செவ்வாய், ஜனவரி 31, 2006

டைம்ஸ் நவ் - புதிய தொலைக்காட்சி செய்தி அலைவரிசை

டைம்ஸ் நிறுவனம் (த டைம்ஸ் ஆப் இந்தியா, எக்கனாமிக் டைம்ஸ் முதலான பத்திரிக்கைகளை நடத்தி வரும் நிறுவனம்), Times Now என்ற புதிய தொலைக்காட்சி செய்தி அலைவரிசையினை இன்று அதிகாலை முதல் ஆரம்பித்துள்ளது. இது உலகப் புகழ்பெற்ற செய்திச் சேவை நிறுவனமான, ராய்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும். முதல் நாள் என்பதால் அதிக முக்கியத்துவம் இல்லாத செய்திகளே ஒளிபரப்பாகின்றன. (சோய்ப் அக்தரின் பந்துவீச்சு, ஐஸ்வர்யா ராய் பற்றிய செய்திகள் அதிகம் இடம்பெற்றுள்ளன). செய்தி வழங்கும் விதம் நன்றாக இருக்கிறது. ஆனால் அவை தரம் வாய்ந்ததாக இருக்குமா என்பது தான் கேள்வி.

இந்த செய்தி அலைவரிசைக்கு, த டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை மற்றும் ராய்டர்ஸ் (Reuters) செய்திச் சேவை நிறுவனத்தின் ஆதரவு இருப்பது பலம். ஏற்கனவே இந்த நிறுவனம் Zoom என்ற தொலைக்காட்சியையும் நடத்தி வருகிறது.

இந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்திச் சேவை வழங்கும் நபர்களில் பெரும்போலோனோர் (அர்னாப் கோஷ்வாமி, ஹரிஸ்ரீ மேத்தா போன்றோர்கள்) CNBC, Star News, என்.டி.டி.வி, ஆஜ் தக் போன்ற பல முன்னணி தொலைக்காட்சிகளான நிறுவனங்களிலிருந்து வந்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக CNN-IBN ராஜ்தீப் தேசாயினால் ஆரம்பிக்கப்பட்டு, நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் செய்தி நிறுவனங்களான ஸ்டார் நியூஸ், என்.டி.டி.வி, CNN IBN, மற்றும் ஹைட்லைன்ஸ் வரிசையில் இதுவும் சேர்ந்துள்ளது. இது ஓர் ஆரோக்கியமான விசயமே.

ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா, ஒரு சாராருக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடும் முறைக்கு, புகழ்பெற்றது. இந்திராகாந்தி ஆட்சியின் போது மட்டுமல்லாமல், இப்போது கூட அது வெளியிடும் சில செய்திகளில் அது எதிரொலிக்கவே செய்கிறது. இரண்டு மாநிலங்களிலும் இரு வேறுபட்ட நிலையை எடுத்து செய்தி வெளியிடப்படுவதையும் உணரமுடிகிறது.

பெங்களூரில் வெளியாகும் பத்திரிக்கையில், மஹாராஷ்டிராவிற்கு எதிரான செய்திகளைப் பார்க்க முடிகிறது. பல முறை, தமிழகத்திற்கு எதிராக, பல காட்டமான, சம்பந்தமில்லாத செய்திகளை முதல் பக்கத்திலேயே பார்க்க முடிந்தது (யாரின் நிர்பந்தமோ தெரியவில்லை?). மூன்று மாதங்களுக்கு முன்பாக, ஒக்கேனக்கல் பிரச்சினை நிகழ்ந்த போது அடுத்தடுத்த இரண்டு நாட்களில் கீழ்கண்ட செய்திகள் வெளியாயின.

"வெளிமாநிலத்தாரின் ஆதிக்கம் அதிகமாகிறது பெங்களூரில்" என்ற செய்தியை வெளியிட்டு, "தமிழகத்திலிருந்து 'X' லட்சம் பேர் வசிக்கிறார்கள். 2001 லிருந்து அது 'Y' லட்சம் உயர்ந்திருக்கிறது. அதே போல ஆந்திராவிலிருந்து ...." என்ற மாதிரி அந்த செய்தி இருந்தது.

"Karnataka loses again to Tamilnadu"

என்று தலைப்பு வெளியிட்டு, "திருப்பதிக்கு வெண்ணெய் கொடுக்கும் உரிமை கரூர் பால் சங்கத்திற்குக் கிடைத்தது. இதிலும் கர்நாடாகா தமிழகத்திடம் தோல்வியடைந்துள்ளது" (இது இத்தனைக்கும் பல வாரங்களுக்கு முன்பாகவே நிகழ்ந்தது. தமிழ் நாளிதழிலும் நான் ஏற்கனவே பார்த்திருந்தேன்)

மற்றும் ஒக்கேனக்கல் சம்பந்தமான மற்றுமொரு செய்தி.

இது போல துவேசமான செய்திகளை வெளியிட்டு, அதன் மேலிருந்த அதிருப்தி அதிகரிக்க வழிவகுத்தது.

செய்தியை சந்தர்ப்பத்திற்குத் தகுந்த மாதிரியும், தேவைக்கேற்றார்போல திரித்தோ, மாற்றியோ, முக்கியத்துவம் கொடுத்தோ வெளியிட்டு வரும் டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பத்திரிக்கையை நடத்தி வரும் நிறுவனத்தினரனால், பாகுபாடில்லாமல் செய்திச் சேவையை தொலைக்காட்சியில் வழங்கமுடியுமா என்பது தான் கேள்வி.

தொலைக்காட்சி சேனல்களுக்கும் தினமும் ஒரு தலைப்பை, விவாதத்திற்காக யோசிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. பல தொடர்பில்லாத தலைப்புகள் விவாதிக்கப்படுகின்றன. மாதங்கள் பலவாகிவிட்டன குஷ்பூ விவகாரம் அடங்கி. ஆனாலும் என்.டி.டி.வி இன்னும் அதனை விடவில்லை. "Is chennai the most conservative city?" என்ற தலைப்பில் விவாதம். தலையில் அடித்துக்கொள்ளத் தோன்றியது. இது நான்காவதோ, ஐந்தாவதோ நிகழ்ச்சி என நினைக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை SMS அனுப்புங்கள் எனக் கூறியிருந்தனர். நானும், "Is this programme really necessary at this moment?" என அனுப்பினேன். கடைசி வரை அந்த செய்தியைத் திரையில் காட்டவில்லை.

ஸ்ருசல்

1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

(Times of India) = (Dhinamalar X 100 in English)