செவ்வாய், அக்டோபர் 09, 2007

வெறுத்து ரசித்த பாடல்கள்

சில பாடல்களை கேட்டவுடனே பிடித்து விடும்; பல கேட்டுக்கொண்டே இருந்தால் பிடித்து விடும்; சில பாடல்கள் பார்த்த பிறகு பிடித்து விடும்; சில பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் / பார்த்தாலும் பிடிக்காது. அப்படி ஆயிரக்கணக்கான பாடல்கள் இருக்கின்றன.

ஆனால் சில பாடல்களை மிகவும் வெறுத்து, கேட்காமல் தவிர்த்து, சில மாதங்களுக்குப் பிறகு கேட்கும் போது, அதிசயமாக, மிகவும் பிடித்து விடும். அது போன்ற அனுபவம் எனக்கு நான்கைந்து முறை ஏற்பட்டுள்ளது. அதனைப் பட்டியலிட்டால் என்ன என்று தோன்றியது. இப்பாடல்கள் நீங்கள் மிகவும் வெறுத்த பாடல்களாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆதலால் உங்களுக்குப் பிடிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இதோ பட்டியல்.

1. யம்மாடி யாத்தாடி

பாடல்: வல்லவன்
பாடியவர்கள்: டி. ராஜேந்தர், சிம்பு, சிசித்ரா, மஹதி
இசை: யுவன் சங்கர் ராஜா

வல்லவன் படம் வருவதற்கு முன்பும், வந்த பிறகும் அப்படத்தில் மிகவும் வெறுத்த பாடல். சன் மியுசிக்கில் நேயர்கள், இப்பாடலை கேட்கும் போதெல்லாம் அவர்களைத் திட்டியிருக்கிறேன் (எவ்வளவு நல்ல பாடல்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் விட்டு விட்டு, எதற்காக இதனை கேட்கிறார்கள் என்று!). குத்து பாடல் என்பதனால் பிடித்திருக்கலாம் என்று நினைத்துக் கொள்வேன்.

ஆரம்பத்தில் வரும் நாதஸ்வரமும், டி.ஆர், சிசித்ராவின் குரலும் என்னை பலமுறை வெறுப்பேத்தியிருக்கின்றன.

இப்பாடலை ஒரு நான்கு மாதங்களுக்கு முன்பாக தற்செயலாக கேட்டுக் கொண்டிருந்தேன். இப்பாடலின் இரு பகுதிகள் என்னை மிகவும் கவர்ந்தது. ஒன்று மஹதியின் குரல். இப்பாடலில் மஹதியின் குரல் ஒளிந்திருந்தை நான் ஆரம்பத்தில் கவனிக்கத் தவறியிருந்தேன். பின்பு மீண்டும் கேட்ட போது, இப்பாடலில் கூட மஹதியின் குரல் நன்றாகயிருக்கிறது என்று வியந்தேன். ('நல்லவனே வல்லவனே', 'வெட்கம் எனும் வில்லனைத் தான்', 'வாழும் வரை வாழும் வரை'). ஏனோ மஹதியின் குரல் மீது எனக்கு அவர் பாட ஆரம்பத்திலிருந்தே ஒரு விதமான ஈர்ப்பு.

அதனை விட என்னை மிகவும் கவர்ந்த இன்னுமொரு இடம் சிம்புவும், சுசித்ராவும் பாடும் ஒரு சிறிய பகுதி.

அது 3:00-ல் டப்பாங்குத்து டிரம்ஸிலிருந்து, 3:08-ல் மிக அருமையாக நாதஸ்வரமாக மாறி, அதிலிருந்து 3:14-ல் மேளத்திற்கு மாறி, 3:26-ல் மீண்டும் டப்பாங்குத்திற்கு மாறுவது கேட்பதற்கு அற்புதமாக இருக்கும்.

அதனைத் தொடர்ந்து சிம்புவிம், சுசித்ரா மிகவும் அற்புதமாக பாடியிருப்பார்கள்.

