வியாழன், செப்டம்பர் 29, 2005

அயல்நாட்டு மோகம்

சென்ற வாரம், புத்தகக் கடைக்கு சென்றிருந்தேன். இரண்டு புத்தகங்கள் வாங்க வேண்டும் என முடிவெடுத்திருந்தேன். ஒன்று, இந்திராகாந்தி வாழ்க்கை வரலாறு. மற்றொன்று, மா சே துங் வாழ்க்கை வரலாறு. திரு. நாராயணசாமி எழுதிய "Inside an elusive mind" என்ற புத்தகத்தில் மா சே துங் பற்றிய சில குறிப்புகள் இருந்தன. ஆதலால் அவரைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவா.

மா சே துங் தலைப்பில் இரண்டு புத்தகங்கள் இருந்தன. ஒன்று ஒரு சீன ஆசிரியர் எழுதியது. மற்றொன்று ஒரு அமெரிக்கர் எழுதியது. இரண்டும் ஒரே மாதிரியாக இருந்ததால் எதை வாங்குவது என்பதில் குழப்பம். அமெரிக்கருக்கு என்ன தெரியும், அவர் சீனாவில் 5 வருடங்கள் வேலை பார்த்திருக்கிறார்; அப்போது இந்தத் தகவல்களைத் திரட்டியிருப்பார் என்று நினைத்து, சீன ஆசிரியர் எழுதியப் புத்தகத்தை எடுத்துக் கொண்டேன்.

அடுத்தது இந்திரா காந்தி; 3-4 புத்தகங்கள் கண்ணில் பட்டது. அனைத்தும் இந்தியர்கள் எழுதியது. சில பக்கங்கள் படித்து பார்த்தேன். திருப்தி இல்லை. இன்னொரு புத்தகமும் என் பார்வையில் பட்டது. அதை ஃபிராங்க் என்ற இங்கிலாந்து நாட்டவர் எழுதியிருந்தார். இந்தியர்கள் உண்மையான தகவல்களை மறைத்திருப்பார்கள் என்று நினைத்து, ஃபிராங்க் எழுதியப் புத்தகத்தை எடுத்துக்கொண்டேன்.

வீடும் வந்து சேர்ந்தாயிற்று.. அப்புறம் தான் யோசித்துப் பார்த்தேன். ஏன் ஃபிராங்க் புத்தகத்தை எடுத்தேன்?. மா சே துங் விசயத்தில் பொருந்திய ஒன்று ஏன் இந்திரா காந்தி விசயத்தில் பொருந்தாமல் போயிற்று?. விடை கிடைக்கவில்லை.

ஆனால் ஃபிராங்க், மற்ற ஆசிரியர்கள் தொடாத சில பகுதிகளை தொட்டிருக்கிறார் என நிச்சயமாகச் சொல்லலாம். முக்கியமாக கமலா நேருவிற்கும் - நேரு குடும்பத்தினருக்கும் இருந்த ஊடல், நேரு குடும்பத்தினரின் வாழ்க்கைப் பின்னணி (காஷ்மீர் பின்னணி), நேரு குடும்பத்தினரின் ஐரோப்பா பயணம் (பல காரணங்களுக்காக), நேருவின் தந்தைப் பற்றின சில தகவல்கள் விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் ஃபிராங்க், இந்தப் புத்தகத்தில் சில (sarcastic) கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

1. மோதிலால் நேருவின் சம்பாத்தியம்: காங்கிரஸ், அயல்நாட்டுப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்ட போது, அதனை ஆதரிக்க வேண்டிய நிலையில், மோதிலால் நேரு நீதிமன்றத்தில் வழக்காடுவதைப் புறக்கணித்தார். ஆனால் அவருக்கு பணம்
தேவைப்படும் போதெல்லாம் அவர் நீதிமன்றம் செல்லத் தவறவில்லை.

2. அதே காரணத்தினால் இந்திராவை சாந்தி நிகேதனில் சேர்த்துப் பின்னர் திரும்பவும் ஆங்கிலேயர்கள் நடத்திய பள்ளியில் (மிக அதிகமானக் கட்டணத்துடன்) சேர்த்தனர்.

3. ஐரோப்பா பயணம்: ஐரோப்பாவின் காலநிலை இந்தியாவின் காலநிலையை விட நன்றாக இருப்பதனால் அடிக்கடி தங்களுடைய அலுவல்களையும் பொருட்படுத்தாமல் ஐரோப்பாவிற்கு பயணம்: மேற்கொண்டனர்.

4. மோதிலால் நேரு தன்னுடைய ஆனந்த பவனை அழகுபடுத்த, ஐரோப்பாவில் இருந்து விலையுயர்ந்த பொருட்களை வாங்கி வந்தார்.

5. ஆங்கிலத்தைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறிவிட்டு, சென்னையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசினார்.

இன்னும் சில.

புத்தகத்தை முழுவதுமாக முடிக்கவில்லை. முடித்துவிட்டு இன்னும் விபரமாக எழுதுகின்றேன்.

திங்கள், செப்டம்பர் 26, 2005

இது வெறும் போர்வையா?

ஒரு பெரிய தேசம். பற்பல மொழிகள், மதங்கள், ஜாதிகள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், மாவட்டங்கள், நகராட்சிகள், கிராமங்கள்; இதைப் போல இன்னும் பல பிரிவுகள்.


உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, நான்காவது பெரிய ராணுவம், என்றெல்லாம் நாம் பெருமையாகச் சொல்லலாம். ஆனாலும் இந்தியா இப்போது எதிர்நோக்கியுள்ள சிலப் பிரச்சினைகளின் தொகுப்பு.

