ஞாயிறு, டிசம்பர் 24, 2006
சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்
1. ஜாகே ஹே
படம்: குரு
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், சித்ரா
இசை: ஏ.ஆர்.ரகுமான்
இந்தியாவின் தலைசிறந்த இசைக் கூட்டணியான மணிரத்னம் - ஏ.ஆர்.ரகுமான் அணியுடன், குல்சார் 'தில் சே' (உயிரே) படத்திற்குப் பிறகு இணைந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக குரு பாடல்கள் தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் சிறந்த பாடலான 'தேரே பினா' (ஏ.ஆர்.ரகுமான், சின்மயி பாடியது) ஏற்கனவே பல இசைப் பட்டியல்களில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அப்பாடலும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சின்மயி இப்பாடலில் மூன்று விதமாக குரலை மாற்றி வித்தியாசப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக 4:08-4:14 இடத்தில் 'தேரே பினா' என்று அவர் பாடுவது அருமை.
எனக்கு 'தேரே பினா' பாடல் பிடித்திருந்தாலும், 'ஜாகே ஹே' பாடலை நான் மிகவும் விரும்பிக் கேட்பதற்குக் காரணம், இப்பாடலில் இழைந்தோடும் சோகமும், பாடலின் நடுவில் வரும் இசையும், குழுவினரின் குரலும் தான். பாடலின் ஆரம்பத்தில் சித்ராவின் குரலையொட்டி வரும் குழுவினரின் ராகமும், வயலின் இசையும், மீண்டும் 1:50-ல் ஒரு முழக்கத்துடன் குழுவினரின் ராகம் தொடர்வது இனிமை. ரகுமான், மிக மெதுவாக, சித்ராவினைத் தொடர்ந்து பாடிவிட்டு, 3:21-ல் ரகுமான் சுருதியை உயர்த்தி பாடுவதும், 4:28-ல் அதனைத் தொடர்ந்து வரும் குழுவினரின் முழக்கமும் அற்புதம்.
இப்படத்தில் இடம்பெற்ற மற்ற இரு பாடல்களான 'பரிசே ரோ' (ஸ்ரேயா கோசல் பாடியது), பாடலையும், 'ஏக் லோ' (இசையமைப்பாளர் பப்பி லஹரி பாடியது) பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் அருமை.
2. கண்ணுக்குள் ஏதோ
படம்: திருவிளையாடல் ஆரம்பம்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், ரீட்டா
இசை: டி.இமான்
இப்படம் நான் எதிர்பார்த்ததை விட நன்றாக வந்துள்ளது. வெட்டுகுத்து படங்களுக்கு நடுவில், நகைச்சுவையோடு இப்படம் அமைந்துள்ளது சிறப்பு. தனுஷின் தம்பியாக வரும் சிறுவனின் நடிப்பு அழகு. இப்படத்தில் மூன்று பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. அவற்றில் 'கண்ணுக்குள் ஏதோ' பாடலுக்குத் தான் முதலிடம். இப்பாடலுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள, 'லூப்' மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. ரீட்டாவின் குரல் தேன்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலான, 'தெரியாமா பார்த்துப்புட்டேன்' பாடலின் சில இடங்களில் ராகம் (பாடல் வரிகள் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம்) நன்றாக இருக்கிறது. உதாரணமாக, 1:50 ல் வரும் (சுஜாதா பாடியது)
'ரொம்ப பாசந்தான் எம் மேலதான்.
அதச் சொன்னா உனக்குப் புரியுமா'
2:17ல் வரும்
'கண்ணில் சிறு தூசி பட்டா
காத்தைக் கூட நிறுத்து வைப்பான்'
என்ற இடங்களைக் குறிப்பிடலாம்.
மற்றொரு பாடலான, 'விழிகளில் விழிகளில் விழுத்து விட்டாய்' பாடல் கேட்டது போலிருந்தாலும், நிச்சயமாக ஹிட்டாகும் என்பதில் சந்தேகமில்லை. 'ஒரு நாள் மழை தான் என நினைத்தேன்' என்ற இடத்தில் வரும் ராகம் ஏதோ ஒரு பழைய பாடலை ஞாபகப்படுத்துகிறது. ஆனால் அந்தப் பாடல் நினைவிற்கு வர மறுக்கிறது.
3. நீ முத்தம் ஒன்று கொடுத்தால்
படம்: போக்கிரி
பாடியவர்கள்: கே.கே., சுவேதா
இசை: மணிசர்மா
நீண்ட நாட்களுக்குப் பிறகு மணிசர்மா இசையமைக்கும் தமிழ் படம். கடைசியாக 'ஷாஜஹான்' படத்திற்கு இசையமைத்தார் என்று நினைக்கிறேன். சென்ற பாடலைப் போலவே இந்தப் பாடலுக்கும் 'லூப்' மிக சிறப்பாக அமைந்துள்ளது. பாடல் முழுவதுமே ராகம் நன்றாக வந்துள்ளது. முக்கியமாக
'உனை வாசித்தேன் (2:25)
நேசித்தேன்
சுவாசித்தேன்
யாசித்தேன்'
இடத்திலும்,
'உனை சந்தித்தேன் (3:50)
தித்தித்தேன்
ஜீவித்தேன்
உயிர் தேன் தேன்'
இடத்திலும் அருமை. அதிலும் 3:50-ல் ஒவ்வொரு வார்த்தையையும் பெண் குரல் அதனை திருப்பிச் சொல்வது அழகு. பாடலின் இடையில் இடம்பெற்ற தமிழ்-பாப், பாடலுக்கு மேலும் மெருகேற்றுகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள, சுசித்ரா பாடிய 'என் செல்ல பேரு' பாடலுக்கும், 'ஜூன் மாதம் தொன்னுத்தெட்டில்' (ஜே ஜே) பாடலுக்கும் சிறிது கூட வித்தியாசமில்லை.
4. ஜூன் போனால் ஜூலைக் காற்றே
படம்: உன்னாலே உன்னாலே
பாடியவர்கள்: கிரிஷ், அருண்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இப்பாடலின் ஆரம்பம் அப்படியே Blue - 'All Rise' பாடலை அப்படியே ஒத்துள்ளது. All Rise பாடலின் 0:09 டிரம்ஸூம், இப்பாடலின் 0:17-ல் இடம்பெற்ற டிரம்ஸூம் ஒன்றே. அது மட்டுமல்லாமல், பாடலின் ராகமும் அப்படியே எடுக்கப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜிற்கு மிகவும் பிடித்த பாடல் 'All Rise' என்று ஒரு பேட்டியில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
'வேட்டையாடு விளையாடு', பாடலில் இடம் பெற்ற 'பார்த்த நாள் முதல் நாளாய்' பாடலின் ஆரம்பத்தில் வரும் மவுத் ஆர்கனும் 'Al' Rise' பாடலைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது என்பது என் கருத்து.
ஆனால் இப்பாடல் ஹிட்டாகும் என்பது மட்டும் நிச்சயம். கே.கே., மஹாலக்ஷ்மி பாடிய 'முதல் முதலாய்' பாடலும் நன்றாக வந்துள்ளது. 1:10-ல் இடம்பெற்ற பெண் குரல் யாருடையது என்பது தெரியவில்லை.
5. பல்லாண்டு பல்லாண்டு
படம்: ஆழ்வார்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், செந்தில் தாஸ்
இசை: ஸ்ரீகாந்த் தேவா
நல்லதொரு மெலோடி பாடல். உன்னிகிருஷ்ணனின் குரல் பாடலுக்கு வளம் சேர்த்துள்ளது. மனிதருக்கு எவ்வளவு சிறப்பான குரல்!. இது போன்ற பாடல்கள் அவருக்கு இனிப்பு சாப்பிடுவது போல. மேலும், முதல் சரணத்திற்கு முன்பு வரும் வீணை இசை இனிமை.
இதே படத்தில் மதுஸ்ரீ பாடிய 'பிடிக்கும் உன்னை' பாடலின் ஆரம்பத்தில் வரும் 'ஹா ஹா' என்று இடம்பெறும் கோரஸ் அப்படியே எனக்கு 'Gregorian - Master of Chanting' ஆல்பத்தை ஞாபகப்படுத்துகிறது. எப்போது கேட்டாலும் திகட்டாத பாடல்கள் இந்த chanting. முக்கியமாக 'The Gift' எனக்கு மிக மிக பிடித்த பாடல். இதே பாடலில் 0:06 முதல், அப்படியே 'வாலி', படத்தில் இடம்பெற்ற 'ஏப்ரல் மாதத்தில்' பாடலை அப்படியே தழுவி இசையமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பீட். மதுஸ்ரீ-க்கு இன்னும் நல்ல பாடல் தமிழில் அமையவில்லை. 'குரு' படத்தில் 'பாஸி லகா' பாடலில் 2:07 'காலா ஹே' என்று ஒரு சிரிப்புடன் சரணத்தை ஆரம்பிப்பது அற்புதம்.
6. அற்றைத் திங்கள்
படம்: சிவப்பதிகாரம்
பாடியவர்கள்: சுஜாதா
இசை: வித்யாசாகர்
இப்பாடல் சுஜாதாவின் குரலுக்காகவும், இசைக்காகவும், 0:27 இடத்தில் வரும் 'காணுகின்ற காதல் என்னிடம்' என்ற ராகத்திற்காகவும் அதனையொட்டி வரும் இசைக்காகவும் மிகவும் பிடிக்கும். கரு. பழனியப்பன், வித்யாசாகர் கூட்டணியில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் இக்கூட்டணியின் மற்ற இரு படங்களின் தரத்தில் பாதியைக் கூட எட்டவில்லை.
ஸ்ருசல்
சனி, நவம்பர் 04, 2006
சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்
1. உன் பார்வையில் பைத்தியமானேன்
படம்: உனக்கும் எனக்கும்
பாடியவர்கள்: கார்த்திக், சுமங்கலி
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
வழக்கம் போல, தேவி ஸ்ரீ பிரசாத், தெலுங்கில் வெற்றி பெற்ற தனது படத்தின் பாடல்களை அப்படியே தமிழிலும் கொடுத்துள்ளார். ஆனால் இம்முறை அதே படத்தின் பாடல்கள். தெலுங்கை விட, தமிழில் படம் நன்றாக அமைந்துள்ளது என்பது எனது கருத்து. தெலுங்கில் சந்தானம் போல ஒரு பாத்திரம் அமையாதது ஒரு சிறிய குறை. திரிஷாவின் பாத்திரமும் தமிழ் பதிப்பில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
இப்பாடலின் ஆரம்பத்தில், கிடாருக்கு முன்பு வரும் இசை (என்ன கருவி என்று தெரியவில்லை) அற்புதம். மேலும் (2:03 - 2:08) & (3:50 - 3:55) இடத்தில் வரும் குழுவினரின் ஹம்மிங் மிக இனிமை.
கார்த்திக், சுமங்கலி இருவருமே சிறப்பாக பாடியிருக்கிறார்கள். சன் மியூசிக்கில் எப்பொழுதுமே 'சம்திங் சம்திங்' பாடலும், 'பூக்களுக்குள் கத்தி சண்டை' பாடல்களை மட்டுமே ஒளிபரப்புவது ஏனோ? மிக அரிதாகவே இப்பாடல் ஒளிபரப்பபடுகிறது (அல்லது நேயர்களால் விரும்பி கேட்கப்படுகிறது).
2. இன்னிசை அளபெடை
படம்: வரலாறு
பாடியவர்கள்: நரேஷ் அய்யர், சைந்தவி, (மஹதி)
இசை: ஏ.ஆர்.ரகுமான்
வரலாறு படத்தில் இடம் பெற்ற 'இளமை' பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஆனால் சமீபத்தில் திரைப்படம் பார்த்த பிறகு இந்த பாடலை மீண்டும் ஒரு நாள் கேட்டுக் கொண்டிருந்தேன். பாடலின் இடையில், நரேஷ்
'எழுவாய்;
வருவாய்;
திருவாய்;
தருவாய்'
என்று முதல் முறை பாடிய பிறகு, இரண்டாம் முறை அந்த நான்கு வரிகளையும் மீண்டும் பாட ஆரம்பிப்பார். அப்போது ஒவ்வொரு வார்த்தையின் முடிவிலும், பாடகி சைந்தவி (மஹதியின் குரல் போலவே எனக்கு தோன்றுகிறது) 'ம் ம் ஹீம் ஹீம்', என்று பாடி , நான்காவது வரியின் முடிவில், 'ஆ ...........' என்று முடித்து
'சொல்லாய் இருந்தேன்
இசையாய் வந்தாய்
கல்லாய் இருந்தேன்
உளியாய் வந்தாய்
முகிலாய் இருந்தேன்
மழையாய் செய்தாய்'
என்று பாடுவது அருமை.
குழுவினரின் குரலும் பாடலின் தரத்தை வெகுவாக உயர்த்தியிருக்கிறது. படத்தின் இரண்டாம் பகுதியில் அஜீத் மிக அருமையாக செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவருக்கு கிடைத்த வெற்றி.
3. வெண்ணிலா வெண்ணிலா
படம்: டான் சேரா
பாடியவர்கள்: தெரியவில்லை
இசை: தெரியவில்லை
எனக்குப் பிடித்த இந்த பாடல்கள் பட்டியலில், என்னிடம் இல்லாத பாடல் இது. கடந்த சில மாதங்களாக தமிழகம், மற்றும் பெங்களூரில் பல இசைத்தட்டு விற்பனையகங்களில் இந்தத் திரைப்படத்தின் இசைத்தட்டு இருக்கிறதா என்று கேட்டு விட்டேன். எங்குமே இல்லை என்று தான் பதில் வந்தது. பலர் இத்திரைப்படத்தை பற்றி அறிந்திருக்கவே இல்லை. இந்த பாடலை நான் 'சன் மியூசிக்'-ல் தான் சில முறை கேட்டிருக்கிறேன். பாடலின் ஆரம்பத்தில், பச்சை பசேலென்று இருக்கும் மலைகளை மேகக் கூட்டங்கள் தழுவிச் செல்லும் போது, பின்னணியில் ஒரு வயலின் இசை ஒலிக்கப்பெறும். அற்புதம். படத்திற்கு இசையமைத்தது யாரென்று தெரியவில்லை.
எனக்குப் பிடித்த மற்றொரு வயலின் இசைத் தொகுப்பும் இன்று வரை கிடைக்கவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பாக தற்செயலாக 'Blink' என்றொரு ஆங்கில படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அப்படத்தின் கதாநாயகி பார்வையில்லாத வயலின் கலைஞர். அப்படத்தில் இரண்டு, மூன்று இடங்களில் இடம்பெற்ற குறிப்பிட்ட வயலின் இசை என்னை வெகுவாக கவர்ந்தது. இது வரை எவ்வளவோ முயன்றும், அப்படத்தின் OST-யையோ, DVD-யையோ வாங்க முடியவில்லை. எங்கு கேட்டாலும், Blink-182 இசைக்குழுவினரின் பாடல்களையே எடுத்துத் தருகின்றனர்.
4. வல்லவா எனை வெல்ல வா
படம்: வல்லவன்
பாடியவர்: சுனிதா சாரதி
இசை: யுவன் சங்கர் ராஜா
இந்தத் திரைப்படம் எனக்கு சிறிதும் பிடிக்கவில்லை. ஆனால் ஓரளவிற்கு ஓடிக்கொண்டிருப்பதாக கேள்வி. எவ்வளவு தூரம் உண்மை எனத் தெரியவில்லை. சிம்பு அவரின் தந்தையை விட அதிகமாக பேசுகிறார்; சிம்புவின் வாரிசுகள் எப்படியிருக்குமோ என்று நினைக்கும் போதே சிறிது அச்சமாக இருக்கிறது.
சுனிதா சாரதியின் குரல் இந்த பாடலுக்கு சிறப்பு.
'பாதிக் கண்கள் மூடியும்
பார்வை உன்னைத் தேடுதே
உன்னை எண்ணி எண்ணியே
உள்ளமும் வாடுதே',
என்ற இடத்தில் ராகம் அழகு.
முன்பெல்லாம், மாடர்ன் கதாநாயகி கதாபாத்திரங்களுக்கு 'சந்திரலேகா' புகழ் அனுபமா பாடி வந்தார். தற்போது பலர் இருக்கிறார்கள். அனுபமாவின் அலைவரிசையில் பாடக்கூடியவர்களில் சுனிதா சாரதியும் ஒருவர். பல மாதங்களாக பாடாமல் இருந்த அனுபமா சமீபத்தில் கூட இரு பாடல்களை பாடியுள்ளார். அவை, கஜினியில் இடம் பெற்ற 'ரஹத்துல்லா ரஹத்துல்லா' பாடலும், 'திமிரு' படத்தில் 'தித்திக்கிற வயசு, பத்திக்கிற மனசு', பாடலும் தான். அனுபமாவின் 'ஆங்கில வாடை' கலந்த உச்சரிப்பின் காரணமாக, ரகுமான் அவரை 'இங்கிலீஸ் ஈஸ்வரி' என்று தான் அழைப்பாராம். அதே போல் 'ராம்' படத்தில் இடம் பெற்ற 'பூம் பூம்', பாடலை பாடிய ஜோஸ்னாவும், 'இதயத் திருடன்' படத்தில் இடம் பெற்ற 'அக்டோபர் காற்று' பாடலைப் பாடிய மாதங்கியும் இவர்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறார்கள். அதாவது 'இங்கிலீஸ் ஈஸ்வரிகள்'.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'லூசுப் பெண்ணே' பாடலும் ஓரளவிற்கு நன்றாக வந்திருக்கிறது. ஆனால் அந்த பாடலின் ஆரம்பத்தில் (0:43 - 1:01) வரும் கிடார் இசை, குஷி படத்தில் விஜய்யும், ஜோதிகாவும் சந்திக்குமிடங்களில் வரும் பின்னணி இசையை ஒத்துள்ளது. இந்தப் பாடல் கூட குஷி படத்தில் இடம் பெற்ற 'கட்டிப்புடி கட்டிப்புடி' பாடல் போலவே ஒளிப்பதிவு செய்ய்ப்பட்டிருக்கிறது.
5. பூவின் மடியில்
படம்: பை-டு
பாடியவர்: சாதனா சர்கம்
இசை: விஜய் ஆண்டனி
இந்தப் பாடலைப் பற்றி ஏற்கனவே எனது பதிவில் எழுதியிருந்தேன். அதனைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
6. உருகுதே மருகுதே
படம்: வெயில்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஸல், சங்கர் மகாதேவன்
இசை: ஜி. வி. பிரகாஷ்
இந்த படத்தின் பாடல்கள் வந்த புதிதில் சில பாடல்களை கேட்டு விட்டு, மறந்து விட்டேன். சமீபத்தில் கே.எல் ரேடியோவில் இந்தப் பாடலை கேட்டேன். பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'வெயில்' என்று கூறிய போது எனக்கு ஆச்சர்யம். கடந்த ஒரு மாதமாக, இப்பாடல் நம்மிடமிருந்தும் இப்படியொரு அருமையான பாடலை எப்படி கவனிக்காமல் விட்டோம் என்று வருத்தமாக இருந்தது.
மிக மிக அருமையான பாடல். ஸ்ரேயா கோஸலின் குரல் அற்புதம்.
'உருகுதே மருகுதே
ஒரு பார்வையாலே
உலகமே சுழலுதே
உன்னை பார்த்ததாலே',
என்று பாடலின் ஆரம்பத்திலேயே உருகியிருக்கிறார்.