ஆதாராமா அவதாரமா
ஆயிப்புட்ட நெஞ்சுக்குள்ள

உன்னை விட்டால் என்னை விடும்
உயிர்தானமா உள்ளுக்குள்ள

உன் வாசம் தான் என் மூச்சில் வீசும்
உயிருக்குள் உயிர் வாழுது

நம் பேரைத் தான் ஊரெல்லாம் பேசும்
ஊமைக்கும் மொழியானது

அற்புதமான ராகம். அருமையான குரல்கள். பின்பு தான் தெரிந்தது. அதனைப் பாடியது வேறு யாருமல்ல - சுசித்ரா தானென்று. சிம்புவும் நன்றாக பாடியிருக்கிறார். எவ்வளவு அருமையாக 'ஆதாரமா', 'உன்னை விட்டால்', 'உன் வாசம்', வரிகளைப் பாடியிருக்கிறார்கள். இப்பகுதிக்காக 3:00-லிருந்து பல நூறு முறைகளுக்கு மேல் கேட்டிருக்கின்றேன். அற்புதம்!

சுசித்ராவின் பாடல்கள் ஒன்று கூட பிடித்ததில்லை. அவரை டப்பாங்குத்து பாடல்களுக்கு மட்டும் பயன்படுத்துவதால், அவர் பாடிய பாடல்களுக்கென்று ஒரு முத்திரை இருக்கிறது. ஆனால் அவராலும் நன்றாக பாடமுடியும் என்பது இப்பாடலில் தான் நான் உணர்ந்து கொண்டேன். என்ன... யாரும் அவருக்கு அவ்வாறு பாடுவதற்கு வாய்ப்பு தான் கொடுப்பதில்லை.

இப்பாடலிலும் கூட இவ்விரண்டு வரிகளில் தான் நன்றாக பாடியிருப்பார். அதிலும் 'உயிர் வாழுது', என்ற இடத்திலேயே சுசித்ரா வழக்கமான சுருதியில் பாட ஆரம்பித்து விடுவார். அது 'நீதாண்டா நீதாண்டா ஜல்லிக் கட்டு', என்று மாறும் போது இன்னும் வெறுப்படைய வைக்கும்.

2. ஏஞ்சல் வந்தாளே

படம்: பத்ரி
பாடியவர்கள்: தேவி ஸ்ரீபிராசாத், சித்ரா
இசை: ரமணா கோகுலா

இப்பாடல் வந்ததும் இதனை வெறுத்த முதல் நபர் நானாகத் தானிருப்பேன். விஜய்யின் படங்கள் எனக்குப் பிடிக்காது. அதிலும் இப்பாடலின் ஆரம்பம், அது பாடப்பட்ட விதம், வரிகள் சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தினை ஓர் நாள் சன் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இப்பாடலை மீண்டும் கேட்கும் (பார்க்கும்) வாய்ப்பு கிடைத்தது. ரசிக்க ஆரம்பித்தேன். ஆனாலும் இன்னும் கூட அதன் ஆரம்பம், வரிகள், ஆண் குரல், பாடப்பட்ட விதம் சுத்தமாக பிடிக்கவில்லை. பிடித்ததெல்லாம் பாடலின் பிற்பாதியில் சித்ரா பாடும் பகுதி தான். அவர் பாடிய இவ்வரிகளும் (3:07), அதன் ராகமும், பின்னணியில் வரும் இசையும் மிக இனிமை.

நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை
நீந்தி வந்து அறிந்தாயே
நன்றி உயிரே

நெஞ்சுக்குள் வைத்திருந்த உறவொன்றை
சொல்லுமுன் அறிந்தாயே
நன்றி உயிரே

உந்தன் மார்பில் படர்ந்து விடவா
உந்தன் உயிரில் உறைந்து விடவா
உறவே உறவே

ஆஹா அற்புதம்!

