வெள்ளி, மார்ச் 10, 2006

உயிர்; மற்றவர்களுக்காக இழப்பதற்காகவா?

உயிர்; மற்றவர்களுக்காக இழப்பதற்காகவா?:

என்னாலும் பல சமயங்களில் ஒத்துக்கொள்ள முடியாததது. தேசப் பற்று என்ற பெயரில் காரணமில்லாமல் இரு தரப்பினரும் உயிரை விடுவது என்பது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று. ஆனாலும் நாம் என்னதான் இந்த உலகமே ஓர் விழல்; ராணுவம், போர் எல்லாம் அரசியல், வீண் வேலை; ஒற்றுமையாக வாழ்வதற்குப் பதில் சில தனிப்பட்ட மனிதர்களின் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஏற்படும் அவசியமில்லாத நிகழ்வு என்றெல்லாம் கூறினாலும் ராணுவ வீரர்களின் பணியினை பாராட்டாமல் இருக்க முடியாது. இப்போதிருக்கும் சூழலில், நமக்கு போரில் ஆர்வம் இல்லாவிடிலும், உடன்பாடில்லாவிட்டாலும், வெறுத்தாலும் கூட, ராணுவத்தின் / ராணுவ வீரர்களின் (தரைப்படை, விமானப் படை, கப்பற்படை) பணியின் அவசியத்தை நீங்கள் மறுக்க முடியாது. காரணம்; நாம் விரும்பாமலேயே நமக்குக் கிடைத்து விட்ட எதிரிகள். அவர்களிடமிருந்து இப்போதைக்கு நம்மைக் காத்துக் கொள்ள அவர்களின் பணி நமக்கு இன்றியமையாதது.

நமது உடலுக்கு ஏதாவது சிறு தீங்கு ஏற்பட்டாலும் கூட நாம் இதுவரை பேசிய தத்துவங்களும், குடும்பமும், நண்பர்களும் அனைத்தும் மறந்து, நமது உடலைப் பேணுவதிலேயே நமது கவனம் அனைத்தும் செல்லும். எப்போதடா இந்த சிக்கலில் இருந்து வெளியேறி முன்பு போல ஆரோக்கியமாக இருப்போம் என நினைக்க ஆரம்பித்து விடுவோம். அப்படிப்பட்ட உடலை, மற்றவர்களின் நலனுக்காக விட்டுக் கொடுக்க முன் வருதல் தியாகம் தானே? இது போன்ற மனப்பான்மை அனைவருக்கும் வருமா என்றால் நிச்சயமாக இல்லை. ராணுவத்தில் இணைவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பெருமை, வசதியின்மை, குறைந்த படிப்பு, உண்மையான தேசப் பற்று இப்படி பல காரணங்கள் இருந்தாலும், வலி அனைவருக்குமே ஒன்று தான்.

சமயங்களில் நமக்கு கிடைத்த நல்ல வாழ்வு அவர்களுக்குக் கிடைக்கவில்லையே எனவும் நினைக்கத் தோன்றும். நல்ல வாழ்வு என்பது வீடு, பணம், கார், நல்ல மனைவி என்பது மட்டுமல்ல. இவற்றை விட முக்கியமானது, சுதந்திரம்.

