80-களிலும், 90-ன் ஆரம்ப ஆண்டுகளிலும், பெரும்பாலான மாணவர்களின் குறிக்கோள் பொறியாளார் அல்லது மருத்துவராவதாக இருந்தது. இந்த இரண்டிற்கும் எல்லா தரப்பினரிடமும் பலத்த வரவேற்பு இருந்தது. பொறியியலில், காலத்திற்கு ஏற்ப மாணவர்கள் வேறுபட்டத் துறைகளை எடுக்க ஆர்வம் காட்டி வந்தனர். ஒரு குறிப்பிட்ட காலத்தில், கட்டிடயியலுக்கும், இன்னுமொரு கால கட்டத்தில் எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங்கும், பின்னர் எலெக்ட்ரானிக்ஸிற்கும் மவுசு இருந்து வந்தது. 1995-ம் ஆண்டிற்குப் பின் அனைத்துமே மாறி, எங்கும் கணினி, எதிலும் கணினி என்றே மாறி விட்டது. பெரும்பாலான மாணவர்களின் (பெற்றோர்களின்) குறிக்கோள் கணினித் துறையைத் தேர்ந்தெடுப்பதே. இதில் தவறே கிடையாது; இது இயல்பே. எதில் நல்ல ஊதியம் கிடைக்கிறதோ அல்லது எந்தத் துறையில் சுலபமாக வேலை கிடைக்கிறதோ அதில் தான் மக்கள் ஆர்வம் காட்டுவர். சுலபமான வழி இருக்கும் போது, யாருக்கு சிரமப்பட்டு எதையும் அடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்?
சரி இப்போது மென்பொருள் துறை நன்றாக இருக்கிறது; அனைவரும் இங்கேயே சங்கமம் ஆகின்றோம். தவறில்லை. நாளைக்கு வேறொரு துறை நன்றாக இருக்கும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு அந்தத் துறைக்கு மவுசு இருக்கும். ஆனால் எல்லாத் துறைக்கும் பொதுவான, எல்லாருக்கும் அவசியமான, ஒன்றை நாம் இழந்து வருவதை கவனிக்கத் தவறுகின்றோம். இதற்கான அடித்தளம் சுமார் 40-50 ஆண்டுகளுக்கு முன்பாகவே போடப்பட்டு விட்டது.
மாணவர்களில் பலர் படித்து முடித்ததும், அந்த நிறுவனத்தில் பணியில் சேர வேண்டும், வெளிநாடு சென்று பணியாற்ற வேண்டும், அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என ஆசை கொண்டிருப்பார்கள். (அவர்களின் பெற்றோர்கள் உட்பட). ஆனால் அவர்களில் எத்தனை பேர் ஆசிரியர்களாக வருவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்? லட்சத்தில் ஒருவர்? அப்படி இருந்தாலே ஆச்சர்யம். கடந்த சில ஆண்டுகளாக, எதுவுமே படிக்க இயலாமல் (வசதி இல்லாமலோ, வாய்ப்புக் கிடைக்காமலோ) இருப்பவர்கள் மட்டுமே, M.A; அல்லது M.Sc / M.Phil எனப் படித்து விட்டு ஆசிரியர் பணிக்கு வருகின்றனர். திறமையானவர்களில் பெரும்பாலோனோர் வேறு பணிக்குச் சென்று விடுகின்றனர். (இப்போது ஆசிரியர்களாக இருப்பவர்கள் திறமையற்றவர்கள் எனக் கூறுவதாக அர்த்தம் கொள்ள வேண்டாம்).