'தங்கம் உருகுதே
அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே
முத்தம் தொடருதே'
என்ற இடத்தில் ராகமும், ஸ்ரேயா கோஸலின் குரலும் அற்புதம். அதே போல் பாடல் முடியும் தருவாயில் மீண்டும் ஸ்ரேயா கோஸல் மீண்டும் 'உருகுதே மருகுதே' என்று ஆரம்பிப்பார் என்று நான் ஆவலுடன் காத்திருந்த போது, சங்கர் மகாதேவன் 'உருகுதே மருகுதே', (4:45) என்று சுருதியை உயர்த்தி பாடி ஏமாற்றம் கொடுத்தார். ஸ்ரேயா கோஸலே பாடியிருக்கலாமே என்று நான் நினைத்த மறுகணமே ஸ்ரேயா 'ஒரு பார்வையாலே' என்று பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதனை விட அவ்விடம் சிறப்பாக ஒலித்திருக்க முடியாது. இரண்டும் இணைத்த போது, ஸ்ரேயாவின் குரல் இன்னும் சிறிது மயக்கம் கொடுக்கிறது. ஆனால் "ஒலகமே" என்று அவர் உச்சரிக்குமிடம் தான் நெருடலாக இருக்கிறது.
இந்தப் பாடல் எனக்கு மேலும் இரண்டு பாடல்களை ஞாபகப்படுத்துகிறது.
1. முதல்வன் படத்தில் இடம் பெற்ற குறுக்கு சிறுத்தவளே பாடல். இந்த பாடலை ஹரிஹரண் பாடியிருந்தால், இரு பாடல்களுக்குமுள்ள வித்தியாசம் இன்னும் குறைந்திருக்கும்.
2. தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கு வந்த 'ஜெய்ராம்' ('சின்ன நெஞ்சிலே' என்ற அற்புதமான பாடல் இடம் பெற்ற படம்) என்ற படத்தில் வரும் 'வானும் உண்டு, வையம் உண்டு' என்ற பாடலை சிறிது ஒத்துள்ளது. அந்த பாடல் என்னிடம் இல்லாத காரணத்தால் என்னால் சரியாக ஒப்பிட முடியவில்லை.
திரையுலகிற்கு இப்படத்தில் மூலம் அறிமுகமாகும் ஜி.வி.பிரகாஷ், அனைத்து பாடல்களில் இல்லாவிட்டாலும்,. இந்தப் பாடலில் அவரது மாமாவின் தரத்திற்கு நெருங்கி வந்திருக்கிறார். அதற்கு அவருக்கு பாராட்டுக்கள். அதே போல் சிறந்த பாடகியான ஸ்ரேயா கோஸலுக்கு, ஓரளவிற்கு, 'முன்பே வா' பாடலைத் தவிர சிறப்பான பாடல் ரகுமான் பட்டறையிலிருந்து அமையாத குறையை ஜி.வி.பிரகாஷ் நீக்கிவிட்டார்.
7.நியூயார்க் நகரம்
படம்: சில்லுன்னு ஒரு காதல்
பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
ஏ.ஆர்.ரகுமானுக்கே பெரிய ஏமாற்றமாக அமைந்த படமாக இந்தத் திரைப்படம் இருந்திருக்கும் என நினைக்கிறேன். எதிர்பார்த்ததில் பாதியை கூட இந்தத் திரைப்படம் நிறைவு செய்யாமல் சென்று விட்டது. நடிகர் சூர்யா கூட, விஜய் தொலைகாட்சியில், படம் வெளியாவதற்கு முன்பு ரகுமான், வாலி, டைரக்டர் கிருஷ்ணாவுடன் கலந்து கொண்டு உரையாடிய நிகழ்ச்சியில் இவ்வாறாக கூறினார்.
'படத்துல ரகுமான் சார் தான் ரொம்ப ஈடுபாட்டோட உழைச்சிருக்கார். பூஜை முடிஞ்சதுமே, மூணு பாட்டை ஒலிப்பதிவு செஞ்சிட்டு, 'எப்ப சூட்டிங் கிளம்புறீங்க? எப்ப ஆரம்பிக்கிறீங்க' அப்படின்னு விரட்டிட்டே இருந்தார். இந்தப் படத்துக்கு உழைச்சது மாதிரி எந்த படத்திற்குமே ரகுமான் சார் இந்த அளவிற்கு உழைச்சதில்லை அப்படின்னு உங்களோட ஆஃபிஸ்லே உள்ளவங்க கூட சொன்னாங்க. அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு நீங்க கொடுத்த பாடலை எப்படி ஒளிப்பதிவில் ஈடுகட்டப் போறோம் அப்படின்ற பயத்தோட தான் ஒவ்வொரு பாடலையும் எடுத்தோம். முக்கியமாக நியூயார்க் நகரம் பாடல். முதன் முறையா ரகுமான் சாரே, "நானே இந்த பாடலை பாடுறேன்னு சொன்னார்", எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். அதனால தான் ஒவ்வொரு ஷாட்டையும் கஷ்டப்பட்டு எடுத்திருக்கோம்', என்றார்.
ஆனால் எனக்குப் படம் பிடித்திருந்தது. இந்த வருடத்தின் சிறந்த பாடல் என்று நிச்சயமாக இதனை தான் குறிப்பிடுவேன். ஆனால் வசூலிலும், விற்பனையிலும் சாதனை படைத்த திரைப்படம் (பாடல்கள்) 'வேட்டையாடு விளையாடு' என்று கேள்வி. படத்தின்
தோல்வியால் இந்த சிறந்த பாடல், பலரது கவனத்திற்கு வராமலும், அதற்குரிய மதிப்பினையும் பெறாமல் போனது வருத்தமே.
இந்தப் பாடலின் இறுதியில் (5:22 - 5:53) ரகுமான், 'ஹோ ஹோ ஹோ ஹொ ஹோ' என்று பாடுவது வித்தியாசமாக இருக்கும். சமீப கால பாடல்களில், ரகுமான் இசையமத்து பாடிய மூன்று திரைப்படங்களிலும் இதே போல் அமைந்துள்ளது சிறப்பம்சம்.
முதல் பாடல், 'அன்பே ஆருயிரே' படத்தில் இடம் பெற்ற 'ஆறரை கோடி பேர்களில் ஒருவன்' பாடல். பாடலின் ஆரம்பத்தில் 'ஆஹ்ன்ன்ன்ன்' (0:01 - 0:10) என்று ஆரம்பிப்பார். மிகவும் அருமையாக இருக்கும். இந்த பாடலின் பீட், ரகுமானின் குரலுக்காக இப்போதும் விரும்பி கேட்கும் பாடல்.
இரண்டாவது பாடல், 'வரலாறு' படத்தில் இடம் பெற்ற 'தீயில் விழுந்த தேனா' (1:46 - 1:53, 5:09-5:16) பாடலிலும் 'ஹோ' என்று சுருதியை உயர்த்தி பாடியிருந்தார். மூன்றாவதாக இந்த பாடல். நீங்கள் கவனித்ததுண்டா?
8. ஸ்ரீராம சோவித்திரி ஜடாயு வேதா
இசை தொகுப்பு: Sacred Chants Volume 3
பாடியவர்கள்: உமா மோகன், காயத்திரி தேவி
இசை: தகவல் தற்சமயம் இல்லை
ஒரு நாள் லேண்ட் மார்க்கில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்த போது, இந்த இனிமையான பாடல் அங்கு ஒலிபரப்பபட்டது. கேட்ட மறு நிமிடமே மிகவும் பிடித்து விட்டது. என்ன ஆல்பம் என்று கேட்டதற்கு இந்த சி.டியை எடுத்து நீட்டினார்கள். அது முதல், பல நாட்கள் இந்த இசைத்தொகுப்பில் இந்த பாடலை மட்டும் எத்தனை முறை கேட்டிருப்பேன் என எனக்கே தெரியாது. இந்த பாடல் இசைத்தட்டில் மூன்றாவதாக இடம் பெற்றிருந்தது. சமஸ்கிருதத்தில் அமைந்த பாடலென்பதால், பாடல் தலைப்பில் எழுத்துப் பிழையிருக்க வாய்ப்புள்ளது. சமஸ்கிருத மந்திரங்கள் (அல்லது வார்த்தைகள்) அடங்கிய பாடல்கள் என்றாலும் கேட்பதற்கு மிக இனிமையாகவும், இருக்கிறது. குறிப்பாக, ஒவ்வொரு சரணம் முடியுமிடத்தில் 'ஸ்ரீவைத்திய நாதாயா நம்சிவாயா' என்று பாடுமிடம் அற்புதம். இது Sacred Chants தொகுப்பு மூன்று என்று அறிகிறேன். ஆதலால், முதல் இரு தொகுப்புகளையும் பெறுவதற்கு முயற்சித்து வருகிறேன். எட்டாவது பாடலாக இடம்பெற்றிருந்த 'சர்வேஷாம்' பாடலும் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று.
ஸ்ருசல்
சனி, ஆகஸ்ட் 05, 2006
சில்லுன்னு ஒரு காதல் - இசை மதிப்பீடு
1. அம்மி மிதிச்சாச்சு (கும்மி அடி) ***
பாடியவர்கள்: டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம், சொர்ணலதா, நரேஷ் அய்யர், தேன் குஞ்சரம்மாள், விக்னேஷ் மற்றும் குழுவினர்
பட்டியலை துவக்கி வைப்பதே இந்தக் குத்து பாடல் தான். பாடல் குத்து ரகம் ஆனாலும் பல்லவி நன்றாக வந்துள்ளது. அட்டகாசமாக ஆரம்பித்து சரணத்தில் சிறிது சறுக்கியுள்ளது. ஆனால்,
அவளுக்கென்ன அம்பாசமுத்திர
அய்யர் ஓட்டல் அல்வா மாதிரி
தாளம்பூவென தள தள தளவென
வந்தா வந்தா பாரு
அவனுக்கென ஆல்வார்குறிச்சி
அழகுத்தேவர் அருவா மாதிரி
பருமா தேக்கென பள பள பளவென
வந்தான் வந்தான் பாரு
என்று வரும் இந்த இடத்தில் ராகம் நன்றாக வந்திருக்கிறது. இந்த வரிகளை நரேஷ் நன்றாகப் டியிருக்கிறார். தேனி குஞ்சாரம்மாளின் குரலும் ஒத்துச் செல்கிறது. சீர்காழி பாடும் இடங்களில் ராகம் மனதில் ஒட்டாமல் செல்கிறது. ஒட்டாத இன்னொன்று சொர்ணலதாவின் குரல்.
2. அன்பே வா முன்பே வா ****
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர்
பாடல் ஆரம்பித்த முதல் விநாடியே Dr.Alban-னின் It's my life பாடலை ஒலிக்கவிட்டு விட்டோமே என்ற சந்தேகம். அது அந்த முதல் விநாடி மட்டும் தான். அதன் பிறகு ரகுமானின் கொடி தான். ரகுமானின் பட்டறையிலிருந்து மற்றுமொரு நல்ல மெல்லிசை பாடல். இறுதியில் ஸ்ரேயா கோஷலுக்கு ஒரு நல்ல பாடல், ரகுமானிடமிருந்து.
இந்தப் பாடல் ஹிட்டாகும் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை. குழுவினர் பாடும் ரங்கோலி இடம் அழகு.
3. மஜா மஜா **
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், எஸ்.பி.பி.சரண்
ஸ்ரேயா கோசல் பாடிய இந்த பாடல் எனக்கு பிடிக்காத ஒன்று. ஏன் அவருக்கு இது போலவே பாடல்கள் கொடுக்கப்படுகின்றன எனத் தெரியவில்லை. ஏற்கனவே அன்பே ஆருயிரே படத்தில் இடம்பெற்ற தழுவுது நழுவுது பாடலும் இதே வகையைச் சார்ந்தது. ஏமாற்றம். நமக்கு மட்டுமல்ல அவருக்கும் தான். மேலும் மஜா மஜா பாடலின் இசை அப்படியே தெனாலி படத்தில் இடம் பெற்ற ஆலங்கட்டி மழை பாடலை ஒத்துள்ளது. கேட்கும் போதே நீங்களே சுலபமாக உணர முடியும்.
4. மச்சக்காரி மச்சக்காரி **
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ்
இந்தப் பாடலில் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை என்பது வருத்தமான விசயம். சுமாரான பாடல்.
5. நியூயார்க் நகரம் *****
பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான்
படத்தில் நான் முதன் முதலாக கேட்ட பாடல். கேட்ட மறு நொடியே இந்த பாடல் பிடித்து விட்டது. பாடலின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அற்புதம். இம்.ஹீம் இம்.ஹீம் என்று அற்புதமாக ஆரம்பித்து கிடாரை உடன் எடுத்துக் கொண்டு 'நியூயார்க் நகரம்' என்று ரகுமான் பாட ஆரம்பிப்பது அற்புதம். அதே போல் 0:45 நொடியில் ஒரு ஹெலிகாப்டர் இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு பறந்து மீண்டும் இடது புறத்திற்கு வருவது அழகாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது முடிந்ததும் 1:05 நிமிடத்தில் "ஹோ" என்று பின்னணியில் வரும் சப்தம் அற்புதம். இவை இரண்டும் பாடலின் தரத்தை வெகுவாக உயர்த்துகின்றன.
'நியூயார்க் நகரம்
உறங்கும் நேரம்
தனிமை அடங்குது
பனியும் படருது
கப்பல் இறங்கியே
காற்று கரையில் அடங்குது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்
நானும் மெழுகுவர்த்தி
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ'
சூர்யா கூறியது போல் ரகுமான் முதன் முதலாக காதல் பாடலைப் பாடியுள்ளார். அதில் பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அனைத்துத் தரப்பினரையும் சுண்டி இழுக்கும் என்பதிலும் துளியும் ஐயமில்லை.
பாடலில் மற்றுமொரு சிறப்பு பெண் குழுவினரின் குரல். 3:10-3:20 மற்றும் 4:30 - 5:10 வரை அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள். இசைத்தட்டில் 'தன்வி & பார்கவி பிள்ளை' என்று எழுதப்பட்டிருந்தது. அவர்களுக்கு பாராட்டுக்கள். முதன் முதலில் தமிழில் இசைக்கலைஞர்களுக்கு கேசட்டில் இடம் கொடுத்தவர் ஏ.ஆர்.ரகுமான். அதே போல் ஒவ்வொரு பாடலிலும் கோரஸ் பாடியவர்களின் பெயரைத் தனித் தனியாக சி.டியில் வெளியிடச் செய்து அவர்களை ரகுமான் சிறப்பித்திருப்பது அழகு. மூன்று நாட்களாக வாயைத் திறந்தாலே இந்த பாடல் தான். தாராளமாக ஐந்து மதிப்பெண்கள் கொடுக்கலாம்.
6. மாரீச்சாம் **/2
பாடியவர்கள்: கரோலிசா, முகமது அஸ்லம், கிருஷ்ணா
இதுவும் மூன்றாம் பாடல் வகையைச் சார்ந்தது. முகமது அஸ்லம்-த்தின் குரல் அருமையாக வந்துள்ளது. இவர் தான் காட் ஃபாதரில் இடம்பெற்ற 'இளமை' பாடலைப் பாடியவர். பாடலின் இறுதியில் வரும் 'கெளதம் கெளதம்' என்று அழைப்பது 'வாலி' படத்தில் இடம் பெற்ற பாடலில் சிம்ரன் அஜீத்தை 'தேவா தேவா' என்று அழைப்பதை ஞாபகப்படுத்துகிறது.
இரண்டரை மதிப்பெண்கள் கொடுக்கலாம்.
7. ஜில்லுன்னு ஒரு காதல் ***
பாடியவர்கள்: தன்வி
இந்தப் பாடல் ஜாஸ் வகையைச் சார்ந்தது. வித்தியாசமான முயற்சி. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கொடுக்குமா என்பது தெரியவில்லை. இந்தப் பாடல் பூமிகாவிற்கு இருக்கும் என்பது எனது கணிப்பு. மற்றபடி வேறெதும் கவரவில்லை. அல்லது எனது அறிவிற்கு எட்டவில்லை. 3 மதிப்பெண்கள் கொடுக்கலாம்.
'அன்பே ஆருயிரே', 'காட் ஃபாதர்' பெரிய அளவிற்கு போகாத நிலையில் இந்தப் படத்தின் பாடல்களாவது பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அது சிறிது கடினம் என்று தோன்றுகிறது. வாலியின் வரிகள் பாடல்களுக்கு அழகு சேர்ப்பதற்குப் பதில் டப்பிங் பாடல்கள் கேட்பது போன்ற உணர்வை சமயங்களில் ஏற்படுத்துகிறது.
நியூயார்க நகரம் பாடல் மட்டுமே ஆறு முறை படத்தில் (சி.டியில்) இடம் பெற்றிருக்கக் கூடாதா என்று தோன்ற வைக்கிறது. அந்த பாடல் இடம் பெற்ற படத்திலா மாரீச்சாம், மஜா மஜா போன்ற பாடல்களும் இருக்கின்றன என்பதை நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது. நியூயார்க், முன்பே வா பாடல்களுக்காக கண்டிப்பாக கேசட் அல்லது சி.டி வாங்கலாம்.
சி.டி. விலை: 95 ரூபாய் (தமிழகம்)
மற்ற மாநிலங்கள்: 100 ரூபாய்
திங்கள், ஜூலை 31, 2006
நீ பாதி நான் பாதி
நேற்று 'சில்லென்று ஒரு காதல்' இசைத்தட்டு வந்திருக்கும் என்ற நப்பாசையில் லேண்ட்மார்க் சென்றேன். ம்ஹீம். இன்னும் இரண்டு, மூன்று தினங்களாகும் என்று கூறிவிட்டனர். சரி வேறு என்னென்ன படங்கள் வந்திருக்கின்றன என்று பார்ப்போம் என்று நோட்டமிட்டேன். சம்திங் சம்திங்.. திமிரு போன்ற படங்களே இருந்தன. அருகில் ஆங்கில பாப் ஆல்பம் போல By2 என்று ஓர் இசைத்தட்டு இருந்தது. என்ன இது என்று பார்த்தால் இசை: விஜய் ஆண்டனி என்று எழுதப்பட்டிருந்தது.
'டிஸ்யூம்', படத்தின் இசைத்தட்டை சிறிது தயக்கமில்லாமல் (கேட்காமலேயே) வாங்கினேன். எதிர்பார்ப்பு வீணாகவில்லை. அதே போல இதுவும் சிறந்த பாடல்களைக் கொண்டிருக்குமா என்ற எதிர்பார்ப்பில் வாங்கிக் கொண்டேன்.
அருகில் சாசனம் படத்தின் இசைத்தட்டும் இருந்தது ஆச்சர்யம். இந்தப் படம் எப்போது வருமென பல ஆண்டுகள் எதிர்பார்ப்பு மேலோங்க காத்திருக்கிறேன். 2001-ம் ஆண்டே படத்தின் கதையை ஏதோ ஒரு வலைத்தளத்தில் படித்திருந்தது ஞாபகம். செட்டியார் சமூகத்தில், குழந்தையைத் தத்து கொடுத்தப் பின் தத்துக் கொடுக்கப்பட்ட குழந்தைக்கும், அதன் உண்மையான பெற்றோர்களுக்கும் இடையே உள்ள உறவில் உருவாக்கப்படும் சமூகத் தடை மீதான படம் என்று படித்தது ஞாபகம். அதாவது, குழந்தையின் பெற்றோர் இறந்தால் கூட அந்தக் குழந்தை இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூடாது என்ற அளவில். இதில் அரவிந்த்சாமி தந்தையாகவும், ரஞ்சிதா மகளாவும், சின்னப் பூவே மெல்லப் பேசு படத்தில் பிரவுவின் காதலியாக வரும் நடிகைக்குப் (பெயர் ஞாபகம் இல்லை) பிறந்த குழந்தை தான் ரஞ்சிதா என்பது போல் படித்த ஞாபகம். பின்னர் அரவிந்தசாமி-டெல்லிகுமாரின் உறவுமுறை பற்றி படித்த போது கூட எனக்கு இந்தப் படம் தான் ஞாபகத்திற்கு வந்தது.
