டும் அமைப்பாளர் ஒன். டூ. திரி என்று சொல்கிறார்.

இப்போது அந்த்ப் பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர். என்னால் முடியாது என அழுது கொண்டே திரும்புகிறார்.

திரும்பிய பெண், "I'm sorry. என்னால் நிச்சயமாக முடியாது; எனக்கு நீச்சல் தெரியாது" (என்று கூறியதாகத் தான் எனக்கு ஞாபகம்) என்று அழுது கொண்டே கூறியதில் மதிப்பெண்கள் பெற முடியவில்லையே என்ற ஏமாற்றமும், விமானப் படைக்கு சேர முடியாமல் போய்விடுமோ என்ற வருத்தமும் தெரிந்தது.



ஆனால் அதே ராணுவத்தில் தற்போதிருக்கும் வேலைப் பளுவும், அரசியலும் வீரர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க வைத்துள்ளது. இதற்கு காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் நிகழும் தற்கொலைகளை ஆதாரமாகக் கூறலாம். சென்ற ஆண்டு மட்டும் 1000 பேர் தற்கொலை செய்துள்ளதாக ஓர் பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது (டிசம்பர் மாதம் எங்கோ பார்த்தது). இதற்குக் காரணமாக, பெரும்பாலும் மேலதிகாரிகளின் அடக்குமுறை தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இப்படி அடக்குமுறையிலும், விடுப்பு கிடைக்காமல் தொடர்ச்சியாகப் பணிபுரிய செய்யச் சொல்லி கொடுக்கும் நிர்பந்தம். இப்படியாக இருக்கும் சமயங்களில், வீட்டிலிருந்து ஏதாவது ஓர் கெட்ட செய்தியைத் தாங்கி வரும் ஓர் கடிதம் அவர்களை தற்கொலைக்குத் தள்ளுகிறது எனக் குறிப்பிடுகின்றார்.

பயிற்சியிலேயே, Trainee-களுக்கு, அந்த அதிகாரி கூறிய முதல் வாசகம் (NatGeo), "I'm ..... From today you are going to be very afraid of me. Understand?", என்பது தான்.

பெங்களூரிலிருந்து சென்னைக்கு செல்லும் போது, என்னுடைய பெட்டியில் பல விமானப் படை வீரர்கள் பயணம் செய்தனர். (பெங்களூரில் ஏதோ ஓர் போட்டிக்காக கலந்து கொண்டு திரும்பினர்). அவர்களுக்கு வயது 20-23 வரை இருக்கலாம். நன்றாக ஆடிப்பாடிக் கொண்டு வந்தவர்கள், திடீரென்று அமைதியாயினர். காரணம் அவர்களின் மேலதிகாரி. சிறிது நேரம் கழித்து, ஒருவரிடம் பேச்சுக் கொடுத்த போது, அவரின் பேச்சில் விரக்தி அப்பட்டமாகத் தெரிந்தது. இந்தப் பணியில் சிரமங்கள் அதிகமிருப்பதாகவும் வெளிநாட்டில் சென்று படிக்க என்னென்ன வழிகள்; எவ்வளவு பணம் செலவாகும் என்பதைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டார். உங்களால், விலகி படிக்க செல்ல முடியுமா எனக் கேட்டதற்கு, '3 (அல்லது 2) ஆண்டுகளுக்கு முன்பாக பணி நிரந்தரமாக்கப்படுவதற்கு முன்பாக, விரும்பினால் விலகி சென்று விடலாம். எனது நண்பன் அது போல சென்ற ஆண்டு சென்றான்', என்பது போலக் கூறினார்.

நண்பியின் கணவர் ஒரு முறை, எப்படி குழுக்களை போருக்குத் தயார்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். வீரர்கள் போரில் முனைந்து சண்டை போடுவதற்கு தேசபக்தி மட்டும் அல்ல. எப்போதுமே குழுக்களை மொழிவாரியாகத் தேர்ந்தெடுப்பது தான் வழக்கம். அப்படி செய்யும் போது தான் வீரர்கள் மனம் விட்டு பேசி, இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அப்படி பகிர்ந்து கொண்ட நண்பர் மரணமடைய நேர்ந்தால், உடனிருப்பவர்கள், அதற்காக பழி வாங்க வேண்டும் என்ற ஆத்திரத்துடன் போர் புரிவர்' எனக் குறிப்பிட்டார்.

நான் எப்போதே படித்த மின்னஞ்சலைப் பற்றிக் கூறி இந்தப் பதிவினை முடித்துக் கொள்கிறேன்.

போரிலிருந்து நாடு திரும்பிய போர் வீரன், தனது பெற்றோருக்கு போன் செய்கிறான்.

"அம்மா நான் நாடு திரும்பி விட்டேன். வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறேன்"

"சந்தோசம். உனக்காக எல்லாம் காத்துக் கொண்டு இருக்கோம்"

"ஆனா அம்மா, என்னோட என் நண்பனும் வர்றான். என் கூட கொஞ்ச நாள் தங்கப் போறான்"

"அப்படியா சந்தோசம். அவனையும் கூட்டிக் கொண்டு வா. அவனுக்குத் தேவையான வசதி செய்து கொடுக்கிறேன்"

"ஆனா ஒரு சிக்கல். அவனுக்கு போர்ல, கண்ணிவெடி மீது கால் வைச்சதுல ஒரு காலும், ஒரு கையும் போயிடுச்சு. அவனால எங்கேயும் போக முடியாது. அவனை நம்ம கூடவே வச்சுக்கணும்னு ஆசைப்படுறேன்"

"அது எப்படிப்பா முடியும். கை, கால் இல்லாதவனை நம்ம கூடவே வச்சுக்க முடியுமா? அவனுக்குன்னு நல்ல இடம் பார்த்து செய்து கொடுக்கலாம்'

"இல்ல. அவன் என்னோட உயிர் நண்பன். என்னோட தான் இருக்கணும்னு ஆசைப்படுறேன்"

"அந்த மாதிரி இடைஞ்சலை வச்சிட்டு நாம எப்படி நிம்மதியா வாழ முடியும். நீ அவன மறந்துட்டு வீட்டுக்கு வா. அவனுக்கென்று ஏதாவது வழி இருக்கும். ஆண்டவன் பார்த்துப்பான்" என அவரது அப்பா சொல்ல மகன் தொலைபேசி இணைப்பைத் துண்டிக்கிறான்.

மறு நாள் காவல்துறையினர், அவனது பெற்றோரைத் தொடர்பு கொண்டு, "உங்கள் மகன் நேற்று உயரமான கட்டிடத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்" எனத் தெரிவிக்கின்றனர்.

பதறியடித்துக் கொண்டு, மருத்துவமனை சென்று மகனின் உடலைப் பார்க்கின்றனர். உடலைப் பார்த்த அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி. அவர்கள் மகனுக்கு ஓர் கையும், காலும் இல்லாததைக் கண்டு.

இந்தப் பதிவு ஓர் பார்வை மட்டுமே. கருத்தோ, தீர்வோ சொல்வதற்காக இல்லை.