பள்ளி / கல்லூரியில் முதல் 10% இடங்களுக்குள் வரும் எத்தனை மாணவர்களில் ஆசிரியர்களாக உருவெடுத்திருக்கிறார்கள்? ஆண்டுகள் செல்லச் செல்ல கல்வியின் தரம் குறைவதை ஏன் யாருமே உணர மறுக்கிறோம்? 'அந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்தா, பள்ளிக் கூடமே செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு சிறுவன் கூட படிப்பான்...', என்று நமது முந்தைய முறையினர் சொல்லக் கேட்டதில்லையா?. அந்த மாதிரியான ஆசிரியர்கள் கிடைக்கும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிட்டியது?. எனக்குக் கிடைத்தது. உங்களில் பலருக்கும் கிடைத்திருக்கலாம். ஆனால் அதே வாய்ப்பு, உங்களின் குழந்தைகளுக்கும் கிடைக்குமா என்பது கேள்விக் குறியே. ஏனென்றால், இந்தத் தலைமுறை மாணவர்களில் ஏறக்குறைய 90% பேர் தொழில்நுட்பத் துறைக்கு அதிலும் முக்கியமாக கணினி துறைக்கு பணிக்கு வந்து விடுகின்றனர். அவர் யாராக இருந்தாலும்; அவர் என்ன படித்திருந்தாலும். இப்போதெல்லாம், வெறும் புத்தகங்களை கரைத்துக் குடிப்பதையும், மதிப்பெண்களை அதிகமாகப் பெறுவதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு பள்ளி செல்கிறார்கள், மாணவர்கள். எத்தனை முறை, புத்தகத்தில் உள்ளதை அனுபவித்து கற்றிருக்கிறோம் அல்லது கற்பிக்கப்பட்டிருக்கிறோம்? கல்லூரி எல்லாம் முடித்து விட்டு, இப்போது ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டும் போது தான், 'அட இதெல்லாம், பள்ளிக்கூடத்திலேயே படித்திருக்கிறோமே? எவ்வளவு நல்ல விசயம், சரியாகப் படிக்காமல் விட்டுவிட்டோமே?', என பல முறை வருந்தியிருப்போம். இதற்கெல்லாம், காரணம் என யாரைச் சொல்வது, ஆசிரியர்களைத் தவிர?. பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம் தான். அதைப் பற்றி ஏற்கனவே என்னுடைய 'சர்வதேசப் பள்ளிகளில் இந்திய விஞ்ஞானிகள்' என்ற பதிவில் சொல்லியிருந்தேன். ஆசிரியர்களும் (எல்லா இடங்களிலும் 'பெரும்பாலான ஆசிரியர்கள்' என சேர்த்துக் கொள்ளுங்கள்) தங்களது மாணவர்களுக்கு, அதிக மதிப்பெண்கள் பெறும் வழியை மட்டுமே போதிக்கிறார்கள். இதற்கு திறமையே தேவையில்லை - யார் வேண்டுமானாலும் செய்யலாம். இன்னும் சிறிது நாட்களில், 'எங்களுக்கு ஆசிரியர்களேத் தேவையில்லை; என்னென்ன செய்ய வேண்டும் எனப் புத்தகங்களிலேயே எழுதி விடுங்கள், நாங்கள் படித்துக் கொள்கிறோம்', எனக் கூறும் நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இப்போது வளர்ந்து விருட்சமாக நிற்கும் பல மரங்கள், நம் முன்னோர்கள் நமக்காக நட்டு, வளர்ந்த்தது தான். அதன் கனியையும், நிழலையும் நாம் அனுபவிக்கிறோம். போதாக்குறைக்கு, பல மரங்களை வியாபார நோக்கத்திற்காக வெட்டியும் வீழ்த்துகிறோம். அடுத்த தலைமுறைக்காக, புதிதாக நட வேண்டாம்; இருக்கும் சில மரங்களையாவது காக்க வேண்டும் என நமக்குத் தோன்றவில்லை. அதே போல் தான், இருக்கும் சில நல்ல ஆசிரியர்களிடம் நாம் கற்று தெரிந்து விட்டோம்.
உங்களுக்குக் கிடைத்த அதே தரம் நமக்கு அடுத்த சந்தததியினருக்கும் கிடைக்க வேண்டுமானால், அதற்கான முயற்சிகளை இப்போதே ஆரம்பிக்க வேண்டாமா?
தொழில் ரகசியங்களும், நுட்பங்களும் சரியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சொல்லிக்கொடுக்கப்படாமல் போனதால் அல்லது புரிந்து கொள்ளப்படாமல் போனதால் பல தொழில்களும் / தொழிற்சாலைகளும் நசிந்தன என்பதை நாம் நன்றாக அறிவோம். உதாரணத்திற்கு சிற்பக் கலை; இப்போதிருக்கும் சிற்பிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அதே போல் தான் கற்பிக்கும் பணிக்குத் திறமையானவர்கள் இல்லாமல், கல்வியின் தரம் முற்றிலும் சீரழியப்போகிறது. ஆசிரியர் பணிக்கு வருவதற்கு யாருக்கும் திறமை இல்லையா? அல்லது திறமை இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லையா? இரண்டும் இருப்பவர்களுக்கு, பண வசதி இல்லையா?
இதற்குக் காரணம் என்ன?
