செவ்வாய், ஜனவரி 31, 2006

டைம்ஸ் நவ் - புதிய தொலைக்காட்சி செய்தி அலைவரிசை

டைம்ஸ் நிறுவனம் (த டைம்ஸ் ஆப் இந்தியா, எக்கனாமிக் டைம்ஸ் முதலான பத்திரிக்கைகளை நடத்தி வரும் நிறுவனம்), Times Now என்ற புதிய தொலைக்காட்சி செய்தி அலைவரிசையினை இன்று அதிகாலை முதல் ஆரம்பித்துள்ளது. இது உலகப் புகழ்பெற்ற செய்திச் சேவை நிறுவனமான, ராய்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும். முதல் நாள் என்பதால் அதிக முக்கியத்துவம் இல்லாத செய்திகளே ஒளிபரப்பாகின்றன. (சோய்ப் அக்தரின் பந்துவீச்சு, ஐஸ்வர்யா ராய் பற்றிய செய்திகள் அதிகம் இடம்பெற்றுள்ளன). செய்தி வழங்கும் விதம் நன்றாக இருக்கிறது. ஆனால் அவை தரம் வாய்ந்ததாக இருக்குமா என்பது தான் கேள்வி.

இந்த செய்தி அலைவரிசைக்கு, த டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை மற்றும் ராய்டர்ஸ் (Reuters) செய்திச் சேவை நிறுவனத்தின் ஆதரவு இருப்பது பலம். ஏற்கனவே இந்த நிறுவனம் Zoom என்ற தொலைக்காட்சியையும் நடத்தி வருகிறது.

இந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்திச் சேவை வழங்கும் நபர்களில் பெரும்போலோனோர் (அர்னாப் கோஷ்வாமி, ஹரிஸ்ரீ மேத்தா போன்றோர்கள்) CNBC, Star News, என்.டி.டி.வி, ஆஜ் தக் போன்ற பல முன்னணி தொலைக்காட்சிகளான நிறுவனங்களிலிருந்து வந்துள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக CNN-IBN ராஜ்தீப் தேசாயினால் ஆரம்பிக்கப்பட்டு, நன்றாக சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் செய்தி நிறுவனங்களான ஸ்டார் நியூஸ், என்.டி.டி.வி, CNN IBN, மற்றும் ஹைட்லைன்ஸ் வரிசையில் இதுவும் சேர்ந்துள்ளது. இது ஓர் ஆரோக்கியமான விசயமே.

ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா, ஒரு சாராருக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடும் முறைக்கு, புகழ்பெற்றது. இந்திராகாந்தி ஆட்சியின் போது மட்டுமல்லாமல், இப்போது கூட அது வெளியிடும் சில செய்திகளில் அது எதிரொலிக்கவே செய்கிறது. இரண்டு மாநிலங்களிலும் இரு வேறுபட்ட நிலையை எடுத்து செய்தி வெளியிடப்படுவதையும் உணரமுடிகிறது.

பெங்களூரில் வெளியாகும் பத்திரிக்கையில், மஹாராஷ்டிராவிற்கு எதிரான செய்திகளைப் பார்க்க முடிகிறது. பல முறை, தமிழகத்திற்கு எதிராக, பல காட்டமான, சம்பந்தமில்லாத செய்திகளை முதல் பக்கத்திலேயே பார்க்க முடிந்தது (யாரின் நிர்பந்தமோ தெரியவில்லை?). மூன்று மாதங்களுக்கு முன்பாக, ஒக்கேனக்கல் பிரச்சினை நிகழ்ந்த போது அடுத்தடுத்த இரண்டு நாட்களில் கீழ்கண்ட செய்திகள் வெளியாயின.

"வெளிமாநிலத்தாரின் ஆதிக்கம் அதிகமாகிறது பெங்களூரில்" என்ற செய்தியை வெளியிட்டு, "தமிழகத்திலிருந்து 'X' லட்சம் பேர் வசிக்கிறார்கள். 2001 லிருந்து அது 'Y' லட்சம் உயர்ந்திருக்கிறது. அதே போல ஆந்திராவிலிருந்து ...." என்ற மாதிரி அந்த செய்தி இருந்தது.

"Karnataka loses again to Tamilnadu"

என்று தலைப்பு வெளியிட்டு, "திருப்பதிக்கு வெண்ணெய் கொடுக்கும் உரிமை கரூர் பால் சங்கத்திற்குக் கிடைத்தது. இதிலும் கர்நாடாகா தமிழகத்திடம் தோல்வியடைந்துள்ளது" (இது இத்தனைக்கும் பல வாரங்களுக்கு முன்பாகவே நிகழ்ந்தது. தமிழ் நாளிதழிலும் நான் ஏற்கனவே பார்த்திருந்தேன்)

மற்றும் ஒக்கேனக்கல் சம்பந்தமான மற்றுமொரு செய்தி.

இது போல துவேசமான செய்திகளை வெளியிட்டு, அதன் மேலிருந்த அதிருப்தி அதிகரிக்க வழிவகுத்தது.

செய்தியை சந்தர்ப்பத்திற்குத் தகுந்த மாதிரியும், தேவைக்கேற்றார்போல திரித்தோ, மாற்றியோ, முக்கியத்துவம் கொடுத்தோ வெளியிட்டு வரும் டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பத்திரிக்கையை நடத்தி வரும் நிறுவனத்தினரனால், பாகுபாடில்லாமல் செய்திச் சேவையை தொலைக்காட்சியில் வழங்கமுடியுமா என்பது தான் கேள்வி.

