வியாழன், மார்ச் 09, 2006

இனியவை நாற்பது

இனியவை நாற்பது:

நட்சத்திரமாக இருந்து விட்டு, 'எனக்குப் பிடித்த பாடல்கள்' என்று அடுக்காவிட்டால் என்ன நியாயம்? மனிதனுக்கு எப்போதும் சிறிது தலைக்கணம் உண்டு. என்னோட புது காரைப் பார்த்தாயா? என்னோட வீட்டைப் பார்த்தாயா? இந்த டிரெஸ் எப்படி இருக்கு? என்னோட தேர்வு எப்படி என்று ஒவ்வொரு விசயத்திலும் அலட்டிக்கொள்வான்; துணையை தேர்ந்தெடுப்பது உட்பட. அதே தான் இங்கும் பொருந்தி வருகிறது. இதோ என்னுடைய ரசனை அலட்டல்!

என்னுடைய பதிவுகளிலேயே மிகவும் சிரமப்பட்டது இந்த பதிவிற்குத் தான். எதை விட்டு விடுவது; எதை சேர்ப்பது எனத் தெரியாமல் குழம்பி அரை மனதுடன், இந்தப் பட்டியலை பதிவிடுகிறேன். சிறந்த 20 பாடல்களை தொகுக்க வேண்டும் என்று தான் ஆரம்பித்தேன். ஆனால் பாடல்களைத் தேர்ந்தெடுத்து பார்த்தால் பட்டியலின் அளவு 150 க்கும் அதிகமாக சென்று விட்டது. சில படங்களிலிருந்து இரண்டுக்கு மேல் கூட பாடல்கள் இடம் பெறத் துவங்கின. மேலும் அந்த பாடல்கள் பொதுவாக அனைவருமே குறிப்பிடும் பாடல்கள் தான். ஆகையினால் அவற்றை தவிர்த்து விட்டேன். ஆனாலும் அந்த படங்களிலிருந்தே சில பாடல்கள் மீண்டும் இந்த பட்டியலில் இடம் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை. கடைசியில் நாற்பதோடு நிறுத்தி விட்டேன். உங்களுக்கு அனைத்துப் பாடல்களையும் பார்ப்பதற்கு நேரம் மற்றும் பொறுமை இருக்குமா எனத் தெரியவில்லை.

புன்னகை மன்னன், அக்னி நட்சத்திரம், அம்மன் கோயில் கிழக்காலே, சிப்பிக்குள் முத்து, மெளன ராகம், பூவிழி வாசலிலே, இதயக் கோயில், புதுப் புது அர்த்தங்கள், ஜானி, வைதேகி காத்திருந்தாள், முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே, இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், தாளம், அலைபாயுதே, மின்சாரக் கனவு, கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன், ரோஜா உள்ளிட்ட சிறந்த படைப்புகளையும், மெட்டி ஒலி காற்றோடு, அழகிய கண்ணே (உதிரி பூக்கள்), இது ஒரு பொன் மாலைப் பொழுது, பூவே செம் பூவே, வெள்ளைப் புறா ஒன்று, நான் தேடும் செவ்வந்திப் பூவிது, காதல் கசக்குதய்யா போன்ற பாடல்களையும் தவிர்த்து தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவற்றையும் சேர்த்திருந்தால், இது போல இன்னும் மூன்று பதிவுகள் வேண்டும் எனக்கு. வரிசை எண், பாடலின் தரத்தைப் பொறுத்து அல்ல. இந்தப் பாடல்களைத் தர வரிசையில் அடுக்கவும் முடியாது.

இது வரை நான் கேட்ட பாடல்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த முதல் 40 பாடல்களின் பட்டியல் இதோ:

குறிப்பு: எல்லா பாடல்களுக்கும் "ராகம் அருமை; இசை மிக அருமை" என்ற வார்த்தைகளை சேர்த்துக் கொள்ளவும்.

1. தேவனின் கோவில் மூடிய நேரம் தெய்வமே

திரைப்படம்: அறுவடை நாள்
பாடியவர்கள்: சித்ரா, இளையராஜா
இசை: இளையராஜா

இறைபணியில் இருந்து சிறிது விலகி காதல் பாதையை நாடும் ஓர் பெண், காதலனின் திருமணத்தினால் ஏற்படும் ஏமாற்றத்தை வெளிபடுத்தும் அற்புதமான பாடல். அழகான வரிகள். பாடலின் ஆரம்பத்தில் 'பிரேமம் பிரேமாதி பிரேம பிரியம்' என இளையராஜாவின் அற்புதக் குரலுடன் ஆரம்பிக்கும் பாடல், சித்ராவினை நோக்கிச் செல்வது அழகு.

ஒரு வழிப் பாதை என் பயணம்
மனதில் ஏனோ பல சலனம்
கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா?
ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
அழுதிட கண்ணில் நீருக்குப் பஞ்சம்
நானோர் கண்ணீர் காதலி.

தன்னுடைய மந்திரக் குரலால், பாடல் வரிகளுக்கு தேவையான அழுத்தத்துடன், உணர்ச்சிப் பெருக்குடன் பாடியிருப்பார் சித்ரா.

2. குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே

திரைப்படம்: ஆண்பாவம்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், சித்ரா
இசை: இளையராஜா

படமாக்கப்பட்ட விதத்திற்காகவும் (முக்கியமாக சீதாவிற்காக), இசைக்காகவும், பெண் குரலுக்காகவும் இந்த பாடலை மிகவும் பிடிக்கும். சீதா ரொம்ப சின்னப் பெண்ணாக, அருமையாக செய்திருப்பார்.

அன்னைக்கொரு எழுத்தை எனக்கெழுதிப் புட்டான்
இன்னைக்கதை அழிச்சா எழுதப் போறான்?
பெண்ணே அவன் மேல பழியை சொல்லாதடி
ஆண்பாவம் பொல்லாது கொல்லாதடி

அருமையான ராகம். சித்ராவின் குரல் தேன்.

தவறோ சரியோ விதி இது தான்
சரி தான் சரி தான் வழக்கெதுக்கு?

விதி அப்படி? வேறு வழியில்லாமல், கிடைத்த பொருளின் சிறப்பம்சத்தை மட்டும் பார்த்து மகிழ்வது தான் வழி என்பது போல் சீதாவின் ரியாக்சன் இருக்கும். சீதா நன்றாகச் செய்திருப்பார்.

3. பூங்காற்றிலே

திரைப்படம்: உயிரே
பாடியவர்கள்: உன்னிமேனன், சொர்ணலதா
இசை: ஏ.ஆர்.ரகுமான்

இந்தப் பாடலைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? உயிரை உலுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. பாடலின் ஆரம்பத்தில் ஓரே ஓர் இசைக் கருவியின் இசை மட்டும் வரும். பின்னணியில் சொர்ணலதா 'கண்ணில் ஒரு வலி இருந்தால், கனவுகள் வருவதில்லை' என்பார். சொர்ணலதா அதே வரிகளை இரண்டாம் முறை சொல்லும் போது, இன்னொரு இசைக் கருவி சேர்ந்து, சுருதியை உயர்த்தும். மூன்றாம் முறை சொல்லும் போது, இன்னொரு இசைக் கருவி சேர்ந்து கொண்டு, பல்லவியை ஆரம்பிப்பது அருமையாக இருக்கும். உன்னிமேனனுக்கு இதை விட சிறந்த பாடல் இது வரை கிடைக்கவில்லை என நினைக்கிறேன். ரகுமானின் சிறந்த மெலோடி பாடலாக இதைத் தான் சொல்வேன். வைரமுத்திடமிருந்து முத்து முத்தான வரிகள்!
முதல் சரணம் ஆரம்பிக்கும் முன் வயலினில் ஆரம்பித்து கிதாருக்கு மாறி டிரம்ஸூடன் முடிப்பது அருமை.

4. இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை

திரைப்படம்: திருவிளையாடல்
பாடியவர்கள்: டி.ஆர்.மகாலிங்கம்
இசை: கே.வி.மகாதேவன்

என்னவொரு தெய்வாதீகமான இசை, குரல்!