1. தொழில்நுட்பப் படிப்புகளுக்கு இருக்கின்ற அபாரமான வேலை வாய்ப்புகள்
2. தொழில்நுட்பப் பணிகளுக்குக் கிடைக்கும் ஊதியம்
1. தொழில்நுட்பப் படிப்புகளுக்கு இருக்கின்ற அபாரமான வேலை வாய்ப்புகள்
இதனை ஓர் குறை என்றே சொல்ல முடியாது. இதற்குப் போட்டியாக, ஆசிரியர் பணிகளுக்கு அதிக இடங்களை உருவாக்க வேண்டும் எனச் சொல்வது சரியாக இருக்காது. தொழில்நுட்பப் படிப்புகளுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் இருப்பது நல்ல விசயம் தான். பொருளாதாரம் உயரவும், வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கவும் வழி வகுக்கிறது.
2. தொழில்நுட்பப் பணிகளுக்குக் கிடைக்கும் ஊதியம்
உலகமே எலெக்ட்ரானிக்ஸ் மயமாகி வருகிறது. மக்களின் தேவைகள் தொழில்நுட்பம் சார்ந்தவைகளாக இருக்கின்றன. அனைவரும் 'இந்த காருக்கு அடுத்த மாடல் எப்போது வருகின்றது?', 'செல்போனில் அடுத்து என்னென்ன வசதிகள் வருகின்றன? படம் பார்க்க முடியுமா, கிரிடிட் கார்டுக்குப் பதிலாக செல்போனை உபயோகப்படுத்த முடியுமா? அமெரிக்காவுக்கு 10 மணிநேரத்தில் செல்ல முடியுமா?' Internet Browsing Speed அதிகரிக்குமா என்று தான் யோசிக்கின்றனர். நாம் அனைவரும் தொழில்நுட்பத்திற்கு அடிமைப் பட்டு ஆண்டுகள் பலவாகி விட்டன. தேவை அதிகரிக்கும் போது, அது சம்பந்தமான உற்பத்தி அதிகரிக்கப் பட வேண்டும்; மக்களின் ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யப் பட வேண்டும்; அதற்கு அதிகமான பொறியாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்தக் காரணத்தினால், அவர்களின் ஊதியம் மற்ற எல்லாத் துறையையும் (மருத்துவர்கள்; அரசு அதிகாரிகள்; வங்கி அதிகாரிகள்;) விட மிக அதிகமாக இருக்கின்றது.
ஊதியம் அதிகமாகக் கிடைப்பதால் அனைவரும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இப்படி காரணங்கள் இருக்கும் போது, ஏன் சாதாரண (ஊதியம், வேலைவாய்ப்புகள் குறைவான) ஆசிரியர் தொழிலை தேர்ந்தெடுக்ககின்றனர்?
இதற்கு தீர்வு என்ன?
முன்பே கூறியது போல வேலைவாய்ப்புகளை இது போன்ற துறைகளில் அதிகரிக்க முடியாது; ஏனென்றால் தேவை அதற்கேற்றார்போல் இல்லை; ஆண்டுக்கு 5-10 லட்சம் குழந்தைகள் மட்டுமே பள்ளிகளில் சேர்கின்றனர். அதே விகிதத்தில் பள்ளிப்படிப்பையோ / கல்லூரி படிப்பையோ விட்டு வெளியேறுகின்றனர். ஆனால், ஊதியம்! கண்டிப்பாக உயர்த்தலாம். நீங்கள் கேட்கலாம், 'இப்போதே அவர்கள் மற்ற அரசு ஊழியர்களை விட அதிகமாகத் தானே ஊதியம் பெறுகின்றனர். ஏற்கனவே, அரசின் பெரும்பாலான வருமானம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதிலேயே சென்று விடுகிறது. இந்த லட்சணத்தில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வேறு உயர்த்த வேண்டுமா?', என்று. நீங்கள் கேட்பது சரி தான். நீங்கள் ஏன் அவர்களை மற்ற அரசு ஊழியர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றீர்கள்? எப்படி ஓர் கிராம வளர்ச்சி அதிகாரியும், ஆசிரியரும் ஒன்றாக இருக்க முடியும்? அவர்கள் இருவரின் பணியும் ஒன்றாகி விடுமா? அவர்கள் அரசு ஊழியர்களோடு ஒப்பிடப்பட வேண்டியவர்கள் அல்லர். நாட்டிலேயே ஊதியத்தில் உயர்ந்த ஓர் துறை (சினிமா, அரசியல், போன்ற துறைகளை விட்டு விடுங்கள்) இருக்குமாயின் அதனுடன் ஒப்பிடுங்கள். அவர்களுக்கு இணையாக இவர்களுக்கும் ஊதியத்தை நிர்ணயிங்கள். ஆனால், ஆசிரியர்களின் பணி இவை எல்லாவற்றையும் விட உயர்ந்தது (அப்படி இல்லையென்றால், உயர்ந்ததாகத் தான் இருந்திருக்க வேண்டும்). ஓர் மருத்துவர் தனது பணியை நேர்மையுடனும், அக்கறையுடனும் மேற்கொண்டால், ஓர் உயிரைக் காப்பாற்ற முடியும்; ஓர் காவலதிகாரி சிரத்தை எடுத்து பணியாற்றினால், ஒரு பகுதியை அமைதியாகக் கட்டுக்குள் வைத்திருக்கமுடியும்; ஓர் ஆசிரியர் பொறுப்புடனும், நேர்மையுடனும் பணியாற்றினால் இவ்வுலமே போற்றக்கூடிய வகையில் பல நபர்களை உருவாக்க முடியும். ஒவ்வொருத்தரின் குணமும், ஒழுக்கமும் அவர்கள் சிறுவர்களாக (அல்லது 22 வயதிற்குள்) இருக்கும் போது தான் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அந்த காலகட்டத்தின் (அல்லது 25 வயதுக்குள்) பெரும்பகுதியைப் பார்த்துக் கொள்ளும் ஆசிரியர்கள், ஓர் மனிதனின் வெற்றிக்கும், தோல்விக்கும் மூலக்காரணம் இல்லையா? அப்படி இருக்கும் போது, ஆசிரியர்களை உருவாக்கும் விசயத்தில் ஏன் இப்படி ஓர் அலட்சியம்?