  • காஷ்மீர் பிரச்சினை
  • சீனாவுடன் எல்லைப் பிரச்சினை
  • ஸ்ரீலங்காப் பிரச்சினை
  • நேபாள மாவோயிஸ்டுகளின் தொல்லை
  • இந்து - முஸ்லீம் - கிருஸ்த்தவ பிரச்சினை [மும்பை, குஜராத், கோயம்புத்தூர், பிரிவினை, இன்னும் சில)
  • காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் பிரச்சினை
  • உள்நாட்டுத் தீவிரவாதிகள் (உல்ஃபா, நக்சலைட்டுகள், ...)
  • மொழிப் பிரச்சினை (தமிழ் - கன்னடம் மாத்திரமல்ல; பிஹாரி - அஸ்ஸாமி, மராத்தி - ஹிந்தி)
  • காஷ்மீர் பண்டிட்டுகள்
  • பங்களாதேஷினரின் ஊடுருவல் (1 கோடிக்கும் அதிகமாக)
  • வரிச்சுமை.
  • நகர மயமாக்கல்
  • விவசாய நிலங்களை அழித்தல்
  • அயல்நாட்டுக் கலாச்சாரத் தாக்கம்
  • காடுகளை அழித்தல்
  • அண்டை மாநிலங்களினிடையே ஒற்றுமையின்மை.
  • குடும்ப அமைப்பில் சிதைவு (முதியோர் இல்லங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு)
  • வேலையில்லாத் திண்டாட்டம்.
  • தண்ணீர் பிரச்சினை
  • ஜாதி பிரச்சினை
  • இட ஒதுக்கீடு (கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், ...)
  • தொழில்வள மேம்பாடுகள் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே (மாநிலம் / நகரம்) நடைபெறுதல்
  • நீதித்துறை / காவல்துறையில் சீர்கேடு
  • மக்களின் மேம்போக்கான எண்ணங்கள், ஒழுக்கக் குறைவு
  • வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை
  • சுகாதாரச் சீர்கேடு
  • அடிக்கடி நடைபெறும் வேலை நிறுத்தங்கள் (மருத்துவத் துறையிலும் வேலை நிறுத்தம் செய்வது கொடுமை)
  • நாட்டின் கடன் சுமை
  • அயல்நாடுகளின் சதி
  • மதம் மற்றும் மனித உரிமைக் கழகங்களின் போர்வையில் செயல்படும் சில தனியார் அமைப்புகள்
  • அன்னிய நிறுவனங்களின் குறுக்கீடு
  • சட்டத்திற்கு கட்டுபட மறுப்பவர்களின் எண்ணிக்கையில் உயர்வு (பெரும்பாலும் அரசியல்வாதிகள், பணக்காரர்கள்)
  • வருமான வரி ஏய்ப்பு
  • மானியம் என்ற பெயரில் கண்துடைப்பு
  • உள்கட்டமைப்பு வசதியின்மை
  • பல அரசியல்வாதிகளின் பொறுப்பற்றத்தன்மை
  • லஞ்சம், ஊழல்
  • வியாபாரமாக்கப்பட்ட கல்வி
  • திட்டமிடத் தவறுதல்
  • தொலைநோக்குப் பார்வை இல்லாமை
  • திட்டங்களை முறையாகச் செயல்படுத்தாத அதிகாரிகள் / முறையாகச் செயல்படுத்த முடியாமல் குறுக்கீடுகள்
  • பொழுதுபோக்கிற்கு கொடுக்கப்படும் அதிகப்படியான முக்கியத்துவம்
  • மாநில அரசுகள், மத்திய அரசின் முடிவிற்கு கட்டுப்படாமல் இருப்பது
  • நாட்டின் மேன்மையை விட மாநிலங்களின் மேன்மைக்கே முக்கியத்துவம் கொடுப்பது.

இதைத் தவிர இன்னும் ஆயிரம் சொல்லலாம். இவ்வளவு பிரச்சினைகளையும் வைத்துக் கொண்டு, நாம் எல்லோரும் ஜனநாயகம் என்ற பெரிய போர்வையைப் போர்த்திக்கொண்டுள்ளோம்.

இந்தியா கவனிக்க வேண்டியது வெளிநாட்டு பிரச்சினைகளை அல்ல; உள்நாட்டு பிரச்சினைகளை.

இதைத் தவிர நான் ஏற்கனவேக் குறிப்பிட்டது போல தமிழக - கர்நாடகா எல்லைப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது ஒரு வாரமாகவே மனதை நெருடுகிறது. யாரோ இரு நபர்கள் சாதாரண பணத்தகராறை தேசிய பிரச்சினையாக உருவாக்கி விட்டுள்ளனர்.

நான், இந்தப் பிரச்சினை இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு மத்திய அரசு தான் காரணம் என்று சொல்வேன். வீட்டில் தலைவன் சரியில்லை என்றால் தான் அண்ணன் - தம்பிக்கு இடையே தகராறு வரும். ஏதோ இரு நாடுகள் போல எல்லைத் தகராறு? கேட்பதற்கே வருத்தமாக இருக்கிறது.

மத்திய அரசு மிகத் தீவிரமாகச் செயல்பட்டு, இந்தப் பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். இல்லையென்றால் இருக்கும் ஆயிரத்தில், இது ஆயிரத்து ஒன்றாகச் சேர்ந்து விடும். வரைபடத்தை எடுத்து, ஆராய்ந்து உடனே முடிவெடுத்து சொல்லிவிட வேண்டும். அதனை இரு மாநிலங்களும் கேட்டே ஆக வேண்டும். (அது பாரபட்சமற்ற முடிவாக இருக்கும் என நம்புவோமாக!).

ஏதாவது ஒரு மாநிலத்தின் சார்பாகத் தான் முடிவு வரும். மக்கள் தெளிவடைய வேண்டும். பிரச்சினைகளை நீட்டிக்க விரும்புகிறார்களா அல்லது இதனை மறந்து மற்ற விஷயங்களில் ஈடுபடப் போகிறார்களா?. ஆட்சியாளர்களும் யாருக்கு சாதகமாக முடிவெடுத்தாலும், நமக்கு அடுத்தத் தேர்தலில் ஆபத்து என்றெல்லாம் நினைக்கக் கூடாது.

இந்திராகாந்தி ஆட்சிக்கு பிறகு, மத்தியில் ஆட்சிக்கு வந்த எந்த அரசுமே மாநிலங்களின் மேல் முழு ஆதிக்கம் செலுத்த முடியாமல் இருக்கின்றன. இதற்குக் காரணம் அவர்களுக்கு பெரும்பான்மை இல்லாததா அல்லது மாநிலக் கட்சிகளின் ஆதிக்கமா அல்லது மக்களின் எதிர்ப்பா என்று தெரியவில்லை. இந்த நிலையில் மாநிலங்கள் இன்னும் சில அதிகாரங்கள் கேட்கின்றன.

சுலபமான மேலாண்மைக்காகவே மாநில அரசுகள் ஏற்படுத்தப்பட்டன. நாட்டின் ஒருமைப்பாடைக் குலைப்பதற்காக அல்ல. என்னைக் கேட்டால் இந்த இரண்டு தலைமை முறையையே ஒழிக்கலாம் என்பேன். ஆனால் அது இப்போதைக்கு முடியாதது.

ஆனால் தற்காலிகத் தீர்வுக்கு, மத்திய அரசுகள் மாநிலங்களுக்கு சிலக் கட்டுபாடுகளை விதிக்கலாம்.

1. வரியானது, மத்திய அரசு விதிப்பதாகவே இருக்க வேண்டும். மாநில அரசுகள் வரி விதிக்கக் கூடாது.

2. ஆண்டு பட்ஜெட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தொகை ஒதுக்கப்பட்டு விடும். அதில் மாநிலங்கள் திட்டங்கள் தீட்டி, அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதனைக் கண்காணிக்க மத்திய குழு அமைக்கப்படும். தொகையானது, மக்கள் தொகையைப் பொறுத்தோ அல்லது அதன் வளங்களைப் பொருத்தோ அளவீடு செய்யப்படலாம்.

