திங்கள், மார்ச் 06, 2006

* பல்லாங்குழியின் வட்டம் *

நேரம் நள்ளிரவைத் தொட்டுக்கொண்டிருந்தது. தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் வித்யா. தூக்கம் கண்ணை ஒட்டாமல் போகவே, தன்னுடைய வாக்மேனில் ரேடியோவைத் திருப்பினாள்.

"திருச்சி வானொலி நிலையம். நேரம் இரவு 10.30. அடுத்து வருவது திரைச் செண்டு"

'நல்ல பாட்டு போடுங்கடா', என நினைத்துக் கொண்டாள்.

"இந்தப் பாடல் இடம்பெற்றத் திரைப்படம் ஆனந்தம். பாடியவர்கள் உன்னி கிருஷ்ணன், ஹரிணி"

'ஆஹா. இவனைப் பத்தி நினைக்கக் கூடாது; தூங்கலாம்னு நினைச்சா இப்ப ரேடியோல வேறயா?. இவங்க எல்லாம் இவனுக்குத் தூதா? இன்னைக்குத் தூங்குனா மாதிரித்தான்', என அலுத்துக் கொண்டு காதை கூர்மையாக்கினாள்.

காரணம் ஹரிணி; அவனுக்குப் பிடித்த பாடகி. ஹரிணியின் பாடலைக் கேட்டால், இவள் பேசிக்கொண்டிருப்பது கூடத் தெரியாமல், பாடலில் லயித்து விடுவான். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ஹரிணி பாடிய பாடல் இவன் வீட்டு டி.வியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இவள் பேசிக்கொண்டிருப்பதை மறந்து டி.வியில் பாட்டை ரசித்துக் கொண்டிருந்தான்.

"ஹலோ. நான் சொல்றது புரியுதா...."

"ம்"

"என்ன புரிஞ்சது?"

"ம். அது..."

"ஹலோ............", சிறிது கோபத்துடன் கூறியவள், பின்னர் குரலைத் தாழ்த்தி, "சரி. நான் அப்புறம் பேசுறேன்", என்றாள்.

"இல்ல. இல்ல சொல்லு கேட்டுக்கிட்டுத் தான் இருக்குறேன்"

"இல்ல நீ முதல்ல பாட்டை பார்த்து முடி. உனக்கு அப்புறம் ஃபோன் பண்ணுறேன். உனக்கு பாட்டு தான் முக்கியம்"

"Sorry. நான் ...." என ஆரம்பித்து, என்னவென்று கூறி சமாளிப்பதெனத் தெரியாமல் நிறுத்தினான்.

"இங்க ஒருத்திப் பேசிட்டு இருக்கேன். அது கூடத் தெரியாம நீ டி.வி. பார்த்துக்கிட்டு இருக்குற. உனக்கு ஹரிணி பாடுன பாட்டு தான் முக்கியமாப் போச்சு இல்ல?"

"Sorry Sorry. சொல்லு நான் கேக்குறேன். டி.வியை ஆஃப் பண்ணிட்டேன்"

அன்று ஆரம்பித்த சண்டை ஒருவாறு முடிவிற்கு வந்தது. அந்த சண்டைக்குக் காரணமான அதே ஹரிணி பாடிய பாடல். அவனுக்குப் பிடித்த பாடகி என்ற காரணத்திற்காக, விரும்பிக் கேட்டாள். அதன் பிறகு எப்போது தூங்கினாள் என அவளுக்கே நினைவில்லை.



வியாழக்கிழமை.

'நேத்து ஃபோன் பண்ணியிருக்கணும் பண்ணலை. இன்னைக்காவது போன் பண்ணுவானா?', என அவனின் தொலைபேசி அழைப்பிற்காக காத்திருந்தாள். புதன்கிழமை, புதன்கிழமை தவறாமல் அவனிடமிருந்து, இவளுக்கு அழைப்பு வந்து விடும். 'நேற்று ஏன் தவறியது', என்ற யோசனையிலும், 'இன்றாவது அழைப்பானா', என்ற எதிர்பார்ப்பிலும் மாலையிலிருந்து எங்கும் நகராமல் ஹாலிலேயே அமர்ந்திருந்தாள்.

