நீண்ட நாட்களாக காத்திருந்த பாடல்கள் வந்து விட்ட மகிழ்ச்சி இருந்தாலும், காத்திருந்த அளவிற்கு பாடல்கள் சிறப்பாக வரவில்லை என்பது வருத்தம். அதனாலேயே எழுதுவதற்கு கூட அவ்வளவு ஆரவமில்லை. படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள். இரண்டு அற்புதமான மெலோடி பாடல்கள். ஒரு குத்து பாடல். மற்றவை கேசட்டை நிரப்புவதற்காக.
1. அம்மி மிதிச்சாச்சு (கும்மி அடி) ***
பாடியவர்கள்: டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம், சொர்ணலதா, நரேஷ் அய்யர், தேன் குஞ்சரம்மாள், விக்னேஷ் மற்றும் குழுவினர்
பட்டியலை துவக்கி வைப்பதே இந்தக் குத்து பாடல் தான். பாடல் குத்து ரகம் ஆனாலும் பல்லவி நன்றாக வந்துள்ளது. அட்டகாசமாக ஆரம்பித்து சரணத்தில் சிறிது சறுக்கியுள்ளது. ஆனால்,
அவளுக்கென்ன அம்பாசமுத்திர
அய்யர் ஓட்டல் அல்வா மாதிரி
தாளம்பூவென தள தள தளவென
வந்தா வந்தா பாரு
அவனுக்கென ஆல்வார்குறிச்சி
அழகுத்தேவர் அருவா மாதிரி
பருமா தேக்கென பள பள பளவென
வந்தான் வந்தான் பாரு
என்று வரும் இந்த இடத்தில் ராகம் நன்றாக வந்திருக்கிறது. இந்த வரிகளை நரேஷ் நன்றாகப் டியிருக்கிறார். தேனி குஞ்சாரம்மாளின் குரலும் ஒத்துச் செல்கிறது. சீர்காழி பாடும் இடங்களில் ராகம் மனதில் ஒட்டாமல் செல்கிறது. ஒட்டாத இன்னொன்று சொர்ணலதாவின் குரல்.
2. அன்பே வா முன்பே வா ****
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர்
பாடல் ஆரம்பித்த முதல் விநாடியே Dr.Alban-னின் It's my life பாடலை ஒலிக்கவிட்டு விட்டோமே என்ற சந்தேகம். அது அந்த முதல் விநாடி மட்டும் தான். அதன் பிறகு ரகுமானின் கொடி தான். ரகுமானின் பட்டறையிலிருந்து மற்றுமொரு நல்ல மெல்லிசை பாடல். இறுதியில் ஸ்ரேயா கோஷலுக்கு ஒரு நல்ல பாடல், ரகுமானிடமிருந்து.
இந்தப் பாடல் ஹிட்டாகும் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை. குழுவினர் பாடும் ரங்கோலி இடம் அழகு.
3. மஜா மஜா **
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், எஸ்.பி.பி.சரண்
ஸ்ரேயா கோசல் பாடிய இந்த பாடல் எனக்கு பிடிக்காத ஒன்று. ஏன் அவருக்கு இது போலவே பாடல்கள் கொடுக்கப்படுகின்றன எனத் தெரியவில்லை. ஏற்கனவே அன்பே ஆருயிரே படத்தில் இடம்பெற்ற தழுவுது நழுவுது பாடலும் இதே வகையைச் சார்ந்தது. ஏமாற்றம். நமக்கு மட்டுமல்ல அவருக்கும் தான். மேலும் மஜா மஜா பாடலின் இசை அப்படியே தெனாலி படத்தில் இடம் பெற்ற ஆலங்கட்டி மழை பாடலை ஒத்துள்ளது. கேட்கும் போதே நீங்களே சுலபமாக உணர முடியும்.
4. மச்சக்காரி மச்சக்காரி **
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ்
இந்தப் பாடலில் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை என்பது வருத்தமான விசயம். சுமாரான பாடல்.
