வியாழன், அக்டோபர் 11, 2007

தேவையற்ற ஓர் பதிவு

பொதுவாக, எனது பின்னூட்டத்தை பதிவாக எழுதியதில்லை (இவர் பெரிய மேதை). பதிவர் ஒருவரின் பதிவிற்கு பின்னூட்டமிட ஆரம்பித்த பிறகு அது பெரியதாக செல்லவதை தாமதாக உணர்ந்து அதனை வேறு வழியில்லாமலும், இதனால் எனக்கு மற்ற தமிழ்மணக் குழுவினரிடமிருந்து பலத்த அடி விழும்; அதற்கு பின்னொரு காலத்தில் ஆதாரம் வேண்டும் என்ற காரணத்தினாலும் (அடிக்கிறவன் வீரன் இல்லை. எவ்வளவு அடி கொடுத்தாலும் தாங்கிட்டு இருக்கான் பார்த்தியா அவன் தான் வீரன் :)) அதனை இங்கே பதிகிறேன். தாமதாக உணர்ந்த காரணத்தினால் இது பின்னூட்டம் போல் இல்லாமாலும், பதிவினைப் போல் இல்லாமலும் இருப்பதை உணர முடிகிறது.

மேலும் நான் ஏற்கனவே இதனைப் பற்றி ஒரு வருடத்திற்கு முன்பாக என்னுடைய பதிவொன்றில் மேலோட்டமாக தொட்டு விட்டு சென்றிருந்தேன்.

பின்னணி தெரிய முதலில் மலர்கள் பதிவினைப் படிக்கவும்,

அவரின் பதிவிலிருந்து நான் புரிந்து கொண்டவை.

1. பெண்களுக்கு இன்னும் - ஆண்கள் போல் - சுதந்திரம் வேண்டும்
2. ஆண்கள் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். (ஒழுக்கம் என்பது பெண்களுக்கான மட்டுமே என்பதை மீறி, அதை ஆண்களுக்கும் புகுத்த வேண்டும்)

ஏன் நீங்கள் ஒழுக்கம் கெட்ட ஆண்களை மாத்திரம் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்கிறீர்கள்? ஒழுக்கத்தினைப் போற்றும் ஆண்களும் சரிக்கு சமமாய் இருக்கிறார்கள். நீ பெரிய ஒழுக்கமுள்ளவனாக்கும்; அதை இங்க சொல்லுறீயாக்கும் என்று நினைக்க வேண்டாம். நானே தான் சரிக்கு சமமாய் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளேன். நீங்கள் எப்படி வேண்டுமாலும் என்னை எடுத்துக் கொள்ளலாம். மேலும், ஒழுக்கம் என்பது பெண்களிடம் ஆணின் நடத்தை / அல்லது ஆண்கள் விசயத்தில் பெண்ணின் நடத்தை என்று மட்டுமே பார்க்கப்பட வேண்டியதல்ல. அது பலவற்றை குறிக்கிறது.

1. பெற்றோரை மதித்தல் / காப்பாற்றுதல்
2. குடும்ப பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்தல்
3. நேர்மையாக இருத்தல்; சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது
4. மற்றவர்களுக்கு தேவைப்படும் (அவர்களுக்கு) போது உதவுதல்
5. மனிதன் உட்பட மற்ற ஜீவ ராசிகளுக்கு தீங்கில்லாமல் வாழ்தல்
6. நல் எண்ணங்களைப் போதித்தல்
7. எதிர்பாலரை மதித்தல்

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆதலால் மற்ற பெண்களை போகப்பொருளாக நினைப்பவன் மட்டும் கெட்டவன் அல்ல. ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு, அதனை இல்லை என்று மறுப்பவன் கூட ஒழுக்கம் கெட்டவன் தான். ஆனால் இங்கே எப்போதும் பெண்களிடம் முறையாக (மனதால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!) நடப்பவன் / மது அருந்தாதவன் ஒழுக்கமுள்ளவன் என்றாகி விட்டது. இவ்விசயத்தில் ஒழுக்கமாக இருந்துவிட்டு, மற்ற விசயங்களில் அவன் தேர்ச்சியடையா விட்டாலும் அவன் ஒழுக்கம் கெட்டவன் தான்.

சரி, உங்களது பிரச்சினைக்கு வருகிறேன்.

1. ஆனால் அழகாக கவர்ச்சியாக உடையணிவது பெரிய தவறொன்றுமில்லை.

