
அந்த நிறுவனத்தில் 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்த ரசல் டைஸ் என்ற முன்னாள் ஊழியர், இப்போது அந்த நிறுவனத்தின் தவறான செயல்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்ட ஆரம்பித்துள்ளார். அதில் முக்கியமானது, எந்த விதமான முன் அனுமதியும் இல்லாமல், அமெரிக்க குடிமக்களின் பேச்சை என்.எஸ்.ஏ. ஒட்டுக் கேட்டது என்பது.
"நான் SPA எனப்படும் Special Access Programs துறையில் நிபுணத்துவம் பெற்றவன். அதற்கு 'நிழல் உலகத் திட்டங்கள் (Black World Operations & Programs)' எனப் பெயர். அமெரிக்க உளவு நிறுவனங்கள், மற்ற நாடுகளையும், நாட்டு மக்களையும் உளவு பார்க்க உதவி
புரிவது எங்களின் பணி. ஆனால் என்.எஸ்.ஏ. வின் பல செயல்பாடுகள் அமெரிக்க அரசின் விதிமுறைகளை மீறிபவையாக இருக்கின்றன. இதைத் தெரிந்தே அங்குள்ள பல அதிகாரிகள் செய்கின்றனர். தகவல் பரிமாற்றத்தில் (ரேடியோ அலைகள், Chat, மின்னஞ்சல். தொலைபேசி, மின் நகல் உட்பட எந்த விதமான ஊடகத்தில் இருந்தும்), 'ஜிகாத்' என்ற வார்த்தை உபயோகம் இருந்தால், அந்த முழு உரையாடலையும் பதிவு செய்து, பகுக்கும் வசதி என்.எஸ்.ஏ இருக்கிறது. இது பெரும்பாலும் அதற்கான அனுமதி இல்லாமலேயே உபயோகப்படுத்தப்பட்டது. மேலும் சந்தேகமிருக்கும் நபரின் தொலைபேசி எண்ணை வைத்துக் கொண்டு, அதற்குத் தொடர்புடைய அனைத்து எண்களையும் (நூற்றுக்கணக்கில் இருந்து, ஆயிரக்கணக்கில் இருக்கும்) ஒரு வலை போல பிரித்தெடுக்கும் வசதி அதற்கு உண்டு", என்கிறார்.
இதனைப் பற்றி சில நாட்களுக்கு முன்பு நியுயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, அதற்குப் பதிலளித்த புஷ், "ஒரு சில நபர்களின் உரையாடலகள் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கலாம். நாட்டின் பாதுகாப்பிற்காக சில நேரங்களில் அது தவிர்க்க முடியாததாகிறது" என்றார்.
ஆனால் ரசல் டைஸ், "ஒன்றிரண்டு அல்ல. அது பல மில்லியன்களைத் தாண்டும்". என்கிறார்.
ஆனால் சென்ற ஆண்டே ரசல் டைஸ், மனவியாதியால் பாதிக்கப்பட்டிருப்பதாக பணியிலிருந்து விலக்கப்பட்டார். ஆனால் அது போல எந்த விதமான வியாதியும் தனக்கு இல்லையென்று என ரசல் மறுக்கிறார், "என்.எஸ்.ஏ.வின் செயல்பாடுகள் குறித்து எனது சந்தேகத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்ததால், என்னை எனது துறையில் இருந்து விடுவித்து, வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணிக்கு அனுப்பப்பினர். கடைசியில் எனக்கு மனவியாதி எனக் குற்றம் சாட்டி பணியில் இருந்து விடுவித்தனர். மேலும் இது எனக்கு மட்டும் நடக்கவில்லை. யார் யாரெல்லாம், இது போல எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இது நிகழ்வது இயல்பு", என்கிறார்.