ஒரு பக்கம், தேசபக்தி என அவர்களிடம் ஆயுதம் திணிக்கும் நாட்டு மக்கள்; அவர்களை பகடைக்காய்களாக மாற்றி அலையவைக்கும் அரசியல்வாதிகள் (படை குவிப்பது, வாபஸ் வாங்குவது, போரிட வைப்பது, வெளிநாடுகளுக்கு உதவியாக சமயங்களில் படைகளை அனுப்பி வைப்பது, ...); துன்புறுத்தும் சில அதிகாரிகள்; வேலைப் பளு என அவர்களின் கஷ்டங்கள் நீண்டுகொண்டே போகிறது.

உயிர் மற்றவர்களுக்காக இழப்பதற்காகவா? கண்டிப்பாக இல்லை. ஆனாலும் அவர்கள் சூழ்நிலைக் கைதிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தேசபக்தி என்ற பெயரால் நம்ப வைத்து, பலிகடாவாக்கியிருக்கிறோம். நீங்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் எப்படி அனுபவித்து வாழ்கிறோர்களோ அதே போல அவர்களுக்கும் அந்த ஆசை இருக்கும். நம்மால் ராணுவத்தில் சேர முடியாது; போரில் கலந்து கொள்ள முடியாது; நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ய முடியாது; ஆனால் நமக்காகவும், நாட்டிற்காகவும் இந்த தியாகத்தை செய்பவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்போம். (யாரும் இப்போது கொடுக்கவில்லை என்பதல்ல என் வாதம்; இந்த வரி, கொடுக்காதவர்களுக்கு மட்டும்). போரில் இறக்கும் போது கொடுக்கும், 5 லட்சமோ, 10 லட்சமோ மட்டும் அவர்களின் இழப்பிற்கு (அல்லது தியாகத்திற்கு) ஈடாகிவிடாது.

வியாழன், மார்ச் 09, 2006

இனியவை நாற்பது

இனியவை நாற்பது:

நட்சத்திரமாக இருந்து விட்டு, 'எனக்குப் பிடித்த பாடல்கள்' என்று அடுக்காவிட்டால் என்ன நியாயம்? மனிதனுக்கு எப்போதும் சிறிது தலைக்கணம் உண்டு. என்னோட புது காரைப் பார்த்தாயா? என்னோட வீட்டைப் பார்த்தாயா? இந்த டிரெஸ் எப்படி இருக்கு? என்னோட தேர்வு எப்படி என்று ஒவ்வொரு விசயத்திலும் அலட்டிக்கொள்வான்; துணையை தேர்ந்தெடுப்பது உட்பட. அதே தான் இங்கும் பொருந்தி வருகிறது. இதோ என்னுடைய ரசனை அலட்டல்!

என்னுடைய பதிவுகளிலேயே மிகவும் சிரமப்பட்டது இந்த பதிவிற்குத் தான். எதை விட்டு விடுவது; எதை சேர்ப்பது எனத் தெரியாமல் குழம்பி அரை மனதுடன், இந்தப் பட்டியலை பதிவிடுகிறேன். சிறந்த 20 பாடல்களை தொகுக்க வேண்டும் என்று தான் ஆரம்பித்தேன். ஆனால் பாடல்களைத் தேர்ந்தெடுத்து பார்த்தால் பட்டியலின் அளவு 150 க்கும் அதிகமாக சென்று விட்டது. சில படங்களிலிருந்து இரண்டுக்கு மேல் கூட பாடல்கள் இடம் பெறத் துவங்கின. மேலும் அந்த பாடல்கள் பொதுவாக அனைவருமே குறிப்பிடும் பாடல்கள் தான். ஆகையினால் அவற்றை தவிர்த்து விட்டேன். ஆனாலும் அந்த படங்களிலிருந்தே சில பாடல்கள் மீண்டும் இந்த பட்டியலில் இடம் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை. கடைசியில் நாற்பதோடு நிறுத்தி விட்டேன். உங்களுக்கு அனைத்துப் பாடல்களையும் பார்ப்பதற்கு நேரம் மற்றும் பொறுமை இருக்குமா எனத் தெரியவில்லை.

புன்னகை மன்னன், அக்னி நட்சத்திரம், அம்மன் கோயில் கிழக்காலே, சிப்பிக்குள் முத்து, மெளன ராகம், பூவிழி வாசலிலே, இதயக் கோயில், புதுப் புது அர்த்தங்கள், ஜானி, வைதேகி காத்திருந்தாள், முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே, இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், தாளம், அலைபாயுதே, மின்சாரக் கனவு, கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன், ரோஜா உள்ளிட்ட சிறந்த படைப்புகளையும், மெட்டி ஒலி காற்றோடு, அழகிய கண்ணே (உதிரி பூக்கள்), இது ஒரு பொன் மாலைப் பொழுது, பூவே செம் பூவே, வெள்ளைப் புறா ஒன்று, நான் தேடும் செவ்வந்திப் பூவிது, காதல் கசக்குதய்யா போன்ற பாடல்களையும் தவிர்த்து தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவற்றையும் சேர்த்திருந்தால், இது போல இன்னும் மூன்று பதிவுகள் வேண்டும் எனக்கு. வரிசை எண், பாடலின் தரத்தைப் பொறுத்து அல்ல. இந்தப் பாடல்களைத் தர வரிசையில் அடுக்கவும் முடியாது.

இது வரை நான் கேட்ட பாடல்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த முதல் 40 பாடல்களின் பட்டியல் இதோ:

குறிப்பு: எல்லா பாடல்களுக்கும் "ராகம் அருமை; இசை மிக அருமை" என்ற வார்த்தைகளை சேர்த்துக் கொள்ளவும்.

1. தேவனின் கோவில் மூடிய நேரம் தெய்வமே

திரைப்படம்: அறுவடை நாள்
பாடியவர்கள்: சித்ரா, இளையராஜா
இசை: இளையராஜா

இறைபணியில் இருந்து சிறிது விலகி காதல் பாதையை நாடும் ஓர் பெண், காதலனின் திருமணத்தினால் ஏற்படும் ஏமாற்றத்தை வெளிபடுத்தும் அற்புதமான பாடல். அழகான வரிகள். பாடலின் ஆரம்பத்தில் 'பிரேமம் பிரேமாதி பிரேம பிரியம்' என இளையராஜாவின் அற்புதக் குரலுடன் ஆரம்பிக்கும் பாடல், சித்ராவினை நோக்கிச் செல்வது அழகு.

ஒரு வழிப் பாதை என் பயணம்
மனதில் ஏனோ பல சலனம்
கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா?
ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
அழுதிட கண்ணில் நீருக்குப் பஞ்சம்
நானோர் கண்ணீர் காதலி.

தன்னுடைய மந்திரக் குரலால், பாடல் வரிகளுக்கு தேவையான அழுத்தத்துடன், உணர்ச்சிப் பெருக்குடன் பாடியிருப்பார் சித்ரா.

2. குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே

திரைப்படம்: ஆண்பாவம்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், சித்ரா
இசை: இளையராஜா

படமாக்கப்பட்ட விதத்திற்காகவும் (முக்கியமாக சீதாவிற்காக), இசைக்காகவும், பெண் குரலுக்காகவும் இந்த பாடலை மிகவும் பிடிக்கும். சீதா ரொம்ப சின்னப் பெண்ணாக, அருமையாக செய்திருப்பார்.

