இது வரை டெக்னாலஜி வரலாற்றில் எந்த போனுக்கும், ஏன் எந்த ஒரு கணினியிற்கோ, ஆப்பரடிங் சிஸ்டத்திற்கோ, சாஃப்ட்வேருக்கோ இப்படி ஓர் எதிர்பார்ப்பு எழுந்ததில்லை. அப்படி என்ன அதிசயம் இந்த ஐ-ஃபோனில். இதனைப் பற்றி எழுத போவதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. அதனைப் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதனை வாங்கலாமா, வேண்டாமா என்று பல நாட்களாக யோசித்து வருகிறேன்.
முதலில் ஐ.போனைப் பற்றி:
ஜாப்ஸை பல முறை எனது வழிகாட்டி என்று குறிப்பிட்ட்டதுண்டு. ஆனால் அவரிடம் பிடிக்காத சில விசயங்களும் உண்டு. அவற்றுள் முக்கியமானது, கண்மூடித்தனமாக (அல்லது தெரிந்தே) தனது தயாரிப்புகளைப் பற்றி உயர்வாகவும், அதிமதிப்பீடு செய்தும் பேசுவது.
ஜனவரி மாதம் ஐபோனை பற்றிய அறிமுக கூட்டத்திலேயே, உலகிலேயே இது போன்றதொரு போன் வந்ததில்லை என்று கூறினார். ஐபோனில் பல வித்தியாசமான, நல்ல வசதிகள் உள்ளதென்பது மறுக்க முடியாதது. ஆனால் எல்லாவற்றையும் இவர்கள் தான் கண்டுபிடித்தது போல் கூறுவது ஒப்புக்கொள்ள இயலாதது. முதலில் டச் கீபேடுகள். இது LG Prada போனின் அப்பட்டமான காப்பி என்றும் கூறப்படுகிறது. இதனை நான் முழுமையாக நம்புகிறேன். LG போன்ற நிறுவனங்கள், மொபைல் போன்களில் புதுவசதிகளை புகுத்துவதற்கு புகழ் பெற்றவை (ஆப்பிள் அளவிற்கு ஒரே நாளில் அல்ல என்பது வேறு விசயம்). இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே LG சாக்லேட் என்ற மொபைல் போனை வெளியிட்டது. அதில் பட்டன்களுக்குப் பதிலாக, பட்டன்களை போன்ற அமைப்புகளின் மீது கை வைப்பதனால் ஏற்படும் வெப்பம், உள்ளீடுகளாக மாற்றப்பட்டும் சாப்ட்வேருக்கு கொடுக்கப்பட்டது. இதனால் பொத்தான்களை அழுத்த வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமாக இருந்தது. இது ஐரோப்பாவில் பெரும் வரவேற்பினை பெற்றது. ஐரோப்பாவில் கிடைத்த வரவேற்பினால், அதே மாடல் சிற்சில மாற்றங்களுடன் வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டது (ஆனால் CDMA). இதில் கிடைத்த படிப்பினையின் (Learning) விளைவாக, LG, பிராடா ஃபோனை வெளியிட்டிருக்க வேண்டும். உள்ளீட்டிற்கு தனியாக ஓர் இடம் இருப்பதற்கு பதிலாக, ஸ்கிரினீலேயே உள்ளீடு செய்யும் வசதி தான் பிராடாவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை தான் ஐபோனும் கொடுக்கிறது. இதன் புகைப்படங்களை பார்த்து தான் ஐபோன் டிசைன் செய்யப்பட்டது என்று LG நிறுவனம் குற்றம் சாட்டுகிறது. இதனை இது வரை ஆப்பிள் நிறுவனம் மறுக்கவில்லை. மறுக்கவும் செய்யாது என்று நினைக்கிறேன்.
ஐ-பாட் டிவைஸ்கள் மார்கெட்டிற்கு வருவதற்கு முன்பாகவே பல நிறுவனங்கள் MP3 பிளேயர்களை சந்தையில் விற்றுக் கொண்டிருந்தன. அவற்றுள் முக்கியமானவை Creative, மற்றும் iRive. இவை இரண்டும் மிகவும் புகழ்பெற்ற பிளேயர்கள். ஆனால் ஐ-பாட் தான் உலகிலேயே முதல் MP3 பிளேயர் போல் அவர் பேசியது என்னவோ ஏற்றுக்கொள்ள இயலாதது. மற்றவர்களின் தயாரிப்பிற்கு இவர் புகழ் தேடிக்கொள்வது ஒப்புக்கொள்ள இயலாதது. இதில் மைக்ரோசாஃப்டினைப் பற்றி அடிக்கடி, 'எங்களை காப்பி செய்கிறார்கள்', என்று கூறுகிறார்.