சித்ராவினைப் பற்றி கூற வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் இப்பாடலில் அவரின் குரல் அவ்வளவு அற்புதமாக வந்திருக்கிறது. அது முதல் இப்பாடலின் மீது ஓர் மயக்கம் தான். இது போன்ற மிக சாதாரணமான ஆரம்பம் மற்றும் முடிவும் இருக்கும் இப்பாடலில் இது போன்ற சிறந்த பாடல் வரிகளும், இசையும் ஒளிந்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

3. தச்சுக்கோ தச்சுக்கோ

படம்: பொன்னியின் செல்வன்
பாடியவர்கள்: மாதங்கி, அனுராதா ஸ்ரீராம்
படம்: வித்யாசாகர்

பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை, 'ஊமை விழிகள்' படத்தில் வரும் 'ராத்திரி நேரத்து பூஜையில்' பாடலினைத் தான் எப்போதும் ஞாபகப்படுத்துகிறது. இப்பாடலை எத்தனை பேர் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இப்பாடல் சில ஆண்டுகளாக என்னிடம் இருக்கின்றது. இது எப்போதும் என்னைக் கவர்ந்திதில்லை. சில நொடிகளில் மாற்றி விடுவேன். இது வரை இப்பாடலைப் பார்த்ததில்லை. இரு மாதங்களுக்கு முன்பாக தற்செயலாக ஒலிக்கவிட்டேன். ஏனோ மாற்ற வேண்டும் என்று தோன்றவில்லை; அல்லது மாற்ற முடியாத சூழ்நிலை.

'கிருஷ்ணா', என்று மாதங்கி ஆரம்பித்து, 'தச்சுக்கோ தச்சுக்கோ', என்று பாடிய பிறகு, அனுராதா ஸ்ரீராம், 'கண்களிலே தீ', என்று மாதங்கியுடன் இணைந்து பாட ஆரம்பிப்பது அழகு!. இது போல் இப்பாடலில் சிற்சில அருமையான இடங்கள் இருக்கின்றன. அவற்றுள் 1:27-ல் வரும் புல்லாங்குழலும், 2:40-ல் வரும் வயலின் இசையும் அடங்கும்.

முக்கியமானது அனுராதாவின் ஸ்ரீராம்.

'கண்களிலே தீ... கன்னத்திலே பாய்... அங்கத்திலே பூ...' என்று அனுராதா ஸ்ரீராம் பாடும் ஒவ்வொரு இடமும் (0:36, 3:45) அற்புதம்.

'சுமை நான் தாங்கதான் சுகம் நீ வாங்க தான்' (1:55), என்று முதலாம் சரணத்தில் மாதங்கி பாடுமிடத்தில் ராகம் அழகு. ஆனால் இரண்டாவது சரணத்தில், அதை அனுராதா, 'விண்ணில் ஒற்றை நிலா மண்ணில் கூடல் விழா', (3:06) பாடுவது இன்னும் சிறப்பு. அற்புதம்! அதிலும் நிலா, விழா வார்த்தைகளை அனுராதா உச்சரிப்பதே அழகு. இவர் பாடிய வரிகள் என்னையறியாமல் புன்சிரிப்பை வரவழைத்தன; நல்ல இசை கேட்ட சந்தோஷத்தில். மிக அருமையான; திறமை வாய்ந்த பாடகர். சந்தேகமே இல்லை.

இப்பாடலில் பல இடங்களில் வரிகள் மோசமாக இருப்பதை அறிவேன். எனக்கு பல முறை ஏற்படும் சந்தேகம் இது. இது போன்று பாடுவதற்கு பாடகிகளுக்கு கூச்சமாக இருக்காதா? அல்லது அவ்வாறு பாடலை எழுதி ஓர் பெண்ணிடம் பாடச் சொல்லி கொடுக்கும் கவிஞருக்கு (?) அசிங்கமாக இருக்காதா?

4. வருது வருது

படம்: பிரம்மா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

இப்பாடலை ஆரம்ப காலத்தில் ஓர் வயதானவரும், இளம்பெண்ணும் பாடும் பாடலாகத் தான் அறிவேன். அப்போதெல்லாம் எந்த விருப்பமான பாடலையும் கேட்கமுடியாது. எப்போதாவது ரேடியோவிலோ, டி.வி.யிலோ ஒலி/ஒளிபரப்பினால் தான் உண்டு. ஆனாலும் எப்போதும் இப்பாடலை விரும்பிக் கேட்டதில்லை.