படிப்பை போதிப்பது சுலபம்; மற்றவர்கள் போற்றும் குணத்தையும், ஒழுக்கத்தையும் போதிப்பது தான் கடினமானப் பணியாக இருக்கும். படிப்பில் தலைசிறந்தவனாகவும், குணத்தில் தாழ்ந்தவனாகவும் இருந்தால் அவனைப் பார்த்து அவனின் ஆசிரியர் பெருமைப்படவா முடியும்?. மாறாக, ஒருவன் குணத்தில் பலர் போற்றத்தக்க அளவிலும், படிப்பில் ஓரளவிற்கு சிறந்தவனாக இருந்தாலும் அவனை எந்த ஆசிரியருக்குத் தான் பிடிக்காது? பெற்றோர்கள் இதைப் பார்க்கத் தவறுகின்றனர். அவர்களும் பிள்ளைகளின் மதிப்பெண் அட்டைகளை மட்டுமே பார்க்கப் பழகிவிட்டனர்.
சரி விசயத்திற்கு வருகிறேன். நான் கூறுவதெல்லாம், மற்ற துறைகளுக்கு ஏறக்குறைய இணையாக ஆசிரியர்களுக்கும் ஊதியத்தை நிர்ணம செய்யுங்கள். 'அரசின் வருமான போதாது; ஆதலால் கொடுக்க முடியாது', என சிலர் கூறலாம். அது அரசின் குறைபாடு. வருமானத்தைப் பெருக்கும் முறைகளை கண்டுபிடியுங்கள். பணத்திற்காக, இது போன்ற விசயங்களில் உடன்பாடு செய்யமுடியாது. இப்போதிருப்பது போல், 2,00,000 லஞ்சம் கொடுத்து ஆசிரியர் வேலை வாங்கும் முறையை ஒழித்துக் கட்டுங்கள் (இதெல்லாம் நடக்கிற விசயமா?). நேர்மையான முறையில் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையினைக் கொண்டு வாருங்கள். அதிக பயன் இருக்கும் காரணத்தினால், கண்டிப்பாக போட்டி திறமையான, தகுதியான நபர்களிடமிருந்து வரும். அப்படி இருக்கும் பட்சத்தில், நிச்சயமாக சரியான நபர்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.
வெறும் பணத்தாசை காட்டி அவர்களை இங்கே அழைப்பது சரியாக இருக்குமா என சிலர் கேட்கலாம்.
1. இருக்கும் நபர்களில் பலர், மற்ற துறைகளில் பணிபுரிபவர்களை விட திறமை குறைந்தவர்கள்; அந்த விதத்தில் பார்த்தால் பணத்தைக் காட்டி தகுதியான நபர்களை இழுக்குறீர்கள். லாபம் மாணவர்களுக்குத் தானே? அதாவது சமுதாயத்திற்குத் தானே?. இழப்பது பணம் தானே. தவறில்லை.