கடைசி காட்சி வசனங்கள் அதிகமில்லாமல் அரவிந்த் சாமிக்கும், ரஞ்சிதாவிற்கும் இடையில் நடப்பது போல் அதில் விவரித்திருந்தனர். பார்க்கலாம் இப்போதாவது படம் வெளிவருகிறதா என. அந்தப் படத்தின் இசையமைப்பாளர் பாலபாரதி. ஒரு தயக்கமிருந்தாலும், மகேந்திரனின் படமென்பதால் இசைத்தட்டை வாங்கிக் கொண்டேன்.
வீட்டில் வந்து, முதலில் சாசனத்தை ஒலிக்கவிட்டேன். ஒரு பாடலைத் (முதல் பாடல்) தவிர பிற பாடல்கள் அவ்வளவு சிறப்பாக வரவில்லை. பாடல்களை நன்றாக கேட்டு விட்டு எழுதுகிறேன்.
By2ல், விஜய் ஆண்டனி இம்முறையும் ஏமாற்றவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு, இந்தப் படத்தின் இடம்பெற்ற ஒரு பாடலை மிகவும் லயித்துக் கேட்டேன். மிகவும் அரிதாகவே ஒரு பாடலைக் கேட்கும் போது, நமக்குள்ளேயே உற்சாகம் பிறக்கும்; பாடல் முடியும் வர முகத்தில் புன்னகை மாறாமல் இருக்கும். அப்படி ஒரு உற்சாகம் இந்தப் படத்தில் இடம் பெற்ற 'பூவின் மடியில் புறா குஞ்சுகள்' என்ற பாடலைக் கேட்கும் போது ஏற்பட்டது. வரிகளை சரியாக கவனிக்கவில்லை. என்னவொரு பாடல்! என்னவொரு இசை! என்னவொரு குரல்!. சாதனா சர்கம் அற்புதமாக பாடியுள்ளார்.
இதே பாடல் மூன்று முறை வெவ்வேறு கவிதை வரிகளில் இடம் பெற்றுள்ளது. மற்ற இரண்டு பாடல்களை விட சாதனா சர்கம் பாடியுள்ள பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ('பூவின் மடியில் புறா குஞ்சுகள்').
அற்புதம்.
மற்ற பாடல்கள் பரவாயில்லை. 'என் கால்கள்' பாடல் நன்றாக இருக்கிறது. சைத்ரா நன்றாக பாடியிருக்கிறார். 'அழகா அழகா' (சாதனா பாடியது) பாடலை எங்கேயோ கேட்டது போலிருக்கிறது (தேவா பாடல்??). பாடல் ஞாபகம் வந்ததும் தெரிவிக்கிறேன்.
வரிகளை பெரும்பாலும் கவனிக்கக் கூடாது என்று கவனத்துடன் சில பாடல்களை கேட்பேன். ஆனால் சில பத்து முறைகள் கேட்ட பின் தானாகவே மனதில் பதிந்து விடும். அப்படி பதிந்து விட்டால் பாடல்கள் சலிக்க ஆரம்பித்து விடும். இந்தப் பாடலும் சலித்துப் போகும் நாள் வரும். அது மட்டும் தான் ஒரே வருத்தம்.
சில மாதங்களுக்கு என்னுடைய ஒரு பதிவில் கூறியிருந்த கருத்தை மீண்டும் கூற விரும்புகிறேன். விஜய் ஆண்டனிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. என்னுடைய 'Songs\Vijay Antony' ஃபோல்டர் நிரம்பி வழிய வேண்டும் என்பது எனது அவா. அவரின் முதல் படத்தில் (சுக்ரன்) இடம்பெற்றிருந்த, 'உச்சி முதல் பாதம் வரை', 'உன் பார்வையோ தீயானது' பாடல்களை இப்போதும் கேட்பதுண்டு. முக்கியமாக, 'உச்சி முதல் பாதம் வரை' பாடலின் ஆரம்பத்தில் 'கோயோ மாயோ ....' என்ற இடத்தில் நடு நடுவே வரும் குழந்தைகளின் குரலையும், 'இமைகளில் இருக்கிறாய், கண்ணிரண்டில் கத்தியுடன் குதிக்கிறாய்' ராகத்தையும் விரும்பிக் கேட்பதுண்டு. ஆனால் சமயங்களில் இவரின் பாடல்கள் ஒன்று போல் இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கின்றன. அதில் மட்டும் சிறிது கவனம் செலுத்தினால் + (சில படங்களும் வெற்றியடைந்தால்) இவர் நிச்சயம் தமிழில் கொடி நாட்டலாம்.
படத்தின் பெயர் மாறக்கூடும் என்று எதிர்பார்க்கிறேன். சின்ன பட்ஜெட் படமாக இருப்பதால், கேளிக்கை வரி விலக்கை கருத்தில் கொண்டு படத்தின் பெயர் மாறக்கூடும். வசனத்தை பாடல்களின் ஆரம்பத்திலிருந்து நீக்கியிருக்கலாம் என்று கருதுகிறேன்.
குறிப்பு: சில்லென்று ஒரு காதல் படத்தின் மாதிரி பாடல்களை ராகா.காம் தளத்தில் கேட்டேன். ரகுமான் பாடிய நியூயார்க் நகரம் உறங்கும் வேளையில் பாடல் நன்றாக வந்திருக்கிறது.
வெள்ளி, ஜூலை 28, 2006
சில்லென்று ஒரு காதல்
------------------------------ பழைய பதிவு --------------------------------------
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் சூர்யா, ஜோதிகா நடித்து கிருஷ்ணா இயக்கி வரும் ஜில்லென்று ஒரு காதல் படத்தின் பாடல்கள் இன்னும் ஒரிரு வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. சென்ற மாதம் (மே மாதம்) வெளியிடப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால் அது ஜூன் மாதம் இறுதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் தள்ளிப் போகவும் வாய்ப்பிருக்கிறது.
பாடல்களின் பட்டியல்: (உறுதி செய்யப்படாத தகவல்)
1. ஹிப் ஹிப் ஹிப்பிடா - கிளிண்டன், கைலாஸ் கீர், ரஃபீக், ஜார்ஜ் பீட்டர்ஸ்
2. ஜில்லுன்னு - ஏ.ஆர்.ரகுமான், சைந்தவி
3. Care For Her - (Instrumental - நவீன், அல்மா)
4. முன்பே வா - நரேஸ் அய்யர், ஸ்ரேயா கோஷல்
5. காதல் குளு குளு - கார்த்திக், ஹரிஹரண், மதுஸ்ரீ
6. ஸ்பரிசம் - உன்னி கிருஷ்ணன், சித்ரா, மகாலக்ஷ்மி அய்யர்
7. Care For Her - சுனிதா சாரதி, தன்வி, சுசித்ரா, ஃபெபி
8. இரவில் இமையில் - ஏ.ஆர்.ரகுமான், நரேஸ் அய்யர், சைந்தவி
கொசுறு:
* சுனிதா சாரதி, தமிழில் ஏ.ஆர்.ரகுமானுக்காக பாடும் இரண்டாவது பாடல். முதல் பாடல், ஆய்த எழுத்தில் இடம் பெற்ற "நீயாரோ நான் யாரோ" பாடல். இது தவிர "வாரியர்ஸ் ஆஃப் ஹெவன்", என்ற சீனப் படத்தில் "From the heavens up above", என்ற பாடலைப் பாடியிருந்தார்.
* ஸ்ரேயா கோஷல் ரகுமானுக்காகப் பாடும் மூன்றாவது பாடல். முதலாவது பாடல் உனக்கு 18 எனக்கு 20 என்ற படத்தில் இடம் பெற்ற "அழகின் அழகி". இரண்டாவது பாடல், அன்பே ஆருயிரேவில் இடம் பெற்ற "தழுவுது நழுவுது" பாடல்.
* சைந்தவிக்கு இரண்டாவது படம். காட் ஃபாதரில் 'இன்னிசை' பாடலைப் பாடியிருந்தார்.
* நீண்ட நாட்களுக்குப் பிறகு உன்னிகிருஷ்ணனுக்கு வாய்ப்பு (நியூவில் இடம்பெற்ற 'காலையில் தினமும்', இவரது கடைசி பாடல் என்று நினைக்கிறேன்)
* கார்த்திக்கிற்கும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்துள்ள வாய்ப்பு.
* 'முன்பே வா' என்ற பாடலின் ஆரம்பம் 'அன்பே வா, முன்பே வா', என்று அமையும் என்று கேள்விப்பட்டேன்.
* வழக்கம் போல பிளாஸே, நரேஸ், மதுஸ்ரீ ஆகியோருக்கு இந்தப் படத்திலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
* ரகுமான், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல், இளைஞர்களைச் சுண்டி இழுக்கும் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
* இந்தப் படத்திலும் ஹரிணிக்கும், சுஜாதாவிற்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. சுஜாதாவிற்கு வாய்ப்பு குறைந்து போனது எதனால் என்று எனக்குத் தெரியவில்லை. 1992 முதல் பல வருடங்களாக பல ரகுமான் படங்களில் பாடி வந்தார். 'புது வெள்ளை மழை', 'நேற்று இல்லாத மாற்றம்', 'போறாளே பொன்னுத்தாய்', 'ஆத்தங்கரை மரமே', 'பூ பூக்கும் ஓசை', 'மெல்லிசையே', 'காற்றுக் குதிரையிலே', 'என் வீட்டுத் தோட்டத்தில்', போன்ற பல பாடல்கள் அவருக்குப் புகழ் சேர்த்தது. ஆனால் சூர்ய வம்சம் படத்தில் இடம்பெற்ற 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' என்ற பாடல் அவருக்கு தினகரன் விருது வாங்கிக் கொடுத்தது. அந்த விழாவில், "நான் பல பாடல்கள் பாடியுள்ளேன். ஆனால் இந்தப் பாடல் பாடிய பிறகு தான் எனக்குப் பெரும் புகழ் கிடைத்தது', என்ற தோரணையில் ஏதோ கூறினார். ஏதோ ரகுமானுக்கு அவர் பாடிய பாடல்கள் எதுவுமே வெற்றியடையாதது போல் அவர் கூறியதாகத் தோன்றியது. அவர் என்ன நினைத்து அப்படிச் சொன்னாரோ? அதன் பிறகு கூட ஒரு சில படங்களில் அவர் பாடியுள்ளார். பார்த்தாலே பரவசம் படத்தில் இடம் பெற்ற அதிசய திருமணம் பாடல்.
------------------------------- புதிய பட்டியல் ------------------------------------
1. கும்மி அடி - டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம், சொர்ணலதா, நரேஷ் அய்யர், தேனி குஞ்சரம்மா, விக்னேஷ் மற்றும் குழுவினர்.
2. முன்பே வா - நரேஸ் அய்யர், ஸ்ரேயா கோஷல்
3. மாச மாச - எஸ்.பி.பி.சரண், ஸ்ரேயா கோஷல்
4. மச்சக்காரி - சங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ்
5. நியூயார்க் - ஏ.ஆர்.ரகுமான்
6. மாரிச்சாம் - கரோலிஷா, முகமது அஸ்லம், கிருஷ்ணா
7. ஜில்லென்று ஒரு காதல் - தன்வி
குறிப்பு:
* மொழி மாற்றம் செய்ததால், பட்டியலில் எழுத்துப் பிழைகள் இருக்கலாம்.
* நேற்று 'ஜில்லென்று ஒரு காதல்' என்றிருந்த படத்தின் தலைப்பு, 'சில்லென்று ஒரு காதல்' என்று மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. (தமிழ் தலைப்புகளுக்கு, கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு காரணமாக இருக்கலாம்).
* பாடல்கள் அடுத்த வாரம் வெளியாகிறது.
* சில வாரங்களுக்கு முன்பாக, டாக்டர். சீர்காழி சிவ சிதம்பரம் சன் மியூசிக்கில் (ஞாயிறு 8.30 மணி சிறப்புப் பகுதியில்) ஏ.ஆர்.ரகுமானுக்குப் பாடிய பாடல்களைப் பற்றி பெருமையுடன் கூறிக்கொண்டிருந்தார். அவர் ரகுமானுக்கு இது வரை இரு பாடல்கள் பாடியுள்ளார் என நினைக்கிறேன்.
1. ஓடக்கார மாரிமுத்து (படம்: இந்திரா)
2. அஞ்சாதே ஜீவா (படம்: பெயர் நினைவில்லை. பிரசாந்த், சிம்ரன் நடித்தது)
-------------------------------------------------------------------------------------
கடந்த சில வாரங்களாக கடுமையான வேளைப்பளு காரணமாக பதிவுகள் இட முடியவில்லை. சென்ற மாதம் ஒரு பதிவினைத் தட்டச்சு செய்து வைத்திருந்தேன். இறுதி வடிவம் கொடுத்து பதிவிடலாம் என்றால் தயக்கமிருக்கிறது. அது ஆங்கிலப் பாடல்களின் பட்டியல்.
செவ்வாய், ஜூலை 04, 2006
மறைந்திருந்து கண்காணிக்கப்படுகிறது
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் பலருக்கு ஞாபகத்திற்கு வருவது கீழ்கண்ட மூன்றில் ஏதாவது ஒன்றிரண்டு. 1. ஆண்டாள் கோவில். 2. பால்கோவா 3. தாமரைக்கனி
வெளியூரைச்(தமிழகம்) சார்ந்தவர்களுக்கு இம்மூன்றில் ஏதாவது ஒன்றைக் கூறினால் ஏறத்தாழ ஸ்ரீவில்லிபுத்தூர் ஞாபகம் வந்து விடும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பிரசித்தி பெற்றது. தமிழக அரசின் சின்னமும் ஆண்டாள் கோவில் (வடபத்ர சயனர் கோவில்) கோபுரம் தான். ஆனால் ஆண்டாள் கோவிலைப் பற்றி அறிந்த பலர், அதே ஊரில் உள்ள மடவார்விளாகம், வைத்தியநாத சுவாமி கோவிலை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கும் கோவிலின் வரலாறு ஒன்றும் தெரியாது. இது கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் வருடங்களாகலாம் என்று கருதுகிறேன். ஆனால் சிறு வயதிலிருந்து அடிக்கடி செல்லும் கோவில். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, அர்ச்சனை செய்யச் சொல்லி வாரா வாரம் சனிக்கிழமை வீட்டிலிருந்து என்னை அந்தக் கோவிலுக்குப் போகச் சொல்வார்கள். எரிச்சலுடன் பல முறை சென்று வந்துள்ளேன்.
நன்றி: தினமலர்
ஞாயிறு கும்பாபிஷேகத்திற்கு கூட்டம் அதிகமிருக்கும் என்பதால், சனிக்கிழமை இரவே கோவிலுக்குச் சென்று சாமி தரிசனத்தை முடித்து விட்டு வரலாம் என்று சென்றேன். கோபுரம் சீர்செய்யப்பட்டு புதிய சிமெண்ட் கலவையை சுமந்து நின்றது. அலங்கார விளக்குகளால், அழகு மிளிர்ந்தது. பெரும்பாலான கோவில்களில் கோபுரங்களைச் சீர் செய்த பின்னர், அதற்கு பச்சை, சிகப்பு, மஞ்சள் வண்ணங்களால் பூச்சு செய்வதுண்டு. இது கோபுர அழகை கெடுப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் சிமெண்ட் பூச்சு எளிமையாக இருப்பதுடன், கோபுரத்தின் அழகையும் உயர்த்திக் காட்டுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டாள் கோபுரத்திற்கு இட்ட வண்ணப் பூச்சு அதன் கம்பீரத்தைக் குறைப்பதாகவே எனக்குப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக கோவில் தெப்பக்குளத்தில் அதிகமான தண்ணீர் இல்லாமல் இருந்தது. இந்த வருட ஆரம்பத்தில் பெய்த மழையின் காரணமாக தெப்பக்குளம் நிரம்பி இருந்தது விசேஷம். அந்தத் தெப்பக்குளத்தைப் போலவே கோவிலின் எதிரில் புதிதாக ஒரு தெப்பக்குளம் நிர்மானிக்கப்பட்டு அதன் மத்தியில் சிவன் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
சாமி தரிசனம் முடித்து விட்டு, கோவில் வாசலில் நடந்து கொண்டிருந்த சொற்பொழிவுக்குச் சென்றேன். முன்பு போல சொற்பொழிவுகளுக்கு அதிகமாக கூட்டம் வருவதில்லை. ஆண்டாள் கோவில் தேரோட்ட விழாவிற்காக பத்து நாட்களுக்கும் மேலாக சொற்பொழிவு நடக்கும். அந்த பத்து நாட்களும் கோவில் நுழைவாயிலைக் கடப்பதே பெரும் பாடாகி விடும். அவ்வளவு கூட்டமிருக்கும். ஆனால் வைத்தியநாத சுவாமி கோவில் சொற்பொழிவில் கூட்டம் ஐம்பதைத் தாண்டாது. ஆனால் கோவிலின் நுழைவாயிலில் இலவசமாகக் கொடுத்த தயிர்சாதத்தை வாங்குவதற்காக உண்டான வரிசை 200 மீட்டர் நீளத்திற்கு இருந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான செண்பகத்தோப்பு காடு, பல்லாயிரக்கணக்கான சதுர கி.மீ பரப்பளவில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 10 கி.மீட்டர் தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் அமைந்துள்ளது. நான் ஊருக்குச் சென்றால் தவறாமல் செல்லும் இடங்களில் அதுவும் ஒன்று. அந்த காட்டின் வாயிலில் இறங்கி, இரண்டு கி.மீட்டர் காட்டில் நடந்தால், செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோவில் வரும். பெரும்பாலோனோர்கள் அந்தக் கோவிலை ஒட்டியே அடுப்புகளை வைத்து சமைத்து விட்டு அருகிலுள்ள ஆற்றில் குளித்து விட்டு, சமைத்ததை உண்டு ஊர் கிளம்பி விடுவர். சிலர் அதனைத் தாண்டி இரண்டு-மூன்று கி.மீட்டர்கள் நடந்து அமைதியான இடத்தில் குளிப்பதுமுண்டு.
தமிழகத்தின் ஒரு முக்கிய புள்ளியின் குலதெய்வமும் பேச்சியம்மன் கோவில் என்று தான் கேள்வி. சென்ற ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பாக அவர் அந்தக் கோவிலின் கும்பாபிஷேகத்தையும் நடத்தினார். அப்போது அவருடைய வருகைக்காக, காட்டின் நுழைவாயிலில் இருந்து கோவில் வரையுள்ள இரண்டு கி.மீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு காட்டில் சாலை வசதி செய்ய்ப்பட்டுள்ளது. இப்போது அந்த சாலையைக் கடப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது. முன்பெல்லாம் அதனைக் கடந்து செல்வதற்கே சுகமாக இருக்கும். இப்போது ஆட்டோக்களும், கார்களும் பெரிய வேன்களும் கூட காட்டின் மத்தி வரை வந்து விடுவது வேதனை அளிக்கிறது. இதனைப் பற்றி ஏன் யாருமே கேள்வி எழுப்பவில்லை எனத் தெரியவில்லை.
