சென்ற சனிக்கிழமை காலையில் நன்கு தூங்கிக் கொண்டிருந்தேன்.... அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டது... யாராக இருக்கும் என்று யோசித்தவாறு எட்டிப் பார்த்தேன். அரை கால் சட்டை, கண்ணாடி அணிந்து கொண்ண்டு கணினி வல்லுநர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
"சாரி... டிஸ்டர்ப் பண்ணுறதுக்கு மன்னிச்சுக்கங்க.. அந்த வீடு ரெண்டு மூணு வாரமா பூட்டியிருக்கே.. வேகண்டா இருக்கா"
"அந்த வீடா? இல்ல. ஆள் இருக்காங்க... ஆனா ஊர்ல இல்லைன்னு நினைக்குறேன்".
"அப்படியா.. நான் பக்கத்துல தான் ஸ்டே பண்ணியிருக்கேன். வேகண்டா இருந்தா வரலாம்னு நெனச்சேன்..."
"அவர் அப்ராட் போயிருக்காருன்னு நினைக்கிறேன். ஆனா எப்ப வர்றாருன்னு தெரியல..."
"ஓ அப்படியா... தாங்க்ஸ்", என்று கூறிவிட்டு கிளம்பினார்.
கதவைப் பூட்டி விட்டு மீண்டும் படுக்கச் சென்றேன்.
ஆம் என்னாயிற்று இவனுக்கு? எங்கே இருக்கான்? எப்படி இருக்கான்? என்ற யோசனையில் ஆழ்ந்தேன்.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த நபர் பெங்களூரில் கடந்த ஐந்து வருடங்களாகப் பணிபுரிந்து வருகிறார். எப்போதாவது பார்த்தால் பேசிக் கொள்வோம். சில மாதங்களாக வெளிநாட்டில் பணி நிமித்தமாக இருந்தவர், சில வாரங்களுக்கு முன்பாக எனது வீட்டில் எனது வருகைக்காகக் காத்திருந்தார். வீட்டிற்கு நான் சென்று சேர்ந்ததும் என்னை வெளியே அழைத்துச் சென்றார். என்ன விசயமாக இருக்கும் என என்னால் யூகிக்கமுடியவில்லை.
"என்ன விசயம்?", என்றேன்.
சிறிது நேரம் அமைதி காத்தவர் பின்னர், "எங்க ஊர்ல இருந்து உனக்கு போன் எதுவும் வந்ததா", என்றார்.
"சமீபத்தில இல்லை. நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி வந்தது..."
"இப்போ எதுவும் இல்லைல?"
"இல்ல. என்னோட நம்பரை மாத்தி மூணு மாசம் ஆகிடுச்சு"
"நல்லவேளை. ஒரு வேளை இங்க வந்து யாரும் என் நம்பர் கேட்டால் கொடுக்காதே"
"ஏன்?"
"ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்... கொஞ்ச நாளா சில பேர் மிரட்டுறாங்க..."
"மிரட்டுறாங்களா? மிரட்டுற அளவுக்கு என்ன பிரச்சனை?"
இவனுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும் என்று யூகிக்க முடியவில்லை. எதுவும் காதல் ஏதும் இருக்குமா? இல்லையே.... வீட்டுல பொண்ணு பார்க்குறாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தானே.. பின்ன எப்படி? என்று யோசனை ஓடியது.
"கல்யாண பிரச்சினை தான்..."
".... ஆறு மாசத்துக்கு முன்னால ஒரு பொண்ணு பார்த்தோம். பொண்ணு பிடிச்சிருந்தது... எல்லாம் பேசி முடிச்சிடலாம்னு வீட்டுல சொன்னாங்க. எனக்கும் பொண்ணு பிடிச்சிருந்தது..."
"பின்ன?"
"முடிவெடுக்குறதுக்கு முன்னால பொண்ணுகிட்ட பேசிடலாம்னு பேசினேன். பிடிச்சிருக்கான்னு கேட்டேன். ஒண்ணும் சொல்லாம நின்னுட்டு இருந்தா... என்னன்னு கேட்டேன்..."
......