நீங்கள் விரும்பும் நேரம் வரை உறங்க முடியும்; நினைத்த மாத்திரத்தில் திரைப்படத்திற்குச் செல்ல முடிகிறது; நண்பர்களைச் சந்திக்க செல்ல முடிகிறது; ஷாப்பிங் செல்ல முடிகிறது; இல்லையென்றால் 10 நாட்கள் விடுமுறை எடுத்து விட்டு ஊட்டியோ, கொடைக்கானலோ செல்ல முடிகிறது. அந்த சுதந்திரம் அவர்களுக்குத் துளி கூட இல்லை. அந்த சுதந்திரத்தை இழக்க யாருக்குத் தான் மனது வரும்? திரைப்படங்களுக்கு நான் பெரும்பாலும் இரவு நேரக் காட்சிகள் தான் செல்வது வழக்கம். திரைப்படம் முடிய 1 மணி ஆகிவிடும். வீட்டிற்கு வரும் வழியில், சுமார் 4 கி.மீட்டர் தூரத்திற்கு ராணுவப் பயிற்சி மையம் இருக்கிறது. 1 மணிக்குக் கூட கோட்டான்கள் போல அந்த வாயில் கதவினருகில் சில வீரர்கள் காத்திருப்பார்கள். இதே தான், 4 கி.மீ தூரத்திற்கும் உள்ள ஒவ்வொரு நுழைவாயிலும்!. இத்தனைக்கும் அவர்களுக்கு பெங்களூரில் பணியிடம் கிடைத்தால் சொர்க்கம் போலிருப்பார்கள் (இங்கு பணிபுரியும் சில குடும்பத்தினரிடம் பேசியதில் அறிந்து கொண்டது). அந்த சொர்க்கமே இப்படியென்றால், மற்ற இடங்கள்? காஷ்மீர் போன்ற இடங்கள்?

நமக்கு தொண்டு செய்யும் கடமை அவர்களுக்கு இருக்கிறது; நமக்காக உயிர்விடும் கடமையும் அவர்களுக்கு இருக்கிறது என சமயத்தில் சிலர் அவர்களை அடிமைகள் போல நினைப்பவர்களும் இருக்கிறார்கள். 'இன்னைக்கு எத்தனை பேர் இறந்தார்கள்' என நம்பர்களின் அடிப்படையில் கேட்பவரும் இருக்கிறார்கள். 'தீவிரவாதிகள் அட்டாக்கா? 5 தீவிரவாதிகள் செத்துட்டாங்களா? ஆனா நம்ம சைடில ஒரு 10 பேராவது செத்திருபாங்களே?', எனக் கேட்பவர்களும், நினைப்பவர்களும் இருக்கிறார்கள். வலி, பாதிக்கப்படுபவருக்கு எவ்வளவு அருகிலிருக்கிறோம் என்பதைப் பொறுத்து தான் பார்ப்பவர்களுக்கும் தெரியும்.

நமது மாநிலத்தின், பெரும்பாலான பகுதிகளில், ஒருவர் ராணுவத்தில் இருக்கிறார் என்றால், "ஓ கொஞ்சம் கஷ்டப்படுகிற குடும்பம் போல இருக்கு, அப்ப அவர் குடிப்பாரா? ஓ.சிக்கு ரம் கிடைக்குமே, செம வாழ்வு" என்று தான் பலரும் அவரைப் பற்றி நினைப்பர். நமது ஊர்களில் பெரும்பாலும் பணக்காரர்கள் ராணுவத்திற்கு செல்வதில்லை; ஓரளவு படித்தவர்களும் செல்வதில்லை; இது தவறு என்று சொல்லவில்லை. இதற்கு விதிவிலக்காக பல கிராமங்கள் இன்றும் தமிழகத்தில் உண்டு.

வட இந்தியாவில் இன்னும் அந்த நிலை வரவில்லை; ஆர்வமாக பலர் ராணுவத்தில் சேர்கின்றனர். அவர்களுக்கு ஓரளவிற்கு (தமிழகம் அளவிற்கு மோசமில்லை) நல்ல மரியாதை இருக்கிறது. பணமிருப்பவர்கள்; படித்தவர்கள் என பல தரப்பினரும் ராணுவத்தில் சேர்வதைப் பார்க்கலாம்.

