திங்கள், செப்டம்பர் 24, 2007

வீழ்வது தமிழாக இருந்தாலும்...

கடந்த சில தினங்களாக, தமிழகத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் மிகவும் வருத்தமடையச் செய்துள்ளன. முதல்வர் கருணாநிதி இப்படி பேசுவதால் எல்லாம் அவருக்கும் நாட்டு மக்களுக்கும் என்ன நன்மை விளையும் என்று எனக்குத் தெரியவில்லை. மாறாக அவரின் பேச்சு, தமிழகத்தை (மக்களை), இந்தியா அமைப்பிலிருந்து விலக்குவதற்கு வித்திட்டு விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. அவர் இதனை அறிந்து செய்கிறாரா அல்லது அறியாமல் செய்கிறாரா எனத் தெரியவில்லை.

இதே முதல்வர், காங்கிரஸ் பெரும்பான்மையாக மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் இது போன்று பேசியிருப்பாரா? ஒரு வேளை பேசியிருக்கலாம்; ஆனால் அதற்கான விளைவுகள் எப்படியிருக்கின்றன என்று பார்த்து, சமாளித்து மீண்டும் பேட்டிக் கொடுத்திருப்பார். இத்தனை கால ஆட்சியில், தி.மு.க எத்தனை மதநம்பிக்கையற்ற தொண்டர்களை உருவாக்கியிருக்கிறது? தலைவர் சொன்னால், குங்குமத்தை அழிக்கலாம்; அக்னி இல்லாமல் திருமணம் செய்யலாம். ஆனால் தனக்கு ஒரு சிக்கல் அல்லது தனது குடும்பத்திற்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் ஆண்டவா காப்பாற்று என்று தான் தோன்றும். 'இந்த சிக்கலிலிருந்து காப்பாற்று, திருச்செந்தூர் வந்து மொட்டையடிக்கிறேன் ஆண்டவா', என்று வேண்டிக் கொள்ளாத தொண்டன் இங்கு எத்தனை பேர்?

சரி. அதனை விட்டு விடுகிறேன். கலைஞர் கூறிய விசயம் சரியா தவறா என்பது கூட இங்கு முக்கியம் அல்ல. நான், கலைஞரை குறை கூறுவதற்காகவும், வேறு யாருக்கும் எனது ஆதரவினைத் தெரிவிக்கவும் இப்பதிவினை எழுதவில்லை.

ஒரு நாட்டினர் (இனத்தினர், மதத்தினர்) மீது மற்றவர்களுக்கு துவேசம் ஏற்படுவதற்கு அந்நாட்டு மக்கள் கெட்டவர்களாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அந்நாட்டு தலைவனின் பொறுப்பற்ற பேச்சே போதுமானது.

அமெரிக்க அதிபர் ஏதாவது ஒரு நாட்டுத் தலைவர் மீது குற்றம் சாட்டும் போது, அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபரை மட்டுமா பிடிக்காமல் போகிறது? அமெரிக்க மக்களையும் தானே? ஹிட்லர் மீதான கோபம், ஜெர்மானிய மக்களையும் விட்டு வைத்தது? இன்று வரை ஜெர்மானியர்கள் என்றால் எவ்வகையான எண்ணம் இருக்கிறது?

ஆகவே ஆட்சியில் இருப்பவர்கள் கூறும் கருத்து, அக்கருத்து மற்ற இடங்களில் தனது கருத்தாக மட்டுமே அது பாவிக்கப்படாது; தான் சார்ந்த மக்களின் கருத்தாக அது பாவிக்கப்படும் என்பதனை உணர வேண்டும். தனது மக்களில் அதனை 99.9999% பேர் அத்தலைவனின் கருத்திலிருந்து மாறுபட்டிருந்தாலும் கூட, அக்கருத்து அவ்வாறு தான் பார்க்கப்படும்.

அவர் பேட்டி கொடுத்த இரண்டு தினங்களிலேயே அவரது மகள் வீட்டிலும், அதனை விட முக்கியமானது - தமிழக பேருந்தினையும் ஓர் கும்பல் கொளுத்தவில்லையா? இரு உயிர்கள் பலியாகவில்லையா? ஓர் தலைவனின் மீதான கோபம், அந்நாட்டு மக்கள் மீது திரும்பும் என்பதற்கு இது உதாரணம்.

