கடந்த ஒரு மாதமாக நடந்த தேர்தல் களேபரத்தில் சிறிது கதி கலங்கி, பதிவு ஏதும் இடமுடியாமல் இருந்தேன். இப்போது தான் தமிழ் வலைப்பதிவுகளில் தேர்தல் காய்ச்சல் குறைந்து சகஜ நிலை திரும்பி இருக்கிறது. கடந்த மூன்று வார காலமாக கடுமையான வேலைப் பளுவும் கூட. தமிழ்மணம் வாசிப்பதே இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்றாகி விட்டது. இது இன்னும் ஒன்றிரண்டு மாதங்களுக்குத் தொடரும் என்று ஐயமாகவும் இருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மிகவும் ரசித்து கேட்ட பாடல்களின் இந்தப் பட்டியலை சென்றமாதமே தயார் செய்து வைத்திருந்தாலும், முழு வடிவம் கொடுப்பதற்குக் கூட நேரமில்லாமல் போய்விட்டது. இப்போது பாடல்களைப் பார்த்தால் அனைத்துமே பழைய பாடல்கள் போலத் தோன்றுகின்றன. எனினும், அதனை மாற்றாமல் கொடுக்கிறேன்.
1. ஒரே ஒரு சோகமென்றால் இப்படி நானும் அழ மாட்டேன்
பாடியவர்: கார்த்திக்
படம்: கொக்கி
இசை: தீனா
தமிழில் கரண் நீண்ட நாட்களுக்குப் பின்பாக அதுவும் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம். படத்தின் இசையமைப்பாளர் தீனா அவ்வப்போது தனது பாடல்களால் திரும்பிப் பார்க்க வைப்பவர் தான். இவரது படங்களில் ஏதாவது ஒரு பாடலாவது நன்கு பேசப்படும். அதே போல இந்தப் படத்திலும் இந்தப் பாடல் பேசப்படலாம். சோகப் பாடல் தான். கதாநாயகனின் கஷ்டங்களையும், இயலாமையையும் சொல்லும் விதமாக பாடல் எழுதப்பட்டுள்ளது.
ஒரே ஒரு சோகமென்றால்
இப்படி நானும் அழமாட்டேன்
என் ஒவ்வொரு நொடியிலும்
சோகங்கள் என்றால் என்ன செய்வேன்
என்ன செய்வேன் என்ன செய்வேன்
என்ன செய்வேன் ஏது செய்வேன்
இதைத் தவிர சில டப்பாங்குத்து பாடல்களும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன (மாணிக்கவிநாயகம், அனுராதா, மற்றும் மாலதி) பாடியது. சுமார் ரகம் தான். 'ஏலோ ஏலோ' என்று மதுஸ்ரீ பாடிய பாடல் பழைய ராகமாக இருந்தாலும், சில தடவைகளுக்குப் பிறகு பிடித்து விடுகிறது.
2. சுடும் நிலவு சுடாத சூரியன்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், ஹரிணி
படம்: தம்பி
இசை: வித்யாசாகர்
சமீபத்தில் வந்த படங்களில் வித்தியாசமாக, மெலோடி பாடல்களை மட்டும் தாங்கி வந்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை. அதுவும் தொண்ணூறு ரூபாய் இசைத் தட்டுடன், மின்னலே படத்தின் வீடியோ பாடல்களும் கொடுக்கப்பட்டது. இது என்னவொரு அருமையான பாடல்!. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உன்னிகிருஷ்ணனும், ஹரிணியும் இணைந்து பாடியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். இருவரும் இணைந்து பாடிய 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்', 'இவன் யாரோ இவன் யாரோ' இரண்டும் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்கள். அந்த வரிசையில் இந்த பாடலையும் சேர்த்துக் கொள்ளலாம். ஹரிணியைப் பற்றி நான் சொல்லவும் வேண்டுமா? பாடலின் இடையில் இரண்டாம் சரணத்திற்கு முன்பாக 'சுடும் நிலவு' அவர் உச்சரிக்கும் இடம் அற்புதம். பாடலின் நடு நடுவே வரும் 'காதலித்துப் பார்; காதலித்துப் பார்', என்ற வரியை பாடியது சுஜாதா என்று கருதுகிறேன். அது ஏன் எனத் தெரியவில்லை. இத்தனைக்கும் சுஜாதா ஒரு பாடல் கூட இந்தப் படத்தில் பாடவில்லை. பல்லவி முடிந்ததும் வரும் வயலின் இசை (1:05 - 1:30) அருமை.
இதே படத்தில் கார்த்திக், கல்யாணி பாடிய 'சும்மா கிடந்த சிட்டுக் குருவிக்கு' என்ற பாடலும், முக்கியமாக சைந்தவி பாடிய 'என் காதல் உன்னைச் சேர' பாடலும் அருமை.