பின்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு பலமுறை இப்பாடலைக் கேட்க வாய்ப்பு கிடைத்த போது, மிகவும் பிடிக்க இரண்டு காரணங்கள். ஒன்று. கேட்பவரை உற்சாகம் அடையச் செய்யும் வகையில் இப்பாடலின் பீட் அமைந்திருப்பது. அதுவும் பாடல் முழுவதுமே தொடர்ந்து இருப்பது மிக நன்று. இதனைத் தவிர எஸ்.பி.பி. மிக அற்புதமாகப் பாடியிருப்பார். ஜானகியைப் பற்றிக் கூறத் தேவையில்லை. முதல் சரணத்திற்கு முன்பு வரும் இசையில் பாடலின் பீட் மறைந்து புல்லாங்குழல், வயலின் போன்ற வாத்தியங்கள் ஒலிக்கத் துவங்கியிருக்கும். அது முடிந்ததும் 1:54-ல் எஸ்.பி.பி.

நாடி எங்கும்
ஓடிச் சென்று
நாளும் ஒரு
சூடேற்றும் ரூபமே

என்று குரலை ஏற்றி அற்புதமாகப் பாடியிருப்பார். அவர் அப்படிப் பாட ஆரம்பிக்கும் போது, பாடலின் பீட் மீண்டும் ஒலிக்கத் துவங்கியிருக்கும். கேட்பதற்கு அற்புதமாக இருக்கும். இதற்காக இன்னும் இப்பாடலை விரும்பிக் கேட்பதுண்டு.

எஸ்.பி.பி. போன்ற அற்புதமான பாடகர்களை இப்போதெல்லாம் இசையமைப்பாளர்கள் அதிகமாக உபயோகப்படுத்தாமலிருப்பது அவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரிய இழப்பு தான். மனிதர் என்ன அழகாக தமிழ் பேசுகிறார் (மேடை, பேட்டிகள் அடங்க). இங்கிருக்கும் தமிழ் நடிகர்களால் கூட அவ்வளவு கோர்வையாக, அழகாக பேச இயலாது.

5. மச்சக்காரி

படம்: சில்லென்று ஒரு காதல்
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், வசுந்தரா தாஸ்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

இப்படத்தில், 'மஜா மஜா', பாடலைப் போல் 'மச்சக்காரி', பாடல் எனக்கு பிடிக்காத பாடலாக இருந்தது. நியூயார்க் நகரம் கேட்காமல், இப்பாடலை நேயர்கள் கேட்கும் போதெல்லாம் அவ்வளவு எரிச்சலாக இருக்கும். இப்போதும் நியூயார்க் நகரம் பாடலை தினமும் மூன்று முறைகளாவது கேட்டு விடுவேன். ஆனால் இப்பாடல் இன்னும் முழுவதுமாகப் பிடிக்காது. ஓரளவிற்குப் பிடிப்பதற்கு முக்கிய காரணம் வசுந்தரா தாஸின் குரல். அதிலும் முக்கியமாக, 'வாழும் வாழ்க்கை யாருக்காக சொல் தலைவா.... இன்பம் வந்தபின் இன்னும் நிற்பதேன் ஏன் தலைவா', என்ற வரிகளை பாடுமிடத்தில்.

இன்னொரு இடத்தில் அவர் பாடுமிடம் அழகாக ஒலிப்பது. (முதலாம் சரணம்: 2:34)

உதடுகள் குவித்தேன்
என் மன்னவா

உன் உதவிக்குத் தவித்தேன்
பெண்ணல்லவா

நீ முதல் முதல் குதித்தாய்
உன்(?) ரத்தமே

நான் மயக்கதில் விழுந்தேன்
என் காதலா............

காதலா என்று அவர் இழுவை கொடுத்து பாடுமிடம் மிகவும் ரசிக்க வைத்தது. 'நாம் இருவரும் இணைந்தே பார்க்கலாம்' (4:13), என்று இரண்டாம் சரணத்தில் சங்கர் பாடுமிடம் இதனுடன் ஒப்பிடும் போது அது அவ்வளவு சுவையாக இருக்காது. வசுந்தரா பாடும் இடங்களுக்காக, இப்போதெல்லாம் இப்பாடலை அடிக்கடி கேட்பதுண்டு.