"நான் ஏற்கனவே ஒரு பையனை லவ் பண்ணுறேன்.. என்னை பிடிக்கலைன்னு வீட்டுல சொல்லிடுங்க பிளீஸ்ன்னு சொன்னா..எனக்கு ஷாக். அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. எல்லாமே கொஞ்ச நேரத்துல மாறி போயிடுச்சு...ஆனா அவளே வேறொருத்தனை லவ் பண்ணுறேன்னு சொல்லுறப்போ என்ன பண்ணுறது. பையன் யாரு என்ன பண்ணுறான்னு கேட்டேன். கிளாஸ் மேட்டாம். பக்கத்து ஊராம்."
"சரி இதுல என்ன பிரச்சினை? பிடிக்கலைன்னு சொல்லிட்டு வந்துருக்கலாம்ல?"
"அது தான் நான் பண்ணுன தப்பு... நான் போய் அவங்க அப்பாகிட்ட உங்க பொண்ணு இன்னொரு பையனை லவ் பண்ணுறா. அவளுக்கு பிடிச்ச பையனையே கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்"
???
"அங்க ஆரம்பிச்சது பிரச்சினை. என்னை சமாதானப்படுத்துறதுக்காக வீட்டுக்கு ஒரு வாரமா நடையா நடந்தாங்க. அவளோட அப்பா அம்மா. அப்புறம் அவளோட சொந்தக்காரங்க. வந்து கெஞ்சுனாங்க...அழுதாங்க... ஆனாலும் நான் ஏத்துக்கல... பெங்களூர் வந்துட்டேன். இங்க வந்து பேசிப் பார்த்தாங்க...இவங்க தொல்லை தாங்க முடியாமல் தான் கொஞ்ச நாளா என்னோட ஃபிரண்ட் வீட்டுல தங்கியிருந்தேன். எப்படியோ இந்த வீட்டுக்கு வந்து உன்னோட பிரண்டுகிட்ட என்னோட ரூமியோட போன் நம்பர் வாங்கி அவனுக்குப் போன் செஞ்சு என்னோட போன் நம்பரை வாங்கிட்டாங்க"
"அதுல இருந்து போன் மேல போன் போட்டு டார்ச்சர் பண்ணுனாங்க... என் பொண்ணு தெரியாம பேசிட்டா.. லவ் எல்லாம் இல்ல. சும்மா விளையாட்டுத்தனமா பேசி இருக்கா.. நீங்க தான் எப்படியாவது அதையெல்லாம் மறந்து கல்யாணம் பண்ணிக்கணும் நச்சரிச்சாங்க. இவங்க தொல்லை தாங்க முடியாம தான் ஆன்சைட் அசைண்மெண்ட் வாங்கி மூணு மாசம் அங்க இருந்தேன்."
"அப்புறம்?"
"கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பார்த்து, இது வேலைக்கு ஆகாதுன்னு நினைச்சு மோட் மாற ஆரம்பிச்சுட்டாங்க... எங்க வீட்டுல உள்ளவங்கள மிரட்ட ஆரம்பிச்சிருக்காங்க..."
"என்னன்னு?"
"உங்க பையனை ஒழுங்கா கல்யாணத்துக்கு சம்மதிக்க சொல்லுங்க இல்லாட்டி நடக்குறதே வேறன்னு...எங்க வீட்டுல, 'உங்க பொண்ணுக்கு தான் விருப்பம் இல்லியே',ன்னு கேட்டதுக்கு, அதெல்லாம் இல்ல. அவ அப்படி சொல்லவே இல்லை... வேணும்ணா அவகிட்டயே கேளுங்க அப்படின்னு சொல்லுறாங்களாம்.... 'கல்யாணத்துக்கு சம்மதிக்க மறுத்துட்டா நிச்சயதார்தம் செஞ்சிட்டு வரதட்சணை அதிகமாக வேணும்ணு கல்யாணம் பண்ணிக்க மாட்டீன்றீங்கன்னு சொல்லி போலீஸ் கம்ப்ளைண்ட் செஞ்சிடுவோம்'-னு சொல்லுறாங்கலாம்"
"!!!!!"