2. பலர் ஆர்வத்துடன் இன்னும் ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுப்பதைக் காண முடிகிறது. (ஆனால் அவர்கள் பெரும்பாலும் புகழ்பெற்ற கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் தான் பணிபுரிகின்றனர்). உண்மையிலேயே ஆர்வம் உள்ளவர்கள், இப்போது நிலவும் ஊதிய வேறுபாட்டினால் கணினி போன்ற துறைகளில் பணிபுரிந்து கொண்டிருக்கலாம் அல்லவா? அவர்களை நல்ல ஊதியத்தினால், மற்ற துறைகளுக்குச் சென்று விடாதபடி கவர்ந்திழுக்கிறோம் அவ்வளவு தான். கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் நல்ல சவாலான பணி, மென்பொருள் துறையினரை விட அதிக ஊதியம் என்றால் இப்போது வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் கூட கண்டிப்பாக இந்தியாவில் ஆசிரியர் பணிக்கு போட்டி போட்டு வருவர் என்பது என் கருத்து.
வருபவர்களிடம் திறமை இருந்தால் நல்லது; திறமையுடன் ஆர்வமும் இருந்தால் சாலச் சிறந்தது.
இவை எல்லாவற்றையும் விட சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவதற்கு முக்கியமானது ஊக்கம். மாணவர்களை, பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும். எத்தனை பள்ளிகள் / கல்லூரிகளில், ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு கற்பித்தலின் சிறப்பைக் கற்றுக் கொடுக்கிறார்கள்? அவர்கள் சிறந்தவர்களாக இருந்தால் தானே, அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்று அவர்களின் மாணவர்களுக்குத் தோன்றும்? மற்றவர்களுக்கு நீதி கூறும் நீதிபதியே கொலை செய்து விட்டு, நீதிமன்றத்தில் நிற்பது போல் தான், பல ஆசிரியர்கள் குறைகளை தங்கள் மீதே வைத்துக் கொண்டு, பள்ளிகளில் மாணவர்களுக்கு முன்பு நின்று கொண்டிருக்கின்றனர். அவர்களைப் பார்க்கும் மாணவர்களுக்கு அவர்கள் மீது எப்படி மரியாதை ஏற்படும்? அல்லது அவர்களைப் பின்பற்ற வேண்டும் எனத் தோன்றும்?
உலகத்திலேயே புனிதமானது ஆசிரியர் தொழில் தான் என்பது என் கருத்து. கற்றுக்கொடுப்பது மட்டுமல்ல; கற்றுக்கொடுப்பது போலவே வாழ்ந்தும் காட்ட வேண்டும். அது தான் கடினமான பணி. சில ஆசிரியர்களை இப்போது பார்த்தாலும், தானாக நமது கை, கட்டியிருக்கும் வேட்டியையோ, கைலியையோ இறக்கி விடச் செல்லும். அவர்கள் கற்பிக்கும் போது, நம்முள் ஏற்படுத்திய தாக்கம் அந்த அளவிற்கு வலுவானது. அது போன்ற ஆசிரியர்களை, அடுத்த தலைமுறையினர் பெறும் பாக்கியத்தைப் பெறுவார்களா? அது பெற்றோர்களாகிய உங்களது கையிலும், அதன் அவசியத்தை உணர வேண்டிய அரசாங்கத்தின் கையிலும் தான் இருக்கிறது.
பணத்தை அதிகமாகக் கொடுப்பது மட்டுமே இதற்குத் தீர்வென்று சொல்ல வரவில்லை. அதுவும் ஓர் காரணி என்பதே. ஆர்வமுள்ளவர்கள் பணம் அதிகமாயிருந்தாலும், குறைவாகயிருந்தாலும், அவர்களாகவே வருவார்கள். அத்தகைய சிலரின் பணியினால் தான், இன்னும் இத்துறை உயிர்ப்புடன் இருக்கிறது. ஆனால் அவர்களின் விகிதம் 5% என்று கூட சொல்லலாம். அது 0% ஆக மாறுவதற்கு முன்பு ஏதாவது செய்தாக வேண்டும்.
குறிப்பு: இங்கே 'ஆசிரியர்கள்' எனக் குறிப்பிட்டது; அனைத்து ஆசிரியர்களையும் என எடுத்துக் கொள்ள வேண்டாம். இன்னும் ஆர்வமுள்ள, திறமைவாய்ந்த பல ஆசிரியர்கள், இந்த சமுதாயத்திற்கு சேவை புரிந்து தான் வருகின்றனர்.
ஸ்ருசல்
15 கருத்துகள் :
பாரதி நீங்கள் சொல்வது மிகச் சரி. இது போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்கு கண்டிப்பாக இடையூறுகள் இருக்கத் தான் செய்யும். ஆனால் என்றாவது ஒரு நாள், இது போன்ற தடைகளை விட்டு வெளியே வந்து தானே ஆக வேண்டும்.
