வியாழன், ஏப்ரல் 13, 2006

பெங்களூரில் இரண்டு நாட்கள்

ராஜ்குமார் மரணமடைந்த செய்தி அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையும் யாரும் எதிர்பாராத ஒன்றல்ல. நேற்று மதியம் 2.45 மணிக்கு உடன் பணிபுரியும் நண்பருக்கு செய்தி வந்தது. உடனே, அனைத்து இணையத் தளங்களிலும் தேடிப் பார்த்தேன். ஒரு இணைப்பும் இல்லை. உடனே, எனது நண்பர் தனது (கன்னடிகா) மானேஜரிடம் சென்று,

"நான் வீட்டுக்கு கிளம்புகிறேன்", என்றார்.

"ஏன்?"

"ஆமா. ராஜ்குமார் செத்துட்டார்"

"பொய் சொல்லாதப்பா"

"உண்மை தான். வேணும்னா செக் செய்து கொள்", என்றார்.

அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எங்கெங்கோ தேடிப் பார்த்தார். ஒன்றும் கிடைக்கவில்லை. கடைசியாக சிபியில் மட்டும் 'ராஜ்குமார் மரணம்', என்று ஒரு வரியில் செய்தி கிடைத்தது. இதை பார்த்து கொண்டிருந்த கல்கத்தாவைச் சார்ந்த மற்றுமொரு மானேஜர்,

"ராஜ்குமார் இறந்தால் என்ன?"

????

"அதுக்கு ஏன் வீட்டுக்குப் போகணும்", என்று அப்பாவியாக கேட்டார்.

செய்தியை உறுதி செய்வதிலேயே அரை மணி நேரம் சென்றது.

நண்பர் நேராக ஹெ.ஆரிடம் சென்று, "வீட்டுக்குப் போகலாம்ல", என்றார்.

"ஏன்?"

"நியூஸ் தெரியாதா? ராஜ்குமார் செத்துட்டார்"

"அப்படியா? வெரிஃபை செய்துட்டு சொல்லுறேன்", என்றார்.

நமது கல்கத்தா மானேஜரின் அணியில் பணிபுரிந்த தமிழ்ப் பெண் அவரிடம் சென்று,

"அப்ப நான் வீட்டுக்கு கிளம்பலாமா", என்றார்.

"எதுக்கு, இப்பவே போகணும். வொர்க் பெண்டிங் இருக்கே..."

"இல்ல. ராஜ்குமார் இறந்துட்டார். பிரச்சினை வரும். அதான்.. நான் போகட்டுமா?"

"நான் ஒண்ணும் சொல்லமுடியாது. ஹெச். ஆர் தான் சொல்லணும்", என்று கூறினார்.

ஏமாற்றத்துடன் அந்தப் பெண் தனது இருக்கையில் சென்றமர்ந்தார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே செய்தி அனைவருக்கும் பரவி, வதந்திகளும் பரவ ஆரம்பித்து விட்டன.

"அங்க பஸ்ஸை எரிச்சிட்டாங்க... இங்க டிராபிக் blocked", அப்படி இப்படியென்று....

இதனை பார்த்த கல்கத்தா மானேஜர் உடனே எங்கோ வேலை பார்க்கும் தனது மனைவிக்கு போன் செய்து நிலைமையை விளக்கி,

"உடனே வீட்டுக்குப் போயிடு; நானும் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்", என்றார்.

அருகில் அமர்ந்திருந்த கன்னடிகா மேனேஜர், "உங்க வொய்ஃப் மட்டும் பத்திரமா வீட்டுக்குப் போயிடணும்னு எதிர்பார்க்குறீங்க... ஆனா உங்க டீம் மெம்பர் போகக் கூடாதுன்னு சொல்லுறீங்க? எந்த விதத்துல நியாயம்? உங்க டீம் மெம்பர்ஸை பத்திரமா வீட்டுக்கு அனுப்புற கடமை உங்களுக்கு இருக்கு மறந்துடாதீங்க", என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

அவர் அசடு தான் வழிய முடிந்தது.

சிறிது நேரத்தில் மின்னஞ்சல் வந்தது. "அனைவரும் வீட்டிற்கு செல்லுமாறு....நாளை நிலவரத்தைப் பார்த்து விட்டு அலுவலகம் வரவும்", என்றிருந்தது.