"இது ரொம்ப ஓவரா போகவே ஊருக்குத் திரும்ப வந்தேன். என்னையும் திரும்ப வந்து பார்த்தாங்க.... 'தம்பி உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லுங்க.. எக்ஸ்ட்ரா ஐம்பது லட்சம் தர்றேன்.. வாங்கிக்கங்க... உங்களுக்கு என்ன தோணுதோ அத வச்சு என்ன வேணும்னாலும் செய்ங்க.. உங்க விருப்பம்'-ன்னு சொன்னாங்க.....அந்தப் பொண்ணும் நேர்ல வந்து அழுதது...நான் தெரியாம சொல்லிட்டேன். நான் யாரையும் லவ் பண்ணல.. என்னை மன்னிச்சு கல்யாணம் பண்ணிக்கங்கன்னு சொல்லி அழறா.. எனக்கு என்ன பண்ணன்னு தெரியல..."
"என்ன சொன்ன?"
"முடியாதுன்னு மறுத்துட்டேன்... இது போன கொஞ்ச நாள் கழிச்சு அவரோட அப்பா சில ஆளுங்கள கூட்டிட்டு வந்து குடும்பத்தையே தொலச்சிடுவேன்னு மிரட்ட ஆரம்பிச்சார்..."
"போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டியது தானே"
"எல்லாரும் அவருக்கு கொஞ்சம் வேண்டியப்பட்டவங்க. அவளோட அம்மா, ஊர் தாசில்தார் (அதற்கு இணையான ஏதோ ஒரு பதவி என்று சொல்லியதாக ஞாபகம்) வேற... போலீஸ் வேற நாங்க என்ன செஞ்சாலும் காதுல வாங்கிக்கல.. எங்க அம்மா, அப்பா வேற என்னால வீணா அங்க மாட்டிக்கிட்டாங்க. நிம்மதியே போச்சு...."
"அப்புறம் என்ன பண்ணுன?"
"என்னோட கிளாஸ் மேட் ஒருத்தன், எங்க டிஸ்டிரிக்ட் எஸ்.பியா இருக்கான். அவன்கிட்ட போய் சொன்னேன்."
"குட்"
"அவன் எல்லாம் கேட்டுட்டு நான் பார்த்துக்குறேன்னு சொன்னான.. அதுல இருந்து தான் இன்ஸ்பெக்டர் வேற வழியில்லாம ஆக்சன் எடுக்க வேண்டியாதா போச்சு.... அதுல இருந்து இப்ப யாரும் வந்து மிரட்டுறது இல்ல... அவளோட அப்பா, அம்மாவும் பயந்து ஒழுங்கா இருக்காங்க... இது எத்தனை நாளுக்குன்னு தெரியல"
"நல்லது. இவ்ளோ பணம் தர்றேன்னு சொல்றாரே அப்ப அவர்கிட்ட எவ்ளோ இருக்கும்? உன் பின்னாடி சுத்துறதுக்கு பதிலா அந்தப் பணத்தை வச்சு வேறோரு பையனை பார்த்து கல்யாணம் செஞ்சு வைக்கலாம். அது பெட்டர்.."
"சரி தான். ஆனா ஏற்கனவே இது மாதிரி ஒரு தடவை அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் நின்னு போயிருக்கு அதனால ஊர்ல ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்க... அதான் எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சுடனும்னு முடிவோட இருக்கார்."
"சரி.. ஆனா அதுக்காக பணத்துக்கு யாரும் ஆசைப்படாம இருப்பாங்களா... ஒரு பையன் கூடவா கிடைக்க மாட்டான்?"
"கிடைப்பான்... ஆனா ஐஐடி பையன் கிடைக்கமாட்டானே..."
"ஓஹோ... இப்ப புரியுது..."
"எங்க ஊர்ல இது ஒரு பெரிய விசயம்.. ஐஐடியனுக்கு பொண்ணு கொடுக்குறது பிரஸ்டீஜ் இஸ்யூ... அதான் இவ்ளோ முயற்சி பண்ணுறாங்க... நானே ஒரு சாதாரண காலேஜ்ல படிச்சிருந்தேன்னா இந்நேரம் விட்டுட்டு போயிருப்பாங்க... முதல்ல இருந்தே ஐஐடி பையனுக்குக் கொடுக்குறோம்னு ஊர்ல எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு, இப்போ இல்லைன்னு ஆகிடுச்சுன்னா கெளரவப் பிரச்சினை. அதான் ரொம்ப முயற்சி பண்ணுறாங்க..."
