என்னைப் பற்றிச் சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. என்னுடைய எழுத்தைப் பற்றிச் சொல்லுமளவிற்கு, என்னுடைய எழுத்துத் திறனும் இன்னும் வளரவில்லை. வளரவே ஆரம்பிக்கவில்லை என்றும் கூறலாம். ஏதோ ஒன்றை கூகுளில் தேடப் போய், அது ஒரு தமிழ் வலைப்பதிவிற்கு இட்டுச் சென்றது (யாருடையது என ஞாபகம் இல்லை). அட, தமிழில் கூட எழுத முடியுமா?, எப்படி? எனத் தேட ஆரம்பித்து, முடிவில் இந்த வலையில் வந்து நானும் மாட்டிக் கொண்டேன். ஓர் நட்சத்திரமாக தமிழ்மணத்தின் முதல் பக்கத்தில் இருந்து கொண்டு, வாசகர்களைக் கவர்வதை விட, சாதாரண உறுப்பினராக இருந்து எப்போதும், உபயோகமாக எழுத வேண்டும் என்பது தான் என்னுடைய முனைப்பு. அந்த நிலையை அடையவதற்கு இன்னும் அதிகமாக உழைக்கவேண்டும் என நன்றாகவே தெரிகிறது.
BlogSpot போன்ற தளங்கள் எனக்கு எழுதுவதற்குத் தாளும், எழுதுகோலும் கொடுத்தது என்றால், தமிழ்மணம் ஒரு பத்திரிக்கை அலுவலகம் போலிருந்து என்னுடையக் கட்டுரைகளை அச்சிட்டு என்னுடையப் பதிவுகளை வாசிப்பதற்கு வாசகர்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. தமிழ்மணத்திற்கு நன்றி!
என்னுடைய பதிவினைப் படித்து, எனக்குத் தொடர்ந்து ஊக்கமளித்துக்கொண்டிருக்கும் சக தமிழ்மண நண்பர்களுக்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களின் ஊக்கம் இல்லையென்றால், எப்போதோ என்னுடைய பதிவை இழுத்து மூடியிருப்பேன்.
டயரிகள் யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானலும் எழுதலாம். ஆனால், அதே டயரியினை மற்றவர்கள் படிக்கும் போது உங்கள் மீது ஏற்படும் நல்லெண்ணம் தான், நீங்கள் எப்படிபட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறீர்கள் என்பதனைத் தெரிவிக்கிறது. என்னுடைய வலைப்பதிவும் என்னுடை டயரியைப் போன்றது தான். ஆனால் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. படித்துப் பார்த்து விட்டு கூறுங்கள்; என் எழுத்து வாழ்க்கை எப்படி என்று!
முன்பெல்லாம் ஒரு விசயம் என்னைப் பாதித்தால், அதைப் பற்றியே சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும். ஆனால், இப்போதெல்லாம் அப்படி பாதிக்கும் விசயங்களை வலைப்பதிவாக ஏற்றிவிடுகிறேன். இது, எண்ணங்களை சுதந்திரமாகவும், தெளிவாகவும் வெளியிட உதவுவதோடு, ஒத்தக் கருத்துள்ளவர்களை சந்திக்கவும் உதவி புரிந்துள்ளது.
நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, நான் இது வரை ஆற்றிய பணிக்கான பரிசு என்று நினைக்கவில்லை ('இருவர்' டயலாக்); இந்த இளைஞனுக்கு மற்ற வாசகர்களின் ஊக்கம் தேவை என்று தமிழ்மணம் நினைப்பதாலேயே, என்னுடைய பதிவு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்.
கணினியில் Priority Boosting என்றொரு எண்ணக்கரு (Concept) உண்டு. ஏதாவது உள்ளீடுகளினாலோ (I/O Wait) அல்லது ஒருங்கிணைப்பினாலோ (Synchronization Wait) ஒரு Thread அதிக நேரம் காத்திருக்க நேர்ந்தால், இயக்குதளமானது (Operating System) அந்தக் குறிப்பிட்ட Thread-க்கு மற்ற Thread-களை காட்டிலும் சிறிது முன்னுரிமை கொடுத்து விரைவாகச் செயல்பட (சில மில்லி விநாடிகள்) அனுமதிக்கும். அதே போல் தான் நட்சத்திர அந்தஸ்தின் மூலமாக எனது பதிவின் நிலையும், சில நாட்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். சிறப்பு நிலை!
