மாலை நான்கு மணிக்கு பச்சையப்பா கல்லூரியை ஒட்டியிருந்த பள்ளியில் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சிக்கு ஆட்டோ கட்டினோம்.
எவ்வளவு மக்கள்! என்ன ஒரு கூட்டம்! எவ்வளவு விற்பனை!
மகிழ்ச்சியாக இருந்தது. சென்ற ஆண்டு பெங்களூரில் நடந்த புத்தகக் கண்காட்சியில் 'ஈ' ஆடியது. இந்த பகுதியிலிருந்து பார்த்தால் கண்காட்சியின் மறுமுனையில் கட்டியிருந்த பந்தலின் கயிறு தெளிவாகத் தெரிந்தது.
ஆனால் முதன் முதலாக சென்னை புத்தகக் கண்காட்சியில் பங்கேற்ற எனக்கு, கூட்டத்தைப் பார்த்து ஆச்சர்யம். 270 கடைகள் இக்கண்காட்சியில் இருப்பதாக வாசலிலிருந்த விளம்பரத்தில் பார்த்தேன். ஆனால் 270 கடைகள் இருந்ததா எனத் தெரியவில்லை. ஒரு வேளை டீ, காபி, பாப் கார்ன் கடைகளையும் சேர்த்து எழுதியிருப்பார்களோ?
எக்கடைக்குள்ளும் செல்லக்கூடாது; சென்றால் அங்கேயே பொழுதினைக் கழிக்க வேண்டிய நிலை வரும் என முடிவெடுத்து அனைத்துக் கடைகளையும், அக்கடை வாசலிலிருக்கும் புத்தகங்களை ஒரு பார்வையிட்டு விட்டு, பின்பு மீண்டும் தேர்ந்தெடுத்த கடைகளுக்குச் செல்ல முடிவெடுத்தோம்.
கடைசியாக, முதலில், காலச்சுவடுக்கு சென்றோம்.
சென்ற ஆண்டு கண்காட்சியில் (பெங்களூர்) கிடைக்காத பல புத்தகங்கள் கிடைத்தன.
ஒரு புளியமரத்தின் கதை
புதுமைப்பித்தன் கட்டுரைகள்
வாங்கிக் கொண்டேன். அவற்றுடன் 'சித்திரம் பேசுதடி' புத்தகமும் எடுத்துக் கொண்டேன். 'காலச்சுவட்டில்', சென்ற ஆண்டு வாங்கிப் படித்த 'புழுதியில் சில சித்திரங்கள்' புத்தகத்தைப் பற்றி நணபனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது 'நான் தான் அந்தப் பாத்திரம்', என்றோரு குரல். அவருடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
அப்போது நடிகை ரோகிணி அக்கடைக்கு வந்தார். அவரை நான் தேடிக்கொண்டிருந்தது போல், அவரே வந்து சேர்ந்தார். குரு படத்தில் பின்னணி அவரா என்ற ஐயம் இருந்தது.
அதை உறுதி செய்ய,
'நீங்க நடிகை ரோகிணி தானே'
'ஆமா'
'குரு படத்துல ஐஸ்வர்யாவிற்கு பின்னணி பேசுனது நீங்க தா....'
'நான் தான் பேசியிருந்தேன். நல்லாயிருந்துச்சா?'
'இம் நல்லா இருந்துச்சு'
'படம் எப்படி இருந்தது'
'ஹிந்தி குருவை விட தமிழ் குரு ரொம்ப நல்லாயிருந்தது'
'சூர்யா-ல்ல'
'சூர்யாலாம் காரணம்ன்னு சொல்ல மாட்டேன்'
'பின்ன?'
'ஹிந்தி குரு-ல ஏகப்பட்ட வசனங்கள்.....எனக்கு ஒண்ணும் புரியலை. எனக்கு தான் ஹிந்தி தெரியாதே. தமிழ்ல பார்த்த பிறகு தான் புரிஞ்சது...'
'....'
சே! உண்மையை சொல்லியிருக்கக் கூடாதோ?