"இவ்ளோ மிரட்டுனதுக்கு அப்புறமும் அவர் பொண்ணை கல்யாணம் பண்ணிப்பேன்னு எப்படி எதிர்பார்க்குறார். ஒரு வேளை அவளை நீ கல்யாணம் செஞ்சாலும், எப்படி அவளோட அப்பா, அம்மா கூட நார்மலா நீ பேச முடியும்? உங்க அப்பா, அம்மா எப்படி அவங்க கூட பேச முடியும்?"
"இம்.. ஒண்ணும் புரியலை. அதான் ஃசேப்டிக்காக நான் வீடு மாறுறேன்.. என்னோட ரூமியை கொஞ்ச நாளைக்கு அவனோட பிரண்ட் வீட்டுல இருக்க சொல்லியிருக்கேன். யாரும் வந்து கேட்டா தெரியாதுன்னு சொல்லிடு...."
"சரி.. பேசாம... இது தான் நல்ல டைம்.... நீ ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ணியிருந்தா, வீட்டுல சொல்லு... உடனே ஒத்துப்பாங்க... கல்யாணம் செஞ்சிட்டு கொஞ்ச நாள் அப்ராட்ல போய் இருந்துட்டு வாங்க..."
"எங்க வீட்டுலேயும் அதான் நிலைமை. பையனுக்கு எப்படியாவது நல்லபடியா கல்யாணம் முடிஞ்சா போதும்னு நினைக்குறாங்க. ஆனா உடனே பொண்ணுக்கு எங்க போறது?"
----
இது இன்னொரு கல்யாணக் கதை (ஆந்திரவைச் சார்ந்த உடன் பணிபுரியும் நபர்)
"எனக்கு அடுத்த வாரம் கல்யாணம்"
"வாழ்த்துக்கள்...பொண்ணு யாரு? அதே பொண்ணு தானா?"
"இல்ல.... இது வேற"
"அது என்ன ஆச்சு?"
"அது ஒத்து வரலை"
"ஏன்? என்ன பிரச்சினை?"
"பிரச்சினை என் சைடுல இல்ல.. அவ சைடுல தான்.... வரதட்சணை 15 லட்சம் தான் கொடுக்க முடியும்னு சொல்லுறாங்க.."
"அது நீ லவ் பண்ண பொண்ணு தானே?"
"ஆமா அவளே தான். லவ் பண்ணும் போதே வரதட்சணையா 25 லட்சம் வாங்கி தரணும்னு சொல்லியிருந்தேன். அவளும் சரின்னு சொல்லியிருந்தா.. ஆனா இப்போ 15 லட்சம் தான் தர முடியும்னு சொல்லுறாங்க... நான் என்ன பண்ணுறது... என் மேல தப்பே இல்லை... "
???????????
16 கருத்துகள் :
ஐயா இது ஆந்திராதானா?
தலை சுத்துதுங்கோவ்...
பேசாம பேரை மாத்திட்டு செட்டில் ஆயிரலாமோ
நீங்கள் கேள்விப் பட்டதில்லையா பிரதீப்?
சில நபர்கள், பெண் பார்க்கும் போது, தங்களது ஜாதகத்துடன் பாஸ்போர்ட்டின் நகலையும் இணைத்து கொடுப்பது வழக்கம். வெளிநாடுகளுக்குச் சென்று வந்திருந்தால், தனி மவுசு உண்டு என்பதால்.
குறிப்பு: இது ஆந்திராவைச் சார்ந்தவர்களைக் குற்றம் சாட்ட வேண்டும் என்று எழுதப்பட்டதல்ல. நான் கேள்விப்பட்ட ஐந்தாறு விசயங்களை மட்டும் கொடுத்திருக்கிறேன். நிலைமை வேறு மாதிரியாக இருந்து, பெரும்பாலோனோர்கள் இந்த வரிசையில் இடம் பெறாமல் போகலாம். ஆகவே யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
நன்றி.
If you are an IITan or working abroad your rank and
exchange value in marriage market is quite high in AP.One can often find Telugu males in USA taking advantage of this to extract as much money and other things,as
possible from girl's parents.