என்னுடன் உடன்பணிபுரியும் நண்பி ஒருவர், ராணுவத்தில் பணிபுரியும் நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அவர்கள் படும் அவஸ்தை என்னென்ன? இவர் (நண்பி) சில ஆண்டுகளுக்கு முன்பாக, பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல நேரிட்டது. அவரது கணவருக்கோ போஸ்டிங் காஷ்மீரில். இவரால் அவரது கணவருக்கு ஃபோன் செய்ய முடியாது. அவரது கணவர் தான், இவரைத் தொடர்பு கொள்ள முடியும்; ஆனால் அதற்கு அவர் 60 கி.மீ வரை பயணம் செய்து வர வேண்டும். அந்தத் தருணத்தில் வேறு, எல்லைக்கோட்டில், இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் ஏதோ ஓர் அசாதரண சூழ்நிலை காரணமாக குவிக்கப்பட்டனர். இரண்டு மாதங்களுக்குப் பின்பாக விலக்கப்பட்டது வேறு விசயம். பேட்டரலிங் என்று ஏதாவது வந்தால், அடர்ந்த காடுகளில் 5-7 நாட்கள் வரை சுற்றும் நிலை வரும். அவரிடமிருந்து சில நாட்கள் கழித்து தொலைபேசி அழைப்பு வராமல் போனால், இவரிடமிருந்து வார்த்தைகளே வராது. நரக வேதனை.

இவர் இந்தியாவிலிருந்து, அவரது கணவருக்கு ராஜஸ்தான் போன்ற பகுதிகளில் போஸ்டிங் கிடைக்கும் போது, கணவர் இருக்கும் இடத்திற்கே சென்று தங்கும் வாய்ப்பு கிடைக்கும். அவரிடம், அவர் கணவருடன் பணிபுரிவர்கள் அடிக்கடி கூறும் வாசகம் "Madam, Live the life fullest". அடுத்த நாள் என்பதே கேள்விக் குறி, என்றால் வாழ்வில் சுவாரசியம் ஏது? நாமெல்லாம், வாழும் சூழலில் சிறிதளவு, மாறுதல் ஏற்பட்டால் கூட உடனே மாற்று வழி என்ன என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் அவர்கள் விரும்புகிறார்களோ, இல்லையையோ அதைத் தொடர்ந்து தானாக வேண்டும்.

சமீபத்தில் NatGeo சேனலில், இந்திய விமானப்படைக்கு பணியில் சேர்வதற்கான தகுதிப் போட்டிகளை காணும் வாய்ப்பு கிடைத்தது (இரண்டு எபிசோடுகள் தான் பார்க்க முடிந்தது). அதில் சேர்வதற்கு, இளைஞர்கள் (பெண்கள் உட்பட) காட்டிய ஆர்வம் மலைக்க வைத்தது. எவ்வளவு கடினமான போட்டிகள்? பல போட்டிகள் நினைவில் இல்லை ஒன்றைத் தவிர.

பெரிய நீச்சல் குளம். சுமார் நூறடி (இல்லையென்றால் குறைந்தது எழுபந்தைந்து அடி இருக்கும்) உயரத்தில் ஓர் ஆண் போட்டியாளர் நபர் நிற்கிறார். அப்படியென்றால் ஆழத்தைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

ஒன். டூ. திரி என்று அமைப்பாளர் சொல்ல உடனே அவர் மேலிருந்து குளத்திற்குள் குதித்து, சில விநாடிகளில் நீந்தி மேலேறி வருகிறார்.

அடுத்ததாக ஓர் பெண்.

ஒன். டூ. திரி என்று சொல்ல உடனே அவரும் மேலிருந்து குதிக்கிறார்.

குதித்த பெண் மேலே வரமுடியாமல் போகவே அங்கேயே தயாராகக் காத்திருக்கும், போட்டி அமைப்பாளர்கள் அவரைக் காப்பாற்றி மேலே அழைத்து வருகின்றனர்.

அடுத்ததொரு பஞ்சாபி பெண். தண்ணீரை வெறித்துப் பார்க்கிறார். ஒன். டூ. என எண்ணுகிறார்கள். அவரின் கால்கள் குதிப்பதற்குத் தயாராக இல்லை என அவரது முகம் சொல்கிறது. திரீ என்று சொல்கிறார் போட்டி அமைப்பாளர். அந்தப் பெண் குதிக்கவில்லை.