அன்னைக்கொரு எழுத்தை எனக்கெழுதிப் புட்டான்
இன்னைக்கதை அழிச்சா எழுதப் போறான்?
பெண்ணே அவன் மேல பழியை சொல்லாதடி
ஆண்பாவம் பொல்லாது கொல்லாதடி

அருமையான ராகம். சித்ராவின் குரல் தேன்.

தவறோ சரியோ விதி இது தான்
சரி தான் சரி தான் வழக்கெதுக்கு?

விதி அப்படி? வேறு வழியில்லாமல், கிடைத்த பொருளின் சிறப்பம்சத்தை மட்டும் பார்த்து மகிழ்வது தான் வழி என்பது போல் சீதாவின் ரியாக்சன் இருக்கும். சீதா நன்றாகச் செய்திருப்பார்.

3. பூங்காற்றிலே

திரைப்படம்: உயிரே
பாடியவர்கள்: உன்னிமேனன், சொர்ணலதா
இசை: ஏ.ஆர்.ரகுமான்

இந்தப் பாடலைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? உயிரை உலுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலின் ஆரம்பத்தில் ஓரே ஓர் இசைக் கருவியின் இசை மட்டும் வரும். பின்னணியில் சொர்ணலதா 'கண்ணில் ஒரு வலி இருந்தால், கனவுகள் வருவதில்லை' என்பார். சொர்ணலதா அதே வரிகளை இரண்டாம் முறை சொல்லும் போது, இன்னொரு இசைக் கருவி சேர்ந்து, சுருதியை உயர்த்தும். மூன்றாம் முறை சொல்லும் போது, இன்னொரு இசைக் கருவி சேர்ந்து கொண்டு, பல்லவியை ஆரம்பிப்பது அருமையாக இருக்கும். உன்னிமேனனுக்கு இதை விட சிறந்த பாடல் இது வரை கிடைக்கவில்லை என நினைக்கிறேன். ரகுமானின் சிறந்த மெலோடி பாடலாக இதைத் தான் சொல்வேன். வைரமுத்திடமிருந்து முத்து முத்தான வரிகள்!
முதல் சரணம் ஆரம்பிக்கும் முன் வயலினில் ஆரம்பித்து கிதாருக்கு மாறி டிரம்ஸூடன் முடிப்பது அருமை.

4. இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை

திரைப்படம்: திருவிளையாடல்
பாடியவர்கள்: டி.ஆர்.மகாலிங்கம்
இசை: கே.வி.மகாதேவன்

என்னவொரு தெய்வாதீகமான இசை, குரல்!

இந்தப் படத்தின் பாடல்களை இந்த தலைமுறை கூட ரசிக்கும் படி இசையமைத்த திரு. கே.வி.மகாதேவன் பெரிய இசைஞானியாகத் தானிருக்க வேண்டும். எனக்கு அவரைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. தில்லானா மோகானாம்பாள் கூட இவர் இசையில் உருவானது என நினைக்கிறேன்.

'உயிர் மயக்கம் நாதப் பாட்டினேலே', என்று அவர் பாடும் வரிகளிலும் நமக்கும் மயக்கம் ஏற்படுகிறது.

பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன' என விழிக்குமிடத்தில், திரு. கே.வி.மகாதேவன் இசையும், மகாலிங்கத்தின் தமிழும் அழகாக சங்கமிக்கின்றன.

தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ?
அன்னைத் தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கில்லையோ?
வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா.......
உன் ஊருக்குப் பழி நேர்ந்தால், உனக்கின்றி எனக்கில்லை

என இறைவனிடம் டி.ஆர்.மகாலிங்கம் முறையிடுமிடம் உயிரோட்டத்துடன், அற்புதமாக இருக்கும். என்ன ஒரு பாடல், இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ இப்படி ஒரு பாடலுக்காக?

5. செண்பகமே செண்பகமே

திரைப்படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
பாடியவர்கள்: சுனந்தா, மனோ
இசை: இளையராஜா

ராமராஜனுக்குப் பேர் வாங்கி கொடுத்த படம். ராமராஜனின் எளிமையான பாடி லாங்குவேஜ் எனக்குப் பிடிக்கும். இந்தப் பாடலில் சொல்லுமளவிற்கு பெரிதாக அவர் நடிக்கவில்லை என்றாலும் (அவர் எப்பய்யா நடிச்சார் என நீங்கள் கூறுவது கேட்கிறது), இந்தப் பாடலின் சூழலும், கதைக் களமும், இசையும் பிடித்திருந்தது. தூங்கிக்கொண்டிருந்தாலும் (காதில் விழுந்தால்) எழுந்திருந்து கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. எத்தனை முறை டி.வியில் பார்த்தாலும் சலிக்காத படம். வினுசக்ரவர்த்தியும், செந்தாமரையும் கலக்கியிருப்பார்கள். ஒரே காட்சியில் செந்தாமரை எல்லாரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டிருப்பார். அடிக்கடி நான் உச்சரிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. மனோவிற்கு பேர் வாங்கிக் கொடுத்த பாடல்களில் முதலிடம் இதற்கு.

6. ஆணென்ன பெண்ணென்ன

திரைப்படம்: தர்மதுரை
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா

இளையராஜாவின் இசைக்காகவும், எஸ்.பி.பியின் குரலுக்காகவும், சிறந்த பாடல் வரிகளுக்காகவும் இந்தப் பாடலைப் பிடிக்கும். வாழ்க்கை வேகமாக சுழன்று கொண்டிருக்கும் போது, "Wait Wait நீ என்ன செய்ற' என யோசிக்கத் தூண்டும் பாடலிது. பணம், அதிகாரத்த்தை விட மனித உறவும், பாசமும் மிக முக்கியம் என்பதை அழகாகச் சொல்லிய பாடல். ஆரம்பத்தில் Party Music-ஐ மீறிக் கொண்டு ராகம் போடும் எஸ்.பி.பியின் குரல் என்னே அழகு!

எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா இன்றும் என்றும் சோகமில்லை
கன்றை விட்டுத் தாய் பிரிஞ்சு காணும் சுகம் ஏதுமில்லை
ஊருக்கும் காருக்கும் பேருக்கும் இஷ்டப்பட்டு
வாழ்கின்ற வாழ்வுக்கைக்கு என்றைக்கும் அர்த்தமில்லை!

என்ன வரிகள்! என்ன ஒரு அருமையான ராகம்! "எண்ணங்கள் சேர்வது தானே" கடினம் வாழ்வில்!!! அது மட்டும் அமைந்து விட்டால் வாழ்வில் ஏது சிக்கல்.

