புதன், ஜனவரி 10, 2007

சென்ற ஆண்டின் சிறந்த பாடல்

வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டில் முதலாவது பதிவாக, சென்ற ஆண்டின் சிறந்த பத்து பாடல்களைப் (என்னைப் பொருத்தவரை) தமிழ் பாடல்களை பட்டியலிட்டால் என்ன என்று தோன்றியது. நான் எதிர்பார்க்காமல், என்னையுமறியாமல், என்னை மிகவும் கவர்ந்த பாடலை முதலாவது பாடலாகக் கொடுத்திருக்கிறேன். அந்தப் பாடல் தான் சென்ற ஆண்டின் சிறந்த பாடல் என கூறுவேன். உங்களில் எத்தனை பேர் அப்பாடலை கேட்டிருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை.




இவ்வருடம் ஒவ்வொரு இசையமைப்பாளரும் தங்களது பெயர் சொல்லும்படியாக ஒரு வெற்றிப் படத்தைக் (பாடல்களை) கொடுத்துள்ளனர். ரகுமானுக்கு 'ரங் தே பசந்தி', காட் ஃபாதர் படங்களும், ஹாரீஸ் ஜெயராஜூற்கு மிகச் சிறந்த வெற்றிப் படமாக 'வேட்டையாடு விளையாடு' திரைப்படமும், யுவன்சங்கர் ராஜாவிற்கு 'வல்லவன்' திரைப்படமும், வித்யாசாகருக்கு 'தம்பி' திரைப்படமும், விஜய் ஆண்டனிக்கு 'டிஷ்யூம்' திரைப்படமும் வெற்றியாக அமைந்துள்ளது.

ஆனால் தமிழில் ரகுமானின் சிறந்த பாடல்கள், வெற்றி பெறத் தவறிய, 'சில்லென்று காதல்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. வர்த்த ரீதியாகவும், விமர்சகர்களின் ஆதரவைப் பெற்ற காட் ஃபாதர் படத்தின் பாடல்கள் எந்தத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படவில்லை. 'வாள மீனுக்கும்' பாடல்களையும், நூறு முறைக் கேட்டும் பிடிக்காத பாடல்களையும் ஒளிபரப்பும் தொலைக்காட்சியும், தமிழ் திரைப்பட பாடல்களின் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய தொலைக்காட்சியான, சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒரு முறை கூட காட் ஃபாதர் பாடல்கள் ஒளிபரப்பப் படாதது வருத்தமளிக்கிறது. 'கம்மா கம்மா' கரையில் பாடலை மட்டும் இரு முறை பார்த்த ஞாபகம். சிறந்த இரு பாடல்கள், மக்களை சென்றடையத் தவறிவிட்டதாகத் தோன்றுகிறது. இந்தியில் வெளிவந்த 'ரங் தே பசந்தி' அவருக்கு ஆஸ்கர் பரிந்துரையையும் பெற்றுத் தந்துள்ளது.

அதே போல், யுவனின் சிறந்த பாடல்கள், 'புதுப்பேட்டை', 'பட்டியல்' போன்ற வெற்றி பெறத் தவறிய படங்களிலிருந்து அமைந்துள்ளன.

வித்யாசாகருக்கு ஓரளவிற்கு வெற்றிப் படமாக, 'ஈ'அமைந்தாலும், அப்படத்திலும் எந்த பாடலும் மனதைக் கவரவில்லை. ஆனால் வித்யாசாகரின் பின்னணி இசை மோசமாகி வருகிறது. நான் பார்த்த இரு படங்களிலும் 'ஈ' மற்றும் இன்னொரு படத்திலும் ('எம் மகன்' என்று நினைக்கிறேன்) பெரும்பாலும் காதைப் பொத்திக் கொண்டு தான் படம் பார்த்தேன். ஏதோ ஹாலிவுட் படங்களின் 'சேசிங்' காட்சிகளில் வரும் இசையைப் போல ஒரே சத்தம்.

புதுமுக இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷின் இசையில் வெளிவந்துள்ள 'வெயில்' படத்தில் இரு பாடல்கள் நன்றாக இருக்கின்றன. எனக்குப் பிடித்தமான பாடல் 'உருகுதே' உட்பட.

இதோ பாடல்களின் பட்டியல். பாடல்களுக்கு விளக்கங்களை எனது பழைய பதிவுகளிலிருந்து தொகுத்து இங்கே கொடுத்திருக்கிறேன். இப்போது அப்பாடல்களின் வெற்றி / தோல்வி நன்றாக தெரியுமாதலால், எனது விளக்கங்களை படிப்பதற்கு எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.

