திங்கள், அக்டோபர் 08, 2007

சமீபத்தில் மிகவும் ரசித்த பாடல்கள்

1. முதல் மழை எனை நனைத்ததே

படம்: பீமா
பாடியவர்கள்: ஹரிஹரண், மஹதி, பிரசன்னா
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்

இப்படத்தின் பாடல்கள் எனக்கு முதன் முதலில், சன் டி.வி.யில் வந்த விக்ரம், திரிஷா பேட்டியில் தான் எனக்கு அறிமுகம். அப்பேட்டியின் நடு, நடுவே, 'ரகசிய கனவுகள் ஜல் ஜல்', என்ற பாடலின் இரு வரிகளை மட்டும் ஒளிபரப்பினார்கள். மிகவும் பிடித்து விட்டது. அதிலிருந்து இப்படத்தின் பாடல்கள் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தேன். வந்த பிறகும் இப்பாடலை கேட்டேன். சந்தேகமில்லை. நல்ல பாடல். கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். குறிப்பாக பல்லவியும், முதல் சரணத்திற்கு முன்பாக வரும் வயலின் இசையும் நன்று. 'இறகே இறகே', என்று குழுவினர் பாடும் இடம் அழகு. ஆனால் சரணம் அவ்வளவாக கவரவில்லை. ஹரிஹரன், மதுஸ்ரீயை விட நன்றாகப் பாடியிருக்கிறார்.

ஆனால் இப்படத்தில் இடம் பெற்றுள்ள முதல் மழை பாடல் தான் என்னுடைய தேர்வு. ஆரம்பத்தில் வரும், 'மெஹூ மெஹூ', என்று புரியாத பாஷையில் பாடல் ஆரம்பிக்குமிடத்திலிருந்தே அழகு தான். ஹாரீஸ் பெரும்பாலும் ஒன்றிரண்டு பாடல்களிலாவது அது போல் வைத்திருப்பார். பெரும்பாலும் அது என்னைக் கவராது. இப்பாடலில் சிறிது வித்தியாசமாக என்னை அது கவர்ந்ததற்குக் காரணம், குரலாக இருக்கலாம் (யாருடைய குரலென்று தெரியவில்லை). அந்த ராகமும் நன்றாக இருந்தது. அதனையே முதல் சரணத்திற்கு முன்பாக இசையாகவும் வைத்திருந்தார்.

ஹரிஹரன், மஹதி (:)) வழக்கம் போல் சிறப்பாக பாடியிருக்கிறார்கள்.

முதல் மழை
எனை நனைத்ததே
முதல் முறை
ஜன்னல் திறந்ததே

பெயரே தெரியாத
பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே

இதயமும் போய்
இதமாய் மிதந்ததே

என்ற அற்புதமான பல்லவி.

இதனை ஹரிஹரண் மீண்டும் முதலாம் சரணம் முடிந்ததும் 2:46-ல் பாடுவார். அப்போது நனைத்ததே, திறந்ததே என்று பாடும் போது மஹதி அருமையாக 'ல ல லா' என்று பாடுவார். இனிமையாக இருக்கும்.

இரண்டாம் சரணம் முடிந்ததும், ஹரிஹரனோ, மஹதியோ இவ்வரியினை பாடுவார்கள் என்று நான் நினைத்திருந்த போது, 4:22-ல், 'உஹூ உஹூ', என்று 'மெஹூ மெஹூ', ஸ்டைலில் அதே பாடகர் பாடுவார். அற்புதம்.

பல பாடல்களுக்கு இது போன்ற சிறு சிறு விசயங்கள் சிறப்பு சேர்க்கின்றன.

இதே படத்தில் இடம் பெற்ற 'எனதுயிரே எனதுயிரே', பாடலும் நல்ல பாடல். ஆனால் அப்பாடலில் 1:42-ல் வரும் 'உன்னைக் காண வருகையில்' என்ற வரி ஏதோ பழைய தமிழ் பாடலினை ஞாபகப்படுத்துகிறது. ஞாபகத்திற்கு வரமறுக்கிறது. அதே போல் 'சிறு பார்வையாலே' பாடல் 'கோவில்' படத்தில் வரும் 'சிலு சிலுவென' பாடலை ஞாபகப்படுத்துகிறது.

2. கனவெல்லாம் பலிக்குதே

படம்: கிரீடம்
பாடியவர்கள்: கார்த்திக், ஜெயச்சந்திரன்
இசை: ஜி.வி.பிரகாஷ்

இப்பாடலில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் நன்றாக வந்துள்ளன. அவற்றுள் சுவேதா, சோனு நிகாம் பாடிய 'விழியில் உன் விழியில்' பாடலும் சாதனா பாடிய 'அக்கம் பக்கம்' பாடலும் மற்ற இரு பாடல்கள். இவ்விரண்டையும் விட 'கனவெல்லாம் பலிக்குதே', பாடல் என்னை கவர்ந்தது.