இந்தப் படத்தின் பாடல்களை இந்த தலைமுறை கூட ரசிக்கும் படி இசையமைத்த திரு. கே.வி.மகாதேவன் பெரிய இசைஞானியாகத் தானிருக்க வேண்டும். எனக்கு அவரைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. தில்லானா மோகானாம்பாள் கூட இவர் இசையில் உருவானது என நினைக்கிறேன்.

'உயிர் மயக்கம் நாதப் பாட்டினேலே', என்று அவர் பாடும் வரிகளிலும் நமக்கும் மயக்கம் ஏற்படுகிறது.

பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன' என விழிக்குமிடத்தில், திரு. கே.வி.மகாதேவன் இசையும், மகாலிங்கத்தின் தமிழும் அழகாக சங்கமிக்கின்றன.

தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ?
அன்னைத் தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கில்லையோ?
வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா.......
உன் ஊருக்குப் பழி நேர்ந்தால், உனக்கின்றி எனக்கில்லை

என இறைவனிடம் டி.ஆர்.மகாலிங்கம் முறையிடுமிடம் உயிரோட்டத்துடன், அற்புதமாக இருக்கும். என்ன ஒரு பாடல், இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ இப்படி ஒரு பாடலுக்காக?

5. செண்பகமே செண்பகமே

திரைப்படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
பாடியவர்கள்: சுனந்தா, மனோ
இசை: இளையராஜா

ராமராஜனுக்குப் பேர் வாங்கி கொடுத்த படம். ராமராஜனின் எளிமையான பாடி லாங்குவேஜ் எனக்குப் பிடிக்கும். இந்தப் பாடலில் சொல்லுமளவிற்கு பெரிதாக அவர் நடிக்கவில்லை என்றாலும் (அவர் எப்பய்யா நடிச்சார் என நீங்கள் கூறுவது கேட்கிறது), இந்தப் பாடலின் சூழலும், கதைக் களமும், இசையும் பிடித்திருந்தது. தூங்கிக்கொண்டிருந்தாலும் (காதில் விழுந்தால்) எழுந்திருந்து கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. எத்தனை முறை டி.வியில் பார்த்தாலும் சலிக்காத படம். வினுசக்ரவர்த்தியும், செந்தாமரையும் கலக்கியிருப்பார்கள். ஒரே காட்சியில் செந்தாமரை எல்லாரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டிருப்பார். அடிக்கடி நான் உச்சரிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. மனோவிற்கு பேர் வாங்கிக் கொடுத்த பாடல்களில் முதலிடம் இதற்கு.

6. ஆணென்ன பெண்ணென்ன

திரைப்படம்: தர்மதுரை
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா

இளையராஜாவின் இசைக்காகவும், எஸ்.பி.பியின் குரலுக்காகவும், சிறந்த பாடல் வரிகளுக்காகவும் இந்தப் பாடலைப் பிடிக்கும். வாழ்க்கை வேகமாக சுழன்று கொண்டிருக்கும் போது, "Wait Wait நீ என்ன செய்ற' என யோசிக்கத் தூண்டும் பாடலிது. பணம், அதிகாரத்த்தை விட மனித உறவும், பாசமும் மிக முக்கியம் என்பதை அழகாகச் சொல்லிய பாடல். ஆரம்பத்தில் Party Music-ஐ மீறிக் கொண்டு ராகம் போடும் எஸ்.பி.பியின் குரல் என்னே அழகு!

எண்ணம் மட்டும் சேர்ந்திருந்தா இன்றும் என்றும் சோகமில்லை
கன்றை விட்டுத் தாய் பிரிஞ்சு காணும் சுகம் ஏதுமில்லை
ஊருக்கும் காருக்கும் பேருக்கும் இஷ்டப்பட்டு
வாழ்கின்ற வாழ்வுக்கைக்கு என்றைக்கும் அர்த்தமில்லை!

என்ன வரிகள்! என்ன ஒரு அருமையான ராகம்! "எண்ணங்கள் சேர்வது தானே" கடினம் வாழ்வில்!!! அது மட்டும் அமைந்து விட்டால் வாழ்வில் ஏது சிக்கல்.

7. மனதில் ஒரே ஒரு பூ பூத்தது, மலரும் நினைவுகள் நான் சொல்வது

திரைப்படம்: என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
பாடியவர்கள்: சுசீலா
இசை: இளையராஜா

காதலனின் குழந்தை, "நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?" என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாய் அமையும் பாடல். இந்தப் பாடலை ஒரு முறை தான் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. சுகாசினியின் நடிப்பும், பாடலின் மூலமாக நாயகனை கோழை என நாயகி சாடும்போது விஜயகாந்தின் ரியாக்சனும் நன்றாக இருக்கும் (நன்றாக இருந்ததாக நினைவு). நன்றாக எடுத்திருந்தார் மனோபாலா. விஜயகாந்த் நன்றாக செய்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று.

'தேவனின் கோவில்' பாடலுக்கு, சித்ரா என்றால், இந்தப் பாடலுக்கு சுசீலா. Low Pitch-ல் அருமையாக பாடியிருப்பார் சுசீலா. சுசீலா அந்த காலங்களில் பாடியதை விட, இளையராஜாவிற்கு பாடிய பாடல்கள் தான் அருமை. (சிப்பிக்குள் முத்து, இளமை காலங்கள், எங்க ஊர் காவல்காரன், கற்பூர முல்லை, பிரியா உட்பட)

மணி மார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்

என்ற வரிகளை மெதுவாக, உருகிப் பாடியிருப்பார்.

இறுதியில் வரும் புல்லாங்குழல் அருமை. மனது எந்த நிலையில் இருக்கும் போதும் கேட்க முடியக் கூடிய பாடல்களில் இதுவும் ஒன்று.
எப்படித் தான் இளையராஜாவிற்கு இந்த மாதிரியான ராகங்கள் தோன்றுகின்றனவோ?

8. இசையில் தொடங்குதம்மா

திரைப்படம்: ஹே ராம்
பாடியவர்கள்: அஜய் சக்ரவர்த்தி
இசை: இளையராஜா

ராஜாவின் பாடல் என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது இந்த பாடல் தான். இந்தப் படம் வருவதற்கு முன்பாக வந்த டிரைய்லரில் இந்தப் பாடலின் ரிக்கார்டிங் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடல் பதிவு செய்யும் போது கமலஹாசன் ரிக்கார்டிங் தியேட்டரில் உணர்ச்சிவசப்பட்டு தாளம் போடுவார். இதற்காகவே காத்திருந்து டிரெய்லரைப் பாப்பேன். (ராஜ் டிவியில் மட்டும் தான் அப்போது டிரெய்லர்கள் ஒளிபரப்பப்பட்டன). பாடலின் உயிரோட்டத்திற்குக் காரணம் இசையிலும், குரலிலும் இருக்கிறது. ஏன் அஜய் சக்ரவர்த்தி வேறு பாடல்கள் தமிழில் பாடவில்லை என இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் தோன்றும்.

நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்
வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்
உயிர்களே உயிர்களே உலகிலே
இன்பத்தை தேடி தேடி தேகத் தீ வந்ததே

உருகியிருப்பார்.

9. ஒரு கணம் ஒரு யுகமாக தோன்ற வேண்டுமோ

திரைப்படம்: நாடோடி தென்றல்
பாடியவர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

இந்தப் பாடலை நான் பார்த்ததில்லை. சோகத்தின் விளிம்பில் பாடப்பட்டது போல் தெரிந்தாலும், இந்தப் பாடலில் ஏதோ ஓர் மந்திர சக்தி இருக்கிறது. ஜானகியை விட இளையராஜாவின் குரல் மிக அருமையாக இருக்கும். நடுவில் ஐந்து விநாடிகள் தாமதித்து (3:12-3:17) ராஜா பாடும் அந்த வரிகளும் அதைத் தொடர்ந்து வரும் வயலினும் அருமை.