10. நெஞ்சாங்கூட்டில்

படம்: டிஸ்யூம்
பாடியவர்: ஜெயதேவ், ராஜலக்ஷ்மி
இசை: விஜய் ஆண்டனி

படத்திற்குப் பாடல்கள் பெரிய பலம். பாடல்களுக்காகத் தான், திரைப்படம் பார்க்க சென்றேன். எதிர்பார்த்ததை விட படம் நன்றாகவே வந்திருக்கிறது. விஜய் ஆண்டனி கவனிக்கப்பட வேண்டியவர். 'நெஞ்சாகூட்டில்..நெஞ்சாகூட்டில்..நெஞ்சாகூட்டில் நீயே நிற்கிறாய்' என்று இழுக்கும் போது பின்னணியில், பிலிம் சுருளை இழுப்பது போல் வரும் இசை வித்தியாசமாக இருக்கிறது.

9. உன் பார்வையில் பைத்தியமானேன்

படம்: உனக்கும் எனக்கும்
பாடியவர்கள்: கார்த்திக், சுமங்கலி
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

வழக்கம் போல, தேவி ஸ்ரீ பிரசாத், தெலுங்கில் வெற்றி பெற்ற தனது படத்தின் பாடல்களை அப்படியே தமிழிலும் கொடுத்துள்ளார். ஆனால் இம்முறை அதே படத்தின் பாடல்கள்.

தெலுங்கை விட, தமிழில் படம் நன்றாக அமைந்துள்ளது என்பது எனது கருத்து. தெலுங்கில் சந்தானம் போல ஒரு பாத்திரம் அமையாதது ஒரு சிறிய குறை. திரிஷாவின் பாத்திரமும் தமிழ் பதிப்பில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பாடலின் ஆரம்பத்தில், கிடாருக்கு முன்பு வரும் இசை (என்ன கருவி என்று தெரியவில்லை) அற்புதம். மேலும் (2:03 - 2:08) & (3:50 - 3:55) இடத்தில் வரும் குழுவினரின் ஹம்மிங் மிக இனிமை.

கார்த்திக், சுமங்கலி இருவருமே சிறப்பாக பாடியிருக்கிறார்கள். சன் மியூசிக்கில் எப்பொழுதுமே 'சம்திங் சம்திங்' பாடலும், 'பூக்களுக்குள் கத்தி சண்டை' பாடல்களை மட்டுமே ஒளிபரப்புவது ஏனோ? மிக அரிதாகவே இப்பாடல் ஒளிபரப்பபடுகிறது (அல்லது நேயர்களால் விரும்பி கேட்கப்படுகிறது).

8. லூசுப் பெண்ணே

படம்: வல்லவன்
பாடியவர்: சிம்பு (உறுதியாகத் தெரியவில்லை), பிளாசே
இசை: யுவன் சங்கர் ராஜா

இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'லூசுப் பெண்ணே' பாடலும் ஓரளவிற்கு நன்றாக வந்திருக்கிறது. ஆனால் அந்த பாடலின் ஆரம்பத்தில் (0:43 - 1:01) வரும் கிடார் இசை, குஷி படத்தில் விஜய்யும், ஜோதிகாவும் சந்திக்குமிடங்களில் வரும் பின்னணி இசையை ஒத்துள்ளது. இந்தப் பாடல் கூட குஷி படத்தில் இடம் பெற்ற 'கட்டிப்புடி கட்டிப்புடி' பாடல் போலவே ஒளிப்பதிவு செய்ய்ப்பட்டிருக்கிறது.

6. இளமை

படம்: காட் ஃபாதர்
பாடியவர்கள்: அஸ்லம், தன்வி, ஷாலினி
இசை: ஏ.ஆர்.ரகுமான்

கண்டிப்பாக, படத்தின் சிறந்த பாடல் இதுவாகத் தான் இருக்கும். பெரும்பாலான ரகுமான் ரசிகர்கள், 'இன்னிசை' பாடல் தான் சிறந்த பாடல் என்கின்றனர். எனக்கென்னவோ இந்த பாடல் தான் மிகவும் பிடித்திருக்கிறது. வித்தியாசமான இசை. அசத்தும் பீட். கேட்ட முதல் முறையே பிடித்து விட்டது. அஸ்லம் அருமையாகப் பாடியிருக்கிறார். ஷாலினியின் குரல் பாடலுக்கு வளம் சேர்க்கிறது. சாதாரண வரிகள் ஆனால் நல்ல அழுத்தம்.

இளமை........
விடுகதை
பெண்களே........
விடை

கீழ்கண்ட வரிகளில் வரும் ராகம் கவர்கிறது.

தமிழ்நாட்டில் எத்தனை கிளிகள்
எத்தனை கிளிகள் - கூட்டிற்குள்
வர வேண்டும் அத்தனை கிளியும்
அத்தனை கிளியும் - வீட்டிற்குள்

இரவெல்லாம்........
சிறகு விரித்து கவிதை பேசுங்கள்
அதிகாலை........
அனுப்பி வைப்பேன் போங்கள்.

ஆரம்பம் முதல் இறுதி வரை பீட் சிறிதும் குறையாமல் சிறப்பாக அமைந்துள்ளது. ஷாலினி ரகுமானுக்கு பாடும் முதல் பாடல் என்றும் நினைக்கிறேன். 1:38 முதல் 2:10 வரை குழுவினரின் குரலை கேட்கும் போதே உடலெங்கும் உற்சாக அலைகள் ஓடுகின்றன.