அந்த நாள் கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நீங்கள் சொல்லும் ஐந்தாண்டு கட்டாய பணியினை, ஏற்கனவே ஐ.ஐ.டி. மாணவர்களுக்காக, கொண்டு வரலாம் எனத் தெரிவித்திருந்தேன்.
http://thadagam.blogspot.com/2005/09/blog-post_112687185113985647.html
ஆனால், அது இந்த விசயத்தில் எவ்வளவு தூரம் உபயோகமாக இருக்கும் எனத் தெரியவில்லை.
ஊதியமும் மிகக் குறைவாக இருந்து, அவர்கள் கல்வித் துறையில் படித்த பிறகு பணியாற்ற வேண்டும் என்ற சட்டமும் போட்டால், யார் நன்றாகப் படிப்பார்கள்? தேர்வை மட்டும் சிறப்பாக செய்யாமல் விட்டு விடுவார்கள். பலர் பெயிலாகி விடும் வாய்ப்புமிருக்கிறது. :).
ஏனென்றால், ஒருவரை விட மற்றொருவர், மதிப்பெண் குறைவாக எடுக்க வேண்டுமே!
அவர்கள் கஷ்டப்பட்டு படிப்பதற்கும், மற்றவர்களை விடச் சிறந்தவர்களாக இருப்பதற்கும் ஏதாவது, நன்மை இருக்க வேண்டாம? - குறைந்தது ஊதிய விசயத்திலாவது.
மிக மிக மிக நீளமான பதிவு நண்பரே. இனி மேல் தான் படிக்க வேண்டும் மெதுவாக நேரம் கிடைக்கும் போது.
ஆதங்கம் சரிதான்.....ஆனால் இது போன்ற சட்டங்கள் நிச்சயம் உதவாது. மத மாற்றத்தை விட மனமாற்றம் பெரிது. அதுபோலத்தான் இதுவும். ஆசிரியர் பணி செய்தால் என்ன சம்பளம் கிடைக்கும் என்று தெரியும்தானே......தனியார் கல்லூரிகளில் சென்று பாருங்கள்....வயிற்றெரிச்சலாக இருக்கும். அரசாங்கக் கல்லூரிகளில் சரிதான். ஆனால் அங்கு இருக்கும் ரெட் டேப்பிசம்...அது இது...விரும்பியர் உடனே சென்று கல்லூரியிலோ பள்ளியோ சென்று சேர்ந்து விட முடியுமா? விருப்பம் என்பது தானாக வர வேண்டும். அது குழந்தைப் பருவத்திலேயே முளை விட வேண்டும். வளர்ந்த பிறகு அந்தப் பணிச் சூழ்நிலைகள் இன்றைக்கு இருப்பது போல இல்லாமல் சீரமைந்து இருக்க வேண்டும்.
குமரன் அவசரமில்லாமல் படியுங்கள். தவறு என் மீது தான். இன்னும் சிறிது சுருக்கி இருக்க வேண்டும். பிளாக் தானே எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம் என நினைத்து எழுதி விட்டேன். பள்ளியிலிருந்தே இதே வேலையாகிப் போய் விட்டது.
பேசுவதும், எழுதுவதும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கும், அளவிற்கும் என்றூ சொன்னால் பேசுபவருக்கும், எழுதுபவருக்கும் சிக்கல். உங்கள் விருப்பம் என்றால், கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் தான் சிக்கல்.
ராகவன் சரியாகச் சொன்னீர்கள்.
சட்டத்தாலும், இன்ன பிற கட்டுபாடுகளாலும் அதை அடைய நினைப்பது சுலமபமல்ல. மனம் மாற்றம் தான் வேண்டும்; ஆனால் அது தான் இருக்கும் விசயங்களிலேயே கடினமான விசயம் இல்லையா?
நீங்கள் சொல்வது உண்மை தான். நம் சமுதாயத்தில் கல்வி என்பது வேலைக்காக, நிறைய ஊதியத்திற்காக என்று மட்டுமே தெரிய படுகிறது. மேலும் நீங்கள் சொல்வது மாதிரி கணிணி துறை வேலை என்பது (வகுப்பில் சிறந்த மாணவர்களுக்கு) கல்லூரி முடிந்த (முடிக்கும் முன்பே) கிடைத்து விடுகிறது. ஆசிரியர் வேலைக்கு இன்னும் ஒரு தெளிவான படிப்பு வரைமுறை இல்லை என்றே நினைக்கிறேன். இது படித்து முடித்து, நன்றாக செய்தால் ஆசிரியர் வேலை. இவ்வளவு சம்பளம் என்று சொல்ல முடிவதில்லை. அதனால் அதை ஒரு தொழிலாக (நன்றாக படிக்கும் ஒரு மாணவன், விருப்பம் இருந்தாலும்) யாரும் அவ்வளவு எளிதாக எட்ட முடிவதில்லை. இதற்கும் ஏதாவது செய்தால் சில நல்ல திறமையான மாணவர்கள் வர வாய்ப்புகள் உண்டு.