7. மனதில் ஒரே ஒரு பூ பூத்தது, மலரும் நினைவுகள் நான் சொல்வது

திரைப்படம்: என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
பாடியவர்கள்: சுசீலா
இசை: இளையராஜா

காதலனின் குழந்தை, "நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?" என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாய் அமையும் பாடல். இந்தப் பாடலை ஒரு முறை தான் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. சுகாசினியின் நடிப்பும், பாடலின் மூலமாக நாயகனை கோழை என நாயகி சாடும்போது விஜயகாந்தின் ரியாக்சனும் நன்றாக இருக்கும் (நன்றாக இருந்ததாக நினைவு). நன்றாக எடுத்திருந்தார் மனோபாலா. விஜயகாந்த் நன்றாக செய்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.

'தேவனின் கோவில்' பாடலுக்கு, சித்ரா என்றால், இந்தப் பாடலுக்கு சுசீலா. Low Pitch-ல் அருமையாக பாடியிருப்பார் சுசீலா. சுசீலா அந்த காலங்களில் பாடியதை விட, இளையராஜாவிற்கு பாடிய பாடல்கள் தான் அருமை. (சிப்பிக்குள் முத்து, இளமை காலங்கள், எங்க ஊர் காவல்காரன், கற்பூர முல்லை, பிரியா உட்பட)

மணி மார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்

என்ற வரிகளை மெதுவாக, உருகிப் பாடியிருப்பார்.

இறுதியில் வரும் புல்லாங்குழல் அருமை. மனது எந்த நிலையில் இருக்கும் போதும் கேட்க முடியக் கூடிய பாடல்களில் இதுவும் ஒன்று.
எப்படித் தான் இளையராஜாவிற்கு இந்த மாதிரியான ராகங்கள் தோன்றுகின்றனவோ?

8. இசையில் தொடங்குதம்மா

திரைப்படம்: ஹே ராம்
பாடியவர்கள்: அஜய் சக்ரவர்த்தி
இசை: இளையராஜா

ராஜாவின் பாடல் என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது இந்த பாடல் தான். இந்தப் படம் வருவதற்கு முன்பாக வந்த டிரைய்லரில் இந்தப் பாடலின் ரிக்கார்டிங் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடல் பதிவு செய்யும் போது கமலஹாசன் ரிக்கார்டிங் தியேட்டரில் உணர்ச்சிவசப்பட்டு தாளம் போடுவார். இதற்காகவே காத்திருந்து டிரெய்லரைப் பாப்பேன். (ராஜ் டிவியில் மட்டும் தான் அப்போது டிரெய்லர்கள் ஒளிபரப்பப்பட்டன). பாடலின் உயிரோட்டத்திற்குக் காரணம் இசையிலும், குரலிலும் இருக்கிறது. ஏன் அஜய் சக்ரவர்த்தி வேறு பாடல்கள் தமிழில் பாடவில்லை என இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் தோன்றும்.

நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்
உயிர்களே உயிர்களே உலகிலே
இன்பத்தை தேடி தேடி தேகத் தீ வந்ததே

உருகியிருப்பார்.

9. ஒரு கணம் ஒரு யுகமாக தோன்ற வேண்டுமோ

திரைப்படம்: நாடோடி தென்றல்
பாடியவர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

இந்தப் பாடலை நான் பார்த்ததில்லை. சோகத்தின் விளிம்பில் பாடப்பட்டது போல் தெரிந்தாலும், இந்தப் பாடலில் ஏதோ ஓர் மந்திர சக்தி இருக்கிறது. ஜானகியை விட இளையராஜாவின் குரல் மிக அருமையாக இருக்கும். நடுவில் ஐந்து விநாடிகள் தாமதித்து (3:12-3:17) ராஜா பாடும் அந்த வரிகளும் அதைத் தொடர்ந்து வரும் வயலினும் அருமை.

10. ஆசாதி

திரைப்படம்: போஸ் த ஃபார்காட்டன் ஹீரோ
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

ரகுமான் பாடிய மற்றுமொரு சிறந்த பாடல். இதனை பெங்களூர் இசை நிகழ்ச்சியில் ரகுமான் பாடிய விதமே அலாதி. இந்தப் பாடலில், 'ஆசாதி' என குரலை உயர்த்தும் போது, நண்பர்கள் அனைவரும் ஹேய் என ஆரவாரம் செய்த போது, அமைதியாகப் பாடிக் கொண்டிருந்தவர் லேசாக புன்னகையை மட்டும் சிந்திவிட்டு அடுத்த வரிக்குச் சென்று விட்டார். பார்ப்பதற்கே பரவசமாக இருந்தது. ஹிந்தி எனக்குப் புரியாது; ஆனாலும் இந்தப் பாடல் ஓரளவிற்கு முழுவதும் பாடிக் கொண்டிருப்பேன். என்னுடைய Portable MP3 பிளேயரில் எப்போதும் அழிக்காமல் வைத்திருக்கும் பாடல்.

11. வாணும் மண்ணும் ஒட்டிக் கொண்டது

திரைப்படம்: காதல் மன்னன்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா
இசை: பரத்வாஜ்

நிறைய பேருக்கு இந்தப் பாடல் பிடிக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடலை எனக்கு நிறையவே பிடிக்கும். சூழ்நிலையால் கட்டுண்ட காதலர்கள் பாடும்படி அமைந்திருக்கும் இந்தப் பாடலுக்கு வைரமுத்துவின் வரிகள் பலம். பரத்வாஜ் திறமையான இசையமைப்பாளர். ஆனால் அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமைவதில்லை. இந்தப் பாடலில் என்னவொரு இசையைத் தருவித்திருப்பார்!. அதுவுமில்லாமல், இந்தப் படத்தில் அஜீத்தும், அந்தப் பெண்ணும் சந்திக்கும் போது பின்னணியில் வரும் வயலின் இசை அருமையோ அருமை. அதற்காகவே இந்தப் படத்தை பார்பேன்.

பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பது இல்லை
உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை

காலம் சொல்லுவதை காதல் கேட்பதில்லை
ஆசை என்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை

ஓர் நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ?

12. பூவே பூச்சூடவா

திரைப்படம்: பூவே பூச்சூடவா
பாடியவர்கள்: சித்ரா
இசை: இளையராஜா

டி.டியில் இந்தப் படத்தை முதன் முதலில் பார்த்ததிலிருந்தே இந்தப் பாடல் மிகவும் பிடித்து விட்டது. பிரிந்து சென்று விட்ட பேத்தியின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பாட்டியினைப் பற்றிய பாடல்.

'அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
....
இந்தக் கண்ணீரில் சோகமில்லை
இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

அன்பின் ஆழம். சித்ராவின் குரல் பற்றி நான் சொல்லவும் வேண்டுமா?. கல்லூரி சென்ற பின், நான் பதிந்த முதல் கேசட்டின் நான்காவது பாடலாக இடம் பிடித்திருந்தது.

13. இரு பூக்கள் கிளை மேலே - கண்ணீரே கண்ணீரே

திரைப்படம்: உயிரே
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

ரகுமானின் அட்டகாசமான பாடல்களில் இதுவும் ஒன்று. அவருடைய பாடல்கள் என்றாலே இதுவும், வெள்ளைப் பூக்களும் தான் எனக்கு ஞாபகத்திற்கு வரும். தீ போன்ற இசையும், புயல்காற்று போல வரிகளும் சேர்ந்தொலிக்கும் இந்தப் பாடலுக்கு, தீயில் வழிந்த தேன் போல ரகுமானின் குரல். இரண்டாம் சரணத்திற்கு முன்பாக வரும் டிரம்ஸும், பாடலின் பின்னணியில் வரும் கிரிக்கெட் பூச்சியின் சத்தமும் மிகவும் பிடிக்கும்.

கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்.

உன்னோடு நான் கொண்ட நான் பந்தம்
மண்ணோடு நான் கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்

14. பூங்குருவி பாடடி சுபராகம் தேடித் தான்

திரைப்படம்: சுந்தர காண்டம்
பாடியவர்கள்: மனோ
இசை: பாக்யராஜ்

இங்கே குறிப்பிடப்பட்ட பாடல்களில், என்னிடம் இல்லாத ஒரே பாடல் இது தான். ஆதலால், இந்தப் படம் எப்போது ஒளிபரப்பப்பட்டாலும் தவறாது பார்த்து விடுவேன்; இந்தப் பாடல், படத்தில் இரண்டு முறை இடம் பெறும். தந்தையின் மரணத்தினால் வாடும் நாயகியை ஆறுதல் படுத்துவதற்காக பாக்யராஜீம், நாயகி மரணத்தின் வாயிலில் இருப்பதை அறிந்து வருத்தப்படும் பாக்யராஜீற்கு அதே பாடலை திரும்ப நாயகி பாடிக்காட்டுவதும் உணர்வு பூர்வமாக இருக்கும். அடிக்கடி உச்சரிக்கும் பாடல்களில் ஒன்று.

பூப்பதொரு காலம்
காய்ப்பதொரு காலம்
இலையுதிர்காலமும் ஓர் காலம்
என்றும் இல்லையே கார் காலம்

காலம் ஓர் ஓலை
கொண்டு வரும் நாளை
நடப்பது காலத்தின் ராஜாங்கம்
மீறிட யாருக்கு அதிகாரம்

பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. யாராக இருந்தாலும், அவருக்கு ஓர் சபாஷ். அதை இனிய இசையின் மூலம் வெளிப்படுத்திய பாக்யராஜிற்கும் தான். இந்தப் பாடல் யாரிடமாவது இருந்தால் அனுப்பவும். சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பரிடம் இருந்து கிடைத்தது. ஆனால், ஒரு பக்கம் மட்டும் தான் பாடல் ஒலிக்கிறது.

15. அஞ்சலி

திரைப்படம்: அஞ்சலி
பாடியவர்கள்: குழுவினர்
இசை: இளையராஜா

எனக்கு ஞாபகம் தெரிந்து, பாடல்களின் மீது ஆர்வம் ஏற்பட்டது இந்தப் படத்திலிருந்து தான். சிறுவர்களை மிக சாமர்த்தியமாகப் பயன்படுத்தி, பாட வைத்திருப்பர் ராஜாவும், ரத்னமும். அஞ்சலி இல்லாமல், மணிரத்னத்தின் இயக்கம் முழுமை பெற்றிருக்காது என்பது என் கணிப்பு. இளையராஜாவின் 500 வது படம் எனவும் நினைவு.

16. கடவுள் உள்ளமே கருணை இல்லமே

திரைப்படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
பாடியவர்கள்: லதா ரஜினிகாந்த், குழுவினர்
இசை: இளையராஜா

நாம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என நம்மை ஓர் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிவிடும் பாடலிது. எப்போது கேட்டாலும், பார்த்தாலும் நம்மை கல்லாக்கி விடும் பாடல். படமாக்கிய விதமும் அருமையாக இருக்கும். என்னுடைய முதல் பத்து பாடல்களில் இந்தப் பாடலுக்கு கண்டிப்பாக இடம் உண்டு.

கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை.

ஊருக்கொரு வானம் இல்லையே
இறைவா உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதி இல்லையே
அது போல் உயிர் பிறப்பில்

உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உனக்கே நன்றி சொல்லுவோம்

ஜீவனுள்ள ராகம். எவ்வளவு நிதர்சமான உண்மை.

நாமெல்லாம் எத்தனை முறை உணவருந்துவதற்கு முன்பாக இறைவனுக்கு நன்றி சொல்லியிருப்போம்? அதாவது... கிடைத்த உணவின் அருமை தெரிந்து, உண்டிருப்போம்?

17. கேட்கலியோ கேட்கலியோ

திரைப்படம்: கஸ்தூரிமான்
பாடியவர்கள்: திப்பு, மஞ்சரி
இசை: இளையராஜா

இதைப் பற்றி ஏற்கனவே என்னுடைய இன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பாடலுக்கு அழகே ஆரம்பத்தில் வரும் இசையும், குழுவினரின் தெளிவான குரலும் தான். சமீபத்தில் வந்த பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் இது. என்னை பல முறை வார இறுதி நாட்களில் சன் மியுசிக்கின் மூலமாக அதிகாலையில் (9 மணியளவில்) எழுப்பிய பாடல். கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தப் பாடல் போல, வேறெந்த பாடலின் ராகமும், பாடிய விதமும் என்னைக் கவரவில்லை. சமீபத்தில் இப்படி ஒரு கோரஸைக் கேட்டதில்லை.

18. வெள்ளை பூக்கள்

திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

அதிகமாக பேசப்படாத, ஆனால் தெய்வாம்சமான பாடல் (குரல் உட்பட). சமத்துவத்தையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் பாடல். படத்தில் பாடல் ஒலிக்கும் இடம் அருமை. ஆரம்பத்தில் வரும் கிடார் இசை இனிமை. ரகுமானின் குரல் Fabulous! அவர் ஓர் ஓர் ஜீனியஸ் எனத் பற்றித் தெரிந்து கொள்ள இந்த ஒரு பாடல் போதுமானது. இதே படத்தில் (படத்தில் மட்டும்) வரும் 'சட்டென நனைந்தது' என்ற குறும்பாடலை மிகவும் பிடிக்கும்.

19. சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை

திரைப்படம்: ஜெயராம்
பாடியவர்கள்: சுமங்கலி
இசை: அனூப் ரூபன்ஸ்

இந்தப் பாடல் ஏன் பிடித்ததென்று தெரியவில்லை. அழகான இசையும், பாடகியின் குரலும் காரணமாக இருக்கலாம். சுமங்கலி என்ன அருமையாக பாடியிருக்கிறார்? சமீபத்தில் இவர் சில பாடல்கள் தமிழிலும் பாடியிருக்கிறார். பாடலின் இறுதியில் வரும் ஹம்மிங் அழகாக இருக்கும் (4:10 - 4:28)

20. பூவே வாய் பேசும் போது

திரைப்படம்: 12B
பாடியவர்கள்: மஹாலக்ஷ்மி அய்யர், ஹரீஸ் ராகவேந்திரா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

இந்தப் படத்தில் பாதித்த ஒரே கதாபாத்திரம் சிம்ரனது மட்டும் தான். ஆரம்பத்தில், மருத்துவமனையில் உறவினர் அல்லது காதலரின் இறப்பினால் அழுது கொண்டே தோழியின் தோளில் சாயும் சிம்ரன், படம் முடியும் தருவாயிலும் அதே போல ஷாமை இழந்து தோழியினை நோக்கி அழுது கொண்டே வருவது டச்சிங்காக இருக்கும். படம் நன்றாக ஓடாவிடிலும், இவரின் கதாபாத்திரத்திற்காகவும் (பார், ஆக்ஸிடெண்ட்க்கு முன்பாக, மருத்துவமனையில் சிம்ரன் பேசுவது), இந்தப் பாடலுக்காகவும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை மட்டும் முப்பது முறையாவது பார்த்திருப்பேன். விசிலுடன், பாடலின் ஆரம்பமே அட்டகாசம். மஹாலக்ஷ்மியின் குரல் மிகப் பொருத்தம்.