தொலைகாட்சியில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அறியாமலேயே வேண்டா வெறுப்பாக டி.வியின் மீது கண்கள். மனதும், காதுகளும் தொலைபேசியை நோக்கி மையம் கொண்டிருந்தது. கடிகாரத்தின் விநாடி முள்ளை விட வேகமாகச் சுற்றி, நேரத்தை எண்ணிக்கொண்டிருந்தாள். நீண்ட காத்திருப்பிற்குப் பின் தொலைபேசி அடித்தது. அவளது அம்மாவைக் கடந்து செல்லும் வரை மெதுவாகவும், பேசுவது அவனாகத் தானிருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடும் தொலைபேசியை நோக்கி நடந்து, ரிசீவரை காதில் வைத்தாள்.

"ஹலோ", என மெதுவாக உச்சரித்தாள்.

"ஹலோடி. நான் தான்"

சிறிது நாட்களாக நின்று போன உலகமே இப்போது தான் சுற்ற ஆரம்பித்தது போல் உற்சாகமானாள்.

"ம். சொல்லு சாப்பிட்டியா?"

"ம். ஆச்சு"

"நேத்து ஏன் போன் பண்ணல?"

"அதுவா. கொஞ்சம் வேலை இருந்தது. ஏன் எதிர்பார்த்தியா?"

"ம். அதெல்லாம் இல்ல. Wednesday பண்ணுவியேன்னு சும்மா கேட்டேன்"

ஏதாவது ஏடாகூடாமாகச் சொல்வானே எனக் காத்திருந்தாள்.

"ஓ அப்படியா?" எனபதைத் தவிர அவன் வேறெதுவும் சொல்லவில்லை.

"அப்புறம் நேத்து ஏதோ மெடிக்கல் செக்-அப் இருக்கு. சேலம் போகணும்னு சொல்லிட்டு இருந்த. என்னாச்சு?. நீ வீட்டுல இருக்க மாட்டியோன்னு நெனச்சு தான் நான் ஃபோன் பண்ணல."

'ஆமா இப்ப சொல்லு. நீ ஃபோன் பண்ணும் போது இருக்க முடியாதுன்னு தான் போகலை', என்று கூற நினைத்தாள். ஆனால்,

"ஓ அதுவா. நேத்து வேண்டாம். இன்னைக்குப் போகலாம்னு அம்மா சொல்லிட்டாங்க", என்று தான் வந்தது.

"சரி இன்னைக்காவது போனீங்களா?"

"வேண்டாம்; நாளைக்குப் போகலாம்னு நான் சொல்லிட்டேன்."

"இன்னைக்கு ஏன் போகலை?"

"சும்மா தான்."

"உங்கம்மா ஏன்னு கேட்கலையா?"

"ம். கேட்டாங்க. ப்ச். அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எல்லாம் உங்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது"

சிறிது நேரம் எதை எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தனர்.

"சரி, சென்னைக்கு எப்ப வர்ற?", என்று ஆரம்பித்தான்.

"சென்னைக்கா? எதுக்கு?"

"இங்க வந்து வேலை தேடலாம் இல்லையா? சும்மா வீட்டுல இருந்து அம்மாவும், மகளும் அப்படி என்ன தான் பண்ணுறீங்களோ?"

"ம்ம்ம்ம்ம் அங்க வந்துட்டா எங்க அம்மாவுக்குத் துணையா யார் இருப்பாங்க?"

"இங்க வந்து எனக்குத் துணையா இருன்னு தானே உன்னைக் கூப்பிடுறேன். வேலைக்கு டிரை பண்ணுறேன்னு வீட்டுல சொல்லிட்டு இங்க வர வேண்டியது தானே?"

"சும்மாவே வீட்ட விட்டு வெளிய அனுப்ப மாட்டாங்க. நீ வேற சென்னைல இருக்குறன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், என்னை அங்க அனுப்புறதுக்கு எங்க அம்மா என்ன லூசா?"

"அத்தைக்கிட்ட நான் சொன்னேன்னு சொல்லு. அனுப்பிடுவாங்க"

"அத்தையா? எவ்ளோ கொழுப்புடா உனக்கு?'

"ஏன்? என்ன தப்பு? அத்தை தான்"

"நான் தான் உன்னைக் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லியிருக்கேன்ல. பின்ன என்ன அத்தை? அதுவுமில்லாம, போன் அடிச்சாலே அம்மா டென்ஷன் ஆகிடுறாங்க. எப்ப இவளை கவுத்தி கூட்டிட்டு போய்டுவானோன்னு ஒரு பயத்துடோ பாக்குறாங்க"

"நான் உன்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லியிருக்கேனே. என்னைக் கல்யாணம் பண்ணாம பின்ன யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போற?"