இப்பாடலில் இது தான் நன்றாக இருந்தது என்று குறிப்பிட்டு சொல்ல என்னால் இயலவில்லை. கார்த்திக்கின் குரல், நல்ல இசை, ராகம்.

மொத்தத்தில் நல்ல பாடல்.

இப்படத்தில் பிரகாஷ் சில இசையையும், ராகத்தையும் மற்ற படங்களிலிருந்து எடுத்திருக்கிறார். ஒன்று 'கண்ணீர் துளியே' பாடல் 'பூங்காற்றிலே' பாடலின் நகல். இன்னொன்று 'விழியில் உன் விழியில்' பாடல். இது எனக்கு இரண்டு பாடல்களை ஞாபகப்படுத்துகின்றன. இசை 'மஜா' படத்தில் இடம்பெற்ற 'சொல்லித்தரவா', பாடலையும், 1:26-ல் வரும் இசை 'தெனாலி' பாடலில் வரும் 'சுவாசமே சுவாசமே', பாடலையும் ஞாபகப்படுத்துகிறது. குறிப்பாக அந்த வீணை இசை.

ஜி.வி.பிரகாஷ் ஓரளவிற்கு நன்றாகவே இசையமைக்கிறார். இன்னும் முயற்சி செய்து, மாமாவின் பாடல்களை லிஃப்ட் செய்யாமல் இசையமைத்தால் நன்றாக வரலாம்.

3. பற பற பட்டாம் பூச்சி

படம்: தமிழ் எம்.ஏ
பாடியவர்கள்: ராகுல்
இசை: யுவன் சங்கர் ராஜா

நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் சிலிர்ப்பான பாடல் கேட்ட உணர்வு இப்பாடல் கேட்ட போது ஏற்பட்டது. உற்சாகமான ஆனால் மென்மையான இசை; வித்தியாசமான குரல்; அற்புதமான ராகம் என அனைத்தும் சேர்ந்து இப்பாடலை சிறந்த பாடலாக்கியுள்ளன.

'பற பற பட்டாம் பூச்சி
தொட தொட பல வண்ணமாச்சே' என்று துவங்கி பாடல் முழுவதும் அந்த சிலிர்ப்பு தொடர்கிறது.

'கண்ணீரைத் துடைக்கும் விரலுக்கு
மனம் ஏங்கிக் கிடக்குதே
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு
நிலை படகு ஆனதே'

வரிகளில் (0:19) ராகம் அற்புதம்; அழுத்தமான வரிகள்.

'எங்கோ எங்கோ ஓர் உலகம்
உனக்காக காத்துக் கிடக்கும்
நிகழ்காலம் நதியைப் போல
மெல்ல நகர்ந்து போகுதே
நதி காயலாம்
நினைவில் உள்ள
காட்சி காயுமா?

ஓ ஓஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ'

இடங்கள் (2:43-3:10) இனிமையாக இருக்கின்றன.

மொத்தத்தில் அற்புதமான பாடல். ஒளிப்பதிவு இப்பாடலுக்கு எப்படியிருக்கும் என்பதனை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். இப்படத்தின் கரு மிகவும் முக்கியமாகவும், அத்தியாசமாகவும் தோன்றுகிறது. அது 'பறவையே எங்கு இருக்கிறாய்', பாடலிலும் ஒலித்ததை கேட்க முடிகிறது.

4. மின்னல்கள் கூத்தாடும்

படம்: பொல்லாதவன்
பாடியவர்கள்: கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ
இசை: ஜி.வி.பிரகாஷ்

இப்படத்தின் பாடல்களில் ஒன்று கூட சரியில்லை இதனைத் தவிர. சங்கர் மகாதேவன் பாடிய குத்துப் பாடல்; 'எங்கேயும்' ரீமிக்ஸ் பாடல் என்று சலிப்படையச் செய்யும் பாடல்கள். 'மின்னல்கள் கூத்தாடும்' என்று ஆரம்பிக்கும் பாடல் காப்பாற்றும் விதமாக அமைந்துள்ளது.

இப்பாடலின் இசைக்கருவியும், ஆரம்ப இசையும் 'சிவாஜி' படத்தின் 'ஸ்டைல்' பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. பல்லவி முடிந்ததும் வரும் இசை, 'மின்னலே' படத்தின், 'வசீகரா' பாடலின் இசையை ஞாபகப்படுத்துகிறது. ஆனால் இப்பாடல் நன்றாக வந்துள்ளதை மறுக்க முடியாது. கார்த்திக் நன்றாக பாடியிருக்கிறார்.

'உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
அய்யோ அதை
எனக்குப் பிடித்ததடி
எடை குறைந்ததே
தூக்கம் தொலைந்ததே'

என்ற இடத்தில் ராகம் நன்று.

ஜெயஸ்ரீ தனக்கே உரித்தான பாணியில் பாடியிருக்கிறார்.