தொலைக்காட்சி சேனல்களுக்கும் தினமும் ஒரு தலைப்பை, விவாதத்திற்காக யோசிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. பல தொடர்பில்லாத தலைப்புகள் விவாதிக்கப்படுகின்றன. மாதங்கள் பலவாகிவிட்டன குஷ்பூ விவகாரம் அடங்கி. ஆனாலும் என்.டி.டி.வி இன்னும் அதனை விடவில்லை. "Is chennai the most conservative city?" என்ற தலைப்பில் விவாதம். தலையில் அடித்துக்கொள்ளத் தோன்றியது. இது நான்காவதோ, ஐந்தாவதோ நிகழ்ச்சி என நினைக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை SMS அனுப்புங்கள் எனக் கூறியிருந்தனர். நானும், "Is this programme really necessary at this moment?" என அனுப்பினேன். கடைசி வரை அந்த செய்தியைத் திரையில் காட்டவில்லை.

ஸ்ருசல்

தேடிக் கிடைப்பதில்லை டியனன்மென் சதுக்கம்!

சென்ற வாரம், உலகத்தின் மிகப் பெரிய இணையத் தேடியான கூகுள் இரு விசயங்களுக்காக அதிகமாக விவாதிக்கப்பட்டது.

1. அமெரிக்க அரசின் ஓர் உத்தரவிற்கு கட்டுப்பட மறுத்து, நீதிமன்றத்திற்கு சென்றது.
2. சீன அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு கூகுள் தேடியில் மாறுதல் செய்தது.

Google Office

1. அமெரிக்க அரசின் ஒரு உத்தரவிற்கு கட்டுப்பட மறுத்து, நீதிமன்றத்திற்கு சென்றது.

அமெரிக்க அரசு (அரசுசார் நிறுவனம்), முன்னணி தேடிகளான கூகுள் (Google), யாகூ (Yahoo) மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள், அதன் பயனாளர்கள் உபயோகப்படுத்திய 1 மில்லியன் தேடல் வார்த்தைகளைக் கொடுக்க வேண்டும் எனக் கூறியது. அந்த வார்த்தைகள், எம்மாதிரியான விசயங்களுக்காக (முக்கியமாக போர்னோகிராபி) அமெரிக்க மக்களால் தேடிகள் உபயோகப்படுத்தப்படுகின்றன் என்பது பற்றிய ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு யாகூ அரசு கேட்பதை கொடுக்க ஒப்புக்கொண்டது. ஆனால் கூகுள் மட்டும், "இது பயனாளர்களின் அந்தரங்கத்தைப் பாதிக்கும் விசயம்", எனக் கூறி கொடுக்க மறுத்தது மட்டுமல்லாமல், அரசுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்லப்போவதாகவும் அறிவித்துள்ளது. "இன்று என்ன என்ன வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது எனக் கேட்கப்படும். இன்னும் சில நாட்கள் கழித்து, யார் யார் என்ன என்ன தேடினார்கள்? அந்த விபரங்கள் வேண்டும் எனக் கேட்டால் அதையும் கொடுக்க வேண்டிய நிலை வரும்" எனவும் வாதிடப்பட்டது.



பொதுவாக அனைத்து தேடிகளும், அவற்றிற்கு வரும் தேடல் வார்த்தைகளை (Search Queries) சேமித்து வைப்பது வழக்கம். கூகுளும் அவ்வாறே செய்து வந்துள்ளது. அரசு, இது சம்பந்தமாக ஏதேனும் கொள்கை வகுத்திருக்கிறதா என்று தெரியவில்லை. நீங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பாக தேடிய விசயங்கள் கூட இன்னும் அழிக்கப்படாமல் கூகுளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அது பற்றி, சமீபத்தில் வந்த "The Google Story" என்ற புத்தகத்தின் "Porn Cookie Guy" (பக்கம் 165-ல்) அத்தியாயத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. (இந்த புத்தகம் பற்றி எழுத வேண்டும் என பல வாரங்களாக நினைத்திருந்தேன். வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனைப் பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன். புத்தகம் சுமார் தான்)

"Computer users searching for pornography online may be mistaken in concluding that they are viewing it anonymously and privately. Google maintains electronic records of all searches, which can be traced back to specific computers. If someone has a Gmail account or has regiastered for any other Google Service, the firm's electronic records could be used to trace porn searches to specific individuals.

Not suprisingly, both Google and its biggest competitior, Yahoo, profit handsomely by selling sex related ads. Pornography, withing limits, is protected by the First Amendment in thw U.S. In countries where online pornography is banned, including Germany and India, Google and Yahoo abide by statutes."
அதாவது ஒவ்வொரு முறையும் கூகுள் தேடி உபயோகிக்கப்படும் போதும், தேடுபவரின் IP Address-ம், தேடக் கொடுத்த வார்த்தைகளும் சேமிக்கப்படுகின்றன. இதனைக் கொண்டு, தேடுபவரை சுலபமாக அடையாளம் காணமுடியும். அதுமட்டுமல்லாமல், Gmail-ம் இன்ன பிற சேவைகளும் (Google Services)-ம் இணைக்கப்பட்டுள்ளது, இந்த வேலையை இன்னும் சுலபமாக்குகிறது. மேலும் இந்தத் தகவல்கள் என்றுமே அழிக்கப்படுவதில்லை.

இதுவே, இப்போது கூகுளுக்கும், அதன் பயனாளர்களுக்கும் வினையாக அமைந்துள்ளது. கூகுளுக்கு இது எப்படி சிக்கலாக அமைய முடியும்? அரசு கேட்கும் விபரங்களைக் கொடுத்தால், கூகுளின் மீதான நம்பகத்தன்மை பயனாளர்களிடம் குறைந்துவிடும். ஒரு வேளை கொடுக்க மறுப்பது நம்பகத்தன்மை உயர்த்துவதற்கான முயற்சியாகக் கூட இருக்கலாம். (இது என்னுடைய யூகம் மட்டுமே)

வழக்கில் வெற்றிபெற்றால், நல்ல பெயர் கிடைக்கும். தோல்வியுற்றால், மக்களுக்கு உண்மையாக இருப்பதற்கு பாடுபட்டதற்காக மக்களிடம் மதிப்பு கூடும்.