சில விநாடிகளுக்குப் பிறகு மற்றொரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. இம்முறை மீண்டும் அமைப்பாளர் ஒன். டூ. திரி என்று சொல்கிறார்.

இப்போது அந்த்ப் பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர். என்னால் முடியாது என அழுது கொண்டே திரும்புகிறார்.

திரும்பிய பெண், "I'm sorry. என்னால் நிச்சயமாக முடியாது; எனக்கு நீச்சல் தெரியாது" (என்று கூறியதாகத் தான் எனக்கு ஞாபகம்) என்று அழுது கொண்டே கூறியதில் மதிப்பெண்கள் பெற முடியவில்லையே என்ற ஏமாற்றமும், விமானப் படைக்கு சேர முடியாமல் போய்விடுமோ என்ற வருத்தமும் தெரிந்தது.



ஆனால் அதே ராணுவத்தில் தற்போதிருக்கும் வேலைப் பளுவும், அரசியலும் வீரர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க வைத்துள்ளது. இதற்கு காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் நிகழும் தற்கொலைகளை ஆதாரமாகக் கூறலாம். சென்ற ஆண்டு மட்டும் 1000 பேர் தற்கொலை செய்துள்ளதாக ஓர் பத்திரிக்கை செய்தி தெரிவிக்கிறது (டிசம்பர் மாதம் எங்கோ பார்த்தது). இதற்குக் காரணமாக, பெரும்பாலும் மேலதிகாரிகளின் அடக்குமுறை தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இப்படி அடக்குமுறையிலும், விடுப்பு கிடைக்காமல் தொடர்ச்சியாகப் பணிபுரிய செய்யச் சொல்லி கொடுக்கும் நிர்பந்தம். இப்படியாக இருக்கும் சமயங்களில், வீட்டிலிருந்து ஏதாவது ஓர் கெட்ட செய்தியைத் தாங்கி வரும் ஓர் கடிதம் அவர்களை தற்கொலைக்குத் தள்ளுகிறது எனக் குறிப்பிடுகின்றார்.

பயிற்சியிலேயே, Trainee-களுக்கு, அந்த அதிகாரி கூறிய முதல் வாசகம் (NatGeo), "I'm ..... From today you are going to be very afraid of me. Understand?", என்பது தான்.

பெங்களூரிலிருந்து சென்னைக்கு செல்லும் போது, என்னுடைய பெட்டியில் பல விமானப் படை வீரர்கள் பயணம் செய்தனர். (பெங்களூரில் ஏதோ ஓர் போட்டிக்காக கலந்து கொண்டு திரும்பினர்). அவர்களுக்கு வயது 20-23 வரை இருக்கலாம். நன்றாக ஆடிப்பாடிக் கொண்டு வந்தவர்கள், திடீரென்று அமைதியாயினர். காரணம் அவர்களின் மேலதிகாரி. சிறிது நேரம் கழித்து, ஒருவரிடம் பேச்சுக் கொடுத்த போது, அவரின் பேச்சில் விரக்தி அப்பட்டமாகத் தெரிந்தது. இந்தப் பணியில் சிரமங்கள் அதிகமிருப்பதாகவும் வெளிநாட்டில் சென்று படிக்க என்னென்ன வழிகள்; எவ்வளவு பணம் செலவாகும் என்பதைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டார். உங்களால், விலகி படிக்க செல்ல முடியுமா எனக் கேட்டதற்கு, '3 (அல்லது 2) ஆண்டுகளுக்கு முன்பாக பணி நிரந்தரமாக்கப்படுவதற்கு முன்பாக, விரும்பினால் விலகி சென்று விடலாம். எனது நண்பன் அது போல சென்ற ஆண்டு சென்றான்', என்பது போலக் கூறினார்.