In fact many prefer to go on
short term assignments or
H1B visas as your value
goes up and even if you
are in India you can extract
money by providing your H1B
visas in the past as potential
for settling in USA or frequent
visits in future.I know instances
where one family member in USA
tries his or her best to get
jobs in USA for siblings in
India so that they can get
more dowry.
நானும் இது போல கேள்விப் பட்டு இருக்கிறேன். இல்லாதவர்கள் பணத்திற்காக அலைகிறோம்; பணம் படைத்தவர்கள் வெற்றுப் பெருமையின் பின்னால் அலைகிறார்கள்.
இந்த 2வது காதல் கதையைத் தான் 'தெய்வீகக்காதல்' என சொல்லுவார்களோ?
புல்லரிக்குதுப்பா!
இன்னொரு நபர், மும்பை ஏர்போர்டில் இமிகிரேஷன் செக், கஷ்டம்ஸ் கிளியரண்ன்ஸ் எல்லாம் முடிந்து தாண்டிப் போன பிறகு உடன் வந்த நண்பருக்காக காத்திருந்திருக்கிறார். அவரை அழைத்து, எதற்கு காத்திருக்கிறாய் என்று யாரோ ஒரு கஷ்டம்ஸ் அதிகாரி கேட்க, இவர் ஏதோ உளறியிருக்கிறார்.
இவர் அவருக்கு பதிலளிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவருக்கு இவன் முதல் முறையாகப் பயணம் மேற்கொள்கிறான் என்று புரிந்து போயிற்று. "ஏதாவது கொடுத்துட்டு போங்க", என்று கேட்க.
இவர், "100 டாலர்ஸ் போதுமா?" என்று சொல்ல..
அவர் வாயைப் பிளந்து கொண்டு போதும் என்று வாங்கியிருக்கிறார்.
உடன் சென்ற நண்பர்கள், "என்னவாயிற்று?" என்று கேட்க, நடந்த அனைத்தையும் கூறியிருக்கிறார்.
"முட்டாள்தனமாக அவர் கேட்டதற்கு இப்படி கொடுத்திருக்கிறாயே", என்று இவர்கள் திட்ட,
"இல்லை இல்லை. பணம் எனக்கு முக்கியமில்லை. ஒரு நாட்டிற்காவது பயணம் செய்து விட வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம். அப்போது தான் எனக்கு மதிப்பு (புரிந்துகொள்ளுங்கள்)", என்று கூறியிருக்கிறார்.
ஐஐடி ஹாஸ்டலில் ஆந்திரா பசங்களை இந்த விஷயத்தை வைத்து கேலி செய்வோம். அவர்களும் கூலாக இதைப்பற்றிப் பேசுவார்கள் - வெட்கமே படாமல்.
//நானும் இது போல கேள்விப் பட்டு இருக்கிறேன். இல்லாதவர்கள் பணத்திற்காக அலைகிறோம்; பணம் படைத்தவர்கள் வெற்றுப் பெருமையின் பின்னால் அலைகிறார்கள்.//
மிகச் சரி.
பத்ரி,
நீங்கள் கூறியதைப் போல, என்னிடம் பேசியவர்களும் இதைப் பற்றி பேசும்போது அதிகமாக கூச்சப்பட்டதாகத் தோன்றவில்லை.
ஆந்திராவைச் சார்ந்த ஒரு பையனின் மீது காதலில் இருக்கும் வடநாட்டைச் சார்ந்த நண்பியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
எப்போது திருமணம் என்று கேட்டேன். பதில் சொன்னாமல் நழுவினார். சில சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தார். அவன் குடும்பம், எங்களுடைய குடும்பம் என்று ஏதேதோ கூறினார்.
திடீரென்று, உங்கள் ஊரில் எல்லாம் பெண்ணுக்கு நிலம், பணம் கொடுக்கும் வழக்கம் உண்டா என்று கேட்டார். ஏன் என்று தெரியவில்லை.
இன்னொரு நண்பியின் ரூமிகளில் ஒரு பெண், டாக்டரை மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தாராம் (அல்லது அவரது குடும்பத்தினர்). ஆனால் பணம் குறைவாக இருந்ததால் (?), கடைசியாக ஒரு பொறியாளரைத் தான் மணம் செய்ய முடிந்ததாம். இத்தனைக்கும் அவரும் இங்கே மென்பொருள் துறையில் பணிபுரிகிறார்.