5. நியூயார்க் நகரம் *****
பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான்
படத்தில் நான் முதன் முதலாக கேட்ட பாடல். கேட்ட மறு நொடியே இந்த பாடல் பிடித்து விட்டது. பாடலின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அற்புதம். இம்.ஹீம் இம்.ஹீம் என்று அற்புதமாக ஆரம்பித்து கிடாரை உடன் எடுத்துக் கொண்டு 'நியூயார்க் நகரம்' என்று ரகுமான் பாட ஆரம்பிப்பது அற்புதம். அதே போல் 0:45 நொடியில் ஒரு ஹெலிகாப்டர் இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு பறந்து மீண்டும் இடது புறத்திற்கு வருவது அழகாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது முடிந்ததும் 1:05 நிமிடத்தில் "ஹோ" என்று பின்னணியில் வரும் சப்தம் அற்புதம். இவை இரண்டும் பாடலின் தரத்தை வெகுவாக உயர்த்துகின்றன.
'நியூயார்க் நகரம்
உறங்கும் நேரம்
தனிமை அடங்குது
பனியும் படருது
கப்பல் இறங்கியே
காற்று கரையில் அடங்குது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்
நானும் மெழுகுவர்த்தி
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ'
சூர்யா கூறியது போல் ரகுமான் முதன் முதலாக காதல் பாடலைப் பாடியுள்ளார். அதில் பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அனைத்துத் தரப்பினரையும் சுண்டி இழுக்கும் என்பதிலும் துளியும் ஐயமில்லை.
பாடலில் மற்றுமொரு சிறப்பு பெண் குழுவினரின் குரல். 3:10-3:20 மற்றும் 4:30 - 5:10 வரை அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள். இசைத்தட்டில் 'தன்வி & பார்கவி பிள்ளை' என்று எழுதப்பட்டிருந்தது. அவர்களுக்கு பாராட்டுக்கள். முதன் முதலில் தமிழில் இசைக்கலைஞர்களுக்கு கேசட்டில் இடம் கொடுத்தவர் ஏ.ஆர்.ரகுமான். அதே போல் ஒவ்வொரு பாடலிலும் கோரஸ் பாடியவர்களின் பெயரைத் தனித் தனியாக சி.டியில் வெளியிடச் செய்து அவர்களை ரகுமான் சிறப்பித்திருப்பது அழகு. மூன்று நாட்களாக வாயைத் திறந்தாலே இந்த பாடல் தான். தாராளமாக ஐந்து மதிப்பெண்கள் கொடுக்கலாம்.
6. மாரீச்சாம் **/2
பாடியவர்கள்: கரோலிசா, முகமது அஸ்லம், கிருஷ்ணா
இதுவும் மூன்றாம் பாடல் வகையைச் சார்ந்தது. முகமது அஸ்லம்-த்தின் குரல் அருமையாக வந்துள்ளது. இவர் தான் காட் ஃபாதரில் இடம்பெற்ற 'இளமை' பாடலைப் பாடியவர். பாடலின் இறுதியில் வரும் 'கெளதம் கெளதம்' என்று அழைப்பது 'வாலி' படத்தில் இடம் பெற்ற பாடலில் சிம்ரன் அஜீத்தை 'தேவா தேவா' என்று அழைப்பதை ஞாபகப்படுத்துகிறது.
இரண்டரை மதிப்பெண்கள் கொடுக்கலாம்.
7. ஜில்லுன்னு ஒரு காதல் ***
பாடியவர்கள்: தன்வி
இந்தப் பாடல் ஜாஸ் வகையைச் சார்ந்தது. வித்தியாசமான முயற்சி. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கொடுக்குமா என்பது தெரியவில்லை. இந்தப் பாடல் பூமிகாவிற்கு இருக்கும் என்பது எனது கணிப்பு. மற்றபடி வேறெதும் கவரவில்லை. அல்லது எனது அறிவிற்கு எட்டவில்லை. 3 மதிப்பெண்கள் கொடுக்கலாம்.