நண்பியின் கணவர் ஒரு முறை, எப்படி குழுக்களை போருக்குத் தயார்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். வீரர்கள் போரில் முனைந்து சண்டை போடுவதற்கு தேசபக்தி மட்டும் அல்ல. எப்போதுமே குழுக்களை மொழிவாரியாகத் தேர்ந்தெடுப்பது தான் வழக்கம். அப்படி செய்யும் போது தான் வீரர்கள் மனம் விட்டு பேசி, இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்கின்றனர். அப்படி பகிர்ந்து கொண்ட நண்பர் மரணமடைய நேர்ந்தால், உடனிருப்பவர்கள், அதற்காக பழி வாங்க வேண்டும் என்ற ஆத்திரத்துடன் போர் புரிவர்' எனக் குறிப்பிட்டார்.

நான் எப்போதே படித்த மின்னஞ்சலைப் பற்றிக் கூறி இந்தப் பதிவினை முடித்துக் கொள்கிறேன்.

போரிலிருந்து நாடு திரும்பிய போர் வீரன், தனது பெற்றோருக்கு போன் செய்கிறான்.

"அம்மா நான் நாடு திரும்பி விட்டேன். வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறேன்"

"சந்தோசம். உனக்காக எல்லாம் காத்துக் கொண்டு இருக்கோம்"

"ஆனா அம்மா, என்னோட என் நண்பனும் வர்றான். என் கூட கொஞ்ச நாள் தங்கப் போறான்"

"அப்படியா சந்தோசம். அவனையும் கூட்டிக் கொண்டு வா. அவனுக்குத் தேவையான வசதி செய்து கொடுக்கிறேன்"

"ஆனா ஒரு சிக்கல். அவனுக்கு போர்ல, கண்ணிவெடி மீது கால் வைச்சதுல ஒரு காலும், ஒரு கையும் போயிடுச்சு. அவனால எங்கேயும் போக முடியாது. அவனை நம்ம கூடவே வச்சுக்கணும்னு ஆசைப்படுறேன்"

"அது எப்படிப்பா முடியும். கை, கால் இல்லாதவனை நம்ம கூடவே வச்சுக்க முடியுமா? அவனுக்குன்னு நல்ல இடம் பார்த்து செய்து கொடுக்கலாம்'

"இல்ல. அவன் என்னோட உயிர் நண்பன். என்னோட தான் இருக்கணும்னு ஆசைப்படுறேன்"

"அந்த மாதிரி இடைஞ்சலை வச்சிட்டு நாம எப்படி நிம்மதியா வாழ முடியும். நீ அவன மறந்துட்டு வீட்டுக்கு வா. அவனுக்கென்று ஏதாவது வழி இருக்கும். ஆண்டவன் பார்த்துப்பான்" என அவரது அப்பா சொல்ல மகன் தொலைபேசி இணைப்பைத் துண்டிக்கிறான்.

மறு நாள் காவல்துறையினர், அவனது பெற்றோரைத் தொடர்பு கொண்டு, "உங்கள் மகன் நேற்று உயரமான கட்டிடத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்" எனத் தெரிவிக்கின்றனர்.

பதறியடித்துக் கொண்டு, மருத்துவமனை சென்று மகனின் உடலைப் பார்க்கின்றனர். உடலைப் பார்த்த அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி. அவர்கள் மகனுக்கு ஓர் கையும், காலும் இல்லாததைக் கண்டு.

இந்தப் பதிவு ஓர் பார்வை மட்டுமே. கருத்தோ, தீர்வோ சொல்வதற்காக இல்லை.

ஒரு பக்கம், தேசபக்தி என அவர்களிடம் ஆயுதம் திணிக்கும் நாட்டு மக்கள்; அவர்களை பகடைக்காய்களாக மாற்றி அலையவைக்கும் அரசியல்வாதிகள் (படை குவிப்பது, வாபஸ் வாங்குவது, போரிட வைப்பது, வெளிநாடுகளுக்கு உதவியாக சமயங்களில் படைகளை அனுப்பி வைப்பது, ...); துன்புறுத்தும் சில அதிகாரிகள்; வேலைப் பளு என அவர்களின் கஷ்டங்கள் நீண்டுகொண்டே போகிறது.