தவறில்லை தான். அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. எப்படி, உடற்பயிற்சி செய்து தனது உடற்கட்டை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று ஓர் ஆண்மகன் ஆசைப்பட்டு, பிடிப்பான ஆடை அணிகிறானோ அது அது போல் தான் இதுவும். ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பெண்கள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். காரணம் - சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகள் (உங்கள் பாஷையில் ஒழுக்கமுள்ளவர்கள் - ஒழுக்கமற்றவர்கள் கலவை). மிக எளிமையாக, குனிந்த தலை நிமிராமல் செல்லும் பெண்களுக்கே நிறைய சிக்கல்கள் (முன்பு போல் மோசமில்லை).

இது போன்று உடையணிந்து வருபவர்களை - சில தெளிவானவர்கள் - சரி மற்றுமொரு பெண் என்று கண்டுகொள்ளாலாமல் போய் விடலாம். என்னைப் போன்றவர்கள் 360 கோணத்தில் தலையைத் திருப்பி பார்த்துக் கொண்டே நகர்ந்து விடலாம்; மற்ற ரகத்தினர் சீண்டலாம். ஆக நீங்கள் உங்களை இந்த மூன்று ரகத்தினருக்கும் ஏற்ற மாதிரி எப்படி வேண்டுமானாலும் அழகுபடுத்திக் கொள்ளலாம். விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு. இங்கே 'நடந்து கொள்ள வேண்டும்' என்று கூறுவதெல்லாம் நீங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பெண்களுக்கு கட்டளை இடவில்லை. கவர்ச்சி என்பதே ஓர் ஆணோ அல்லது ஓர் பெண்ணோ எதிர்பாலை கவர்வதற்காக பயன்படுத்தும் ஆயுதம் தான். ஓர் மானை போல்; மயிலை போல். 'நான் மற்றவர்களை கவருமாறு உடையணிவேன். ஆனால் அவர்கள் ஓர் எல்லைக்குள் எனது கவர்ச்சியை ரசிக்க வேண்டும் என்பது சரியா? ஆனால் இது நடைமுறை சாத்தியமாகி இருக்கிறது.

2. நான் எளிமையாக உடையணிந்து இருப்பதால் மட்டும் சில பெரிய கடைகளுக்கு போகும் போது எவராவது "தவறுதலாக அணுகும்"

மற்றவர்கள் தவறாக நினைக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும், உங்களுக்குப் பிடிக்காததை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

3. தனிமை, குடும்பத்தை விட்டு நீண்ட தொலைவில் பிரிந்திருப்பதாலான சுதந்திரம், கை நிறைய சம்பளம் என்று பல காரணங்கள் இருந்தாலும் இது நல்லதா, கெட்டதா என்று தெரியவில்லை.

தனிமையினால் கூட பெண்களுக்கு சிகரெட் பழக்கம் வரும் என்பது இப்போது தான் கேட்கிறேன். இதில் நல்லது என்பது எங்கிருந்து வரும் என்று தெரியவில்லை? பொருளாதாரம் முன்னேறி விடுமா? உடல் நலம் மேம்படுமா? சுற்றுச் சூழல் மேம்படுமா? தெரியவில்லை.

'நாமளும் செஞ்சு பார்த்தா என்ன என்ற எண்ணம் தான்', இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொருந்தும்.

சரி அப்படியானால், இப்போது புகைப்பிடிக்கும் பெண்கள், உங்களது கூற்றுப்படி, ஒழுக்கம் கெட்டவர்களாகி விடுவார்களா? அல்லது புகைப்பிடிக்கும் ஆண்கள் ஒழுக்கமுள்ளவர்களாகி விடுகிறார்களா?

4. நான் 4 நாள் சுற்றினாலோ, 4 தடவை பேசினாலோ போது எப்படிப்பட்ட பெண்களையும் மடக்கிவிடுவேன்" என்ற ஒன்றை நிறைய கேட்டிருக்கின்றேன்...

'பாரேன் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்து... 'ஹவ் ஆர் யூ ரேகா',-ன்னு வந்து வழிவான்னு சொல்லும் பெண்கள் இருக்கிறார்களா இல்லையா? 'எனக்கு எத்தனை புரோபசல்ஸ் வந்திருக்கு தெரியுமா', என்று பெருமை பேசும் பெண்கள் இருக்கிறார்களா இல்லையா?. இது பெண்கள் ஹாஸ்டல் மிகவும் சாதாரணமாக பேசப்படும் விசயம் தானே?