'உங்களோட குரல்ன்னு என்னால கண்டுபிடிக்கவே முடியலை.... நான் சவீதாவோ இருக்குமோன்னு நெனச்சிட்டு இருந்தேன்'
'ஓ ஹோ.. சவீதா எல்லாம் எப்படி தெரியும்?'
'இம். சும்மா பார்க்குறது தான்'
'இருவர்'-ல கூட ஐஸ்வர்யாக்கு நான் தான் குரல் கொடுத்திருந்தேன்'
'அப்படியா?', உணமையிலேயே ஆச்சர்த்துடன் தான் கேட்டேன்.
''மகளிர் மட்டும்' மாதிரி படங்கள்ல உங்க குரலை சுலபமா கண்டுபிடிச்சிடலாம். ஆனா இந்தப் படத்துல கொஞ்சம் கூட கண்டே பிடிக்கமுடியலை'
'கண்டுபிடிக்க முடியலைன்னா நல்லது தானே'
'ஆமா ஆமா. உண்மை தான்'
'வேட்டையாடு விளையாடு படத்துல கூட 'ஜோ' க்கு நான் தான் பின்னணி'
இன்னொரு 'அப்படியா', போட்டேன்.
தற்போதெல்லாம், அனைத்துப் படங்களிலும் இறுதியில் மட்டுமே பெரும்பாலான கலைஞர்களின் பெயர் வருவதால், கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல், அநேகமான தியேட்டர்களில் படம் முடிந்ததுமே நிறுத்தி விடுகிறார்கள். Credits கூட காட்டுவதில்லை.
..... சிறிது நேரம் பேசி விட்டு சலாம் போட்டு விட்டு நடையைக் கட்டினேன்.
அடுத்து அலையன்ஸ்...
வேண்டுமளவிற்கு 'சோ' புத்தகங்களை அள்ளிக்கொண்டேன்.
'வந்தே மாதரம்'
'ஒண்ணரை பக்க நாளேடு'
'கூவம் நதிக்கரை ஓரத்தினிலே 1, 2, 3'
'சர்க்கார் நுழைந்த வீடு'
'சோ கேள்வி பதில் 1, 2'
இன்னும் மூன்று புத்தகங்கள்.
சூர்யா எழுதி பொங்கலுக்கு வெளியிடப்பட்ட 'இப்படிக்கு சூர்யா' புத்தகத்தையும் எடுத்துக் கொண்டேன்.
அடுத்த கடையில் ஒரு வாலிபர் 'ஷார்ட்ஸ் - டி.சர்ட்' போட்டுக் கொண்டு 'அந்த புத்தகம் எடுத்துக் கொடுங்க', 'இவங்களுக்கு இது எடுத்துக் கொடுங்க' என்று கூறிக்கொண்டிருந்தார். அது 'கிழக்குப் பதிப்பகம்', பத்ரி.
கடைசியாக விகடன் பிரசுரத்தில் நான்கு புத்தகங்களை எடுத்துக் கொண்டேன்.
'துணையெழுத்து',
'கற்றதும் பெற்றதும் - 3'
'உயிர்',
இன்னொரு புத்தகம்
பர்ஸில் இருநூறுக்கு மேல் பணமில்லை. நல்ல வேளை 'கடன் அட்டை' ஏற்றுக்கொள்ளப்படும் என்று போடப்பட்டிருந்ததால், பிழைத்தேன். ஆனால் முன்னூறு ரூபாய்க்கு
மேலிருந்தால் மட்டும் தான் என்றிருந்தது. விலையைக் கூட்டினேன். கிட்டத்தட்ட நானூறு ரூபாய்க்கு இருந்தது.
பக்கத்தில் இன்னொரு வாலிபர் பர்ஸைத் துளாவிக்கொண்டிருந்தார். அவரிடமும் பணமில்லை. அட்டை மட்டுமிருக்கிறது. ஆனால் மொத்தம் 240 மட்டுமே வந்தது.
என்னுடைய ஒரு புத்தகத்தைக் கொடுத்து, அதனுடம் இணைக்கச் சொல்லிவிட்டு, 70 ரூபாய் பணமாகக் கொடுத்தேன்.