------------
ஊரில் பள்ளியின் அருகில் ஐஸ் விற்பவர்கள் கிட்டத்தட்ட சின்ன பசங்களுடன் பழகிப் பழகி அவர்கள் அளவிற்கு சமயங்களில் இறங்கி வந்து பேசுவதுண்டு. எப்படி தான் இது போன்ற சிறுவர்களுடன் இவர்கள் வியாபாரம் வைத்துக் கொள்கிறார்களோ என்று ஆச்சர்யமாக இருக்கும்.
சனிக்கிழமை ஒரு பள்ளியைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு ஐஸ் விற்பவர், பள்ளியின் அருகில் வியாபாரமில்லாமல் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக ஒரு 8 வயது பையன் ஒருவன்
அருகிலிருந்த கடையில் வாழைப்பழம் வாங்கி, அதைத் தின்று கொண்டே இவரைக் கடந்து சென்றான்.
ஐஸ் விற்பவர், "டேய் ஐஸ் வேணுமாடா", என்றார்.
"வேணாம். வேணாம்.", என்று அலட்சியமாகப் பதில் சொல்லி விட்டு அவரைப் பார்க்காமலேயே கடந்து சென்றான்.
இதனால் சிறிது கடுப்படைந்த அவர், அவனை ஏமாற்றும் பொருட்டு,
"டேய், துட்டை கீழே போட்டுட்டுப் போற... வேண்டாமாடா?", என்றார்.
அவன் லேசாகத் திரும்பி அவரை குறுகிய கண்ணால் ஒரு பார்வை பார்த்து விட்டு,
"ஹீம். போய்யா....நான் துட்டே கொண்டு வரலே...", என்று நக்கலாக கூறினான்.
பையன் பயங்கர உஷார் பார்ட்டியாக இருப்பதைக் கண்டு இவர் தான் ஏமாற்றமடைந்தார். ஆனாலும் விடாமல்,
"அப்புறம் வாழைப்பழம் திங்குற?"
"நான் வரும்போது துட்டு வச்சிருந்தேன். எல்லாத்துக்கும் பழம் வாங்கிட்டேன்.... இப்ப எங்கிட்ட துட்டு இல்ல", என்று அலட்சியமாக பதில் சொல்லி விட்டு ஓடி விட்டான்.
------
இரண்டு சுவாரசியமான சுவர் விளம்பரங்கள்.
1. இது மதுரை ரயில் நிலையத்தின் வாசலில் உள்ள சுற்றுச் சுவரில் எழுதப்பட்டிருந்தது.
"இங்கு சிறுநீர் கழிக்காதீர்.
மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மறைந்திருந்து கண்காணிக்கப்படுகிறது."
2. மதுரையில் ஒரு நிறுவனம் வைத்திருந்த விளம்பர போர்டில்
"ஆணுறை இல்லா உடலுறவு
ரிஸ்க் கண்ணா ரிஸ்க்
ஆணுறை அணிந்த உடலுறவு
பெஸ்ட் கண்ணா பெஸ்ட்"
வெள்ளி, ஜூன் 23, 2006
ஜில்லென்று ஒரு காதல் - பாடல்கள் பட்டியல்
பாடல்களின் பட்டியல்: (உறுதி செய்யப்படாத தகவல்)
1. ஹிப் ஹிப் ஹிப்பிடா - கிளிண்டன், கைலாஸ் கீர், ரஃபீக், ஜார்ஜ் பீட்டர்ஸ்
2. ஜில்லுன்னு - ஏ.ஆர்.ரகுமான், சைந்தவி
3. Care For Her - (Instrumental - நவீன், அல்மா)
4. முன்பே வா - நரேஸ் அய்யர், ஸ்ரேயா கோஷல்
5. காதல் குளு குளு - கார்த்திக், ஹரிஹரண், மதுஸ்ரீ
6. ஸ்பரிசம் - உன்னி கிருஷ்ணன், சித்ரா, மகாலக்ஷ்மி அய்யர்
7. Care For Her - சுனிதா சாரதி, தன்வி, சுசித்ரா, ஃபெபி
8. இரவில் இமையில் - ஏ.ஆர்.ரகுமான், நரேஸ் அய்யர், சைந்தவி
கொசுறு:
* சுனிதா சாரதி, தமிழில் ஏ.ஆர்.ரகுமானுக்காக பாடும் இரண்டாவது பாடல். முதல் பாடல், ஆய்த எழுத்தில் இடம் பெற்ற "நீயாரோ நான் யாரோ" பாடல். இது தவிர "வாரியர்ஸ் ஆஃப் ஹெவன்", என்ற சீனப் படத்தில் "From the heavens up above", என்ற பாடலைப் பாடியிருந்தார்.
* ஸ்ரேயா கோஷல் ரகுமானுக்காகப் பாடும் மூன்றாவது பாடல். முதலாவது பாடல் உனக்கு 18 எனக்கு 20 என்ற படத்தில் இடம் பெற்ற "அழகின் அழகி". இரண்டாவது பாடல், அன்பே ஆருயிரேவில் இடம் பெற்ற "தழுவுது நழுவுது" பாடல்.
* சைந்தவிக்கு இரண்டாவது படம். காட் ஃபாதரில் 'இன்னிசை' பாடலைப் பாடியிருந்தார்.
* நீண்ட நாட்களுக்குப் பிறகு உன்னிகிருஷ்ணனுக்கு வாய்ப்பு (நியூவில் இடம்பெற்ற 'காலையில் தினமும்', இவரது கடைசி பாடல் என்று நினைக்கிறேன்)
* கார்த்திக்கிற்கும் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்துள்ள வாய்ப்பு.
* 'முன்பே வா' என்ற பாடலின் ஆரம்பம் 'அன்பே வா, முன்பே வா', என்று அமையும் என்று கேள்விப்பட்டேன்.
* வழக்கம் போல பிளாஸே, நரேஸ், மதுஸ்ரீ ஆகியோருக்கு இந்தப் படத்திலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
* ரகுமான், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல், இளைஞர்களைச் சுண்டி இழுக்கும் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
* இந்தப் படத்திலும் ஹரிணிக்கும், சுஜாதாவிற்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. சுஜாதாவிற்கு வாய்ப்பு குறைந்து போனது எதனால் என்று எனக்குத் தெரியவில்லை. 1992 முதல் பல வருடங்களாக பல ரகுமான் படங்களில் பாடி வந்தார். 'புது வெள்ளை மழை', 'நேற்று இல்லாத மாற்றம்', 'போறாளே பொன்னுத்தாய்', 'ஆத்தங்கரை மரமே', 'பூ பூக்கும் ஓசை', 'மெல்லிசையே', 'காற்றுக் குதிரையிலே', 'என் வீட்டுத் தோட்டத்தில்', போன்ற பல பாடல்கள் அவருக்குப் புகழ் சேர்த்தது. ஆனால் சூர்ய வம்சம் படத்தில் இடம்பெற்ற 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' என்ற பாடல் அவருக்கு தினகரன் விருது வாங்கிக் கொடுத்தது. அந்த விழாவில், "நான் பல பாடல்கள் பாடியுள்ளேன். ஆனால் இந்தப் பாடல் பாடிய பிறகு தான் எனக்குப் பெரும் புகழ் கிடைத்தது', என்ற தோரணையில் ஏதோ கூறினார். ஏதோ ரகுமானுக்கு அவர் பாடிய பாடல்கள் எதுவுமே வெற்றியடையாதது போல் அவர் கூறியதாகத் தோன்றியது. அவர் என்ன நினைத்து அப்படிச் சொன்னாரோ? அதன் பிறகு கூட ஒரு சில படங்களில் அவர் பாடியுள்ளார். பார்த்தாலே பரவசம் படத்தில் இடம் பெற்ற அதிசய திருமணம் பாடல்.
சனி, ஜூன் 10, 2006
அங்கீகாரத்தைத் தேடி...
---------------------- மதுமிதாவிற்காக ------------------------
வலைப்பதிவர் பெயர்: ஸ்ருசல் (Srusal)
வலைப்பூ பெயர் : தடாகம்
சுட்டி(url): http://thadagam.blogspot.com
ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர்
நாடு: இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்: கூகுள் தேடி
முதல் பதிவு ஆரம்பித்த நாள், வருடம்: செப்டம்பர் 16, 2005
இது எத்தனையாவது பதிவு: 65
இப்பதிவின் சுட்டி(url): http://thadagam.blogspot.com/2006/06/blog-post.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
யாரையும் திருத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. மனதில் இருக்கும் எண்ணங்களைக் கொட்டுவதற்காக. வலைப்பதிவுகளின் வரவு, எண்ணங்களை சுதந்திரமாகவும், தெளிவாகவும் வெளியிட உதவுவதோடு, ஒத்தக் கருத்துள்ளவர்களை சந்திக்கவும் உதவி புரிந்துள்ளது.
சந்தித்த அனுபவங்கள்:
மாற்றுக் கருத்துக்கள் எனது பதிவுகளுக்கு இருந்தாலும், சிலருக்கு நேர்ந்தது போல் கசப்பான அனுபவங்கள் இது வரை இல்லை என்பது மகிழ்ச்சி தரும் விசயம். சொல்ல நினைக்கும் விசயங்களை நேர்மையாகவும், விருப்பு வெறுப்புமில்லாமல் கூறினால் இது நிச்சயமாகத் தொடரும் என்பது என்னுடைய எண்ணம்.
'யாரிடமும் சண்டையிடுவதற்காகவோ, வெறுப்புணர்ச்சியை வளர்ப்பதற்காகவோ இங்கு வரவில்லை; கருத்துக்கள் மட்டுமே விவாதிக்கப்படவேண்டும்', என்று அடிக்கடி எனக்கு நானே கூறிக்கொள்வதுண்டு. இது ஓரளவிற்கு சமச்சீராக வலைப்பதிவுகளில் வாழ்க்கையை ஓட்டுவதற்கும், விவாகாரமான தலைப்புகளில் பதிவு எழுதினாலும் ஆரோக்கியமான விவாதததிற்கும் வழிவகுக்கிறது.
பெற்ற நண்பர்கள்:
நிறைய. ஆனால் தனி மடலிலோ, மெசஞ்சரிலோ தொடர்பு கொள்ளுமளவிற்கு நண்பர்கள் இல்லையென்றாலும், ஒத்த அலைவரிசையுடைய நண்பர்கள், நலம்விரும்பிகள் நிறைய உண்டு. உறவுகளைப் பலப்படுத்துவதில் நானொரு சோம்பேறி. அதிக நெருக்கம் விலக்கத்திற்கு வழி வகுக்கும் என்று சமயங்களில் தேவையில்லாத பயம் கொண்டு நெருங்காமல் இருப்பதும் உண்டு.
கற்றவை:
ஒரே விசயம் பலருடைய பார்வையில் எவ்வாறு புரிந்து கொள்ளப்படுகிறது; எம்மாதிரியான விளைவுகளை உண்டாக்குகின்றன என்பதைப் அறிந்து கொள்ள முடிகிறது. எந்த விசயத்தை மனதில் கிரகித்துக் கொள்வது; எதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது என்பதையும் கற்றுக்கொடுத்திருக்கிறது. நாட்டு நடப்புகளை செய்தித்தாள்களை விட விரிவாகவும், தெளிவாகவும் அறிந்து கொள்ள முடிகிறது.
நாட்டில் பல செய்தித் தாள்களும், டி.வி. சானல்களும் செய்திகளைக் கொடுப்பதற்குப் பதில், செய்திகளைப் பற்றிய தங்களது கருத்துக்களைத் தான் தெரிவிக்கின்றன என்பது எனது எண்ணம். அதற்கு பதிலியாக வலைப்பதிவுகளை நாடலாம். என்ன? ஒரு செய்தி; ஒரு சேவை மையம்; பல கருத்துக்கள். மோசமில்லை!
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
நிச்சயமாக இருக்கிறது; ஆனால் இன்னும் சிறிது அவசியம் என நினைக்கிறேன். இது மற்றவர்களின் அனுபவங்களில் இருந்து கூறுவது. ஆனால் நான் இது வரை கூற நினைத்த விசயங்களை எவ்விதமான தடங்கலும் இல்லாமல் கூற முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. புதிதாகவே நாம் பிறந்தாலும், சார்ந்திருக்கும் சமூகத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வளர்வது அவசியமாவதைப் போல, உங்களது பதிவானது ஏதாவது திரட்டியின் மூலமாக பொதுவில் வைக்கும் போது அதன் சூழல் தெரிந்து எழுதுவது அவசியமாகிறது.
இனி செய்ய நினைப்பவை:
வலைப்பதிவுகளைப் பொறுத்த வரை, எதையாவது எழுத வேண்டும் என்று முயற்சி எடுத்து எழுதக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். திரை இசை, திரைப்படங்கள், கதை, புத்தக விமர்சினங்கள் தவிர மற்ற விசயங்களில் அவசியமேற்பட்டாலொழிய பதிவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். வேறெந்த பெரிய குறிக்கோளும் இப்போது மனதில் இல்லை. பாதை தெரியாமல் பயணிக்கும் படகு போல சென்று கொண்டிருக்கிறேன்.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
பிறந்தேன். வளர்ந்தேன். மறைந்தேன் என்று ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணம் மட்டும் அடிக்கடி தோன்றுகிறது. ஆனால் என்ன செய்வது எனத் தெரியவில்லை. பல எண்ணங்கள் மனதில் ஓடுகின்றன. அவற்றில் எதை தேர்வு செய்வது என்பதிலேயே பாதி நாட்கள் ஓடி விட்டன. ஒவ்வொரு வருடமும், ஏன்?, ஒவ்வொரு நாளும் அவை மாறிக்கொண்டே இருக்கின்றன. மனம் இன்னும் தெளிவடையவில்லை என்று கருதுகிறேன். மற்றவர்களுக்கும் இது ஏற்படுவது இயல்பு என நினைக்கிறேன். திருமணமானவர்களைத் தவிர :) பல விசயங்களில் ஆசையை செலுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அளவிற்கும் குறைவான சாப்பாடு, பணமிருந்தும் ஏழையாக வாழ்வது உட்பட. ஆனால் பெரும்பாலான சமயங்களில் தோல்வி தான் முடிவாக கிடைப்பது குறித்து சிறிது வருத்தமே. முயற்சி தொடர்கிறது.
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
"ரெக்ககனிஷன் - அங்கீகாரம் - புகழ் ஆகியவற்றிற்கு உண்மையிலேயே அலைகின்றனர் சிறு பத்திரிக்கையாளர்கள். ஆனால் வெளியில் அவ்வாறு அவர்கள் இல்லை என பிதற்றித் திரிந்து, புகழ்பெற்ற எழுத்தாளர்களைச் சாடுவதும், தமக்குள்ளேயே அடித்துக் கொள்வதுமாகப்
பொழுதைக் கழிக்கின்றனர். பெரிய பத்திரிக்கை ஒன்று இவர்களுக்கு ஆதரவளித்து விட்டால், இவர்களின் பம்மாத்து மறைந்து ஓடி விடுகிறது என்பதே உண்மை", என்று ஓர் பத்திரிக்கையாளர் (தமிழ்) கூறினார். பதிவெழுதுபவர்களும் சிறு பத்திரிக்கையாளர்கள் போல் தான். ஆனால் இது போன்று நிகழுமாறு பார்த்துக் கொள்தல் நலம்.
---------------------- மதுமிதாவிற்காக ------------------------
மதுமிதாவின் புத்தகத்தில் என்னுடைய பதிவினை இணைப்பது கூட அங்கீகாரத்தைத் தேடி தானோ?
திங்கள், மே 29, 2006
ஐ.ஐ.டியால் வந்த வினை
"சாரி... டிஸ்டர்ப் பண்ணுறதுக்கு மன்னிச்சுக்கங்க.. அந்த வீடு ரெண்டு மூணு வாரமா பூட்டியிருக்கே.. வேகண்டா இருக்கா"
"அந்த வீடா? இல்ல. ஆள் இருக்காங்க... ஆனா ஊர்ல இல்லைன்னு நினைக்குறேன்".
"அப்படியா.. நான் பக்கத்துல தான் ஸ்டே பண்ணியிருக்கேன். வேகண்டா இருந்தா வரலாம்னு நெனச்சேன்..."
"அவர் அப்ராட் போயிருக்காருன்னு நினைக்கிறேன். ஆனா எப்ப வர்றாருன்னு தெரியல..."
"ஓ அப்படியா... தாங்க்ஸ்", என்று கூறிவிட்டு கிளம்பினார்.
கதவைப் பூட்டி விட்டு மீண்டும் படுக்கச் சென்றேன்.
ஆம் என்னாயிற்று இவனுக்கு? எங்கே இருக்கான்? எப்படி இருக்கான்? என்ற யோசனையில் ஆழ்ந்தேன்.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த நபர் பெங்களூரில் கடந்த ஐந்து வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார். எப்போதாவது பார்த்தால் பேசிக் கொள்வோம். சில மாதங்களாக வெளிநாட்டில் பணி நிமித்தமாக இருந்தவர், சில வாரங்களுக்கு முன்பாக எனது வீட்டில் எனது வருகைக்காகக் காத்திருந்தார். வீட்டிற்கு நான் சென்று சேர்ந்ததும் என்னை வெளியே அழைத்துச் சென்றார். என்ன விசயமாக இருக்கும் என என்னால் யூகிக்கமுடியவில்லை.
"என்ன விசயம்?", என்றேன்.
சிறிது நேரம் அமைதி காத்தவர் பின்னர், "எங்க ஊர்ல இருந்து உனக்கு போன் எதுவும் வந்ததா", என்றார்.
"சமீபத்தில இல்லை. நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி வந்தது..."
"இப்போ எதுவும் இல்லைல?"
"இல்ல. என்னோட நம்பரை மாத்தி மூணு மாசம் ஆகிடுச்சு"
"நல்லவேளை. ஒரு வேளை இங்க வந்து யாரும் என் நம்பர் கேட்டால் கொடுக்காதே"
"ஏன்?"
"ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்... கொஞ்ச நாளா சில பேர் மிரட்டுறாங்க..."
"மிரட்டுறாங்களா? மிரட்டுற அளவுக்கு என்ன பிரச்சனை?"
இவனுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும் என்று யூகிக்க முடியவில்லை. எதுவும் காதல் ஏதும் இருக்குமா? இல்லையே.... வீட்டுல பொண்ணு பார்க்குறாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தானே.. பின்ன எப்படி? என்று யோசனை ஓடியது.
"கல்யாண பிரச்சினை தான்..."
".... ஆறு மாசத்துக்கு முன்னால ஒரு பொண்ணு பார்த்தோம். பொண்ணு பிடிச்சிருந்தது... எல்லாம் பேசி முடிச்சிடலாம்னு வீட்டுல சொன்னாங்க. எனக்கும் பொண்ணு பிடிச்சிருந்தது..."
"பின்ன?"
"முடிவெடுக்குறதுக்கு முன்னால பொண்ணுகிட்ட பேசிடலாம்னு பேசினேன். பிடிச்சிருக்கான்னு கேட்டேன். ஒண்ணும் சொல்லாம நின்னுட்டு இருந்தா... என்னன்னு கேட்டேன்..."
......
"நான் ஏற்கனவே ஒரு பையனை லவ் பண்ணுறேன்.. என்னை பிடிக்கலைன்னு வீட்டுல சொல்லிடுங்க பிளீஸ்ன்னு சொன்னா..எனக்கு ஷாக். அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எல்லாமே கொஞ்ச நேரத்துல மாறி போயிடுச்சு...ஆனா அவளே வேறொருத்தனை லவ் பண்ணுறேன்னு சொல்லுறப்போ என்ன பண்ணுறது. பையன் யாரு என்ன பண்ணுறான்னு கேட்டேன். கிளாஸ் மேட்டாம். பக்கத்து ஊராம்."