எல்லாமே மனித குணம் தான்.

5. நானே கியர் வண்டி ஓட்டும் போது வண்டியைத் தொடக்கூடப் பயப்படும் ஒருவனை என்னால் எப்படி ரசிக்கமுடியும்?

இயல்பு தான். தவறொன்றும் இல்லை.

6. கலாச்சாரமென்பது பெண்களை மட்டும் சார்ந்த ஒரு நடப்பு என்பதால், பாதிப்புக்குள்ளாகுவது பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர்...! இவை அனைத்தையும் ஒரு ஆண் செய்தால் பெரிதாக எடுத்துக்கொள்ளாது இந்த சமுதாயம்.., ஏன் பெண்களிடம் இந்த எதிர்பார்ப்பு..?

ஏனென்றால் (சில) ஆண்கள் ஆண்டாண்டுகாலமாக அப்படித்தான் இருந்து வருகிறார்கள். சமூகத்தின் அடிப்படையே பெண்கள் தான். பெண்களுக்கான கட்டுப்பாடுகள், பெரும்பாலும், தன் வீட்டுப் பெண்களை மற்ற ஆண்களிடமிருந்து பாதுகாப்பதற்கு இயற்றப்படுபவை தான் என்பது என் கருத்து. அது நல்ல எண்ணத்தில். சமயங்களில் அது கெட்டவர்கள் / அறியாமையில் வீழ்ந்தவர்களின் கையில் சிக்கி பெண்களுக்கு எதிராக மாறி விடுகிறது. அதற்காக தலிபான்களை நான் ஆதரிக்கிறேனா என்ன என்று கேட்காதீர்கள். அங்கு கல்வி கூட மறுக்கப்பட்டது. அது வேறு இது வேறு. உங்களால் மற்ற (தவறு செய்யும்) ஆண்களைத் தடுத்து, அடக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் இது போன்ற கட்டுப்பாடுகளை உடைத்து விட்டு பெண்கள் இஷ்டம் போல் இருக்கலாம்.

பெண் சுதந்திரம் (கல்வி, சொத்துரிமை, நண்பர்கள் வைத்துக் கொள்தல், பேச்சுரிமை, அரசியல், வேலை வாய்ப்பு) என்பது இப்போது இந்தியாவில் பெண்களுக்கு தேவையான அளவு உள்ளது. வீட்டிற்கு வீடு சிற்சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். அது நாட்டின் மீதான தவறல்ல.

சுதந்திரத்திற்கும், ஆடை மற்றும் ஆண்சார் சுதந்திரத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

குறிப்பு: இது உங்களுக்கு எதிரான தனிப்பட்ட கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலும், இப்பதிவு பல பெண்களையும் / பெண்ணுரிமை காக்கும் சில ஆண்களையும் கோபமுறச் செய்தால் நான் ஆச்சர்யப்பட மாட்டேன்.

குறிப்பு எண் 2: தேவையற்ற ஓர் பதிவு என்று எனது பதிவிற்கு தான் பெயரிட்டுள்ளேன்.

11 கருத்துகள் :

SnackDragon சொன்னது…

சுருசல்,

பல நாட்கள் கழித்து உங்கள் பதிவுகளை பார்க்க முடிகிறது.


இவ்வார நட்சத்திரத்தின் பல (அதாவது 2 )பதிவுகளை வாசித்தப்போது எனக்கும் உங்களைப்போலவே சந்தேகமே கிளம்பியது. அவர் இன்னும் மதில் மேல் பூனையாகவே எழுதுகின்றார் என்று.

உதாரணமாக

//அப்படி, எல்லாவற்றிலும் ஒரு இழப்பு இருக்கும். அப்படித்தான் இந்த கலாச்சார அணுகுமுறையும். பெண்கள் புகைப்பிடிக்கின்றார்கள், மது அருந்துகின்றார்கள், பப் செல்கின்றார்கள் என்பதெல்லாம் அவரவர் விருப்பம், பெண் செய்வதால் மட்டும் அது எப்படி கலாச்சார அழிவாகப் போகும், எதாவது ஒரு ஆணின் துணையில்லாமல் அப்படிப்போவார்களா என்பது எனக்குத் தெரியவில்லை...//

இதில் முதல் வரிக்கும் இரண்டாவதுக்குமே நிறைய முரணுள்ளது.
இந்த பின்னூட்டை அங்கேயும் போடுகிறேன். அதுதான் ப்ளிதிக்ஸ் (ப்ளாக் எதிக்ஸ்!)