3. ஆனால் மாநில அரசு தனது பங்கில், சில நிறுவனங்கள் ஆரம்பித்து அதன் லாபத்தையும் பட்ஜெட்டில் சேர்த்து கொள்ளலாம் (உதாரணம்: பேருந்து நிறுவங்கள், ஆலைகள், விவசாயத் துறை, காடுகள் வளர்ப்பு)

4. நீர், மின்சாரம், சாலை, நிலம் தொடர்பாக எந்த அதிகாரமும் மாநிலங்களுக்கு கிடையாது.

இன்னும் சில.

உங்களுக்கு ஏதும் தோன்றினால் சொல்லுங்களேன்!

சில விசயங்களைக் கேட்பதற்கு கடினமாகத் தான் இருக்கும். ஆனால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டுமானால், இத்தகைய உறுதியான முடிவுகளைத் தவிர வேறு வழி இல்லை.

எல்லாரும் கூறுவது போல எமர்ஜென்ஸி வந்தால் தான் நாடு பிழைக்குமா?

நன்றி
ஸ்ருஸல்.

குறிப்பு: இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் யாரையும் எதிர்க்கவோ / தூண்டுவதற்காகவோ அல்ல. நாட்டின் ஒற்றுமைக்கும் / இறையான்மைக்கும் இவை நலம் விளைவிக்கும் என்ற நோக்கினில் இங்கே விவரிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த நோக்கமும் அல்ல.

சனி, செப்டம்பர் 24, 2005

ஏ.ஆர்.ரகுமானும், மது விளம்பரமும்.

ஏ.ஆர்.ரகுமானும், மது விளம்பரமும்.

வரும் அக்டோபர் 8-ம் தேதி பெங்களூரில் ஏ.ஆர்.ரகுமானின் இசைக் கச்சேரி நடைபெறவிருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகளை ஒரு தனியார் அமைப்பு செய்து வருகின்றது. வரும் லாபத்தில் பெரும் பகுதி ஒரு பொது நல அமைப்பிற்குச் செல்லுமாறும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த தனியார் அமைப்புடன், ஏ.ஆர்.ரகுமானின் ரசிகர்கள் (மன்றம் ஏதும் இல்லை). குழுவின் சார்பாக சில தன்னார்வத் தொண்டர்கள் பணிபுரிந்து வருகிறோம். எங்கள் பணிகளில், நகரில் உள்ள முக்கிய வர்த்தக மையங்களில் அந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துவதும் ஒன்று.

அதன் நிமித்தமாக எங்கள் குழுவினர் (யார் யார் என்றே தெரியாது. எல்லா மாநிலத்தவரும் உண்டு. எல்லாம் யாகூ குழுமத்தின் மூலமே எங்களுக்குப் பழக்கம்) இன்று காலைக் கூடி விவாதித்தோம்.

கூட்டத்தில், ஏ.ஆர்.ரகுமான் இங்கு வரும்போது அவருக்கு என்ன பரிசளிக்கலாம் என்றும் விவாதிக்கப்பட்டது.

கீ போர்டு? - ஒரு அன்பர்.

அவரிடம் இல்லாத கீபோர்டுகளா என்ன? அவருடைய யோசனை நிராகரிக்கப்பட்டது.

"பழங்காலத்து இசைக் கருவி?

இருக்கும் 25 பேரிடமிருந்து ரூபாய் 10000-20000-க்கு மேல் தேராது. அப்படியே பணம் இருந்தாலும் அதற்கு எங்கு போவது? ம்ஹும். சரிப்படாது.

அது, இது என்று பலப் பரிந்துரைகள். ஒன்றுமே சரிப்பட்டு வரவில்லை.

"குரான்?"

"No. Quran should not be gifted".

அனைவரின் விழிகளும் ஆச்சர்யத்தால் உயர்ந்தன.

சொன்னது நவாஸ்.

மவுனம் சில நிமிடங்களுக்கு...

கடைசியில் முடிவேதும் எடுக்காமல் அடுத்த விசயத்திற்குச் சென்றோம்.

வர்த்தக மையங்களுக்குச் செல்லும் போது, அணிவதற்கு ஒரு டி-சர்ட் (தமிழ் சொல் என்ன?) தரப்பட்டது. அளவுகள் முன்கூட்டியே தனித்தனியாகத் தெரிவிக்கப்பட்டும் எல்லாம் ஒரே அளவாக இருந்தது. முன்பக்கத்தில் விளம்பரதாரர்களின் பட்டியல். பெரிய மெக்டால் (McDowell) சின்னம். சிறிய அளவில் ஏர்டெல், ஸ்பைஸ் மற்றும் சில சின்னங்கள். டி-சர்ட்டின் பின்பக்கத்தில் ரகுமானின் படம்.

எல்லோரும் அவரவருக்கு சரியான சட்டையை எடுத்துக் கொண்டனர். நவாஸ் மட்டும் எடுக்காமல் நின்று கொண்டிருந்தார்.

"நீங்க எடுத்துக்கலையா? - இது ரூபா, அந்தத் தனியார் அமைப்பின் நிர்வாகி

"இல்லை வேண்டாம்."

"ஏன்?"

"நான் என்னோட டி-சர்ட்-ல வர்ரேன்"

"அதெப்படி? எல்லோரும் இது தான் போட்டுக்கணும். எப்படி அடையாளம் தெரியும். டி-சர்ட் அடிச்சதுக்கே அர்த்தம் இல்லாம போயிரும்"

"இல்ல வேண்டாம். இது... இதுல McDowell இருக்கு. அது ஒரு மதுக் கம்பெனி"

"ஸோ?"

"ரகுமானுக்கு அதெல்லாம் பிடிக்காது. நான் என்னோட டி-சர்ட்-ல வர்ரேன்"

"ரகுமானே ஒத்துக்கிட்டாரே? அதுவுமில்லாம் இது மதுவிற்கான விளம்பரம் கிடையாதே...."

"இல்லை வேண்டாம். நான் சும்மா ஃபிரியா வேலை பார்க்குறேன்."

"எல்லோரும் ஃபிரியா தான் வேலை செய்றாங்க. ஏன்? நான் கூட ஃபிரியா தான் வேலை செய்றேன். ஆறு கோடி இன்வெஸ்ட் பண்ணிட்டு ஃபிரியா தான் வேலை செய்றோம்"

ஒரே நிசப்தம்.

எனக்கு இரண்டு பேர் சொன்னதுமே விளங்கவில்லை.

நவாஸ் ஏன் அந்த வார்த்தையைச் சொன்னார்? ("ஃபிரியா வேலை பார்க்குறேன்")

நிதி ஒரு பொது நல அமைப்பிற்கு என்று சொன்னது? ஆறு கோடி பணமா? ஒரு வேளை அனுமதிச் சீட்டு அனைத்தும் விற்கவில்லை என்றால்....? ஆறு கோடி பணம்? அவ்வளவு பெரிய நிகழ்ச்சியா?