"சரி இதுல என்ன பிரச்சினை? பிடிக்கலைன்னு சொல்லிட்டு வந்துருக்கலாம்ல?"
"அது தான் நான் பண்ணுன தப்பு... நான் போய் அவங்க அப்பாகிட்ட உங்க பொண்ணு இன்னொரு பையனை லவ் பண்ணுறா. அவளுக்கு பிடிச்ச பையனையே கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்"
???
"அங்க ஆரம்பிச்சது பிரச்சினை. என்னை சமாதானப்படுத்துறதுக்காக வீட்டுக்கு ஒரு வாரமா நடையா நடந்தாங்க. அவளோட அப்பா அம்மா. அப்புறம் அவளோட சொந்தக்காரங்க. வந்து கெஞ்சுனாங்க...அழுதாங்க... ஆனாலும் நான் ஏத்துக்கல... பெங்களூர் வந்துட்டேன். இங்க வந்து பேசிப் பார்த்தாங்க...இவங்க தொல்லை தாங்க முடியாமல் தான் கொஞ்ச நாளா என்னோட ஃபிரண்ட் வீட்டுல தங்கியிருந்தேன். எப்படியோ இந்த வீட்டுக்கு வந்து உன்னோட பிரண்டுகிட்ட என்னோட ரூமியோட போன் நம்பர் வாங்கி அவனுக்குப் போன் செஞ்சு என்னோட போன் நம்பரை வாங்கிட்டாங்க"
"அதுல இருந்து போன் மேல போன் போட்டு டார்ச்சர் பண்ணுனாங்க... என் பொண்ணு தெரியாம பேசிட்டா.. லவ் எல்லாம் இல்ல. சும்மா விளையாட்டுத்தனமா பேசி இருக்கா.. நீங்க தான் எப்படியாவது அதையெல்லாம் மறந்து கல்யாணம் பண்ணிக்கணும் நச்சரிச்சாங்க. இவங்க தொல்லை தாங்க முடியாம தான் ஆன்சைட் அசைண்மெண்ட் வாங்கி மூணு மாசம் அங்க இருந்தேன்."
"அப்புறம்?"
"கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பார்த்து, இது வேலைக்கு ஆகாதுன்னு நினைச்சு மோட் மாற ஆரம்பிச்சுட்டாங்க... எங்க வீட்டுல உள்ளவங்கள மிரட்ட ஆரம்பிச்சிருக்காங்க..."
"என்னன்னு?"
"உங்க பையனை ஒழுங்கா கல்யாணத்துக்கு சம்மதிக்க சொல்லுங்க இல்லாட்டி நடக்குறதே வேறன்னு...எங்க வீட்டுல, 'உங்க பொண்ணுக்கு தான் விருப்பம் இல்லியே',ன்னு கேட்டதுக்கு, அதெல்லாம் இல்ல. அவ அப்படி சொல்லவே இல்லை... வேணும்ணா அவகிட்டயே கேளுங்க அப்படின்னு சொல்லுறாங்களாம்.... 'கல்யாணத்துக்கு சம்மதிக்க மறுத்துட்டா நிச்சயதார்தம் செஞ்சிட்டு வரதட்சணை அதிகமாக வேணும்ணு கல்யாணம் பண்ணிக்க மாட்டீன்றீங்கன்னு சொல்லி போலீஸ் கம்ப்ளைண்ட் செஞ்சிடுவோம்'-னு சொல்லுறாங்கலாம்"
"!!!!!"
"இது ரொம்ப ஓவரா போகவே ஊருக்குத் திரும்ப வந்தேன். என்னையும் திரும்ப வந்து பார்த்தாங்க.... 'தம்பி உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லுங்க.. எக்ஸ்ட்ரா ஐம்பது லட்சம் தர்றேன்.. வாங்கிக்கங்க... உங்களுக்கு என்ன தோணுதோ அத வச்சு என்ன வேணும்னாலும் செய்ங்க.. உங்க விருப்பம்'-ன்னு சொன்னாங்க.....அந்தப் பொண்ணும் நேர்ல வந்து அழுதது...நான் தெரியாம சொல்லிட்டேன். நான் யாரையும் லவ் பண்ணல.. என்னை மன்னிச்சு கல்யாணம் பண்ணிக்கங்கன்னு சொல்லி அழறா.. எனக்கு என்ன பண்ணன்னு தெரியல..."
"என்ன சொன்ன?"
"முடியாதுன்னு மறுத்துட்டேன்... இது போன கொஞ்ச நாள் கழிச்சு அவரோட அப்பா சில ஆளுங்கள கூட்டிட்டு வந்து குடும்பத்தையே தொலச்சிடுவேன்னு மிரட்ட ஆரம்பிச்சார்..."
"போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டியது தானே"
"எல்லாரும் அவருக்கு கொஞ்சம் வேண்டியப்பட்டவங்க. அவளோட அம்மா, ஊர் தாசில்தார் (அதற்கு இணையான ஏதோ ஒரு பதவி என்று சொல்லியதாக ஞாபகம்) வேற... போலீஸ் வேற நாங்க என்ன செஞ்சாலும் காதுல வாங்கிக்கல.. எங்க அம்மா, அப்பா வேற என்னால வீணா அங்க மாட்டிக்கிட்டாங்க. நிம்மதியே போச்சு...."
"அப்புறம் என்ன பண்ணுன?"
"என்னோட கிளாஸ் மேட் ஒருத்தன், எங்க டிஸ்டிரிக்ட் எஸ்.பியா இருக்கான். அவன்கிட்ட போய் சொன்னேன்."
"குட்"
"அவன் எல்லாம் கேட்டுட்டு நான் பார்த்துக்குறேன்னு சொன்னான.. அதுல இருந்து தான் இன்ஸ்பெக்டர் வேற வழியில்லாம ஆக்சன் எடுக்க வேண்டியாதா போச்சு.... அதுல இருந்து இப்ப யாரும் வந்து மிரட்டுறது இல்ல... அவளோட அப்பா, அம்மாவும் பயந்து ஒழுங்கா இருக்காங்க... இது எத்தனை நாளுக்குன்னு தெரியல"
"நல்லது. இவ்ளோ பணம் தர்றேன்னு சொல்றாரே அப்ப அவர்கிட்ட எவ்ளோ இருக்கும்? உன் பின்னாடி சுத்துறதுக்கு பதிலா அந்தப் பணத்தை வச்சு வேறோரு பையனை பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கலாம். அது பெட்டர்.."
"சரி தான். ஆனா ஏற்கனவே இது மாதிரி ஒரு தடவை அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் நின்னு போயிருக்கு அதனால ஊர்ல ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்க... அதான் எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சுடனும்னு முடிவோட இருக்கார்."
"சரி.. ஆனா அதுக்காக பணத்துக்கு யாரும் ஆசைப்படாம இருப்பாங்களா... ஒரு பையன் கூடவா கிடைக்க மாட்டான்?"
"கிடைப்பான்... ஆனா ஐஐடி பையன் கிடைக்கமாட்டானே..."
"ஓஹோ... இப்ப புரியுது..."
"எங்க ஊர்ல இது ஒரு பெரிய விசயம்.. ஐஐடியனுக்கு பொண்ணு கொடுக்குறது பிரஸ்டீஜ் இஸ்யூ... அதான் இவ்ளோ முயற்சி பண்ணுறாங்க... நானே ஒரு சாதாரண காலேஜ்ல படிச்சிருந்தேன்னா இந்நேரம் விட்டுட்டு போயிருப்பாங்க... முதல்ல இருந்தே ஐஐடி பையனுக்குக் கொடுக்குறோம்னு ஊர்ல எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு, இப்போ இல்லைன்னு ஆகிடுச்சுன்னா கெளரவப் பிரச்சினை. அதான் ரொம்ப முயற்சி பண்ணுறாங்க..."
"இவ்ளோ மிரட்டுனதுக்கு அப்புறமும் அவர் பொண்ணை கல்யாணம் பண்ணிப்பேன்னு எப்படி எதிர்பார்க்குறார். ஒரு வேளை அவளை நீ கல்யாணம் செஞ்சாலும், எப்படி அவளோட அப்பா, அம்மா கூட நார்மலா நீ பேச முடியும்? உங்க அப்பா, அம்மா எப்படி அவங்க கூட பேச முடியும்?"
"இம்.. ஒண்ணும் புரியலை. அதான் ஃசேப்டிக்காக நான் வீடு மாறுறேன்.. என்னோட ரூமியை கொஞ்ச நாளைக்கு அவனோட பிரண்ட் வீட்டுல இருக்க சொல்லியிருக்கேன். யாரும் வந்து கேட்டா தெரியாதுன்னு சொல்லிடு...."
"சரி.. பேசாம... இது தான் நல்ல டைம்.... நீ ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ணியிருந்தா, வீட்டுல சொல்லு... உடனே ஒத்துப்பாங்க... கல்யாணம் செஞ்சிட்டு கொஞ்ச நாள் அப்ராட்ல போய் இருந்துட்டு வாங்க..."
"எங்க வீட்டுலேயும் அதான் நிலைமை. பையனுக்கு எப்படியாவது நல்லபடியா கல்யாணம் முடிஞ்சா போதும்னு நினைக்குறாங்க. ஆனா உடனே பொண்ணுக்கு எங்க போறது?"
----
இது இன்னொரு கல்யாணக் கதை (ஆந்திரவைச் சார்ந்த உடன் பணிபுரியும் நபர்)
"எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்"
"வாழ்த்துக்கள்...பொண்ணு யாரு? அதே பொண்ணு தானா?"
"இல்ல.... இது வேற"
"அது என்ன ஆச்சு?"
"அது ஒத்து வரலை"
"ஏன்? என்ன பிரச்சினை?"
"பிரச்சினை என் சைடுல இல்ல.. அவ சைடுல தான்.... வரதட்சணை 15 லட்சம் தான் கொடுக்க முடியும்னு சொல்லுறாங்க.."
"அது நீ லவ் பண்ண பொண்ணு தானே?"
"ஆமா அவளே தான். லவ் பண்ணும் போதே வரதட்சணையா 25 லட்சம் வாங்கி தரணும்னு சொல்லியிருந்தேன். அவளும் சரின்னு சொல்லியிருந்தா.. ஆனா இப்போ 15 லட்சம் தான் தர முடியும்னு சொல்லுறாங்க... நான் என்ன பண்ணுறது... என் மேல தப்பே இல்லை... "
???????????
திங்கள், மே 22, 2006
சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்
1. ஒரே ஒரு சோகமென்றால் இப்படி நானும் அழ மாட்டேன்
பாடியவர்: கார்த்திக்
படம்: கொக்கி
இசை: தீனா
தமிழில் கரண் நீண்ட நாட்களுக்குப் பின்பாக அதுவும் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம். படத்தின் இசையமைப்பாளர் தீனா அவ்வப்போது தனது பாடல்களால் திரும்பிப் பார்க்க வைப்பவர் தான். இவரது படங்களில் ஏதாவது ஒரு பாடலாவது நன்கு பேசப்படும். அதே போல இந்தப் படத்திலும் இந்தப் பாடல் பேசப்படலாம். சோகப் பாடல் தான். கதாநாயகனின் கஷ்டங்களையும், இயலாமையையும் சொல்லும் விதமாக பாடல் எழுதப்பட்டுள்ளது.
ஒரே ஒரு சோகமென்றால்
இப்படி நானும் அழமாட்டேன்
என் ஒவ்வொரு நொடியிலும்
சோகங்கள் என்றால் என்ன செய்வேன்
என்ன செய்வேன் என்ன செய்வேன்
என்ன செய்வேன் ஏது செய்வேன்
இதைத் தவிர சில டப்பாங்குத்து பாடல்களும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன (மாணிக்கவிநாயகம், அனுராதா, மற்றும் மாலதி) பாடியது. சுமார் ரகம் தான். 'ஏலோ ஏலோ' என்று மதுஸ்ரீ பாடிய பாடல் பழைய ராகமாக இருந்தாலும், சில தடவைகளுக்குப் பிறகு பிடித்து விடுகிறது.
2. சுடும் நிலவு சுடாத சூரியன்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், ஹரிணி
படம்: தம்பி
இசை: வித்யாசாகர்
சமீபத்தில் வந்த படங்களில் வித்தியாசமாக, மெலோடி பாடல்களை மட்டும் தாங்கி வந்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை. அதுவும் தொண்ணூறு ரூபாய் இசைத் தட்டுடன், மின்னலே படத்தின் வீடியோ பாடல்களும் கொடுக்கப்பட்டது. இது என்னவொரு அருமையான பாடல்!. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உன்னிகிருஷ்ணனும், ஹரிணியும் இணைந்து பாடியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். இருவரும் இணைந்து பாடிய 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்', 'இவன் யாரோ இவன் யாரோ' இரண்டும் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்கள். அந்த வரிசையில் இந்த பாடலையும் சேர்த்துக் கொள்ளலாம். ஹரிணியைப் பற்றி நான் சொல்லவும் வேண்டுமா? பாடலின் இடையில் இரண்டாம் சரணத்திற்கு முன்பாக 'சுடும் நிலவு' அவர் உச்சரிக்கும் இடம் அற்புதம். பாடலின் நடு நடுவே வரும் 'காதலித்துப் பார்; காதலித்துப் பார்', என்ற வரியை பாடியது சுஜாதா என்று கருதுகிறேன். அது ஏன் எனத் தெரியவில்லை. இத்தனைக்கும் சுஜாதா ஒரு பாடல் கூட இந்தப் படத்தில் பாடவில்லை. பல்லவி முடிந்ததும் வரும் வயலின் இசை (1:05 - 1:30) அருமை.
இதே படத்தில் கார்த்திக், கல்யாணி பாடிய 'சும்மா கிடந்த சிட்டுக் குருவிக்கு' என்ற பாடலும், முக்கியமாக சைந்தவி பாடிய 'என் காதல் உன்னைச் சேர' பாடலும் அருமை.
வித்யாசாகரின் இசை நாளுக்கு நாள் நல்ல மெருகேறி வருகிறது; முக்கியமாக மெலோடி பாடல்கள். கர்ணாவில் (மலரே மவுனமா) ஆரம்பித்து, 'ஜி' வரை ஏதாவது வித்தியாசமாக செய்துகொண்டே தான் இருக்கிறார். தம்பியிலும் சிறந்த பாடல்களின் மூலம் அவரது
திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்கும் போது 'சதுரங்கம்', படத்தின் பாடல்கள் தான் ஞாபகம் வருகிறது. அந்தப் படத்திலும் மூன்று அருமையான பாடல்கள் இடம்பெற்றிருந்தது. 'என்ன தந்துவிட்டாய்' (கார்த்திக், ஸ்ரீலேகா பார்த்தசாரதி), 'விழியும் விழியும்' (மது பாலகிருஷ்ணன், ஹரிணி), ஆடுவோமே (மாணிக்கவிநாயகம்) பாடல்கள் சிறப்பாக வந்திருந்தது. ஆனால் ஏனோ படம் தான் இது வரை வெளிவரவில்லை.
3. போகப் போக பூமி விரிகிறதே
பாடியவர்கள்: ஹரிச்சரண், விஜய், 'அந்நியன்' புகழ் சைந்தவி, ஹரிணி சுதாகர்
படம்: பட்டியல்
இசை: யுவன் சங்கர் ராஜா
பட்டியல் பாடல்கள் முதன் முதலாக கேட்கும் போது அனைத்துமே ஒரே மாதிரியாக இருப்பது போல ஒரு தோற்றத்தைக் கொடுத்தது. ஆனால் கேட்க கேட்க பிடித்து விட்டது. படம் நன்றாக ஓடியிருந்தால், பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வழக்கம் போல, யுவன்சங்கர் ராஜா இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார். மகனின் இசையில் இளையராஜா பாடிய பாடல் இன்னும் எனக்குப் பிடிக்கவில்லை.
யுவனும், சுவேதாவும் பாடிய 'ஏதேதோ எண்ணங்கள் வந்து', பாடல் இந்தப் படத்தின் சிறந்த பாடலாக இருந்தாலும், இந்தப் பாடல் எனக்குப் பிடிக்க முக்கிய காரணம், பல்லவி முடிந்தது வரும் நாதஸ்வர (போன்ற) இசை தான். 2:10 முதல் 2:28 வரை ஒலிக்கும். அருமை. இதற்காக இந்த பாடலை பல முறை 'Repeat' தெரிவு செய்து கேட்டிருக்கிறேன். சைந்தவிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
ஹரிணி சுதாகரின் குரல் எங்கு ஒலிக்கிறது எனத் தெரியவில்லை. ஒரு வேளை பாடலின் ஆரம்பத்தில் வரும் ஆங்கில வரிகளை உச்சரிக்கும் குழந்தையாக இருக்கும் என நினைக்கிறேன்.
3. மஞ்சள் வெயில்
பாடியவர்கள்: ஹரிஹரண், விஜய், நகுல்
படம்: வேட்டையாடு விளையாடு
இசை: ஹரிஷ் ஜெயராஜ்
கஜினியை ஒப்பிடும் போது 'வேட்டையாடு விளையாடு' படம் ஹரிஷ் ஜெயராஜூற்கு பின்னடவு தான் என கூறலாம். கெளதம் எப்படி இது போன்ற பாடல்களுக்கு ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. ஒரே ஒரு பாடலைத் தவிர மற்ற பாடல்கள் சுத்தமாகக் கவரவில்லை. கெளதமும் 'ராசி' என்ற வலையில் விழுந்து விட்டாரோ என்று சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் இந்தப் படத்திலும் பாம்பே ஜெயஸ்ரீக்கு ஒரு பாடல் கொடுக்கப்பட்டுள்ளது. மகாலக்ஷ்மி பாடிய 'உயிரிலே' பாடல் பரவாயில்லை. ஆனால் இந்தப் படத்தின் பாடல்கள் பரபரப்பாக விற்பனையாகத் தான் செய்கின்றன. யார் கண்டது? அனைத்து பாடல்களும் ஹிட்டாகலாம்.
ஆனால் மஞ்சள் வெயில் என ஆரம்பிக்கும் இந்த பாடல் அருமை. கமலஹாசனின் நடிப்பு இந்தப் பாடலுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ஹரிஹரண் அற்புதமாக பாடியிருக்கிறார். அதிலும் முக்கியமாக 'பேசி பேசி தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே' 'குறு குறு மின்னல் என குறுக்கே ஓடுதே' என்ற வரிகளில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
5. இளமை
பாடியவர்கள்: அஸ்லம், தன்வி, ஷாலினி
படம்: காட் ஃபாதர்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
இந்தப் பாடலைப் பற்றி ஏற்கனவே எனது காட்பாதர் இசை மதிப்பீடு பதிவில் தெரிவித்திருந்தேன். ஆரம்பம் முதல் இறுதி வரை பீட் சிறிதும் குறையாமல் சிறப்பாக அமைந்துள்ளது. ஷாலினி ரகுமானுக்கு பாடும் முதல் பாடல் என்றும் நினைக்கிறேன். 1:38 முதல் 2:10 வரை குழுவினரின் குரலை கேட்கும் போதே உடலெங்கும் உற்சாக அலைகள் ஓடுகின்றன.