'என்னே ஒரு கொடைத்தன்மை', என்று என்னை நானே புகழ்ந்து கொண்டிருந்த போது, ஒரு கணம் திடுக்கிட்டு போனேன்.
காரணம். எனக்கு மொத்தம் 300 ரூபாய் வருமா என்பதே. கூட்டிப் பார்த்தால் கிட்டத்தட்ட 300 வந்தது. ஆனால் டிஸ்கவுண்ட்-ஐ நான் சேர்க்க மறந்து விட்டேன். கடைசியில் பார்த்தால் ~270 மட்டுமே வந்தது. ஆஹா... 'ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்க்கப் போய், நாம பிச்சையெடுக்க வேண்டியதாகி விட்டதே' என்று விழி பிதுங்கி நின்றேன்.
விகடன் பிரசுரத்தார்கள், பெருந்தன்மையுடன் 'கார்டை' பெற்றுக்கொண்டு ரசீது கொடுத்தார்கள்.
அனைத்துப் புத்தகங்களையும் மூட்டைக் கட்டிக் கொண்டு, வீடு வந்து சேர்ந்த போது மணி 9.
10.30 க்கு மீண்டும் கோயம்பேடு சென்று பஸ் பிடிக்க வேண்டும்.
சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது மணி 10.15.
வழக்கம் போல ஆட்டோவிடம் தகராறு.
'ஹீம். இரண்டு நாள்ல ஆட்டோவிற்கு கொடுத்த பணத்தைக் கொண்டு ஒரு ஆட்டோவே வாங்கியிருக்கலாம். அவ்வளவு காசு. நாமே ஆட்டோ கூட ஓட்டலாம் போல. நல்ல வருமானம்', என்று கூறினேன்.
'ஆமா சார். நல்ல பிசினெஸ் என்றார்'.
'ஆமா. ஆபிஸிற்கு பைக்ல போனால், சவாரி ஏத்த முடியாது. ஆனா ஆட்டோல போனா, வர்ற வழியிலேயே இரண்டு பேரை சேர்த்துக்கிட்டா, பெட்ரோலுக்கும் ஆச்சு. ஈ.எம்.ஐக்கும் ஆச்சு'
'ஆமா சார்'
'ஆனா ஆட்டோவை எங்க பார்க் பண்ணுறது? ஆபிஸ்-ல எப்படி விடுவாங்க', இது நண்பர்.
முந்தய நாள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது அந்த ஓட்டுனர் கூறியது தான் ஞாபகம் வந்தது.
'சார் வெயில் படம் தாங்க முடியலை'
'ஆமா அதை ஏன் கேக்குறீங்க.. சத்யத்துல தான் பார்த்தேன். கொடுமை', என்றேன்.
'நானும் சத்யத்துல தான் சார் பார்த்தேன்'
'எப்ப பார்த்தீங்க?. நான் பார்த்து மூணு வாரம் இருக்குமே. இன்னுமா மெட்ராஸ்ல ஓடுது?'
'போன வாரம் போனேன் சார். அதுவும் பேமிலியோட... ஆட்டோல'
'ஓ!'
'அதுல படம் தான் பெரிய பிரச்சனைன்னா ஆட்டோ அதை விட பெரிய பிரச்சினை. ஆட்டோவை பார்க் பண்ண விட மாட்டேண்டாங்க...'
'ஏன்?'
'ஆட்டோக்கு எல்லாம் பார்க்கிங்க் கிடையாது. நாலு சக்கர வண்டிக்கு மட்டும் தான்னு சொன்னாங்க....'
'டிக்கெட் எடுத்திருக்கேன். பேமிலியோட வந்திருக்கேன்னு சொன்னாலும் கேட்கலை. கடைசியா பக்கத்துல தெரிஞ்ச கடைல போய் பார்க் பண்ணிட்டு வந்தேன் சார்...'
இந்த ஞாபகம் வந்ததால், ஆட்டோ வாங்கும் திட்டத்தைக் கைவிட்டு விட்டு, கோயம்பேடு நோக்கி நகர்ந்தோம்.