10. ஆசாதி

திரைப்படம்: போஸ் த ஃபார்காட்டன் ஹீரோ
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

ரகுமான் பாடிய மற்றுமொரு சிறந்த பாடல். இதனை பெங்களூர் இசை நிகழ்ச்சியில் ரகுமான் பாடிய விதமே அலாதி. இந்தப் பாடலில், 'ஆசாதி' என குரலை உயர்த்தும் போது, நண்பர்கள் அனைவரும் ஹேய் என ஆரவாரம் செய்த போது, அமைதியாகப் பாடிக் கொண்டிருந்தவர் லேசாக புன்னகையை மட்டும் சிந்திவிட்டு அடுத்த வரிக்குச் சென்று விட்டார். பார்ப்பதற்கே பரவசமாக இருந்தது. ஹிந்தி எனக்குப் புரியாது; ஆனாலும் இந்தப் பாடல் ஓரளவிற்கு முழுவதும் பாடிக் கொண்டிருப்பேன். என்னுடைய Portable MP3 பிளேயரில் எப்போதும் அழிக்காமல் வைத்திருக்கும் பாடல்.

11. வாணும் மண்ணும் ஒட்டிக் கொண்டது

திரைப்படம்: காதல் மன்னன்
பாடியவர்கள்: ஹரிஹரன், சித்ரா
இசை: பரத்வாஜ்

நிறைய பேருக்கு இந்தப் பாடல் பிடிக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடலை எனக்கு நிறையவே பிடிக்கும். சூழ்நிலையால் கட்டுண்ட காதலர்கள் பாடும்படி அமைந்திருக்கும் இந்தப் பாடலுக்கு வைரமுத்துவின் வரிகள் பலம். பரத்வாஜ் திறமையான இசையமைப்பாளர். ஆனால் அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமைவதில்லை. இந்தப் பாடலில் என்னவொரு இசையைத் தருவித்திருப்பார்!. அதுவுமில்லாமல், இந்தப் படத்தில் அஜீத்தும், அந்தப் பெண்ணும் சந்திக்கும் போது பின்னணியில் வரும் வயலின் இசை அருமையோ அருமை. அதற்காகவே இந்தப் படத்தை பார்பேன்.

பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பது இல்லை
உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை

காலம் சொல்லுவதை காதல் கேட்பதில்லை
ஆசை என்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை

ஓர் நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ?

12. பூவே பூச்சூடவா

திரைப்படம்: பூவே பூச்சூடவா
பாடியவர்கள்: சித்ரா
இசை: இளையராஜா

டி.டியில் இந்தப் படத்தை முதன் முதலில் பார்த்ததிலிருந்தே இந்தப் பாடல் மிகவும் பிடித்து விட்டது. பிரிந்து சென்று விட்ட பேத்தியின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பாட்டியினைப் பற்றிய பாடல்.

'அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
....
இந்தக் கண்ணீரில் சோகமில்லை
இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்

அன்பின் ஆழம். சித்ராவின் குரல் பற்றி நான் சொல்லவும் வேண்டுமா?. கல்லூரி சென்ற பின், நான் பதிந்த முதல் கேசட்டின் நான்காவது பாடலாக இடம் பிடித்திருந்தது.

13. இரு பூக்கள் கிளை மேலே - கண்ணீரே கண்ணீரே

திரைப்படம்: உயிரே
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

ரகுமானின் அட்டகாசமான பாடல்களில் இதுவும் ஒன்று. அவருடைய பாடல்கள் என்றாலே இதுவும், வெள்ளைப் பூக்களும் தான் எனக்கு ஞாபகத்திற்கு வரும். தீ போன்ற இசையும், புயல்காற்று போல வரிகளும் சேர்ந்தொலிக்கும் இந்தப் பாடலுக்கு, தீயில் வழிந்த தேன் போல ரகுமானின் குரல். இரண்டாம் சரணத்திற்கு முன்பாக வரும் டிரம்ஸும், பாடலின் பின்னணியில் வரும் கிரிக்கெட் பூச்சியின் சத்தமும் மிகவும் பிடிக்கும்.

கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்.

உன்னோடு நான் கொண்ட நான் பந்தம்
மண்ணோடு நான் கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்

14. பூங்குருவி பாடடி சுபராகம் தேடித் தான்

திரைப்படம்: சுந்தர காண்டம்
பாடியவர்கள்: மனோ
இசை: பாக்யராஜ்

இங்கே குறிப்பிடப்பட்ட பாடல்களில், என்னிடம் இல்லாத ஒரே பாடல் இது தான். ஆதலால், இந்தப் படம் எப்போது ஒளிபரப்பப்பட்டாலும் தவறாது பார்த்து விடுவேன்; இந்தப் பாடல், படத்தில் இரண்டு முறை இடம் பெறும். தந்தையின் மரணத்தினால் வாடும் நாயகியை ஆறுதல் படுத்துவதற்காக பாக்யராஜீம், நாயகி மரணத்தின் வாயிலில் இருப்பதை அறிந்து வருத்தப்படும் பாக்யராஜீற்கு அதே பாடலை திரும்ப நாயகி பாடிக்காட்டுவதும் உணர்வு பூர்வமாக இருக்கும். அடிக்கடி உச்சரிக்கும் பாடல்களில் ஒன்று.

பூப்பதொரு காலம்
காய்ப்பதொரு காலம்
இலையுதிர்காலமும் ஓர் காலம்
என்றும் இல்லையே கார் காலம்

காலம் ஓர் ஓலை
கொண்டு வரும் நாளை
நடப்பது காலத்தின் ராஜாங்கம்
மீறிட யாருக்கு அதிகாரம்

பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை. யாராக இருந்தாலும், அவருக்கு ஓர் சபாஷ். அதை இனிய இசையின் மூலம் வெளிப்படுத்திய பாக்யராஜிற்கும் தான். இந்தப் பாடல் யாரிடமாவது இருந்தால் அனுப்பவும். சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பரிடம் இருந்து கிடைத்தது. ஆனால், ஒரு பக்கம் மட்டும் தான் பாடல் ஒலிக்கிறது.

15. அஞ்சலி

திரைப்படம்: அஞ்சலி
பாடியவர்கள்: குழுவினர்
இசை: இளையராஜா

எனக்கு ஞாபகம் தெரிந்து, பாடல்களின் மீது ஆர்வம் ஏற்பட்டது இந்தப் படத்திலிருந்து தான். சிறுவர்களை மிக சாமர்த்தியமாகப் பயன்படுத்தி, பாட வைத்திருப்பர் ராஜாவும், ரத்னமும். அஞ்சலி இல்லாமல், மணிரத்னத்தின் இயக்கம் முழுமை பெற்றிருக்காது என்பது என் கணிப்பு. இளையராஜாவின் 500 வது படம் எனவும் நினைவு.

16. கடவுள் உள்ளமே கருணை இல்லமே

திரைப்படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
பாடியவர்கள்: லதா ரஜினிகாந்த், குழுவினர்
இசை: இளையராஜா

நாம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என நம்மை ஓர் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிவிடும் பாடலிது. எப்போது கேட்டாலும், பார்த்தாலும் நம்மை கல்லாக்கி விடும் பாடல். படமாக்கிய விதமும் அருமையாக இருக்கும். என்னுடைய முதல் பத்து பாடல்களில் இந்தப் பாடலுக்கு கண்டிப்பாக இடம் உண்டு.

கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை.

ஊருக்கொரு வானம் இல்லையே
இறைவா உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதி இல்லையே
அது போல் உயிர் பிறப்பில்

உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உனக்கே நன்றி சொல்லுவோம்

ஜீவனுள்ள ராகம். எவ்வளவு நிதர்சமான உண்மை.

நாமெல்லாம் எத்தனை முறை உணவருந்துவதற்கு முன்பாக இறைவனுக்கு நன்றி சொல்லியிருப்போம்? அதாவது... கிடைத்த உணவின் அருமை தெரிந்து, உண்டிருப்போம்?