எதற்காக கூகுள் அனைத்து தகவல்களையும் சேமித்து வைக்க வேண்டும்? அவ்வாறு செய்வதால் தானே சிக்கல்?. அரசு கேட்கும் போது, சுலபமாக "எங்களிடம் அந்த தகவல் இல்லை", என சொல்லியிருக்கலாம். அதை விடுத்து, "இருக்கிறது. ஆனால் தர இயலாது." எனக் கூறுவது வீண் வேலை தான். அப்படியென்றால் அவர்கள் அந்தத் தகவல்களை வைத்து என்ன தான் செய்கிறார்கள்?

இப்போது எட்வெர்ட் என்ற அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர், இது போல தனிநபர் பற்றிய விபரங்களை ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குப் பிறகு சேமித்து வைக்க தடை விதிக்க வேண்டும் எனக் கூறி ஒரு மசோதாவைத் தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகிறார். ஒரு வேளை அவரும் வில்லங்கமாக கூகுள் தேடியை உபயோகப்படுத்தியிருப்போரோ? யார் கண்டது புஷ் கூட உபயோகப்படுத்தியிருக்கலாம்.

2. சீன அரசின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு கூகுள் தேடியில் மாறுதல் செய்தது

கூகுளின் சீனத் தளத்திற்கு (google.cn), சீன அரசு சில கட்டுபாடுகளை விதித்துள்ளது. "கூகுள் தேடி, விடைகளை பயனாளர்களுக்குக் கொடுக்கும் போது, சில விடைகளை (சீனா, தைவான் அரசியல், புரட்சி சார்புடைய மற்றும் இன்ன பிற விசயங்களை) பகுத்து கொடுக்கவேண்டும்", என்பது அந்த கட்டுபாடு. இதற்கு கூகுளும், அனைவரும் ஆச்சர்யப்படும்படியாக, ஒப்புக்கொண்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பலர் அந்த நிறுவனத்தின் இரட்டை வேடத்தை எதிர்த்தும், இன்னும் பலர் அதன் வியாபாரத் தந்திரத்தை ஆதரித்தும் பேசிவருகின்றனர். இது தான் ஒரு பன்னாட்டு தேடி நிறுவனத்தின், முதல் முழுமையான சீனத் தளம். மற்ற முன்னணி நிறுவனங்களான யாகுவும், மைக்ரோசாப்ட்-ம் கூட இன்னும் முழுமையான சீனப் பதிப்பினை ஆரம்பிக்காத நிலையில், கூகுளின் முயற்சி அதன் சந்தை பங்கினை கணிசமாக உயர்த்துவதற்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.



கூகுள் google.com-ல் tiananmen square என்று தேடினால் 1989-ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தைப் பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கும். அவற்றில் குறிப்பிடத்தக்கது விக்கிபீடியாவினுடையது. (விக்கிபீடியாவும், பிளாக்ஸ்பாட்டும் சீனாவில் முழுமையாக தடைசெய்யப்பட்ட தளங்கள்)

அதே சமயத்தில் www.google.cn என்ற தளத்தில் தேடினால் உங்களுக்கு அந்த சம்பவம் தொடர்பாக எந்த சுட்டியும் கிடைக்காது. இன்னும் விரிவாக 'tiananmen square 1989' என்றோ அல்லது 'Tiananmen Square' என்றோ கொடுத்தாலும், அது சம்பந்தமாக சுட்டிகள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், சீன மக்களால் அந்த தளத்தினை பார்வையிட முடியாது. உபயம் சீன இணைய சேவை நிறுவனங்கள் (ISP).

இதே போல நீங்கள் images.google.com லும், images.google.cn லும் தேடி வித்தியாசத்தை அறியலாம்.

இப்போது கூகுள், சீனா அரசின் உத்தரவுக்குக் கட்டுபட்டு இம்மாதிரியான விசயங்களை பகுக்கிறது. நாளைக்கே, "யார் யார் 'புரட்சி', 'தைவான்' என தேடியது? அந்த விபரங்களைக் கொடுங்கள்", எனக் கேட்டால் கூகுள் என்ன செய்யும்", என சிலர் கேட்கிறார்கள். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பத்திரிக்கையாளரின் விபரத்தை (ஒரு யாகூ மின்னஞ்சல் முகவரியை ஆதாராமாக கொண்டு), யாகூ நிறுவனம் அரசுக்குக் கொடுத்தது. அந்தத் தகவலை வைத்து, சீன அரசு அந்த பத்திரிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும் விதித்தது.

ஆனால் சில சீனர்கள், "இது ஒன்றும் பெரிய விசயமே அல்ல; இந்த தடைகள் பெரிய மாறுதலையும் உண்டு செய்யப்போவதில்லை. எங்களுக்குத் தேவையான விசயங்களை Google.com-லோ அல்லது மின்னஞ்சலிலோ பெற்றுக்கொள்வோம். விக்கிபீடியா போன்ற தளங்கள், எந்த தேடியின் வழியாகச் சென்றாலும் தடை செய்ய்ப்பட்டுள்ளன. என்ன தான் கூகுள் பகுக்காத விடையை (தளத்தின் முகவரியைக்) கொடுத்தாலும் அந்த தளங்கள் முற்றிலுமாக சீனா இணைய நிறுவனங்களால் (ISP's DNS) தடைசெய்யப்பட்டுள்ளன. ஆதலால் ஒரு வித்தியாசமும் இல்லை", என்கின்றனர்.