"நல்ல பணக்காரப் பையனா பார்த்து கல்யாணம் பண்ணிப்பேன்"

"அப்புறம்?"

"அதுவுமில்லாம நான் ஏன் வேலை தேடனும்? என்னால எல்லாம் வேலை பார்க்க முடியாதுப்பா"

"ஒரு வேளை வர்றவன் உன்னை வேலைக்கு போகச் சொன்னான்னா?"

"என்னைய ஆளை விட்டுடுறா சாமின்னு கால்ல விழுந்துடுவேன். என்ன வேணுன்னாலும் சொல்லு வேலைக்கு மட்டும் அனுப்பாதேன்னு சொல்லிடுவேன்"

"பின்ன என்ன பண்ணுறதா தான் ஐடியா?"

"சும்மா அப்படியே, அவன் காரை எடுத்துட்டு, டெய்லி அவனை ஆபிஸ்ல டிராப் பண்ணிட்டு. வீட்டுல வந்து படுத்து தூங்கிட வேண்டியது தான்."

"பயப்படாத. உன்னை வேலைக்கெல்லாம் அனுப்ப மாட்டேன்"

"லூசு சும்மா இருக்க மாட்ட? என் ஃபிரண்ட் ஒருத்தி UK-ல இருக்குறான்னு சொல்லியிருக்கேன் இல்லையா? அவ அப்படித்தான்; அவளோட ஹஸ்பெண்ட் ஆபிஸ் போற வரைக்கும், உடம்பு சரியில்லைன்னு படுத்துப்பாளாம். அவர் சாப்பாடு செஞ்சு வச்சிட்டு, கிளம்பி போன பிறகு, இவ நல்லா சாப்பிட்டுட்டு டி.வி பார்ப்பாளாம்."

"ஆ!"

"அடிப்பாவின்னு சொன்னேன். 'அவருக்கு என்ன வேலை? சும்மா செய்யட்டும் என்ன தப்பு'-ன்னு சொல்லுறா? இம் என்ன பண்ணுறது?"

"இப்படி எல்லாம் நடக்குதா?. இங்க பாரு, வித்யா. உனக்கு அந்த சிரமமே வேண்டாம். என்கிட்ட சொன்னா நானே உனக்கு எல்லாம் செஞ்சு தர்றேன். உன் துணியெல்லாம் கூட நானே வாஷ் பண்ணுறேன். நீ நல்லா வீட்டிலேயே சாப்பிட்டிட்டு படுத்து தூங்கு. என்ன சொல்ற?"

"ரொம்ப பேசாத"

பேசிக் கொண்டே ஷோபாவில் சாய்ந்தவள், டி.வியில் 'பல்லாங்குழி பாடல்' ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததைக் கவனித்தாள்.

"உனக்கு இந்தப் பாட்டு பிடிச்சிருக்கா?"

"எந்தப் பாட்டு?"

"பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்"

"என்ன படம்?"

"ஆனந்தம்னு நினைக்குறேன்"

"ஓ அதுவா.. S.A.ராஜ்குமார் படம் இல்ல?. எனக்கு சுத்தமா பிடிக்காது"

சட்டென யாரோ கன்னத்தில் அறைவதைப் போல உணர்ந்தவளின் கண்களில் இருந்து நீர் பொல பொலவென வர ஆரம்பித்தது. சில விநாடிகள் நிசப்தம்.

"ஹலோ என்ன ஆச்சு? எதுக்கு கேட்ட?"

"அது எப்படி பிடிக்காம போகும்?"

"ஏன்? எனக்கு S.A.ராஜ்குமார் பாட்டுனாலே பிடிக்காது"

"அது ஹரிணி பாடுன பாட்டு"

"ஹரிணி பாடுனதா? அப்படியா என்ன? எனக்குத் தெரியாதே"

"பொய் சொல்லாத..."

"இல்லை சத்தியமா எனக்குத் தெரியாது. S.A.ராஜ்குமார் பாட்டுன்னு மட்டும் தெரியும். அதனாலத் தான் நான் ஒரு நாள் கூட முழுசாக் கேட்டதில்லை. மத்தபடி அது ஹரிணி பாடுனதுன்னு எனக்குத் தெரியாது."