நன்றி
ஸ்ருசல்

வியாழன், செப்டம்பர் 22, 2005

உயிர் காக்கும் மருந்துகள் விற்பனையில் சீர்கேடு

உயிர் காக்கும் மருந்துகள் விற்பனையில் சீர்கேடு

மனிதன் ஒரு தீவிர கொள்முதல்வாதி. அவனிடம் பணமிருந்தால், ஆனந்தமாக ஒவ்வொரு பொருளையும் யோசித்து, ரசித்து, பேரம் பேசி பெருமையோடு வாங்குவான். எல்லோரும், ஒவ்வொரு வருடமும், இந்த வருடம் இந்தப் பொருளை வாங்க வேண்டும், இது நம் வீட்டிற்கு அவசியம் என்று மனதில் ஒரு திட்டத்தை உருவாக்கி அதை செயல்படுத்த முயல்வது இயல்பு. இதில் யாருமே விதிவிலக்கு இல்லை.ஆனால் நாம் யோசித்து, திட்டமிட்டு, ரசித்து, மற்றொன்றுடன் ஒப்பிட்டு, பேரம் பேசி வாங்க முடியாத ஒரே பொருள் - மருந்து.

அதனால் தான் என்னவொ அது கண்ட விலைக்கும் விற்கப்படுகிறது. நாட்டின் முக்கியமான பிரச்சினைகளில் இந்த மருந்து விலையும் ஒன்று. ஆனால் மற்ற அத்தியாவசியாமான பொருட்களின் விலையேற்றங்களைப் பற்றிக் கவலைப்படுகிற மக்கள், உயிர்காக்கும் மருந்து விஷயத்தில் அலட்சியமாக உள்ளது போல் தோன்றுகின்றது.

ரூபாய் 1.50 செலவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் (உ.ம்: செட்சைன், செட்ரிசெட்) ரூபாய் 3 க்கு டீலருக்கு / மருந்துக் கடைகளுக்கு விற்கப்படுகின்றன. அதை அவர்கள் 10% லாபம், இல்லை 50% லாபம் வைத்து விற்றால் பரவாயில்லை. மூச்சை விட்டு விடாதீர்கள்; கிட்டத்தட்ட 500-1000% லாபத்திற்கு அதாவது ரூபாய் 30 க்கு விற்கின்றனர். (தகவல் உதவி: The Economic Times)

இதே கதை தான் அநேகமாக எல்லா மருந்து வகைகளுக்கும். அவசரத்தில் மருந்து வாங்கச் செல்லும் நாம் இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க நேரமும் இருக்காது, வாதிட மனமும் இருக்காது, அதை வேண்டாம் என்று வாங்காமலும் வர இயலாது. மற்றப் பொருட்களைப் போல இந்த வகை வேண்டாம் அது விலைக் குறைவு என வேறொரு வகையினை வாங்கிச் செல்ல முடியாது.

அரசின் நிலை என்ன?

அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதும், மருந்துகள் விலை உயரும் என எதிர்பார்த்த இந்திய அரசு, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, அரசு அனுமதியில்லாமல் மருந்துகள் விலையை உயர்த்த தடை விதித்தது. இந்திய அரசு 1979-ல் Drugs Policy-யை (மருந்துக் கொள்கையை ???) அறிவித்தது, அதன்படி மருந்துகள் பிரித்து வகைப்படுத்துப்பட்டு அதி அத்யாவாசியமான மருந்துகளின் (Bulk Drugs) பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் உள்ள மருந்துகள் எப்போதும் கிடைக்குமாறும், அதன் விலை மிகக் குறைவாக இருக்குமாறும் (அரசு சார்ந்த அமைப்பின் மூலம், NPAA, விலை நிர்ணயம் செய்யப்படும்) வழிவகை செய்யப்பட்டது. முதலில் இந்தப் பட்டியலில் சுமார் 370 மருந்துகள் இருந்தன. இந்தக் கொள்கை நடைமுறைக்கு வந்ததும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், பட்டியலில் உள்ள மருந்துகளின் உற்பத்தியை குறைத்தன. இதனால், கள்ள மார்க்கெட்டில் மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. இது ஒரு வழியாகக் கட்டுப்படுத்தப்பட்டது, பின்பு இந்தப் பட்டியலில் உள்ள எண்ணிக்கை, படிபடியாகக் குறைக்கப்பட்டு தற்போது வெறும் 74 மட்டுமே உள்ளன. இதில் பென்சிலின், இன்சுலின், ஆஸ்பிரின், விட்டமின் பி, சி, டி, இ யும் அடக்கம்.

சில மருந்து நிறுவனங்கள் எப்படி லாபம் சம்பாதிக்கின்றன?

இந்திய மருந்து நிறுவனங்களின் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் 25-30% சதம் அதிகரிக்கின்றது. சில மருந்து நிறுவனங்களின் வருவாய், கீழ்கண்ட வகைகளிலும் ஈட்டப்படுகிறது.

1. பட்டியலில் இல்லாத மருந்து உற்பத்தியை அதிகப்படுத்தி, விற்பனையை அதிகரித்தல். மருந்து நிறுவனங்களின் வருமானத்தில் 75% பங்கானது, பட்டியலில் இல்லாத மருந்து விற்பனை மூலம் கிடைக்கின்றது.

2. பல தனியார் மருத்துவர்களின் உதவியுடன், தங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்தல். இந்திய மருந்து நிறுவனங்கள், ஆண்டுக்கு சராசரியாக ரூபாய் 1,10,000 ஒவ்வொரு மருத்துவருக்கும் செலவு செய்கின்றன. பல மருத்துவ விற்பனைப் பிரதிநிதிகளின் முழு நேர வேலையே இது தான்.

3. மருந்துகளின் விலையை உயர்த்தி விற்பனை செய்தல்

4. தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்தல்

5. போலி மருந்து விற்பனை. விற்பனை செய்யப்படும் மருந்துகளில் சுமார் 25% போலி மருந்துகள்.

இந்தியாவின் 40 பணக்காரர்களில் 9 பேர் மருந்து நிறுவனங்கள் வைத்திருப்போர் (தகவல் உதவி - Forbes India's Richest - 2004) என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
Link: http://www.forbes.com/2004/12/08/04indialand.html).


  1. திலீப் சங்வி (Sun Pharmaceuticals)
  2. யூசுப் ஹமீது (Cipla)]
  3. ஹபில்
  4. விவேக் பர்மன்
  5. பங்கஜ் பாடீல் (Zydus Cadila)
  6. கிரண் மஸும்தார் (BioCon)
  7. அஞ்சி ரெட்டி (Dr. Reddy's Lab)
  8. ஷியாம் தேஸ்பாண்டே குப்தா

ஏன் 40 பேரில் ஷிவ் நாடார் தவிர வேறு யாருமே தமிழ்நாட்டில் இருந்து இல்லை? ஒரு வகையில் நலலது தான்.