17. கேட்கலியோ கேட்கலியோ

திரைப்படம்: கஸ்தூரிமான்
பாடியவர்கள்: திப்பு, மஞ்சரி
இசை: இளையராஜா

இதைப் பற்றி ஏற்கனவே என்னுடைய இன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்தப் பாடலுக்கு அழகே ஆரம்பத்தில் வரும் இசையும், குழுவினரின் தெளிவான குரலும் தான். சமீபத்தில் வந்த பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் இது. என்னை பல முறை வார இறுதி நாட்களில் சன் மியுசிக்கின் மூலமாக அதிகாலையில் (9 மணியளவில்) எழுப்பிய பாடல். கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தப் பாடல் போல, வேறெந்த பாடலின் ராகமும், பாடிய விதமும் என்னைக் கவரவில்லை. சமீபத்தில் இப்படி ஒரு கோரஸைக் கேட்டதில்லை.

18. வெள்ளை பூக்கள்

திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

அதிகமாக பேசப்படாத, ஆனால் தெய்வாம்சமான பாடல் (குரல் உட்பட). சமத்துவத்தையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் பாடல். படத்தில் பாடல் ஒலிக்கும் இடம் அருமை. ஆரம்பத்தில் வரும் கிடார் இசை இனிமை. ரகுமானின் குரல் Fabulous! அவர் ஓர் ஓர் ஜீனியஸ் எனத் பற்றித் தெரிந்து கொள்ள இந்த ஒரு பாடல் போதுமானது. இதே படத்தில் (படத்தில் மட்டும்) வரும் 'சட்டென நனைந்தது' என்ற குறும்பாடலை மிகவும் பிடிக்கும்.

19. சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை

திரைப்படம்: ஜெயராம்
பாடியவர்கள்: சுமங்கலி
இசை: அனூப் ரூபன்ஸ்

இந்தப் பாடல் ஏன் பிடித்ததென்று தெரியவில்லை. அழகான இசையும், பாடகியின் குரலும் காரணமாக இருக்கலாம். சுமங்கலி என்ன அருமையாக பாடியிருக்கிறார்? சமீபத்தில் இவர் சில பாடல்கள் தமிழிலும் பாடியிருக்கிறார். பாடலின் இறுதியில் வரும் ஹம்மிங் அழகாக இருக்கும் (4:10 - 4:28)

20. பூவே வாய் பேசும் போது

திரைப்படம்: 12B
பாடியவர்கள்: மஹாலக்ஷ்மி அய்யர், ஹரீஸ் ராகவேந்திரா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

இந்தப் படத்தில் பாதித்த ஒரே கதாபாத்திரம் சிம்ரனது மட்டும் தான். ஆரம்பத்தில், மருத்துவமனையில் உறவினர் அல்லது காதலரின் இறப்பினால் அழுது கொண்டே தோழியின் தோளில் சாயும் சிம்ரன், படம் முடியும் தருவாயிலும் அதே போல ஷாமை இழந்து தோழியினை நோக்கி அழுது கொண்டே வருவது டச்சிங்காக இருக்கும். படம் நன்றாக ஓடாவிடிலும், இவரின் கதாபாத்திரத்திற்காகவும் (பார், ஆக்ஸிடெண்ட்க்கு முன்பாக, மருத்துவமனையில் சிம்ரன் பேசுவது), இந்தப் பாடலுக்காகவும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை மட்டும் முப்பது முறையாவது பார்த்திருப்பேன். விசிலுடன், பாடலின் ஆரம்பமே அட்டகாசம். மஹாலக்ஷ்மியின் குரல் மிகப் பொருத்தம்.

21. உன் பேரைச் சொன்னாலே

திரைப்படம்: டும் டும் டும்
பாடியவர்கள்: சாதனா சர்கம், உன்னிகிருஷ்ணன்
இசை: கார்த்திக் ராஜா

கார்த்திக் ராஜா, ஓர் சிறந்த இசையமைப்பாளர். ஆனால் ஏனோ அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டன. அவரின் ஆல்பம் படத்திலும் அனைத்துப் பாடல்களும் சிறப்பாக இருக்கும். இந்தப் பாடலைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியமிருக்காது. உங்களில் பெரும்பாலோனோர்க்கு பிடித்த பாடலாகவும் இருக்கும் என எண்ணுகிறேன். என்னுடைய இருபது பாடல்கள் பட்டியலில் கண்டிப்பாக இந்தப் பாடலுக்கு இடமுண்டு. சாதனா சர்கத்தின் குரல் அருமை. கடைசியில் இழுக்கும் இழுவை சிறப்பாக இருக்கும்.

22. வெள்ளி மலரே
திரைப்படம்: ஜோடி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், மஹாலக்ஷ்மி அய்யர்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, ஓரளவு சுமாரான பாடலைக் கேட்டாலும் ரசித்துக் கேட்போம். ஏனென்றால், பேருந்தில் வேறெந்த வேலையும் இருக்காது. கவனம் முழுவதும் பாடலின் மீது இருக்கும். சில நேரங்களில் நல்ல பாடல்களை ஒலிபரப்ப ஆரம்பித்து விடுவார்கள்; அய்யோ வீடு வரப்போகிறதே ஊர் இன்னும் சிறிது தூரம் இருக்கக் கூடாதா இன்னும் சில பாடல்களைக் கேட்டு விட்டுப் போகலாம் எனத் தோன்றும். அலுவலகத்தில் சிறந்த பாடலைக் கேட்கும் போது கூட, கவனிப்பு வேலையின் மீது இருக்கும். நான் கல்லூரியில் படித்த(?) நாட்களில், ஒரு குறிப்பிட்ட பேருந்தில் இந்தப் படத்தின் பாடல்களை ஒலிபரப்புவார்கள். இந்தப் பாடலைக் கேட்கவேண்டும் என்பதற்காகவே அந்தப் பேருந்திற்காக காத்திருந்து ஏறுவேன். முழுவதுமாக கவர்ந்த பாடல். ஆனால் இதன் ஆரம்பத்தில் வரும் 'தாகாட தாகாட' இனிமையாக இருக்கும். அது முடிந்ததும் வரும் இசையும், மஹாலக்ஷ்மியின் குரலும் சிறப்பு.

23. ஒரு பொன் மானை நான் காண

திரைப்படம்: மைதிலி என்னை காதலி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர் படம் ஒன்று கூட நான் பார்த்ததில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில காட்சிகள் பார்த்ததுண்டு. ஆனால் தமிழில் இசைப் புரட்சி செய்தவர் என்று கூட இவரைக் குறிப்பிடலாம். இவரின் (அந்தக் காலப்) பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது. இசையில் என்ன ஒரு திறமை இவருக்கு?. இவரின் பல பாடல்கள் பிடித்திருந்தாலும், இந்தப் பாடலை முக்கியமாகப் பிடிக்கக் காரணம்,

தடாகத்தில் மீன் ரெண்டு
காமத்தில் தடுமாறி
தாமரைப் பூ மீது விழுந்தனவோ
இது கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ

என்று சரணத்தில் வரும் ராகமும், எஸ்.பி.பின் குரலும். ஆனால், மைதில் என்னை காதிலி, திரைப்படத்திற்குப் பின்பாக வந்த இவரது படங்களில் பாடல்கள், மிகவும் கவரவில்லை ஏனோ தெரியவில்லை.

24. மெதுவா மெதுவா இந்த காதல் பாட்டு

திரைப்படம்: அண்ணா நகர் முதல் தெரு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
இசை: எஸ்.சந்திரபோஸ்

பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை பாடலின் சூழலைப் பற்றி. மற்றுமொரு காதல் பாடல் தான். ஆனால் எப்போது கேட்டாலும், கேட்பவரை மயக்கிவிடும் பாடல். அசத்தும் இசை, குரல்.

