புதன், ஏப்ரல் 26, 2006

அந்தக் குழந்தைக்கு நான் அப்பா இல்லை

ராஜாவை தேடித் தெருவெங்கும் அலைந்த சந்தன் கடைசியாக அவனை அவன் வீட்டருகில் கண்டுபிடித்து கொல்லைப் புறத்திற்கு இழுத்துச் சென்றான்.

"என்னடா விசயம்?", என்று ராஜா பதட்டத்துடன் சந்தனைக் கேட்டான்.

"டேய் ராஜா.... தேன்மொழி கர்ப்பமா இருக்குறாடா"

"என்னது உண்மையாகவா?"

"ஆமாண்டா"

"உனக்கு எப்படிடா தெரியும்?"

"அவங்க வீட்டுல சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க... இப்ப தாண்டா அத கேட்டேன்"

"அய்யோ.. நல்லா மாட்டுன நீ...."

சில விநாடிகள் மெளனம்.

"எனக்குப் பயமா இருக்குடா... ஏதாவது செய்யேண்டா..."

"நான் என்ன செய்யறது?"

ராஜாவும், சந்தனும் ஒரே கிராமத்தை சார்ந்தவர்கள். ஒரே தெருவில் வீடு. இத்தனைக்கும் படிப்பதும் ஒரே வகுப்பில் தான். ஆம். ஏழாம்வகுப்பு.

பிளாஷ்பேக்.

ஒரு நாள் சந்தனும், ராஜாவும் குளத்தங்கரையில் விளையாடிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சந்தன், ராஜாவிடம் தனது சந்தேகத்தை கேட்டான்.

"டேய் ராஜா எப்புடிடா புள்ள பொறக்குது?"

"எதுக்குடா?"

"சும்மா தாண்டா. இல்ல அடுத்த வீட்டுல இருக்குற ராணியக்காவுக்கு புள்ள பொறந்துருக்கு. அதான் எனக்கு சந்தேகம். எப்புடி புள்ள பொறக்குதுன்னு உனக்குத் தெரியுமாடா?"

"அதுவா. ஒண்ணுமில்லைடா.. கல்யாண மாப்பிள்ளை, பொண்ணுக்கு முத்தம் கொடுப்பார். முத்தம் கொடுத்த கொஞ்ச மாசத்துல புள்ள பொறந்துடும்"

"டேய் என்னடா சொல்லுறா?"

"ஆமாண்டா"

"அய்யோ. அன்னைக்கு தேன்மொழிக்கு முத்தம் கொடுத்தேண்டா"

"எப்படா"

"அன்னைக்குத் தண்ணியெடுக்க நானும் தேன்மொழியும் போனோண்டா, அப்ப வீட்டுக்குத் திரும்ப போகும் போது அவங்க எனக்கு முத்தம் கொடுத்தாங்கடா. நானும் திரும்ப கொடுத்தேண்டா. என்னடா ஆகும்?"

"அடப்பாவி... தப்பு பண்ணிட்டியேடா? அவ தான் தப்பு பண்ணுனா நீ ஏண்டா அப்படி பண்ணுண?"

"இப்ப என்னடா செய்றது?"

"நல்லா மாட்டுன...."

அவன் சொன்னதிலிருந்து, சந்தனுக்கு இருப்பே கொள்ளவில்லை. எப்போது பார்த்தாலும் மனதில் பயம் தான். எப்போது தேன்மொழி வீட்டிலிருந்து ஆட்கள் வந்து ஏதும் கேட்பார்களோ என்ற பயத்திலேயே காலத்தை ஓட்ட ஆரம்பித்தான். ஒவ்வொரு நாளும் தேன்மொழி வீட்டின் மீதே அவன் காதுகள் இருந்தன. அதிலிருந்து தேன்மொழியை பார்ப்பதில்லை. தேன்மொழிக்கு வயது 19 இருக்கும். 12-ம் வகுப்பை முடித்து விட்டு வீட்டில் சும்மா தான் இருக்கிறாள்.

இப்போது நிகழ்காலம்.

சந்தனின் மனதில் ஆயிரம் கேள்விகள். நாளைக்கு என்னவாகுமோ? நான் முத்தம் கொடுத்த விசயத்தை சொல்லியிருப்பாளோ? நான் தான் அப்பா என்று இப்போது தெரிந்திருக்குமோ என்ற கவலை அவனை வாட்ட ஆரம்பித்தது. காலையிலேயே வீட்டுல கேட்டுக்கிட்டு இருந்தாங்களே.. என்ன ஆயிருக்குமோ என்று தயங்கித் தயங்கி வீட்டிற்குச் சென்றான். ஆனாலும் மனதில் ஒரு சந்தேகம் இருக்க தான் செய்தது. குழந்தை எப்படிப் பிறக்கிறது என யாரிடமாவது கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்ற அவசரம் இருந்தது. ஆனால் யாரிடம் கேட்பது? வீட்டில் கேட்டால் அடிப்பார்களே? யாரைக் கேட்பது?