மேலும், ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியா உலகிலேயே 4 வது மிகப் பெரிய சந்தை.
(தகவல் உதவி: "Being Indian" book by Pavan K. Varma)

இதற்கு என்ன தீர்வு

1. அரசு, போலிகளைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மிக மிக அவசியம். போலிகள் அரசின் வருவாயை மட்டும் பாதிப்பதில்லை; அதை உட்கொள்வோரின் உடல்நிலையையும் தான்.

2. மருந்து நிறுவனங்களுக்கு உடந்தையாக இருக்கும் மருத்துவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது. இது மிகக் கடினமான பணி தான். அதைச் செய்யும் மருத்துவர்களாக மாறினால் ஒழிய இதனைத் தடுக்க முடியாது. படித்தவர்களாலேயே, சில நேரங்களில் மாத்திரையின் வகை, பெயர், எதனால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அறிந்து கொள்வது கடினம். மற்றவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

3. எப்போதும் மருந்து வாங்கும் போது, அதற்கான ரசீதையும் பெறுதல் ஓரளவிற்கு உதவும். கூடுமான வரை M.R.P க்கு அதிகமாக பணம் கொடுக்காமல் இருக்கலாம். வாங்கும் போது அது முடியாத பட்சத்தில், அத்தியாவாசிய பொருட்கள் சட்டம் 1955-ன் படி குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியும். இதுவும் எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. வேண்டுமானால் கடைக்காரரை ஒரு மிரட்டு மிரட்டலாம். அது உங்கள் சாமர்த்தியம்.

4. Bulk Drugs எண்ணிக்கையை 74 ல் இருந்து உயர்த்துதல். ஆனால் அதே நேரத்தில், அதை 74-ல் இருந்து குறைக்குமாறு (IPA) கூறுகிறது. ஏன் என்று எல்லோரும் அறிவர்.

5. பட்டியலில் வாராத மருந்துகளின் விலையினை, அரசு கண்காணித்து தேவைப்பட்டால் தலையிட்டு விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

Drugs policy-யைப் பற்றி விவரமாக அறிய http://nppaindia.nic.in/ என்ற தளத்திற்குச் செல்லவும். இந்தக் கட்டுரையில் தரப்பட்ட சில விவரங்கள் அந்தத் தளத்திலிருந்து பெறப்பட்டது.

நன்றி
ஸ்ருசல்.

புதன், செப்டம்பர் 21, 2005

ஏ.ஆர்.ரகுமானின் கவனிக்கப்படாமல் போன படைப்புகள்

சில தினங்களுக்கு முன்னால், ஏ.ஆர்.ரகுமானின் பல சிறந்தப் பாடலகள், சில திரைப்படங்களின் வர்த்தகத் தோல்வியினால் ரசிக்கப்படாமல் போயிருக்கின்றன எனத் தெரிவித்திருந்தேன். அவற்றின் பட்டியல். (எனக்கு ஞாபகம் இருக்கும் சிலவற்றை மட்டுமே இங்கே அடுக்குகிறேன்). அதில் "வெள்ளைப் பூக்கள்" பாடல் ( படம்: கன்னத்தில் முத்தமிட்டால்) குறிப்பிடத்தக்கது.

1. கண்களால் கைது செய் படத்தில் வரும் "என்னுயிர் தோழியே" பாடல். இதனை சின்மயி மிக அருமையாகப் பாடியிருந்தார். அதில் அவர் ஆரம்பிக்கும் போது வரும் ஹம்மிங் மிக அருமையாக இருக்கும். மற்றுமொரு பாடல். தீக்குருவி என வரும் பாடல். அதை ஹரிணிப் பாடியிருந்தார். இந்தப் படத்தில் வரும் அனைத்துப் பாடல்களுமே மிக அருமை. ஏனோ, கவனிக்கப்படாமல் போய்விட்டன. மேலும், பாடல்களை எடுத்த விதம் வருத்தத்திற்குரியது. பாரதிராஜாவுடன், இனி ரகுமான் பணியாற்றமாட்டார் என்றும் நினைக்கின்றேன்.

2. இருவர் படத்தில் வரும். பூக்கொடியின் புன்னகை பாடல். அதனை சந்தியா பாடியிருந்தார் (தகவலுக்கு நன்றி - எழில்). அதில் பல்லவி முடிந்ததும் வரும் இசை மிக அருமையாக இருக்கும்.

3. என் சுவாசக் காற்றே படத்தில் வரும். "திறக்காதக் காட்டுக்குள்ளே" பாடல்

4. Bose the Forgotten Hero (ஹிந்தி) படத்தில் வரும், ஆசாதி பாடல். ரகுமானே பாடுயது. "தனுகா" என்ற பாடலும் சிறந்தப் பாடல்.

5. Swades படத்தில் வரும், எஜ தேஷ் அல்லது தமிழில், உந்தன் தேசத்தின் குரல் மிக மிக அருமையானப் பாடல். அவரே பாடியது.

6. "சித்திரை நிலவு சேலையில் வந்தது" - வண்டிச்சோலைச் சின்னராசு படத்தில் வரும். ஜெயச்சந்திரன், மின்மினி பாடியது.

7. தாளத்தில் வரும் "வா மன்னவா". இது ஹிந்தியில் நல்ல அங்கீகாரத்தைப் பெற்றப் பாடல். தமிழில் இன்னும் நன்றாக இருக்கும். சுஜாதா பாடியிருந்தார்.

8. ரட்சகனில் வரும் - "நெஞ்சே நெஞ்சே" பாடல். "போகும் வழியெங்கும் காற்றே". இதுவும் சிறந்தப் பாடல்.

9. ஸ்டாரில் வரும் "நேந்துகிட்டேன் நேந்துகிட்டேன்" - இது கார்த்திக், சித்ரா(இன்னொரு சித்ரா) பாடியது. "மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டது" பாடலும் நல்ல பாடல்.

10. லவ் பேர்ட்ஸ்-ல் வரும் "நாளை உலகம் இல்லை என்றால்". மிக அருமையானப் பாடல். சுஜாதா, உன்னி கிருஷ்ணன் பாடியது.

11. "ஊனே ஊனே உருக்குறானே" - அல்லி அர்ஜீனாவில் வரும். இது ஏற்கனவே ஒரு ஹிந்தி படத்தில் இடம் பெற்றிருந்தது.

12. "அழகே சுகமா" பாடல் - பார்த்தாலே பரவசம். சாதனாவும், ஸ்ரீனிவாசும் பாடியது. (தகவலுக்கு நன்றி - ஜெயஸ்ரீ)

13. பகத்சிங் ஹிந்தி படத்தில் வரும் சிலப் பாடல்கள்.

