திங்கள், பிப்ரவரி 06, 2006

சமீபத்தில் மிகவும் ரசித்தப் பாடல்கள்

கடந்த இரண்டு மாதங்களில் மிகவும் ரசித்துக் கேட்டப் பாடல்களின் பட்டியல்.

1. உன்னைக் கண்டேனே

படம்: பாரி ஜாதம்
பாடியவர்கள்: ஹரிச்சரண், சுருதி
இசை: தரண்

பாக்யராஜ் மிகச் சிறந்த கதாசிரியர். தனது மகளின் அறிமுகத்திற்காக அதிக சிரத்தையெடுத்து வருகிறார். பார்க்கலாம் திரைப்படம் எப்படி அமைகிறதென்று! கவர்ந்திழுக்கும் பெண் குரல். ஹரிச்சரணும் ('உனக்கென இருப்பேன்' புகழ்) நன்றாகப் பாடியிருக்கிறார். பாடலின் வரிகள் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். 'ஏங்கினேன், தேங்கினேன்', ராகம் நன்றாக இருக்கிறது. பாடலின் ஆரம்பத்தில் வரும் இடி, மின்னல் சத்தத்தைக் கேட்கும் போது, தில் சே (உயிரே) படத்தின் எழுத்துப் (Title) பகுதியில் வரும் இசை ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அதில் இசை இடி & மின்னலாக ஆரம்பித்து, 40 வினாடிகளுக்குப் பிறகு மாறும் வயலின் இசை இதமாக இருக்கும்.

2. தாவணி போட்ட தீபாவளி

பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், ஸ்ரேயா கோஷல்
படம்: சண்டக் கோழி
இசை: யுவன் சங்கர் ராஜா

நல்ல பாடல். ராஜாக்களின் பேவரைட் பாடகி ஸ்ரேயா வழக்கம் போல சிறப்பாகப் பாடியிருக்கிறார். "விட்டுடு, விட்டுடு..." நல்ல ராகம். ஆரம்பத்தில், இந்த படத்தின் பாடல்களைக் கேட்கும் போது, எதுவுமே பிடிக்கவில்லை. இந்தப் பாடல் கூட ஏற்கனவே கேட்ட பாடலின் சாயல் இருந்ததால். பின்னர் தொலைக்காட்சியில் பார்க்கும் போது, இந்தப் பாடல் பிடித்து விட்டது. இந்தப் பாடல் மிகவும் நன்றாகவும், தெளிவாகவும் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் ஜேசுதாஸ், மது பாலகிருஷ்ணன், உன்னிமேனன் உள்ளிட்ட கேரளப் பாடகர்களின் குரல் அனைத்தும், ஜேசுதாஸின் குரல் போலவே இருப்பதால், வேறுபடுத்துவது சிரமாக இருக்கிறது. ஓர் மலையாளியிடம், அவருக்கு அதே சிரமம் இருக்கிறதா என வினவிய போது, "எங்களுக்கு அவர்கள் குரல் நல்ல பழக்கம் இருப்பதால், உங்களுக்கு இருப்பது போல சிரமம் கிடையாது. குரல் ஒன்று போல இருப்பதற்குக் காரணம்; இப்பொழுது இருக்கும் பாடகர்களுக்கும், பாடகராக முயற்சி செய்யும் எல்லாருக்குமே ஜேசுதாஸ் போல வர வேண்டும், பாட வேண்டும் என்ற வேட்கை உண்டு. அது, இந்த ஒற்றுமைக்குக் காரணமாக இருக்கலாம்", என்றார்.

3. நெஞ்சாங்கூட்டில்

படம்: டிஸ்யூம்
பாடியவர் : ஜெயதேவ், ராஜலக்ஷ்மி
இசை: விஜய் ஆண்டனி

படத்திற்குப் பாடல்கள் பெரிய பலம். பாடல்களுக்காகத் தான், திரைப்படம் பார்க்க சென்றேன். எதிர்பார்த்ததை விட படம் நன்றாகவே வந்திருக்கிறது. விஜய் ஆண்டனி கவனிக்கப்பட வேண்டியவர். 'நெஞ்சாகூட்டில்..நெஞ்சாகூட்டில்..நெஞ்சாகூட்டில் நீயே நிற்கிறாய்' என்று இழுக்கும் போது பின்னணியில், பிலிம் சுருளை இழுப்பது போல் வரும் இசை வித்தியாசமாக இருக்கிறது.

4. நூவு நேனு கலிசுண்டே நாக்கு எந்த இஷ்டம்.

படம்: கங்கோத்திரி
இசை: கீரவாணி
பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியன், மாளவிகா

சில மாதங்களுக்கு முன்பு அகன்ற வழி இணையத் தொடர்பு கொடுப்பவருக்கு தொலைபேசி செய்த போது, அவர் வைத்திருந்த ரிங் டோனில் இசைத்த பாடல் மிகவும் அருமையாக இருந்தது. ஆனால் அது ஒரு தெலுங்கு பாடல். அலுவலகத்தில் பணிபுரியும் நண்பருக்கு, அந்த எண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்து அந்தப் பாடல் என்ன திரைப்படம் என்று கூறுமாறு கேட்டேன். விடையுடன், பாடலும் கிடைத்தது. என்ன ஒரு அருமையான மெல்லிசைப் பாடல்!. நீண்ட நாட்கள் கழித்து மீண்டும், சென்ற வாரம் முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தேன். சலிக்கவே சலிக்காத பாடல்.