25. சொல்லத் தான் நினைக்கிறேன்

திரைப்படம்: காதல் சுகமானது
பாடியவர்கள்: சித்ரா
இசை: பாலசேகரன்

சித்ராவும், இசையும், பாடல் வரிகளும் தான் இந்தப் பாடல் பிடித்துப் போனதற்குக் காரணம். படமாக்கிய விதமும் நன்றாக இருக்கும் (சில இடங்களில் சிநேகாவின் நடனத்தைத் தவிர்த்துப் பார்த்தால்). முதல் பத்து இடங்களுக்குள் இந்தப் பாடல் கண்டிப்பாக உண்டு.

....
தேகம் தேயும் நிலவானது
காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட
கற்சிலை போல நெஞ்சில் அசையாதது'

ராகமும், சித்ராவின் குரலும் அப்பப்பா! (அருமை, இனிமை, சிறப்பு, அழகு அதிகமாக உபயோகிப்படுத்தியாகி விட்டது. வேறு வார்த்தைகள் எனக்குத் தெரியவில்லை. என்ன செய்வது?)

26. வேறென்ன வேறென்ன வேண்டும்

திரைப்படம்: மின்னலே
பாடியவர்கள்: ஹரிணி, உன்னிகிருஷ்ணன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

வசீகரா பாடலை விட, இந்தப் பாடல் எனக்குப் பிடிக்கக் காரணம் ஹரிணியின் குரல், அசத்தும் பீட்.

27. மன்றம் வந்த தென்றலுக்கு

திரைப்படம்: மெளனராகம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா

இந்தப் பாடலைப் பற்றி நான் எதுவும் கூற வேண்டியதில்லை. ராஜாவிற்கு ஜே!

28. வெட்டி வேரு வாசம் விடலை புள்ள நேசம்

திரைப்படம்: முதல் மரியாதை
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
இசை: இளையராஜா

உயிரை உருக்கும் இசை. என்ன ஒரு நடிப்பு? நடிகர் திலகத்தின் நடிப்பு வாழ்க்கையில் முக்கியமான திரைப்படம். உயிரோட்டமான கதை. இந்தப் படத்தின் கதையையும், இசையையும், நடிகர்களின் நடிப்பையும், பாடல் வரிகளைப் பற்றி பேச வேண்டுமானால் 100 பதிவுகள் வேண்டும். இது போன்ற அருமையான படங்களைக் கொடுத்த பாரதிராஜா, இப்போது திணருவதைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தது. பூங்காற்று ஆகட்டும், ராசாவே உன்னை நம்பி, அந்த நிலாவத்தான், ஏறாத மலையேற ஆகட்டும், ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதத்தில் சிறந்தது.

29. வந்தே மாதரம் - Revival

திரைப்படம்: வந்தே மாதரம் (ஆல்பம்)
பாடியவர்கள்: சுஜாதா, கல்யாணி மேனன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

சாதாரணமாக இந்திய வானொலி நிலையங்களில் ஒலித்து வந்த வந்தே மாதரம் பாடலை, திரும்ப அருமையாக இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானின் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சுஜாதாவின் குரல், பாடல் முழுவதும் தவழ்ந்து தேன் போல் பாய்கிறது. குழுவினருடன், கல்யாணி மேனன் பாடலை ஆரம்பிக்கும் வரிகளே உணர்ச்சிவசப்பட வைக்கின்றன. மெதுவாக செல்லும் பாடல் (2:03 முடிய), ஒரு அழகான பியானோ இசைக்குப் பிறகு (2:22) சுருதியை உயர்த்தி மீண்டும் ஆரம்பிப்பது அழகு! ஏதோ ஓரு சுதந்திர தினத்திற்கு (திருச்சியோ, மதுரை வானொலி நிலையமோ ஒலி பரப்பிய) இந்தப் பாடலை ஒரு வீட்டின் வாசலிலேயே நின்று பாடலைக் கேட்டது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

சுஜாதா எனக்குப் பிடித்த பாடகிகளில் ஒருவர். ஏனோ இப்போது பாடுவதற்கு அவருக்கு, ஏ.ஆர்.ரகுமான் வாய்ப்பு கொடுப்பதில்லை. ஹரிணியும், கண்களால் கைது செய், நியூ படங்களுக்குப் பின் எந்தப் (ரகுமான்) படத்திலும் பாடவில்லை.

30. மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்

திரைப்படம்: அழகு நிலா (1962)
பாடியவர்கள்: டாக்டர். சீர்காழி கோவிந்தராஜன்
இசை: கே.வி.மகாதேவன்

பிடித்தமான மற்றுமொரு தத்துவப் பாடல். ஆனால் இம்முறை எனக்குப் பிடித்த பாடகர் டாக்டர். சீர்காழி அவர்களின் குரலில். சீர்காழி அவர்களின் குரலில் தமிழ் வார்த்தைகள் ஒலிப்பதைக் கேட்தற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். உயிரோட்டமில்லாத பாடல்களைக் கூட, டாக்டர். சீர்காழி அவர்களின் குரலில் கேட்டால் பிடித்துப் போய் விடும். இவரின் விநாயகர் துதிப் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.

மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகைத் தெரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை
.....
மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை.

நான் "இப்படியிருந்திருந்தால்" என ஆசைப்படும் விசயங்களில் ஒன்று. ஏ.ஆர். ரகுமானின் இசையில் டாக்டர். சீர்காழி கோவிந்தராஜன் பாடுவது. எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்?

31. விழிகளின் அருகினில் வானம்

திரைப்படம்: அழகிய தீயே
பாடியவர்கள்: ரமேஷ் விநாயகம்
இசை: ரமேஷ் விநாயகம்

இந்தப் பாடலை பிடிக்கவில்லை எனக் கூறுபவர்கள் யாராவது இருப்பார்களா?

அலை கடலாய் இருந்த மனம்
துளிதுளியாய் சிதறியதே
ஐம்புலனும் என் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே

அருமையான் ராகம். ரமேஷ் விநாயகத்திற்கு நல்ல வாய்ப்புகள் அமைந்து, இன்னும் பல படங்கள் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். கடைசியாய் 'தொட்டி ஜெயாவில்' 'யாரிடமும்' என்றோர் அருமையான பாடலைப் (ஹரிணியுடன் இணைந்து) பாடினார். இப்போது எந்த படத்தில் பணிபுரிகிறார் எனத் தெரியவில்லை.

32. அம்மா என்றழைக்காத

திரைப்படம்: மன்னன்
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: இளையராஜா

இந்தப் பாடலைப் பற்றி சொல்ல எந்த வார்த்தையும் இல்லை. அது சிறப்பாக இருந்தது. இது சிறப்பாக இருந்தது எனக் கூற முடியாது. வேண்டுமானால் 'இசைத் தமிழ்' போல இது ஓர் தெய்வாதீசயமான பாடல் எனக் கூறலாம். ஜேசுதாஸ் விட யாராவது இதை சிறப்பாக பாடியிருக்க முடியுமா? சந்தேகம் தான்.

படத்தின் கிளைமேக்ஸிற்கு முன்பாகவும், ரஜினி பண்டரி பாயை சக்கர நாற்காலியில் வைத்து சுற்றும் போதும் மீண்டும் இந்த பாடல் ஒலிக்கப் பெறும். மிக அருமையாக இருக்கும்.

33. வா வா கண்ணா வா

திரைப்படம்: வேலைக்காரன்
பாடியவர்கள்: சித்ரா, மனோ
இசை: இளையராஜா

இந்தப் பாடல் எனக்கென்னவோ மிகவும் பிடித்து விட்டது. காரணம் இசையா அல்லது சித்ராவா என எனக்குத் தெரியவில்லை. எந்த மனநிலையில் இருந்தாலும், இந்தப் பாடலை கேட்க முடியும்.

34. பழமுதிர்சோலை

திரைப்படம்: வருஷம் 16
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்
இசை: இளையராஜா

இளமை துள்ளும் பாடல் - வித்தியாசமாக ஜேசுதாஸின் குரலில், ராஜாவின் இசையில். எந்த மனநிலையில் இருந்தாலும், இந்தப் பாடலை கேட்க முடியும்.