6. உருகுதே

படம்: வெயில்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஸல், சங்கர் மகாதேவன்
இசை: ஜி. வி. பிரகாஷ்

இந்த படத்தின் பாடல்கள் வந்த புதிதில் சில பாடல்களை கேட்டு விட்டு, மறந்து விட்டேன். சமீபத்தில் கே.எல் ரேடியோவில் இந்தப் பாடலை கேட்டேன். பாடல் இடம் பெற்ற திரைப்படம் 'வெயில்' என்று கூறிய போது எனக்கு ஆச்சர்யம். கடந்த ஒரு மாதமாக, இப்பாடல் நம்மிடமிருந்தும் இப்படியொரு அருமையான பாடலை எப்படி கவனிக்காமல் விட்டோம் என்று வருத்தமாக இருந்தது. மிக மிக அருமையான பாடல். ஸ்ரேயா கோஸலின் குரல் அற்புதம்.

'உருகுதே மருகுதே
ஒரு பார்வையாலே

உலகமே சுழலுதே
உன்னை பார்த்ததாலே',

என்று பாடலின் ஆரம்பத்திலேயே உருகியிருக்கிறார்.

'தங்கம் உருகுதே
அங்கம் கரையுதே

வெட்கம் உடையுதே
முத்தம் தொடருதே'

என்ற இடத்தில் ராகமும், ஸ்ரேயா கோஸலின் குரலும் அற்புதம். அதே போல் பாடல் முடியும் தருவாயில் மீண்டும் ஸ்ரேயா கோஸல் மீண்டும் 'உருகுதே மருகுதே' என்று ஆரம்பிப்பார் என்று நான் ஆவலுடன் காத்திருந்த போது, சங்கர் மகாதேவன் 'உருகுதே மருகுதே', (4:45) என்று சுருதியை உயர்த்தி பாடி ஏமாற்றம் கொடுத்தார். ஸ்ரேயா கோஷலே பாடியிருக்கலாமே என்று நான் நினைத்த மறுகணமே ஸ்ரேயா 'ஒரு பார்வையாலே' என்று பாடி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதனை விட அவ்விடம் சிறப்பாக ஒலித்திருக்க முடியாது. இரண்டும் இணைத்த போது, ஸ்ரேயாவின் குரல் இன்னும் சிறிது மயக்கம் கொடுக்கிறது. ஆனால் "ஒலகமே" என்று அவர் உச்சரிக்குமிடம் தான் நெருடலாக இருக்கிறது.

இந்தப் பாடல் எனக்கு மேலும் இரண்டு பாடல்களை ஞாபகப்படுத்துகிறது.

1. முதல்வன் படத்தில் இடம் பெற்ற குறுக்கு சிறுத்தவளே பாடல். இந்த பாடலை ஹரிஹரண் பாடியிருந்தால், இரு பாடல்களுக்குமுள்ள வித்தியாசம் இன்னும் குறைந்திருக்கும்.

2. தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழுக்கு வந்த 'ஜெய்ராம்' ('சின்ன நெஞ்சிலே' என்ற அற்புதமான பாடல் இடம் பெற்ற படம்) என்ற படத்தில் வரும் 'வானும் உண்டு, வையம் உண்டு' என்ற பாடலை சிறிது ஒத்துள்ளது. அந்த பாடல் என்னிடம் இல்லாத காரணத்தால் என்னால் சரியாக ஒப்பிட முடியவில்லை. திரையுலகிற்கு இப்படத்தில் மூலம் அறிமுகமாகும் ஜி.வி.பிரகாஷ், அனைத்து பாடல்களில் இல்லாவிட்டாலும்,. இந்தப் பாடலில் அவரது மாமாவின் தரத்திற்கு நெருங்கி வந்திருக்கிறார். அதற்கு அவருக்கு பாராட்டுக்கள். அதே போல் சிறந்த பாடகியான ஸ்ரேயா கோஷலுக்கு, ஓரளவிற்கு, 'முன்பே வா' பாடலைத் தவிர சிறப்பான பாடல் ரகுமான் பட்டறையிலிருந்து அமையாத குறையை ஜி.வி.பிரகாஷ் நீக்கிவிட்டார்.

5. முன்பே வா

படம்: சில்லுன்னு ஒரு காதல்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

பாடல் ஆரம்பித்த முதல் விநாடியே Dr.Alban-னின் It's my life பாடலை ஒலிக்கவிட்டு விட்டோமே என்ற சந்தேகம். அது அந்த முதல் விநாடி மட்டும் தான். அதன் பிறகு ரகுமானின் கொடி தான். ரகுமானின் பட்டறையிலிருந்து மற்றுமொரு நல்ல மெல்லிசை பாடல். இறுதியில் ஸ்ரேயா கோஷலுக்கு ஒரு நல்ல பாடல், ரகுமானிடமிருந்து.இந்தப் பாடல் ஹிட்டாகும் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை. குழுவினர் பாடும் ரங்கோலி இடம் அழகு.

