செவ்வாய், ஜூலை 04, 2006

மறைந்திருந்து கண்காணிக்கப்படுகிறது

நண்பனின் திருமணத்திற்காக நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்ற சனிக்கிழமை ஊருக்குச் சென்றிருந்தேன். ஊரில் இறங்கியதும் கண்ணில் பட்ட காட்சி ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்விளாகம் திருக்கோவில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் சுவரொட்டி. சென்ற வருடம் ஆவணி மாதம் முடிப்பதற்காகத் திட்டம் தீட்டி அது இந்த வருடம் ஆனி மாதம் தான் முடிந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் பலருக்கு ஞாபகத்திற்கு வருவது கீழ்கண்ட மூன்றில் ஏதாவது ஒன்றிரண்டு. 1. ஆண்டாள் கோவில். 2. பால்கோவா 3. தாமரைக்கனி

வெளியூரைச்(தமிழகம்) சார்ந்தவர்களுக்கு இம்மூன்றில் ஏதாவது ஒன்றைக் கூறினால் ஏறத்தாழ ஸ்ரீவில்லிபுத்தூர் ஞாபகம் வந்து விடும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பிரசித்தி பெற்றது. தமிழக அரசின் சின்னமும் ஆண்டாள் கோவில் (வடபத்ர சயனர் கோவில்) கோபுரம் தான். ஆனால் ஆண்டாள் கோவிலைப் பற்றி அறிந்த பலர், அதே ஊரில் உள்ள மடவார்விளாகம், வைத்தியநாத சுவாமி கோவிலை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கும் கோவிலின் வரலாறு ஒன்றும் தெரியாது. இது கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் வருடங்களாகலாம் என்று கருதுகிறேன். ஆனால் சிறு வயதிலிருந்து அடிக்கடி செல்லும் கோவில். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, அர்ச்சனை செய்யச் சொல்லி வாரா வாரம் சனிக்கிழமை வீட்டிலிருந்து என்னை அந்தக் கோவிலுக்குப் போகச் சொல்வார்கள். எரிச்சலுடன் பல முறை சென்று வந்துள்ளேன்.



நன்றி: தினமலர்

ஞாயிறு கும்பாபிஷேகத்திற்கு கூட்டம் அதிகமிருக்கும் என்பதால், சனிக்கிழமை இரவே கோவிலுக்குச் சென்று சாமி தரிசனத்தை முடித்து விட்டு வரலாம் என்று சென்றேன். கோபுரம் சீர்செய்யப்பட்டு புதிய சிமெண்ட் கலவையை சுமந்து நின்றது. அலங்கார விளக்குகளால், அழகு மிளிர்ந்தது. பெரும்பாலான கோவில்களில் கோபுரங்களைச் சீர் செய்த பின்னர், அதற்கு பச்சை, சிகப்பு, மஞ்சள் வண்ணங்களால் பூச்சு செய்வதுண்டு. இது கோபுர அழகை கெடுப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் சிமெண்ட் பூச்சு எளிமையாக இருப்பதுடன், கோபுரத்தின் அழகையும் உயர்த்திக் காட்டுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டாள் கோபுரத்திற்கு இட்ட வண்ணப் பூச்சு அதன் கம்பீரத்தைக் குறைப்பதாகவே எனக்குப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக கோவில் தெப்பக்குளத்தில் அதிகமான தண்ணீர் இல்லாமல் இருந்தது. இந்த வருட ஆரம்பத்தில் பெய்த மழையின் காரணமாக தெப்பக்குளம் நிரம்பி இருந்தது விசேஷம். அந்தத் தெப்பக்குளத்தைப் போலவே கோவிலின் எதிரில் புதிதாக ஒரு தெப்பக்குளம் நிர்மானிக்கப்பட்டு அதன் மத்தியில் சிவன் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