சஃபாரியை (Safari) பற்றி இவர் விட்ட கதைகளை இப்போது நினைத்தாலும்......... 300 மில்லியன் iTunes உபயோகிப்பாளர்கள் இருக்கிறார்களாம்... ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
அதே போல், சின்ன சின்ன விசயங்களை கூட, பெரிய கண்டுபிடிப்பாக பேசுவது. அடுத்து வெளிவர போகும், Max Os 10.5 பதிப்பில் கொடுக்கவுள்ள நூற்றுக்கணக்கான வசதிகளில் (?) Top 10 வசதிகளாக அவர் இந்த மாதம் Apple Developer Connection கூட்டத்தில் பட்டியலிட்டார். அவற்றுள் வால்பேப்பர் போன்ற சிற்சில வசதிகளை கூட பெரிய விசயமாக குறிப்பிட்டு கூறியிருந்தார்.அடுத்த ஆண்டு, "10.6 பதிப்பில் புதிய கால்குலேட்டர் புரோகிராம் வெளியிடுகிறோம்', என்பார். அதற்கும் கூட்டத்தினர் கரவொலியெழுப்புவார்கள்.
புதிய wallpaper என்று அவர் கூறிய போது, அந்த வீடியோவினை பார்த்தால், கூட்டத்தில் சிரிப்பொலியினை கேட்கலாம். காரணம், அந்த வால்பேப்பர், Windows Vista Wallpaper-ஐ சிறிது ஒத்திருப்பது. வழக்கம் போல், ஜாப்ஸ் விண்டோஸை கேலி செய்கிறார் என்று நினைத்து கூட்டத்தினர் சிரித்தனர். ஆனால், கடைசியில், அது இல்லை என்று தெரிய வந்து வழக்கம் போல், 'ஆஆஆஆஆஆ, என்று உணர்ச்சிகரமாக கரவொலி எழுப்பினர். என்ன கூட்டம் சார் இது?

இதெல்லாம் இருந்தாலும், இந்த ஐ-போனை கண்டிப்பாக, எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்ற தணியாத ஆவல் இன்று வரை இருந்தது. இன்று கூட அவர்களின் அங்காடிக்கு சென்று விசாரித்து விட்டு வந்தேன். இன்று வந்த தகவல்களின் படி, வாடிக்கையாளர்கள் ஐஃபோனைப் பெற, ஏடி&டி நிறுவனத்துடன் இரண்டு வருடம் ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக, பிரீபெய்டு இணைப்பு கூட பெற்று கொள்ளலாம் என்று கூறினர். இதனை நாளை வரும் செய்தி தாளை பார்த்து தான் உறுதி செய்ய வேண்டும். நல்லது; வாங்கலாம் என்று நினைத்திருந்தேன்.
ஆனாலும் வேண்டாம் என தடுத்த விசயங்களில் மிக மிக முக்கியமானது (எனக்கு):
MP3 ஃபைலை ரிங்டோனாக அமைத்து கொள்ளும் வசதி இல்லாதது. ஆப்பிள் ஐடியூன்ஸ் தளத்திலிருந்து ரிங்டோன்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால் அவை அனைத்தும் பாடல்களாக இருக்கும். சும்மா இருக்கும் போது, எனக்குப் பிடித்த பாடல்களில் இருந்து இண்ட்ஸ்ட்ருமண்ட் இசையை மட்டும் எடுத்து MP3-யாக அமைத்து கொள்வேன். எப்போதும் அவற்றையே உபயோகப்படுத்துவேன். ஆனால் இவ்வசதி ஐபோனில் இல்லாததால், அதனை வாங்கும் எண்ணம் சிறிதும் இல்லை.இப்போது, பல பத்திரிக்கைகள் மதிப்பீடுகள் எழுத ஆரம்பித்து விட்டன. அவை MP3 Ringtone வசதி இல்லையென்று உறுதி செய்துள்ளன.