14. ரிதம் படத்தில் வரும் "அன்பே" சாதனா பாடியது.

நான் குறிப்பிட மறந்த பாடல்கள் ஏதும் இருந்தால் தெரிவிக்கவும்.

நன்றி
ஸ்ருசல்

திங்கள், செப்டம்பர் 19, 2005

ஐஐடி என்ன செய்ய வேண்டும்?

ஐஐடி பற்றிய அறிமுகம் தேவையில்லை. உலகத் தரம் வாய்ந்த கல்விக் கூடம். இங்கே படித்த மாணவர்களில் பலர், உலகின் பல பெரிய நிறுவனங்களின் பெரிய பதவிகளில் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இங்கே படித்த மாணவர்களில் 90% மாணவர்கள், வெளிநாட்டிற்கு மேல்படிப்பிற்க்காகவும், பெரிய நிறுவனங்களில் பணிபுரியவும் செல்கின்றனர். இத்தகைய பெருமையுடைய கல்விக்கூடத்தில் பயில போட்டி இருப்பதில் வியப்பு இல்லை.

ஐஐடி, JEE எனப்படும் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களை சேர்க்கின்றது.
சுமார் 2000 இடங்களுக்கு, ஆண்டுதோறும் 1,50,000 மேற்பட்ட மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதுகிறார்கள். நுழைவுத்தேர்வுக்கான், ஆயத்த பணிகளை 90% மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பிலேயே ஆரம்பித்து விடுகின்றனர்.

சமீபத்தில், ஐஐடி (இந்திய தொழிட்நுட்ப கல்லூரி) கூட்டமைப்பு, மாணவர் சேர்க்கை விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
  • இந்த ஆண்டில் இருந்து, இரண்டு முறைகளுக்கு மேல் நுழைவுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி கிடையாது.
  • குறைந்தது, 65% சராசரி மதிப்பெண்களாவது 12-ம் வகுப்பில் பெற்று இருக்க வேண்டும்.

இப்படி சில...

இதற்கு, மாணவர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காரணம். மாணவர்களுக்கு எப்படியும் ஐஐடி-ல் அனுமதி பெற்று விட வேண்டும் என்ற வேட்கை தான். சிலர் 2-4 ஆண்டுகள் முயற்சி செய்து ஐஐடி அனுமதி பெறுவதும் உண்டு.

மாணவர்களின் இந்த விடாமுயற்சி பாராட்டப்பட வேண்டியது தான். ஆனால், ஐஐடி-ஐப் பொருத்தவரை, சில விசயங்களை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

1. படித்து முடித்ததும் ஐஐடி மாணவர்கள் மேற்கொள்ளும் பணி.

2. பெற்றோர்களின் உந்துதல். (இதனைப் பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன்)

ஐஐடி மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்

1946 ல், சர்க்கார் கமிட்டியின் பரிந்துரையின்படி, அப்போதைய பிரதமர் நேரு அவர்களால், நான்கு மண்டலங்களில் (முதலில் காரக்பூரில்; கிழக்கு மண்டலத்தில், பின்னர் பம்பாய், சென்னை, கான்பூர், டெல்லி ஆகிய இடங்களில்) ஐஐடி ஆரம்பிக்கப்பட்டது.

"ஐஐடி தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், இந்தியாவின் வளர்ச்சிக்கு அதனுடைய (அதன் மாணவர்களின்) ஆராய்ச்சியின் வாயிலாக உறுதுணையாக இருக்க வேண்டும்; இந்தியா தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறவும் ஐஐடி பாடுபடவேண்டும். சிறந்த அறிவியலார்களையும், கல்வியாளர்களையும் உருவாக்க வேண்டும்" என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால், என்ன நடந்து கொண்டு இருக்கிறது? இங்கு படிக்கும் (பெரும்பாலான) மாணவர்களுக்கு, நாட்டுக்கு சேவை புரியும் எண்ணத்தை விட, நாடு கடந்து செல்ல வேண்டும் என்ற வேட்கை மிக அதிகமாக உள்ளது. 95% மாண்வர்கள், தங்களுடைய படிப்பு முடிந்ததும், வெளிநாட்டிற்க்குச் செல்கின்றனர்; எதற்கு? 90% பேர் மேல்படிப்பிற்கென சொன்னாலும், படிப்பு முடிந்ததும் பெரும்பாலானோர் திரும்பி வருவதில்லை. மேல்படிப்பிற்குச் செல்வதில் தவறே இல்லை. ஆனால் திரும்பி வராமல் அங்கேயே இருப்பது தான் தவறு. இப்படியே சுமார், 80000 பேர் அங்கேயே தங்கி விட்டனர். இது இந்த நாட்டிற்கு மிக பெரிய இழப்பு.

இந்தியாவில், அங்கு கிடைப்பது போல் வருமானம் / வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை தான். ஆனால், அதையே காரணம் காட்டி தங்கள் செயலுக்கு நியாயம் கற்பித்தல் சரியாக இருக்காது.

தங்கள் பொருளாதாரத்தை உயர்த்த, அங்கே பணி புரியட்டும்.

ஆனால், ஐஐடி-ல் சேர்வதற்கும், வெளிநாடு சென்று படிப்பதற்கும், அங்கு பணிபுரிவதற்கும், அந்த நாட்டு குடியுரிமை பெறுவதற்கும் காட்டும் ஆர்வத்தை இந்தியா திரும்புவதற்கும் காட்டினால் நலம்.

இந்தியா இழந்து கொண்டிருப்பது சாதாரண நபர்கள் அல்ல. நாட்டின் தலைசிறந்த அறிவியாலர்களை. ஆனால் அவர்கள் அந்த நாட்டில் தங்களுடைய அடையாளத்தை இழப்பதற்கு (இந்திய குடியுரிமை) அவர்கள் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை. அங்கு இருக்கும் அனைவரும் தங்களின் பொருளாதாரத்தை நன்கு உயர்த்தி, அந்த நாட்டின் பொருளாதாரம், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் வழி வகுத்துள்ளனர். ஆனால் அவர்களின் தரம் உயர வழி வகுத்த நாடு உயரவும் அவர்கள் பாடு படவேண்டும். அவர்கள் தங்களின் உறவினர்களுக்கு அனுப்பும் பணமும், 10-20 வருடங்கள் கழித்து சில நிறுவனங்களுக்கு அவர்கள் வழங்கும் நன்கொடையும், நாடு அவர்களுக்கு செய்த உதவிக்கு ஈடாகாது.

பல கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு கல்லூரி படிப்பு இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. பல லட்சக்கணக்கான பேருக்கு கிடைக்காத அரிய வாய்ப்பு, சிறந்த கல்வி, மற்றும் வசதி அவர்களுக்கு கிடைக்கின்றது என்பதனையும் அவர்கள் மறந்து விடக் கூடாது.