மின்னஞ்சல் வந்ததும் தான் தாமதம்; அலுவலகமே வாசலை நோக்கி ஓடியது.

அருகில் தான் வீடு என்பதால் நான் இன்னும் சீட்டில் அமர்ந்திருந்தேன். அருகில் வந்த மேனேஜர், "வீட்டுக்குப் போ", என்று அழைத்து வாசல் வரை கொண்டு சென்று விட்டார். அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பலருக்கு, முன் அனுபவம்(?) இருந்ததால் கார்களை எடுக்காமல், வீட்டிற்கு நடந்து செல்ல ஆரம்பித்தனர்.

வீட்டிற்கு வரும் வழி முழுவதும் ஒரே பதற்றம். கார்கள் குறுக்கும் நெடுக்குமாக ஒழுங்கற்று செல்ல ஆரம்பித்தன. எங்கும் ஒலிப்பான்களின் சத்தம். அனைவருக்கும் தான் முதலில் வீட்டுக்குச் சென்று விட வேண்டும் என்ற அவசரம் முகத்தில் தெரிந்தது.

சரி இரவு சாப்பாடு கோவிந்தா என்று, வீட்டிற்கு வரும் வழியிலேயே சிறிது பழங்களை வாங்கி வீடு வந்து சேர்ந்தேன். ஆனால் இரவில் ஒரு ஹோட்டலில் பார்சல் கிடைத்தது. பழங்களுக்கு அவசியமில்லாமல் போனது.

இப்போதெல்லாம் பெங்களூரில் நடக்கும் பந்த், போராட்டம், மரணம் போன்ற நிகழ்ச்சிகள் எவ்விதமான அதிர்ச்சியையோ, ஏமாற்றத்தையோ தருவதில்லை. ஆனால் பதற்றம் உண்டு. புதிதாக வருபவர்களுக்கு இது ஏமாற்றமாகவும், அதிர்ச்சியாகவும் அமைகிறது.

ஆனால் நான் எதிர்பார்த்ததை விட இம்முறை குறைவான அளவே சேதாரங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன எனக் கருதுகிறேன். ஆனால் இன்னும் நேரம் இருக்கிறது.

இன்று காலையில் சாப்பிடுவதற்கு ஒரு கடையும் திறந்திருக்கவில்லை. இரவு வாங்கி வைத்திருந்த பழங்கள் உதவின. நமது தமிழ்நாடு ஹோட்டலான, நாயுடு மெஸ் கடையின் பின்புறத்திலிருந்து பார்சல் கொடுத்ததால் மேலும் சிறிது நிம்மதியாக சாப்பிட முடிந்தது. அந்தக் கடை மட்டும் இல்லாதிருந்தால், பல பேச்சிலர்கள் இன்று பட்டினி தான்.

எதிர்பார்த்தது போலவே, சில செய்தி சேனல்களைத் தவிர்த்து, அனைத்து சேனல்களும் தடை செய்யப்பட்டன. "தமிழ் சேனல்கள் கட்", என்று சில இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டது தவறு. அனைத்து மொழி சேனல்களுமே தடை செய்யப்பட்டுள்ளன. நேற்றே தடை செய்யப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் காலையில் தான் தடை செய்யப்பட்டன.

இது எதற்கு?, யாரை திருப்திபடுத்துவதற்காக இதெல்லாம்? என்பது யோசிக்க வேண்டியது தான். இன்று அலுவலகம் விடுமுறை என்று ஓரளவிற்கு உறுதியாகத் தெரிந்திருந்தாலும், அலுவலம் புறப்பட்டேன்.

4 கி.மீட்டர்கள் இருக்கும் அலுவலகத்திற்கு.

குறிப்பிடத்தக்க அளவில் வாகனங்கள் ஓடின. பல கால் சென்டர் வாகனங்கள் "ராஜ்குமார்" படத்தை முன்புறமும், பின்புறமும் தாங்கியபடி தனது வேலையை செய்து கொண்டிருந்தன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த ஒரு போராட்டம் கொடுத்த அனுபவத்தினால், வழக்கம் போல இண்டெல் அலுவலகத்திற்கு பெரிய வலை போட்டு, கண்ணாடி கட்டிடத்திற்குப் பாதுகாப்பு கொடுத்திருந்தனர். சிறு போராட்டம், கடையடைப்பு என்றாலே இண்டெல் நிறுவனம் இது போல் செய்வது வழக்கம் தான்.

ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக, இண்டெல் அலுவலகத்தின் இரண்டு வாயிற்கதவுகளிலும், ராஜ்குமார் படங்களை வேறு ஒட்டியிருந்தார்கள். சும்மா பாதுகாப்பிற்குத் தான். மற்ற போராட்டங்களிலிருந்து தப்பிப்பதற்க்காக, மஞ்சள்-சிகப்பு கொடியை, கட்டிடங்களிலும், வாகனங்களிலும் மாட்டி வைத்திருப்பார்கள். பெரிய மருத்துவமனையான மணிப்பாலில் கூட அந்தக் கொடி எப்போதும் இருப்பது வெட்கக்கேடு.

ராஜ்குமார் கடத்தப்பட்ட போது, டையமண்ட் டிஸ்டிரிக்ட் என அழைக்கப்படும் பெங்களூரின் பெரிய அடுக்குமாடி குடியிருப்பு, வர்த்தக அலுவலகம் பெரிய பெரிய கற்களைக் கொண்டு தகர்க்கப்பட்டது (200 மீட்டர் நீளமிருக்கும். முழுவதும் கண்ணாடியால் செய்யப்பட்டது). இம்முறை எவ்விதமான பிரச்சினையும் அங்கில்லை. இரண்டு காவல்துறையினர் வேறு அங்கு அமர்ந்திருந்தார்கள்.

ஆனால் நன்கு அடி வாங்கியிருந்தது, கோரமங்களா இன்னர் ரிங் ரோடில் இருந்த வர்த்தக / தனியார் நிறுவங்கள் தான். வரிசையாக கல்லெறிகளை வாங்கியிருந்தன. போன வாரம் திறக்கப்பட்ட வசந்த் & கோ மாதிரியான எலெக்ட்ரானிக் விற்பனை நிறுவனத்தின் கண்ணாடிகள் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து வரிசையாக சில நிறுவனங்களும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.

சிறிது தூரத்திலிருந்த பெரிய சாப்ட்வேர் நிறுவனம் பல கல்லடிகளைப் பட்டிருந்தது. நேற்று பட்ட கல்லடி காரணமோ என்னவோ, காலையில் பெரிய ராஜ்குமார் படத்தை ஒரு மேஜையில் வைத்து, மாலை போட்டு, ஊதுபத்தி கொளுத்தி வைத்திருந்தார்கள். தலையிலடித்துக் கொள்ளத் தோன்றியது. அவர்களின் செயலுக்காக அல்ல. இங்குள்ளவர்களின் நிலைமையைப் பார்த்துத் தான்.

இது போன்ற வன்முறையில் ஈடுபடும் பலர், அங்கே சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்துவதில் கூட அக்கறை காட்ட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அவர்களுக்கு வேண்டியதெல்லாம், ஒரு காரணம். மற்றவர்களைத் தொல்லை செய்வதற்கு, உடைக்கப்பட்ட நிறுவனங்களில் எத்தனை தனிமனிதக் காழ்ப்புணர்ச்சியினால் உடைக்கப்பட்டதோ?. ஒவ்வொரு நாளும் அந்த சாலை வழியாகச் செல்லும் போதெல்லாம், "ஆமா பெரிய கண்ணாடி பில்டிங். எனக்கு ஒரு நாள் நேரம் வரும். அப்ப நான் உடைக்கத் தான் போறேன்", என்று எத்தனை முறை இது போன்ற கெட்ட எண்ணங்களை மனதில் சுமந்து கொண்டு அலைந்தார்களோ? இதோ நேரம் வந்து விட்டது. இவர்களுக்கெல்லாம் யார் மீது கோபம் எனத் தெரியவில்லை. சமூகம் நம்மை பணமில்லாத காரணத்தினால் அலட்சியம் செய்கிறதே என்ற கோபமா? நம்மால் முடியாததை, இன்னொருவன் வைத்து அழகு பார்க்கிறானே என்ற பொறாமையா? ஒருவேளை சில தமிழக அரசியல் தலைவர்களிடம் கேட்டால், அதற்கான காரணம் தெரியவரும்.