உங்களுக்கு இது போன்ற அனுபவம் நேர்ந்திருந்தால் தெரிவிக்கவும்.

11 கருத்துகள் :

MyFriend சொன்னது…

வணக்கம். :-)))

MyFriend சொன்னது…

யப்பாடி ஆத்தாடி ஆரம்பத்திலிருந்து இப்போது வரைக்கும் எனக்கு பிடிக்காத பாடல்தான். நீங்க சொன்ன "ஆதாரமா அவதாரமா" பீட் மட்டும்தான் நானும் கேட்பேன். ;-)

MyFriend சொன்னது…

பிரம்மாவின் வருது வருது என்ற பாடல் நான் கேட்ட முதல் தடவையிலிருந்தே என் ஃபேவரைட். :-)

ஏஞ்சல் வந்தாலே என்னுடைய ஃபேவரைட் இல்லைன்னாலும் வெறுக்காத ஒரு பாட்டு. :-)

MyFriend சொன்னது…

படத்துல அந்த பாடல் கட்சியை பார்த்தபோதுதான் எனக்கு மச்சக்காரி பாடல் பிடித்தது. ;-)

ஸ்ருசல் சொன்னது…

வாங்க மைஃபிரண்ட்...

அது என்னங்க மைஃபிரண்ட்? (பஞ்சு பாலாவா? :))

வருது வருது... நான் வெறுத்த பாடல் என்று ஞாபகம் இல்லை... தவிர்த்த பாடல். ஆனால் இப்போது மிகவும் பிடித்த பாடல் என்று சொன்னால் சரியாக இருக்கும்.

MyFriend சொன்னது…

பஞ்சூ பாலா? யாரவரு??

ஸ்ருசல் சொன்னது…

தித்திக்குதே படத்தில் வரும் காமெடி வசனம் அது.

விவேக், 'என் பேர் பஞ்ச் பாலா', என்பார்.

அடுத்த நபர், 'பஞ்சு பாலாவா?', என்பார்.

மை ஃபிரண்ட்-ன்னா என்று கேள்வி எழுந்ததும், எனக்கு அந்த வசனம் தான் ஞாபகம் வந்தது.

பிச்சைப்பாத்திரம் சொன்னது…

அன்பு ஸ்ருசல்,

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பதிவை படிக்கிறேன். பேண்ட் ஜிப் போடாதைக்கூட கவனிக்காமல் விரைந்து கொண்டிருக்கும் இன்றைய அவசர, இயந்திர உலகில் எப்படி இந்த மனிதர் இவ்வளவு சாவகாசமாக - அதுவும் இன்றைய திரையிசைப் பாடல்களை- உல்லாசமாக அசை போட்டு நுணுக்கமாக கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கும். :-)

இந்தப் பதிவை பொறுத்த வரைக்கும் எனக்கும் இதே மாதிரியான எண்ணங்கள் தோன்றியதுண்டு. உங்கள் வரிசையின் படி "யம்மாடி"யும் "தாச்சுக்கோவும்" ஆரம்ப தருணங்களில் பிடிக்காமல் வெறுத்தொதுக்கி பிற்பாடு பிடித்தமானதாக மாறிப் போனதுண்டு. மற்றபாடல்கள் ஆரம்ப கேட்டல்களிலேயே கவர்ந்து விட்டன்.

இதே பாணியில் நானும் ஒரு பதிவு போடலாமா என்று தோன்றுகிறது.

ஸ்ருசல் சொன்னது…

சுரேஷ், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.


// பேண்ட் ஜிப் போடாதைக்கூட

:)

//இதே பாணியில் நானும் ஒரு பதிவு போடலாமா என்று தோன்றுகிறது.

கண்டிப்பாக எழுதுங்கள், சுரேஷ்!

ஹரன்பிரசன்னா சொன்னது…

மற்ற பாடல்கள் ஓகே, ஆனால் பிரம்மா பாடல் பிடிக்காமல் போனது அதிசயம். What a great song it is!

Unknown சொன்னது…

Good continue