வித்யாசாகரின் இசை நாளுக்கு நாள் நல்ல மெருகேறி வருகிறது; முக்கியமாக மெலோடி பாடல்கள். கர்ணாவில் (மலரே மவுனமா) ஆரம்பித்து, 'ஜி' வரை ஏதாவது வித்தியாசமாக செய்துகொண்டே தான் இருக்கிறார். தம்பியிலும் சிறந்த பாடல்களின் மூலம் அவரது
திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்கும் போது 'சதுரங்கம்', படத்தின் பாடல்கள் தான் ஞாபகம் வருகிறது. அந்தப் படத்திலும் மூன்று அருமையான பாடல்கள் இடம்பெற்றிருந்தது. 'என்ன தந்துவிட்டாய்' (கார்த்திக், ஸ்ரீலேகா பார்த்தசாரதி), 'விழியும் விழியும்' (மது பாலகிருஷ்ணன், ஹரிணி), ஆடுவோமே (மாணிக்கவிநாயகம்) பாடல்கள் சிறப்பாக வந்திருந்தது. ஆனால் ஏனோ படம் தான் இது வரை வெளிவரவில்லை.
3. போகப் போக பூமி விரிகிறதே
பாடியவர்கள்: ஹரிச்சரண், விஜய், 'அந்நியன்' புகழ் சைந்தவி, ஹரிணி சுதாகர்
படம்: பட்டியல்
இசை: யுவன் சங்கர் ராஜா
பட்டியல் பாடல்கள் முதன் முதலாக கேட்கும் போது அனைத்துமே ஒரே மாதிரியாக இருப்பது போல ஒரு தோற்றத்தைக் கொடுத்தது. ஆனால் கேட்க கேட்க பிடித்து விட்டது. படம் நன்றாக ஓடியிருந்தால், பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வழக்கம் போல, யுவன்சங்கர் ராஜா இரண்டு பாடல்களை பாடியிருக்கிறார். மகனின் இசையில் இளையராஜா பாடிய பாடல் இன்னும் எனக்குப் பிடிக்கவில்லை.
யுவனும், சுவேதாவும் பாடிய 'ஏதேதோ எண்ணங்கள் வந்து', பாடல் இந்தப் படத்தின் சிறந்த பாடலாக இருந்தாலும், இந்தப் பாடல் எனக்குப் பிடிக்க முக்கிய காரணம், பல்லவி முடிந்தது வரும் நாதஸ்வர (போன்ற) இசை தான். 2:10 முதல் 2:28 வரை ஒலிக்கும். அருமை. இதற்காக இந்த பாடலை பல முறை 'Repeat' தெரிவு செய்து கேட்டிருக்கிறேன். சைந்தவிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
ஹரிணி சுதாகரின் குரல் எங்கு ஒலிக்கிறது எனத் தெரியவில்லை. ஒரு வேளை பாடலின் ஆரம்பத்தில் வரும் ஆங்கில வரிகளை உச்சரிக்கும் குழந்தையாக இருக்கும் என நினைக்கிறேன்.
3. மஞ்சள் வெயில்
பாடியவர்கள்: ஹரிஹரண், விஜய், நகுல்
படம்: வேட்டையாடு விளையாடு
இசை: ஹரிஷ் ஜெயராஜ்
கஜினியை ஒப்பிடும் போது 'வேட்டையாடு விளையாடு' படம் ஹரிஷ் ஜெயராஜூற்கு பின்னடவு தான் என கூறலாம். கெளதம் எப்படி இது போன்ற பாடல்களுக்கு ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. ஒரே ஒரு பாடலைத் தவிர மற்ற பாடல்கள் சுத்தமாகக் கவரவில்லை. கெளதமும் 'ராசி' என்ற வலையில் விழுந்து விட்டாரோ என்று சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் இந்தப் படத்திலும் பாம்பே ஜெயஸ்ரீக்கு ஒரு பாடல் கொடுக்கப்பட்டுள்ளது. மகாலக்ஷ்மி பாடிய 'உயிரிலே' பாடல் பரவாயில்லை. ஆனால் இந்தப் படத்தின் பாடல்கள் பரபரப்பாக விற்பனையாகத் தான் செய்கின்றன. யார் கண்டது? அனைத்து பாடல்களும் ஹிட்டாகலாம்.