தொலைக்காட்சியில் கூட பல நபர்கள் கொடிகளைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டே கோஷங்கள் எழுப்பியதையும் பார்க்க முடிந்தது. அழுது கொண்டே பேட்டி கொடுக்கும் நபருக்கு அருகில் சிரித்துக் கொண்டு, கேமராவில் தெரியவேண்டும் என்று முண்டியடித்தவர்களையும், ராஜ்குமாரின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வேனின் கண்ணாடிகளை உடைத்த நபர்களையும், அவரது உடலுக்குப் பாதுக்காப்பாக சென்ற போலீஸ் வாகங்களை உடைத்த நபர்களையும் பார்க்க முடிந்தது. அவர்கள் முயல்வது எல்லாம், எப்படியாவது இதனை ஒரு பெரிய சிக்கலாக்கி விட வேண்டும். இந்த நேரத்தில் தான் காவல்துறையினரிடம், சாதாரண ரவுடி கூட மல்லுக்கு நிற்க முடியும். கடைசியாக ஒரு நபர் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஆரம்பமா அல்லது முடிவா எனத் தெரியவில்லை.

இதை விட கொடுமை, பலர், "இது போல் நிகழ்வது இயல்பு தான்", என்று கருதி இதற்கு முக்கியத்துவம் கொடுக்க மறுப்பது. அது அரசுத் தரப்பாக இருக்கட்டும்; பொதுமக்களாக இருக்கட்டும். இன்னும் சிலர், "இது போன்ற விசயங்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இது போன்ற வன்முறைகள் இயல்பு", என்கின்றனர். எது போன்ற விசயங்களுக்கு? 'உங்களது வீட்டை உடைக்கும் போதும், வாகனத்தில் நீங்கள் செல்லும் போது, பெரிய பாறாங்கல்லைத் தூக்கி உங்கள் வாகனம் மீது போடுவதையும் யாரும் கண்டுகொள்ள வேண்டாம்; காவல்துறையினர் காப்பாற்ற முயல வேண்டாம்; அது சாதாரணம் தான்', என்று நீங்கள் எண்ணினால் மற்றவர்களும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை.

இப்போதெல்லாம், இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கவில்லையென்றால் மரணத்திற்கு அர்த்தமே இல்லை என்ற கருத்து பல பெரிய மனிதர்களின் குடும்பத்தில் நிலவுகிறதோ என்ற அச்சமும் மேலோங்குகிறது. அவரது குடும்பத்தார் ஒரு பேச்சுக்குக் கூட "ரசிகர்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்", என்று இது வரை வேண்டுகோள் விடுக்கவில்லை. இதைப் பார்க்கும் போது, அவர்களும் இதைத் தான் விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது. ராஜ்குமார் மரணம் நினைவில் இருக்கிறதோ இல்லையோ, இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் அழியாமல் நினைவில் இருக்கும்

என்ன உலகமோ! சீக்கிரம் அழியட்டும் இந்த பூமி! (இருக்கும் நீர், தாவரங்களுக்கு சேதாரம் விளைவிக்காமல்)

(நானும் வீடு சென்று சேர வேண்டும். நேரமாகிறது)

18 கருத்துகள் :

Muthu சொன்னது…

ஸ்ருசல்,

நச்...


என்னன்வோ எழுத தோன்றுகிறது. ஆனால் முடியவில்லை.

ஸ்ருசல் சொன்னது…

ஆம். நேற்றே எனது அலுவலகத்திலும், பக்கத்து அலுவலகத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் முகத்தில் கலவரத்தையும், ஏமாற்றத்தையும் காணமுடிந்தது?

எதற்காக நான்கு மணிக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும், அதுவும் ஏதோ புயல் வரப்போவது போல அவசரமாக?

இன்னும் சிலர் பல செய்தித் தளங்களில்,

"ஒருவரின் மரணத்திற்காக எதற்கு விடுமுறை என்பதெல்லாம் கன்னடிகா அல்லாதோர் புரிந்து கொள்ள முடியாது. எங்களின் கலாச்சாரம் புரியாது", என்கின்றனர்.