2003 ஆம் ஆண்டு, நிறுவனத்தின் தவறான செயல்பாடுகளைப் பற்றி காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்போவதாக ரசல் கூறியுள்ளதாகத் தெரிகிறது. "அவ்வாறு ஏதாவது செய்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை செய்யப்பட்டதையும் விடுத்து ஓர் செனட்டரிடம் எனது கருத்துக்களைத் தெரிவித்தேன். அதன் பின்னர், உளவுத் துறை அதிகாரிகள் எனது வீட்டிற்கு வந்து மிரட்டி விட்டு சென்றனர்" என டைஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால நாட்டிற்கும், மக்களுக்கும் பாதுகாப்பும் வேண்டும், இது போல ஒட்டுக்கேட்காமல் எதுவும் செய்ய முடியாது என்பது என் கருத்து. பாதுகாப்பிற்காக, ஏதாவது ஒன்றை விட்டுக்கொடுத்து தான் ஆக வேண்டும். ஒட்டுகேட்பதை தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தினால் தான் தவறு.
என்.எஸ்.ஏ என்ன செய்கிறது? அதன் பலம் என்ன?

அமெரிக்காவின் மிகப் பெரிய உளவுபார்க்கும் நிறுவனம்; ஏன். சி.ஐ.ஏ விட மிகப்பெரியது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான நபர்கள் சி.ஐ.ஏ. விற்காக வேலைபார்த்தாலும் அதனை விட அதிகமான நபர்களை பணியில் அமர்த்தியுள்ளது என்.எஸ்.ஏ. அதற்கான பட்ஜெட்டும் சி.ஐ.ஏ விட அதிகம். இது சேகரிக்கும் தகவல்கள் கணக்கிலடங்காதது. பல வருடங்களாக அமெரிக்கர்களுக்கே என்.எஸ்.ஏ இருப்பதே தெரியாது. சி.ஐ.ஏ. வின் செயல்பாடுகள் மனித உளவு சம்பந்தப்பட்டது. என்.எஸ்.ஏ. வின் செயல்பாடுகளோ தகவல் உளவு சம்பந்தப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் 18000 கார்கள் நிறுத்துவதற்கு வசதி உள்ளது.
இணையத்தில் பரிமாற்றிக்கொள்ளப்படும் அனைத்து தகவல்களையும் NSA வினால் ஒரு பைட் விடாமல் எடுத்து, பகுக்க முடியும். அவர்களுக்கு இருக்கும் வசதியினைக் கொண்டு, எந்த ஒரு உள்நாட்டு / அயல்நாட்டுத் தொடர்பு தொலைபேசி அழைப்பையும் ஒட்டு கேட்கவும், எந்த ஒரு நாட்டின் நெட்வொர்க்கில் நுழைந்து தகவலைப் பெறவும், வேறொரு நாட்டின் தகவல் தொலைதொடர்பு இணைப்பையும் சிதைக்கவோ, தனிமைப் படுத்தவோ முடியும்.
அங்கு பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் கணிதத்தில் Ph.D பட்டம் பெற்றவர்கள். உலகத்தின் வேறெந்த நிறுவனத்தை விடவும் ஏன் நாசாவை விடவும், அதிகமான கணிதத்தில் Ph.D பெற்றவர்களை வேலை அமர்த்துவது என்.எஸ்.ஏ தான். பல கணித மாணவர்களின் கனவும் இங்கு பணியில் சேர்வது தான்.

பல கிரிப்டோகிராபி அல்காரிதம்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், பல நாடுகளின் கிரிப்டோகிராபி அல்காரிதம்கள் இங்கு உடைக்கப்பட்டு, எதிரி நாட்டுத் தகவல்கள் அமெரிக்க அரசுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. PGP என்பது கிரிப்டோகிராபியில் புகழ்பெற்ற,
RSA (Ron Rivest, Adi Shamir and Len Adleman ஆகியோர் உருவாக்கிய அல்காரிதம்) யின் வழியில் உண்டான மென்பொருள். உங்களையும், தகவல் பரிமாறிக்கொள்பவர்களைத் தவிர யாராலும் படிக்க முடியாத வழி. அந்த மென்பொருள் உருவாக்கிய நிறுவனம் நினைத்தால் கூட அதனைப் படிக்க முடியாது. ஆனால் அதனை உடைக்கவும், NSA விடம் கணினிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இது போன்ற பல அல்காரிதம்கள் உடைக்க இந்த நிறுவனத்திடம் வசதிகளும், கருவிகளும் இருப்பதாக நம்பப்படுகிறது.