( ஆமாம்! இப்போ நான் கணிணி துறையில் இருந்து ஆசிரியர் துறைக்கு( ஒரு ஆறாங்கிளாஸ் போதுங்க) போனும்னா என்னங்க செய்யணும். சீரியஸாகவே கேட்கிறேன்..
அன்புடன்,
சிவா
சிவா,
என்னங்க இப்படி கேட்டுட்டீங்க.
கணினித் துறையிலேயே, பல தனியார் கல்லூரிகளில் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
2001-ம் ஆண்டில், கணினித் துறையில் தொய்வேற்பட்ட போது, பலர் பல கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்குத் தான் சென்றனர்.
பின்னர் 2003-2004 ஆண்டுகளில் திரும்ப வந்துவிட்டனர்.
ஆனால் பள்ளிகளில் இணைவது எப்படி என்பதை, ஐயா தருமி போன்ற ஆசிரியர்களில் கேட்பது பலனைத் தரும்.
நன்றி.
நன்றி ஸ்ரூசல்! நான் இப்போ குப்பை கொட்டிக்கிட்டு இருக்கிறது கணிணி துறையில் தான். பழசை அசை போட்டால், என்னடா இது பொழப்பு இதுன்னு தோணும். அந்தாக்க ஊருல (கிராமத்துல)படிச்ச பள்ளிக்கூடத்துலயே சேர்ந்திரலாமான்னு (ஓவரா தெரியுதா :-). சந்தோசமா நாலு பசங்களுக்கு கல்வி சொல்லி கொடுத்த மாதிரி இருக்கும் பாருங்க. அதான் கேட்டேன். :-))
அப்புறம் சொல்ல மறந்துட்டேன். உங்கள் நட்சத்திர வாரம் அருமையாக போகிறது. நன்றி
சிவா,
>>>
நன்றி ஸ்ரூசல்! நான் இப்போ குப்பை கொட்டிக்கிட்டு இருக்கிறது கணிணி துறையில் தான்
<<<
சரியாகச் சொன்னீர்கள். சமயத்தில் எனக்கும் தோன்றும். எதற்காக இந்தத் துறைக்கு வந்தோம் என்று? ஆனால் எனக்கு வேறெந்த வேலையும் தெரியாதே :(
நீங்கள் சொல்வது சரி, ஆத்மதிருப்தி வேண்டுமானால், ஆசிரியர் பணியை விட சிறந்த பணி வேறெதுவும் இருக்க முடியாது.
>>>அப்புறம் சொல்ல மறந்துட்டேன். உங்கள் நட்சத்திர வாரம் அருமையாக போகிறது. நன்றி
<<<
மிக்க நன்றி சிவா.
நல்லதொரு அலசல் பதிவு ஸ்ருசல். பின்னூட்டங்களின் எண்ணிக்கையே இது ஒரு நல்ல பதிவென்பதற்கு சாட்சி (உண்மையாகச் சொல்கிறேன்). 'சர்வதேசப் பள்ளிகளில் இந்திய விஞ்ஞானிகள்' ளும் அருமையான ஒரு பதிவுதான். ஆசிரியப் பணி அறப்பணி அதற்கே உன்னை அற்பணி என சொல்லிச் சொல்லி அவர்களை தியாகி ஆக்கி விட்டார்கள். இருப்பினும் தியாக மனம் இல்லாதோர் அவர்களுக்கு கிடைக்கும் நேரத்தை வேறு வழியில் பொருள் ஈட்டப் பயன்படுத்துகின்றனர். மற்ற அலுவலர்களுக்கு அள்ளிக் கொடுத்தாலும் இவர்களுக்கு கிள்ளி கொடுக்கிறார்கள். நிறைய தனியார் கல்லூரிகள் குறிப்பாக கணணித் துறைக்கு வேறு எங்கும் வேலை கிடைக்காமல் இருக்கும் தன் முன்னால் மணவனையோ/மாண்வியையோதான் வேலைக்கமர்த்துகின்றனர் மிக, மிக. குறைந்த ஊதியத்தில். ஒரு காலத்தில் ஆசிரியர்களுக்கு இருந்த மதிப்பென்ன?. இப்போது ஆசிரியர் வேலை என்றால் எதுவும் கிடைக்கவில்லையென்றால் வரலாம் என்றோ., வேறு வேலையில் இருந்தால் வேலை நேரம் பேக இப்பணி செய்யலாம் என்றோ ஆகிவிட்டது. கிராமங்களில் 24 மணி நேரமும் ஆசிரியர் பணி செய்து., (சாலையில் அவர் நடந்து செல்லும் போது கூட சென்று சந்தேகம் கேட்கும் மணவர்கள் உண்டு), நல்லாசிரியர் விருது வாங்கும் அசிரியர்கள் உண்டு.