சாமி தரிசனம் முடித்து விட்டு, கோவில் வாசலில் நடந்து கொண்டிருந்த சொற்பொழிவுக்குச் சென்றேன். முன்பு போல சொற்பொழிவுகளுக்கு அதிகமாக கூட்டம் வருவதில்லை. ஆண்டாள் கோவில் தேரோட்ட விழாவிற்காக பத்து நாட்களுக்கும் மேலாக சொற்பொழிவு நடக்கும். அந்த பத்து நாட்களும் கோவில் நுழைவாயிலைக் கடப்பதே பெரும் பாடாகி விடும். அவ்வளவு கூட்டமிருக்கும். ஆனால் வைத்தியநாத சுவாமி கோவில் சொற்பொழிவில் கூட்டம் ஐம்பதைத் தாண்டாது. ஆனால் கோவிலின் நுழைவாயிலில் இலவசமாகக் கொடுத்த தயிர்சாதத்தை வாங்குவதற்காக உண்டான வரிசை 200 மீட்டர் நீளத்திற்கு இருந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான செண்பகத்தோப்பு காடு, பல்லாயிரக்கணக்கான சதுர கி.மீ பரப்பளவில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 10 கி.மீட்டர் தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் அமைந்துள்ளது. நான் ஊருக்குச் சென்றால் தவறாமல் செல்லும் இடங்களில் அதுவும் ஒன்று. அந்த காட்டின் வாயிலில் இறங்கி, இரண்டு கி.மீட்டர் காட்டில் நடந்தால், செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோவில் வரும். பெரும்பாலோனோர்கள் அந்தக் கோவிலை ஒட்டியே அடுப்புகளை வைத்து சமைத்து விட்டு அருகிலுள்ள ஆற்றில் குளித்து விட்டு, சமைத்ததை உண்டு ஊர் கிளம்பி விடுவர். சிலர் அதனைத் தாண்டி இரண்டு-மூன்று கி.மீட்டர்கள் நடந்து அமைதியான இடத்தில் குளிப்பதுமுண்டு.

தமிழகத்தின் ஒரு முக்கிய புள்ளியின் குலதெய்வமும் பேச்சியம்மன் கோவில் என்று தான் கேள்வி. சென்ற ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பாக அவர் அந்தக் கோவிலின் கும்பாபிஷேகத்தையும் நடத்தினார். அப்போது அவருடைய வருகைக்காக, காட்டின் நுழைவாயிலில் இருந்து கோவில் வரையுள்ள இரண்டு கி.மீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு காட்டில் சாலை வசதி செய்ய்ப்பட்டுள்ளது. இப்போது அந்த சாலையைக் கடப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது. முன்பெல்லாம் அதனைக் கடந்து செல்வதற்கே சுகமாக இருக்கும். இப்போது ஆட்டோக்களும், கார்களும் பெரிய வேன்களும் கூட காட்டின் மத்தி வரை வந்து விடுவது வேதனை அளிக்கிறது. இதனைப் பற்றி ஏன் யாருமே கேள்வி எழுப்பவில்லை எனத் தெரியவில்லை.

------------

ஊரில் பள்ளியின் அருகில் ஐஸ் விற்பவர்கள் கிட்டத்தட்ட சின்ன பசங்களுடன் பழகிப் பழகி அவர்கள் அளவிற்கு சமயங்களில் இறங்கி வந்து பேசுவதுண்டு. எப்படி தான் இது போன்ற சிறுவர்களுடன் இவர்கள் வியாபாரம் வைத்துக் கொள்கிறார்களோ என்று ஆச்சர்யமாக இருக்கும்.
சனிக்கிழமை ஒரு பள்ளியைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். ஒரு ஐஸ் விற்பவர், பள்ளியின் அருகில் வியாபாரமில்லாமல் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக ஒரு 8 வயது பையன் ஒருவன்
அருகிலிருந்த கடையில் வாழைப்பழம் வாங்கி, அதைத் தின்று கொண்டே இவரைக் கடந்து சென்றான்.

ஐஸ் விற்பவர், "டேய் ஐஸ் வேணுமாடா", என்றார்.