'அன்பே ஆருயிரே', 'காட் ஃபாதர்' பெரிய அளவிற்கு போகாத நிலையில் இந்தப் படத்தின் பாடல்களாவது பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அது சிறிது கடினம் என்று தோன்றுகிறது. வாலியின் வரிகள் பாடல்களுக்கு அழகு சேர்ப்பதற்குப் பதில் டப்பிங் பாடல்கள் கேட்பது போன்ற உணர்வை சமயங்களில் ஏற்படுத்துகிறது.
நியூயார்க நகரம் பாடல் மட்டுமே ஆறு முறை படத்தில் (சி.டியில்) இடம் பெற்றிருக்கக் கூடாதா என்று தோன்ற வைக்கிறது. அந்த பாடல் இடம் பெற்ற படத்திலா மாரீச்சாம், மஜா மஜா போன்ற பாடல்களும் இருக்கின்றன என்பதை நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது. நியூயார்க், முன்பே வா பாடல்களுக்காக கண்டிப்பாக கேசட் அல்லது சி.டி வாங்கலாம்.
சி.டி. விலை: 95 ரூபாய் (தமிழகம்)
மற்ற மாநிலங்கள்: 100 ரூபாய்
14 கருத்துகள் :
vaaliyin varigal indh padathirku enda alavirku porundhum ena theriya villa..muthukumaro illai vairamuthuvo eludhi irundhaaal nanragaa irundhirukkum
paadalgal ketane..
new york
avalukkena pdalagal arumai
indha irandum kanippaga verri perum...
nall padhivu ..nandri
படத்தில் கேட்கும் படி இருப்பது 'ஜில்லென்று ஒரு காதல்' ஜாஸ் தான். மற்றவை சுமார் கூட இல்லை. (தரவிறக்கம் செய்யும் முன்பே இப்படித்தான் எதிர்ப்பார்த்தேன்). எனக்குத் தெரிந்து ரகுமானின் கடைசி ஹிட் 'அலைபாயுதே' தான். 'ஆய்த எழுத்து'-ஐ சேர்க்காதீர்கள். பேசாம அவர் இந்தி / ஹாலிவுட்-ஐயே concentrate பன்னட்டும்.
சீனு,
நியூயார்க் பாடல் பிடிக்கவில்லையா? ஆச்சர்யம். திரும்ப கேட்டு பாருங்கள். முதல் முறையே பிடித்திருக்க வேண்டுமே!
என்ன கொடுமை சீனு? :)
அலைபாயுதே தான் கடைசி ஹிட்டா? நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் உண்மை தான். ஆனால் 'பாய்ஸ்', 'கன்னத்தில் முத்தமிட்டால்'-ஐ மறந்து விட்டீர்கள். இரண்டு படங்களும் சரியாக ஓடாதது காரணமாக இருக்கலாம்.
வழக்கம் போல் அடுத்த படத்திற்கு காத்திருப்போம்.
வா... ஜி... நீ... வா... ஜி
சிவாஜி
ஆனால் நியூயார்க் இன்னுமொரு முறை கேட்டு பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும்.
// நீண்ட நாட்களாக காத்திருந்த பாடல்கள் வந்து விட்ட மகிழ்ச்சி இருந்தாலும், காத்திருந்த அளவிற்கு பாடல்கள் சிறப்பாக வரவில்லை என்பது வருத்தம். அதனாலேயே எழுதுவதற்கு கூட அவ்வளவு ஆரவமில்லை. படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள். இரண்டு அற்புதமான மெலோடி பாடல்கள். ஒரு குத்து பாடல். மற்றவை கேசட்டை நிரப்புவதற்காக.
நான் என்னுடைய பதிவில் விமர்சனமாய் எழுத நினைத்த விஷயம் இதுதான்.
"நியூயார்க் நகரத்தை"விட இப்போதைக்கு "அவளுக்கென்ன அம்பாசமுத்திர
அய்யர் ஓட்டல் அல்வா மாதிரி" தான் என் ரேட்டிங்கில் முதலிடம்.
பொதுவாகவே ரகுமான் பாடல்கள் கேட்க கேட்கத்தான் கவரும். பார்க்கலாம்.