5. தாஜ்மஹால் ஓவியக் காதல்

பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன், மதுமிதா
படம்: கள்வனின் காதலி
இசை: யுவன் சங்கர் ராஜா

இந்தப் படத்தின் குறுந்தட்டை வாங்கும் போது, வாங்கலாமா, வேண்டாமா என்ற தயக்கம் இருந்தது. சரி பாடல் நன்றாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, லஜ்ஜாவதியே, நியூ பாடல்கள் இணைப்பாகக் கிடைக்கிறதே என்ற நம்பிக்கையில் வாங்கினேன். இரு பாடல்கள் நன்றாக இருந்தது. 'ஏனோ கண்கள்' மற்றுமொரு பாடல். சாதனா சர்கத்தின் குரல், அழகு! யுவனின் இசையில், கடந்த சில மாதங்களில் மட்டும் சண்டக்கோழி, புதுப்பேட்டை, அகரம், கள்வனின் காதலி படங்கள் அடுத்தடுத்து வந்து விட்டன. இதனால் தான் ஒரு சில பாடல்களைத் தவிர்த்து மற்ற பாடல்கள் வரவேற்பு பெறத் தவறுவது போல் தோன்றுகிறது.

6. ஒரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடிப் போகாது

பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
படம்: புதுப்பேட்டை
இசை: யுவன் சங்கர் ராஜா

மற்றுமொரு சோகம் ததும்பிய தத்துவப்பாடல், யுவனிடமிருந்து. பாடலின் வரிகள், பாடிய விதம், இவற்றை விட, இந்த பாடலின் சிறப்பிற்குக் காரணம் இசை. அதுவும் இரண்டு சரணங்களுக்கும் முன்பு வரும் வயலின், அருமை அருமை. முக்கியமாக 4:00 - 4:24 வரை. சமீபத்தில் இப்படியொரு வயலின் இசையைக் கேட்டதில்லை.

7. ரூபரூ
பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான், நரேஷ் அய்யர்
படம்: ரங்கு தே பசந்தி
இசை: ஏ.ஆர்.ரகுமான்

இந்தப் பாடலைப் பற்றியும், இது எடுக்கப்பட்ட விதத்தைப் பற்றியும் ஏற்கனவே ரங்கு தே பசந்தி இசை மதிப்பீட்டில் எழுதி விட்டேன். இந்தப் பாடலைப் பற்றி ரகுமான் இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். "இந்தப் பாடலை நான் பாடுவதற்கு முன்பாக, நரேஷ் அய்யரை வைத்து பதிந்து பார்த்ததில் அது சிறப்பாக வரவே அதையே பயன்படுத்தினேன். அதனால் தான் ஒரு சில வரிகள் மட்டுமே நான் பாடுவதை நீங்கள் கேட்கிறீர்கள். மேலும் 'ஹேய் சாலா' என்றெல்லாம் விழித்து பாடுவது எனக்கு சவுகரியமாக இருக்காது". இளமை ததும்பும் குரல், இசை.

8. கேட்கலியோ கேட்கலியோ

படம்: கஸ்தூரி மான்
பாடியவர்கள்: திப்பு, மஞ்சரி மற்றும் குழுவினர்
இசை: இளையராஜா

என்ன ஒரு அருமையான பாடல்! பெண் குரல் மட்டும் இன்னும் சிறிது நன்றாக இருந்திருக்கலாம். கோரஸ் மிக மிக அருமை (முக்கியமாக ஆரம்பத்தில்). உருக வைக்கும் இசை. இதே படத்தில் வரும் "நேத்து வரைக்கும்" (சுஜாதா பாடியது) பாடல், சிறைச்சாலையில் வரும் "ஆலோங்கிளித் தோப்பிலே" பாடல் போலவே இருக்கிறது.

ஸ்ருசல்

4 கருத்துகள் :

Boston Bala சொன்னது…

Interesting choices... thank you. I loved all 'Dishyum' songs.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) சொன்னது…

Thanks for the list Srusal.

link'um kuduthiruntha udana kaettiruppaen... anywayz.. thanks. will search in raaga.com

-Mathy

capriciously_me சொன்னது…

yuvan pudhupettai-la andha paata paadaama irundhirundha nalla irundhirukkum...my friends say tht sang with a constipated voice in that song..& i agree ;)..but the song's music is real gud :) pul pesum poo pesum rombave nalla iruku :)

ஸ்ருசல் சொன்னது…

capriciously,

எனக்கும் அந்த எண்ணம் இருந்தது. சமீபத்தில் இதைப் பற்றி நண்பர்களுடன் பெரிய விவாதம் நடந்தது. முக்கியமாகக் 'கள்வனின் காதலி' படத்தில் வரும் முதல் பாடல் 'ஏனோ கண்கள்... நாக்குல.. மூக்குல..' பாடல் நல்ல பீட் ரகத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், யுவனின் குரல் அதற்குப் பொருந்தவில்லை. வேறு யாரிடமாவது அந்தப் பாடலைப் பாடும் பொறுப்பை விட்டிருந்தால், நன்றாக இருந்திருக்கும்.

இந்த சோகப் பாடல், 'ஏனோ கண்கள்' அளவிற்கு மோசம் இல்லை. ஆனாலும் யுவன் எல்லா பாடல்களையும் ஒரே மாதிரி தான் பாடுகிறார். ஒரு வித்தியாசமும் இல்லை. 'பொய் சொல்ல இந்த மனசுக்கு', முதல் வந்த அனைத்துப் பாடல்களும்.

பாலா,

நீங்கள் கூறியது போல் டிஸ்யூம் படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை. சுபா பாடிய சோகப் பாடலைத் தவிர. 'டைலாமா டைலாமா' யுவும் நன்றாக வந்திருக்கிறது.

ஸ்ருசல்.