21. உன் பேரைச் சொன்னாலே

திரைப்படம்: டும் டும் டும்
பாடியவர்கள்: சாதனா சர்கம், உன்னிகிருஷ்ணன்
இசை: கார்த்திக் ராஜா

கார்த்திக் ராஜா, ஓர் சிறந்த இசையமைப்பாளர். ஆனால் ஏனோ அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டன. அவரின் ஆல்பம் படத்திலும் அனைத்துப் பாடல்களும் சிறப்பாக இருக்கும். இந்தப் பாடலைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமிருக்காது. உங்களில் பெரும்பாலோனோர்க்கு பிடித்த பாடலாகவும் இருக்கும் என எண்ணுகிறேன். என்னுடைய இருபது பாடல்கள் பட்டியலில் கண்டிப்பாக இந்தப் பாடலுக்கு இடமுண்டு. சாதனா சர்கத்தின் குரல் அருமை. கடைசியில் இழுக்கும் இழுவை சிறப்பாக இருக்கும்.

22. வெள்ளி மலரே
திரைப்படம்: ஜோடி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், மஹாலக்ஷ்மி அய்யர்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, ஓரளவு சுமாரான பாடலைக் கேட்டாலும் ரசித்துக் கேட்போம். ஏனென்றால், பேருந்தில் வேறெந்த வேலையும் இருக்காது. கவனம் முழுவதும் பாடலின் மீது இருக்கும். சில நேரங்களில் நல்ல பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்து விடுவார்கள்; அய்யோ வீடு வரப்போகிறதே ஊர் இன்னும் சிறிது தூரம் இருக்கக் கூடாதா இன்னும் சில பாடல்களைக் கேட்டு விட்டுப் போகலாம் எனத் தோன்றும். அலுவலகத்தில் சிறந்த பாடலைக் கேட்கும் போது கூட, கவனிப்பு வேலையின் மீது இருக்கும். நான் கல்லூரியில் படித்த(?) நாட்களில், ஒரு குறிப்பிட்ட பேருந்தில் இந்தப் படத்தின் பாடல்களை ஒலிபரப்புவார்கள். இந்தப் பாடலைக் கேட்கவேண்டும் என்பதற்காகவே அந்தப் பேருந்திற்காக காத்திருந்து ஏறுவேன். முழுவதுமாக கவர்ந்த பாடல். ஆனால் இதன் ஆரம்பத்தில் வரும் 'தாகாட தாகாட' இனிமையாக இருக்கும். அது முடிந்ததும் வரும் இசையும், மஹாலக்ஷ்மியின் குரலும் சிறப்பு.

23. ஒரு பொன் மானை நான் காண

திரைப்படம்: மைதிலி என்னை காதலி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர் படம் ஒன்று கூட நான் பார்த்ததில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில காட்சிகள் பார்த்ததுண்டு. ஆனால் தமிழில் இசைப் புரட்சி செய்தவர் என்று கூட இவரைக் குறிப்பிடலாம். இவரின் (அந்தக் காலப்) பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது. இசையில் என்ன ஒரு திறமை இவருக்கு?. இவரின் பல பாடல்கள் பிடித்திருந்தாலும், இந்தப் பாடலை முக்கியமாகப் பிடிக்கக் காரணம்,

தடாகத்தில் மீன் ரெண்டு
காமத்தில் தடுமாறி
தாமரைப் பூ மீது விழுந்தனவோ
இது கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ

என்று சரணத்தில் வரும் ராகமும், எஸ்.பி.பின் குரலும். ஆனால், மைதில் என்னை காதிலி, திரைப்படத்திற்குப் பின்பாக வந்த இவரது படங்களில் பாடல்கள், மிகவும் கவரவில்லை ஏனோ தெரியவில்லை.

24. மெதுவா மெதுவா இந்த காதல் பாட்டு

திரைப்படம்: அண்ணா நகர் முதல் தெரு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
இசை: எஸ்.சந்திரபோஸ்

பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை பாடலின் சூழலைப் பற்றி. மற்றுமொரு காதல் பாடல் தான். ஆனால் எப்போது கேட்டாலும், கேட்பவரை மயக்கிவிடும் பாடல். அசத்தும் இசை, குரல்.

25. சொல்லத் தான் நினைக்கிறேன்

திரைப்படம்: காதல் சுகமானது
பாடியவர்கள்: சித்ரா
இசை: பாலசேகரன்

சித்ராவும், இசையும், பாடல் வரிகளும் தான் இந்தப் பாடல் பிடித்துப் போனதற்குக் காரணம். படமாக்கிய விதமும் நன்றாக இருக்கும் (சில இடங்களில் சிநேகாவின் நடனத்தைத் தவிர்த்துப் பார்த்தால்). முதல் பத்து இடங்களுக்குள் இந்தப் பாடல் கண்டிப்பாக உண்டு.

....
தேகம் தேயும் நிலவானது
காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட
கற்சிலை போல நெஞ்சில் அசையாதது'

ராகமும், சித்ராவின் குரலும் அப்பப்பா! (அருமை, இனிமை, சிறப்பு, அழகு அதிகமாக உபயோகிப்படுத்தியாகி விட்டது. வேறு வார்த்தைகள் எனக்குத் தெரியவில்லை. என்ன செய்வது?)

26. வேறென்ன வேறென்ன வேண்டும்

திரைப்படம்: மின்னலே
பாடியவர்கள்: ஹரிணி, உன்னிகிருஷ்ணன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

வசீகரா பாடலை விட, இந்தப் பாடல் எனக்குப் பிடிக்கக் காரணம் ஹரிணியின் குரல், அசத்தும் பீட்.

27. மன்றம் வந்த தென்றலுக்கு

திரைப்படம்: மெளனராகம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா

இந்தப் பாடலைப் பற்றி நான் எதுவும் கூற வேண்டியதில்லை. ராஜாவிற்கு ஜே!

28. வெட்டி வேரு வாசம் விடலை புள்ள நேசம்

திரைப்படம்: முதல் மரியாதை
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
இசை: இளையராஜா

உயிரை உருக்கும் இசை. என்ன ஒரு நடிப்பு? நடிகர் திலகத்தின் நடிப்பு வாழ்க்கையில் முக்கியமான திரைப்படம். உயிரோட்டமான கதை. இந்தப் படத்தின் கதையையும், இசையையும், நடிகர்களின் நடிப்பையும், பாடல் வரிகளைப் பற்றி பேச வேண்டுமானால் 100 பதிவுகள் வேண்டும். இது போன்ற அருமையான படங்களைக் கொடுத்த பாரதிராஜா, இப்போது திணருவதைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தது. பூங்காற்று ஆகட்டும், ராசாவே உன்னை நம்பி, அந்த நிலாவத்தான், ஏறாத மலையேற ஆகட்டும், ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதத்தில் சிறந்தது.