என்னை விட வயதிலும், அறிவிலும் மூத்தவர்கள் இருக்கும் இந்த மையத்தில், நான் என்ன புதிதாக சொல்லிவிடப் போகிறேன் எனத் தெரியவில்லை. அவ்வப்போது மனதில் என்ன தோன்றுகிறதோ, அதை வைத்தே இடுகைகள் எழுதி விடுவது வழக்கம். தமிழ்மணத்தில் பலதரப்பட்ட ரசனை, எண்ணங்கள், விருப்பங்கள் கலந்த மக்கள் உள்ளதால், சர்ச்சைக்குரிய தலைப்புகளை எப்போதும் தவிர்த்து வந்துள்ளேன். (ஆனால் அதே தலைப்பில் நண்பர்களிடத்தில், விவாதங்கள் காரசாரமாகப் பறக்கும்).
கடந்த சில நாட்களாக, நட்சத்திர வாரத்திற்காக சில விசயங்களை யோசித்துப் பார்த்தேன். பெரியதாக ஒன்றும் கிடைக்கவில்லை.என்னுடைய தொகுத்தளிக்கும் முறை (தேர்ந்தெடுக்கும் தலைப்புகள், அதனைக் கொடுக்கும் விதம்) ஆஸ்கர் விருது வழங்கும் விழா போல பார்வையாளர்களைச் சோர்வடையச் செய்யாமல், சீராக இருக்கும் என்று உறுதி கூறமுடியாவிட்டாலும், ஓரளவிற்கு சுவாரசியமாகவும், உபயோகமாகவும் எழுத முடியும் என்ற நம்பிக்கையுடன், என்னுடைய நட்சத்திர வாரத்தை, இந்த அறிமுக இடுகையுடன் ஆரம்பிக்கிறேன்.(காலையில் ஆஸ்கர் விழா பார்த்தேன், ஒரு இசைக்கலைஞர் மிகச் சிறப்பாக 5 படங்களில் இருந்து பின்னணி இசையினை வயலினில் வாசித்துக் காட்டினார். அருமையாக இருந்தது. யாரென்று தெரியவில்லை; தெரிந்தவர்கள் கூறவும்.)
இந்த வாரத்தில் எழுதத் தீர்மானித்திருப்பது.
- எனது எண்ணங்கள் - 4 (திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு)
- எனது முதல் கதை(?) - 1 (செவ்வாய்)
- சுயதம்பட்டம் - 1 (வியாழன்)
- தகவல் - 1 (சனி)
நன்றி!
ஸ்ருசல்
27 கருத்துகள் :
வாங்க வாங்க, உங்கள் நட்சத்திர வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளில் உபயோகமான தகவல்கள் அதிகமிருக்கும். இவ்வாரத்தில் அதை அதிகமாக எதிர் பார்க்கிறோம்.
மட்டுறுத்தல் இருப்பதால் word verification வேண்டுமா? எடுத்துவிடுங்களேன்.
ஸ்ருஸல் ,
நன்றாக எழுதுகிறீர்கள். இப்போது தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
என்ன.. ' இட்ஸ் கெட்டிங் டூ டெக்னிகள் ' என கமல் ஸ்டைலில் சொல்லத் தோன்றுகிறது ;)
அருமை..
வாழ்த்துக்கள்
சுகா
// ஒரு இசைக்கலைஞர் மிகச் சிறப்பாக 5 படங்களில் இருந்து பின்னணி இசையினை வயலினில் வாசித்துக் காட்டினார் //
Itzhak Perlman (விழாவை அப்பப்போ எட்டி பார்த்தது... நீங்கள் வேறு யாரையாவது குறிப்பிடுகிறீர்களா என்று தெரியவில்லை)
மணியன், சுகா, இலவசக்கொத்தனார் உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
இலவசக்கொத்தனார், நீங்கள் குறிப்பிட்டது போல, Word Verification Option, எடுக்கப்பட்டு விட்டது. நேற்றே, அதற்காகத் தான் Settings சென்றேன். ஆனால், அதனை மறந்து வேறு ஏதோ தேட ஆரம்பித்து விட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
வாருங்கள். நிறைகுடம் தளும்பாதுங்கிற மாதிரி இருக்கு நட்சத்திர முதல் பதிவு. உங்கள் எழுத்தின் மீது நாட்டம் கொண்ட பலர் இங்கு உண்டு அதை அறுதியிட்டு என்னால் சொல்ல முடியும். எதிர்பார்க்கிறேன் ஆவலுடன் இவ்வாரத்தை. வாழ்த்துக்கள்.