4. மஞ்சள் வெயில்

படம்: வேட்டையாடு விளையாடு
பாடியவர்கள்: ஹரிஹரண், விஜய், நகுல்
இசை: ஹரீஷ் ஜெயராஜ்

கஜினியை ஒப்பிடும் போது 'வேட்டையாடு விளையாடு' படம் ஹரிஷ் ஜெயராஜூற்கு பின்னடவு தான் என கூறலாம். கெளதம் எப்படி இது போன்ற பாடல்களுக்கு ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. ஒரே ஒரு பாடலைத் தவிர மற்ற பாடல்கள் சுத்தமாகக் கவரவில்லை. கெளதமும் 'ராசி' என்ற வலையில் விழுந்து விட்டாரோ என்று சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் இந்தப் படத்திலும் பாம்பே ஜெயஸ்ரீக்கு ஒரு பாடல் கொடுக்கப்பட்டுள்ளது. மகாலக்ஷ்மி பாடிய 'உயிரிலே' பாடல் பரவாயில்லை. ஆனால் இந்தப் படத்தின் பாடல்கள் பரபரப்பாக விற்பனையாகத் தான் செய்கின்றன. யார் கண்டது? அனைத்து பாடல்களும் ஹிட்டாகலாம்.

ஆனால் மஞ்சள் வெயில் என ஆரம்பிக்கும் இந்த பாடல் அருமை. கமலஹாசனின் நடிப்பு இந்தப் பாடலுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ஹரிஹரண்
அற்புதமாக பாடியிருக்கிறார். அதிலும் முக்கியமாக 'பேசி பேசி தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே' 'குறு குறு மின்னல் என குறுக்கே ஓடுதே' என்ற வரிகளில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

3. ரூபாரூ

பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான், நரேஷ் அய்யர்
படம்: ரங் தே பசந்தி
இசை: ஏ.ஆர்.ரகுமான்

இந்த ஆல்பத்தின் சிறந்த பாடல் இது தான் என்று அடித்துக் கூறுவேன். அருமையான பாடல். நல்ல இசை. ஆரம்பத்தில் வரும் கிடார் இசை மிக அருமை. நரேஸ் அய்யர் நன்றாகப் பாடியிருக்கிறார்.

இந்த இசைத்தட்டில் ஆச்சர்யப்பட வைத்த விசயங்கள் இரண்டு. கிதார் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. ரகுமான் ஆசிட்டிற்கு கிதார் இசையை இரண்டு பாடல்களில் (லக்கா சுப்பி, ரூபரூ) முழுவதுமாக உபயோகித்திருக்கிறார். மற்றொன்று நரேஸ் அய்யரின் குரல். இவர் தான் அன்பே ஆருயிரேயில் மயிலிறகே பாடலைப் பாடியவர். அந்தப் பாடலில் அவருடைய குரல் பலரைக் கவரவில்லை. ஆனால் இதில் அவருடைய குரல் முற்றிலும் வித்தியாசமாக, மிக நன்றாக இருக்கிறது

இந்தப் பாடலைப் பற்றியும், இது எடுக்கப்பட்ட விதத்தைப் பற்றியும் ஏற்கனவே ரங்கு தே பசந்தி இசை மதிப்பீட்டில் எழுதி விட்டேன். இந்தப் பாடலைப் பற்றி ரகுமான் இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். "இந்தப் பாடலை நான் பாடுவதற்கு முன்பாக, நரேஷ் அய்யரை வைத்து பதிந்து பார்த்ததில் அது சிறப்பாக வரவே அதையே பயன்படுத்தினேன். அதனால் தான் ஒரு சில வரிகள் மட்டுமே நான் பாடுவதை நீங்கள் கேட்கிறீர்கள். மேலும் 'ஹேய் சாலா' என்றெல்லாம் விழித்து பாடுவது எனக்கு சவுகரியமாக இருக்காது". இளமை ததும்பும் குரல், இசை.

2. நியூயார்க் நகரம்

பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான்
படம்: சில்லுன்னு ஒரு காதல்
இசை: ஏ.ஆர்.ரகுமான்

படத்தில் நான் முதன் முதலாக கேட்ட பாடல். கேட்ட மறு நொடியே இந்த பாடல் பிடித்து விட்டது. பாடலின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அற்புதம். இம்.ஹீம் இம்.ஹீம் என்று அற்புதமாக ஆரம்பித்து கிடாரை உடன் எடுத்துக் கொண்டு 'நியூயார்க் நகரம்' என்று ரகுமான் பாட ஆரம்பிப்பது அற்புதம். அதே போல் 0:45 நொடியில் ஒரு ஹெலிகாப்டர் இடது புறத்திலிருந்து வலது புறத்திற்கு பறந்து மீண்டும் இடது புறத்திற்கு வருவது அழகாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது முடிந்ததும் 1:05 நிமிடத்தில் "ஹோ" என்று பின்னணியில் வரும் சப்தம் அற்புதம். இவை இரண்டும் பாடலின் தரத்தை வெகுவாக உயர்த்துகின்றன.