கொசுறு:
* முப்பது மில்லியனுக்கும் மேற்பட்டோர்கள் இந்த ஆறுமாதங்களில் ஐ-ஃபோனைப் பற்றி கூகுள் தளத்தில் தேடியுள்ளனர்.
* ஆப்பிளின் மார்க்கெட் மதிப்பு 30 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளன. அதாவது 50%
* எனது வீட்டிற்கு அருகிலுள்ள ஆப்பிள் ஸ்டோரில் மக்கள் இப்போதே நிற்க ஆரம்பித்து விட்டனர்.
ஸ்டீவ் மீதான வருத்தம் எல்லாம் அவரது வியாபாரத்தின் மீதும், மற்றவர்களின் உழைப்பிற்கு இவர் பெயர் வாங்கி கொள்வதனாலும், மற்றவர்களை மதிக்காமல் பேசுவதும், அதீத தற்புகழ்ச்சியினாலும் தான். ஆனாலும் அவரது உழைப்பும், திறமையும், வாழ்க்கையில் இவர் கண்ட ஏற்ற, தாழ்வுகளை மீறி சாதித்ததும், இவரது தன்னம்பிக்கையும் என்னை எப்போதும் கவர்பவை.
அதே நேரத்தில் இந்த போன், சந்தையில் புரட்சி செய்ய போகிறது என்பதை மறுப்பதிற்கில்லை. ஒவ்வொரு நிறுவனமும் (Motorola, LG, Nokia, Sony, ...), வருடம் முழுவதும் ஏனோதானோவென்று 100 மாடல்கள் வரை வெளியிட்டுக் கொண்டிருந்தன. ஒன்றுக்கொன்று பெரிய வித்தியாசம் இருக்காது. ஒரு நிறுவனம், இரண்டு வருடங்கள் உழைத்து ஒரே ஒரு மாடல் கொண்டு சந்தையில் இறங்குவது புதிது. இனியாவது மற்ற நிறுவனங்கள், இவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு, தரமான மொபைல் போன்கள் வெளியிடுவார்கள் என்று சிறிது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
------------------------------------------------------------------------------------
சென்ற பத்து நாட்களில் மட்டும் ஆறு படங்கள் தியேட்டரில் பார்த்து விட்டேன் என்று நினைத்தாலே அதிர்ச்சியாக இருக்கிறது.
1. Shrek 3
2. Mr. Brooks
3. Surf's Up
4. சிவாஜி
5. Ocean 13
6. Evan Almighty
நாளையும், நாளை மறுநாளும் இரண்டு படங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அவற்றுள் ஒன்று 'Evening'. மற்றொன்று.
எலி:
Pixar ஸ்டுடியோவின், அனிமேட்டட் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அனிமேட்டட் படங்கள் பெரும்பாலும் தவறாமல் பார்த்து விடுவேன். Pixar நிறுவனத்திடமிருந்து (வால் டிஸ்னி), வந்துள்ள சமீபத்திய படம் 'ராட்டடூயி' (Ratatouile). ஒரு எலியினை பற்றிய கதை. இன்று (June 29), வட அமெரிக்காவெங்கும் வெளியாகிறது. யாம் இங்குள்ள தியேட்டரில் ஆஜர்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், ஐ-ஃபோனும், இப்படமும் ஒரே நாளில் வெளியாவது தான். இரண்டுமே ஸ்டீவ் ஜாப்ஸின் தயாரிப்புகள். தெரிந்தே தான் இப்படி செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
------------------------------------------------------------------------------------
சென்ற வாரம் அருகிலுள்ள தியேட்டரில் 'Surf's up' படம் பார்க்க சென்றிருந்தேன். 10 நிமிடங்கள் தாமதமாக தான் சென்றேன். உள்ளே சென்றால் அதிர்ச்சி. திரையரங்கில் யாருமே இல்லை. நான் மட்டும் தான் தனியாக பார்த்தேன். எனக்கே ஒரு மாதிரி உறுத்தலாகிவிட்டது. அதற்கு முந்தைய நாள், 'Mr. Brooks' (நல்ல திரைப்படம்) படத்திற்காவது பரவாயில்லை. நான்கைந்து நபர்கள் இருந்தார்கள்.
எப்பொழுதாவது தியேட்டரில் தனியாக படம் பார்த்த அனுபவம் உண்டா?