பல நேரங்களில் கிரிப்டோகிராபி அல்காரிதம்கள் வெளியிட தடைகளும், சிக்கல்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும், ஆராய்ச்சிக் கழகங்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் கொடுத்துள்ளது. ஐ.பி.எம் உருவாக்கிய DES என்ற அல்காரிதத்திலும் கடைசி நேரத்தில் சில மாறுதல்களைச் செய்து, அதன் தகவலைப் பார்க்க வசதி செய்தது என்ற குற்றச்சாட்டும் உண்டு.
1989 ம் ஆண்டு, XEROX நிறுவனம் குஃபு, கஃபி (Khufu and Khafre) என்ற இரண்டு கிரிப்டோகிராபி அல்காரிதங்களை உருவாக்கியது. இதில் குஃபு 512 பிட் கொண்டு என்கிரிப்ட் செய்யும் முறையைக் கையாளுகிறது. இதனால், செய்தியை உடைப்பது மிக மிகக் கடினம். சாதரணம் கணினியை உபயோகப்படுத்தினால், பல மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகலாம். இது பாதுகாப்பு விசயத்தில் பல சிக்கல்கள் உருவாக்கும் என்பதால், அவற்றை வெளியிட வேண்டாம் என NSA, ஜெராக்ஸ் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது. ஜெராக்ஸ் நிறுவனம், அமெரிக்க அரசிடம் பல தொழில்சார்ந்த ஒப்பந்தங்களைப் போட்டிருந்ததால், வேறுவழியில்லாமல் கடைசியில் அந்தத் திட்டத்தைக் கைவிட்டது. ஆனால் அங்கு பணிபுரிந்த நபர் அந்த அல்காரிதத்தை 1989 ஆம் ஆண்டு வெளியிட்டார். அப்போது நடந்த செய்திப் பரிமாற்றங்களை நீங்கள் இங்கே படிக்கலாம்
மேலும் இந்த நிறுவந்த்திற்குத் தேவையான கருவிகளைத் தயாரிக்க, இங்கேயே ஹார்ட்வேர் தொழிற்சாலையும் அமைந்துள்ளது. என்.எஸ்.ஏ. வின் மின்சார கொள்முதல் மட்டும் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 20 மில்லியன் டாலர்கள் ஆகும்.

NSA பற்றி டான் பிரவுன், 'டிஜிட்டல் போர்ட்ரஸ்' என்ற புதினத்தை எழுதியிருந்தார். அதில் 3 மில்லியன் புராசசர்களைக் கொண்டு என்.எஸ்.ஏ "TRANSLTR" என்ற சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்குகிறது. அதன் மூலம் எந்த ஒரு என்கிரிப்ட் செய்யப்பட்ட செய்தியையும் உடைக்க முடியும். அங்கு பணிபுரிந்த முன்னால் ஊழியர் ஒருவர் அந்த கணினியை செயலிழக்கச் செய்ய, ஓர் புரோக்ராம் வைத்திருப்பதாகவும், அதனை ஒரிரு தினங்களில் வெளியிடவிருப்பதாகவும் மிரட்டுகிறார். அதனை எப்படி கதையின் நாயகி தடுக்கிறார் என்பது தான் கதை. நல்ல கருவாக இருந்தாலும், நம்ப முடியாத தகவல்களும், தவறான தகவல்களும் மிகுந்து காணப்பட்டதால் எரிச்சலையே ஏற்படுத்தியது.
ஸ்ருசல்
2 கருத்துகள் :
தகவல்களுக்கு நன்றி ஸ்ருசல்.
ஸ்ருசல்,
உங்கள் பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டம்..இருந்தாலும் தமிழ் நண்பர்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டு வருகிறேன்.
விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..
உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.
உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்,அன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும்
பொங்கட்டும்.
அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா.
கருத்துரையிடுக