அவர்கள் சொல்லலாம்; எங்களின் திறமையினால் தான் நாங்கள் இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறோம் என்று; மறுக்க முடியாது. ஆனால் அவர்களை இவ்வாறாக உயர்த்த, இந்த சமுதாயம் (கெட்ட / நல்ல விசயங்கள்), நமது கல்விமுறை, போட்டி, நமது நாட்டின் அரசியல் சீர்கேடு முதலானவைகளும் முக்கிய காரணிகள்.

அதே நேரத்தில், மக்களின் கோடிக்கணக்கான வரிப் பணமானது, இந்த கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு செலவிடப்படுகின்றது. இவர்கள் அயல்நாட்டிற்கு சென்று சம்பாதிப்பதற்காகவும், அந்த நாடுகள் வளர்ச்சி பெறவும் மட்டும் இந்தப் பணம் செலவிடப்படவில்லை. பணத்தை விட அவர்களின் சேவை இங்கு தேவை என்பதை அவர்கள் நினைவு கொள்தல் வேண்டும்.

இந்த ஜனநாயக நாட்டில் (?), யாரையுமே இங்கு தான் வாழ வேண்டும் என வலியுறுத்த முடியாது. அவர்கள் கூறும், அரசியல் சீரழிவு, ஊழல், லஞ்சம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதியின்மை போன்றப் பல பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக, இந்த நாட்டை விட்டு செல்வது மட்டும் தீர்வாகாது. அதே நேரத்தில், பலர், இங்கிருந்து கொண்டு இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது. Infosys நாராயண மூர்த்தி, நந்தன் நில்கேனி, அருண் சோரி, K.V.காமத் (ICICI), உள்பட பலர். இன்னும் பலர், ஐஐடி களில், ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை சொற்பமே. மற்றவர்களைப் போல, நந்தன் நில்கேனியும் வெளிநாட்டிற்கு சென்றிருந்தால், நாம் Infosys என்ற சிறந்த நிறுவனத்தை பெற்றிருக்க மாட்டோம். Infosys, தற்போது 30000 க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது மட்டுமன்றி பொருளாதாரம் உயரவும் வழி வகுத்துள்ளது. ஐஐடிகளில் படித்தவர்களில் 50% இங்கு தங்கி இருந்தாலே நிச்சயமாக Infosys போல பல நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் துவக்கப்பட்டு சாதனைகள் பல செய்திருக்க முடியும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், தேசிய நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு முன்னாள் ஐஐடி மாணவர், சில சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டார். அப்போது, ஓர் ஐஐடி ஆசிரியர், "இந்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஐஐடி மாணவர்கள் இந்தியாவில் பணிபுரிவதை ஊக்கப்படுத்த மாட்டோம்" என்றார்.

இது அவரின் பொறுப்பற்றத்தன்மைக்குச் சான்று. அந்த மாணவரின் மறைவு பெரிய இழப்புத் தான். ஆனால் இந்தியா போன்ற பெரிய, வளர்ந்து வரும் நாட்டில் இது போன்ற சில நிகழ்வுகள் சில நேரங்களில் தவிர்க்க முடியாததது. முதலில் இத்தகய ஆசிரியர்கள் தங்களின் எண்ணங்களை மாற்றிக் கொண்டு, மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அப்போது தான் அவர்களுக்கும் நம்பிக்கை பிறக்கும். நம் நாட்டிற்கும் ஒரு வழி கிடைக்கும்.

என்ன தீர்வு:

ஐஐடி, சேர்க்கை விதிகளில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். ஐஐடி மாணவர்கள், மேல்படிப்பிற்கு வெளிநாடு செல்ல எந்த தடையும் இல்லை. அவர்கள் தங்கள் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த, அங்கு பணிபுரியவும் எந்த தடையும் இல்லை. ஆனால், 10 வருடங்களில் அவர்கள் தாய்நாடு திரும்ப ஆவண செய்ய வேண்டும்.

இந்தியா மாறாது; இது வாழ்வதற்கு உகந்த நாடு அல்ல என்று அங்கிருந்து கூவுவதை விடுத்து, அதை மாற்ற என்ன செய்யலாம் என்று எண்ணி செயலில் இறங்குவது சாலச் சிறந்தது.

ஐஐடி ஆசிரியர்கள், மாணவர்களை இந்தியா திரும்புவதற்கான அவசியத்தை எடுத்துரைத்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்த மாறுதல்கள் மிக மிக அவசியம்.

இல்லையென்றால், ஐஐடிகள், வெளிநாடுகளுக்கு தலைசிறந்த வல்லுனர்களை ஏற்றுமதி செய்யும் வெறும் மனித தொழிற்சாலைகளாகி விடும்.



ஸ்ருசல்

வனீசா மே (Vaneesa Mae) - ஏ ஆர் ரகுமான்

வனசா மே (Vaneasa Mae) - ஏ ஆர் ரகுமான் - Choreography

வனசா மே உலகப் புகழ் பெற்ற வயலின் இசைக் கலைஞர். அவருடைய Choreography என்ற புதிய இசைப் படைப்பில், ஏ ஆர் ரகுமானும் ஒரு பாடலுக்கு (பாடல் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா என்று தெரியவில்லை) , இசை அமைத்துள்ளார். இரண்டு வாரக் காத்திருப்பிற்குப் பின் நேற்று தான் அந்த இசைத் தட்டு கிடைத்தது. மொத்தம் 10 பாடல்கள் (பல இசை அமைப்பாளர்கள் சேர்ந்து இசை அமைத்துள்ளனர்). அதில் "Raga Dance", ஏ ஆர் ஆரின் கைவண்ணத்தில் உருவானது. மற்றவர்களின் பாடலுடன் ஒப்பிடும்போது, ரகுமானின் இசை எவ்வாறு இருக்குமோ என்ற சந்தேகத்துடன் CD Player-ல் இசைத் தட்டை ஒலிக்க விட்டேன்.

என்னுடைய எதிர்பார்ப்பிற்கும் மேலாக, மற்ற எல்லா பாடல்களை விடவும் ரகுமானின் பகுதி மிகச் சிறப்பாக வந்திருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. Worth the money!. (CD-ன் விலை 399).

அதில் இன்னொரு பாடல். Handels Minuet. இசையமைப்பாளரின் பெயர் மறந்து விட்டது. அந்தப் இசையை எங்கோ கேட்டது போல் ஒரு உள்ளுணர்வு. என்னிடம் இருந்த அத்தனை (BGM) பின்னணி இசைத் தொகுப்பினையும் ஒலிக்கச் செய்து, அது என்ன எனக் கண்டறிந்த பின் தான் நிம்மதி. அந்தப் பாடல் அப்படியே ஜானி (1978) படத்தின் பின்னணி இசையை பதிவு செய்தது போல் உள்ளது.

