வெள்ளி, செப்டம்பர் 21, 2007

திவான் - யா ரயா

இந்த மாத ஆரம்பத்தில் நண்பரை பார்க்க கலிஃபோர்னியா சென்றிருந்தேன். வழக்கமாக விமானத்தில் எனது ஐ-பாடில் பாடல்கள் கேட்டு ஏதாவது படித்துக் கொண்டு வருவேன். விமானம் தரையிறங்க முப்பது நிமிடங்கள் இருக்கும் போது, பயணிகளுக்கான டி.வி. சானலில் ஏதாவது இருக்கிறதா என்று துலாவிக் கொண்டிருந்தேன். படங்கள் பார்ப்பதற்கு நேரமில்லை என்று பாடல்கள் இருக்கிறதா என்று பார்த்தேன். சில ஆடியோ தொகுப்புகள் இருந்தன. Instrumentals சென்று பார்க்கையில் கண்ணில் பட்டது தான் திவான் - 2 பாடல் தொகுப்பு.

என்னடா இந்தியப் பெயர் போல் தோன்றுகிறதே என்று பார்த்தேன். ஆனால் பாடல்களை கேட்கும் போது தான் அவை அராபிக் என்று தெரிந்தது. எந்த ஊர் என்று யூகிக்க முடியவில்லை. எகிப்து அல்லது ஈரான் ஏதாவது ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன். சரி கேட்போம் என்று கேட்க ஆரம்பித்தேன். முதல் பாடலே பிடித்து விட்டது. இரண்டாவது பரவாயில்லை. மூன்றாவது பாடல் கேட்பதற்கு மிகவும் பிடித்து விட்டது. இன்னும் சில நிமிடங்களே இருக்க; மீண்டும் சில முறைகள் மூன்றாவது பாடலை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தேன். மறக்காமல் பாடகர், பாடல்கள் தொகுப்பினை பற்றிய விவரங்களை குறித்து வைத்துக் கொண்டேன்.

நமது விக்கிபீடியாவில் தேடி பிறகு தான் அவர் பிரான்ஸ் நாட்டை சார்ந்தவர் என்று தெரிந்தது. பிறந்து வளர்ந்தது அல்ஜீரியா. ஆனால் பாடல் அராபி மொழி தான். இவரது பாடல்களை Rai வகையை சார்ந்தது என்று குறிப்பிடுகின்றனர்.

அமேஸானில் அந்த இசை தொகுப்பினை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று முயற்சித்தால் அது பட்டியலிலேயே இல்லை. ஆனால் இன்ன பிற வாடிக்கையாளர்கள் அதனை விற்பனைக்கு இட்டிருந்ததால், அதனை ஆர்டர் செய்தேன். ஆர்வம் பொறுக்காமல், YouTube-ல் அந்த பாடல்களை தேடிப் பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. கிடைத்ததோ அவருடைய இன்னொரு பாடல். (திவான் முதலாம் தொகுப்பு)

ஆஹா.... அந்த பாடல் தான் இன்னும் அற்புதம். அது முதல் எத்தனை முறை இப்பாடலை கேட்டிருப்பேன்! அற்புதமான இசை! அதன் மேடைப் பதிவும் காணக் கிடைத்தது. எத்தனையாயிரம் பேர்களை அப்பாடல் கட்டிப் போட்டிருக்கிறது. ஒவ்வொரு இசைக்கருவியிலிருந்து வரும் இசையும் அற்புதம்.ஒவ்வொரு முறை கேட்கும் போதும், என்னையுமறியாமலேயே தலையசைத்து கேட்டிருக்கிறேன். இது புலம்பெயர்ந்தவர்களைப் பற்றி பாடல் என்று படித்தேன். வரிகள் 'Swadesh'-னை ஒத்திருக்கிறது. அதாவது அதே கருத்து இப்பாடலிலும்.