'நியூயார்க் நகரம்
உறங்கும் நேரம்
தனிமை அடங்குது
பனியும் படருது
கப்பல் இறங்கியே
காற்று கரையில் அடங்குது

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்
நானும் மெழுகுவர்த்தி
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ'

சூர்யா கூறியது போல் ரகுமான் முதன் முதலாக காதல் பாடலைப் பாடியுள்ளார். அதில் பெரும் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அனைத்துத் தரப்பினரையும் சுண்டி இழுக்கும் என்பதிலும் துளியும் ஐயமில்லை.

பாடலில் மற்றுமொரு சிறப்பு பெண் குழுவினரின் குரல். 3:10-3:20 மற்றும் 4:30 - 5:10 வரை அற்புதமாகப் பாடியிருக்கிறார்கள். இசைத்தட்டில் 'தன்வி & பார்கவி பிள்ளை' என்று எழுதப்பட்டிருந்தது. அவர்களுக்கு பாராட்டுக்கள். முதன் முதலில் தமிழில் இசைக்கலைஞர்களுக்கு கேசட்டில் இடம் கொடுத்தவர் ஏ.ஆர்.ரகுமான். அதே போல் ஒவ்வொரு பாடலிலும் கோரஸ் பாடியவர்களின் பெயரைத் தனித் தனியாக சி.டியில் வெளியிடச் செய்து அவர்களை ரகுமான் சிறப்பித்திருப்பது அழகு. மூன்று நாட்களாக வாயைத் திறந்தாலே இந்த பாடல் தான். தாராளமாக ஐந்து மதிப்பெண்கள் கொடுக்கலாம்.

1. லுக்கா சுப்பி

பாடியவர்கள்: ஏ.ஆர்.ரகுமான், லதா மங்கேஷ்கர்
படம்: ரங் தே பசந்தி
இசை: ஏ.ஆர்.ரகுமான்

நான் பட்டியலின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது போல, 'லுக்கா சுப்பி' பாடல் தான் என்னை மிகவும் கவர்ந்த, சென்ற வருடத்தில் அதிகம் விரும்பி கேட்ட, ஏன்? இன்னும் விரும்பி கேட்கும் பாடல். இப்பாடலை முதலில் கேட்கும் போது, வேறு பாடல்களை ஞாபகப்படுத்துவது போன்றதொரு தோற்றத்தைக் கொடுத்தது. மேலும் 'ரூபாரூ', 'பாத் சாலா', பாடல்கள் இப்பாடலை சுலபமாக கடந்து முன்னணியில் நின்றது. ஒரு இனிய மெலோடி பாடல் என்ற வகையில் மட்டும் எனக்குப் பிடித்திருந்தது. இப்பாடலைப் பற்றி கீழ்கண்டவாறு எனது பழைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்.

-------------------------------------------------------------------------

ஏ.ஆர்.ரகுமானும், லதா மங்கேஷ்கரும் இணைந்து பாடியிருக்கும் முதல் பாடல். இந்த இசைத்தட்டு வருவதற்கு முன்பே மிகவும் பேசப்பட்ட பாடல். இதற்காக லதா சென்னை வந்து பாடிக்கொடுத்து சென்றார் என்பதும் கொசுறு செய்தி. லதாவிற்காக சில நேரங்களில் மும்பையில் ரிக்கார்டிங் வைத்திருக்கும் ரகுமான், தான் புதிதாக கட்டியிருக்கும் ஸ்டுடியோவிற்கு லதா கண்டிப்பாக வந்து பாடிக்கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததால், அவர் சென்னைக்கு வந்து பாடிக்கொடுத்திருக்கிறார். எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாகவே வந்திருக்கிறது. இருவருமே மிக அருமையாகப் பாடியிருக்கிறார்கள் முக்கியமாக ரகுமான். நல்ல மெலோடி. பாடலின் ஆரம்பத்தில் வரும் கிதார் இசை வெள்ளைப் பூக்கள் பாடல் போலவே இருக்கிறது.

-------------------------------------------------------------------------

ஆனால் இப்பாடலை, திரைப்படத்துடன் பார்க்கும் போது என்னை அப்படியே புரட்டி போட்டு விட்டது. படத்துடன் இப்பாடல் அற்புதமாக இணைக்கப்பட்டிருந்தது. இப்பாடலின் இரண்டாம் பகுதி படத்தில் ஒலிக்குமிடம் அப்படியே கண்ணீரை வரவழைத்துவிட்டது (இதனை சொல்வதற்கு கூச்சப்படவில்லை). இதற்காகவே இப்படத்தை மூன்று முறை திரையரங்கில் மட்டும் பார்த்தேன்.

விமானப் படையில் பணியாற்றும் மகன் (மாதவன்) விமான விபத்தில் இறக்கிறார். அவருடைய இறுதிச் சடங்கில் பாடல் ஆரம்பிக்கிறது. மாதவனின் காதலி (சோகா அலி கான்), நண்பர்கள் (அமீர்கான், சித்தார்த், மற்றும் மூவர்), மாதவனின் தாய் (வஹீதா ரஹ்மான்) அஞ்சலி செலுத்தும் போது பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.