இதற்கு ஒரு படி மேலே சென்று ஒரு சீனர்,

"சீனா ஒன்றும் அனைவரும் நினைப்பது போல் மோசமில்லை. இன்னும் சில ஆண்டுகளில் அனைத்தும் சரியாகிவிடும். அமெரிக்கர்கள் தங்களுக்கு தான் பேச்சுரிமை இருப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள். நீங்கள் பேசுவதை கேட்க யாருமே தயாராக இல்லையெனும் போது, பேச்சுரிமை இருந்து என்ன பயன்? சில கோடீஸ்வரர்கள் தான் (பத்திரிக்கை, டி.வி அதிபர்கள்) அமெரிக்க ஜனாதிபதியை நிர்ணயம் செய்கிறார்கள்"
என்கிறார்.

'I think those Americans think they have freedom of speech, but it's useless if when you talk nobody listens to you because a certain group of billionnaires control the media and trick the democratic process every 4 years.'

ஸ்ருசல்

வெள்ளி, ஜனவரி 27, 2006

ரங்கு தே பசந்தி - திரைப்பட மதிப்பீடு

மொழி புரியாமல் ஒரு படத்தைப் பற்றி விமரிசனம் செய்யலாமா? செய்யலாம். தவறில்லை என நினைக்கிறேன்.

Rang De Basanti Review
கதைக் களம் ஒன்றும் புதிதல்ல. இதைப் போல படங்கள் நூற்றுக்கணக்கில் ஹிந்தியிலும், தமிழிலிலும் வந்திருக்கின்றன. ஆனால் இந்த திரைப்படத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் ஊடகங்களில்? காரணம் அமீர்கான். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஊர் சுற்றும் வாலிபர்கள். அமீர்கான், சித்தார்த், குணால் கபூர், மற்றும் ஷர்மன் ஜோஷி. இவர்களின் தோழி சோகா அலி கான். சோகா அலி கானின் காதலர் மாதவன்; இந்திய விமானப்படையின் போர் விமானி, நால்வரின் நண்பர் மற்றும் தந்தையை இழந்தவர். ஒரு தேசிய கட்சியின் தொண்டராக அதுல் குல்கர்னி (ரன் படத்தின் வில்லன்) வருகிறார்.

இங்கிலாந்தில் இருந்து பகத்சிங்கின் வாழ்க்கையைப் பற்றி டாக்குமெண்ட்ரி படமெடுக்கும் நோக்குடன் இந்தியா வருகிறார், சூ என்ற ஆங்கிலேயப் பெண். அவரின் இந்த முடிவிற்குக் காரணம், ஆங்கிலேயர்கள் படையில் அதிகாரியாகப் பணிபுரியும் அவரின் தாத்தா. பகத்சிங்கைப் பிடிக்கும் பணியில் நியமிக்கப்பட்டிருந்த அவரது தாத்தா, அப்போது ஏற்பட்ட நிகழ்வுகளை டைரி குறிப்புகளாகப் பதிந்து வருகிறார். பிற்காலத்தில் அதைப் படிக்கும் சூ, இந்தியர்களின் தேசப்பற்றை வியந்து, பகத்சிங் வாழ்க்கை நிகழ்வுகளை டாக்குமெண்ட்ரியாக எடுக்கவேண்டும் என்று இந்தியா வருகிறார்.

ஆனால் இந்த காலத்து இந்தியர்கள், பெற்ற சுதந்திரத்தின் அருமையையும், அதற்காகப் பாடுபட்டவர்களைப் பற்றிய எந்த உணர்வுமின்றி இருப்பதைப் பார்த்து வருத்தமடைகிறார். ஆனாலும், தனது டாக்குமெண்ட்ரிக்காக சோகா அலிகான் மூலமாக நாயகர்கள் நான்கு பேரையும் சந்திக்கிறார். அவர்களிடம் நடிக்கவும் சம்மதம் வாங்குகிறார். அவர்களுடன் அதுல் குல்கர்னியும் இணைகிறார். அதுவரை எந்த விதமான குறிக்கோளும் இல்லாமல் சுற்றி வந்த நான்கு பேரும், படத்தில் நடிக்கும் போது ஓரளவிற்கு மாறுதல் அடைகின்றனர். அந்த நேரத்தில் ஏற்படும் மாதவனின் மரணம், அவர்களின் வாழ்க்கை பாதையை முற்றிலுமாக மாற்றி அமைக்கிறது.

இந்தியில் தேசப்பற்று படங்களை விடமாட்டார்கள் போலிருக்கிறது. அமீர்கான் கூட பல தேசப்பற்று படங்களில் நடித்துவிட்டார்; சமீபத்தில் தோல்வியடைந்த மங்கள் பாண்டே உட்பட. ஆனாலும் அவர்களின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. 'தில் சாத்தா ஹை' மாதிரி இளமையான படமாக இருக்கும் என சென்ற எனக்கு கதையளவில் ஏமாற்றம் தான். அந்த ஈர்ப்பு இல்லையென்று தான் சொல்லவேண்டும். ஆனாலும் மோசமில்லை. படம் நன்றாக ஓடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

படத்தில் அமீர்கானுக்கு வழக்கமான நடிப்பு தான். மாதவன் மரணத்திற்குப் பின்பு அழும் காட்சியில் நன்றாக செய்திருந்தார். சித்தார்த் (பாய்ஸ்) பரவாயில்லாமல் செய்திருந்தார். ஷர்மன் ஜோஷி நகைச்சுவை காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அந்த ஆங்கிலப் பெண்ணும் நன்கு நடித்திருந்தார்.

பகத்சிங் சம்பந்தப்பட்டக் காட்களையும், சமகால காட்சிகளையும் ஒருங்கிணைத்து காட்டியிருந்தது, இந்திக்கு வேண்டுமானால் புதியதாக இருந்திருக்கலாம். ஆனால் தமிழில் ஹே ராம் இதைப் போலவே படமாக்கப்பட்டிருந்தது போல் நினைவு.