இதை எதிர்க்கும் பல கன்னடிகர்களும் இருக்கிறார்கள். எல்லோரும் வீடு செல்லும் போது, ஒரு கன்னடிகா நண்பர் மட்டும், வீட்டிற்கு செல்லாமல் அமர்ந்திருந்தார். ஏன் என கேட்டதற்கு,

"எங்கள் பகுதி கன்னடிகா அதிகமுள்ள பகுதி. ஆகவே எப்படி வீட்டிற்குச் செல்வதெனத் தெரியவில்லை", என்று அமர்ந்திருந்தார். சக மொழி பேசும் நபருக்கே இங்கு பாதுகாப்பில்லை. என்ன சாதிக்கப்போகிறார்கள் எனத் தெரியவில்லை.

------

முத்து... என்ன சொல்ல வருகிறீர்கள் எனத் தெரியவில்லை. ஆனாலும் நன்றாக இருக்கிறது என நீங்கள் கூறுவதாக நான் பொருள் கொள்கிறேன் :)

பெயரில்லா சொன்னது…

எதையெல்லாம் தாண்டி நம்மூர் வளரவேண்டியிருக்கு பாருங்கள்.nice coverage srusal.thanks.

G.Ragavan சொன்னது…

ஸ்ருசல்...நேற்று எங்கள் அலுவலகத்தில் செய்தி தெரிந்ததும் பெரிய பரபரப்பொன்றும் ஏற்பட்டு விடவில்லை. விரைவாக பத்திரமாகப் போக வேண்டும் என்று சொன்னார்கள். என்னுடைய மேலாளர் என்னிடம் வந்து என்னையும் என்னுடைய குழுவில் இருப்பவர்களும் 5.15 பஸ்ஸிற்கே கிளம்பிட வேண்டும் என்று திட்ட வட்டமாகக் கூறினார்.

5.15 பஸ்சுக்கே அனைவரையும் அலுவலகத்திலிருந்து கிளப்பி விட்டனர். ஒவ்வொரு ஒரு மணி நேரத்திலும் கிட்டத்தட்ட முப்பது பேருந்துகள் எங்கள் அலுவலகத்திலிருந்து புறப்படும். நேற்று கூடுதல் பேருந்துகள். அனைத்திலும் ராஜ்குமார் படங்கள் ஒட்டப்பட்டன. அனைவரும் வந்து சேர வசதியாக 5.30க்கு பேருந்துகள் கிளம்பின. இன்னர் ரிங் ரோட்டில் மட்டும் கண்ணாடிக் கட்டிடங்கள் சில கல்லெறியப் பட்டது தெரிந்தது. மற்றபடி ஓசூர் ரோட்டிலிருந்து ஏர்ப்போர்ட் ரோடு வரையில் நான் பிரச்சனை என்று எதையும் பார்க்கவில்லை.

டீவியில் பெல்லாரி ரோட்டில் கார் ஒன்றும் ஜீப் ஒன்றும் எரிக்கப்படுவதை தொடக்கத்திலிருந்து தத்ரூபமாகக் காட்டினார்கள். பிரச்சனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் பிரச்சனை இருந்தது உண்மைதான்.

டீவி சேனல்கள் நிப்பாட்டியது.......இரண்டு நாட்களுக்கு பொழுது போக்குகள் நிறுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்ததால்தான்.

ஏதோ கர்நாடகத்தில் மட்டும்தான் இப்படி நடக்கும் என்று பேசுவது மிகவும் வியப்புக்குறியது. தமிழகத்தில் இதை விடவும் பார்த்திருக்கிறோம். பார்ப்போம். அதுதான் நிதர்சனமான உண்மை.

Badri Seshadri சொன்னது…

ஸ்ருசல், உண்மைதான். ஆனால் மறத்தமிழன் இதனையெல்லாம் எம்.ஜி.ஆர் செத்த அன்றே செய்திருக்கிறான். தெருவில் அவன் உடைத்த பஸ்கள்தான் எத்தனை? ஏன்? கருணாநிதியின் சிலையின்மீது ஏறி அதனைக் கடப்பாறையால் உடைத்தவனல்லவா தமிழன்?

எம்.ஜி.ஆர் செத்த அன்று நிகழ்ந்த சேதம் அளவுக்காவது நடக்காவிட்டால் கன்னட மக்கள் ராஜ்குமாரை அந்த அளவுக்கு மதிக்கவில்லை என்றல்லவா பொருள்?

என்.டி.ஆர் செத்தபோது ஆந்திராவில் என்ன நடந்தது என்று எனக்கு ஞாபகம் இல்லை.