அன்று மாலை வீட்டிற்கு வெளியூரிலிருந்து மாமா வந்திருந்தார். அவருடன், சந்தனின் குடும்பமே வீட்டின் முன்புறத்திலிருந்த கிணத்தடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிந்தனர். அருகில் அமைதியாக நின்று சந்தன் கேட்டுக் கொண்டிருந்தான் சந்தன்.

ஏதோ ஒரு விசயமாக காரசாரமாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்க ஒரு தம் கட்டுவதற்காக ஒதுங்கிய மாமாவைப் பின் தொடர்ந்தான் சந்தன். அருகில் இருந்த சுவற்றின் மீது சாய்ந்து கொண்டே தயங்கித் தயங்கி நின்றான்.

ஓரக்கண்ணால் இவன் நிற்பதைப் பார்த்துக் கொண்டே மெதுவாக சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார் அவன் மாமா.

"கேட்கலாமா? கேட்டால் சொல்வாரா? அல்லது திட்டுவாரா?", என்று மனதில் ஆயிரம் கேள்வியுடன் அவர் முகத்தை பரிதாபமாக பார்த்தான் சந்தன்.

"என்னடா?"

"மாமா..."

"இம்...சொல்லு"

"அது... அது....எப்படி மாமா புள்ள பொறக்குது?"

கேட்டு விட்டு வீட்டுப்பாடம் எழுதி வராமால் மாட்டிக் கொண்டு தண்டனைக்கு காத்திருக்கும் மாணவனைப் போல தனது மாமாவைப் பார்த்தான்.

இவனின் இந்த கேள்வியை எதிர்பார்க்காத மாமா, ஊரே அதிரும் படி இடியெனச் சிரித்தார்.

கேள்வி கேட்டிருக்க கூடாது என்று நினைத்து அவமானம் மேலிட அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

"சே நல்லா மாட்டிக்கிட்டோமே.. அன்னைக்கு மட்டும் முத்தம் கொடுத்திருக்காட்டி இவ்ளோ பிரச்சினை இல்லியே... இப்ப மாட்டிக்கிட்டோமே....", என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டே இரவில் தூங்கச் சென்றான். ஒவ்வொரு நாளும் நரக வேதனையாக இருந்தது. ஒவ்வொரு நாளும் என்ன நேருமோ என்ற பயம் மட்டும் மனதில் அடித்துக் கொண்டது.

வாசலில் பலத்த கூச்சலைக் கேட்டு படுக்கையில் இருந்து கண் விழித்தான். எழுந்து என்னவென்று வாசலில் பார்த்தான். நன்றாக விடிந்திருந்தது. தேன்மொழி வீட்டின் முன்பே கூட்டம்.

"ஆனாலும் இந்தப் பொண்ணு இப்படி பண்ணியிருக்க கூடாதுப்பா. இந்தப் பொண்ணா இப்படி? நம்பவே முடியலைப்பா. இந்த முத்துப் பயலும் இல்ல இப்படி பண்ணியிருக்கான். அப்பாவி பொண்ணைக் கெடுத்து வயத்துல புள்ளையைக் கொடுத்து இருக்கானே"

"அதான் அவமானம் தாங்காம ஊரை விட்டே ஓடிட்டாங்க... நல்லதுக்குக் காலம் இல்ல"

இதையெல்லாம் கேட்ட சந்தனுக்கு விண்ணுயரக் குதிக்க வேண்டும் போலிருந்தது. முதலில் ராஜாவை பார்த்து விசயத்தைச் சொல்ல வேண்டும் என ஓடினான். ஓடும் வழியெல்லாம் உரக்கக் கத்திக் கொண்டே ஓடினான்.

இவன் ஓடுவதைப் பார்த்த சந்தனின் சித்தப்பா அவனை நிறுத்தி "ஏண்டா இப்படி தலை தெரிக்க ஓடுற? என்னடா விசயம்", என கேட்டார்.

மெதுவாக மூச்சிறைத்து விட்டு, "தேன்மொழியும் முத்தண்ணாவும் ஊரைவிட்டு ஓடிப் போய்ட்டாங்க....", என்று சொல்லி மீண்டும் ஓட ஆரம்பித்தான்.

"அவங்க ஓடுனதுக்கு இவன் ஏன் இப்படி ஓடுறான்", என்று புரிந்து கொள்ள முடியாமல் நடக்க ஆரம்பித்தார்.

குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராஜாவை நோக்கி வேகமாக ஓடினான்.

"டேய் ராஜா....தேன்மொழியும், முத்தண்ணாவும் ஊரை விட்டே ஓடிட்டாங்கடா..."

"என்னடா சொல்லுற?"

"ஆமாண்டா அந்தக் குழந்தைக்கு நான் அப்பா இல்லடா.... முத்தண்ணா தான் அப்பா"

"உண்மையாவா?"