Rang De Basanti Review படத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக இசை மற்றும் ஒளிப்பதிவைக் குறிப்பிடலாம். இசை கேட்கவே வேண்டாம். பின்னணி இசை சிறப்பாக இருந்தது. ஒரு பாடலைத் தவிர அனைத்தும் பின்னணியிலேயே வந்தது. அருமையான 9 பாடல்களை வீணடித்த இயக்குநரை எவ்வளவு அடித்தாலும் தகும். ஒரு வேளை இது போன்ற திரைப்படத்திற்கு, காட்சியமைப்பு இவ்விதத்தில் தான் இருக்க வேண்டும் என இயக்குநர் நினைத்தாரோ என்னவோ? அதற்கு ஏன் ரகுமான்? ரகுமான் கண்டிப்பாக வருத்தப்பட்டிருப்பார். கடலடியில் தவமயிருந்து எடுத்த முத்தை யாராவது மீண்டும் கடலில் தூக்கியெறிந்தால் எப்படியிருக்கும்? படத்தின் டைரக்டர் ராகேஷ், 'ரகுமானுக்கு பல கதைகள் சொன்னேன். ஆனால் இந்தக் கதையை கேட்டதும் ஒப்புக்கொண்டார்' என்றார். ஆனாலும் இது போன்ற முடிவை இயக்குநர் எடுப்பார் என்று ரகுமானுக்குத் தெரியுமா? ரகுமானும் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த ஒரு பேட்டியில் 'எனக்குப் பிடித்த பாடல் ரூபாரூ. அனைத்து பாடல்களும் பதிவான பிறகு ஏற்பட்ட களைப்பிற்குப் பிறகு கடைசியாக செய்த பாடல். இந்த களைப்பு நீங்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இசையமைத்தது' என்ற ரீதியில் கூறியிருந்தார். அந்த உழைப்பிற்கு இன்னும் சிறிது மரியாதை செய்திருக்கலாம். 'லுக்கா சுப்பி' பாடலும், காட்சியின் ஒத்திசைவும் சிறப்பாக அமைந்திருந்தது. மனதை தொடும் விதத்தில் அமைந்திருந்தது.

ஆனாலும் சிறந்த பாடல்களை வீணடித்தது மனதைக் காயப்படுத்தியது. இன்னும் அந்த வருத்தம் நீடிக்கிறது.

படத்தின் இடையில் ஏற்பட்ட மின்வெட்டினால் ரசிகர்கள் 'லைட் தே பசந்தி', 'டார்ச் தே பசந்தி' என்று கத்தினார்கள். எனக்கு படத்தைப் பார்த்து முடித்ததும் 'சங்கு தே பசந்தி' (பாடல்களின் காட்சியமைப்பினால்) எனக் கூறவேண்டும் எனத் தோன்றியது.

இசை மதிப்பீடு - ரங்கு தே பசந்தி

ஸ்ருசல்

திங்கள், ஜனவரி 23, 2006

கங்குலி ஓய்வு பெறுகிறாரா?

தொலைக்காட்சி அலைவரிசை - 1

சர்ச்சையும் கங்குலியும் இணைபிரியாதவர்கள் போல. இம்முறை அவர் மீது எந்த தவறும் இல்லை. அவரை இரண்டாம் டெஸ்ட் ஆட்டத்திற்கு 11 பேர் கொண்ட குழுவில் சேர்க்காதது, வெறும் வாயயை மென்றுகொண்டிருந்த அவரது ஆதரவாளர்ககளுக்கு(?) இந்த விசயம் தின்பதற்கு அவல் கிடைத்தது போலாகிவிட்டது. ஆரம்பித்து விட்டனர். இந்திய அணிக்காக 15000 ரன்கள் எடுத்த கங்குலி என்ற மாபெரும் வீரரை அவமானப்படுத்துகின்றனர்; இனி மேலும் அவர் அணியில் நீட்டிக்கக் கூடாது; ஒரு சதம் அடித்து விட்டு அணியை விட்டு விலகிவிட வேண்டும். அதற்காகவாவது இந்திய அணி அவருக்கு ஓர் வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதெல்லாம் நேற்றைய 'Cricket Controversy' நிகழ்ச்சியில் சித்து போன்ற கிரிக்கெட் மேதைகள் சொன்ன கருத்து.

இதையெல்லாம் கங்குலி கேட்டிருந்தால், "அட பாவிகளா, நான் அணியில எப்படியாவது இன்னும் 2-3 வருசம் இருக்கிறதுக்கு கஷ்டப்பட்டிட்டு இருக்கேன். சரத்பவார் கையை பிடிச்சு, காலை பிடிச்சு வாய்ப்பு வாங்கியிருக்கேன். எனக்கு சப்போர்ட் பண்ணுறேன்னு சொல்லிட்டு என்னோட வாழ்க்கையை குழி தோண்டி புதைச்சிடுவீங்க போல இருக்கு. அதுவுமில்லாமல் ஒரே போட்டியில் சதம் அடிக்கிறது என்ன அவ்வளவு easy யா என்ன? நான் சதம் அடிச்சே இரண்டு வருசம் ஆச்சே. ஏதோ 30, 40 அடிச்சு காலத்தை ஓட்டலாம்னா இவனுங்க விட மாட்டாங்க போல இருக்கே?", என்று கண்டிப்பாக புலம்பியிருப்பார்.