35. நினைத்து நினைத்துப் பார்த்தேன்

திரைப்படம்: 7G ரெயின்போ காலனி
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல்
இசை: யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜாவிற்குள் இப்படி ஒரு மென்மையான உணர்வா என கேட்க வைத்த பாடல். படம் வருவதற்கு முன்பாகவே நூறு தடவைக்குப மேல் கேட்ட பாடல், படம் பார்த்த பின் இந்தப் பாடலைத் தவிர மூன்று நாட்களுக்கு வேறேந்த பாடலையும் கேட்கத் தோன்றவில்லை. ஆரம்பத்தில் வரும் பியானோ இசையும், நடுவில் வரும் வயலின் இசையும், ஸ்ரேயாவின் கொஞ்சும் தமிழும் அழகு. நா.முத்துக்குமாரின் வரிகளைப் பற்றி நான் கூறத் தேவையில்லை. நான் வயதானவர் என்று நினைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன்பு தான் பார்த்தேன். வயது அவருக்கு முப்பது கூட இருக்கும் எனத் தோன்றவில்லை.

36. உன்னை ஒன்று கேட்பேன்

திரைப்படம்: புதிய பறவை
பாடியவர்கள்: சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

சுசிலாவின் குரலா? அல்லது சரோஜாதேவியின் அழகா? எது இந்தப் பாடலில் சிறப்பு என சொல்லமுடியாத அளவிற்கு இனிமையான பாடல். இந்த இரண்டையும் விட நான் இந்தப் பாடலில் விரும்பிப் பார்ப்பது சிவாஜி கணேசன். மனிதர் சாக்ஸ போனை உண்மையான கலைஞன் போலவே வாசித்திருப்பார் (2:20 - 2:32). வாசித்து முடிந்ததும், அந்த வாத்தியக் கருவியை கீழே வைத்து விட்டு, ஸ்டைலாக மேடையை நோக்கி கையை சொடுக்கிக் கொண்டே நடப்பார். அதுவுமில்லாமல் முதல் சரணத்திற்கு முன்பாக பியானோவை சொடுக்கிக்கொண்டே வாசிப்பார். எனக்கு சிரிப்பு வந்து விடும். அருமையாக இருக்கும்! இரவில் 11 மணிக்கு மேல், வாரம் ஒரு முறையாவது சன் மியுசிக்கில் இந்தப் பாடல் இடம் பெற்று விடும்.

37. நிலா காய்கிறது... நிறம் தேய்கிறது

திரைப்படம்: இந்திரா
பாடியவர்கள்: ஹரிணி
இசை: ஏ.ஆர்.ரகுமான்

முழுமையான மெல்லிசை. எவ்விதமான Beat-ம் இல்லாமல், Loop-ம் இல்லாமல், வந்த இதமான மெல்லிசைப் பாடல். ஹரிணியின் முதல் பாடல் என்று கூட நினைக்கிறேன். சிறு குழந்தை போலவே பாடியிருப்பார். ஆரம்பத்தில் வரும் ஹரிணியின் ஹம்மிங் பிரமாதமாக இருக்கும்.

இந்த பூமியே பூவனம்
உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம்
உங்கள் தேவையைக் கேளுங்கள்!

அருமை இல்லையா?

38.. மேகம் கருக்கையிலே

திரைப்படம்: வைதேகி காத்திருந்தாள்
பாடியவர்கள்: இளையராஜா
இசை: இளையராஜா

எனக்குப் பிடித்தமான பாடகர் ஜெயச்சந்திரன் பாடிய சிறந்த இரண்டு பாடல்கள் இந்தப் படத்தில் இருக்கும் போது, இந்தப் பாடலை தேர்ந்தெடுக்கக் காரணம், இளையராஜாவின் குரலும், ஜனரஞ்சகமான இசையும் தான். பல்லவி முடிந்ததும் வரும் புல்லாங்குழல், இனிமையாக இருக்கும்.

39. காளிதாசன் கண்ணதாசன்

திரைப்படம்: சூரக்கோட்டை சிங்கக் குட்டி
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், சுசீலா
இசை: இளையராஜா

ஆரம்பமே இளையராஜாவின் (இது இளையராஜாவா அல்லது ஜெயச்சந்திரன் தானா எனத் தெரியவில்லை) அற்புதமான ஹம்மிங்கில் பாடல் துவங்கும். இளையராஜாவைத் தவிர அப்படி ஹை-பிட்சில் வேறு யாரும் பாட முடியாது என்ற நம்பிக்கையில் அது இளையராஜா என சொல்கிறேன். தவறாக இருந்தால், தெரிந்தவர்கள் சொல்லவும். அந்த ஹம்மிங்கிற்காகவே இந்தப் பாடலைக் கேட்பேன். ஜெயச்சந்திரன் தமிழில் பாடியது சில பாடல்களே ஆனாலும், பல சிறந்த பாடல்களைப் பாடியுள்ளார். அதில் இதுவும் ஒன்று.

40. ஒரு தெய்வம் தந்த பூவே

திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்
பாடியவர்கள்: சின்மயி, ஜெயச்சந்திரன்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

பட்டியலை முடிக்க, இந்தப் பாடலை விட வேறொரு சிறந்த பாடல் இருக்க முடியாது. ஆனந்த அவஸ்தையாக, தன் குழந்தையை பற்றி தாய் வர்ணிக்கும்படியாக வரும் வைரமுத்துவின் வரிகள், இந்தப் பாடலுக்குச் சிறப்பு. வேறெந்த பாடலும், இது போல் அமைந்ததாக நினைவில்லை. ரகுமான் இசை, இந்தப் பாடலைக் கேட்கும் போது, தெய்வத்தின் பாதங்களை தொட்டு விட்டு வந்தது போல் ஓர் உணர்வை தருகிறது. காந்தக் குரல் சின்மயினுடையது. சுனாமி பேரழிவிற்கு சில மாதங்கள் பிறகு, காரைக்காலில், இந்தப் பாடலை ஏ.ஆர்.ரகுமானின் குழுவினர் இசைத்த போது, நிசப்தம். அவ்விடத்திற்கும், அங்கிருப்பவர்களின் உணர்விற்கும் இப்பாடலின் இசை பொருத்தமாக அமைந்தது.

ரகுமானின் பாடல்கள் எட்டு மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தது சிறிது வருத்தத்தை அளிக்கிறது. அவரின் பல முக்கியமான பாடல்களில் பட்டியலில் இடம்பெறாததற்குக் காரணம், அவரின் பல படங்களில், பல பாடல்கள் பட்டியலில் இடம் பிடித்ததே. (உ.ம். உயிரே. வேறு வழியில்லாமல், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால் பாடல்களை இந்தப் பட்டியலில் சேர்த்து விட்டேன். அந்தப் பாடல்கள் இல்லாமல், நிச்சயம் என்னுடைய எந்தப் பட்டியலும் முழுமை பெறாது). ரகுமானின் இசைக்கச்சேரி, ஏப்ரல் 15-ம் தேதி, மாதத்தில் மிச்சிகனில் (Eastern Michigan University) நடைபெறப்போவதாகக் கேள்வி பட்டேன். முடிந்தால் சென்று வாருங்கள்!

பல ஆண்டுகளாக, தமிழகத்திலிருந்து பல சிறந்த இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளனர். கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என வரிசையாக சிறந்த இசைஞானிகளை தமிழகம் கொடுத்திருப்பது. இந்த வரிசை இப்படியே நின்று விடாமல், யுவன், கார்த்திக், ஹாரிஸ், வித்யாசாகர், விஜய் ஆண்டனி, பரத்வாஜ் என நீண்டு கொண்டே செல்கிறது. இந்தியாவிற்கே, தமிழகம் தான் இசையில் வழிகாட்டியாக இருப்பது, பெருமைப்பட வைக்கிறது. சென்னையை, நாம் தாராளமாக 'இந்தியாவின் இசைத் தலைநகர்' என அழைக்கலாம்.