இவ்விடத்தில் பாடல் ஒலிக்குமென, முதல் முறை பார்க்கும் போது, சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மறைந்திருந்து விளையாடும் மகனை தேடும் தாய் பாடுவதாக, அமைந்திருந்தது இப்பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு.



பாடலின் முதல் பகுதி, அக்காட்சியுடன் நிறைவடைந்தது. இன்ன பிற பாடல்களைப் போல, இப்பாடலும் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டதே என்ற ஏமாற்றத்தில், அடுத்த காட்சியைத் தொடர்ந்தேன். அடுத்த காட்சி, மாதவனின் வீட்டில்.

விமான விபத்தைப் பற்றி தொலைக்காட்சிகளில் செய்தியும், அதைத் தொடர்பான பேட்டிகளும் ஒளிபரப்பாகிறது. அதனை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது அழைப்பு மணி அடிக்கும் ஓசை கேட்க, மாதவனின் தாய் கதவைத் திறக்கிறார். வாசலில் காணும் காட்சியால் கண்ணீரில் உறைந்து போகிறார். வாசலில், மாதவனின் உடைமைகளை

ஏந்திக் கொண்டு விமானப்படை வீரர்கள் கம்பீரமாக நிற்கிறார்கள்.





அப்போது ரகுமான், சுருதியை உயர்த்திப் பாடும் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கிறது (4:07). பின்னர் மகனின் உடைமைகள் ஒவ்வொன்றாக கண்ணீருடன் பார்க்கிறார். பாடல் நிறைவடைகிறது. இக்காட்சிகளைத் திரையில் பார்க்கும் போதே மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.




அற்புதம்!! அற்புதம்!!

சொல்வதற்கு வேறு வார்த்தைகளே இல்லை. அது முதல் இப்பாடலை பல முறைக் கேட்டிருக்கிறேன்; கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்பாடல் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் நினைக்கிறேன். இப்பாடல், அந்த விருதினை விட பல மடங்கு இப்பாடல் அற்புதமானது. அவ்விருதிற்கு மேலான தகுதியை உடையது.

இப்பட்டியலில் இடம் பிடிக்கத் தவறிய, ஆனால் என்னைக் கவர்ந்த மற்ற பாடல்களின் பட்டியல்:

1. அக்டோபர் காற்று (பாடியவர்: மாதங்கி; படம்: ஜெயம் ரவி நடித்தது; இசை: பரத்வாஜ்)

2. பூவின் மடியில் (பாடியவர்: சாதனா சர்கம்; படம்: இருவர் மட்டும்; இசை: விஜய் ஆண்டனி)

3. ஒரு நாளில் வாழ்க்கை எங்கும் ஓடிப் போகாது (பாடியவர்: யுவன் சங்கர் ராஜா; படம்: புதுப்பேட்டை; இசை: யுவன் சங்கர் ராஜா)

4. தையத்தா தையத்தா (பாடியவர்: சாதனா சர்கம்; படம்: திருட்டுப் பயலே; இசை: பரத்வாஜ்)

5. போகப் போக பூமி விரிகிறதே (பாடியவர்கள்: ஹரிச்சரண், விஜய், 'அந்நியன்' புகழ் சைந்தவி, ஹரிணி சுதாகர்; படம்: பட்டியல்; இசை: யுவன் சங்கர் ராஜா)

6. சுடும் நிலவு சுடாத சூரியன் (பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், ஹரிணி; படம்: தம்பி; இசை: வித்யாசாகர்)

7. இன்னிசை அளபெடை (பாடியவர்கள்: நரேஷ் அய்யர், சைந்தவி, (மஹதி); படம்: வரலாறு; இசை: ஏ.ஆர்.ரகுமான்)

ஸ்ருசல்

12 கருத்துகள் :

SurveySan சொன்னது…

'முன்பே வா' என் லிஸ்டில் நெம்பர் 1.

சுதேசன் சொன்னது…

நீங்கள் இட்ட பட்டியலை நானும் முன்மொழிகிறேன்

Dr.Srishiv சொன்னது…

சுடும் நிலவு - தம்பி - என் சாய்ஸ்
ஸ்ரீஷிவ்...

பெயரில்லா சொன்னது…

உங்கள் டேஸ்ட் எப்படி இவ்வளவு மட்டமாக இருக்கிறது என்று தெரியவில்லை.

"வரலாறு" பாடல் ஒன்று கூட உருப்படி இல்லை. "சில்லுனு ஒரு காதல்" படத்தில் நிங்கள் குறிப்பிட்ட இருபாடல்கள் தவிர மற்றவை மட்ட ரகம்.

"வேட்டையாடு விளையாடு" பாடல்கள் அணைத்தும் சூப்பர். "சிக்கி முக்கி" வித்தியாசமான இசை மற்றும் குரல். அனேக மேடை நடனங்களுக்கு பயன்படுத்தப்பட்ட பாடல்.