"நான் முத்தம் கொடுக்குறதுக்கு முன்னாடியே முத்தண்ணா முத்தம் கொடுத்துட்டார்டா" என்று மகிழ்ச்சி மேலிட தனது சந்தோசத்தைப் பகிர்ந்து கொண்டான் நண்பனிடம்.

இது நான் எழுதிய சொந்தக் கதை அல்ல. சில வாரங்களுக்கு முன்பாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஜெயா டி.வியில் டாக்குமெண்ட்ரி படங்கள் காட்டப்பட்டன. அதில் கடைசி பத்து நிமிடங்கள் இந்தக் கதையை பார்க்கும் வாய்ப்பு பெற்றேன். கதையின் முன்பகுதி என்னவாயிற்று, எப்படி ஆரம்பமாயிற்று என ஒன்றும் தெரியவில்லை. பார்த்த மறு நிமிஷமே பிடித்து விட்டதால் சில புகைப்படங்கள் எடுத்தேன். அதனால் வசனங்களையும் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டேன். கதாபாத்திரங்களின் பெயரும் நினைவில் இல்லை. ஆனால் கதைக்கரு ஞாபகம் இருக்கிறது. அந்த கடைசி வரியும் கூட('நான் முத்தம் கொடுக்குறதுக்கு முன்னாடியே முத்தண்ணா முத்தம் கொடுத்துட்டார்டா'). மிக அருமையான விதத்தில் படமெடுக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவன் சந்தனின் பாத்திரம் மிக அருமை. இரண்டு சிறுவர்களின் பேச்சும், பாடி லாங்குவேஜும் மிக நுணுக்கமாக எடுக்கப்பட்டிருந்தது. சிறு வயதில், பலருக்கும் இதே போல் அனுமானங்கள் இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

என்னால் முடிந்த வரையில் அதற்கு வடிவம் கொடுத்து இங்கே கொடுத்திருக்கிறேன். நான் இங்கே கொடுத்திருக்கும் விதத்தை விட, அந்தப் படம் பல நூறு மடங்கு அருமையாக இருந்தது. இது உறுதி. அதனை இந்தப் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும்.

குறிப்பு: யாராவது அந்த டாக்குமெண்ட்ரி படத்தை பார்த்திருந்து, அதன் பெயரும், இயக்குனரின் பெயரும் தெரிந்திருந்தால் சொல்லவும். இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள்.

இதோ அந்தப் புகைப்படங்கள் . (நன்றி: ஜெயா டி.வி)

கர்ப்பமா இருக்கா




யாரு அப்பான்னு சொல்லுடி



என்ன செய்யாலாம்னு சொல்லுடா




என்ன செய்யாலாம்னு சொல்லுடா - 2



ரெண்டு பேரும் ஓடிட்டாங்கய்யா




தேன்மொழி ஓடி போய்ட்டா




அந்தக் குழந்தைக்கு நான் அப்பா இல்லை




முத்தண்ணா முதலேயே முத்தம் கொடுத்துட்டார்டா

7 கருத்துகள் :

Sud Gopal சொன்னது…

படிக்கும் போதே காட்சிகள் கண்ணில் விரியுது.அடடே...பார்க்கத் தவறீட்டனேன்னு மனசும் ஏங்குது.

பல அபத்தக் களஞ்சியங்கள் வந்திட்டு இருந்தாலும் ஜெயா தொலைக்காட்சியில இந்த மாதிரி ஒரு சில நல்ல நிகழ்ச்சிகள் அப்பப்போ வந்திட்டுதான் இருக்கு.

அது கற்பம் இல்லை.கர்ப்பம்.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

நல்ல கதை.. நல்ல குறும்படம்..
//யாராவது அந்த டாக்குமெண்ட்ரி படத்தை பார்த்திருந்து, அதன் பெயரும், இயக்குனரின் பெயரும் தெரிந்திருந்தால் சொல்லவும். இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள்.
//
அதே அதே..

ஸ்ருசல் சொன்னது…

சுதர்சன்,

மன்னிக்கவும். பதிவு திருத்தப்பட்டுள்ளது.

சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

ஸ்ருசல்

Pavals சொன்னது…

இதெல்லாம் மட்டும் நம்ம கண்ணுல கரெக்ட்டா மிஸ் ஆகிடும்.. நம்ம டீவிய போடும் போது பிரச்சாரகூட்டம் தான் கண்ணுல தெரியுது :(

Doctor Bruno சொன்னது…

ஒரு திறமையான இயக்குனர் உருவாகிக்கொண்டிருக்கிறார்

subbu சொன்னது…

srusal,
enna solla naanum kadasi 10 nimusam than pathen.. nallathoru documentary and equally appreciable narration by u.
P.S:padam pera varavathu inga comments kuduthurpanganu inga vanthen :(

ஸ்ருசல் சொன்னது…

நன்றி சுப்பு.. இன்னும் அந்தப் படத்தின் பெயர் சிக்கவில்லை. :(