உயிர் மற்றவர்களுக்காக இழப்பதற்காகவா? கண்டிப்பாக இல்லை. ஆனாலும் அவர்கள் சூழ்நிலைக் கைதிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தேசபக்தி என்ற பெயரால் நம்ப வைத்து, பலிகடாவாக்கியிருக்கிறோம். நீங்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் எப்படி அனுபவித்து வாழ்கிறோர்களோ அதே போல அவர்களுக்கும் அந்த ஆசை இருக்கும். நம்மால் ராணுவத்தில் சேர முடியாது; போரில் கலந்து கொள்ள முடியாது; நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ய முடியாது; ஆனால் நமக்காகவும், நாட்டிற்காகவும் இந்த தியாகத்தை செய்பவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்போம். (யாரும் இப்போது கொடுக்கவில்லை என்பதல்ல என் வாதம்; இந்த வரி, கொடுக்காதவர்களுக்கு மட்டும்). போரில் இறக்கும் போது கொடுக்கும், 5 லட்சமோ, 10 லட்சமோ மட்டும் அவர்களின் இழப்பிற்கு (அல்லது தியாகத்திற்கு) ஈடாகிவிடாது.

18 கருத்துகள் :

சம்மட்டி சொன்னது…

இரானுவ வீரர்களுக்கு மரியாதையில்லை என்பது வருத்தமான விசயம்தான். அதே சமயத்தில் தங்களை யாரும் கேட்க முடியாது என்று அப்பாவி மக்களை கற்பளிப்பது, ஊருக்கு திரும்பியதும் லோக்கல் ரவுடி மாதிரி துப்பாக்கியை காட்டி மிரட்டுவது போன்ற செய்திகள் ஊடகங்கள் வழியே தெரியவருவதாலும், ரானுவ கம்பார்ட்மென்டில் யாரவது தெரியாத்தனமாக ஏறிவிட்டால் அவர்களை எதிரிகள் மாதிரி துறத்துவது எல்லாம் கேள்விபடுவதால் அவர்கள் மரியாதை குறைவை பொதுமக்களுக்கு ஏற்படுத்திவிட்டது என்பதையும் மறுக்க முடியாது என்று நினைக்கிறேன். ரானுவ வீரர்கள் எதிரிகளை மட்டும் வேட்டையாடினால் பெருமைபடுபவர்களாக இருப்பர். வீரப்பன் விசயத்தில் அதிரடிபடைகளினால் பாதிக்கபட்ட மலைகிராம மக்கள் நிலையை நினைத்தாலும் வேதனையாக இருக்கிறது. வேலி பயரை மேயதவரை வேலி போற்றப்படக்கூடியது.

உங்கள் பதிவு மொத்ததில் நன்றாக இருக்கிறது
சம்மட்டி

ஸ்ருசல் சொன்னது…

jsri,

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

சம்மட்டி,

நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன்; அங்கொன்றும், இங்கொன்றுமாக சில தவறுகள் நிகழ்ந்திருக்கலாம். அது தறிகெட்டவர்களின், பொறுப்பற்ற செயல். காவல்துறையினரிலும் சில கறுப்பு ஆடுகள் இருப்பது போலத் தான்.

ஆனால், அதையே காரணம் காட்டி, ராணுவத்தை கலைத்து விடுவோம் என்று வைத்துக் கொள்வோம்.

நாம் நிம்மதியாக இருக்க முடியுமா? நீங்கள் சொல்லும் தவறைச் செய்பவர்கள், அயல்நாட்டவர்களாகவும், சமய சந்தர்ப்பம் தேடி அலையும் சில உள்நாட்டு சமூக விரோதிகளாகவும் இருப்பார்கள் என்பது என் கருத்து. அதற்காக, அவர்களின் செயலை நியாயப்படுத்துகிறேன் என்று என்னை தவறாக நினைக்க வேண்டாம்.