நாம் அனைவருக்கும் எல்லா தமிழ் பாடல்களையும் எப்படியாவது கேட்கும் வாய்ப்பு கிட்டி விடும். ஆனால் ஆங்கில பாடல்கள் அப்படியல்ல. ஆயிரக்கணக்கான பாடகர்கள், இசை குழுவினர் இருக்கின்றனர். முக்கியமாக Indie குழுவினர். எப்போதாவது, ஏதாவது தேடும் போது பல அற்புதமான பாடல்கள் கேட்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அப்படி கேட்க கிடைக்கும் ஓர் பாடல் மூலமாக அக்குழுவினரின் பல சிறந்த பாடல்களை கேட்கும் வாய்ப்பு உண்டாகியிருக்கிறது. சமயங்களில் தோன்றும், 'இந்த பாடலை மட்டும் கேட்காமலிருந்திருந்தால் எவ்வளவு சிறந்த பாடல்களை இழந்திருப்பேன்', என்று. அதே எண்ணம் இப்பாடலை கேட்கும் போதெல்லாம், அந்த விமான பயணம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. நல்லது செய்தேன் என்று. Diwan இசைத்தட்டினையும் ஆர்டர் செய்திருக்கிறேன். அந்த இசைத்தட்டும் வந்தால், அதிலிருக்கும் மற்ற பாடல்களையும் கேட்கும் வாய்ப்பு கிட்டும். இன்னும் சில நல்ல பாடல்கள் கேட்க வழியிருக்கிறதா என்று.

உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இதோ அந்த பாடலின் மூன்று வடிவங்கள்.

ரஷீத் பாடியது:



ரஷீத் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து பாடியது: (அதில் இருப்பவர்களிலேயே வயதில் சிறியவரின் பாவணை (உற்சாகம்; ஆர்வம்) மிகவும் அழகாக இருக்கிறது.



அசல் பாடல்:



பல பாடல்கள், பாடலின் அர்த்தம் புரிய கூட வேண்டாம் - பாடல் வரிகளை உச்சரிக்க முடிந்தாலே சிறிது சலிக்க ஆரம்பித்து விடும். இது அவ்வகையில் சேர அவ்வளவு வாய்ப்பில்லை.

Diwan-2 பாடல்களை நான் பதிவேற்றம் செய்ய இயலாது. ஆனால் அவற்றின் மாதிரி அவரது இணையத்தளத்தில் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இங்கே சொடுக்கவும்.

முதல் பாடல்: Ecoute Moi Camarade
மூன்றாவது பாடல்: Agatha

குறிப்பு: யா ரயா பாடலின் அடிப்படை இசையை ஏதோ ஓர் தமிழ் பாடலில் கேட்டிருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பாக நீண்ட நேரத்திற்குப் பிறகு கண்டுபிடித்தேன். இப்போது மறந்து விட்டது. யாராவது யூகிக்க முடிந்தால் தெரிவிக்கவும். ஏதோ வித்யாசாகர் படத்தில் கேட்டது போல் இருக்கிறது.

நன்றி: வாய்ஸ் ஆன் விங்க்ஸ். பதிவில் தவறை சுட்டிக்காட்டியதற்கும். வித்யாசாகரின் 'ஏ சப்பா சப்பா', பாடல் என்று அவரது பதிவில் குறிப்பிட்டிருந்ததற்கும்.

4 கருத்துகள் :

Voice on Wings சொன்னது…

நல்ல அனுபவம்தான். சில திருத்தங்கள்:

- நீங்கள் இணைத்துள்ள YouTube நிகழ்ப்படங்களில் முதலாவதும் மூன்றாவதும் மட்டுமே ஓரே பாடலின் (Ya Rayah)வடிவங்கள்.

- இரண்டாவது பாடலின் பெயர் Abdel Kader. அதன் மூல வடிவத்தைப் பாடியவர், பாடகர் Khaled. இந்த நிகழ்படத்திலுள்ள நிகழ்ச்சி Taha, Khaled மற்றும் இன்னொரு பாடகரான Faudel (நீங்கள் குறிப்பிட்ட இளைய பாடகர்) ஆகிய மூன்று பிரபல ராய் பாடகர்களும் கலந்து வழங்கிய ஒரு live நிகழ்ச்சி. "1,2,3 Soleils" என்பது அந்நிகழ்ச்சியின் பெயர். அதன் live ஒலிப்பதிவு குறுந்தகடாக வெளியிடப்பட்டுள்ளது.