ஸ்ருசால்,
இது எனக்கு தெரிந்த கதை.
இங்கே Multinational கம்பெனி ஒன்றில் பணிபுரியும் ஒருவருக்கு கிடைத்த வரதட்சனை 50 லட்சம் + 4 கிலோ தங்கம் + Honda City!
இத்தனைக்கும் அவர் அங்கே Employee கூட கிடையாது. Contractor ஆக மாதம் 12ஆயிரம் சம்பளம்! Employee என பொய்சொல்லி திருமணம்!
என்னத்தை சொல்ல?! :(
ஸ்ருசல்,
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். வருத்தப்பட வேண்டிய விஷயம். அதுவும் இதைக் கூச்சமில்லாமல் கேட்பவர்களை, பெண்வீட்டுக் காரர்கள் அவர்களாகவே தான் செய்கிறார்கள் என்ற சால்ஜாப்பை, இதுதான் கவுரவம் என்று பெருமைப்படுபவர்களை என்ன சொல்ல.. வரதட்சணை கொடுப்பவர்களும் தான் காரணம்.. சுயமரியாதையை விற்றுவிட்டு வாங்கிய லட்சங்களின் மேல் உக்கார்ந்துகொண்டு படும் அசிங்கத்தைக் கூட பெருமையாய் சொல்பவர்களை விளிக்கப் புதிதாய் வார்த்தை ஒன்றைப் படைக்கவேண்டும்.
indha maadheeree vara dhathcheenai vaangaradhuku thokku maateetooo thoangalaam. the pittiest thing is that they discuss this dowry story openly with others & acc. to them its a prestige. kali kaalam....
//Employee என பொய்சொல்லி திருமணம்!//
ஆயிரம் பொய் சொல்லி.....
உண்மைதான்.
ஆனால் ஏமாற்று என்பதையெல்லாம் அவர்கள் சாமானியமாகத் தாங்கிக் கொள்வதில்லை. மன்னிப்பதும் இல்லை!
இப்படி டுபாக்கூராக அமெரிக்காவில் இருந்துவிட்டு வந்த ஒருவர் பொய் சொல்லிக் கல்யாணம் செய்து கொண்டார். காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட பிறகு இப்போது அவரது (ஒரிஜினல்) மாமியார் வீட்டில் வயல் வெளிகளைப் பார்த்துக் கொள்கிறார்.
தலைப்பில் ஐ.ஐ.டியால் வந்த வினை என்றதும் தற்போது காரசாரமாய் நடந்து வரும் இட ஒதுக்கீடு விவாதம் குறித்த மற்றொரு பதிவு என்றே நினைத்தேன்.
மற்றபடி ஆந்திரா என்றில்லை சில வட மாநிலங்களில் கூட ஒவ்வொரு டிகிரிக்கும் ஒரு வித "மதிப்பு" என்றிருக்கிறது. என்னுடன் பொறியியல் (ஐ.ஐ.டி அல்ல) படித்த ஒரு ராஜஸ்தான் நண்பன் இவ்வளவு தூரம் வந்து படித்ததே "மதிப்பை" உயர்த்துவதற்காகத்தான எனும் போது ஆச்சரியமாகவே இருந்தது்.
ஹூம்... நமக்கு அந்த கொடுப்பினை எல்லாம் இல்லை ... ;-) ;-)
விக்னேஷ்,
இடஒதுக்கீடு பற்றி விவாதித்து விவாதித்து மிகவும் களைத்து விட்டது.
நல்ல விசயம் தான். அந்த அளவிற்கு தமிழகத்தில் மோசம் இல்லை என்பது சந்தோசத்தைக் கொடுக்கும் விசயம்.
ஆனால் ஆந்திராவிலும் வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்வதற்கு பலர் தயாராகத் தான் இருக்கிறார்கள். அதற்கு ஒரு முயற்சி தான்.
i don't need dowry matrimonial.
வலைத்தளத்தின் யு.ஆர்.எல் சரியாக ஞாபகம் இல்லை.
அதில் பெரும்பாலோனோர் பயனுறுவது போல் தெரிகிறது.
கருத்துரையிடுக