சென்ற முறை அவரை (இலங்கை அணிக்காக) தேர்வு செய்யாததற்கு காரணமாக கிரண் மோரே, "அவர் போன்ற வீரரை Bench-ல் வைத்திருப்பது கடினம். ஆகவே அவரைத் தேர்வு செய்யவில்லை" என்று காரணம் சொன்னார். அதற்கு இதே சித்து, "லக்ஷ்மண் போன்றோர்களை பல மாதங்களாக Bench-ல் வைத்திருந்திருக்கின்றனர். அதற்கெல்லாம் கவலைப்படாதவர்கள் இவருக்காக ஏன் பரிதாபப்படுகிறார்கள்?. Bench-ல் இருப்பதற்கு அவருக்கு ஒன்றும் சிக்கல் இருக்காது. Bench-ல் வைத்திருந்தாலும் பரவாயில்லைப்; அவரை அணியில் தேர்வு செய்யவேண்டும்", என்றார். இப்போது, அவரை 11 பேர் குழுவில் இருந்து ஏன் நீக்கினார்கள்? என்று புதிய ராகம் பாடுகிறார்(கள்). எப்போது மற்ற வீரர்களைப் பற்றியும் கவலைப்படுவார்கள் எனத் தெரியவில்லை?

எப்போதும் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெங்களூரைச் சார்ந்த குகா என்ற Historian-த் தான் அழைப்பார்கள். நேற்று ஏனோ முகர்ஜி (பெயர் சரியா ஞாபகம் இல்லை) என்ற கல்கத்தாவைச் சார்ந்த Historian-ஐ அழைத்திருந்தார்கள். அவரும் மிக உணர்வுபூர்வமாக கங்குலிக்காக பேட் செய்தார்.

சித்துவின் பேச்சை கேட்க கேட்க வர வர எரிச்சல் தான் வலுக்கிறது. அவர் பேசும் விதம், தான் மட்டும் தான் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அவரது எண்ணம், தனது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று மற்றவர்களை பேச விடமால் தடுத்து நிறுத்துவது போன்ற சுவாபங்கள் அவரின் கருத்து சில சமயங்களில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக இருந்தாலும், ஒரு விதமான ஏன் அவரை டென் ஸ்போர்ட்ஸ்-ல் இருந்து விலக்கினார்கள் என இப்போது புரிகிறது. பாவம் சோனாலி என்ற அந்த பெண் எப்படித்தான் இவருடன் இரண்டு வருடத்திற்கும் மேலாக (NDTV-ல்) பணிபுரிகிறார் எனப் புரியவில்லை.

சரி, சோனாலி ஏன் வாயில் ஏதோ Bubblegum மாட்டி விட்டது போலவே வாயை வைத்துக் கொண்டு வார்த்தைகளை உச்சரிக்கிறார்?

தொலைக்காட்சி அலைவரிசை - 2

ஓர் தனியார் தொலைக்காட்சியின் பிளாஸ் பகுதியில் இனி மேல் நேயர்கள் டென் ஸ்போர்ட்ஸ் சேனலை இலவசமாகக் கண்டுகளிக்கலாம் என ஓடிக்கொண்டிருந்தது எனக்கு ஏன் என முதலில் விளங்கவில்லை. பின்னர் தான் தெரிந்தது புதிய சட்டம் பற்றிய தகவல். அமுல்படுத்தப்பட்ட சட்டம் சரியா அல்லது தவறா என எனக்கு விளங்கவில்லை. ஆனால் இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் கதிகலங்கியிருப்பது உண்மை.

நேற்றைய செய்தியில், "திருப்பூரில் உள்ள ஓர் M.S.O வை நடத்தி வருவது அந்த தொகுதி எம்.எல்.ஏ. அந்தப் பகுதி முழுவதும் உள்ள டி.வி.கள் தெளிவாக தெரிவதில்லை என்று நிறைய குற்றசாட்டுக்கள். அவர் நிறுவனத்தை ஏன் அரசு ஏற்று நடத்தவில்லை என மக்கள் (?) கேட்கிறார்கள். மேலும் சேலம் (என்று நினைக்கிறேன்) பகுதியிலும் இதே போன்ற குற்றசாட்டுக்கள்", என்ற அளவிற்கு அவர்களின் கவலை அதிகமாகிவிட்டது.

தொலைக்காட்சி அலைவரிசை - 3

இங்குள்ள கேபிள் டி.வி சேனலில், நேயர்கள் விரும்பும் பாடலை Interactive User Request புரோகிராம் மூலமாக கேட்கும் வசதி இருக்கிறது. சேனல் கொடுத்த எண்ணை டயல் செய்து, திரையில் வரும் பாடலை உங்கள் தொலைபேசி பொத்தான்களின் உதவியினால் தெரிவு செய்யலாம். அதில் தான் ஓர் நேயர் (ஒருவரா இல்லை பலரா எனத் தெரியவில்லை) Zeher (என்று நினைக்கிறேன்) என்ற படத்தின் ஒரு குறிப்பிட்ட பாடலை மட்டும் குறைந்தது 20 முறையாவது தெரிவு செய்து ரசித்திருப்பார். நான் விளம்பர இடைவேளைக்கு அந்த சானலுக்குத் தாவும் போதெல்லாம் அந்த பாடல் தான் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.

ஸ்ருசல்

திங்கள், ஜனவரி 16, 2006

அமெரிக்கப் பாதுகாப்பும், என்.எஸ்.ஏவும்

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் எதிரி நாட்டுத் தகவல்களை ஒட்டுக்கேட்கவும், அமெரிக்க நாட்டுத் தகவல்களை பாதுகாப்புடன் பரிமாற்றம் செய்து கொள்ளவும், அமெரிக்க ஜனாதிபதி ட்ருமென்னால் 1952-ல் நிறுவப்பட்ட அமைப்பு தான் நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி. இது அமெரிக்காவின் மிகப்பெரிய தகவல் உளவு, வேவு பார்க்கும் நிறுவனம். ஏன், உலகத்திலேயே பெரிய நிறுவனம் எனக் கூறலாம். அந்த அளவிற்கு பணியாளர்களின் எண்ணிக்கையும், பட்ஜெட்டின் அளவும், உளவுத் திட்டத்தின் அதன் பங்கும் அதிகம்.