ஸ்ருசல் சொன்னது…

கார்த்திக்,

//பல நாட்கள் கழித்து உங்கள் பதிவுகளை பார்க்க முடிகிறது.

இது தொடருமா என்று தெரியவில்லை. :)

அவரின் மற்ற பதிவுகள் பற்றி எனக்குத் தெரியவில்லை. இன்னும் வாசிக்கவில்லை. காலையில் தற்செயலாக கண்ணில் பட்டது.

Mohandoss சொன்னது…

//பெண் சுதந்திரம் (கல்வி, சொத்துரிமை, நண்பர்கள் வைத்துக் கொள்தல், பேச்சுரிமை, அரசியல், வேலை வாய்ப்பு) என்பது இப்போது இந்தியாவில் பெண்களுக்கு தேவையான அளவு உள்ளது. வீட்டிற்கு வீடு சிற்சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். அது நாட்டின் மீதான தவறல்ல.//

சும்மா நச்சுன்னு இருக்கு நீங்க சொன்னது. எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சிக்கவே மாட்டேன்னு முயலுக்கு மூணு கால்தான்னு பிடிவாதம் பிடிக்கிறது. அப்புறம் விமானம் ரொம்ப உயரமாப் போய் வாந்தி பேதி வருதுன்னு புலம்புவாங்கன்னு புலம்புறது.

ஹிஹி. இந்த வரிகளுக்காகவே இந்தப் பதிவை சூப்பர் பதிவுன்னு சொல்லலாம். நீங்க என்னான்னா தேவையற்றதுன்னு சொல்றீங்க.

ஸ்ருசல் சொன்னது…

மோகன் தாஸ்,

நன்றி.

என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே? :)

பெயரில்லா சொன்னது…

என் பதிவில் நானிட்ட பின்னூட்டம்,

பாண்டியன் said,
//இவ்வளவு எழுதத்தெரிந்த உங்களுக்கு, புகை பிடிப்பது சரியா தவறா என்று யோசிக்கவா தெரியலை. நல்ல பெண்ணியம் போங்க!
//
சரியென்றும் தவறென்றும் ஒன்றுமே இல்லை என்னைப்பொருத்தவரையில், ஆசையென்பது உடல் நலம் பார்த்துவருவதில்லை, சர்க்கரை நோயிருப்பவர்கள் இனிப்பிற்கு ஆசைப்படுவதைப்போல்... பெண் சிகரெட்குடிப்பது என்பதை அப்படியும் எடுத்துக்கொள்ளலாம், எனவே நான் குடிப்பதை சரியென்றும் கூறிவிட முடியாது.. அதனால் தான் சரியோ, தவறோ பார்ப்பவர்கள் கண்களில் தான் உள்ளது, முரண்பாடானஒன்றை பொதுவாக சரியென்றோ, தவறென்றோ என் பார்வையாகக் கூறுவது கூட "எழுத்துலகில்" நல்லது அல்ல என்ற காரணத்திற்காக தான் அப்படிக்கூறினேன்...


KARTHIKRAMAS said...
//இதில் முதல் வரிக்கும் இரண்டாவதுக்குமே நிறைய முரணுள்ளது.
இந்த பின்னூட்டை அங்கேயும் போடுகிறேன். அதுதான் ப்ளிதிக்ஸ் (ப்ளாக் எதிக்ஸ்!)
//

இந்த முரண்பாட்டிற்குக் காரணம் நிறைய, ஆணின் துணையென்பது, குடிக்கும் போது மட்டுமில்லை, "பழகிக்கொடுத்ததில்" என்று தான் கூற வந்தேன்...! வாக்கியம் அப்படி அமைந்துவிட்டது. ஒரு பெண் தோழியோ, குடும்ப உருப்பினர்களோ பழகிக்கொடுக்க வாய்ப்பு மிக மிக குறைவு...

நானு பிளாக் எதிக்ஸ் கடைபிடிக்கின்றேன்..