யுவனின் இசை நாளுக்கு நாள் மெருகு கூடிக்கொண்டே போகிறது. இந்த ஆண்டில் அவர் இசையமைத்த 90 சதவீத பாடல்கள் நன்றாக வந்திருந்தது.

ஏ.ஆர் ரகுமான் சிறிதுகாலம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் வரலாம்.

ஸ்ருசல் சொன்னது…

சுதேசன், சர்வேசன், ஸ்ரீசிவ், மற்றும் அனானி கருத்திற்கு நன்றி.

அனானி,

////////
உங்கள் டேஸ்ட் எப்படி இவ்வளவு மட்டமாக இருக்கிறது என்று தெரியவில்லை.
/////////

அது உங்களின் கருத்து. அந்தப் பட்டியல், எனக்கு சிறந்த பாடல் என்று தோன்றியது. பட்டியலில் மூன்று, நான்கு ரகுமான் பாடல் இடம்பெற்றதற்குக் காரணம், நான் ரகுமானின் பாடல்களை விரும்பிக் கேட்பதால் உண்டான தாக்கமாக இருக்கலாம். மற்றபடி ரகுமானை உயர்த்தியும் மற்றவர்களை தாழ்த்தியும் கூற வேண்டிய அவசியம் இல்லை.

ஏனென்றால், எனக்கு ரகுமானின் பாடல்களைப் போல், மற்ற இசையமைப்பாளர்களின் பாடலும் வேண்டும்.

/////////
சில்லுனு ஒரு காதல்" படத்தில் நிங்கள் குறிப்பிட்ட இருபாடல்கள் தவிர மற்றவை மட்ட ரகம்.
/////////

உங்களுடைய கருத்தையே நானும் என்னுடைய பழைய பதிவில் தெரிவித்திருக்கிறேன்.

என்னுடைய, 'காட் ஃபாதர்', 'சில்லுன்னு ஒரு காதல்' பாடல் மதிப்பீட்டுப் பதிவுகளைப் படிக்கவும்.

மேலும் பாடல்களுக்கு விளக்கம், இன்று எழுதப்பட்டதல்ல. என்னுடைய பழைய பதிவுகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. மற்ற பாடல்களுக்கு எப்படியோ, 'நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே' பற்றிய எனது கருத்து இன்னும் மாறவில்லை.

படத்தின் மோசமான பாடல் அது.

நன்றி.

ஸ்ருசல் சொன்னது…

//"வேட்டையாடு விளையாடு" பாடல்கள் அணைத்தும் சூப்பர். "சிக்கி முக்கி" வித்தியாசமான இசை மற்றும் குரல். அனேக மேடை நடனங்களுக்கு பயன்படுத்தப்பட்ட பாடல்.//

மேடை நடனங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டதால் மட்டும் ஒரு பாடல் சிறந்த பாடலாகி விட முடியாது.

'ஹம்மா ஹம்மா' பாடல் கூட தான் பல ஆண்டுகளாக உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் எனக்குப் பிடிக்காத பாடல்களில் ஒன்று.

பெயரில்லா சொன்னது…

நீங்கள் முதலில் ஒன்றை தெளிவு படுத்தவேண்டும். ஆதாவது நீங்கள் இசையை ரசிக்கிறீர்களா? அல்லது பாடல் வரிகளை ரசிக்கிறீர்களா? என்று.

ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பாளர் மட்டுமே என்பதையும் நீங்கள் மனதில் கொள்ளவேண்டும்.

எந்த ஒரு பாடலும் எடுத்த எடுப்பிலேயே இசையால் மட்டுமே அடையாளம் காட்டப்படுகிறது. பிறகு உங்களை போன்றவர்கள் அதில் லயித்து பின் பாடல் வரிகளால் கவரப்படுகிறார்கள்.

சில பாடல்கள் மெட்டுக்கள் நன்றாக இருக்கும் ஆனால் அதற்கு இசைக்கோர்வை நன்றாக இருக்காது, சில பாடல்கள் மெட்டு நன்றாக இருக்கும் அதற்கான வரிகள் நன்றாக இருக்காது (உதாரணமாக லூசுப்பெண்ணே பாடல்).
எல்லாம் சரியாக அமையும் பட்சத்தில் தான் ஒரு பாடலை சிறந்த பாடல் என்று அடையாளம் காட்டமுடியும்.
இல்லாவிட்டால் சிறந்த இசை, சிறந்த பாடல் வரிகள் அல்லது சிறந்த மெட்டு என்று மட்டுமே அடையாளம் காட்ட முடியும்.

உதாரணமாக "பார்த்த முதல் நாளே" பாடலின் மெட்டு தேவாலயங்களில் போது பிரார்த்தனைக்காக பாடப்படும் மெட்டுகளை ஒத்து இருக்கிறது ஆனால் இசைக்கோர்வு இந்த பாடலை சினிமாவில் தனித்து காட்டுகிறது. மெட்டு ஒன்றுதானே என்பதற்காக தேவாலய பாடல்களை ரசிக்கமுடியுமா?

சிறந்த பாடல் வரிகள் என்று பார்த்தால் தம்பி படத்தில் உள்ள பாடல்களில் இருக்கிறது ஆனால் அதுபற்றி நீங்கள் ஏன் குறிப்பிடவில்லை?.