அந்த நிறுவனத்தில் 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்த ரசல் டைஸ் என்ற முன்னாள் ஊழியர், இப்போது அந்த நிறுவனத்தின் தவறான செயல்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்ட ஆரம்பித்துள்ளார். அதில் முக்கியமானது, எந்த விதமான முன் அனுமதியும் இல்லாமல், அமெரிக்க குடிமக்களின் பேச்சை என்.எஸ்.ஏ. ஒட்டுக் கேட்டது என்பது.

"நான் SPA எனப்படும் Special Access Programs துறையில் நிபுணத்துவம் பெற்றவன். அதற்கு 'நிழல் உலகத் திட்டங்கள் (Black World Operations & Programs)' எனப் பெயர். அமெரிக்க உளவு நிறுவனங்கள், மற்ற நாடுகளையும், நாட்டு மக்களையும் உளவு பார்க்க உதவி
புரிவது எங்களின் பணி. ஆனால் என்.எஸ்.ஏ. வின் பல செயல்பாடுகள் அமெரிக்க அரசின் விதிமுறைகளை மீறிபவையாக இருக்கின்றன. இதைத் தெரிந்தே அங்குள்ள பல அதிகாரிகள் செய்கின்றனர். தகவல் பரிமாற்றத்தில் (ரேடியோ அலைகள், Chat, மின்னஞ்சல். தொலைபேசி, மின் நகல் உட்பட எந்த விதமான ஊடகத்தில் இருந்தும்), 'ஜிகாத்' என்ற வார்த்தை உபயோகம் இருந்தால், அந்த முழு உரையாடலையும் பதிவு செய்து, பகுக்கும் வசதி என்.எஸ்.ஏ இருக்கிறது. இது பெரும்பாலும் அதற்கான அனுமதி இல்லாமலேயே உபயோகப்படுத்தப்பட்டது. மேலும் சந்தேகமிருக்கும் நபரின் தொலைபேசி எண்ணை வைத்துக் கொண்டு, அதற்குத் தொடர்புடைய அனைத்து எண்களையும் (நூற்றுக்கணக்கில் இருந்து, ஆயிரக்கணக்கில் இருக்கும்) ஒரு வலை போல பிரித்தெடுக்கும் வசதி அதற்கு உண்டு", என்கிறார்.

இதனைப் பற்றி சில நாட்களுக்கு முன்பு நியுயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, அதற்குப் பதிலளித்த புஷ், "ஒரு சில நபர்களின் உரையாடலகள் ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கலாம். நாட்டின் பாதுகாப்பிற்காக சில நேரங்களில் அது தவிர்க்க முடியாததாகிறது" என்றார்.

ஆனால் ரசல் டைஸ், "ஒன்றிரண்டு அல்ல. அது பல மில்லியன்களைத் தாண்டும்". என்கிறார்.

ஆனால் சென்ற ஆண்டே ரசல் டைஸ், மனவியாதியால் பாதிக்கப்பட்டிருப்பதாக பணியிலிருந்து விலக்கப்பட்டார். ஆனால் அது போல எந்த விதமான வியாதியும் தனக்கு இல்லையென்று என ரசல் மறுக்கிறார், "என்.எஸ்.ஏ.வின் செயல்பாடுகள் குறித்து எனது சந்தேகத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்ததால், என்னை எனது துறையில் இருந்து விடுவித்து, வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணிக்கு அனுப்பப்பினர். கடைசியில் எனக்கு மனவியாதி எனக் குற்றம் சாட்டி பணியில் இருந்து விடுவித்தனர். மேலும் இது எனக்கு மட்டும் நடக்கவில்லை. யார் யாரெல்லாம், இது போல எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இது நிகழ்வது இயல்பு", என்கிறார்.

2003 ஆம் ஆண்டு, நிறுவனத்தின் தவறான செயல்பாடுகளைப் பற்றி காங்கிரஸ் உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்போவதாக ரசல் கூறியுள்ளதாகத் தெரிகிறது. "அவ்வாறு ஏதாவது செய்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை செய்யப்பட்டதையும் விடுத்து ஓர் செனட்டரிடம் எனது கருத்துக்களைத் தெரிவித்தேன். அதன் பின்னர், உளவுத் துறை அதிகாரிகள் எனது வீட்டிற்கு வந்து மிரட்டி விட்டு சென்றனர்" என டைஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால நாட்டிற்கும், மக்களுக்கும் பாதுகாப்பும் வேண்டும், இது போல ஒட்டுக்கேட்காமல் எதுவும் செய்ய முடியாது என்பது என் கருத்து. பாதுகாப்பிற்காக, ஏதாவது ஒன்றை விட்டுக்கொடுத்து தான் ஆக வேண்டும். ஒட்டுகேட்பதை தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தினால் தான் தவறு.

என்.எஸ்.ஏ என்ன செய்கிறது? அதன் பலம் என்ன?


அமெரிக்காவின் மிகப் பெரிய உளவுபார்க்கும் நிறுவனம்; ஏன். சி.ஐ.ஏ விட மிகப்பெரியது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான நபர்கள் சி.ஐ.ஏ. விற்காக வேலைபார்த்தாலும் அதனை விட அதிகமான நபர்களை பணியில் அமர்த்தியுள்ளது என்.எஸ்.ஏ. அதற்கான பட்ஜெட்டும் சி.ஐ.ஏ விட அதிகம். இது சேகரிக்கும் தகவல்கள் கணக்கிலடங்காதது. பல வருடங்களாக அமெரிக்கர்களுக்கே என்.எஸ்.ஏ இருப்பதே தெரியாது. சி.ஐ.ஏ. வின் செயல்பாடுகள் மனித உளவு சம்பந்தப்பட்டது. என்.எஸ்.ஏ. வின் செயல்பாடுகளோ தகவல் உளவு சம்பந்தப்பட்டது. இங்கு ஒரே நேரத்தில் 18000 கார்கள் நிறுத்துவதற்கு வசதி உள்ளது.