29. வந்தே மாதரம் - Revival

திரைப்படம்: வந்தே மாதரம் (ஆல்பம்)
பாடியவர்கள்: சுஜாதா, கல்யாணி மேனன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

சாதாரணமாக இந்திய வானொலி நிலையங்களில் ஒலித்து வந்த வந்தே மாதரம் பாடலை, திரும்ப அருமையாக இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானின் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சுஜாதாவின் குரல், பாடல் முழுவதும் தவழ்ந்து தேன் போல் பாய்கிறது. குழுவினருடன், கல்யாணி மேனன் பாடலை ஆரம்பிக்கும் வரிகளே உணர்ச்சிவசப்பட வைக்கின்றன. மெதுவாக செல்லும் பாடல் (2:03 முடிய), ஒரு அழகான பியானோ இசைக்குப் பிறகு (2:22) சுருதியை உயர்த்தி மீண்டும் ஆரம்பிப்பது அழகு! ஏதோ ஓரு சுதந்திர தினத்திற்கு (திருச்சியோ, மதுரை வானொலி நிலையமோ ஒலி பரப்பிய) இந்தப் பாடலை ஒரு வீட்டின் வாசலிலேயே நின்று பாடலைக் கேட்டது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

சுஜாதா எனக்குப் பிடித்த பாடகிகளில் ஒருவர். ஏனோ இப்போது பாடுவதற்கு அவருக்கு, ஏ.ஆர்.ரகுமான் வாய்ப்பு கொடுப்பதில்லை. ஹரிணியும், கண்களால் கைது செய், நியூ படங்களுக்குப் பின் எந்தப் (ரகுமான்) படத்திலும் பாடவில்லை.

30. மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்

திரைப்படம்: அழகு நிலா (1962)
பாடியவர்கள்: டாக்டர். சீர்காழி கோவிந்தராஜன்
இசை: கே.வி.மகாதேவன்

பிடித்தமான மற்றுமொரு தத்துவப் பாடல். ஆனால் இம்முறை எனக்குப் பிடித்த பாடகர் டாக்டர். சீர்காழி அவர்களின் குரலில். சீர்காழி அவர்களின் குரலில் தமிழ் வார்த்தைகள் ஒலிப்பதைக் கேட்தற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். உயிரோட்டமில்லாத பாடல்களைக் கூட, டாக்டர். சீர்காழி அவர்களின் குரலில் கேட்டால் பிடித்துப் போய் விடும். இவரின் விநாயகர் துதிப் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகைத் தெரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை
.....
மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை.

நான் "இப்படியிருந்திருந்தால்" என ஆசைப்படும் விசயங்களில் ஒன்று. ஏ.ஆர். ரகுமானின் இசையில் டாக்டர். சீர்காழி கோவிந்தராஜன் பாடுவது. எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்?

31. விழிகளின் அருகினில் வானம்

திரைப்படம்: அழகிய தீயே
பாடியவர்கள்: ரமேஷ் விநாயகம்
இசை: ரமேஷ் விநாயகம்

இந்தப் பாடலை பிடிக்கவில்லை எனக் கூறுபவர்கள் யாராவது இருப்பார்களா?

அலை கடலாய் இருந்த மனம்
துளிதுளியாய் சிதறியதே
ஐம்புலனும் என் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே

அருமையான் ராகம். ரமேஷ் விநாயகத்திற்கு நல்ல வாய்ப்புகள் அமைந்து, இன்னும் பல படங்கள் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். கடைசியாய் 'தொட்டி ஜெயாவில்' 'யாரிடமும்' என்றோர் அருமையான பாடலைப் (ஹரிணியுடன் இணைந்து) பாடினார். இப்போது எந்த படத்தில் பணிபுரிகிறார் எனத் தெரியவில்லை.

32. அம்மா என்றழைக்காத

திரைப்படம்: மன்னன்
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: இளையராஜா

இந்தப் பாடலைப் பற்றி சொல்ல எந்த வார்த்தையும் இல்லை. அது சிறப்பாக இருந்தது. இது சிறப்பாக இருந்தது எனக் கூற முடியாது. வேண்டுமானால் 'இசைத் தமிழ்' போல இது ஓர் தெய்வாதீசயமான பாடல் எனக் கூறலாம். ஜேசுதாஸ் விட யாராவது இதை சிறப்பாக பாடியிருக்க முடியுமா? சந்தேகம் தான்.

படத்தின் கிளைமேக்ஸிற்கு முன்பாகவும், ரஜினி பண்டரி பாயை சக்கர நாற்காலியில் வைத்து சுற்றும் போதும் மீண்டும் இந்த பாடல் ஒலிக்கப் பெறும். மிக அருமையாக இருக்கும்.

33. வா வா கண்ணா வா

திரைப்படம்: வேலைக்காரன்
பாடியவர்கள்: சித்ரா, மனோ
இசை: இளையராஜா

இந்தப் பாடல் எனக்கென்னவோ மிகவும் பிடித்து விட்டது. காரணம் இசையா அல்லது சித்ராவா என எனக்குத் தெரியவில்லை. எந்த மனநிலையில் இருந்தாலும், இந்தப் பாடலை கேட்க முடியும்.

34. பழமுதிர்சோலை

திரைப்படம்: வருஷம் 16
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: இளையராஜா

இளமை துள்ளும் பாடல் - வித்தியாசமாக ஜேசுதாஸின் குரலில், ராஜாவின் இசையில். எந்த மனநிலையில் இருந்தாலும், இந்தப் பாடலை கேட்க முடியும்.

35. நினைத்து நினைத்துப் பார்த்தேன்

திரைப்படம்: 7G ரெயின்போ காலனி
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல்
இசை: யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜாவிற்குள் இப்படி ஒரு மென்மையான உணர்வா என கேட்க வைத்த பாடல். படம் வருவதற்கு முன்பாகவே நூறு தடவைக்குப மேல் கேட்ட பாடல், படம் பார்த்த பின் இந்தப் பாடலைத் தவிர மூன்று நாட்களுக்கு வேறேந்த பாடலையும் கேட்கத் தோன்றவில்லை. ஆரம்பத்தில் வரும் பியானோ இசையும், நடுவில் வரும் வயலின் இசையும், ஸ்ரேயாவின் கொஞ்சும் தமிழும் அழகு. நா.முத்துக்குமாரின் வரிகளைப் பற்றி நான் கூறத் தேவையில்லை. நான் வயதானவர் என்று நினைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன்பு தான் பார்த்தேன். வயது அவருக்கு முப்பது கூட இருக்கும் எனத் தோன்றவில்லை.