எனவே தலைப்பை "சென்ற ஆண்டில் எனக்குப் பிடித்த சிறந்த பாடல்கள்" என்று மாற்றியமைக்கவும்.

ஸ்ருசல் சொன்னது…

நான் எழுதும் அனைத்தும், என்னுடைய கருத்துக்களே. மற்றவர்களுடையது அல்ல. ஆதலால், "சென்ற ஆண்டில் எனக்குப் பிடித்த சிறந்த பாடல்கள்" என்று மாற்றியமைக்க வேண்டியதன் அவசியம் என்னவென எனக்குத் தெரியவில்லை.

அது மட்டுமல்லாமல், ஊடகங்களில் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்துமே, அது சார்ந்த நிறுவனத்தின் கருத்தே. பொது மக்களின் கருத்தல்ல.

அவர்கள் ஒரு வேளை மக்களிடம் பேட்டி கண்டு, பட்டியலைத் தயாரித்தாலும், அது பெரும்பான்மை மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.

சரி விசயத்திற்கு வரலாம்.

உங்களின் முதல் பின்னூட்டத்திற்கு நான் மறுமொழி கொடுத்து விட்டேன். என்னுடைய பட்டியலில் ரகுமானின் பாடல்கள் இருப்பதற்கு, அவரின் பாடல்களை அதிகமாக கேட்பதாக இருக்கலாம் என்று.

இப்போது நீங்கள், "நீங்கள் முதலில் ஒன்றை தெளிவு படுத்தவேண்டும். ஆதாவது நீங்கள் இசையை ரசிக்கிறீர்களா? அல்லது பாடல் வரிகளை ரசிக்கிறீர்களா?" என்று கேட்கிறீர்கள். ஏன் என்று தெரியவில்லை.

ஒரு வேளை 'நெருபே சிக்கி முக்கி நெருப்பே' பாடலை வைத்து கேட்கின்றீர்களா எனத் தெரியவில்லை.

எதுவாகவிருந்தாலும், எனக்கு பாடல் வரிகள் நான்காம் பட்சம் தான்.

எனக்கு ராகம், இசை, பாடகர்கள் அதன் பிறகு தான் வரிகள். பெரும்பாலும் வரிகளை நான் கவனிப்பதில்லை. அல்லது அதிகம் ஈடுபாடு கொள்வதில்லை. சில பாடல்கள் விதிவிலக்காக உண்டு. ஆனாலும் அப்பாடலின் ராகம் சரியில்லையென்றால் நிச்சயம் விரும்பி கேட்க மாட்டேன்.

எனக்குப் பிடித்தது என்பதற்காக, உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களை வற்புறுத்தவுமில்லை.
அதை தான் 'மட்டமான ரசனை' என்று கூறிவிட்டீர்களே. அது என்னைப் பற்றிய உங்களது கருத்து. அதை மாற்றிக் கொள்ளுங்கள் என்று நான் கூற மாட்டேன்.

அதே போல், உங்களுக்கு 'நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே' பிடித்தது என்பதற்காக, எனக்குப் பிடிக்க வேண்டும் என்று நினைப்பது சரியல்ல.

அதனால் எனக்கு மட்டமான ரசனை என்று நீங்கள் மீண்டும் கூறினாலும் எனக்குக் கவலையில்லை.

ஸ்ருசல்

பெயரில்லா சொன்னது…

//எதுவாகவிருந்தாலும், எனக்கு பாடல் வரிகள் நான்காம் பட்சம் தான்.//

ஆனால் இந்த பதிவில் பாடல் வரிகளைத்தான் மெனக்கெட்டு ரசித்து எழுதியிருகிறீர்கள்

கோபிநாத் சொன்னது…

E has music by Sri Kanth Deva, not by vidyasagar

ஸ்ருசல் சொன்னது…

கோபிநாத்,

அறியாமல் எழுதி விட்டேன். மன்னிக்கவும்.

நன்றி.

ஸ்ருசல் சொன்னது…

//ஆனால் இந்த பதிவில் பாடல் வரிகளைத்தான் மெனக்கெட்டு ரசித்து எழுதியிருகிறீர்கள் ///

ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் பாடல் வரி நன்றாகயிருப்பதாக எழுதியிருக்கிறேன். மற்ற இடங்களில், பாடல் வரிகளைக் குறிப்பிட்டு அவ்விடத்தில் ராகம் நன்றாகயிருப்பதாகத் தெரிவித்திருக்கிறேன். பதிவினை முதலிலிருந்து நன்றாகப் படித்துப் பார்க்கவும்.

அனானி, இவ்விவாதம் எங்கோ செல்வது போலிருக்கிறது.

உங்களைப் பொறுத்தவரை, இப்பாடல்கள் பட்டியல் சரியில்லையென்று தோன்றினால், பரவாயில்லை. உங்களின் விருப்பத்தைத் தெரிவிக்கவும். தெரிந்து கொள்கிறேன்.

நன்றி.