இணையத்தில் பரிமாற்றிக்கொள்ளப்படும் அனைத்து தகவல்களையும் NSA வினால் ஒரு பைட் விடாமல் எடுத்து, பகுக்க முடியும். அவர்களுக்கு இருக்கும் வசதியினைக் கொண்டு, எந்த ஒரு உள்நாட்டு / அயல்நாட்டுத் தொடர்பு தொலைபேசி அழைப்பையும் ஒட்டு கேட்கவும், எந்த ஒரு நாட்டின் நெட்வொர்க்கில் நுழைந்து தகவலைப் பெறவும், வேறொரு நாட்டின் தகவல் தொலைதொடர்பு இணைப்பையும் சிதைக்கவோ, தனிமைப் படுத்தவோ முடியும்.

அங்கு பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் கணிதத்தில் Ph.D பட்டம் பெற்றவர்கள். உலகத்தின் வேறெந்த நிறுவனத்தை விடவும் ஏன் நாசாவை விடவும், அதிகமான கணிதத்தில் Ph.D பெற்றவர்களை வேலை அமர்த்துவது என்.எஸ்.ஏ தான். பல கணித மாணவர்களின் கனவும் இங்கு பணியில் சேர்வது தான்.


பல கிரிப்டோகிராபி அல்காரிதம்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், பல நாடுகளின் கிரிப்டோகிராபி அல்காரிதம்கள் இங்கு உடைக்கப்பட்டு, எதிரி நாட்டுத் தகவல்கள் அமெரிக்க அரசுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. PGP என்பது கிரிப்டோகிராபியில் புகழ்பெற்ற,
RSA (Ron Rivest, Adi Shamir and Len Adleman ஆகியோர் உருவாக்கிய அல்காரிதம்) யின் வழியில் உண்டான மென்பொருள். உங்களையும், தகவல் பரிமாறிக்கொள்பவர்களைத் தவிர யாராலும் படிக்க முடியாத வழி. அந்த மென்பொருள் உருவாக்கிய நிறுவனம் நினைத்தால் கூட அதனைப் படிக்க முடியாது. ஆனால் அதனை உடைக்கவும், NSA விடம் கணினிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இது போன்ற பல அல்காரிதம்கள் உடைக்க இந்த நிறுவனத்திடம் வசதிகளும், கருவிகளும் இருப்பதாக நம்பப்படுகிறது.

பல நேரங்களில் கிரிப்டோகிராபி அல்காரிதம்கள் வெளியிட தடைகளும், சிக்கல்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும், ஆராய்ச்சிக் கழகங்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் கொடுத்துள்ளது. ஐ.பி.எம் உருவாக்கிய DES என்ற அல்காரிதத்திலும் கடைசி நேரத்தில் சில மாறுதல்களைச் செய்து, அதன் தகவலைப் பார்க்க வசதி செய்தது என்ற குற்றச்சாட்டும் உண்டு.

1989 ம் ஆண்டு, XEROX நிறுவனம் குஃபு, கஃபி (Khufu and Khafre) என்ற இரண்டு கிரிப்டோகிராபி அல்காரிதங்களை உருவாக்கியது. இதில் குஃபு 512 பிட் கொண்டு என்கிரிப்ட் செய்யும் முறையைக் கையாளுகிறது. இதனால், செய்தியை உடைப்பது மிக மிகக் கடினம். சாதரணம் கணினியை உபயோகப்படுத்தினால், பல மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகலாம். இது பாதுகாப்பு விசயத்தில் பல சிக்கல்கள் உருவாக்கும் என்பதால், அவற்றை வெளியிட வேண்டாம் என NSA, ஜெராக்ஸ் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது. ஜெராக்ஸ் நிறுவனம், அமெரிக்க அரசிடம் பல தொழில்சார்ந்த ஒப்பந்தங்களைப் போட்டிருந்ததால், வேறுவழியில்லாமல் கடைசியில் அந்தத் திட்டத்தைக் கைவிட்டது. ஆனால் அங்கு பணிபுரிந்த நபர் அந்த அல்காரிதத்தை 1989 ஆம் ஆண்டு வெளியிட்டார். அப்போது நடந்த செய்திப் பரிமாற்றங்களை நீங்கள் இங்கே படிக்கலாம்

மேலும் இந்த நிறுவந்த்திற்குத் தேவையான கருவிகளைத் தயாரிக்க, இங்கேயே ஹார்ட்வேர் தொழிற்சாலையும் அமைந்துள்ளது. என்.எஸ்.ஏ. வின் மின்சார கொள்முதல் மட்டும் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 20 மில்லியன் டாலர்கள் ஆகும்.



NSA பற்றி டான் பிரவுன், 'டிஜிட்டல் போர்ட்ரஸ்' என்ற புதினத்தை எழுதியிருந்தார். அதில் 3 மில்லியன் புராசசர்களைக் கொண்டு என்.எஸ்.ஏ "TRANSLTR" என்ற சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்குகிறது. அதன் மூலம் எந்த ஒரு என்கிரிப்ட் செய்யப்பட்ட செய்தியையும் உடைக்க முடியும். அங்கு பணிபுரிந்த முன்னால் ஊழியர் ஒருவர் அந்த கணினியை செயலிழக்கச் செய்ய, ஓர் புரோக்ராம் வைத்திருப்பதாகவும், அதனை ஒரிரு தினங்களில் வெளியிடவிருப்பதாகவும் மிரட்டுகிறார். அதனை எப்படி கதையின் நாயகி தடுக்கிறார் என்பது தான் கதை. நல்ல கருவாக இருந்தாலும், நம்ப முடியாத தகவல்களும், தவறான தகவல்களும் மிகுந்து காணப்பட்டதால் எரிச்சலையே ஏற்படுத்தியது.

ஸ்ருசல்