// வா... ஜி... நீ... வா... ஜி
:)
நாடோடி,
வைரமுத்துவின் 95% பாடல்கள் இசைக்கு ஏற்றார்போலவும், ரசிக்கும் படியாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. வாலியின் சமீப கால படங்களில் வார்த்தைகள் ஏனோ தானோவென்று இருக்கிறது.
உதாரணம்: நியூ, அன்பே ஆரூயிரே, இந்தப் படம், இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்நியனில் கூட 'அய்யங்கார் வீட்டு அழகே' இடம் பெற்ற
'மகரந்த பொடிகளை எடித்து அதில் மஞ்சள்'...., 'வான் மழையில் நனைந்தால்'...., போன்ற வரிகளையும்,
அண்டங்காக்காவில் இடம்பெற்ற
'சுட்ட பால் போல தேகம் தாண்டி உனக்கு அதில் பாலாடை மட்டும் கொஞ்சம்....' போன்ற வரிகளை கேட்கும் போதே அதில் வைரமுத்துவின் உழைப்பினை உணர முடிகிறது. அந்த தாக்கம் நோக்கியா போன்ற வாலி பாடல்களில் இல்லை என்பது என் கருத்து.
வாலியின் பாடல்கள் அவசரத்தில் எழுதியதைப் போலவே இருக்கின்றன.
விக்னேஷ்,
//'பொதுவாகவே ரகுமான் பாடல்கள் கேட்க கேட்கத்தான் கவரும். பார்க்கலாம். '
இந்த நம்பிக்கை தான் வாழ்க்கையை ஓட்ட உதவுகிறது. :)
சில்லுன்னு ஒரு காதல் பாடல்கள் விமர்சனம் மிகவும் நன்றாக இருக்கிறது. என்ன எழுதி என்ன பன்றது சார். காசு கொடுத்து CD வாங்கியாச்சுன்னா எல்லாபாட்டையும் கேட்டுதானே தீரனும். சிவாஜி பாடல் வந்ததும் சீக்கிரமா விமர்சனம் பன்னுங்க எல்லோரும் அதைத்தான் ரொம்ப எதிர்பார்க்கிறாங்க சார் -- கோவை ரவீ
ரவீந்திரன்,
நன்றி.
வலைப்பதிவு அருமை, தொடர்ந்து எழுதுங்கள்.
மிக்க நன்றி. இலக்கியா.
நானும் இப்போதுதான் பாடல்களைக் கேட்டேன்... என்னுடைய favaourite அன்பே வா முன்பே வா ;))
//நோக்கியா போன்ற வாலி பாடல்களில் இல்லை என்பது என் கருத்து.//
ஸ்ருசல், நோக்கியா எழுதியது கபிலன்...
முன்பே வா என் அன்பே வா பாட்டு ஸ்ரேயா குரலுக்காக கேட்டேன் கேட்டேன் கேட்டுகிட்டே இருகேன்....
// நானும் இப்போதுதான் பாடல்களைக் கேட்டேன்... என்னுடைய favaourite அன்பே வா முன்பே வா ;)) //
அருட்பெருங்கோ,அது முன்பே வா என் அன்பே வா.
நல்ல அலசல். நன்றி.
இப்போ ரஹ்மான் பாடல்களை வருந்திக் கேட்கவேண்டியுள்ளது வர்த்தமான விஷயம்தான் ரெம்ப எக்ஸ்பெரிமெண்டலாகிவிட்டது அவரது இசை.
மிகச்சரியான விமர்சனம். ஆனால் இன்னும் என்னால் நியூயார்க் பாடலில் வரும் ஒரு வரியை சரியாக கவனிக்க முடியவில்லை. "நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா...எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா.. " இதில் கடைசி சில வார்த்தைகள்.."பெயரும் ஆனதென்ன தேனா" "பெயரின் ஓரமெல்லாம் தேனா".
அனானி,
எனக்கும் இன்னும் புரியவில்லை. பல முறை பாடலைக் கேட்டு விட்டேன்.
ஆனாலும் அது "பெயருமானதென்ன தேனா" என்பது எனது கணிப்பு.
நன்றி
ஸ்ருசல்
கருத்துரையிடுக