"வேணாம். வேணாம்.", என்று அலட்சியமாகப் பதில் சொல்லி விட்டு அவரைப் பார்க்காமலேயே கடந்து சென்றான்.

இதனால் சிறிது கடுப்படைந்த அவர், அவனை ஏமாற்றும் பொருட்டு,

"டேய், துட்டை கீழே போட்டுட்டுப் போற... வேண்டாமாடா?", என்றார்.

அவன் லேசாகத் திரும்பி அவரை குறுகிய கண்ணால் ஒரு பார்வை பார்த்து விட்டு,

"ஹீம். போய்யா....நான் துட்டே கொண்டு வரலே...", என்று நக்கலாக கூறினான்.

பையன் பயங்கர உஷார் பார்ட்டியாக இருப்பதைக் கண்டு இவர் தான் ஏமாற்றமடைந்தார். ஆனாலும் விடாமல்,

"அப்புறம் வாழைப்பழம் திங்குற?"

"நான் வரும்போது துட்டு வச்சிருந்தேன். எல்லாத்துக்கும் பழம் வாங்கிட்டேன்.... இப்ப எங்கிட்ட துட்டு இல்ல", என்று அலட்சியமாக பதில் சொல்லி விட்டு ஓடி விட்டான்.

------

இரண்டு சுவாரசியமான சுவர் விளம்பரங்கள்.

1. இது மதுரை ரயில் நிலையத்தின் வாசலில் உள்ள சுற்றுச் சுவரில் எழுதப்பட்டிருந்தது.

"இங்கு சிறுநீர் கழிக்காதீர்.
மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மறைந்திருந்து கண்காணிக்கப்படுகிறது."

2. மதுரையில் ஒரு நிறுவனம் வைத்திருந்த விளம்பர போர்டில்

"ஆணுறை இல்லா உடலுறவு
ரிஸ்க் கண்ணா ரிஸ்க்
ஆணுறை அணிந்த உடலுறவு
பெஸ்ட் கண்ணா பெஸ்ட்"

4 கருத்துகள் :

கோவி.கண்ணன் சொன்னது…

//"ஆணுறை இல்லா உடலுறவு
ரிஸ்க் கண்ணா ரிஸ்க்
ஆணுறை அணிந்த உடலுறவு
பெஸ்ட் கண்ணா பெஸ்ட்"//

இரண்டே ரூபாய்களில் இப்பொழுது கடைகளில் கிடைக்கிறது ... ஒன்று வாங்கினால் இன்னொன்று முற்றிலும் இலவசம்

பாலசந்தர் கணேசன். சொன்னது…

ஆணுறை அணிவதை எப்படியோ அறிவுறுத்தினால் சரி என்கின்ற அளவிற்கு எய்ட்ஸ் பரவி கொண்டுள்ளது.

வல்லிசிம்ஹன் சொன்னது…

திருவண்ணாமலைக் கோவில் ஒன்று இருக்குமே? அங்கும் குளம் இருந்ததாக எனக்கு நினைவு
நான் சொல்வது வண்டிகள் மாடுகள் ஓடிய காலம்.மரங்களும் நிழலும் ச்ரினிவாசர் கோவிலும் அதி ஒரு சுற்றுலாத் தலமாக ஆக்கீஇருந்தன. போய் வந்தால் சொல்லுங்கள். நீங்கள் சொவதுபோல் வண்ணங்கள் சில சமயம் ஏற் புடையதாக இல்லை.வாழ்த்துக்கள்.

ஸ்ருசல் சொன்னது…

நீங்கள் சொல்வது சரி. அந்த கோவில் இப்போதும் அதே விசேதத்துடன் இருக்கிறது. இப்போதும் புரட்டாதி மாதம் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது.

ஆனால் நான் சென்று நான்கு வருடங்கள் ஆகின்றன. அருகிலேயே இருந்தாலும் செல்ல வேண்டும் என்று தோன்றியதில்லை.

ஆனால் அதே போல், தூசி படிந்த, குண்டும் குழியுமான ரோடுகள் என்று கேள்வி.

அங்கு வந்ததுண்டோ?