ஆனால் மஞ்சள் வெயில் என ஆரம்பிக்கும் இந்த பாடல் அருமை. கமலஹாசனின் நடிப்பு இந்தப் பாடலுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ஹரிஹரண் அற்புதமாக பாடியிருக்கிறார். அதிலும் முக்கியமாக 'பேசி பேசி தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே' 'குறு குறு மின்னல் என குறுக்கே ஓடுதே' என்ற வரிகளில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
5. இளமை
பாடியவர்கள்: அஸ்லம், தன்வி, ஷாலினி
படம்: காட் ஃபாதர்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
இந்தப் பாடலைப் பற்றி ஏற்கனவே எனது காட்பாதர் இசை மதிப்பீடு பதிவில் தெரிவித்திருந்தேன். ஆரம்பம் முதல் இறுதி வரை பீட் சிறிதும் குறையாமல் சிறப்பாக அமைந்துள்ளது. ஷாலினி ரகுமானுக்கு பாடும் முதல் பாடல் என்றும் நினைக்கிறேன். 1:38 முதல் 2:10 வரை குழுவினரின் குரலை கேட்கும் போதே உடலெங்கும் உற்சாக அலைகள் ஓடுகின்றன.
6. சான் சிபாரிஸ்
பாடியவர்கள்: ஷாண், கைலாஸ் கெர்
படம்: ஃபனா (இந்தி)
இசை: ஜட்டின் லலித்
இந்த வாரம் ரிலீஸாகவிருக்கும் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் அருமை. தேன். முக்கியமாக இந்தப் பாடல் அனைத்து பாடல்களையும் புறந்தள்ளி விட்டு நிச்சயமாக முதலிடத்தைப் பிடிக்கும் என்பதில் எனக்கு அசாத்திய நம்பிக்கை. இம்.ஹீம் இம்.ஹீம் என பாடலை ஆரம்பத்திலே ஆரம்பிக்கும் ஷான் ஆகட்டும், சுவாலல்லா என அதை பிடித்துக் கொண்டு தொடரும் கைலாஸ் கீர் ஆகட்டும் அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள்.
இதே படத்தில் இடம்பெற்றுள்ள 'தேக்கோனா' என்ற பாடலும் மிக அருமை. சோனு நிகாமும், சுனிதா சவுகானும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். இதே பாடல், பல்வேறு இசைக் கருவிகளுடன் 'Destroyed in Love' என்று தீம் மியுசிக்காகவும் அருமையாக கோர்க்கப்பட்டுள்ளது.
7. தையத்தா தையத்தா
பாடியவர்கள்: சாதனா சர்கம்
படம்: திருட்டுப் பயலே
இசை: பரத்வாஜ், ரேஷ்மி
திருட்டுப் பயலே படத்தின் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம் என்றாலும் இந்தப் பாடல் வித்தியாசமாக அமைந்து இருந்தது. சாதனா சர்கம் வழக்கம் போலவே சிறப்பாக பாடியிருக்கிறார். ஆனால் பாடலின் சரணம் சரத்குமார் நடித்த 'நட்புக்காக' படத்தில் இடம்பெற்ற 'முந்திரி முந்திரி முந்திரியாம் தோட்டத்து முந்திரியாம்' பாடலின் சரணத்தை ஒத்து அமைந்துள்ளது. 'நாட்டாமை படத்துல அந்த இடத்துல' என்ற ராகமும், இந்தப் பாடலில் வரும், 'மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை' என்று சரணம் ஆரம்பிக்கும் இடத்தில் வரும் ராகமும் ஒன்று போல் இருக்கிறது. இசையும் அந்தப் பாடலை போலவே அமைந்துள்ளது.
'பெண்ணுக்கு பேராசை வேறேதும் இல்லை
சொன்னதை செய்தாலே நிகர் ஏதும் இல்லை
நீ உறுதியானவன்; என் உடமையானவன்
பசி ருசியை பகிர்ந்து கொள்பவன்'
வரிகளில் ராகம் அருமையாக உள்ளது.
8. ஜன் ஜன ஜன ஜன ஜன
பாடியவர்கள்: சுக்வீந்தர் சிங், சாதனா சர்கம்
படம்: வாட்டர்
இசை: ஏ.ஆர்.ரகுமான்
இன்னும் வாட்டர் படத்தின் பாடல்கள் இந்தியாவில்
விற்பனைக்கு வரவில்லை. ஆனாலும் ஒரு இணையத்தளத்தின் உதவியுடன் எம்.பி3 பாடல்கள் கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன். பாடல்கள் அனைத்தும் அருமை. முக்கியமாக இந்தப் பாடல். ரகுமான் இசையமைத்த சமீபத்திய பாடல்களில் சிறந்த பாடல் இதுவே என்று அடித்துக் கூறலாம். (ஆனால் இது நான்கு வருடங்களுக்கு முன்பாகவே இசையமைக்கப்பட்டது). ரங்கு தே பசந்தியில் இடம்பெற்ற 'ரூபாரூ' பாடலை விட பல மடங்கு அற்புதம். ஆரம்பத்தில் வரும் இசையும், இறுதியில் வரும் வயலின் இசையும் அற்புதம் (3:56 முதல் கடைசி வரை).