தனியார் பஸ் நிறுத்த வளாகத்தின் நுழைவாயிலில் ஒரு 50 வயதிருக்கும் நபர், 'சார் பெங்களூரா', என்றார்.
'ஆம்', என்று கூறி முடிப்பதற்குள் ஆட்டோ ஓட்டுநர் அருகில் ஜம்ப் செய்து அமர்ந்து கொண்டார்.
'ஏன் பஸ் எனக்காக வெயிட்டிங்கா', என்று கேட்டேன்.
'சார். ஜி.ஆர். (ஏதோ சொன்னார்) டிராவல்ஸ் பஸ் இருக்கு. அதுல போயிடலாம்'
'அப்ப இது 'கே.பி.என்'-க்கு இல்லையா?'
அப்போது தான் உறைத்தது.
'இல்லை'
'எங்கிட்ட கே.பி.என். டிக்கெட் இருக்கு. வண்டியை விட்டு இறங்குங்க சார்'
'சார் நானூறுவா தான் ஆகும்'
'அய்யா சாமி. எங்கிட்ட டிக்கெட் இருக்குதுங்க. அத விட்டுட்டு திரும்ப 400 ரூபாய் போட்டு எதுக்கு நான் டிக்கெட் எடுக்கணும்?, நீங்க முதல்ல இறங்குங்க'
ஆட்டோவை மெதுவாகச் செலுத்தி அவரை ஓட்டுநர் இறக்கி விட்டார்.
அப்போது இன்னொருவர், 'சார் எங்க போகணும்', என்று ஆட்டோவிற்குள் ஏற முயன்றார்.
'நான் எங்கயேயும் போகலை. சும்மா கோயம்பேடுக்கு வந்தேன். ஆளை விடுங்க', என்று அருகில் கிளம்பத் தயாராக இருந்த பஸ்ஸிற்குள் தாவினேன்.
பின்னாடியே ஓடி வந்த பஸ் நிறுவன ஊழியர்,
'சார் சார் U14-ஆ?', என்றார்.
'ஆமா'
'சார் ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும்'
'என்ன தரைல படுத்து தூங்கணுமா? பஸ்ல இடம் கொடுக்குற வரைக்கும் எனக்கு ஓ.கே', என்று அவர் கூறியபடி இன்னொரு சீட்டில் சென்று படுத்தேன்.
பேய்களின் ரத ஊர்வலம் மாதிரி, 3.15 மணிக்கெல்லாம் பெங்களூரில் அம்போவென்று இறக்கி விட்டு விட்டு, தனது வலத்தை மீண்டும் தொடங்கியது.
பெங்களூரிலிருந்து சென்னைக்குச் செல்ல, 8.30 மணி நேரமானது. ஆனால் திரும்ப வருவதற்கோ 4.30 மணி நேரம் மட்டுமே. எதனால் இப்படி? சிறிதும் பொறுப்பில்லாமல் ஓட்டும் ஓட்டுநர்கள் காரணம் என்று அடித்துச் செல்லலாம். இதனை எழுதி முடிக்கும் இத்தருவாயில் வந்த செய்தி: கே.பி.என் ஆம்னி பஸ் - டேங்கர் லாரி மோதி 4 பேர் பலி. 30 பேர் பலத்த காயம்.
2 கருத்துகள் :
// ஆபிஸிற்கு பைக்ல போனால், சவாரி ஏத்த முடியாது. ஆனா ஆட்டோல போனா, வர்ற வழியிலேயே இரண்டு பேரை சேர்த்துக்கிட்டா, பெட்ரோலுக்கும் ஆச்சு. ஈ.எம்.ஐக்கும் ஆச்சு
ரொம்ப நல்ல ஐடியா. :)
ஐடியாவுக்கு Patent வாங்கிக்கோங்க ;)
இந்த மாதிரி தான் போன தடவை ஊருக்கு வந்தபோது
சென்னை - பாண்டிச்சேரி போகும் போது 3 மணிநேரம் வரும் போது 7 மணிநேரம்.
அப்போது பிரச்சனை, கூட்ட நெரிசல்.
கருத்துரையிடுக