இசை என்பதே ஒரு அற்புதமான விசயம். அதைத் திறம்பட இசைத்து, மற்றவர்களை மெய்மறந்து ரசிக்கச் செய்யும், ரகுமான் அவர்கள் ஓர் அற்புதமான இசைக் கலைஞர். அவரின் பல பாடல்கள் பல படங்களின் வெற்றிக்கும், வெற்றிக்கு உறுதுணையாகவும் இருந்திருக்கிறது. ஆனால் அவரின் பல அற்புதமான பாடல்கள், படங்களின் வர்த்தக தோல்வியினால் ரசிக்கப்படாமல் போயிருக்கின்றன. அவற்றில் முக்கியமானது. "வெள்ளைப் பூக்கள்.." என்ற பாடல். இது "கன்னத்தில் முத்தமிட்டால்" என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. உங்களில் எத்தனை பேருக்கு அந்த பாடலைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது எனத் தெரியவில்லை. இல்லை என்றால், பாடலைக் கேட்க முயற்சி செய்யவும். அதைத் தவிர இன்னும் சில பாடல்களையும் குறிப்பிடலாம். இன்னொரு நாள் பட்டியலிடுகிறேன்.

வரும் அக்டோபர் 8-ம் தேதி இங்கு, Bangalore-ல் நடைபெறவிருக்கும் ரகுமானின் இசை நிகழ்ச்சியைக் காண மிக ஆவலுடன் உள்ளேன்.

வெள்ளி, செப்டம்பர் 16, 2005

மற்றுமொரு அண்டை மாநில பிரச்சினை - தமிழகத்திற்கு...

எழுபத்தைந்து ஆண்டு காவிரி பிரச்சினை இன்னும் முடிவிற்கு வரவில்லை. ஆனால் அதற்கு முன் மற்றுமொரு பிரச்சினை உருவெடுத்து உள்ளது; தமிழகத்திற்கும் - கர்நாடக மாநிலத்திற்கும். ஒக்கேனக்கலில் தடுப்பு சுவர் எழுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக தொழிலாளர்களை, கர்நாடக காவலர்கள் தடுத்தது மட்டுமல்லாமல், அவர்களின் உபகரண்களை ஆற்றில் வீசியதாகச் சொல்லப்படுகிறது. தமிழகம் சுவர் எழுப்ப நினைத்த இடம், கர்நாடக எல்லை பகுதியில் வருவதாக கர்நாடக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கிடைத்த செய்திகளின் வாயிலாக, யார் பக்கம் தவறென்று அறிதியிட்டுக் கூற முடியவில்லை.

அடுத்து என்ன நடக்கும்?

இரு மாநில அரசும், பேச்சு வார்த்தைக்கு செல்லும். முதல் கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வி அடையும். அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வி அடையும். வழக்கு நீதிமன்றம் செல்லும். அப்புறமென்ன? தீர்ப்பு வராது. அல்லது, தீர்ப்பு வர, 30-40 வருடங்கள் ஆகும். அப்படியே வந்தாலும், அதை ஏதாவது ஒரு அரசு எதிர்க்கும். மேலும், இந்த பிரச்சினையானது, அடுத்த தலைமுறைக்கு தள்ளப்படும். அவர்களும், எதற்காக, போராடுகின்றோம் என தெரியமாலே, போராடுவார்கள். ஒன்று மட்டும் விளங்கவில்லை; எதற்காக இரண்டு அண்டை மாநில அரசு அதிகார வட்டங்கள், எதிரி நாட்டைச் சேர்ந்தவர்களைப் போல சண்டையிட்டுக் கொண்டு, பிரச்சினைகளை வளர்த்துக் கொண்டது மட்டுமல்லாமல், இரு மாநில மக்களின் மனத்தில் காழ்ப்புணர்ச்சியை வளர்த்துள்ளனர்?. இரு மாநிலங்களிலும், ஏறக்குறைய அனைத்துக்கட்சிகளும் தத்தம் மாநிலங்களுக்கு நலம் புரிவதாகக் கூறி, காவேரி பிரச்சினைக் கொண்டு, யாராலும் ஆட்சியை பிடிக்க / தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்க இயலவில்லை. அந்தந்த நேரத்தில், ஏற்பட்ட பிரச்சினைகள், இடையூறுகள் தான் தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கும் காரணிகளாக அமைந்து வருகின்றன.

பிரச்சினை என்னவோ சிறியது தான். ஆனால், அதன் விளைவுகள் தான், விபரீதகரமானவை. இந்த சிறிய இடத்திற்காக கோடிக்கணக்கான மக்கள் தங்கள் மனதில் மற்றவர்களை பற்றிய கெட்ட எண்ணங்களை வளர்த்து, முகம் பாராமல் பகைமை பாராட்டுவார்கள். பார்க்காமலேயே மனதில் விரோதம் வளர்க்கும் ஒரே இனம், அது மனித இனம் தான்.

சிறிது நாட்களுக்கு முன்னால், விகடன் வார இதழில் ஞாநி என்பவர் தன்னுடய தொடரில், "கர்நாடகம், இன்னும் பிடிவாதமாக இருக்குமாயின், அதனை இந்திய நாட்டில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் அல்லது தமிழகம் தனியே சென்று விட வேண்டும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

என்ன ஒரு கீழ்த்தரமான சிந்தனை? இப்படிபட்ட சிலரின் மனதில் ஏற்படும் விபரீதமான எண்ணங்கள், பிற்காலத்தில் பெரிய பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றன. ஒரே நாட்டில் இருந்து கொண்டு பெற முடியாத உரிமையை தனி நாடாக இருந்து எங்கிருந்து பெறுவது?

இதற்கு எந்த வழியும் இருப்பதாக தெரியவில்லை. குறைந்தபட்ச தீர்வுக்கு, இரண்டு மாநில மக்களும், இத்தகைய பேச்சுகளுக்கு ஆதரவு அளிக்காமல் இருந்தாலே போதுமானது. இந்த மனநிலையை அடைய பல ஆண்டுகள் பிடிக்கும். அதுவரை மாண்புகு நமது அரசியல்வாதிகள் அமைதியாக இருக்க வேண்டுமே?

ஒன்று மட்டும் உண்மை. பிரச்சினைகளுக்கு காரணமாணவர்கள் மறைந்தாலும், அவர்கள் விட்டுச் சென்ற பிரச்சினைகள் இன்னும் வாழ்ந்து, மக்களுக்கு இடர்பாடாகத் தான் இருந்து வருகின்றன. மனிதன் எப்படி இருந்தாலும் வாழ்ந்து விடுவான். இடர்பாடு இல்லாத வாழ்க்கையை மட்டும் வெறுத்து விடுவான். அவனுடைய அன்றாட வாழ்வில், ஏதாவது ஒன்று வெறுக்க, வெறுத்து பேச, இகழ கண்டிப்பாக இருந்தாக வேண்டும். இது தான், உலக நியதியோ?



ஸ்ருசல்