6. சான் சிபாரிஸ்
பாடியவர்கள்: ஷாண், கைலாஸ் கெர்
படம்: ஃபனா (இந்தி)
இசை: ஜட்டின் லலித்
இந்த வாரம் ரிலீஸாகவிருக்கும் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் அருமை. தேன். முக்கியமாக இந்தப் பாடல் அனைத்து பாடல்களையும் புறந்தள்ளி விட்டு நிச்சயமாக முதலிடத்தைப் பிடிக்கும் என்பதில் எனக்கு அசாத்திய நம்பிக்கை. இம்.ஹீம் இம்.ஹீம் என பாடலை ஆரம்பத்திலே ஆரம்பிக்கும் ஷான் ஆகட்டும், சுவாலல்லா என அதை பிடித்துக் கொண்டு தொடரும் கைலாஸ் கீர் ஆகட்டும் அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள்.
இதே படத்தில் இடம்பெற்றுள்ள 'தேக்கோனா' என்ற பாடலும் மிக அருமை. சோனு நிகாமும், சுனிதா சவுகானும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இதே பாடல், பல்வேறு இசைக் கருவிகளுடன் 'Destroyed in Love' என்று தீம் மியுசிக்காகவும் அருமையாக கோர்க்கப்பட்டுள்ளது.
7. தையத்தா தையத்தா
பாடியவர்கள்: சாதனா சர்கம்
படம்: திருட்டுப் பயலே
இசை: பரத்வாஜ், ரேஷ்மி
திருட்டுப் பயலே படத்தின் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் என்றாலும் இந்தப் பாடல் வித்தியாசமாக அமைந்து இருந்தது. சாதனா சர்கம் வழக்கம் போலவே சிறப்பாக பாடியிருக்கிறார். ஆனால் பாடலின் சரணம் சரத்குமார் நடித்த 'நட்புக்காக' படத்தில் இடம்பெற்ற 'முந்திரி முந்திரி முந்திரியாம் தோட்டத்து முந்திரியாம்' பாடலின் சரணத்தை ஒத்து அமைந்துள்ளது. 'நாட்டாமை படத்துல அந்த இடத்துல' என்ற ராகமும், இந்தப் பாடலில் வரும், 'மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை' என்று சரணம் ஆரம்பிக்கும் இடத்தில் வரும் ராகமும் ஒன்று போல் இருக்கிறது. இசையும் அந்தப் பாடலை போலவே அமைந்துள்ளது.
'பெண்ணுக்கு பேராசை வேறேதும் இல்லை
சொன்னதை செய்தாலே நிகர் ஏதும் இல்லை
நீ உறுதியானவன்; என் உடமையானவன்
பசி ருசியை பகிர்ந்து கொள்பவன்'
வரிகளில் ராகம் அருமையாக உள்ளது.
8. ஜன் ஜன ஜன ஜன ஜன
பாடியவர்கள்: சுக்வீந்தர் சிங், சாதனா சர்கம்
படம்: வாட்டர்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
இன்னும் வாட்டர் படத்தின் பாடல்கள் இந்தியாவில்
விற்பனைக்கு வரவில்லை. ஆனாலும் ஒரு இணையத்தளத்தின் உதவியுடன் எம்.பி3 பாடல்கள் கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன். பாடல்கள் அனைத்தும் அருமை. முக்கியமாக இந்தப் பாடல். ரகுமான் இசையமைத்த சமீபத்திய பாடல்களில் சிறந்த பாடல் இதுவே என்று அடித்துக் கூறலாம். (ஆனால் இது நான்கு வருடங்களுக்கு முன்பாகவே இசையமைக்கப்பட்டது). ரங்கு தே பசந்தியில் இடம்பெற்ற 'ரூபாரூ' பாடலை விட பல மடங்கு அற்புதம். ஆரம்பத்தில் வரும் இசையும், இறுதியில் வரும் வயலின் இசையும் அற்புதம் (3:56 முதல் கடைசி வரை).
இந்தப் பாடலை பெங்களூரில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன். அருமையாக இருந்தது. ஆனால் பட்டியலில் இருந்த பாடல், அன்று பெய்த மழையால் நிகழ்ச்சி நடைபெற்ற நாளன்று இசைக்கப்படவில்லை. சுக்விந்தர் சிங் உருகி பாடியிருக்கிறார். மனிதருக்கு என்னவொரு அற்புதமான குரல்! இந்த பாடலை அவர் பாடும் போது பார்க்கும் அந்த பாக்கியம் கிட்டியது. பாடும் போது என்னவொரு உற்சாகம்!. விவரிக்க வார்த்தைகள் இல்லை. இது அவரே எழுதிய பாடலும் என்று எங்கோ படித்த ஞாபகம். சாதனா சர்கமும் அழகாக பாடியிருக்கிறார். 3:50 முதல் 4:13 வரை கேட்டுப்பாருங்கள். படத்திலும் இந்த பாடல் மிக மிக அருமையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
என்னுடைய பிற பாடல் சம்பந்தப்பட்ட பதிவுகளின் தொகுப்பு:
இனியவை நாற்பது
சமீபத்தில் மிகவும் ரசித்தப் பாடல்கள் - பிப்ரவரி
சமீபத்தில் மிகவும் ரசித்தப் பாடல்கள் - அக்டோபர்
புதன், ஏப்ரல் 26, 2006
அந்தக் குழந்தைக்கு நான் அப்பா இல்லை
"என்னடா விசயம்?", என்று ராஜா பதட்டத்துடன் சந்தனைக் கேட்டான்.
"டேய் ராஜா.... தேன்மொழி கர்ப்பமா இருக்குறாடா"
"என்னது உண்மையாகவா?"
"ஆமாண்டா"
"உனக்கு எப்படிடா தெரியும்?"
"அவங்க வீட்டுல சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க... இப்ப தாண்டா அத கேட்டேன்"
"அய்யோ.. நல்லா மாட்டுன நீ...."
சில விநாடிகள் மெளனம்.
"எனக்குப் பயமா இருக்குடா... ஏதாவது செய்யேண்டா..."
"நான் என்ன செய்யறது?"
ராஜாவும், சந்தனும் ஒரே கிராமத்தை சார்ந்தவர்கள். ஒரே தெருவில் வீடு. இத்தனைக்கும் படிப்பதும் ஒரே வகுப்பில் தான். ஆம். ஏழாம்வகுப்பு.
பிளாஷ்பேக்.
ஒரு நாள் சந்தனும், ராஜாவும் குளத்தங்கரையில் விளையாடிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சந்தன், ராஜாவிடம் தனது சந்தேகத்தை கேட்டான்.
"டேய் ராஜா எப்புடிடா புள்ள பொறக்குது?"
"எதுக்குடா?"
"சும்மா தாண்டா. இல்ல அடுத்த வீட்டுல இருக்குற ராணியக்காவுக்கு புள்ள பொறந்துருக்கு. அதான் எனக்கு சந்தேகம். எப்புடி புள்ள பொறக்குதுன்னு உனக்குத் தெரியுமாடா?"
"அதுவா. ஒண்ணுமில்லைடா.. கல்யாண மாப்பிள்ளை, பொண்ணுக்கு முத்தம் கொடுப்பார். முத்தம் கொடுத்த கொஞ்ச மாசத்துல புள்ள பொறந்துடும்"
"டேய் என்னடா சொல்லுறா?"
"ஆமாண்டா"
"அய்யோ. அன்னைக்கு தேன்மொழிக்கு முத்தம் கொடுத்தேண்டா"
"எப்படா"
"அன்னைக்குத் தண்ணியெடுக்க நானும் தேன்மொழியும் போனோண்டா, அப்ப வீட்டுக்குத் திரும்ப போகும் போது அவங்க எனக்கு முத்தம் கொடுத்தாங்கடா. நானும் திரும்ப கொடுத்தேண்டா. என்னடா ஆகும்?"
"அடப்பாவி... தப்பு பண்ணிட்டியேடா? அவ தான் தப்பு பண்ணுனா நீ ஏண்டா அப்படி பண்ணுண?"
"இப்ப என்னடா செய்றது?"
"நல்லா மாட்டுன...."
அவன் சொன்னதிலிருந்து, சந்தனுக்கு இருப்பே கொள்ளவில்லை. எப்போது பார்த்தாலும் மனதில் பயம் தான். எப்போது தேன்மொழி வீட்டிலிருந்து ஆட்கள் வந்து ஏதும் கேட்பார்களோ என்ற பயத்திலேயே காலத்தை ஓட்ட ஆரம்பித்தான். ஒவ்வொரு நாளும் தேன்மொழி வீட்டின் மீதே அவன் காதுகள் இருந்தன. அதிலிருந்து தேன்மொழியை பார்ப்பதில்லை. தேன்மொழிக்கு வயது 19 இருக்கும். 12-ம் வகுப்பை முடித்து விட்டு வீட்டில் சும்மா தான் இருக்கிறாள்.
இப்போது நிகழ்காலம்.
சந்தனின் மனதில் ஆயிரம் கேள்விகள். நாளைக்கு என்னவாகுமோ? நான் முத்தம் கொடுத்த விசயத்தை சொல்லியிருப்பாளோ? நான் தான் அப்பா என்று இப்போது தெரிந்திருக்குமோ என்ற கவலை அவனை வாட்ட ஆரம்பித்தது. காலையிலேயே வீட்டுல கேட்டுக்கிட்டு இருந்தாங்களே.. என்ன ஆயிருக்குமோ என்று தயங்கித் தயங்கி வீட்டிற்குச் சென்றான். ஆனாலும் மனதில் ஒரு சந்தேகம் இருக்க தான் செய்தது. குழந்தை எப்படிப் பிறக்கிறது என யாரிடமாவது கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்ற அவசரம் இருந்தது. ஆனால் யாரிடம் கேட்பது? வீட்டில் கேட்டால் அடிப்பார்களே? யாரைக் கேட்பது?
அன்று மாலை வீட்டிற்கு வெளியூரிலிருந்து மாமா வந்திருந்தார். அவருடன், சந்தனின் குடும்பமே வீட்டின் முன்புறத்திலிருந்த கிணத்தடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிந்தனர். அருகில் அமைதியாக நின்று சந்தன் கேட்டுக் கொண்டிருந்தான் சந்தன்.
ஏதோ ஒரு விசயமாக காரசாரமாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்க ஒரு தம் கட்டுவதற்காக ஒதுங்கிய மாமாவைப் பின் தொடர்ந்தான் சந்தன். அருகில் இருந்த சுவற்றின் மீது சாய்ந்து கொண்டே தயங்கித் தயங்கி நின்றான்.
ஓரக்கண்ணால் இவன் நிற்பதைப் பார்த்துக் கொண்டே மெதுவாக சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார் அவன் மாமா.
"கேட்கலாமா? கேட்டால் சொல்வாரா? அல்லது திட்டுவாரா?", என்று மனதில் ஆயிரம் கேள்வியுடன் அவர் முகத்தை பரிதாபமாக பார்த்தான் சந்தன்.
"என்னடா?"
"மாமா..."
"இம்...சொல்லு"
"அது... அது....எப்படி மாமா புள்ள பொறக்குது?"
கேட்டு விட்டு வீட்டுப்பாடம் எழுதி வராமால் மாட்டிக் கொண்டு தண்டனைக்கு காத்திருக்கும் மாணவனைப் போல தனது மாமாவைப் பார்த்தான்.
இவனின் இந்த கேள்வியை எதிர்பார்க்காத மாமா, ஊரே அதிரும் படி இடியெனச் சிரித்தார்.
கேள்வி கேட்டிருக்க கூடாது என்று நினைத்து அவமானம் மேலிட அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
"சே நல்லா மாட்டிக்கிட்டோமே.. அன்னைக்கு மட்டும் முத்தம் கொடுத்திருக்காட்டி இவ்ளோ பிரச்சினை இல்லியே... இப்ப மாட்டிக்கிட்டோமே....", என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டே இரவில் தூங்கச் சென்றான். ஒவ்வொரு நாளும் நரக வேதனையாக இருந்தது. ஒவ்வொரு நாளும் என்ன நேருமோ என்ற பயம் மட்டும் மனதில் அடித்துக் கொண்டது.
வாசலில் பலத்த கூச்சலைக் கேட்டு படுக்கையில் இருந்து கண் விழித்தான். எழுந்து என்னவென்று வாசலில் பார்த்தான். நன்றாக விடிந்திருந்தது. தேன்மொழி வீட்டின் முன்பே கூட்டம்.
"ஆனாலும் இந்தப் பொண்ணு இப்படி பண்ணியிருக்க கூடாதுப்பா. இந்தப் பொண்ணா இப்படி? நம்பவே முடியலைப்பா. இந்த முத்துப் பயலும் இல்ல இப்படி பண்ணியிருக்கான். அப்பாவி பொண்ணைக் கெடுத்து வயத்துல புள்ளையைக் கொடுத்து இருக்கானே"
"அதான் அவமானம் தாங்காம ஊரை விட்டே ஓடிட்டாங்க... நல்லதுக்குக் காலம் இல்ல"
இதையெல்லாம் கேட்ட சந்தனுக்கு விண்ணுயரக் குதிக்க வேண்டும் போலிருந்தது. முதலில் ராஜாவை பார்த்து விசயத்தைச் சொல்ல வேண்டும் என ஓடினான். ஓடும் வழியெல்லாம் உரக்கக் கத்திக் கொண்டே ஓடினான்.
இவன் ஓடுவதைப் பார்த்த சந்தனின் சித்தப்பா அவனை நிறுத்தி "ஏண்டா இப்படி தலை தெரிக்க ஓடுற? என்னடா விசயம்", என கேட்டார்.
மெதுவாக மூச்சிறைத்து விட்டு, "தேன்மொழியும் முத்தண்ணாவும் ஊரைவிட்டு ஓடிப் போய்ட்டாங்க....", என்று சொல்லி மீண்டும் ஓட ஆரம்பித்தான்.
"அவங்க ஓடுனதுக்கு இவன் ஏன் இப்படி ஓடுறான்", என்று புரிந்து கொள்ள முடியாமல் நடக்க ஆரம்பித்தார்.
குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராஜாவை நோக்கி வேகமாக ஓடினான்.
"டேய் ராஜா....தேன்மொழியும், முத்தண்ணாவும் ஊரை விட்டே ஓடிட்டாங்கடா..."
"என்னடா சொல்லுற?"
"ஆமாண்டா அந்தக் குழந்தைக்கு நான் அப்பா இல்லடா.... முத்தண்ணா தான் அப்பா"
"உண்மையாவா?"
"நான் முத்தம் கொடுக்குறதுக்கு முன்னாடியே முத்தண்ணா முத்தம் கொடுத்துட்டார்டா" என்று மகிழ்ச்சி மேலிட தனது சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டான் நண்பனிடம்.
இது நான் எழுதிய சொந்தக் கதை அல்ல. சில வாரங்களுக்கு முன்பாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஜெயா டி.வியில் டாக்குமெண்ட்ரி படங்கள் காட்டப்பட்டன. அதில் கடைசி பத்து நிமிடங்கள் இந்தக் கதையை பார்க்கும் வாய்ப்பு பெற்றேன். கதையின் முன்பகுதி என்னவாயிற்று, எப்படி ஆரம்பமாயிற்று என ஒன்றும் தெரியவில்லை. பார்த்த மறு நிமிஷமே பிடித்து விட்டதால் சில புகைப்படங்கள் எடுத்தேன். அதனால் வசனங்களையும் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டேன். கதாபாத்திரங்களின் பெயரும் நினைவில் இல்லை. ஆனால் கதைக்கரு ஞாபகம் இருக்கிறது. அந்த கடைசி வரியும் கூட('நான் முத்தம் கொடுக்குறதுக்கு முன்னாடியே முத்தண்ணா முத்தம் கொடுத்துட்டார்டா'). மிக அருமையான விதத்தில் படமெடுக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவன் சந்தனின் பாத்திரம் மிக அருமை. இரண்டு சிறுவர்களின் பேச்சும், பாடி லாங்குவேஜும் மிக நுணுக்கமாக எடுக்கப்பட்டிருந்தது. சிறு வயதில், பலருக்கும் இதே போல் அனுமானங்கள் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
என்னால் முடிந்த வரையில் அதற்கு வடிவம் கொடுத்து இங்கே கொடுத்திருக்கிறேன். நான் இங்கே கொடுத்திருக்கும் விதத்தை விட, அந்தப் படம் பல நூறு மடங்கு அருமையாக இருந்தது. இது உறுதி. அதனை இந்தப் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும்.
குறிப்பு: யாராவது அந்த டாக்குமெண்ட்ரி படத்தை பார்த்திருந்து, அதன் பெயரும், இயக்குனரின் பெயரும் தெரிந்திருந்தால் சொல்லவும். இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள்.
இதோ அந்தப் புகைப்படங்கள் . (நன்றி: ஜெயா டி.வி)
கர்ப்பமா இருக்கா
யாரு அப்பான்னு சொல்லுடி
என்ன செய்யாலாம்னு சொல்லுடா
என்ன செய்யாலாம்னு சொல்லுடா - 2
ரெண்டு பேரும் ஓடிட்டாங்கய்யா
தேன்மொழி ஓடி போய்ட்டா
அந்தக் குழந்தைக்கு நான் அப்பா இல்லை
முத்தண்ணா முதலேயே முத்தம் கொடுத்துட்டார்டா
புதன், ஏப்ரல் 19, 2006
எங்கே செல்கிறது இந்த இடஒதுக்கீடு?
எங்கெங்கோ இருந்த இடஒதுக்கீடு இப்போது தனியார் நிறுவனங்களிலும் செயல்படுத்தப் படும் எனத் தெரிகிறது. பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கொடுத்த பேட்டியில், "தனியார் நிறுவனங்கள் இடஒதுக்கீட்டினை அமுல்படுத்துவதைப் பற்றி யோசிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது", எனத் தெரிவித்துள்ளார். இன்னும் வேறெங்கெங்கு இட ஒதுக்கீடு அமுலுக்கு வரும் எனத் தெரியவில்லை. உங்கள் வீட்டுக்கு வேலை பார்க்க வரும் ஒரு நபருக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றால் கூட, உங்களுக்கு பிடித்திருந்தால், திருப்தி இருந்தால் மட்டுமே கொடுப்பீர்கள். அதுவும் பேரம் பேசி, பத்து ரூபாய் கொடுக்கும் இடத்தில் எட்டு ரூபாயை மட்டுமே கொடுப்பீர்கள். பத்து ரூபாய்க்கே இவ்வளவு யோசனை என்றால், கோடிக்கணக்கில் முதலீடு செய்து நீங்கள் நிர்வாகிக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர்களிடம் எவ்வளவு தரத்தை எதிர்பார்ப்பீர்கள்? (உடனே 'சிலர் தரம் தரம் என சல்லியடிக்கிறார்கள்'' என கூற ஆரம்பித்து விடாதீர்கள்).
உங்களுடைய நிறுவனத்திற்கு தேவைப்படும் ஆட்களைத் தேர்வு செய்யும் உரிமை உங்களுக்கு இருக்க வேண்டாமா? யார் யார் பணியில் சேர வேண்டும் என்ற முடிவை அரசு எடுத்தால் எப்படி? அரசு சொல்கிறது, 'உன்னோட நிறுவனத்தில் இந்த ஜாதிகாரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த ஜாதிக்கு 10% இடத்தைக் கொடு' என்று கூறினால் உங்களுக்கு எவ்வளவு எரிச்சலாக இருக்கும். இயல்பாகவே அத்தனை சதவீதம் அவர்களை அறியாமலேயே கொடுக்கப்பட்டிருக்கும் / நடைமுறையில் இருக்கும். ஆனால் '10% கொடு', என்று அழுத்தும் போது தான் சிக்கல் ஏற்படுகிறது. இது போல ஜாதி, மத, மொழி சிக்கல்கள் இல்லாத காரணத்தினால் தான் தனியார் நிறுவனங்கள் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது. மற்றவர்கள் வெற்றிகரமாக நடத்தும் நிறுவனங்களில் மட்டும் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று நினைக்கும் சிலர் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்திப் பார்த்தால் இதன் வலி தெரியும்.