'காதலே ஒரு வகை
ஞாபக மறதி
கண்முன்னே நடப்பது
மறந்திடுமே

வவ்வாலை போல் நம்
உலகம் மாறி
தலைகீழாகத் தொங்கிடுமே'

3:31-ல் ஜெயஸ்ரீ பாடி, அதனைத் தொடர்ந்து 'உடல் கொதிக்குதே' என்று குரலை மாற்றி ஆரம்பிப்பது அற்புதம்.


5. உயிரே உயிரே

படம்: மலைக்கோட்டை
பாடியவர்கள்: ரஞ்சித், ரீட்டா
இசை: மணி சர்மா

இது திருவிளையாடல் படத்தில் வரும்'கண்ணுக்குள் ஏதோ', பாடலை நினைவுபடுத்துகிறது. போதாக்குறைக்கு அப்பாடலை பாடியவரும் ரீட்டா தான். ஆரம்பத்தில் வரும் இசை இனிமை. ஆனால் அந்த இசை, அர்ஜூனின் ஓர் படத்தில் வரும், 'வெளிநாட்டுக் காற்று தமிழ் பேசுதே' பாடலை ஒத்திருக்கிறது.

'உந்தன் கண்ணோரம்
வாழ கற்பூரம் போல
அன்பே நான் கரைந்தேனே'

வரிகளிலும் (0:43),

'நீ என் வாழ்க்கையா
என் வேட்கையா',

என்ற வரிகளிலும் (2:21) ராகம் நன்றாக அமைந்துள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தேவதையே வா' பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை அருமை.

சங்கர் மகாதேவன் எல்லா தமிழ் படங்களிலும் ஓர் குத்து பாடல் பாடிவிடுகிறார். ஏன் வம்படியாக அனைத்துப் படங்களிலும் ஆரம்பத்தில் குத்துப் பாடல் வருகிறது என்றே தெரியவில்லை. ரஜினியில் ஆரம்பித்து, விஜயில் தொடர்ந்து இன்று அனைத்து ஹீரோக்களுக்கும் ஓர் ஆரம்ப பாடல். கமல் மட்டுமே விதிவிலக்கு. 99% பாடல்கள் கேட்பதற்கு சகிக்காது. அதிலும் சங்கர் மகாதேவன் தமிழ் திரையுலகம் பாடாய் படுத்துகிறது. விளையாடு (கிரீடம்), படிச்சு பார்த்தேன் (பொல்லாதவன்), வாழ்க்கை என்பது (தமிழ் எம்.ஏ) என்று இவர் அநியாயத்து குத்து பாடகராகி விட்டாரே! பாவமாக இருக்கிறது. அவரது பாடல் ஒன்றை ஒலிக்கவிட்டு என்ன படமென்று கேட்டால் அவருக்கே தெரியுமா என்று தெரியவில்லை.

6 கருத்துகள் :

மதி கந்தசாமி (Mathy Kandasamy) சொன்னது…

இடுகைக்கு நன்றி! :)

பாடல்களைக்கேட்டுவிட்டு வருகிறேன்.

சங்கர்மஹாதேவன் என்றதும் நினைவு வருகிறது. ஆமீர்கானின் வலைப்பதிவில் அவருடைய புதிய படத்துக்கு இசையமைத்தது பற்றி எழுதியிருக்கிறார். Louis Malle இன் Ascenseur pour l'échafaudஇல் மைல்ஸ் டேவிஸ் படம் திரையில் ஓட ஓட மனதில் தோன்றும் எண்ணங்களுக்கேற்ப இசையமைத்ததுபோல என்று நினைக்கிறேன்.

http://lagaandvd.com/blog.php

-மதி

ஸ்ருசல் சொன்னது…

மதி,

அமீர்கான் பதிவெல்லாம் (லகான் டிவிடி) படிக்கும் வழக்கம் உண்டா? ஆச்சர்யமான செய்தி.

நானும் எப்போதவது படிக்கும் வழக்கம் உண்டு.

'Ascenseur pour l'échafaud'-ல் ஒண்ணும் புரியல :)

துரை சொன்னது…

ஸ்ருசல் உங்க படைப்புகள் எல்லாம் அபாரம், நிங்க சொல்லுகிற விதம் மிக அருமை,உங்கள் சேவை தொடற என் வாழ்துகள்

ஸ்ருசல் சொன்னது…

துரை, மிக்க நன்றி.

Sud Gopal சொன்னது…

"கண்ணாமூச்சி ஏனடா" கேட்டீங்களா?

கண்ட நாள் முதல் படத்தின் அதே குழு..பாடல்கள் ரொம்ப நல்லாவே வந்திருக்கு.கேட்டுப் பாருங்க...

ஸ்ருசல் சொன்னது…

கோபால்,

இது வரை இல்லை. தற்போது 'சத்தம் போடாதே' கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

நன்றாக இருக்கிறது. 'கண்ணாமூச்சி ஏனடா' கேட்டு விட்டு சொல்கிறேன்.