பல சிறந்த பாடல்களை இடமின்மை காரணமாக இங்கே கொடுக்க முடியவில்லை. உங்களுக்கு இந்தத் தொகுப்பு பிடித்திருந்தால் நட்சத்திர வாரம் முடிந்ததும், அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்.

29 கருத்துகள் :

குமரன் (Kumaran) சொன்னது…

ஆஹா. படிச்சு முடிக்கவே இரண்டு வாரம் ஆகும் போல இருக்கே. :-) மெதுவா படிச்சுட்டுப் பின்னூட்டம் போடறேன். எனக்குப் பிடிச்ச பாடல்களும் பட்டியல்ல இருக்கற மாதிரி தோணுது. :-)

ஸ்ருசல் சொன்னது…

குமரன்,

சொன்னேனே! எனது பதிவுகளிலேயே அதிகம் சிரமப்பட்டது என. பாடல்களைத் தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமல்ல, அவற்றை எழுத்து வடிவில் இடுவதற்கும் தான். ஒரு வாரம் ஆயிற்று.

சம்மட்டி சொன்னது…

ஸ்ருசல்,
கலக்கிட்டிங்க, வெகு நேர்த்தியாக எல்லா பாடல்களையும் சுவையோடு விளக்கியிருக்கிறீர்கள், படிக்கும் பொ௯௯ழுதே பாடல் காதில் விழுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அத்தனையும் முத்தான சத்தான பாடல்கள். பாராட்டுகள்

- சம்மட்டி

ஸ்ருசல் சொன்னது…

சம்மட்டி,

மிக்க நன்றி.

தமிழ் தாசன் சொன்னது…

உங்கள் பட்டியலின் முதல் பாடல் பார்த்தவுடனே முடிவு செய்து விட்டேன்......

பாடல்களும், அதை விட விளக்கங்களும் மிக அருமை.

நான் எடுத்த முடிவு....கண்டிப்பாக பின்னூட்டமிடுவதென்று...

மணியன் சொன்னது…

ஒரு இசை database ஏ உங்களிடம் இருக்கும் போலிருக்கே! பெரும்பாலான பாடுக்கள் நான் விரும்புவதும்தான்.உங்கள் மற்ற தேர்வுகளையும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். மெதுவாகப் பதியுங்கள்.

ஸ்ருசல் சொன்னது…

தமிழ்தாசன்,

>>>
பாடல்களும், அதை விட விளக்கங்களும் மிக அருமை.
<<<

மிக்க நன்றி.


மணியன்,

நன்றி.

>>>>மெதுவாகப் பதியுங்கள்<<<

நிச்சயமாக பதிகிறேன்

G.Ragavan சொன்னது…

அப்பாடியோவ்! நாப்பது பாட்டுகள். ம்ம்ம்...பெரும்பாலான பாட்டுகள் எனக்கும் பிடித்த பாட்டுகள். நானும் பாடல்களுக்கென்று ஒரு வலைப்பூ தொடங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது...அதை மேலும் ஊக்குவிக்கும் விதமாக வந்த பதிவு.

ஜெயச்சந்திரன் தமிழில் நிறையப் பாடியிருக்கிறார். இளையராஜாவின் வருகைக்குப் பிறகே அவருடைய பாடல்கள் குறையத் தொடங்கின. மிகவும் நல்ல பாடகர். இளையராஜா இசையில் அவர் பாடியுள்ள கலையோ சிலையோ பொன்மான் நிலையோ பாடலைக் கேட்டுப் பாருங்கள்...ஆகா!

ஸ்ருசல் சொன்னது…

ராகவன், நிச்சயமாக கேட்டு விட்டு சொல்கிறேன்.

-----------------------

பதிவில் ஒரு சிறிய திருத்தம்.

'செண்பகமே செண்பகமே', பாடியது. சுனந்தா, மனோ என்றிருக்க வேண்டும். சித்ரா என பதிவாகிவிட்டது.

சிவா சொன்னது…

ஸ்ருடல்! யப்பாடி! ஒரு வழியா படிச்சி முடிச்சிட்டேன் ( 80% உங்க விளக்கத்தையும் படித்து மகிழ்ந்தேன். கேக்காத சில பாடல்களை விட்டு விட்டேன்). இப்படி மொத்தமா பட்டியல் இட்டா நானெல்லாம் (கீதம் ப்ளாக்) எங்கே போறது :-)).

நானும் ரொம்ப விரும்பி கேட்ட பாட்டு 'வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே' (காதல் மன்னன்). ரொம்ப நல்ல பாடல். பழைய பாடல்களையும் தொட்டிருக்கிறீர்கள். பட்டியலில் நான் 'ஓடும் மேகங்களே' (ஆயிரத்தில் ஒருவன்) எதிர் பார்த்தேன் :-)). உங்களுக்கு புடிக்குமா?

உங்கள் தொகுப்பு அருமை.

சிவா சொன்னது…

ஹலோ ராகவன்! //** இளையராஜாவின் வருகைக்குப் பிறகே அவருடைய பாடல்கள் குறையத் தொடங்கின. **// என்ன இது?..விட்டா ராஜா தான் ஜெயசந்திரனை ஓய்த்தார்னு சொல்லுவீங்க போல..இப்படி எத்தனை பேரு கெளம்பி இருக்கீங்க? :-))

ஸ்ருசல் சொன்னது…

சிவா,

இன்னும் நிறைய பாடல், சேர்க்க வேண்டியதிருக்கிறது. ஓடும் மேகங்கள் அவ்வளவாகக் கேட்டதில்லை. ஆனால் இன்னும் மூன்று பழைய பாடல்கள் சேர்க்க முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.

அடுத்தடுத்து வரும் பதிவுகளில் சரி செய்து விடலாம் ;)

'கீதம் ப்ளாக்'-ன், அணுகுமுறையே வேறு. ஆதலால், தடாகம் எவ்விதத்திலும் போட்டியாக அமையமுடியாது.

நாங்களெல்லாம், ஒரு நாள் மட்டும் மின்னும் நட்சத்திரங்கள். நீங்கள் எல்லாம் நிலா மாதிரி. எப்போதும் வானில் மின்னுபவர்கள்.

G.Ragavan சொன்னது…

// ஹலோ ராகவன்! //** இளையராஜாவின் வருகைக்குப் பிறகே அவருடைய பாடல்கள் குறையத் தொடங்கின. **// என்ன இது?..விட்டா ராஜா தான் ஜெயசந்திரனை ஓய்த்தார்னு சொல்லுவீங்க போல..இப்படி எத்தனை பேரு கெளம்பி இருக்கீங்க? :-)) //

இதுக்கு எத்தன பேர் வேணும் சிவா. நான் ஒருத்தனே போதும். இது உங்களுக்கும் தெரியும்.

அப்பொழுது எல்லா இசையமைப்பாளர்களிடம் நிறைய பாடிக் கொண்டிருந்த ஜெயச்சந்திரனும் வாணி ஜெயராமும் இளையராஜா இசையில் குறைவாகவே பாடியிருக்கிறார்கள். விஸ்வநாதன் பெரிய இசையமைப்பாளராக இருந்த பொழுது இவர்களை அறிமுகப் படுத்தி நிறைய பாட்டுக் கொடுத்தார். ஆனால் 80களில் இளையராஜாவின் அரசாங்கம் நிறுவப்பட்ட பிறகு இவர்கள் பாடியது குறைவு. மற்ற இசையமைப்பாளர்களும் இளையராஜா பயன்படுத்திய பாடகர்களையே பயன்படுத்தினர். அவ்வளவுதான் நடந்தது. ஆனால் இளையராஜா இசையில் இவர்கள் இருவரும் பாடிய பாடல்கள் அனைத்துமே சிறப்பானவை.

ஸ்ருசல் சொன்னது…

Hello Ponraj Nanba,

Sorry it was a typo. Typical SW engineer problem. :) yep. copy, paste.

It should have been "Mannodu Mazhai konda sontham"

BTW, thotti jaya -> I do like "Yaridamum" (esp for Harini & Ramesh Vinayagam) & "Uyire". I'd mentioned the same in one of my postings before 4 months. Please refer it. I considered those 2 songs also while making this list. But It could not get thru' my criteria. But it will definitely -> in my next 40.