இது ஏன்? பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்த தி.மு.க. தொண்டர்களே நேற்று, யாரோ ஓர் முட்டாள் சாமியார் கூறிய கருத்திற்காக, பா.ஜ.க. அலுவலகத்தையும். ஹெச். ராஜா, மற்றும் அவரது மாமியார் வீட்டையும் தாக்கவில்லையா? முதல்வர் மகள் மீது தாக்குதல் நடத்தியத்தியதற்கும், ராஜாவின் வீட்டில் நடந்த தாக்குதலுக்கும், அவர் மாமியார் மீது வீடு நடந்த தாக்குதலுக்கும் என்ன வேறுபாடு?

அது தான் மக்களின் இயல்பு. ஆண்டாண்டு காலமாக அது தான் மனிதனின் உடலில் ஊறியுள்ளது. பின்பு இது போன்று பாதிக்கப்படும் மக்கள், அடுத்த இனத்தினரை எதிரியாக பாவிப்பது இயல்பாக வந்து விடும். ஆனால் காரணம் என்ன? யோசிக்காமல் கூறும் சில வார்த்தைகள் தானே?

உங்களுக்கு வாழ்வதற்கு ஓர் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதே வாய்ப்பு மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏன் கெடுக்கிறீர்கள்? இரு கழக ஆட்சிகளும் நன்றாக சம்பாதிக்கட்டும். ஆட்சியாளரின் குறைந்த பட்ச வேலை, மக்களை பாதுகாப்பதாகத் தான் இருக்க முடியும். ஊழல் செய்யட்டும்; வரி விதிக்கட்டும்; ஆனால் மக்களின் பாதுகாப்பினையாவது உறுதி செய்யுங்கள். பாதுகாப்பு கொடுக்காமல், இலவச டி.வி. மட்டும் கொடுத்தால் அந்த டி.வி.யினால் என்ன பயன்? இப்போது பாதுகாப்பின்மை இன்னொரு நாடு படையெடுப்பதால் வரவில்லை. இங்கிருந்தே, தேவையில்லாத சமயத்தில், அவசியமில்லாமல் வந்துள்ளது.

கலைஞரின் நம்பிக்கையை பற்றி பேச வரவில்லை. அது முக்கியமும் அல்ல. அதைப் பற்றி பேசிப் பேசி, பலர் சோர்வடைந்து விட்டனர். அவரின் நம்பிக்கை அவருக்கு; மற்றவர்களின் நம்பிக்கை மற்றவர்களுக்கு.

'வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்', என்று கூறுபவர்களின் செயல், 'வீழ்வது தமிழாக இருந்தாலும், வாழ்வது கழகமாக இருக்கட்டும்', என்று ஆகிவிட்டதோ என்று பயமாக இருக்கிறது. தனக்கு காயம் என்றாலே கதறும் இந்த உடல், இன்னொரு உயிர் போனதைப் பார்த்தும் வருந்தாமல் இருப்பது விந்தையல்லவா? பெங்களூருக்கு வேலை தேடிச் சென்ற அந்த நெல்லை தொழிலாளி என்ன தவறு செய்தார்? அவருக்கும், கலைஞர் கூறிய கருத்திற்கும் என்ன சம்பந்தம்? அவர் தமிழகத்தை சார்ந்தவர் என்பதனைத் தவிர?

ஏற்கனவே கர்நாடகத்தில் வாழும் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வது பாதிக்கப்பட்டது கழக ஆட்சிகளில் தான் என்பதனை மறுக்க இயலாது. இன்னும் சில ஆண்டுகளில் அது கேரளாவிலும் நடக்கலாம். இது இந்தியா முழுவதும் கூட உருமாறிவிட வாய்ப்பிருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்.

அனைவரும் அவரவர் வேலையை செய்து, இருக்கும் வசதிவாய்ப்புகளை வைத்து கூலி வேலை செய்தோ, அலுவலகங்களில் பணிபுரிந்தோ, பிச்சையெடுத்தோ, ஒரு வேளையோ, இரு வேளையோ உண்டு, நமது உயிர் நாளைக்கு இருக்காது என்ற பய உணர்வு இல்லாமல், நிம்மதியாக உறங்குகிறோம். அதனை, ஏன் கெடுக்கிறீர்கள்?

இன்னுமொரு இலங்கையை, இங்கு உருவாக்கிவிடாதீர்கள்!

கருத்துகள் இல்லை :