"உனக்குப் பிடிச்சவங்க பாடுன பாட்டு உனக்கு எப்படி பிடிக்காம போகும்?. உனக்குப் பிடிச்சவங்க ஏதாவது பண்ணுணா எப்படி வெறுக்கத் தோணும்?"

"இல்ல வித்யா. உண்மையிலேயே எனக்குத் தெரியாது. அது ஹரிணி பாடுனதுன்னு. தெரிஞ்சிருந்தா கண்டிப்பா கேட்டிருப்பேன்"

"நாளைக்கே நான் ஏதாவது செஞ்சு உனக்குப் பிடிக்காம போனா இப்படித் தானே பேசுவ?"

"இல்ல. அப்படியெல்லாம் இல்ல"

அவளை சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. எப்படி தெரியாமல் போனது, அது ஹரிணி பாடியதென்று? அதிலிருந்து அந்தப் பாடலை எப்போது கேட்டாலும் அவன் ரசிக்க ஆரம்பித்தான்.

"ஹலோ. நான் தான்"

"இம். சொல்லு" என ஆரம்பித்தவள், சிறிது இடைவெளி விட்டு "சாப்பாட்டியா?", எனத் தொடர்ந்தாள்.

"இம். மேடத்துக்கு இன்னும் கோபம் போகலையா? இங்க பாருங்க மேடம் உண்மையிலேயே எனக்குத் தெரியாது அது ஹரிணி.... " என அவன் முடிப்பதற்குள்....

"ப்ச் அப்படியெல்லாம் இல்ல"

"ம்"

"அப்புறம்"

"அப்புறம் நீ தான் சொல்லு. Sorry உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா"

"அதெல்லாம் இல்லை"

"அப்புறம், அந்தப் பாட்டைக் கேட்டேன். ரொம்ப நல்லாயிருக்கு."

"ஓ"

"ஹரிணி பாடினதுன்னு எனக்கு நீ சொல்லித் தான் தெரியும்."

"ம்"

"ரொம்ப நல்லாப் பாடியிருக்காங்க"

"ம்"



அதிலிருந்து அவர்கள் இருவருக்கும் அந்தப் பாடலே சொந்தப் பாடலாகி விட்டது. பல தருணங்களில் இணைந்து ரசித்திருக்கிறார்கள். அந்தப் பாடலை ஒளிபரப்பினால் இமை கொட்டாமல் பார்ப்பது அவளுக்குத் வாடிக்கையாகி விட்டது. அது இன்று வரையும் தொடர்கிறது. ஆம். அவனின் மரணம் நிகழ்ந்து பல ஆண்டுகள் கழித்தும் கூடத் தான். அவனின் நினைவாக அவளிடம் இருக்கும் ஒரே சொத்து அந்தப் பாடல் மட்டுமே. அந்தப் பாடல் ஒளிபரப்பப்படும் போது அவன் நினைவுகளினால் அவள் தவித்துப் போவதை யாரும் அறிவதில்லை; அவள் கணவன் உட்பட.

இத்தனை ஆண்டுகளில் அவள் கணவன் எவ்வளவோ முறை வற்புறுத்தியும் கூட, ஒரு நாள் கூட டிரைவர் சீட்டில் கால் வைக்கவும் அவளுக்கு மனது வந்ததில்லை. ஏன் என்பது இந்த உலகில் அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

ஸ்ருசல்


குறிப்பு: எனக்குக் கதைகள் வாசிக்கப் பிடிக்காது. புகழ்பெற்ற கதைகளும், Science Fiction புதினங்களும் விதிவிலக்கு. ஆனாலும் நாமும் ஓர் கதை எழுதிப் பார்த்தால் என்ன என முயன்று சில கதைகள் எழுதிப் பார்த்தேன். ஒன்றும் சரிவரவில்லை. கடைசியாஇவனுங்களுக்கு இதே வேலையாப் போச்சு. கதை மாதிரியே நல்லா கதை விடுறான். இவனெல்லாம் என்ன கதை எழுதுறான்?.க எனக்குப் பிடித்தத் தலைப்பிலிருந்து எழுதியது தான் இந்தக் கதை (இது கதையா எனத் தெரியவில்லை). மேலும் காதல் கதை எழுதுவது தான் சுலபம் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆகையினால் தான் இதைத் தேர்ந்தெடுத்தேன். ஒரு வேளை இந்தக் கதை சரியில்லாமல் போனால், அதை சரி செய்யும் நோக்கில் இன்னொரு கதை எழுதும் எண்ணம் முற்றிலும் கிடையாது. என் சேவை தமிழ் நல்லுலகத்திற்குத் தேவை எனக் கருதி, எப்படியாவது உங்களின் ஆதரவை எனக்குத் தெரிவித்து விட வேண்டும் என விபரீதமான முடிவுகளை எடுத்தால், உங்களை அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.

உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

10 கருத்துகள் :

siva gnanamji(#18100882083107547329) சொன்னது…

really nice...keep writing

பெயரில்லா சொன்னது…

nanba katahi super.ava enda kalai seatla vaikali.konjam solluda.plz.seekirame LOVE pannuda.niraya kathai kidaikkum.o.k

anbudan
ponraj.

சிங். செயகுமார். சொன்னது…

harinikki arppanamaa! m nataththungka

ஸ்ருசல் சொன்னது…

அய்யா சிவஞானம்ஜி,

ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தான் தைரியம்!

என்னையும் நம்பி, நல்லா எழுதியிருக்கேன்னு சொல்லிட்டீங்களே!உங்களூக்கு கோடானு கோடி நன்றிகள்.

சிங். ஜெயக்குமார்,

என்ன சொல்ல வருகிறீர்கள் எனத் தெரியவில்லை. எனினும் உங்களின் பொறுமைக்கு எனது நன்றி. ;)

ஸ்ருசல் சொன்னது…

நண்பரே பொன்ராஜ்,

இப்படி எல்லாம் குறுக்கு கேள்வி கேட்டா, எனக்கு சொல்லத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சா சொல்லியிருக்க மாட்டேனா, கதையிலேயே. எல்லாம் ஒரு தாக்கத்தை உண்டாக்குறதுக்குத் தான்.

எனினும், என்னுடைய கதையையும் படித்து, அதில் கேள்வியும் கேட்ட உங்களின் ஆர்வத்தைப் பார்த்தால் எனக்கு மெய் சிலிர்க்கிறது. :)

உங்களின் அறிவுரைக்கு நன்றி.

தருமி சொன்னது…

கால வழுவமைதி (அப்டின்னா என்ன?) இருக்கோ..உங்க கதையில். அந்தப் பாட்டு வந்து எத்தனை வருஷம் இருக்கும். ரெண்டு..மூணு..? ஆனா நீங்க, "அவனின் மரணம் நிகழ்ந்து பல ஆண்டுகள் கழித்தும் கூடத் தான்." அப்டின்னு எழுதி இருக்கீங்கலே.

நான் பின்னூட்டம் எழுத நினைத்தது உங்களின் இப்பதிவிற்கு முந்திய & பிந்திய பதிவுகளுக்குத் தான். ஆனால் அவைகளுக்கு எழுதினால் மிக நீண்ட பின்னூட்டமாகி விடுமோ என்ற தயக்கத்திலேயே...

ஸ்ருசல் சொன்னது…

தருமி அவர்களே,

Anachronism-ம் என்று சொல்ல முடியாது என நினைக்கிறேன். ஏன் என்றால், அந்தப் பாடல் 2000-ல் வெளிவந்தது. திரைப்படம் 2001-ல் வெளிவந்தது. எழுதும் போதே நானும் யோசித்தேன். 6 ஆண்டுகளை, பல ஆண்டுகள் எனச் சொல்ல இயலுமா என!

மற்ற பதிப்புகளைப் பற்றியும், உங்களின் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

துளசி கோபால் சொன்னது…

முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

( தப்பா ஒண்ணும் சொல்லலைதானே?)

உங்க ஃபோட்டோ நல்லாஇருக்கு.

ஸ்ருசல் சொன்னது…

துளசி அவர்களே,

தவறேதும் இல்லை.

ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

Udhayakumar சொன்னது…

ராசா, நீங்க எழுதின கதை நல்லா இல்லைன்னு என் பதிவில போட்டீங்களே ஞாபகம் இருக்கா??? உஙகளுக்கு தன்னடக்கம் ரொம்ப அதிகம்ன்னு இந்த கதை படிச்சதுக்கு அப்புறம்தான் தெரிய வந்தது. நடத்துங்க நடத்துங்க...