பண்பற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் செயல் முறைப்படுத்தப்பட வேண்டும்.

>>>உங்கள் பதிவு மொத்ததில் நன்றாக இருக்கிறது <<<<

மிக்க நன்றி.

துளசி கோபால் சொன்னது…

அருமையான பதிவு.

Pot"tea" kadai சொன்னது…

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்...

ஸ்ருசல் சொன்னது…

துளசி, பொட்டிக்கடை,

மிக்க நன்றி.

கைப்புள்ள சொன்னது…

அருமையான பதிவு ஸ்ருசல்! நாம் அமைதியாக வாழ்வதற்காகத் தன் உயிரையும் இழக்கத் துணியும் போர் வீரனும் ஒருவருடைய மகன், சகோதரன், கணவன் என்று ஒவ்வொருவரும் உணரத் தொடங்கினால் அவர்கள் செய்யும் சேவை அளப்பிடற்கரிது என்பது எளிதில் விளங்கும்.

நாட் ஜியோவில் வந்த அந்நிகழ்ச்சியின் பெயர் "மிஷன் உடான்". அது படமாக்கப்பட்ட விமானப்படை அகாடெமியைச் சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்கு சமீபத்தில் கிட்டியது. அதனைப் பற்றி நான் எழுதிய பதிவுகள்.

இந்திய விமானப் படை அகாடெமியிலிருந்து...1
இந்திய விமானப் படை அகாடெமியிலிருந்து...2

தருமி சொன்னது…

ஸ்ருசல்,
இரண்டு விஷயங்கள்:
(கண்டகார் என்று நினைக்கிறேன்) நமது விமானம் ஒன்று கடத்தப்பட்டு அதை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருச்ந்த நேரத்தில் letters to the editor-வந்த ஒரு கடிதம்; எழுதியது ஒரு ராணுவவீரர்: "நம் மக்கள் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் விடாமல் எல்லோரையும் நாம் காப்பாற்றியே ஆக வேண்டும் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். ஆனால் ஒரு போர் வந்தால் எவ்வளவு உயிர்ச்சேதமானாலும் ஒரு அடிநிலம் கூட விட்டுக்கொடுக்கக்கூடாது என்று சொல்லுகிறார்கள். ஏன், ராணுவ வீரர்களின் உயிர்களுக்கு மட்டும் எந்த மரியாதையும் இல்லை."

ராணுவ விமான ஓட்டிகளின் சம்பளம் vs சாதாரண (commercial)விமான ஓட்டிகளின் சம்பள வித்தியாசம்..??!!

ஸ்ருசல் சொன்னது…

தருமி,

சரியாகச் சொன்னீர்கள்.

2. சமீபத்தில் கூட இதைப் பற்றி ஓர் கட்டுரையோ, செய்தி தொகுப்போ படித்ததாகவோ / பார்த்ததாகவோ ஞாபகம்.

அதிக சம்பள வேறுபாடு இருப்பதால், சில விமானங்களை இயக்குவதற்கு ஆட்கள் இல்லாமல் கஷ்டப்படுவது போல் சொல்லியிருந்தார்கள்.

Border Forces என்று நினைக்கிறேன். ஆதலால் இவர்களுக்கு 500 ரூபாயாக இருந்த படியை 1500 ஆக அதிகரிக்க முடிவெடித்திருக்கிறார்கள் :(

இதுவெல்லாம் எம்மாத்திரம். தனியார் துறைகளில் 1,50,000 வரை தருகிறார்கள்.

இவர்களுக்கு ஏன் ஏற்படுகிறது எனவும் தெரிந்திருக்கிறது. ஆனாலும் அலட்சியம்.

தெரியாமல் செய்வது துரோகம். தெரிந்தே செய்வது பச்சை துரோகம் என்று எங்கோ படித்த ஞாபகம்.