நான் முன்பு ராய் இசையைப் பற்றி எழுதிய இடுகை இங்கே.

ஸ்ருசல் சொன்னது…

பதிவிடுகையில் ஏற்பட்ட தவறு அது. சரியாக இருக்கிறதா என்று பார்க்கவில்லை. ஏகப்பட்ட பிரச்சனனகளுக்குப் பிறகு தான் பதிவிட்டேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

அப்பொழுதே உங்களுக்கு தெரியுமா அவர்களைப் பற்றி! உங்களது பழைய பதிவுகளைப் படிக்காமல் விட்டு விட்டேனே!

மதி கந்தசாமி (Mathy Kandasamy) சொன்னது…

ஏதோவொரு ஹிந்திப் பாடல்/படப் பதிவு. பிறகு படித்துக்கொள்ளலாம் என்று போய்விட்டேன். சுட்டி அனுப்பிச் சொன்ன நண்பருக்கு மிகவும் நன்றி! :)

ஸ்ருசல், தமிழ்ப்பாடல்களில் சுவாரசியமானவற்றைத் தேர்ந்தெடுக்க உங்களுடைய இடுகைகளைத்தான் முன்பெல்லாம் நம்பியிருந்தேன். மாதமொருமுறையாவது புதிய பாடல்களில் உங்களுக்குப் பிடித்தவற்றைப்பற்றிச் சொல்வீர்களென்று எதிர்பார்க்கிறேன்.

சரி, கதைக்கு வருவோம். நண்பர் சொல்லியிருக்காவிட்டால் இந்த அருமையான இடுகையைத் தவற விட்டிருப்பேன். ரஷீத் டாஹாவை உங்களுக்கு எந்தளாவு பிடித்துவிட்டிருக்கிறது என்பதை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ரஷீத் டாஹாவை நேரில் முதல் வரிசையில் நின்று பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தது. மூன்று மணித்தியாலங்கள். ah. the adreneline rush.. முதல் நாளும் கொசுறுமாதிரி இன்னொரு நிகச்சியில் பாடினார். :) காதில புகை வந்தாச்சா? ;) சுட்டி இந்தாங்க.

http://mathy.kandasamy.net/musings/archives/2007/07/18/776

-மதி

ஸ்ருசல் சொன்னது…

மதி,

நன்றி.

நானும் எழுதுவதற்கு தான் முயற்சி செய்து வருகிறேன். பெங்களூரில் இருக்கும் போது, வீட்டிற்கு சிறிது அருகிலேயே அலுவலகம்; அலுவலகத்திலேயே பதிவு எழுதுவதும் உண்டு. இங்கு வந்த பிறகு; வேலைப் பளு; பயண தூரம்; அலுவலகத்தில் பதிவெழுதும் வசதி இல்லாமை (:)) முதலியவற்றினால் சிறிது தொய்வு ஏற்பட்டது உண்மை; சிறிதல்ல நிறையவே. பலவற்றை எழுதி வைத்து பதிவிட முடியாமல் போனதும் உண்டு.

நானாகவும், வேண்டுமென்றே, எழுதாமல் நிறுத்தியதும் உண்டு(இந்தியாவில் இருக்கும் போது).

இன்னும் சில நாட்களுக்குப் பிறகு இந்த சிக்கல் நீங்கி விடும் என்று எதிர்பார்க்கிறேன்.

நீங்கள், பாலா, மற்றும் இன்ன பலர் இன்னும் ஆர்வத்துடன் எழுதுவதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பதிவு சுட்டிக்கு நன்றி. இது போன்று வேற்று மொழி பாடல்கள் எத்தனையாயிரம் இருக்கிறதோ? அவற்றை எல்லாம் கேட்கும் வாய்ப்பு கிட்டுமா எனத் தெரியவில்லை. :(