வள்ளி

பெயரில்லா சொன்னது…

//பெண் சுதந்திரம் (கல்வி, சொத்துரிமை, நண்பர்கள் வைத்துக் கொள்தல், பேச்சுரிமை, அரசியல், வேலை வாய்ப்பு) என்பது இப்போது இந்தியாவில் பெண்களுக்கு தேவையான அளவு உள்ளது. வீட்டிற்கு வீடு சிற்சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். அது நாட்டின் மீதான தவறல்ல.
//

புள்ளிவிவரங்களைப் பாருங்கள், உங்களுக்கு வித்யாசம் தெரியும், பள்ளிப்படிப்பிற்கு பின் எத்தனைப்பெண்கள் கல்லூரி படிப்பிற்கு போகின்றார்கள் என்று... 33% வாங்கப் படும் துன்பத்திலிருந்தே நாட்டின் மீதான உங்கள் பார்வை எப்படிப்பட்டது என்று தெரியவுல்லையா..! ஏதும் சொல்வதற்கில்லை போங்கள்...

இ.கா.வள்ளி...

ஸ்ருசல் சொன்னது…

வள்ளி,

// புள்ளிவிவரங்களைப் பாருங்கள், உங்களுக்கு வித்யாசம் தெரியும், பள்ளிப்படிப்பிற்கு பின் எத்தனைப்பெண்கள் கல்லூரி படிப்பிற்கு போகின்றார்கள் என்று... 33% வாங்கப் படும் துன்பத்திலிருந்தே நாட்டின் மீதான உங்கள் பார்வை எப்படிப்பட்டது என்று தெரியவுல்லையா..! ஏதும் சொல்வதற்கில்லை போங்கள்...


இங்கே நீங்கள் பேசுவது அடிப்படை சுதந்திரம். முதல் வகை.

உங்களது பதிவில், நாம் வாதிட்டுக் கொண்டிருப்பது, உடை/உடல் சார்ந்த சுதந்திரம்.

ஆனாலும் உங்கள் கேள்விக்குப் பதிலளிக்கிறேன்.

அதை தான் குறிப்பிட்டிருந்தேன். வீட்டிற்கு வீடு வேறுபடுமென்று.

வீட்டுப் பொருளாதாரச் சூழல் சரியில்லாமல் இருக்கலாம்; தந்தை பிற்போக்கு எண்ணம் கொண்டவராக இருந்திருக்கலாம்.

ஆனால் இது மாறி வருகிறது. படிப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் நிச்சயமாக அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இப்போது பெண்ணுக்கு படிப்பு வேண்டாம் என்று சொல்லும் குடும்பங்களை எண்ணி விடலாம். அவர்களால் முடிந்த அளவிற்குப் (காசு விசயத்தில் சொல்கிறேன்) படிக்க வைக்கின்றனர்.

மற்றபடி, பணம் இல்லாமல், படிக்க செல்ல முடியாமல் இருக்கும் குழந்தைகள் இரு பாலரும் சரிக்கு சமமாக உண்டு. ஹோட்டல்களில் பெஞ்ச் துடைத்துக் கொண்டு, கூலி வேலை செய்து கொண்டிருக்கும் சிறுவர்களை பார்த்ததில்லையா?
அப்போது என்ன தோன்றும்?

பணம் இருந்தால், நிச்சயமாக அவர்களது பெற்றோர் பள்ளிக்கு அனுப்பியிருப்பர், என்று தானே?

பணமிருந்தும், பெண்ணுக்கு நன்றாக படிப்பு வந்தும், பெண்களை படிக்க அனுப்பாமல் இருக்கும் தந்தையர்கள் (இவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்களாக தான் இருப்பர்) குறைந்து வருகிறார்கள்.

இல்லையென்று சொல்லாதீர்கள்.

மற்றபடி வேலைவாய்ப்பு, அரசியல் எல்லாவற்றிலும் உரிமை இருக்கிறது. இதன் விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரே ஆண்டில் இது 100% மாற வாய்ப்பில்லை. ஆனால் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.

ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு, உங்கள் தெருவில் எத்தனை பெண்கள் பணிபுரிந்தனர்? முக்கியமாக வெளியூர்களில் பணிபுரிந்தனர்?

இப்போது எத்தனை சதவீதம் பேர் பணிபுரிகின்றனர்?

அத்தனை சதம், பெண்கள் மீதான அக்கறை வளர்ந்து உள்ளது, இந்நாட்டில்...

மற்றபடி, 33% சதம் என்பதும் அவ்வகையே. வேலை வாய்ப்பில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.