36. உன்னை ஒன்று கேட்பேன்

திரைப்படம்: புதிய பறவை
பாடியவர்கள்: சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

சுசிலாவின் குரலா? அல்லது சரோஜாதேவியின் அழகா? எது இந்தப் பாடலில் சிறப்பு என சொல்லமுடியாத அளவிற்கு இனிமையான பாடல். இந்த இரண்டையும் விட நான் இந்தப் பாடலில் விரும்பிப் பார்ப்பது சிவாஜி கணேசன். மனிதர் சாக்ஸ போனை உண்மையான கலைஞன் போலவே வாசித்திருப்பார் (2:20 - 2:32). வாசித்து முடிந்ததும், அந்த வாத்தியக் கருவியை கீழே வைத்து விட்டு, ஸ்டைலாக மேடையை நோக்கி கையை சொடுக்கிக் கொண்டே நடப்பார். அதுவுமில்லாமல் முதல் சரணத்திற்கு முன்பாக பியானோவை சொடுக்கிக்கொண்டே வாசிப்பார். எனக்கு சிரிப்பு வந்து விடும். அருமையாக இருக்கும்! இரவில் 11 மணிக்கு மேல், வாரம் ஒரு முறையாவது சன் மியுசிக்கில் இந்தப் பாடல் இடம் பெற்று விடும்.

37. நிலா காய்கிறது... நிறம் தேய்கிறது

திரைப்படம்: இந்திரா
பாடியவர்கள்: ஹரிணி
இசை: ஏ.ஆர்.ரகுமான்

முழுமையான மெல்லிசை. எவ்விதமான Beat-ம் இல்லாமல், Loop-ம் இல்லாமல், வந்த இதமான மெல்லிசைப் பாடல். ஹரிணியின் முதல் பாடல் என்று கூட நினைக்கிறேன். சிறு குழந்தை போலவே பாடியிருப்பார். ஆரம்பத்தில் வரும் ஹரிணியின் ஹம்மிங் பிரமாதமாக இருக்கும்.

இந்த பூமியே பூவனம்
உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம்
உங்கள் தேவையைக் கேளுங்கள்!

அருமை இல்லையா?

38.. மேகம் கருக்கையிலே

திரைப்படம்: வைதேகி காத்திருந்தாள்
பாடியவர்கள்: இளையராஜா
இசை: இளையராஜா

எனக்குப் பிடித்தமான பாடகர் ஜெயச்சந்திரன் பாடிய சிறந்த இரண்டு பாடல்கள் இந்தப் படத்தில் இருக்கும் போது, இந்தப் பாடலை தேர்ந்தெடுக்கக் காரணம், இளையராஜாவின் குரலும், ஜனரஞ்சகமான இசையும் தான். பல்லவி முடிந்ததும் வரும் புல்லாங்குழல், இனிமையாக இருக்கும்.

39. காளிதாசன் கண்ணதாசன்

திரைப்படம்: சூரக்கோட்டை சிங்கக் குட்டி
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், சுசீலா
இசை: இளையராஜா

ஆரம்பமே இளையராஜாவின் (இது இளையராஜாவா அல்லது ஜெயச்சந்திரன் தானா எனத் தெரியவில்லை) அற்புதமான ஹம்மிங்கில் பாடல் துவங்கும். இளையராஜாவைத் தவிர அப்படி ஹை-பிட்சில் வேறு யாரும் பாட முடியாது என்ற நம்பிக்கையில் அது இளையராஜா என சொல்கிறேன். தவறாக இருந்தால், தெரிந்தவர்கள் சொல்லவும். அந்த ஹம்மிங்கிற்காகவே இந்தப் பாடலைக் கேட்பேன். ஜெயச்சந்திரன் தமிழில் பாடியது சில பாடல்களே ஆனாலும், பல சிறந்த பாடல்களைப் பாடியுள்ளார். அதில் இதுவும் ஒன்று.

40. ஒரு தெய்வம் தந்த பூவே

திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
பாடியவர்கள்: சின்மயி, ஜெயச்சந்திரன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

பட்டியலை முடிக்க, இந்தப் பாடலை விட வேறொரு சிறந்த பாடல் இருக்க முடியாது. ஆனந்த அவஸ்தையாக, தன் குழந்தையை பற்றி தாய் வர்ணிக்கும்படியாக வரும் வைரமுத்துவின் வரிகள், இந்தப் பாடலுக்குச் சிறப்பு. வேறெந்த பாடலும், இது போல் அமைந்ததாக நினைவில்லை. ரகுமான் இசை, இந்தப் பாடலைக் கேட்கும் போது, தெய்வத்தின் பாதங்களை தொட்டு விட்டு வந்தது போல் ஓர் உணர்வை தருகிறது. காந்தக் குரல் சின்மயினுடையது. சுனாமி பேரழிவிற்கு சில மாதங்கள் பிறகு, காரைக்காலில், இந்தப் பாடலை ஏ.ஆர்.ரகுமானின் குழுவினர் இசைத்த போது, நிசப்தம். அவ்விடத்திற்கும், அங்கிருப்பவர்களின் உணர்விற்கும் இப்பாடலின் இசை பொருத்தமாக அமைந்தது.

ரகுமானின் பாடல்கள் எட்டு மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தது சிறிது வருத்தத்தை அளிக்கிறது. அவரின் பல முக்கியமான பாடல்களில் பட்டியலில் இடம்பெறாததற்குக் காரணம், அவரின் பல படங்களில், பல பாடல்கள் பட்டியலில் இடம் பிடித்ததே. (உ.ம். உயிரே. வேறு வழியில்லாமல், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால் பாடல்களை இந்தப் பட்டியலில் சேர்த்து விட்டேன். அந்தப் பாடல்கள் இல்லாமல், நிச்சயம் என்னுடைய எந்தப் பட்டியலும் முழுமை பெறாது). ரகுமானின் இசைக்கச்சேரி, ஏப்ரல் 15-ம் தேதி, மாதத்தில் மிச்சிகனில் (Eastern Michigan University) நடைபெறப்போவதாகக் கேள்வி பட்டேன். முடிந்தால் சென்று வாருங்கள்!

பல ஆண்டுகளாக, தமிழகத்திலிருந்து பல சிறந்த இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளனர். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என வரிசையாக சிறந்த இசைஞானிகளை தமிழகம் கொடுத்திருப்பது. இந்த வரிசை இப்படியே நின்று விடாமல், யுவன், கார்த்திக், ஹாரிஸ், வித்யாசாகர், விஜய் ஆண்டனி, பரத்வாஜ் என நீண்டு கொண்டே செல்கிறது. இந்தியாவிற்கே, தமிழகம் தான் இசையில் வழிகாட்டியாக இருப்பது, பெருமைப்பட வைக்கிறது. சென்னையை, நாம் தாராளமாக 'இந்தியாவின் இசைத் தலைநகர்' என அழைக்கலாம்.

பல சிறந்த பாடல்களை இடமின்மை காரணமாக இங்கே கொடுக்க முடியவில்லை. உங்களுக்கு இந்தத் தொகுப்பு பிடித்திருந்தால் நட்சத்திர வாரம் முடிந்ததும், அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்.