காழியன் சொன்னது…

இது போன்ற நேரங்களில் மனிதனின் குரூர புத்தி வெளிப்படுகிறது. மின்சாரம் தடைபட்டவுடன் இருட்டில் ஓவென கத்துவதைப் போல.

ஸ்ருசல் சொன்னது…

இது போன்று தமிழகத்தில் நடக்கவில்லை / நடக்கப்போவதில்லை எனக் கூறவில்லை. இங்கு இப்படி நடக்கிறது என்று தான் கூறினேன்.

சமீபத்தில் கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் எரிப்பே நல்ல உதாரணம்.

ஆனால் இது போன்று அறிவிக்கப்படாத பந்த் போல நடக்குமா என்பது தான் என்னுடைய யோசனை.

ஸ்ருசல் சொன்னது…

சம்பந்தமில்லாமல், ஒரு போலீஸ்காரரையும் கொன்றிருக்கிறார்கள். என்ன சொல்வது இவர்களைப் பற்றி?

போலீஸார் மீது தாக்குதல் நடத்த என்ன காரணம்?. போலீஸாருக்கும் ராஜ்குமாருக்கும் என்ன விரோதம்?

எனக்கு ஒரு காரணம் தான் தோன்றுகிறது.

இத்தகைய தாக்குதலை நடத்தியவர்கள், கண்டிப்பாக இதற்கு முன்பாக ஏதாவது தவறிழைத்து போலீஸாரிடம் அடிபட்டிருப்பார்கள். அந்த கோபத்தை எல்லாம் இப்போது தீர்த்துக் கொண்டிருப்பார்கள்.

தொலைக்காட்சியில் போலீஸாரை சிலர் துரத்தி துரத்தி அடிப்பதைக் காண முடிந்தது. அடித்துவிட்டும், வாகனங்களை எரித்து விட்டும் கொடிகளைப் பிடித்துக் கொண்டு, டி.வி கேமராக்கள் முன்பாக சிரித்துக் கொண்டு கோஷமிடுகிறார்கள். பார்ப்பதற்கே பரிதாபமாகவும், ஆத்திரமாகவும் இருந்தது.

இவர்கள் அடையாளம் தெரிந்திருந்தும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா எனத் தெரியவில்லை.

அரசும், 'இது போன்ற வன்முறைகள் நடக்கும்; சிலர் இறப்பார்கள்; விட்டுக்கொடுத்து தான் போகவேண்டும்', என்று முன்னதாக தீர்மானித்து செயல்படுவது கேவலம்.

இது போன்ற வன்முறை நடக்கும் என நமக்கே தெரியும் போது காவல்துறையினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அரசிற்கும் தெரியாதா என்ன?

அப்படி என்றால், பணிக்கு அனுப்பப்படும் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் பலிகடாக்களா?

வெறும் குச்சிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது அவர்கள்?

துளசி கோபால் சொன்னது…

அடுத்தவனை அடிப்பதும், அழிப்பதும்கூட ஒரு வித போதைதரும் சமாச்சாரமோ என்னவோ?

வயசாகித்தானேங்க இறந்தார். அதுவும் இயற்கை மரணம்தானே. அதுக்கெல்லாமா இப்படி......

என்னவோ போங்க(-:

மணியன் சொன்னது…

ஸ்ருஸல்,நல்ல பதிவு. பின்னூட்டத்தில் ் இதைவிட மோசமான முன்னுதாரணங்களைச் சுட்டி, இது தொடரும் என்ற கருத்து நிலவுகிறது. அந்த சுழற்சியை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும். அரசியல் தலைவர்கள்/ மத போதகர்கள்/ celebraties அந்த சூழலை ஏற்படுத்த வேண்டும். நான் கொல்கொதாவில் இருந்த சமயம் ஒரு கம்யூ.தலைவர் (பெயர் ஞாபகமில்லை) மறைந்ததற்கு ஒரு வன்முறை நிகழ்வும் ஏற்படவில்லை. ஆனால் அமைதி ஊர்வலத்தில் கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொண்டனர்.

ஸ்ருசல் சொன்னது…

மணியன், இது போன்ற சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும்.