இந்தப் பாடலை பெங்களூரில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியில் கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன். அருமையாக இருந்தது. ஆனால் பட்டியலில் இருந்த பாடல், அன்று பெய்த மழையால் நிகழ்ச்சி நடைபெற்ற நாளன்று இசைக்கப்படவில்லை. சுக்விந்தர் சிங் உருகி பாடியிருக்கிறார். மனிதருக்கு என்னவொரு அற்புதமான குரல்! இந்த பாடலை அவர் பாடும் போது பார்க்கும் அந்த பாக்கியம் கிட்டியது. பாடும் போது என்னவொரு உற்சாகம்!. விவரிக்க வார்த்தைகள் இல்லை. இது அவரே எழுதிய பாடலும் என்று எங்கோ படித்த ஞாபகம். சாதனா சர்கமும் அழகாக பாடியிருக்கிறார். 3:50 முதல் 4:13 வரை கேட்டுப்பாருங்கள். படத்திலும் இந்த பாடல் மிக மிக அருமையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
என்னுடைய பிற பாடல் சம்பந்தப்பட்ட பதிவுகளின் தொகுப்பு:
இனியவை நாற்பது
சமீபத்தில் மிகவும் ரசித்தப் பாடல்கள் - பிப்ரவரி
சமீபத்தில் மிகவும் ரசித்தப் பாடல்கள் - அக்டோபர்
7 கருத்துகள் :
Thanks for the review, especially for fanna.
//விற்பனைக்கு வரவில்லை. ஆனாலும் ஒரு இணையத்தளத்தின் உதவியுடன் எம்.பி3 பாடல்கள் கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன்//
can i have the url?
- Suresh Kannan
சுரேஷ் கண்ணன்,
www.tamilnapster.com தளத்தில் கிடைத்தது.
thanks for the url.
'வேட்டையாடு விளையாடு' படத்தில் 'பார்த்த முதல் நாளே' தான் எனக்கு மிகவும் பிடித்தது.
நல்லது. ஆனால் எனக்கு ஜெயஸ்ரீ பாடல்கள், அவருடைய பழைய பாடல்களைத் தான் ஞாபகப்படுத்துகின்றன.
ஹாரீஸ், ஒரே மாதிரியான மெலோடி பாடல்களுக்கு ஜெயஸ்ரீ பயன்படுத்துகிறார் அதுவும் பெரும்பாலான படங்களில். வித்தியாசமாக ஏதாவது முயற்சி செய்யலாம்.
ஸ்ருசல்,
நல்ல தொகுப்பு.Thanks for that
கொக்கி பாடல்களை நான் இன்னும் கேட்கவில்லை. ஆனால் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும் ஒரு பாடல் அப்படியே அந்நியனின் அண்டாங்காக்கா பாடலின் காப்பியாகவே தோன்றியது.
தம்பி பாடல்கள் எனக்கும் மிகவும் பிடித்தது. குறிப்பாய் "சும்மா கிடந்த சிட்டுக்குருவியும்", "சுடும் நிலவு சுடாத சூரியனும்". சுடும் நிலவில் வரும் காதலித்துப்பாரின் ஒலியமைப்பு அப்படியே முதல்வனின் அழகான ராட்சஸி போல இல்லை ???.
// கஜினியை ஒப்பிடும் போது 'வேட்டையாடு விளையாடு' படம் ஹரிஷ் ஜெயராஜூற்கு பின்னடவு தான் என கூறலாம்
எனக்கென்னவோ ஏற்கனவே நிறையப்பேருக்கு பிடித்துப்போன பாடல்கள், படம் வந்தபின் இன்னும் அதிகம் பேரை கவரும் எனவே தோன்றுகிறது.
-- Vignesh.A
விக்னேஷ்,
உண்மை. 'அழகான ராட்சசி' சாயல் இருப்பதை உணர முடிகிறது.
ஆம். நீங்கள் கூறுவது உண்மை தான். இன்னும் 'வேட்டையாடு விளையாடு' பாடல் இசைத்தட்டுகளும், கேசட்டுகளும் நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. வேட்டையாடு விளையாடுவுடன் ஒப்பிடும் போது, பட்டியல், காட் ஃபாதர் படங்களின் கேசட் விற்பனை மிகவும் மந்தம் தான்.
ஆனால் ஏன் என்று தான் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. :)
அவருடைய தீவிர ரசிகர்களே கூட, அவருடைய பாடல்கள் ஒரே மாதிரியாக இருப்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
ஹாரிஸ் திறமையான இசையமைப்பாளர் தான். அதில் சந்தேகமில்லை. ஆனால் இன்னும் சிறிது முயற்சி செய்தால் அருமையான பாடல்களைக் கொடுக்க முடியும் என்பது எனது எண்ணம்.
கருத்துரையிடுக