ரொம்ப டாங்ஸுங்கோவ்.
முகமூடி மிக்க நன்றி. கண்டிப்பாக அவராகத் தான் இருக்க வேண்டும். கூகுளின் தொடுப்புகள் உறுதி செய்கின்றன.
அப்டிபோடு.. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. என்னால் இயன்ற அளவு முயற்சி செய்கிறேன்.
அன்பு நண்பரே,
வாழ்க! வளர்க!!
வாங்க நட்சத்திரமே!
வாழ்த்துகள்
அருமையான வாரமாக அமைய வாழ்த்துக்கள்!
//பிடித்தமான நடிகர்கள்: செந்தில், ஜெயராம், ராமராஜன் //
நக்கலா? அல்லது உண்மையிலேயா?
ஸ்ருசல், நட்சத்திர வாழ்த்துக்கள்...
ஞானவெட்டியான் ஐயா, துளசி, ஜோ, இளவஞ்சி நன்றி.
ஜோ -> செந்தில், ஜெயராம், ராமராஜன்
உண்மையிலேயே இம்மூவரும் தான் பிடித்தவர்கள். இம்மூவரை விட சிறப்பாக இயல்பான பாடி லாங்குவேஜினால் (நகைச்சுவை, இயல்பான பேச்சு) நடிப்பதற்கு எவரும் இல்லை, என்பது என கருத்து. (கமலை விட்டு விடுங்கள்)
வருக வருக
நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்
கடந்த சில நாட்களில் புதிதாக வந்தவர்களில் என் கண்ணில் பட்டு, என்னை வாசிக்கவைத்த எழுத்துக்களின் சொந்தக்காரர்கள் மூவர். அவர்கள் பெயர்களும், அவர்கள் எழுத்துக்களும்: ஸ்ருசல் - இது புனைப்பெயரா, இல்லை உண்மைப் பெயரா? - (தடாகம்) ஐ.ஐ.டி. பற்றிய கண்ணோட்டம்,.....இது என் நட்சத்திர வாரத்தில் நான் அன்று எழுதியது..
உங்கள் கண்ணில் அப்போது பட்டதோ என்னவோ..?
வாழ்த்துக்கள்.
தருமி ஐயா,
உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
நீங்கள் கூறியதை அப்போது பார்க்க முடியாமல், பல மாதங்கள் கழித்து கூகுளில் தேடிய போது, என் கண்ணில் பட்டது. என் மீது நம்பிக்கை வைத்து கூறியதற்கு மிக்க நன்றி.
வருக நட்சத்திரமே! வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் ஸ்ருசல்.
செல்வன், சுதர்சன் மற்றும் குமரன் வாழ்த்துக்களுக்கு நன்றி.
உங்கள் வரவு நல்வரவாகுக...
அன்புடன் இளந்திரையன்
Sorry for writing in English, Enjoyed your blog for some time srusal.
Keep writing., Best of luck for your natchaththira vaaram.
Thanks and Regards
Mohandoss
இளந்திரையன், மோகன் தாஸ் நன்றி.
நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.
இது உங்கள் இயற்பெயரா? புனைப்பெயரா?
அன்புடன்
கீதா
வாழ்த்துகள் ஸ்ருசல். இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள்.
(இந்தப் பேர எங்க புடிச்சீங்க...)
கீதா உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
>>இது உங்கள் இயற்பெயரா? புனைப்பெயரா
தெரியலேயேப்பா! தெரியலே!
ராகவன்,
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
இது எங்கிருந்தும் எடுக்கப்படவில்லை. என்னிடமிருந்தே எடுக்கப்பட்டது தான்.
கருத்துரையிடுக