//நடக்கவில்லை / நடக்கப்போவதில்லை எனக் கூறவில்லை//

இது தொடர வேண்டும் என்பதல்ல என்னுடைய ஆசை. ஆனால் இப்போது அந்த பக்குவம் மக்களிடம் இல்லை என என்னால் உறுதியாகக் கூறமுடியும். அதற்கு உதாரணமாகத் தான் வேளாண் கல்லூரி சம்பவத்தைக் கூறினேன்.

மற்றபடி, அரசு (அரசியல்) பின்விளைவுகளை பற்றிக் கவலைப்படாமல் ஒரு முறை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினால் மறுமுறை இது போன்ற தவறுகள் செய்யப் பயப்படுவார்கள். இது ஒரு முறை.

அல்லது மக்களாகவே பண்பட்டு, இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பது. இது நிச்சயம் சாத்தியம் தான். ஆனால் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும்.

சில நடிகர்களும், பல அரசியல் தலைவர்களும் தெரிந்தே இது போன்ற கூட்டங்களுக்கு ஆதரவளித்து அவர்களுக்கு ஊக்கமும் அளிக்கிறார்கள்.

தொண்டர்களைத் திருத்த வேண்டிய தலைவர்களே இப்படி என்றால் எப்படி?

அது போன்ற தலைவர்களுக்கு கொடுக்கும் ஆதரவை மக்கள் நிறுத்த வேண்டும். ஆனால் அது எங்கே சாத்தியம்?

இதற்கு அர்த்தம், "சாத்தியமாகக் கூடாது என்பதல்ல"

இப்போது சாத்தியமில்லை என்பது தான் :)

Bharaniru_balraj சொன்னது…

ராஜ்குமார் சாதாரண்மா செத்ததுக்கே இவ்வள்வு கலவரம். ஓரு வேளை தலைவர் வீரப்பன் கையால் செத்திருந்தால்?. காட்டான்கள் யென்ன வேண்டுமாணாலும் செய்வார்கள்.

bharaniru_balraj

ஸ்ருசல் சொன்னது…

தியாக், இளங்கோ நன்றி.

>>>
ராஜ்குமாரின் குடும்பத்திலிருந்து (தாமதமாக) அமைதி காக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது
<<<

- ஆம் நானும் படித்தேன். தாமதமாக.

பெயரில்லா சொன்னது…

All I care about in the article is "Where is Naidu Mess?" I am too deprived of Tam food to care about anything else .. :). Other Tam joints in Bangalore?

ஸ்ருசல் சொன்னது…

Naidu Mess, ஏர்போர்ட் ரோட்டிலுள்ள முருகேஷ்பாளையாவில், ஒரு சின்ன சந்தில் உள்ளது. சின்ன கடை தான். கிட்டத்தட்ட 200-300 சாப்ட்வேர் வல்லுனர்களுக்கு(?) காலையிலும், மாலையிலும் சோறு போடுகிறது.

மதியம் நன்றாக சாப்பிட வேண்டுமென்றால், கோரமங்களா (G.K. Vel அருகில் உள்ளது) அருகிலுள்ள கிருஷ்ணா கஃபே (தஞ்சாவூர் ஸ்டைல்) செல்லவும். இதனை விட அருமையான ஒரு ஹோட்டல் பெங்களூரில் இல்லை என என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியும்.

அப்படியும் இல்லையென்றால், இந்திரா நகர் அருகில் உள்ள திப்பசந்திராவில் பல தமிழ்நாடு கடைகள் உள்ளன (சின்ன சின்ன பரோட்டா கடைகள்).

சமீபத்தில் பெங்களூரில் ஐந்து இடங்களில் 'அடையார் ஆனந்த பவன்' தனது கிளைகளைத் திறந்து உள்ளது.

நான் செல்வது:

இந்திராநகர், CMH ரோட்டில் உள்ள கிளை (சிட்டிபேங்க் ஏ.டி.எம். அருகில் உள்ளது)

பெயரில்லா சொன்னது…

Thank You! Thank You! Take a bow. I know of Krishna Cafe, though!

Doctor Bruno சொன்னது…

//தலையிலடித்துக் கொள்ளத் தோன்றியது. அவர்களின் செயலுக்காக அல்ல.//

மிகவும் அனுபவித்து எழுதபட்டுள்ளது

ஸ்ருசல் சொன்னது…

நன்றி புருனோ,

உங்களின் பின்னூட்டங்களுக்கு.

ஸ்ருசல்