அப்படி அங்கு இல்லாத பட்சத்தில் அரசியலிலும் தேவையில்லை. திறமை இருந்தால் அவர்களே வருவார்கள். அரசியலுக்கு துணிவும், அயராத உழைப்பும் வேண்டும். அது இருக்கும் பெண்கள் (ஜெ, மாயாவதி, உமா, சோனியா, ...) வர முடியும்.

மறுபடியும் இடஒதுக்கீடா? போதும்! :)

பெயரில்லா சொன்னது…

//உங்களது பதிவில், நாம் வாதிட்டுக் கொண்டிருப்பது, உடை/உடல் சார்ந்த சுதந்திரம்//

என் கட்டுரையில் இரண்டுவிதமாக நான் எழுதியுள்ளேன், கலாச்சாரம் மற்றும் பெண்ணியம்... அவற்றிற்கான பிரிந்துணர்வு வேண்டும்...

உடை/உடல் சார்ந்த சுதந்திரம், சிகரெட்/போதை பழக்கம் என்பதில் எல்லாம் நான் பெண்ணியமாக எதையும் கூறவில்லை அதில் அர்த்தங்களும் இல்லை... அது, சமுதாயத்தின், பெண்ணின் மீதான ஒரு எதிர்பார்ப்பு என்ற கோணத்தில் மட்டுமே எழுதப்பட்டது. அதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..அதற்கு மேல் அதில் வேரு ஒன்றும் இல்லை..

//ஆனால் இது மாறி வருகிறது. படிப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் நிச்சயமாக அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
//

இதையும் நான் மருக்கவில்லை, ஆண்களுக்கான கட்டுப்பாடு /பெண் மீதான அடக்குமுறை என்பதற்கு நான் நடுத்தரவர்க்கத்தின் படிக்க வைக்க முடியாத துன்பங்களையோ, மகிழ்ச்சிக்கான ஒரு காரணியாக பெண்ணின் சம்மதத்துடன் நடைபெரும் உணர்வுப் பரிமாற்றத்தையோ பற்றிக் கூறவில்லை... பெண்ணின் அடக்குமுறை என்பது "பள்ளிகளில் பாலியல் வன்முறை, மனநிலை சரியில்லாத பெண்களின் மீது நடைபெரும் பாலியல் வன்முறை மற்றும் "நான் அவனில்லை" வகையான வன்முறைகளையும் மட்டுமே குறிப்பிடுகின்றேன்... நீங்கள் கூறியிருக்கும் எதுவுமே என் கட்டுரைகளில் பெண்ணியத்தை பாதிக்கும் காரணியாக நான் கூறவில்லை, அவை சமூகத்தின் மீதான எதிர்பார்ப்புகள் என்பதை மட்டுமே சார்ந்தது... மற்றபடி பெண்களின் மீதும் தான் நான் ஆதங்கப் பட்டுள்ளேன்...

என் புரிதல்கள், உங்கள் புரிதல்கள் வேருபட்டமைக்கு என் எழுத்து நடை காரணமாக இருக்கலாம், ஆனால் நான் சொல்வதை சிறிது முயன்றால் புரிந்து கொள்ளலாம்

இ,கா.வள்ளி

ஸ்ருசல் சொன்னது…

என்னமோ - இன்னும் வாதிடலாம்...

'போதும்! இத்தோட நிறுத்திப்போம்!' (வின்னர்)

பாருங்க.. தமிழ்மணம் பெண்களுக்கும் நட்சத்திர வாரத்தில் சரிசம வாய்ப்புகள் கொடுக்குது. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்ங்க...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்...

பெயரில்லா சொன்னது…

//என்னமோ - இன்னும் வாதிடலாம்...

'போதும்! இத்தோட நிறுத்திப்போம்!' (வின்னர்)
//

எனக்கும் கூட இதே தான் தோன்றியது.. வின்னர், லூசர் லாம் இல்லை, உங்கள் மனசாட்சிக்கு எது சரியாகப் படுகின்றதோ அது தான் வெற்றி பெற்றது... உண்மை, பொய் என்பது கூரும் வாக்கியத்திலல்ல எடுத்துக்கொள்ளும் விதத்தில் தான்... நான் கூருவதை நீங்க நம்புனா அது உண்மை இல்லைனா பொய்... அதனால்(.)

ஸ்ருசல் சொன்னது…

// வின்னர், லூசர் லாம் இல்லை

அது வின்னர் படத்தின் வசனம் என்று சொல்ல வந்தேன்.