ஸ்ருசல் சொன்னது…

கைப்புள்ள,

மிக்க நன்றி. படித்துப் பார்த்தேன். நல்ல தகவல்கள். விவரமாகக் கூறியிருக்கிறீர்கள். காமெடி, சீரியஸ் (இது, பாஞ்சாலங்குறிச்சி) காட்சி இரண்டும் வெளுத்து வாங்குகிறீர்கள்.

ஸ்ருசல் சொன்னது…

பாரதி,

மிக்க நன்றி. சிரிக்க வைத்ததற்கும் சேர்த்து தான். இப்போது நினைத்தாலும் சிரிக்க வருகிறது. எந்த மன நிலையில் நீங்கள் அப்படி டைப் செய்திருப்பீர்கள் என!

>>>எனக்குத் தடையாகத் தோன்றுவது உங்களுக்கு விதிவிலக்காகத் தோன்றும், நீங்கள் விதிவிலக்கு என்று சொன்னால் நான் அதைத் தடையென்பேன். இந்த விவாதம் நம்மை எங்கும் இட்டுச் செல்லாது. இதை இங்கு நிறுத்திக் கொள்வோம். புதிய பதிவில் சந்திப்போம்.

<<<<<

:))

நன்றி.

G.Ragavan சொன்னது…

ஸ்ருசல்.....நான் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேனே....அதக் காணலையே...

ஸ்ருசல் சொன்னது…

ராகவன்,

இல்லை. உங்களிடமிருந்து எந்த பின்னூட்டமும் வரவில்லை. எதற்கும் blogger-ல் தேடிப்பார்க்கிறேன்.

நன்றி.

ஸ்ருசல் சொன்னது…

ராகவன்,

தேடிப்பார்த்தேன். "No Unmoderated Comments Found", என்று சொல்கிறது. திரும்பவும் அதனைப் பின்னூட்டமிட வேண்டுகிறேன்.

நன்றி.

பத்மா அர்விந்த் சொன்னது…

ஸ்ருசல்: நாட்டை விட்டு போய் போராடும் ராணுவ வீரர்களுக்கு கடிதங்கள் எழுதி, மலர் அனுப்பி என்று பலவகையில் உற்சாகம் தந்தாலும் நிறைய அமெரிக்க வீரர்கள் திரும்பி வரும்போது அவர்கள் வாழ்க்கையே மாறிவிட்டிருக்கிறது என்பது சோகமான விஷயம். நினைத்து பார்த்தால் எல்லையில் இருக்கும் வீரர்கள் இழப்பது எத்தனை. தங்கள் குடும்பத்தோடு செல்வழிக்கும் காலம், சேர்ந்து வரும் நினைவுகள், குழந்தைகளின் வளார்ச்சியில் பங்கெடுக்க முடியா நிலை. அடிப்படை வீரர்களின் ஊதியமும் குறைவு

மலைநாடான் சொன்னது…

ஸ்ருசல்!
அருமையான பதிவு. இராணுவம் என்பது பொறுப்புணர்வுடன் செயற்படும் ஒரு அமைப்பாக இருக்க வேண்டுமெனில், அது அறிவூட்டம் பெற்ற, தேசியப் பற்றுடைய அமைப்பாக இருக்க வேண்டும். சுவிற்சர்லாந்து இராணுவக் கட்டமைப்பு இதற்கு சிறப்பான உதாரணமாக இருக்குமென நினைக்கின்றேன்.

ஸ்ருசல் சொன்னது…

தேன் துளி, மலைநாடன் நன்றி.

சுவிட்சர்லாந்து ராணுவமே இல்லாத நாடு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

மலைநாடன், விளக்கவும்.

மலைநாடான் சொன்னது…

சுவிஸில் இராணுவம் உண்டு ஸ்ருசல். இதுப்றி ஒரு பதிவை தருவது சுவாரச்சியமாக இருக்கும் என நினைக்கின்றேன். விரைவில் தர முயற்சிக்கின்றேன்.

ஸ்ருசல் சொன்னது…

malainadan,

that'll be great. looking forward to that.