எனக்கு யார் யார் என்ன ஜாதியைச் சார்ந்தவர்கள் முக்கியமல்ல. வேலை பார்த்தால் சரி. திறமையுடன் வேலை பார்க்காவிட்டால் தூக்கி விட்டு இன்னொரு திறமையான நபரை நியமித்து விட்டுச் செல்கிறேன். இது இப்போது சாத்தியம். ஆனால் இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட பின் ஒரு நபர் பணியில் இருந்து தற்காலிகமாகவோ / நிரந்தரமாகவோ நீக்கப்பட்டால் அங்கு ஜாதியின் பெயரால் பெரிய கூத்து நடக்க வாய்ப்பிருக்கிறது.
சாதி தாள்களை வைத்துக் கொண்டு, 'இவன் என்ன சாதி, அவன் என்ன சாதி', எனச் சரி பார்த்து ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, எனது நிறுவனம் என்ன தாலுகா அலுவலகமா அல்லது கிராம சாவடியா? யார் வேலையில் சேர வேண்டும் என்பதைச் சட்டமாகக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த எனது நிறுவனம் என்ன தலைமைச் செயலகமா?
ஆண்டுகள் செல்லச் செல்ல பின்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில் ஒன்றுமே இல்லை. பின்னர் கல்வியில், அரசு வேலை வாய்ப்பில், அரசியலில் (தனித் தொகுதிகள்) இப்போது தனியார் வேலை வாய்ப்பில். நாட்டை இது கூறு போடும் வேலை இல்லையா? ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரை செய்த போது, 'நீங்கள் கூறும் திட்டத்தை அறிமுகப்படுத்தி எனது நாட்டைத் துண்டாடச் சொல்கிறீர்கள். என்னால் நிச்சயமாக முடியாது', என்றார்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு சாதிச் சான்றிதழ்களை நம்பி பிழைக்கப் போகிறோம் எனத் தெரியவில்லை? உங்களது மதிப்பெண் சான்றிதழ்களை நம்பி நிலைக்கும் வழியைப் பாருங்கள். தனியார் நிறுவனங்கள் தான் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் காரணிகளில் முக்கியமானதாகத் திகழ்கிறது. அதையும் கெடுத்துத் தொலைத்தால் நன்றாக இருக்கும். சட்டம் என்ற ஒரு ஆயுதத்தை வைத்துக் கொண்டு, அடுத்தவனின் உழைப்பில் சலுகைகளைப் பெறுவதற்கு நாமெல்லாம் வெட்கப்பட வேண்டுமா? (இதை தனிப்பட்ட சமுதாயத்தின் மீதான தாக்குதலாக நினைக்க வேண்டாம். இது எனக்கோ / நான் சார்ந்திருப்பதாக கூறப்படும் சமூகத்திற்கும் பொருந்தும்.)
ஒரு வேளை இந்த சட்டம் அமுல் செய்த பிறகு, ஒரு நிறுவனத்தில் இருந்து குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு நபரை சரியாக பணிபுரியவில்லை என்ற காரணத்திற்காக வெளியேற்றினால் என்னவாகும்?
1. அவரின் மேலதிகாரி என்ன ஜாதியைச் சார்ந்தவர் என்று பார்ப்பர். அவர் மீது பழி போடப்படும்.
2. நீக்கப்பட்டவரின் சமூகத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு, அதனை ஒரு பெரிய சிக்கலாக மாற்றுவார்கள்.
3. மீண்டும் நீக்கப்பட்ட நபரின் பிரிவிலிருந்து ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து பணியை நிரப்ப வேண்டும். செய்தித் தாள்களில் இந்த ஜாதி / பிரிவின் கீழ் இத்தனை இடங்கள் காலியாக இருக்கின்றன. அந்தப் பிரிவைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்படும். விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் தங்களது விண்ணப்பத்திலும், நான் இந்த ஜாதி, இந்தப் பிரிவை சார்ந்தவன் என்று பெருமையாகக் குறிப்பிட்டுக் கொள்வார்கள்.
4. இன்னும் சில ஆண்டுகளில், 'பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்த நபர்கள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நீக்கப்படுகிறார்கள்', என்ற குற்றச்சாட்டு வலுத்து, அதற்கும் ஏதாவது ஒரு சட்டம் இயற்றப்பட்டு, இங்கும் அனனவரும் (எல்லா சமூகத்தினரும்) அரசு நிறுவனங்களைப் போல நிரந்தர சீட்டை போட்டு விடுவார்கள்.
5. இப்போது இருப்பது போல, Skillset-ஐ அடிப்படையாக வைத்து அந்த இடத்திற்கு இன்னொருவரைப் பணியில் அமர்த்த முடியாது. சென்றவர், எந்தப் பிரிவைச் சார்ந்தவர் என்று பார்க்க வேண்டும். அதே பிரிவைச் சார்ந்த இன்னொருவரை பணியிலமர்த்த வேண்டும். நீங்களும் நினைத்த நேரத்தில் பணி மாற முடியாது. ஏனென்றால் குறிப்பிட்ட நிறுவனத்தில் உங்கள் பிரிவிற்கு வேலை காலியாக இருக்காது.
6. அடுத்து எல்லா மாநிலங்களிலும் மொழி வாரியாகவும், மத வாரியாகவும் நிரப்பபடும். பிற்காலத்தில் பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் சட்ட விரோதமாகக் குடியேறுபவர்களுக்கும் ஏதாவது ஒரு அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
7. நிறுவனங்கள், லாபத்தை உயர்த்துவது எப்படி என்று கூட்டம் நடத்தி திட்டமிடுவதற்குப் பதில், சாதி சங்கங்களுடன் சமரசம் பேசிக் கொண்டிருப்பார்கள்.
8. சிறிது ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு உயர்ஜாதியினருக்கு மட்டும் கொடுக்கப்படுகிறது. அதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆரம்பிப்பார்கள். பின்னர் பதவி உயர்வு இட ஒதுக்கீடு முறைப்படி கொடுக்கப்படும்.
இங்கே, 'பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் நிலைமை மோசமாக இருக்கிறது; அவர்கள் முன்னேற வேண்டும். அதற்காக தான் இடஒதுக்கீடு', என்று கூறுபவர்கள் தயவு செய்து வடகிழக்கு மாநில மக்களின் நிலைமையையும் கருத்தில் கொள்ளட்டும். அனைவரும் அவரவருக்கு எது நல்லதோ அதற்கு மட்டுமே போராடுகிறார்கள். இவர்களுக்கு சலுகைகள் என்றால், அரசியல்வாதிகளுக்கு ஓட்டுகள்.
'வடகிழக்கு மாநில மக்களின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால், அனைத்து அரசு வேலை வாய்ப்புகளும் இன்னும் பத்து வருடங்களுக்கு அஸ்ஸாம், மேகலாயா, அருணாச்சல் பிரதேசம், சிக்கிம், மிசோராம், நாகலாந்து மாநிலங்களைச் சார்ந்த மக்களுக்கு கொடுக்கப்படும். மேலும் கல்லூரிகளிலும் அவர்களுக்கு 55% இட ஒதுக்கீடு கொடுக்கப்படும். மற்ற மாநில மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் நல்ல வேலை வாய்ப்புகள் இருக்கும் காரணத்தினால் அவர்கள் அங்கு பணிபுரிந்து கொள்ளலாம்', என்று அரசு ஒரு ஆணையை வெளியிட்டால் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
உங்களுக்கோ அல்லது உங்களது உறவினருக்கோ முக்கியமான அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதிருக்கிறது. பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த ஒரு மருத்துவர் இருக்கிறார். அவ்வளவாக பெயரெடுக்காத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு நபர் மருத்துவரோ இருக்கிறார். யாரிடம் செல்வீர்கள்? அப்போதும் நீங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினை சார்ந்த ஓர் மருத்துவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்து வேண்டி இரண்டாமவரையா தேர்ந்தெடுப்பீர்கள்? மருத்துவரின் ஜாதியைப் பார்ப்பீர்களா? அதைத் தெரிந்து கொண்டு தான் அறுவைச் சிகிச்சைக்கு ஒப்புக் கொள்வீர்களா? இப்படி கூறுவதால், பிற்படுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்ட பிரிவினைச் சார்ந்தவர்கள் அனைவரும் திறமை குறைந்தவர்கள் என நான் கூறுகிறேன் என எண்ண வேண்டாம். நான் கூறுவதெல்லாம், சலுகைகள் இருக்கட்டும், ஊக்கங்கள் தொடரட்டும். ஆனால் அவற்றை ஒரு இடத்தில் நிறுத்த தான் வேண்டும். இது போன்ற உயிர் காக்கும் விசயங்களில் கூட இடஒதுக்கீடு என்றால் அபத்தம் இல்லையா அது?
அய்யா.... இவருக்கு வசதி இல்லை என்றால், வசதியை ஏற்படுத்திக் கொடுங்கள். விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பது போல், மானியம் கொடுங்கள்; சைக்கிள் கொடுங்கள்; லவச வீடு கட்டிக் கொடுங்கள்; கல்வியை இவர்களுக்கு இலவசமாக்குங்கள்; இலவசப் பயிற்சி கொடுங்கள். இவ்விதமான எதிப்பும் இல்லை. ஆனால் இன்னொருவனை முன்னேற்றுகிறேன் என்று கூறி நன்றாகப் படிக்கும் ஒரு மாணவனின் உரிமையைப் பறிப்பது எவ்விதத்தில் நியாயம்? என்னுடைய நண்பர்கள் சிலர் மாவட்டத்திலேயே சிறந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவமோ, அல்லது பொறியியல் துறையில் புகழ்பெற்ற கல்லூரிகளிலோ சேர முடியாமல் போனதை அறிவேன். அத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு படித்ததற்கு இது தான் விலையா?
இப்படி சலுகைகளாகக் கொடுத்துக் கொடுத்து அவர்களின் திறமையை நீங்கள் மட்டுப்படுத்துகிறீர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. அவர்களை சுதந்திரமாக விட்டிருந்தால், நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மேலாக திறமையை வளர்த்து விசுவரூபமெடுத்திருப்பார்கள். ஆரம்பத்திலிருந்தே, அவர்கள் எப்போதும் சுகமாக அமர்ந்திருப்பதற்கு ஏதுவாக ஒரு எலெக்ட்ரானிக் சற்கர நாற்காலியைக் கொடுத்து, அவர்களை நொண்டியாக்கி விடாதீர்கள்.
சலுகைகளை (இடஒதுக்கீடு) எதிர்பார்த்து ஒரு முறை வாழப் பழகிவிட்டால், பின்னர் மனம் அதையே எதிர்பார்க்காதா? இப்படி இடஒதுக்கீட்டினை மட்டுமே (தன்னிடம் திறமை இருந்தும் அதனை உபயோகப்படுத்தாமல்) நம்பி வாழ்பவர்களுக்கும் இவர்களுக்கும் உடல் திறனிருந்தும் வேலை செய்யாமல் பிச்சையெடுக்கும் நபருக்கும் என்ன வித்தியாசம்? நாட்டில் சமத்தும் பரவ, ஏற்ற தாழ்வு மறைய இடஒதுக்கீடு அவசியம் என சிலர் ஆணித்தரமாகக் கூறுகிறார்கள். அனைத்து அதிகாரமும், சலுகைகளும், வாய்ப்புகளும் உங்களுக்கு மட்டுமே கிடைப்பது தான் சமத்துவம் என்றால், அதற்குப் பெயர் சமத்துவம் அல்ல. சமூகத்திற்கு அடிக்கும் சாவு மணி. (இதை தான் ஒரு சில பிரிவினர் அந்த காலத்தில் செய்து வந்தனர் என மீண்டும் ஆரம்பிக்காதீர்கள்)
இன்னும் சிலர் வாய்ப்பு கொடுத்தால் தான் திறமை வரும். வாய்ப்பு கொடுக்காமல் திறமை வளராது என்கிறார்கள். திறமையை வளர்ப்பதற்கு பயிற்சி தான் அத்தியாவசியம். பயிற்சியின் போது தூங்கி விட்டு, எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. போரில் சண்டையிடுவதற்கு போதிய பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலத்தின் போது பயிற்சியில் கவனமெடுக்காமல் காலத்தை ஓட்டி விட்டு, எனக்கு வாய்ப்பு வேண்டும் என்று அழுது போரிடும் வாய்ப்பை பெறுவதனால் இறப்பது நீங்கள் மட்டுமல்ல; உங்களைச் சார்ந்திருக்கும் நாடு என்பதையும் நினைவில் கொள்தல் வேண்டும். இடஒதுக்கீட்டினை கல்வியில் புகுத்துவதே தவறு. அனைவருக்கும் கல்வி என்றே இருந்திருக்க வேண்டும். அது முடியாத பட்சத்தில் மேல்நிலைப்பள்ளி அளவிற்காவது அது இருக்க வேண்டும். (அப்படித்தான் இருக்கிறது என்றே கருதுகிறேன்.) நல்ல ஆசிரியர்கள் அமைந்தால், ஒருவனின் திறமையை வளர்க்க 12 ஆண்டுகள் போதாதா? உடனே, 'கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் மேல்சாதியினருக்கு ஒரு மாதிரியும், கீழ் சாதியினருக்கு ஒரு மாதிரியும் சொல்லிக் கொடுப்பார்கள்', என்று அபத்தமாகக் குற்றம் சாட்டாதீர்கள். அப்படியானால் என்னைப் போன்றோர்கள் யாருமே படித்திருக்க முடியாது.
இடஒதுக்கீடு அமுல் செய்த பிறகு, ஒரு பிற்படுத்தப்பட்டவரோ / தாழ்த்தப்பட்டவரோ தனது திறமையினால் (இடஒதுக்கீடு அவருக்கு தேவையில்லாத பட்சத்திலும்) சிறிது சிறிது முன்னேறி நல்ல பதவியை அடைந்தாலும் நாளைக்கு சமுதாயம் என்னுடைய திறமையை எந்த அளவிற்கு மதிக்கும்? 'ஆமாம் இவன் இடஒதுக்கீடினால் வந்தவன் தானே', என்று தானே கூறுவார்கள்? எனது சந்ததியினர் சலுகை கிடைக்காமல் நாளைக்கு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. அவர்கள் தங்களது திறமையினால் முன்னுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இடஒதுக்கீடு என்ற ஊன்றுகோல் எனக்கும் / அவர்களுக்கு தேவையில்லை. அவர்களுக்கு தேவையானது எல்லாம் நடப்பதற்கு பயிற்சி மட்டுமே. அதனை என்னால் தரமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு அந்த நம்பிக்கை இருந்தால், அந்த ஊன்றுகோலைத் தூக்கி எறியுங்கள். முயற்சியுங்கள். விழுங்கள்; எழுந்திருங்கள். எவரின் துணையில்லாமல் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.
உலகம் உங்கள் வசமாகும்!
விமானத்தில் பறப்பவர்கள், அலுமினிய கூண்டுக்குள் அடைபட்டு கீழே மேகங்களை மட்டுமே பார்க்க முடியும். அதில் பறக்கும் போது சுதந்திர உணர்வையும், நிம்மதியையும் விட எப்போது விமானம் விழுந்து விழும் என்ற அச்சம் மட்டுமே மனதில் குடியிருக்கும். ஆனால் தனது சிறகை விரித்துப் பறக்கும் பறவைக்கு அது போன்ற எந்த கவலையும் இருக்காது. அவற்றினால் நிற்காமல், உணவு உண்ணாமல் கண்டம் விட்டு கண்டம் கூட பறந்து செல்ல முடியும். விமானம் என்ற ஊன்றுகோலை விடுத்து, திறமையினால் பறக்க முயலுங்கள். உங்களால் உயரப் பறக்க முடியும்.
ஒருவனுக்கு 'அவன் கருப்பினத்தைச் சார்ந்தவன்' என்ற காரணம் காட்டி சலுகை கொடுப்பதற்கும், அவன் 'கருப்பினத்தைச் சார்ந்தவன்' என்ற காரணத்தினால் இது வரை உரிமை மறுக்கப்பட்டதற்கும் அதிக வித்தியாசமில்லை. உடனே, 'அவர்கள் செய்தார்கள். இப்போது நாங்கள் செய்கிறோம்', என்று கூற ஆரம்பித்து விடாதீர்கள். உங்களுக்கென்று தனிப்பட்ட வரலாறும் கிடையாது; இனிமேலும் இருக்கப் போவதுமில்லை. அதையும் மீறி வரலாற்றில் நிலைத்தவர்கள் எல்லாம். அவர்களின் நிறம், மொழி, ஜாதி, நாடு என்ற சலுகையினால் நின்றதில்லை. 30 ஆண்டுகள் புகழ் என்பதும் ஒரு புகழே அல்ல. ஏன் 2000 ஆண்டுகள் கூட மனித சமுதாயத்தின் வயதினை ஒப்பிடும் போது, இந்த பூமியின் வயதை ஒப்பிடும் போதோ வெறும் தூசு மட்டுமே. இந்த 2000 ஆண்டுகளில் ஓரளவு பெயர் தெரிந்தவர்களே சிலரே (அலெக்ஸாண்டராக இருக்கட்டும்; திருவள்ளுவராக இருக்கட்டும்) மிஞ்சி மிஞ்சி போனால் 10 பெயர்களைச் சொல்வதே மிகக் கடினம். அவர்கள் யாரும் சலுகையினால் ஞாபகம் வைத்துக் கொள்ளப்படுபவர்கள் அல்ல. அசாத்திய திறமையினால் மட்டுமே என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இங்கே திருவள்ளுவர் என்ன ஜாதி என்று கூட ஆராயப்படுவது ஜாதி என்ற கொடூர அமைப்பின் இறுதி கட்ட சீர்கேடு.
சமுதாயம் ஒன்றுபட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் ஏதாவது ஓர் மகாத்மா ஒரு படியெடுத்து வைக்க முயலும் போதெல்லாம், அதில் பலத்த பின்னடைவு ஏற்பட்டு பல படிகட்டுகள் சறுக்கல் தான் ஏற்படுகின்றன. நாட்டை கோடிக்கணக்கான துண்டாக்காமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று இங்கிருப்பவர்களை, வெளி மாநிலத்திற்கு கொண்டு சென்று விட்டால் கூட, அங்கேயேயும் நாமெல்லாம் இந்தப் பிரிவின் கீழ் வருபவர்கள், அந்தப் பிரிவின் கீழ் வருபவர்கள், அவர்கள் நமக்கு நண்பர்கள், இவர்கள் நமக்கு எதிரிகள் என்று மொழி தெரியாதவனைக் கூட கூட்டிக் கொண்டு கூட்டம் சேர்க்கும் கூட்டமய்யா இது!
இது இங்கேயே நின்று விடுமா அல்லது ஹோட்டல்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சினிமா எனத் தொடருமா?
அந்தப் பாடகி பிராமண வகுப்பைச் சார்ந்தவள், இனிமேல் அவள் 100 பாடல்களில் 5 பாடல்கள் மட்டுமே பாட வேண்டும், மீதமுள்ள பாடல்கள் மற்ற பிரிவைச் சார்ந்த பாடகிக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறுவார்களா? யுவன்சங்கர் ராஜா ஒரு பிரிவைச் சார்ந்தவர். அவர் மட்டும் அதிகமான படங்களுக்கு இசையமைக்கிறார். ஆதலால் இனி அவருக்கு வரும் வாய்ப்புகள் இமானுக்கும், விஜய் ஆண்டனிக்கும் கொடுக்க வேண்டுமா? ரஹ்மானும் அதே போல அவரது படங்களை மற்ற பிரிவினருக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டுமா? அங்கே மட்டும் உங்களது விருப்பமும், கலைஞரின் திறமையைப் பார்க்கும் நீங்கள், ஏன் தனியார் துறைகளிலும், அரசுத் துறைகளிலும் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு பார்க்க கூடாது?