அப்டிபோடு,
உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்.
அந்த ஆர்வத்தை ஊட்டவேண்டியது தான் இந்தத் தலைமுறையினரின் கடமையாக இருக்க வேண்டும்.
நன்றி, உங்களின் கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு.
அருமையான பதிவு ஸ்ருசல். நானும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது படித்தப் பின் ஆசிரியராகப் போவதாகத் தான் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் கதை கட்டுரை கவிதை என்று அலைந்து கொண்டிருப்பேன். அதனால் நண்பர்கள் எல்லாம் 'டேய். உன்கிட்ட மாணவனா இருந்து நல்ல மதிப்பெண்கள் வாங்கணும்னா கவிதை எழுதத் தெரிஞ்சாப் போதும்'ன்னு கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பாங்க.
பொறியியல் கல்லூரிக்கு ஆசிரியரா வரணும்ன்னா எம்.ஈ. படிச்சுட்டு வாங்கன்னு என் பி.ஈ. ஆசிரியர்கள் சொன்னார்களே என்று எம்.ஈ. படிக்கப் போனேன். படித்து முடிக்கும் நேரம் டி.சி.எஸ்ஸிலிருந்து காம்பஸ் தேர்வு செய்து வேலையும் கொடுத்துவிட்டார்கள். நண்பர்கள் குழப்பியதில் இப்போது ஆசிரியராகாமல் மற்றவர்கள் உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறேன். (இப்போது டி.சி.எஸ்ஸில் வேலை செய்யவில்லை). எப்போதாவது அசிரியராக வேண்டும் என்ற ஆவல் இன்னும் இருக்கிறது. பார்க்கலாம். :-)
நன்றி குமரன்,
எனக்கும் அந்த ஆசை இருக்கிறது. ஆனால் இன்னும் சில ஆண்டுகள் போகட்டும் என நினைத்திருக்கிறேன்.
பார்க்கலாம். காலம் என்னை எங்கு இட்டுச் செல்கிறதென்று!
அன்பின் ஸ்ருசல்,
மிக அருமையான பதிவு. பயனுள்ளதும் கூட. எனது மனைவி கணனித்துறையில் செய்த பணியை குழந்தையின் நலன் கருதி ராஜினாமா செய்தார். பின்னர் மிக ஆலோசித்து அருகிலிருக்கும் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தபின், ஆசிரியத்தொழிலில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு இப்போது மிகுந்த மன நிறைவோடு அப்பணியைச் செய்துவருகிறார்.
நீங்கள் சொன்ன மாதிரி நல்ல ஆசிரியராக இருந்தால் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் தனிதான். கல்லூரிகளிலும் சம்பளம் என்பது industryயைக் கொண்டு நோக்கும்போது மிகக் குறைவே. எனவே ஆண் ஆசிரியர்கள் பல தொழில் செய்யும் நடுவில் இதையும் part time தொழிலாகச் செய்து வருவது மும்பையில் சர்வ சாதாரணம். இதுவே முக்கிய வேலையாக இல்லாததால் ஒரு அலட்சியப் போக்கும் கவனமின்மையும் காணப்படுகிறது. முழுநேரப்பணியாக இருந்தாலும் கடனே எனச் செய்யும் வெறுப்பு அவர்கள் போக்கில் தெரிகிறது. இச்சம்பள விகிதம் சரிசெய்யப்பட்டால் நல்ல ஆசிரியர்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
எனக்குக் கிடைத்த பள்ளி /கல்லூரி ஆசிரியர்கள் போல என் மகனுக்கு கிடைப்பார்களா என்றால் இப்போது சந்தேகமே. இது மாறாவிட்டால் , இந்திய மூளை பலம் குறைபட வாய்ப்பிருக்கிறது.
அன்புடன்
க.சுதாகர்.
சுதாகர் அவர்களே,
நன்றி. சரியாகச் சொன்னீர்கள்.
சம்பள விகிதம் தவிர வேறு ஏதும் காரணி, இதற்கு உதவியாக இருக்குமா எனத் தெரியவில்லை. நானும் யோசித்துப் பார்க்கிறேன். ஒன்றும் கிடைக்கவில்லை.
கருத்துரையிடுக