Sorry for typing in english. I don't have tamil software installed in this computer.

மதுமிதா சொன்னது…

ஸ்ருசல் வாங்க
நட்சத்திரமா மின்ன வாழ்த்துகள்

நம்ம ஊர்ப்பக்கம் போலிருக்கு
நல்லா இருங்க

3.பூங்காற்றிலே
12.பூவே பூச்சூடவா
15.அஞ்சலி
16.கடவுள் உள்ளமே
..............
எனக்கும் பிடிச்ச பாட்டுங்க

24.மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டுன்னு இருக்குமோ???

விழிகளின் அருகினில் வானம்,
ஒரு தெய்வம் தந்த பூவே

ரெண்டு பாட்டும் சொன்னதால ரொம்பவும் சந்தோஷம்.

Sundar Padmanaban சொன்னது…

ஸ்ருசல்,

வித்தியாசமான விருப்பப் பாடல்கள். கலந்துகட்டி அமர்க்களமாக இருக்கிறது.

நன்றி.

Sundar Padmanaban சொன்னது…

//ஜெயச்சந்திரனும் வாணி ஜெயராமும் இளையராஜா இசையில் குறைவாகவே பாடியிருக்கிறார்கள்//

ராகவன், இதே போல அட்டகாசமாக இப்போது திரையிசையில் கலக்கிக் கொண்டிருக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் SPB அவர்களுக்கு வாய்ப்பே கொடுப்பதில்லை என்ற மன வருத்தம் எனக்கு நிறையவே உண்டு. ARR போலவும் இல்லாமல் இசைஞானி போலவும் இல்லாமல், தனிப் பாணியை அமைத்துக்கொண்டிருக்கும் ஹா.ஜெ.யின் இசை எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனாலும் பாலுவை மிகவும் குறைவாகப் பயன்படுத்துவது எனக்குக் குறையே. :(

மொததமே ரெண்டோ மூணோ பாடல்கள்தான் இதுவரை இவரின் இசையில் பாலு பாடியிருக்கிறார்!!!! சரிசரி இழையை திசைதிருப்பாமல் பேசுவோம்.

ஸ்ருசல் சொன்னது…

மதுமிதா,

நன்றி.

மன்னிக்கவும், நிறைய எழுத்துப் பிழைகள் இருக்கின்றன இந்த இடுகையில். அளவு மிகுதியானதால், முழுமையாகச் சரி பார்க்க இயலாமல் போய்விட்டது.

நீங்கள் சொல்வது சரி.

மெதுவா மெதுவா ஒரு காதல் பட்டு என்று தான் இருக்க வேண்டும்.

ஸ்ருசல் சொன்னது…

சுந்தர்,

மிகவும் நன்றி.

>>>>>
மொததமே ரெண்டோ மூணோ பாடல்கள்தான் இதுவரை இவரின் இசையில் பாலு பாடியிருக்கிறார்!!!! சரிசரி இழையை திசைதிருப்பாமல் பேசுவோம்.
<<<<<

தாராளமாக விவாதம் செய்யலாம்; இசை சம்பந்தப்பட்ட எதுவும். எனக்கும் மற்றவர்களின் எண்ணங்கள் என்னவென்று அறிவதற்கு ஏதுவாக இருக்கும். எவ்விதமான தடைகளும் இல்லை. தொடரட்டும் உங்களின் விவாதம்.

சினேகிதி சொன்னது…

3. பூங்காற்றிலே
5. செண்பகமே செண்பகமே
12. பூவே பூச்சூடவா
13. இரு பூக்கள் கிளை மேலே - கண்ணீரே கண்ணீரே
17. கேட்கலியோ கேட்கலியோ
19. சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
21. உன் பேரைச் சொன்னாலே
31. விழிகளின் அருகினில் வானம்
35. நினைத்து நினைத்துப் பார்த்தேன்
37. நிலா காய்கிறது... நிறம் தேய்கிறது

இவை எனக்கும் பிடித்த பாடல்கள்.
அண்மையில் ஒரு சில பழைய பாடல்கள் கேட்டேன்.இதுவரை கேட்கத் தவறியவை :
1.ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.
2.உன்னைத் தொட்ட தென்றல் என்னைத் தொட்டு சொன்னதொரு சேதி
3.கொட்டுக்களி நாயணம் கேட்குது வாட்டுது.

உங்களுடைய பதிவில் கூட தெரியாத சில பாடல்களுண்டு.கேட்கவேண்டும்.

ஸ்ருசல் சொன்னது…

சிநேகிதி,

நீங்கள் சொன்ன இரண்டாம் பாடலைக் கேட்டிருக்கிறேன். மற்ற இரு பாடல்களும் கேட்டதில்லை. என்ன திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது?

நன்றி.

தருமி சொன்னது…

எனக்கு இசை பற்றிய அறிவு முழு 'முட்டை'. கேட்க மட்டுமே தெரியும்; பிடிக்கும்.

முதல் முதல் கேட்ட மாத்திரத்தில் புல்லரிக்க வைத்த இரு பாடல்கள்: 33 ஆண்டுகளுக்கு முன்: உன் கண்ணில் நீர் வழிந்தால் ..(வியட்நாம் வீடு;T.M.S.;கண்ணதாசன்) 66 நாட்களுக்கு முன்: காற்றினில் வரும் கீதமே..( ஒருநாள் ஒரு கனவு)

"வெட்டி வேரு வாசம் விடலை புள்ள நேசம்" பாட்டைவிட, நான் "ராசாவே உன்னை நம்பி" பாட்டுக்குத்தான் 'முதல் மரியாதை' தருவேன்.

சீனு சொன்னது…

நளதமயந்தி-யிலிருந்து "என்ன இது என்ன இது, என்னைக் கொல்வதோ"-வை விட்டுடீங்களே...

சீனு.

ஸ்ருசல் சொன்னது…

சீனு,

அது சிறந்த பாடல் தான். சந்தேகமே இல்லை. சின்மயி பாடிய சிறந்த பாடல்களில் அதுவும் ஒன்று. சின்மயின் குரலை விட ரமேஷின் குரல் மிக அழகாக இருக்கும்.

இந்த 40-ல் இடம் கொடுக்காததற்கு மன்னிக்கவும். பொன்ராஜிற்கு சொன்னது போல் அடுத்த 10-ல் அல்லது 20-ல் கண்டிப்பாக இடம்பெறும்.

ஸ்ருசல் சொன்னது…

தருமி அவர்களே,

உன் கண்ணில் நீர் வழிந்தால், சில முறைகள் கேட்டிருக்கிறேன். சிவாஜி நடித்தது என நினைக்கிறேன். தொலைக்காட்சியில் பார்த்ததுண்டு.

>>>>>
வெட்டி வேரு வாசம் விடலை புள்ள நேசம்" பாட்டைவிட, நான் "ராசாவே உன்னை நம்பி"
<<<<

நான் குறிப்பிட்டது போல அந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி பேசிக் கொண்டே போகலாம். எனக்கு அந்தப் பாடல் பிடிக்க இன்னொரு காரணம், அது எடுக்கப்பட்ட விதம். எனக்குப் பிடித்திருந்தது. சிவாஜி.... கேட்கவே வேண்டாம். இனி மேல் அப்படி ஒரு படம் வர வாய்ப்பே இல்லை.

CRV சொன்னது…

Thadagam, Good post. Just one correction. Anna Nagar Mudhal Theru was scored by Chandrabose. Many people make this error with the composer. Keep up the good work.

ஸ்ருசல் சொன்னது…

I can't believe this! I thought it's done by Raja. I am surprised to know this.

Anyway, Thanks for correcting me, CRV.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொன்னது…

very good post!
but the music director of "SUNDHARA GANDAM" is not Bagyaraj. he was a debutant music director. i don't know his name.

ஸ்ருசல் சொன்னது…

சேரல்,

தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

ஸ்ருசல்.