இடஒதுக்கீடு வைத்தா இளையராஜாவும், வைரமுத்துவும், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், யுவன்சங்கர் ராஜாவும், ஹாரிஸ் ஜெயராஜூம், விக்ரமும், விஜயும், ரஹ்மானும் திரையுலகில் சாதனை புரிந்து வருகிறார்கள். அவரவரின் திறமையினால் இங்கே அங்கீகாரம் பெற்று, நிலைத்து வருகிறார்கள். இங்கு சாத்தியாமானது, மற்ற இடங்களில் சாத்தியமில்லாமல் போய் விடுமா? இது வரை நன்றாகத்தானிருக்கிறது. இதனை கெடுத்து விடுவது ஆரம்பித்து வைக்கும் அரசியல் வாதிகள் கையிலும், அதனை உடும்பு போலப் பிடித்துத் தொங்கும் உங்களைப் போன்ற படித்தவர்கள் கையிலும் தான் உள்ளது.
சிலர், 'இட ஒதுக்கீட்டு முறை ஏன் தனியார் நிறுவனங்களுக்கு வரக்கூடாது? அங்கு தானே உயர்ஜாதியினர் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படி செய்தால் தான் அவர்களுக்கு அடி விழும்', என்கின்றனர். இப்படி கூறுவதால், இடஒதுக்கீடு என்ற கருவி இல்லாமல் அவர்களை விஞ்சி நீங்கள் உயரமுடியாது என்பதனை ஒப்புக் கொள்வது போலிருக்கிறது. மேலும் உங்களின் நோக்கம் என்ன? சமுதாயத்தில் கீழே இருப்பவர்கள் மேலே வர வேண்டும் என்பதா? அல்லது உயர்ஜாதியினர் ஒழிய வேண்டும் என்பதா? உங்களின் நோக்கத்தில் தான் குறை இருப்பதாக உணர முடிகிறது. உங்களுடைய முயற்சி கஷ்டப்படும் மற்றவர்களை முன்னேற்ற வேண்டும் என்பதில் இருப்பதாக தோன்றவில்லை; அவன் நன்றாக இருக்கிறானே. இப்படி செய்வதனால் தான், அவன் அழ முடியும். ஆதலால் இதைச் செய்தே முடிக்க வேண்டும் என்ற ஆத்திரம் இருப்பதையும் பார்க்க முடிகிறது. இணைந்து செயலாற்றி சிகரங்களைத் தொடுவதற்குப் பதில், அழிந்தாலும் பரவாயில்லை; தனித்தாற்ற வேண்டும் என்று நினைப்பதில் எவ்வளவு தூரம் நியாயம் இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். எப்போது இது போன்ற பிரிவுகளைத் தாண்டி இணைந்து பணியாற்றப் போகிறோம்?
என்னைத் திட்டி பின்னூட்டம் இடுவதற்கு முன் எனது கருத்தையும் கொஞ்சமாவது சிந்தித்து பாருங்கள் என வேண்டுகிறேன். தமிழ் வலைப்பதிவார்களுக்குள் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டு விட்டதால், இதைப் பற்றி எழுதுவதற்குத் தயக்கம் இருந்தது. இந்தத் தலைப்பில் எழுத வேண்டாம் என்று தான் நேற்று வரை நினைத்திருந்தேன். இந்தப் பதிவினைப் பற்றிய மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும். ஆக்கபூர்வமான விவாதத்திற்குத் தயார். ஜாதி என்னும் முகத்திரையை கிழித்து விட்டு, உங்களின் உண்மையான முகத்துடனும், மனத்துடனும் இந்த உலகில் உலா வாருங்கள். உலகம் ஒன்றும் மோசமில்லை. "கீழே இருப்பவர்களை உயர்த்துவதற்கு வழி, மேலே இருப்பவனை கீழிறக்குவதில் இல்லை", என்ற கூற்றை மறுபடியும் கூறி இந்தப் பதிவை முடிக்கிறேன். என்னுடைய வார்த்தை உபயோகத்தினால் யாருடைய மணமும் புண்படும் படியாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்.
வாழுங்கள்! ஆனால் மற்றவர்களையும் வாழ விடுங்கள்!.
இந்தப் பதிவிற்கு சிறிது தொடர்புடைய இன்னொரு பதிவு: கெட்ட புத்தியும் பச்சரிசி சாப்பாடும்
வியாழன், ஏப்ரல் 13, 2006
பெங்களூரில் இரண்டு நாட்கள்
"நான் வீட்டுக்கு கிளம்புகிறேன்", என்றார்.
"ஏன்?"
"ஆமா. ராஜ்குமார் செத்துட்டார்"
"பொய் சொல்லாதப்பா"
"உண்மை தான். வேணும்னா செக் செய்து கொள்", என்றார்.
அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எங்கெங்கோ தேடிப் பார்த்தார். ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியாக சிபியில் மட்டும் 'ராஜ்குமார் மரணம்', என்று ஒரு வரியில் செய்தி கிடைத்தது. இதை பார்த்து கொண்டிருந்த கல்கத்தாவைச் சார்ந்த மற்றுமொரு மானேஜர்,
"ராஜ்குமார் இறந்தால் என்ன?"
????
"அதுக்கு ஏன் வீட்டுக்குப் போகணும்", என்று அப்பாவியாக கேட்டார்.
செய்தியை உறுதி செய்வதிலேயே அரை மணி நேரம் சென்றது.
நண்பர் நேராக ஹெ.ஆரிடம் சென்று, "வீட்டுக்குப் போகலாம்ல", என்றார்.
"ஏன்?"
"நியூஸ் தெரியாதா? ராஜ்குமார் செத்துட்டார்"
"அப்படியா? வெரிஃபை செய்துட்டு சொல்லுறேன்", என்றார்.
நமது கல்கத்தா மானேஜரின் அணியில் பணிபுரிந்த தமிழ்ப் பெண் அவரிடம் சென்று,
"அப்ப நான் வீட்டுக்கு கிளம்பலாமா", என்றார்.
"எதுக்கு, இப்பவே போகணும். வொர்க் பெண்டிங் இருக்கே..."
"இல்ல. ராஜ்குமார் இறந்துட்டார். பிரச்சினை வரும். அதான்.. நான் போகட்டுமா?"
"நான் ஒண்ணும் சொல்லமுடியாது. ஹெச். ஆர் தான் சொல்லணும்", என்று கூறினார்.
ஏமாற்றத்துடன் அந்தப் பெண் தனது இருக்கையில் சென்றமர்ந்தார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே செய்தி அனைவருக்கும் பரவி, வதந்திகளும் பரவ ஆரம்பித்து விட்டன.
"அங்க பஸ்ஸை எரிச்சிட்டாங்க... இங்க டிராபிக் blocked", அப்படி இப்படியென்று....
இதனை பார்த்த கல்கத்தா மானேஜர் உடனே எங்கோ வேலை பார்க்கும் தனது மனைவிக்கு போன் செய்து நிலைமையை விளக்கி,
"உடனே வீட்டுக்குப் போயிடு; நானும் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்", என்றார்.
அருகில் அமர்ந்திருந்த கன்னடிகா மேனேஜர், "உங்க வொய்ஃப் மட்டும் பத்திரமா வீட்டுக்குப் போயிடணும்னு எதிர்பார்க்குறீங்க... ஆனா உங்க டீம் மெம்பர் போகக் கூடாதுன்னு சொல்லுறீங்க? எந்த விதத்துல நியாயம்? உங்க டீம் மெம்பர்ஸை பத்திரமா வீட்டுக்கு அனுப்புற கடமை உங்களுக்கு இருக்கு மறந்துடாதீங்க", என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
அவர் அசடு தான் வழிய முடிந்தது.
சிறிது நேரத்தில் மின்னஞ்சல் வந்தது. "அனைவரும் வீட்டிற்கு செல்லுமாறு....நாளை நிலவரத்தைப் பார்த்து விட்டு அலுவலகம் வரவும்", என்றிருந்தது.
மின்னஞ்சல் வந்ததும் தான் தாமதம்; அலுவலகமே வாசலை நோக்கி ஓடியது.
அருகில் தான் வீடு என்பதால் நான் இன்னும் சீட்டில் அமர்ந்திருந்தேன். அருகில் வந்த மேனேஜர், "வீட்டுக்குப் போ", என்று அழைத்து வாசல் வரை கொண்டு சென்று விட்டார். அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பலருக்கு, முன் அனுபவம்(?) இருந்ததால் கார்களை எடுக்காமல், வீட்டிற்கு நடந்து செல்ல ஆரம்பித்தனர்.
வீட்டிற்கு வரும் வழி முழுவதும் ஒரே பதற்றம். கார்கள் குறுக்கும் நெடுக்குமாக ஒழுங்கற்று செல்ல ஆரம்பித்தன. எங்கும் ஒலிப்பான்களின் சத்தம். அனைவருக்கும் தான் முதலில் வீட்டுக்குச் சென்று விட வேண்டும் என்ற அவசரம் முகத்தில் தெரிந்தது.
சரி இரவு சாப்பாடு கோவிந்தா என்று, வீட்டிற்கு வரும் வழியிலேயே சிறிது பழங்களை வாங்கி வீடு வந்து சேர்ந்தேன். ஆனால் இரவில் ஒரு ஹோட்டலில் பார்சல் கிடைத்தது. பழங்களுக்கு அவசியமில்லாமல் போனது.
இப்போதெல்லாம் பெங்களூரில் நடக்கும் பந்த், போராட்டம், மரணம் போன்ற நிகழ்ச்சிகள் எவ்விதமான அதிர்ச்சியையோ, ஏமாற்றத்தையோ தருவதில்லை. ஆனால் பதற்றம் உண்டு. புதிதாக வருபவர்களுக்கு இது ஏமாற்றமாகவும், அதிர்ச்சியாகவும் அமைகிறது.
ஆனால் நான் எதிர்பார்த்ததை விட இம்முறை குறைவான அளவே சேதாரங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன எனக் கருதுகிறேன். ஆனால் இன்னும் நேரம் இருக்கிறது.
இன்று காலையில் சாப்பிடுவதற்கு ஒரு கடையும் திறந்திருக்கவில்லை. இரவு வாங்கி வைத்திருந்த பழங்கள் உதவின. நமது தமிழ்நாடு ஹோட்டலான, நாயுடு மெஸ் கடையின் பின்புறத்திலிருந்து பார்சல் கொடுத்ததால் மேலும் சிறிது நிம்மதியாக சாப்பிட முடிந்தது. அந்தக் கடை மட்டும் இல்லாதிருந்தால், பல பேச்சிலர்கள் இன்று பட்டினி தான்.
எதிர்பார்த்தது போலவே, சில செய்தி சேனல்களைத் தவிர்த்து, அனைத்து சேனல்களும் தடை செய்யப்பட்டன. "தமிழ் சேனல்கள் கட்", என்று சில இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டது தவறு. அனைத்து மொழி சேனல்களுமே தடை செய்யப்பட்டுள்ளன. நேற்றே தடை செய்யப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் காலையில் தான் தடை செய்யப்பட்டன.
இது எதற்கு?, யாரை திருப்திபடுத்துவதற்காக இதெல்லாம்? என்பது யோசிக்க வேண்டியது தான். இன்று அலுவலகம் விடுமுறை என்று ஓரளவிற்கு உறுதியாகத் தெரிந்திருந்தாலும், அலுவலம் புறப்பட்டேன்.
4 கி.மீட்டர்கள் இருக்கும் அலுவலகத்திற்கு.
குறிப்பிடத்தக்க அளவில் வாகனங்கள் ஓடின. பல கால் சென்டர் வாகனங்கள் "ராஜ்குமார்" படத்தை முன்புறமும், பின்புறமும் தாங்கியபடி தனது வேலையை செய்து கொண்டிருந்தன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த ஒரு போராட்டம் கொடுத்த அனுபவத்தினால், வழக்கம் போல இண்டெல் அலுவலகத்திற்கு பெரிய வலை போட்டு, கண்ணாடி கட்டிடத்திற்குப் பாதுகாப்பு கொடுத்திருந்தனர். சிறு போராட்டம், கடையடைப்பு என்றாலே இண்டெல் நிறுவனம் இது போல் செய்வது வழக்கம் தான்.
ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக, இண்டெல் அலுவலகத்தின் இரண்டு வாயிற்கதவுகளிலும், ராஜ்குமார் படங்களை வேறு ஒட்டியிருந்தார்கள். சும்மா பாதுகாப்பிற்குத் தான். மற்ற போராட்டங்களிலிருந்து தப்பிப்பதற்க்காக, மஞ்சள்-சிகப்பு கொடியை, கட்டிடங்களிலும், வாகனங்களிலும் மாட்டி வைத்திருப்பார்கள். பெரிய மருத்துவமனையான மணிப்பாலில் கூட அந்தக் கொடி எப்போதும் இருப்பது வெட்கக்கேடு.
ராஜ்குமார் கடத்தப்பட்ட போது, டையமண்ட் டிஸ்டிரிக்ட் என அழைக்கப்படும் பெங்களூரின் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு, வர்த்தக அலுவலகம் பெரிய பெரிய கற்களைக் கொண்டு தகர்க்கப்பட்டது (200 மீட்டர் நீளமிருக்கும். முழுவதும் கண்ணாடியால் செய்யப்பட்டது). இம்முறை எவ்விதமான பிரச்சினையும் அங்கில்லை. இரண்டு காவல்துறையினர் வேறு அங்கு அமர்ந்திருந்தார்கள்.
ஆனால் நன்கு அடி வாங்கியிருந்தது, கோரமங்களா இன்னர் ரிங் ரோடில் இருந்த வர்த்தக / தனியார் நிறுவங்கள் தான். வரிசையாக கல்லெறிகளை வாங்கியிருந்தன. போன வாரம் திறக்கப்பட்ட வசந்த் & கோ மாதிரியான எலெக்ட்ரானிக் விற்பனை நிறுவனத்தின் கண்ணாடிகள் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து வரிசையாக சில நிறுவனங்களும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.
சிறிது தூரத்திலிருந்த பெரிய சாப்ட்வேர் நிறுவனம் பல கல்லடிகளைப் பட்டிருந்தது. நேற்று பட்ட கல்லடி காரணமோ என்னவோ, காலையில் பெரிய ராஜ்குமார் படத்தை ஒரு மேஜையில் வைத்து, மாலை போட்டு, ஊதுபத்தி கொளுத்தி வைத்திருந்தார்கள். தலையிலடித்துக் கொள்ளத் தோன்றியது. அவர்களின் செயலுக்காக அல்ல. இங்குள்ளவர்களின் நிலைமையைப் பார்த்துத் தான்.
இது போன்ற வன்முறையில் ஈடுபடும் பலர், அங்கே சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்துவதில் கூட அக்கறை காட்ட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அவர்களுக்கு வேண்டியதெல்லாம், ஒரு காரணம். மற்றவர்களைத் தொல்லை செய்வதற்கு, உடைக்கப்பட்ட நிறுவனங்களில் எத்தனை தனிமனிதக் காழ்ப்புணர்ச்சியினால் உடைக்கப்பட்டதோ?. ஒவ்வொரு நாளும் அந்த சாலை வழியாகச் செல்லும் போதெல்லாம், "ஆமா பெரிய கண்ணாடி பில்டிங். எனக்கு ஒரு நாள் நேரம் வரும். அப்ப நான் உடைக்கத் தான் போறேன்", என்று எத்தனை முறை இது போன்ற கெட்ட எண்ணங்களை மனதில் சுமந்து கொண்டு அலைந்தார்களோ? இதோ நேரம் வந்து விட்டது. இவர்களுக்கெல்லாம் யார் மீது கோபம் எனத் தெரியவில்லை. சமூகம் நம்மை பணமில்லாத காரணத்தினால் அலட்சியம் செய்கிறதே என்ற கோபமா? நம்மால் முடியாததை, இன்னொருவன் வைத்து அழகு பார்க்கிறானே என்ற பொறாமையா? ஒருவேளை சில தமிழக அரசியல் தலைவர்களிடம் கேட்டால், அதற்கான காரணம் தெரியவரும்.
தொலைக்காட்சியில் கூட பல நபர்கள் கொடிகளைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டே கோஷங்கள் எழுப்பியதையும் பார்க்க முடிந்தது. அழுது கொண்டே பேட்டி கொடுக்கும் நபருக்கு அருகில் சிரித்துக் கொண்டு, கேமராவில் தெரியவேண்டும் என்று முண்டியடித்தவர்களையும், ராஜ்குமாரின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வேனின் கண்ணாடிகளை உடைத்த நபர்களையும், அவரது உடலுக்குப் பாதுக்காப்பாக சென்ற போலீஸ் வாகங்களை உடைத்த நபர்களையும் பார்க்க முடிந்தது. அவர்கள் முயல்வது எல்லாம், எப்படியாவது இதனை ஒரு பெரிய சிக்கலாக்கி விட வேண்டும். இந்த நேரத்தில் தான் காவல்துறையினரிடம், சாதாரண ரவுடி கூட மல்லுக்கு நிற்க முடியும். கடைசியாக ஒரு நபர் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஆரம்பமா அல்லது முடிவா எனத் தெரியவில்லை.
இதை விட கொடுமை, பலர், "இது போல் நிகழ்வது இயல்பு தான்", என்று கருதி இதற்கு முக்கியத்துவம் கொடுக்க மறுப்பது. அது அரசுத் தரப்பாக இருக்கட்டும்; பொதுமக்களாக இருக்கட்டும். இன்னும் சிலர், "இது போன்ற விசயங்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இது போன்ற வன்முறைகள் இயல்பு", என்கின்றனர். எது போன்ற விசயங்களுக்கு? 'உங்களது வீட்டை உடைக்கும் போதும், வாகனத்தில் நீங்கள் செல்லும் போது, பெரிய பாறாங்கல்லைத் தூக்கி உங்கள் வாகனம் மீது போடுவதையும் யாரும் கண்டுகொள்ள வேண்டாம்; காவல்துறையினர் காப்பாற்ற முயல வேண்டாம்; அது சாதாரணம் தான்', என்று நீங்கள் எண்ணினால் மற்றவர்களும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை.
இப்போதெல்லாம், இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கவில்லையென்றால் மரணத்திற்கு அர்த்தமே இல்லை என்ற கருத்து பல பெரிய மனிதர்களின் குடும்பத்தில் நிலவுகிறதோ என்ற அச்சமும் மேலோங்குகிறது. அவரது குடும்பத்தார் ஒரு பேச்சுக்குக் கூட "ரசிகர்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்", என்று இது வரை வேண்டுகோள் விடுக்கவில்லை. இதைப் பார்க்கும் போது, அவர்களும் இதைத் தான் விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது. ராஜ்குமார் மரணம் நினைவில் இருக்கிறதோ இல்லையோ, இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் அழியாமல் நினைவில் இருக்கும்
என்ன உலகமோ! சீக்கிரம் அழியட்டும் இந்த பூமி! (இருக்கும் நீர், தாவரங்களுக்கு சேதாரம் விளைவிக்காமல்)
(நானும் வீடு சென்று சேர வேண்டும். நேரமாகிறது)